01.மோனா லிசாவின் பாடல்

நேற்றிரவு எதிர்பாரா இதமாய்

பாடலொன்றை இசைத்தாள் மோனா லிசா.

லயம்.. ஸ்ருதி.. கமகமென

இசைக்கோர்வைக்குள் சங்கதிகளின் சங்கமம்.

பால்வெளியில் மிதக்கத் தொடங்கிய.

என்றோ ருசித்த  பாடலின் துண்டு

“சட்” டென நின்றது திடீர் மழையைப் போல

‘வேலயப் பார்லே வெங்காயமென’

மீண்டும்

புன்னகைத்துறைந்தாள்

மோனா லிசா

நடனமிட்டுக்கொண்டிருந்தன நஷத்திரங்கள்

02   மிதபாஷிணி

1.அகவல்பா

எங்கு தொலைந்தது நேசம்

என்று உறைந்தது காதல்

விடுமுறைப் பகலிலா வெப்ப ராவிலா

நீண்டதொரு தனித்திருத்தலின் சமன் குலைத்த பொழுதிலா

துயரங்களை வாரி இரைக்கும் தொலைக்காட்சித் துகள்களிலா

எப்படி மறையலாச்சு உரையாடல்

எங்ஙனம் உறையலாச்சு கிளர்தல்

கிரித்திருவம் பிடித்த கிருமியின் கொம்பினுள்ளா

கையாலாகாக் கடவுளரின் முனைமழுங்கிய ஆயுதக் குவியலிலா

ஊரடங்கின் அமைதியிலா

ஊடகங்களின் ஊளையிலா

சொல்.. மிதபாஷிணி..

2.வஞ்சிப்பா

நின் புகழில் லயிப்பவள் நான்

நெடுவாயில் அடைப்பவளா

உயிர் பயத்தை அறிந்தேனா

உயிரென்றால் நீதானே

மலரிதன் மனமறியா மடவண்டே மடவண்டே

பூத்தவிப்பு புரியாமல் புலம்புவதும் முறையாமோ

பெருமழை வேண்டுமெனில் காத்திரு பூமியே..

காதலாய்ப் பொழியுமிந்த மழைமேகம்

03 மிஸ்டு கால்

தலைவன் கூற்று:

நட்சத்திரங்கள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த

நள்ளிரவின் உச்சத்தில்

அழைத்த குரலுள் ஒளிந்திருக்கிறது

பெயர் தெரியா ஏதோ ஒன்று

,

உறக்கம் தொலைத்த தனிமைக்குத் துணையாய்ப்

பரிவு பூசிய குரலில் இசைத்த

உன் பாடல் வரிகளின் லய சுகத்தில்

மனசுக்குள் புத்துயிர்ப்பு

,

வானத்துக் கீழான எது குறித்தும்

சஞ்சாரம் செய்த களைப்பில்

ஆனந்தக் கொட்டாவி கண்டு

ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த

நிலவுக்கோ நமுட்டுச் சிரிப்பு

காலையில் எழுகையில்

விழிகளின் மேலிரண்டு பாறைத்துண்டு

எனினும் அறை முழுவதும் வீசியது

மகிழ்வின் சுகந்தம்

,

நல்லது; பேசுவோம் மீண்டும்..

தலைவி கூற்று:

தெரியாத்தனமா மிஸ்டு கால்

கொடுத்ததுக்கு

வறுத்து எடுத்தியடா பாவி..

00

அன்பாதவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்த அன்பாதவன் (J.P. அன்பு சிவம்) ஏராளமான புத்தகங்களையும், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். நடுகல் வாயிலாக ‘மோனாலிசாவின் பாடல்’ ‘ஜூகல் பந்தி’ இரு கவிதை தொகுப்புகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *