முட்டிக்குறிச்சி
நவீன காலத்தில் மருத்துவத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. சிறிய காய்ச்சலோ காயங்களோ, தோல் சார்ந்து ஏற்படக்கூடிய நோய்களோ நம்மை அச்சப்படுத்துகின்றன. அவற்றை விடவும் நோய்களுக்கு தீர்வு காண சென்றால் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளின் வீரியம் நமக்கு மேலும் அச்சமூட்டுகிறது. நோய் குணமாக்குதலில் மருந்துகளை அளவாக எடுத்துக்கொண்டு அதன் நோய்மையை மட்டுப்படுத்த முயல வேண்டும் என சில மருந்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இன்றை மருத்துவர்கள் மருந்து வியாபார நிறுவனங்களின் ஏஜென்டுகளைப் போல செயல்படுகின்றனர்.
இச்சூழலில் பாரம்பரியமான வாழ்வியல் பயன்பாடுகளில் இருந்த அன்றாட எளிய மருத்துவ முறைகள் மறைந்து போனது பற்றி சூழலியல் ஆர்வர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எழுத்தாளர் சோலச்சி கவிதைகள், சிறுகதைகள் என பயணித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய முதல் நாவல் முட்டிகுறிச்சி. நாவலின் மையம் வயல்நாடு என்கிற நிலவியலையும் அங்கு வாழ்கிற மக்களின் பண்பாட்டில் நிகழ்கின்றவற்றையும் அவர்களது அன்றாட புழக்கதில் இருக்கின்ற மருத்துவத்தைப் பற்றிப் பேசுகிறது. கிராமங்களில் பெண்களிடம் மருத்துவம் குறித்த அறிவு பரவலாக இருப்பதை நாம் இன்றம் பார்க்கமுடியும். காரணம் அவர்கள் ” கைமருத்துவம் ” என்ற மருத்துவ பயிற்சிக்கு சிறுவயது முதலே தங்களை உரையாடல் வழியாக, மருத்துவ பயன்பாட்டை நேரடியாக பார்ப்பதன் வழியாக கைமருத்துவத்தில் தேர்ச்சி அடைகின்றனர்.
சாணிடைஸர்களை பெண்கள் இன்று வீடு, அலுவலகம், பயணங்களில் தங்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு காலங்களில் கூச்சம், பயம் இன்றி அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது பெண்களின் உடம்பில் ஏற்படுகிற இயற்கையான நிகழ்வு என விழிப்புணர்வு காணப்படுகிறது. சாணிடைஸர் இந்தியாவில் அறிமுகமான பின்பு அது பெண்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது
மிகுந்த சவால் நிறைந்ததாகவே இருந்தது. இந்த சாணிடைஸர் பயன்படுத்துவதற்கு முன்பு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை கட்டுப்படுத்தும் மருத்துவ முறைகள் சுவாரசியமானவை. தீட்டு, விலக்குகள் போன்றவை இவற்றை மையப்படுத்தி வாய்மொழி மரபு கதைகளும் பாடல்களும் இருக்கின்றன.
பருத்தித் துணி பயன்பாடு, சுடுதண்ணீர், வெந்தயம், பெருங்காயம். கத்தாழை, கற்பூரவள்ளித் தழை, என பலவற்றை பெண்கள் மாதவிலக்கு காலங்களில் பயன்படுத்தி ஏற்படுகிற வலியை கட்டுப்படுத்தும்
மருத்துவத்தை தன தாய், தங்கை, தோழிகளிடம் உரையாடுவதன் வழியாகவும், நேரடியாக பயன்படுத்துவதன் வழியாகவும் இந்த கைமருத்துவத்தை அறிந்து கொள்கிறார்கள்.
ஆண்களுக்கு இது போன்ற மருத்துவ அறிவு உண்டா என்றால் நிச்சயம் உண்டு. அவைகள் பெரும்பாலும் புறகாயங்கள் தொடர்பானவையாகவோ, விஷம் குறித்தவையாகவோ இருக்கின்றன. பாரம்பரிய மருத்துவ அறிவு பெண்களுக்கு இருக்கிற அளவுக்கு இல்லை. ஏன்? குழந்தை பேற்றில் அதிக பங்கை அளிப்பவர்கள் பெண்கள் எனவே தான் கைமருத்துவம் பெண்களுக்கு மிகத் தேவையாக இன்றும் இருந்துவருகிறது.
முட்டி குறிச்சி நாவல் மூன்று முக்கிய பகுதிகளைப் பற்றி பேசுகிறது.
1. தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் மேட்டுக்குடி சமூகம் சாதியத்தை கட்டவிழ்த்தல்
2. காலமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் அதிகாரம் நிலைநாட்ட முயன்றவர்கள் சமரசத்தை நோக்கி வருதல்.
3. எளிய மக்களின் வாழ்வில் புழங்குபொருளாக இருக்கும் கை மருத்துவமும் அதன் பயன்பாடுகளும். எளியவர்கள் மீது அதிகாரம் நிலைநாட்டுதல்:
பத்துப் பதினைந்து தலைமுறைகளுக்கு முன்பு கலசமங்களம் மன்னன் மலையக்கோன் பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஏற்றுக் கொண்டு அவர்களான வாழ்வாதாரமாக தனது ஆளுகைக்கு உட்பட்டு வாழ்கிற பழங்குடி மக்களின் நிலத்தை வேளாண்மை செய்துகொள்ள ஆணை வழங்குகிறார். பஞ்சம் தேடி வந்தவர்களை பழங்குடியினர் தங்களுக்கு
எதிரானவர்களாக பார்க்கவில்லை. அவர்களுடனான வாழ்க்கைகையை ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.
நீர்வளம் மிகுந்த பகுதியில் பழங்குடியினர் தங்களுக்கான கம்பு, வரகு, சாமை, உள்ளிட்டவற்றை பயிர்செய்கின்றனர். ஆனால், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நீர்வளம் மிகுந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில்
கொண்டுவருதன் மூலம் தங்களது வேளாண்மையை வலுவாக்கிக் கொள்வதுடன், தங்களுடைய பொருளாதார வளத்திற்கு கீழக்குடியிருப்பு காரர்களின் உழைப்பை தங்களது நிலத்தில் முதலீடு செய்கின்றனர்.
இது சாதியகட்டமைப்புகளை இறுக்கமாக்க பெரிதும் காரணமாக அமைகிறது.
கண்டவனார் பாத்திரம் நாவலில் கீழக்குடியிருப்புகாரர்களிடம் பரிவு கொண்டவராக சித்தரிக்கப்படுகிறது. அதன் விளைவு தன் சுயசாதியைச் சேர்ந்தவர்களாலேயே வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாகிறார்.
” இந்த ஆள நம்ம சனத்துக்கே பெக்கலையா. யாரோ ஒரு எச்சிக்கலக்கி இவுங்க ஆயா பெத்திருக்கா. நம்ம ரத்தமா இருந்தா மத்த எடுபட்ட பயலுக்கு முட்டுக் கொடுத்து பேசுவாரா”.
தனது சாதியை தாண்டியும் மனித விழுமியங்களோடு வாழ முற்படும் கண்டவனார் கதாபாத்திரம் தனது இறப்புக்கு பின்பும் தன்மீது சாதிய நிழல் விழக்கூடாது என்று விரும்புகிறது.
” ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. நீங்க கும்புடுறீங்களே அந்த செவன்ங்கூட அவனுங்க சாமிதான். ஓடி வரும்போது எந்த சாமிய தூக்கி தலையில வச்சுக்கிட்டு வந்தீக. அவனுகள வெரட்டிப்பட்டு
அவன் சாமிய நீ கும்புடுற. உண்மைய சொன்னா எங்க ஆயா அவனுகளுக்கு முந்தானை விரிச்சானு தூத்துவீங்க. போங்கடா நீங்களும் உங்க எழவு கொலமும். த்தூ..”
” நான் செத்தா நீங்க எவனும் தூக்கி போட வேணாம். அவனுக வந்து தூக்கிப் போடுவானுங்க.”
வாளனார் கதாபாத்திரம் கண்டவனாருக்குப் பிறகு சாதிசார்ந்த அதிகாரத்தை முழுமையாக நிலைநாட்ட முயல்வதை பார்க்க முடிகிறது.
” கீழக்குடியிருப்பில் குழந்தை பிறந்தால் பெரியதனம் வாளனார் வீட்டில் இருந்துதான் குழந்தைக்கு காடாத் துணி கொடுப்பார்கள்.”
இது சாதிய கட்டுமானத்தின் புழுங்கு தன்மையை அடையாளம் காட்டுகிறது.
சமரசத்தை நோக்கி வருதல்:
அதிகாரம் எப்போதும் யார் கைகளுக்குள் இருப்பது என்பதில் தான் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எளியவர்களின் போராட்டம் பதவிகளில் இருப்பவர்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாகத்தான் பார்க்கப்படுகிறது.
நாவலில் வருகிற தீத்தான், கூழையன் பாத்திரங்கள் நீர்வளம் மிகுந்த பெரிய கண்மாயை காவல் காக்கும் பொறுப்பு கொண்டவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்களை குடியமர்த்திய மன்னரின் காலத்தில் இருந்தே அதிகாரத்திற்குப் பணிந்து விசுவாசத்தை காட்டியவர்கள் பிறகு அதிகாரத்தால் வீழ்த்தப்பட்டு உடல் உழைப்பு கூலிகளாக மாற்றப்பட்ட பின்னர் தங்களது வாழ்க்கையை குறித்து எண்ணுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
தீத்தான் இறந்த பிறகு பெரிய கண்மாயை காவல் காக்கும் பொறுப்பு தீத்தானின் மகனான அழகப்பனுக்கு கொடுக்கப்படுகிறது. அழகப்பன் தான் விவரம் அறிந்தது முதல் தனது தந்தையும், பெரிப்பாவும், உறவினர்களும்
மேகாட்டு மக்களான அதிகாரம் மிக்கவர்களின் அதிகாரத்திற்கு பணிந்து வந்ததை பார்த்து வளர்ந்தவனாக இருக்கிறான்.
இது ஒரு கட்டத்தில் அழகப்பனின் மனதில் உறுத்தலாக இருக்கிறது. அதிகாரத்தின் குறியீடாக கருதப்படும் “மீசை” அழகப்பனுக்கு அழகு மட்டும் அல்ல எதிர் அதிகாரத்தின் ஆயுதமாக எண்ண வைக்கிறது.
வாளனார் அதிகாரமிக்க நபராக இருந்தாலும் அவரது இறப்புக்கு முன்பு கீழ்க்குடியிருப்புக்காரர்களின் உழைப்பு என்பது மேகாட்டு பகுதியினருக்கு தேவை எனவே சமரச போக்கை கடைபிடிக்க வேண்டி சூழலை
உணர்ந்து கொள்கிறார். எனினும் அவரால் பழமைவாதத்திலிருந்து முழுவதுமாக வெளியேற முடியாமல் தடுமாறுகிறார்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த காராளன் நீர்வளம் மிக்க பகுதியைச் சேர்ந்த மக்களின் உழைப்பால் தான் வயல்நாட்டின் மேகாட்டு மக்கள் செழிப்பாக இருக்கின்றனர். அவர்களுடைய உடல் உழைப்பு இன்றி எந்தவொரு முன்னேற்றமும் யாருக்கும் பயன்கிடைக்காது என்பதை உணர்ந்தவராக இருக்கிறார்.
