அன்று நீ அந்த தீயில் கருகி இறந்து போனாய், உனது அம்மாவின் வயிற்றினுள்ளேயே நீ கருக்கி அழிக்கப் பட்டாய். அதற்கு சாதியும் மனிதம் மேலுள்ள வெறுப்பும்தான் காரணம். சக மனிதனை நேசிக்காத மனிதர்களையே நாம் வளர்த்து வந்துள்ளோம்.

ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் வளர்ந்து விட்டோம், பெரும் நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன என்கிறார்கள். உலகம் அறிவியலில் இன்னும் சிறிது காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி பெற்று இந்த பிரபஞ்ச உலகம் உருவான கதையை நெருங்கி கண்டு பிடித்து விடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்ன வந்து என்ன செய்வது சக மனிதனை மனுஷியை அப்படியே நேசிக்க கற்றுக் கொள்ளவில்லையே.

இந்த உலகிற்கு நீ வராததே நல்லதுதான் மகளே. இப்போது மட்டும் என்ன இங்கே மாறி விட்டதா? சாதியும் மதமும், தீண்டாமையும், ஒடுக்குதலும், ஒடுக்கப் படுவதும், அடக்க நினைப்பதும், அடிமைப்படுத்துவதும் வெவ்வேறு வடிவங்களை கொண்டுள்ளன. அவ்வளவுதான் மகளே. உனக்கு கிடைக்காத அதே நீதியைத்தான் நாங்கள் இன்னும் கேட்டுக் கொண்டேயுள்ளோம்.

சரி உனது கீழ்வெண்மணி ஊர்தான் மாறி விட்டதா என்றால். எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. எதுவும் மாறவில்லை மகளே. சனாதனம் வெவ்வேறு வடிவங்கள் பெற்று மனித மூளையில் புழுக்களாக நெளிகின்றன. மனிதனின் மனத்திலும் டி.என்.ஏவிலும் பதிந்து கிடக்கின்றன. அப்பாசிகள் கருமையான வடிவத்தில் அழுக்குகள் நிறைந்து படிந்து கிடக்கின்றன லேசான சுரண்டலுக்கெல்லாம் அவை போகாது. மலை மீது படிந்த கரும்பாசி பிசுக்குகள் அவை.

ஒவ்வொரு கீழுள்ளவனும் அவனுக்கு கீழே ஒருவனை அடிமைபடுத்தவும் அதிகாரம் செய்யவும் வேண்டும் என்கிறான். இதில் எந்த சாதிக்கும் குறைவில்லை இது பொது பண்பாகி விட்டது மகளே.

இவன் நாயிலும் சாதி பார்த்துதான் இணைய விடுகிறான் மகளே. நீ இந்த உலகத்தில் வந்து வளர்ந்து இருந்திருந்தாலும் நாங்கள் உன்னை கௌரவ ஆணவக் கொலைக்குத்தான் பலி கொடுத்திருப்போம்.

உன்னை ஒருவன் கற்பழிக்காமல் இருந்திருப்பான் என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இங்கு வேலியே பயிரை மேயும் மிக எளிமையான அதே பழைய வேலைதான் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கு எந்த கல்வி நிலையங்களையும் நம்பி உன்னை நாங்கள் அனுப்பி இருக்க முடியாது.

நீ படிக்கும் போதே கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது இருக்கவே இருக்கு தேர்வு முறை அதை கடுமையாக்கி உனக்கு பைத்தியம் பிடிக்க வைத்தோ அல்லது தாழ்வு மனப்பான்மை வரவழைத்து தற்கொலை செய்ய வைத்திருப்போம்.

இவை அனைத்தையும் செய்து விட்டு எந்த குற்றவுணர்ச்சியுமின்றி முக நூலிலும் தொலைக்காட்சியுலும் அதைப் பற்றி நிறைய துருவி துருவி விவாதமோ விதண்டாவாதமோ செய்வோம் மகளே அதற்கெல்லாம் எங்களுக்கு வெட்கமே இல்லை.

