கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் ஒருவித புதிய பரவசம் தொற்றிக் கொண்டுவிட்டது வைஷ்ணவியிடம். இதுவரை இல்லாத உணர்வுக் கொந்தளிப்பு அவள் மனமெங்கும் ஊற்று நீராகப் பொங்கியது.

கல்லூரி வளாகத்தின் பூ மரங்கள், புதிய நட்புகள் என பல விஷயங்கள் வைஷ்ணவியை பூரிப்பு அடையச் செய்து விட்டன. முக்கியமாக அவளை புது உலகுக்கு அழைத்துச் சென்றது உதயகுமாரின் நட்பு.

குழந்தைப் பருவம் முதல் இன்றைய பருவம் வரை தான் கடந்து வந்த ஒவ்வொரு நாட்களின் இனிய மணமும் வைஷ்ணவியின் நினைவில் ஒட்டிக் கொண்டிருந்தன. அவளுடைய எல்லா நினைவுகளிலும் முக்கிய நபராக உருவம் எடுத்து நின்றவர் அவளுடைய தந்தை தான்.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளில் இருந்தே வைஷ்ணவியுடன் ஆத்மார்த்த உறவாக ஒட்டிக் கொண்டவள் ஸ்ரீநிதி. அவள் ஒரு நாள் வைஷ்ணவியைப் பார்த்து இப்படிக் கேட்டாள்:

“அப்படி என்ன மந்திரம் போட்டான் உதயகுமார்; மற்ற பையன்களிடம் இல்லாத எதை அவனிடம் கண்டு மயங்கிப் போய்விட்டாய்”

“எப்படி விளக்குவது என்றே எனக்குத் தெரியவில்லை; என்னுடைய சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்து இருப்பவர் என்னுடைய தந்தை தான்; அவர்தான் என்னுடைய உலகம். முதல் நண்பன், ஊக்க சக்தி, வழிகாட்டி, தன்னம்பிக்கை அளிப்பவர் என எல்லாமும் எனக்கு என்னுடைய தந்தை தான். அவரிடம் நான் பார்த்த ஆண்களுக்கான இலக்கணத்தை உதயகுமாரிடமும் பார்த்தேன். ஒருவேளை அதுதான்  அவனை நோக்கி என்னை ஈர்த்து இருக்க வேண்டும். “

வைஷ்ணவியின் பேச்சை இமை மூட மறந்து கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீநிதி இப்படிக் கேட்டாள்,

“அது என்ன ஆண்களுக்கான இலக்கணம்…?”

“ஒருவரின் நெருக்கம் நமக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க வேண்டும். என்னுடைய தந்தையுடன் இருப்பதைப் போலவே உதயகுமாருடன் இருக்கும் போது உணர்கிறேன். அதுமட்டும் இல்லை, இருவருமே எனக்குள் தன்னம்பிக்கை விதையை அன்பு கலந்த வார்த்தைகளுடன் விதைக்கிறார்கள்…..

என்னுடைய தந்தை, உதயகுமார் இருவருமே எனக்கு வெறும் நபர்கள் அல்ல. ஒரு நண்பர்கள், பாதுகாவலர்கள், ஊக்கமூட்டுபவர்கள், உற்சாகப்படுத்துபவர்கள், தன்னம்பிக்கை வளர்ப்பவர்கள், நம்பிக்கை ஊட்டுபவர்கள், நல்ல பண்புகளை ஊட்டுபவர்கள், வழிகாட்டிகள் என எண்ணற்ற முகங்கள் கொண்டவர்கள். இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.”

“ஆண்களுக்கான இலக்கணத்தைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே!” விடாமல் கேட்டாள் ஸ்ரீநிதி.

சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு பேசத் தொடங்கினாள் வைஷ்ணவி.

“நான் பருவத்திற்கு வந்த பிறகும் என்னை ஒரு குழந்தை போலத்தான் நடத்தினார் என்னுடைய தந்தை.

‘வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு’ என்று ஒரு நாள் கூட அவர் வாயிலிருந்து வார்த்தை வந்ததேயில்லை. சின்ன வயதில் ஐஸ்கிரீமும், சாக்லேட்டும் கேட்டு நான் கெஞ்சிக் கேட்ட போது பார்த்த அதே தந்தையைத் தான் எனக்குள் பிடிவாத குணம் வளர்ந்துவிட்ட இன்றைய நாளிலும் நான் பார்க்கிறேன். நல்லது என்று பட்டால் நான் கேட்பதை என்னுடைய தந்தை மறுக்கவே மாட்டார். இப்பொழுதும் என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஒரு குழந்தையைப் போல என்னை அணைத்து வாழ்த்துவார்.