அழகப்பனின் மனைவி பொன்னழகி பெண்கள் மத்தியில் பழமைவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறபோது பொன்னழகியின் செயல்பாட்டை ஆதரிக்கிறார்.
இதன் காரணமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் மூன்றுநாட்களுக்கு ஊரைவிட்டு ஒதுக்குப் புறமாக இருக்கும் முட்டிக்குறிச்சியை தேவையில்லை என்பதை கீழ்க்குடியிருப்புக்காரர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
புழுங்கு பொருளாக மருத்துவம்:
நாவலில் புழங்குபொருளாக மருத்துமும், அதன் பயன்பாடுகளும் விவரிக்கப்படுகிறது. நாகறிஞ்சி, நாகதாளி என்று சொல்லக் கூடிய கத்தாழை, தொரட்டிப் பழம், குருவிச்சா தாழை, நாயுருவி, மூட்டனாரி, சிறியாநங்கை, சாரணெத்தி, முடக்கத்தான், மலம்பூண்டுச் செடி, செந்தட்டி, ஆவாரம்பூ, மருதம்பட்டை என பல மருத்துவ பயன்பாடுகள் கொண்ட தாவரங்கள் நாவலில் சுட்டிக் காட்டப்படுகின்றன.
பொன்னழகி கதாபாத்திரம் தனது ஊரில் கற்றுக் கொண்ட கைமருத்துவத்தை திருமணமாகி சென்ற ஊரில் செயல்படுத்துகிறாள். இதற்காக மருத்துவ குணமிக்க தாவரங்களை “முட்டிக் குறிச்சியில்”
வளர்க்கிறாள்.
பொன்னழகியின் இச்செயல்பாடு “முட்டிக்குறிச்சியில்” மாதவிலக்காக ஒதுங்கியிருந்த பெண்களுக்கு முதலில் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. எனினும் பொன்னழகி மாதவிலக்கு இயல்பு என்றும் அதனால் பெண்கள்
மூலையில் தனியே ஒடுங்கியிருக்கவும் வேண்டியதில்லை. மாதவிலக்கின் போது தேவைப்படும் மருத்துவ செடிகளையும் அதன் பயன்பாடுகளையும் பெண்கள் மத்தில் விழிப்புணர்வு கொள்வதே சிறந்த வழி என்றும் தனது நிலைப்பாட்டை சூசகமாகவும் சாதுரியமாகவும் செயல்படுத்திக் காட்டுகிறாள்.
0
வயல்நாடும் அதன் நிலவியல் சார்ந்து பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்வியலை எழுத்தின் வழியே விவரிப்பதன் மூலம் அழகியலோடு நாவல் தொடங்குகிறது. கீழ்க்குடியிருப்பு மக்களின் வாழ்வியல், திருமண உறவும், முரண்பாடுகளும், ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வதும், அவர்களின் உணவு முறையாக இருக்கும் மாட்டிறைச்சி குறித்து பேசுவதும் இந்நாவலின் சிறப்பு.
பஞ்சம் பிழைக்க வந்து பிறகு அதிகாரமிக்கவர்களாக தங்களை உருமாற்றிக் கொண்ட மேகாட்டு மக்களின் பண்பாடும் அவர்களது மொழியும் வழிபாடுகளும் போதிய அளவில் நாவலில் குறிப்புகளாக இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
நீர்வளம் மிகுந்த பகுதியில் காணப்படும் ஏரி, குளம், கால்வாய், கண்மாய்களும் அவற்றைத்தொட்டு மக்களிடம் எழுந்த சிறுதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள் குறித்த கதையாடல் பகுதி போதிய
அளவில் உரையாடல்களில் இடம்பெறவில்லை என்பது குறை.
பயன்பாட்டில் இருந்து மறைந்து போன மருத்துவ முறைகளை வயல்நாடு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்வியலை, அழகியலோடு வரைந்து காட்ட முயன்றிருப்பது நாவலில் சிறப்பான பகுதியாக அமைந்திருக்கிறது.
++
இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.