நீ அன்றே கருகிப் போனது நல்லது. இன்னமும் நாங்கள் சட்டங்களை பழைய வீடுகளில் இருக்கும் பழைய தலைவரின் புகைப்படத்தின் சட்டகம் போலவே வைத்துள்ளோம். நாங்கள் அறத்திற்கும் மானுட நீதிக்கும் சமூக நீதிக்கும் இயற்கை நியதிக்கும் உள்ள எந்த வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளவேயில்லை.

ஆனால் நாங்கள் எல்லாவற்றிலும் வளர்ந்து விட்டோம் என வாய் கிழிய கத்துவோம். மதத்தின் பேராலும் சாதியின் பெயராலும் நடக்கும் அட்டூழியங்களே அதிகம் பலி கேட்கின்றன மகளே.

நீ இங்கு வராததே நல்லதுதான் இது பூவுலகில்லை இது விச முள் தைக்கும் வனத்தின் பாதை, இங்கே இன்னும் வேட்டைச் சமூகத்தின் எச்சங்களே வலுவடைந்துள்ளன. சூரியன் இருந்தும் வெளிச்சமாகவே இல்லை. இருள்தான் இந்த உலகம் அதுவும் அந்த இருள், கடவுளின் பேரால் வகுத்து வைத்த அனைத்து நிறுவனங்களை நடத்தும் குருக்களின் சிடுக்குகள் நிறைந்த மனத்தின் அடியாழத்தில் போய் பார்த்தால் இருக்கும் இருள்.

அடிமைத்தனத்தின் இருளை போக்க நினைப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப் படுவதே இல்லை, ஒட்டு மொத்தமாக எல்லா சாட்சியங்களையும் அழித்து விடுவார்கள். இருந்தும் என்ன செய்யப் போகிறார்கள் அதே புழுக்களின் மூளைகளை எல்லாம் அந்த பூசானம் பிடித்த சிடுக்குகள் நிறைந்தனவாக தரும் பதில்தான் வரும்.

இருள் மண்டிக் கிடக்கும் இவர்களின் கல்வி நிலையங்களை பார்த்திருக்கவே வெட்கப் படுவாய் மகளே. இவர்கள் பிள்ளைகளின் மனதின் இருளைப் போக்கி வெளிச்சம் தரவே மாட்டார்கள், விடுதலை உணர்வா? அப்படியென்றால் என்னவென்றே அவர்கள் கேட்பார்கள்.

நீ வேறு சனநாயகத்தைப் பற்றி அவர்களிடமா? பேசுகிறாய். நீ பிறக்க இருந்த காலத்திற்கு முன்பிருந்தே இங்கே மனு ஸ்மிருதி சட்டம்தான் கல்வி நிலையங்களை ஆளுகின்றன. அதுதான் இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் சொல்லாத சட்ட புத்தகமாக ஆக்கி வைத்துள்ளார்கள்.

என்ன செய்வது மகளே நாம் காலில் பிறந்தவர்களாகவே சித்தரிக்கப் பட்டுள்ளோம் அதனால் கீழேயே கிடந்து சாகத்தான் வேண்டுமாம். என்ன கேட்கிறாய் நமக்கான அரசா? எனக்கு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை மகளே. இந்த மக்களுக்குள்ளும் இன்னும் அடிமைத்தனம்தான் மிஞ்சியிருக்குமோ என்னவோ தெரியவில்லை இவர்களை மிக எளிமையாக ஏமாற்றி விடலாம் மக்ளே இதில் படித்தவன் என்ன படிக்காதவன் என்ன? களி மண்ணாக நினைத்து அவர்கள் வசதிக்கேற்ற வடிவத்தில் இவர்களின் உருவங்களும் சிந்தனைகளும் மாற்றப் படுகிறது மகளே.

மகளே நீ உனது அம்மாவின் வயிற்றினுள் இருக்கும் போதே சில நமது முழக்கங்களை கேட்டிருப்பாயே அதைத்தான் நாங்கள் இன்னும் முழங்கிக் கொண்டிருக்கிறோம் அது தற்போது வெற்று முழக்கமாகவே படுகிறது எனக்கு. இன்னும் நாங்கள் தீர்வை நோக்கி நகரவேயில்லை.