‘இந்த ஆடையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்’ என்று பாராட்ட அவர் தவறியதே இல்லை; எல்லாவற்றையும்விட நான் எது பேசினாலும் அதை அதிக அக்கறையுடன் கேட்பார். என் தந்தையைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும், என்று என் மனம் விரும்பியது. அப்படியான ஒரு ஆண்மகனாகத்தான் உதயகுமார் எனக்குத் தெரிகிறான்”

ஒரு நீண்ட சொற்பொழிவு போல் பேசி முடித்தாள் வைஷ்ணவி.

“அவ்வளவு தானே! வேறு எதுவும் இன்னும் சொல்ல இருக்கிறதா?” சிரித்தபடி கேட்டாள் ஸ்ரீநிதி.

இதற்காகவே காத்திருந்தது போல் மீண்டும் மடை திறந்தது போல் பேசத் தொடங்கினாள் வைஷ்ணவி.

“என்னுடைய அம்மாவும், அப்பாவும் சண்டை போட்டு ஒரு நாள் கூட நான் பார்த்ததே இல்லை. எந்த விஷயத்தையும் வெகு நாசுக்காக கையாளத் தெரிந்தவர் என்னுடைய தந்தை. ஒரு நாள் என்னுடைய தந்தையின் நண்பர் அவருடைய பத்து வயது மகனுடன் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது என்னுடைய அம்மா சொன்னார் :

“வைஷ்ணவி! பெரியவரை மதித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்.” இதைக் கேட்டவுடன் என்னுடைய தந்தை சிரித்தபடி இப்படிச் சொன்னார்:

“வைஷ்ணவி! மதிப்பு கொடுப்பதில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்கக் கூடாது”

என்னுடைய தந்தையின் வார்த்தைகளும், செயல்களும் தான் எனக்கு வழிகாட்டிகள்; அவருடைய முகத்தை நினைவுபடுத்தும் ஆண்மகனைத் தான் என்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள என் மனம் விரும்புகிறது.”

வைஷ்ணவி சொன்னதைக் கேட்கக் கேட்க ஸ்ரீநிதிக்குப் பொறாமையாக இருந்தது. தன்னுடைய தந்தையை நினைத்துப் பார்த்தாள்….

அப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஸ்ரீநிதி. பள்ளி ஆண்டுவிழா பேச்சுப் போட்டியில் “பாரதியாரின் கவிதை உலகம்” எனும் தலைப்பில்  சிறப்பாகப் பேசி கைதட்டல் வாங்கினாள். அவளுக்குத் தான் முதல் பரிசு கிடைத்தது.

மகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்க ஸ்ரீநிதியை தூக்கி வைத்துப் பாராட்டினார் அவளுடைய தந்தை. அடுத்த தினம் ஸ்ரீநிதியை கடற்கரைக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

“ஸ்வீட் கேர்ள்; பாடப் புத்தகங்கள் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இப்படித்தான் பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

அதன் பிறகு காலம் மாறியது. ஸ்ரீநிதி பனிரெண்டு வயதில் பருவம் அடைந்தாள். அவளது தந்தையின் குணநலன்களும் தலைகீழாக மாறிவிட்டது. இப்பொழுது ஸ்ரீநிதியிடம் ஓவியம், கவிதை, பாட்டு என்று பல திறமைகள் ஒளிவீசத் தொடங்கி இருந்தன. அந்த வருடம் பதினைந்து வயதுக்குக் கீழுள்ள சிறார்களுக்கு மாவட்ட அளவில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசை வென்றிருந்தாள் ஸ்ரீநிதி.

உடல் ரீதியாக வளர்ந்து இருந்தாலும் மன ரீதியாக குழந்தையாகத் தான் இருந்தாள் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி  பருவத்துக்கு வந்த நாள் முதலாகவே அவளிடமிருந்து தள்ளி நிற்கத் தொடங்கி இருந்தார் அவளுடைய தந்தை. அது மன அளவில் அவளைப் பாதிக்கத் தொடங்கி இருந்தது. இப்பொழுது மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீநிதி தன்னுடைய தோளைத் தட்டி தந்தை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தாள். தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் தன்னை அரவணைத்துக் கொள்தோ அவளுக்கு ரொம்பவே தேவையாக இருந்தது. ஆனால் ஸ்ரீநிதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“என்னுடைய தோழிகள் எல்லாம் எப்படிப் பாராட்டினார்கள் தெரியுமா? இந்த அப்பா மட்டும் ஏன் பழைய அப்பாவாக இல்லாமல் இப்படி மாறிப் போய்விட்டார்!” தன்னுடைய அம்மாவைப் பார்த்து ஆதங்கத்துடன் பொரிந்துத் தள்ளினாள் ஸ்ரீநிதி. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

“உன்னுடைய அப்பாவிற்கு அலுவலக கவலை அதிகமாகிவிட்டது. என்னிடம் கூட இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை.”

அம்மாவின் சமாதானம் ஸ்ரீநிதிக்கு அமைதியைக் கொடுக்கவில்லை.

அன்று கல்லூரியின் பூமரம் ஒன்றின் நிழலில் நின்றபடி வைஷ்ணவியும், உதயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வைஷ்ணவியின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தான் உதயகுமார். தூரத்தில் நின்றபடியே அவர்களை ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.

பூமரத்தில் அமர்ந்திருந்த குருவி ஒன்று “க்கூ…க்குக்கூ..” என்று குரல் கொடுத்தது. திடுக்கிட்ட வைஷ்ணவி சுய நினைவு பெற்றாள். தூரத்தில் நின்று கொண்டிருந்த தோழியை கவனித்து விட்டாள்.

“ஏய்! ஸ்ரீநிதி! இங்கே வா!”

தயங்கித்  தயங்கி அவர்களை நெருங்கினாள் ஸ்ரீநிதி.

உதயகுமாருக்கு தன்னுடைய தோழியை அறிமுகம் செய்து வைத்தாள் வைஷ்ணவி. ஸ்ரீநிதி, வைஷ்ணவி இருவரின் தந்தைகள் குறித்த சித்திரத்தை அன்று முழுமையாக அறிந்து கொண்டான் உதயகுமார். அமைதியாக அவர்களிடம் இருந்து விடைபெற்றவன் அடுத்த நாள் அதே இடத்தில் இருவரையும் மீண்டும் சந்தித்தான்.

அவனுடைய கையில் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர் எழுதிய “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூல் இருந்தது. அந்த நூலை ஸ்ரீநிதியின் கையில் கொடுத்துவிட்டு இப்படிச் சொன்னான் உதயகுமார் :

“சிறு வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர் இந்த நூலில். மேலும்,அப்பாவின் வழிகாட்டுதலே உங்கள் வயது பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். ‘என் மகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் தான்’  எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இந்த நூலாசிரியர். இந்த புத்தகத்தை உன் தந்தைக்கு அன்பளிப்பாகக் கொடு; அவர் வாசிக்கட்டும். எல்லாம் மாறும்”

ஸ்ரீநிதியின் மனதுக்குள் ஒரு புதிய உற்சாகக் குரல் ஒலித்தது.

“என்னுடைய பழைய அப்பாவை நான் கண்டடையப் போகிறேன்”

பூ மரத்தின் நறுமண மணத்தை சுமந்தபடி வீடு நோக்கி தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் நடக்கத் தொடங்கினாள் ஸ்ரீநிதி.

*

துரை. அறிவழகன்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், காரைக்குடி கிளையின் தலைவர். கி.ராஜநாராயணனின் ஒன்பது தொகுதிகள் நூலாக்கத்தில் பதிப்பாசிரிராக செயல்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் இவரது ‘மகி எழுதிய முதல் கதை’ மற்றும் ‘தலைவர் உருவாகிறார்’ ஆகிய சிறுவர் கதைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. இவரது “எலுமிச்சை மரப் பட்டாம்பூச்சி” சிறார் மனமலர்ச்சி நாவல் உலக  மொழிகளில் மொழியாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  பண்ணவயல் இவரது முதல் நாவல். ‘தொன்ம அறம்’ எனும் புதிய நாவல் விரைவில் வெளிவர உள்ளது. தற்போதைய இருப்பு காரைக்குடி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *