தினமும் சாமி படங்களின்முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின்முன் சாமியாக
அம்மா வேண்டுமென்று
அழுது அடம்பிடிக்கும்
சின்னவளிடம்
சாமியைப் பார்க்கச்
சென்றிருக்கும் அம்மா
இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே
தினமும் சமாளித்து வருகிறார் அப்பா
அக்காவிடம் அவ்வப்போது
சின்னச் சின்ன சண்டைகள் போடும் சின்னவள்
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
அம்மா வந்ததும்
சொல்லி விடுவேன் என்று
பெரியவள்
பெரியவளான பின்புதான்
இன்னொரு அம்மா உருவாகிறாள் இல்லத்தில்
சாமியை பார்க்கச்சென்ற அம்மா
இனியும் திரும்பி வரமாட்டாள் என்றுணர்ந்த சின்னவள்
தினமும் வணங்கத் தொடங்குகிறாள்
அம்மா சாமியை
விளக்கேற்றியபின்
விளக்கின் வெளிச்சத்தில்
அம்மாவின் முகத்தைத் தேடுகின்றன
அவளின் விழிகள்
சீ. பாஸ்கர்
பிறந்தது 1981 – ல். கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளப்பாடி சொந்த ஊர். வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் உள்ள அமிர்தாஞ்சன் மற்றும் ஆர்கிட் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி , பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.