ஆம் நீ நினைப்பது சரிதான் இங்கே ஒருவரை ஒருவர் ஏமாற்றும் அரசியலேயே செய்கிறார்கள். இவர்கள் சட்டங்கள் மனிதனை மனிதனாக்க செய்யவே இல்லை. அரசியலும் பொருளாதாரமும் ஓட்டும் சாதியும் மதமும் இவர்களின் பெரும்பான்மை அளவீடுகளாக போய்விட்டன.

பெரும்பான்மையான சாதியும் மதமும் இணைந்து பொருளாதாரத்தில் வலிமை கொண்டு மற்றவர்களை நசுக்க மறப்பதே இல்லை. பணத்தினால் பின்னப்பட்ட வலைப் பின்னால் முதலாளிகளால் சர்வ வல்லமை படைத்து மதங்கள் சாதியை வைத்து கொலை செய்ய அஞ்சுவதே இல்லை.

உணவில் கூட முரணையும் வேறுபாட்டையும் வெறுப்பையும் சொல்லிக் கொடுத்து அதனை சாப்பிடுபவர்களை அடித்து கொலை செய்து விடுவார்கள். உன்னையும் அப்படி செய்திருப்பார்கள். நாம் நீ பிறப்பதற்கு இன்னொரு உண்மையான சமூக நீதியுள்ள பூவுலகத்தையே தேட வேண்டும்.

உயர் கல்வி நிறுவனத்தில் படிக்கப் போன அசைவம் சாப்பிடும் ஒரு மகளின் கண்ணையே நோண்டி எடுக்குமளவுக்கு கொடூரமானவர்கள் இங்கேதான் உருவாகியிருக்கிறார்கள். எது அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது என்றா கேட்கிறாய் மகளே அது மதத்தால் உருவான சாதியின் அடுக்கு முறையால் வந்த வேதனையான வளர்ப்பு முறையே காரணம்.

நானும் இந்த பூமியில் உனக்கான இடம் தேடித்தான் பார்க்கிறேன் மகளே நீர் நிலைகள் நிரம்பிய, பறவைகள் சூழ்ந்த, பசுமையான இடத்தை விட சமூக நிதியுள்ள, வெறுப்பில்லாத உன்னை சக மனுஷியாக மதிக்கும் ஒரு இடம் இல்லையே மகளே.

வெறுப்பும் அருவருப்பும் கொண்ட பாகுபாடுகள் நிறைந்த முரண்கொண்ட இடங்களே இங்கே அதிகமாகிக் கொண்டுள்ளன. மக்கள் அவமானங்களையும் ஒதுக்குதல்களையும் புறந்தள்ளுதல்களையுமே சந்திக்கின்றனர். இறந்த சக மனிதர்களின் பிணத்தை கொளுத்த இடம் தராத நிலையேதான் இங்கு மிஞ்சி உள்ளது.

பலகோடி செலவு செய்து சந்திரனின் வலது பக்கத்தை போய் பார்க்க பெரிது பெரிதான ஏவுகணைகள் கண்டு பிடித்தென்ன. அப்படியான வளர்ச்சியைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது மகளே.

நானும் இன்னும் சில தோழர்களும் உனக்கான பொன்னுலகத்தைப் பாற்ரி பெரிதான கனவு கண்டு கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டுள்ளோமோ என்றே தோன்றுகிறது.

மகளே சில நேரம் இரவெல்லாம் அழுது கொண்டே உள்ளேன் உனக்கான உலகத்தை நான் எவ்வாறு கட்டமைக்கப் போகிறேன் என்று! நல்ல வேளையாக நீயே இவ்வுலகை மறுத்து கருகிப் போனாய். ஆனாலும் பார் உனது பிறப்பும் மறுக்கப்பட்ட ஒன்றாகவேயுள்ளது.

எனது பார்வைக் குறைபாடாக நினைத்து விடாதே சில நேரத்தில் பரந்து விரிந்த பாரத பூமியில் எல்லா மக்களும் நல்ல நேசமிக்கவர்களாகவே தெரியும் ஆனால் பெரும்பான்மையானவர்கள் தங்களது அவமானங்களை வெளியில் சொல்லாமல் பாசங்கு செய்து நடித்து வாழ்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டை இரண்டு இரண்டு பிரிவுகளாக நாம் பிரித்துப் பார்க்கலாம் மகளே! ஒளிரும் இந்தியாவும் வெளிரும் இந்தியாவும் ஒரு பிரிவு, பணக்காரக்ளின் இந்தியாவும் ஏழைகளின் இந்தியாவும் ஒரு பிரிவு, மேல் சாதியும் கீழ் சாதியும் பெரும்பான்மை உயர்ந்த மதமும் சிறுபான்மை தாழ்ந்த மதமும் கொண்ட மற்றொரு பிரிவினையும் கொண்டதே இந்த பரந்த விரிந்த பாரத பூமியாக உள்ளது மகளே.

நஞ்சில்லாத மனதையும் வெறுப்பற்ற மக்களையும். மதமும் சாதியும் இல்லாத மன நோயற்ற சமூகத்தையும் படைக்கத்தான் நினைக்கிறேன் மகளே! நீ கருகிப் போன காலத்திலிருந்து இன்று வரை எல்லோரும் இதற்காகத்தான் முயற்சிக்கிறார்கள். ஆனாலும் சூழ்ச்சி கொண்ட ஒரு கூட்டம் இவற்றை நடந்து விடாமல் தடுப்பதிலேயே முனைப்பாக உள்ளனர் மகளே! அந்த சிறு கூட்டத்தையே மாற்ற முடியாமல்தான் அழித்து விட நினைக்கும் அளவுக்கு எனது மனமும் வந்துவிட்டது மகளே.

சாதி ஒரு கடும் புரையோடிப் போன மன நோய் மகளே. அதை சுத்தமாக அடியோடு அழித்து விட்டுத்தான் நான் உன்னை இங்கே அழைக்க முடியும் காத்திரு. காலம் இன்னும் வேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை தொடங்கி வைத்தவர்களும் இறந்து போனாலும் அவர்கள் பெயரிலேயே இன்னும் தொடர்கின்றன. இன்னும் நமக்கு காலமும் உயிரும் மிச்சமிருக்கு. அதுவரை ஏதோ ஒரு வகையில் இந்த பிரிவினைகளையும் வெறுப்பையும் ஊக்கபடுத்தும் மத சாதி அடுக்குகளை எதிர்த்து போராடி அழித்து விடத்தான் வேண்டும் அதுவரை காத்திரு மகளே.

முடியுமா? என்றா கேட்கிறாய். நிச்சயம் உறுதியாக சமூகத்திற்கு தன்னையே அர்ப்பணிக்கும் சமூக நீதிக்காக சர்வ காலமும் சிந்திக்கும் நல்லவர்களும் இங்கே கொஞ்சம் இருக்கிறார்கள் என நம்புகிறேன் அவர்களைப் போல நிறைய பேரை திரட்சி கொள்ள செய்து இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தி எட்டும் வரை முயற்சிப்போம் என்றே தோன்றுகிறது மகளே.

நம்பிக்கையோடு இருப்போம் ஒரு நாள் விடியும். நீ அன்று இருளிலேயே கருகிப் போனாய். விடிந்தது. ஆனால் உனக்கான பூமியாக அது இல்லை. மறுபடியும் இன்னொரு உயிரை கருக்காமல் இருக்கத்தான் இந்த நம்பிக்கையை இன்னும் நம்பிக்கொண்டுள்ளோம் மகளே.

உயிரின் வலியை உள்ளுணர்வாய் பெற்று, உயிர் அறிவையும் உள்ளுணர்வாக பெற்ற பொறுப்புடைய நல்ல, பற்றற்ற நேர்மையான, சமூக நீதியுடைய தலைவர்களை தேடுகிறோம், வந்து விடுவார்கள். உருவாக்குவோம் மகளே. பொறுப்புடைய தலைவர்கள் எல்லா நிலையிலும் உருவாக வேண்டும். அது அரசியல் தலைவராக மட்டுமில்லை என்றே நான் நினைக்கிறேன் மகளே.

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *