அன்றாடச் சித்திரங்களில் அச்சடித்த எண்ணத்தின் தரிசனங்கள்….

இதுவரை நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசியதில்லை. ஆயினும்  முகநூலின் வழியே நட்பு பாராட்டும் நண்பர் கண்ணன் அவர்களின் இந்த கவிதைத் தொகுப்பு ஒரு சராசரி மனிதன் அனுதினமும் அனுபவிக்கும் வாழ்க்கைப்பாட்டையும் இயல்பான காதலைச் சுமந்து திரியும் காதலன் எண்ண ஓட்டத்தையும் கடவுள் தரிசனம் போன்ற எளிய தர்க்கங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் துடிக்கும் மனம் உடையவனும் எழுதிச்செல்லும் வார்த்தைகளாக புலப்படுகின்றன. சமூகத்தின் மீதும் தன் மீதும் அன்பையும் கருணையையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருட்களின் மீதெல்லாம் பேரன்பே விளைந்து நிற்கும். அதுவே அவனுக்குள் கவிதையாகவோ சித்திரமாகவோ கட்டுரையாகவோ மலர்ந்து விடுகிறது. கவிதையின் வீச்சும் அது குறிக்கும் கால வெளியும் எக்காலமும் நின்று நிதானித்து மனிதனை அசை போட வைக்கின்றன. புனைவை கவிதைக்குள் கொண்டு வருவதும் ஒரு நிலை என்றால் வாழ்க்கை நிலையில் இருந்து கவிதை எழுதுவது மற்றொரு நிலை. இந்த வாழ்வு நமக்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதுப்புது அனுபவங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதை உள்ளே உணர்ந்து எழுத்துக்களில் வடிகட்டி எண்ணங்களை ஒன்று கூட்டி சித்திரத்தில் நிறைத்தாலே கவிதையாக மலர்ந்து விடும். அப்படியானதொரு அனுபவப் பதிவையே அதீதத்தின் பசி நமக்குள் விதைத்திருக்கிறது.

       கல்யாண வீட்டில் எச்சிலைக்குக் காத்திருக்கும் பிச்சைக்காரன் வெறும் வயிற்றோடு திரும்புவதைப் போன்ற ஒருவழிப்பாதையில் புலம்பும் காதலன், பேருந்தில் இடம் தரும் 60 வயது தங்கையின் தரிசனம், குழந்தைகளின் கணப்பொழுதில் மலரும் ஆச்சரியங்கள், பேரன்பை கற்றுத்தரும் சக மனிதர்கள், மாட்டையும் தங்கள் 

குழந்தைகளாகவே வளர்க்கும் மனிதர்களின் இயல்பு, மழையோடு மழையாய் கதறிக் கதறி கரையும் ஒருவன், வீட்டுத் தோட்டம் எங்கும் ஞாபகங்களின் கல்லறைகளில் என்றென்றும் சாமிகளை வணங்கும் ஒருவன், தொடர்ச்சியான பிரச்சனைகளை தோளில் தாங்கிக் கொண்டு புலம்பியபடி திரியும் ஒருவன், இறந்து போன அம்மாவை பிணம் என்று ஒப்புக் கொள்ள மறுக்கும் மனப்பித்துடைய மகனின் பிம்பம், அறத்தையும் அன்பையும் ஒருசேரக் கற்றுத்தரும் அக்காவின் வருகை, பறவை பார்த்ததில் தன்னையே காலத்திற்கு ஒப்புக்கொடுத்த ரசிகன், ரசித்து எழுதிய கவிதையை திரும்பிக் கூட பார்க்காத சமூகத்தின் போக்கு, முக்காடிட்ட குழந்தையின் குறுகுறுக்கும் கண்களை ரசிக்கும் ஒருவன், குழந்தையின் உருவில் கடவுளின் தரிசனத்தில் தன்னை மறந்து பயணிப்பவன், இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டாலும் தன்னை இன்னும் கவிஞன் என ஒப்புக் கொள்ளாத தன்மையை படம் பிடிப்பவன், உழைப்பே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பதை தராசில் நிரூபித்து காட்டும் நாணயவான், பேருந்தில் மகளை ஏற்றிவிட்டு அவள் பின்னாலேயே தன் மனதை ஒப்படைத்த தந்தையின் பாசம், கோவில்களில் கட்டண தரிசனத்தின் மீதான தாக்கம், பிரசவ வேதனையில் தாய்மார்கள் படும் துன்பத்தை வெளிப்படுத்தும் தருணம், புத்தக வாசிப்பையே சுவாசிப்பாக பின்பற்றிக் கொள்பவன் மனம், தன் அம்மாவிற்குப் பிடித்த அரக்கு வண்ணப் புடவையை வாங்கி திதி நாளில் மனைவியை அணியச் சொல்லி அழகு பார்க்கும் ஒருவன், நல்ல கவிதைகளைத் தேடி அலையும் வாசகன், கணினித் துறையில் நடந்துவரும் மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் வேலையின் நெருக்கடி என தான் கண்டறிந்த அனுபவித்த சமூகத்தின் அவலத்திலிருந்து சொற்களைப் பிடித்து கவிதைகளைக் கொண்டு அதீதத்தின் பசியை நிரப்பி இருக்கும் இந்த நூல் எதையும் பூதாகரமாக நீட்டி முழக்கி விளம்பரப்படுத்துவதில்லை. கவிஞன் காணும் காட்சிகளாலும் அனுபவிக்கும் அனுபவத்தினாலும் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு வாசிக்கும் மனங்களுக்கு கடத்திவிடத் துடிக்கும் சித்திரக்காரன். அப்படியானதொரு சித்திரத்தை இந்த நூலில் எழுதி இருக்கிறார் கண்ணன்.

ஒருவழிப்பாதை

“”——————

நின் முகம் காணாத நாட்களெல்லாம்

கல்யாண வீட்டில் எச்சிலைக்குக் காத்திருக்கும் பிச்சைக்காரன் வெறும் வயிற்றோடு திரும்பும் தினங்கள்.””

          காதலியின் புறக்கணிப்பையும் பிச்சைக்காரன் மனதோடு தன்னை ஒப்புக்கொடுக்கும் காதலனின் துயரமும் ஒருசேர வெளிப்படுகிறது.

நின்று கொண்டிருக்கும் சைக்கிளை சந்தோஷமாக ஓட்டியபடி சிரிக்கும் அச்சிறுவனைப் போலத்தான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன் இம்மீச்சிறு வாழ்வை.

“”முடிந்தவரை அள்ளிக்கொண்டு நெகிழிப்பையில் போட்டு

மூச்சு முட்ட

கால்கள் நடுங்க

பாதி தூரம் கடந்து விட்டேன் ஆனாலும் விடாது

தினந்தோறும் பிரச்சனைகளை அள்ளி அள்ளி அட்சய பாத்திரமாய்

வழங்கியபடியே நகர்கிறது இம்மீச்சிறு வாழ்க்கை “”

      நேர்கோடுகளால் என்றும் சித்திரங்களை வரைய முடியாது.வளைகோடுகளே சித்திரத்தின் அழகை ஆழப்படுத்தும் என்பார் கவிஞர் வாலி. சோதனைகள் தானே நம்முள் இருக்கும் நம்பிக்கையாளனைத் தட்டி எழுப்பக் கூடியவை.

“”வங்கிக் கணக்கில்

வந்த பின்னர்

அடுத்த நாளே காணாமல் போகும்

மாதச் சம்பளமாய்

முந்தைய கணம் நான் பார்த்த குருவிகள்

இக்கணம் அம்மரக்கிளையில் இல்லை.””

      இன்றை உணர்ந்து இன்றில் வாழ்பவனின் எண்ணத்தில் எப்போதும் உற்சாகமும் உலகத்தின் மீதான பற்றும் பெருகியோடும்.

“”இருசக்கர வாகனத்தில் தொங்கியபடி

அறுப்புக்குச் செல்லும்

செம்மறி ஆடாய்

தத்தளிக்கும் இவ்வாழ்வு.””

“”காலையில் எழுந்ததும் கனத்த மனதுடன்

கடைக்குப் போனேன்

எனது கடன்களையும் பாரத்தையும்

ஒரு தட்டில் வைத்தேன் மற்றொன்றில்

வெற்றுடம்புடன் கசங்கிய லுங்கியுடன்

குடோனிலிருந்து மூட்டைகளை கைவண்டியில் இழுத்து களைத்துப் போய் வந்த பெரியவரை அழைத்து அவருடையதை வைக்கச் சொன்னேன்

சடாரென எடை கூடி இழுத்ததில் தரை தட்டியது தராசு

அவர் பக்கம்.””

    உழைப்பே உன்னதம் தரும் உயர் நிலையை எட்ட வைக்கும் மாபெரும் ஆயுதம் என்பதையும் உழைப்பவனின் உழைப்பை மதிக்கும் தன்மை நிறைந்து விட்டால் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் பற்றும் அதிகரித்து விடும் என்பதையும் இந்த வரிகள் உணர்த்திச் செல்கின்றன.

“சிவனடியார் நந்தியைக்

கழுவியபடியிருக்க

விபூதிக்காய் நாங்கள்

வெகு நேரம் நின்றிருக்க

காசு வாங்கிக்கொண்டு

கர்ப்பக்கிரகத்தில் ஒருவருக்கு மட்டும்

பிரசாதம் தரும்

பூசாரியின் கைகளில்

கழுவ முடியாத கறை.”

        மனிதர்கள் ஆலயங்களை நாடிச் செல்வது மன அமைதிக்கும் தனக்கான துன்பத்திற்கான ஒரு வடிகாலைத் தேடுவதற்காக மட்டுமே. ஆனால் அங்கும் அதிகாரமும் பணமும் விளையாடுகையில் கடவுள் மீதான நம்பிக்கையே கேள்விக்குறியாகிப் போகிறது.

“”ஒரு நாள் ஓட்டத்துக்காய்

வருடம் முழுவதும் காத்திருக்கும் நிலை சேர்ந்த தேர்””

          அவரவர் வாழ்க்கை நிலைப்பாடுகளிலும் வெற்றியும் இப்படியானதொரு தருணத்திற்காக காத்திருத்தல் தானே.. அதுதானே காலத்திற்கும் நமக்கு நல்நினைவாக மீட்டப்படுகிறது.

“”தினமும் பல் துலக்குகிறேன்

————–

 கடும் கோடையில்

கரிசல்காட்டில்

கால் கடுக்க நடப்பவனுக்கு

ஒரு குவளைத் தண்ணீராய் தினமும் படிக்கக் கிடைத்து விடுகிறது

எனக்குப் பிடித்த புத்தகங்கள்.””

        எல்லாவற்றையும் இழந்துநிற்பவனுக்கு எதிர்ப்படும் சந்தர்ப்பத்தைப் போலவே வாசிப்பின் பேரன்பை படம் காட்டுகிறது இவ்வரிகள்.

“”பூஜை

நிக்க இடமில்லை

தட்டுல மட்டும் ஒரு லட்சம்

பூ மட்டும் ஐம்பதாயிரம்

மதிய உணவுக்கு இருபது அயிட்டம்

இரவு உணவிற்கு மூணு அல்வா இந்த முறை கூடுதலாய் இரண்டு பாட்டு

பூஜை எப்படி?

கைபேசியில் அழைத்தவரும் கேட்கவில்லை

நானும் சொல்லவில்லை.””

        அதீத அலங்காரங்களும் செல்வத்தின் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் அலட்டல் மனப்பாங்கும் செய்ய வரும் செயலின் முக்கியத்துவத்தை நீர்த்துப்போக வைத்து இறுதியில் வெற்றுத் தருணத்தையே தந்துவிடுகின்றன.

“”காணவில்லை

அணிந்துரை ஒன்று அணிந்துரை இரண்டு அணிந்துரை மூன்று

நன்றி நவிழல்

சமர்ப்பணம்

என்னுரை

பின்பக்கக் குறிப்பு

ஆசிரியர் குறிப்பு

புரட்டி புரட்டிப் பார்க்கிறேன் கடைசி வரை காணவே இல்லை கவிதையை மட்டும்.””

      மனதைத் தைக்கும் கவிதைகளின் இன்றைய இயல்பை எடுத்துக்காட்டி கவிதை எழுதும் எல்லோரையும் எச்சரிக்கவும் செய்கிறது. வெறுமனே அணிந்துரையின் பின்னே யாரும் கவிதையை உயர்த்திப் பிடிக்கப் போவதில்லை. பொருளும் அதன் வழியே சொற்களின் புதுச்செறிவும் கருத்தை நமக்குள் கடத்திச் செல்வதில் காட்டும் ஆர்வமுமே கவிதையின் தரத்தை நிர்ணயிக்கப்போகின்றன. அத்தகைய கவிதைகளின் வரவு குறைந்திருப்பதையே விவரிக்கிறது இக்கவிதை.

“”களைத்துப்போன காலை மடக்கி அமர்ந்தபடி

இளம் வெயிலில்

மென்காற்று வாங்கியபடி

கடந்து போகும் தொடர்வண்டியைப்

பார்த்துக் கொண்டிருக்கும் அவரைப்போல

வாய்த்தால் போதும்.””

        எதன் மீதான இறுகப் பற்றும் ஒப்பந்த மனநிலையைத் துறந்துவிட்டு வாழ்வின் இயல்பை உள்ளபடி ரசிக்கத்தொடங்கினால் நமக்கான மனநெருடல்களும் அழுத்தங்களும் காணாமல் போய்விடுமல்லவா.

          சமகால உலகத்தின் இயக்கம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உளவியலில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தையும் உறவுகளில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தையும் பாடுபொருளாகவும் இந்த கவிதை நூல் பேசிச் செல்கிறது. தனக்கு நேர்ந்த துன்பங்களின் பட்டியலை தொடர்ந்து வாசித்தபடி புலம்பிக் கொண்டிருக்கும் ஒருவனை அதிகமாகச் சித்திரப்படுத்தும் அதே நேரத்தில் இந்த வாழ்வை வாழ்ந்து தீர்க்க வேண்டிய அவசியத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறது புத்தகம். பொருளாதாரத்தையும் புகழினையும் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அறிவியல் கருவிகளின் ஆட்சி நடக்கும் இன்றைய யுகத்தில் இளைப்பாற வருபவர்கள் வாசிக்கும் வரிகளுக்குள் ஏதோ ஒரு இடத்தில் தம்மை அடையாளம் கண்டுவிட்டால் அதுவே கவிதையின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.  இதிலும் அதீதம் என்பது விபரீதத்தின் முடிவாக சொல்லப்படும் நிலையில் இவரது கவிதைகள் அதீதத்தின் பசியால் நம்மை அலுப்பு தட்ட விடாமல் ரசிக்க வைக்கும் ஓவியங்களாக விரிகின்றன.. இவரது எண்ணத்தின் தரிசனங்கள் அன்பின் அணையாச் சுடராக வாசிக்கும் ஒவ்வொருவரது உள்ளத்திலும் வெளிச்சமாக ஏற்றி வைக்கப் பிறந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் சிறு சிறு காட்சிப் பதிவுகளை நமக்குள் புகுத்தி அதன் வழியே நல்லதொரு திரைக்கதையை நாமே எழுதிக் கொள்ளத் தூண்டுகிறது. வாழ்வில் சிறு சிறு புன்னகையும் சிறு சிறு துன்பமும் நேரும்போதெல்லாம் வார்த்தைகள் மெல்லிய இறகென மனதுக்குள் வருடிக் கொண்டிருந்தால் அதுவே மிகப்பெரிய ஆறுதலாக நம்மை வழிநடத்தத் தொடங்கிவிடும். அதீதத்தின் பசி மூலம் கவிதை மீதான கவனத்தையும் வாழ்வின் மீதான பற்றையும் ஒரு சேர உறுதிப்படுத்துகிறார் கண்ணன்.

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறந்தது திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம் என்ற சிறுகிராமம். தற்சமயம் வசிப்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம் என்ற ஊரில். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய  இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை,  ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)

2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)

3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)

4.அன்பு மொழி(2024)

5.மீன் சுமக்கும் கடல் (2025)

      என   ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோவை மேன்மதி மன்றம் இவருக்கு “தாய்த் தமிழ் காவலர்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்.

அதீதத்தின் பசி – கவிதைத் தொகுப்பு

கண்ணன்

முதல் பதிப்பு ஜூன் 2025, பக்கங்கள் 100, விலை ரூபாய் 140, வெளியீடு வேரல் புக்ஸ் சென்னை

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *