மாலினியும் ரஞ்சனியும் “இது எனக்குத்தான் இது எனக்குத்தான்” என்று கூறி சண்டை போட்டுக் கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருந்தார்கள்.
அப்போது அவர்கள் முன் பறந்து வந்த மைனா “என்ன இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கிறீர்கள் என்ன ஆயிற்று?”என்று கேட்டது.
“பள்ளிக்கூடம் முடிஞ்சு இரண்டு பேரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது மரத்தின் கீழ் ஒரு மாம்பழம் கிடந்தது. அதை முதன்முதலில் நான்தான் பார்த்தேன். அதோ மாம்பழம் என்று கூறினேன். அதை ஓடிச் சென்று மாலினி எடுத்து விட்டாள். நீயே சொல் அந்த பழம் எனக்கு தானே சொந்தம். நான் தானே முதலில் பார்த்தேன்” என்று மைனாவிடம் கேட்டாள் ரஞ்சனி.
“அவள் முதலில் பார்த்தாலும் நான் தானே அதை ஓடிச் சென்று எடுத்தேன். அது எனக்குத் தனே சொந்தம். நீயே கூறு மைனா?” என்று மைனாவிடம் கேட்டாள் மாலினி.
“பொறுங்கள் இருவரும் சண்டையிட வேண்டாம். இந்தப் பழம் உங்கள் இருவருக்கும் சொந்தமானது அல்ல. எனக்கே சொந்தமானது” என்றது மைனா.
“பார்த்தாயா இதற்குத்தான் சண்டை போடக்கூடாது என்று கூறுவது. அப்பத்தை இழந்த பூனை போல் நாம் மைனாவிடம் பழத்தை இழக்க போகிறோம்” என்றாள் மாலினி.
அப்படியெல்லாம் இல்லை இந்தப் பழத்தை நான்தான் கொத்திக் கொத்திக் கீழே விழ வைத்தேன். என் குழந்தைகளுக்கு இந்தப் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காகத்தான் கொத்திக் கீழே விழ வைத்தேன்” என்றது மைனா.
“அடடா அப்படியா! அப்பொழுது இந்தப் பழம் உனக்குத் தான் சொந்தம். சரி! நீயே எடுத்துக்கொள். உன் குழந்தைகளுக்கு கொண்டு சென்று கொடு” என்று கூறினாள் ரஞ்சனி. மாலினியும் அதை ஒத்துக் கொண்டாள்.
“அது சரி உன் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள் மாலினி.
“இதோ இந்த மரத்தின் அந்த இரண்டாவது கிளையில்தான் இருக்கிறது. இங்கிருந்து பாருங்கள் தெரியும்” என்று மைனா கூறியவுடன் இருவரும் அந்த கிளையைப் பார்த்தார்கள் அங்கு ஒரு கூடு தெரிந்தது.
“உனக்கு எத்தனை குழந்தைகள்? எனக்கு உன் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் போல் ஆவலாக இருக்கிறதே” என்று கூறினாள் ரஞ்சனி.
“நானும் கூட குஞ்சுப் பறவையை இதுவரை பார்த்ததே இல்லை” என்றாள் மாலினி.
“இருவரும் மரத்தின் மீது ஏறி வாருங்கள். என் குழந்தையை உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறியது மைனா. இருவரும் மெதுவாக மரத்தின் மீது ஏறி அந்தக் கூடு இருக்கும் இடத்திற்குச் சென்று ஒரு வலுவான கிளையில் அமர்ந்தார்கள்.
மைனாவின் குழந்தைகளை பார்த்தவுடன் மாலினிக்கும் ரஞ்சனிக்கும் கையில் எடுத்து வைத்துக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது மைனாவிடம் கேட்டு இருவரும் மைனாவின் குழந்தைகளை கையில் எடுத்து வைத்து கொஞ்சினார்கள்.
மைனாவின் குஞ்சுகள் ‘கீச் கீச்’ என்று சத்தமிட்டு கொண்டிருந்தன.பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அப்பொழுதுதான் இறக்கைகள் முளைக்க ஆரம்பித்து இருந்தன.
“கொடு நான் இந்தப் பழத்தைக் கொடுக்கிறேன்” என்று மைனாவிடம் கேட்டாள் மாலினி. “உங்களுக்குக் கொடுக்கத் தெரியாது. நான் கொடுக்கிறேன் பாருங்கள்” என்று அந்தப் மாம்பழத்தைக் கொத்திக் கொத்தி எடுத்து மைனா தனது குஞ்சுகளுக்குக் கொடுத்தது.
‘கீச் கீச்’ என்று கத்தியப்படியே இரண்டும் வேக வேகமாக ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டும் சாப்பிட்டன.
குஞ்சுகள் ஆவலோடு சாப்பிட ஆரம்பித்தன. யாரெல்லாம் நல்லவர்கள். குஞ்சுகள் கூட்டில் தனியாக இருக்கும் பொழுது எப்படி இருக்க வேண்டும். யாராவது வந்தால் என்ன செய்ய வேண்டும். யாரையெல்லாம் நம்பலாம். யாரையெல்லாம் நம்பக்கூடாது” என்று கதை கதையாகக் கூறிக் கொண்டே பழத்தை ஊட்டியது மைனா.
“ஐ! என் அம்மா மாதிரியேதான் உலகத்தில் எல்லா அம்மாவும் இருப்பார்களா! உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது” என்றாள் மாலினி.
“உன் அம்மா மாதிரியா! எனக்குப் புரியவில்லையே” என்றது மைனா.
“என் அம்மாவும் எனக்குச் சாப்பாடு கொடுக்கும் பொழுது ஏராளமான கதைகளைச் சொல்லுவார்” என்றாள் மாலினி.
“எந்த மாதிரியான கதைகள்? எனக்கும் சொல்லேன். என் அம்மா ஒரு நாளும் சாப்பாடு கொடுக்கும் போது கதைகள் கூறியதில்லை” என்றாள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ரஞ்சனி.
“இப்பொழுது மைனா கூறியதல்லவா! யாரெல்லாம் நல்லவர்கள் யாரெல்லாம் கெட்டவர்கள் யாராவது கூட்டிற்கு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இதைத்தான் என் அம்மாவும் கூறுவார்”
“எப்படி? எனக்குப் புரிவது போல் கூறேன் மாலினி”
“சரி சொல்கிறேன் கேள் ரதி என்ற குட்டி பெண் இருந்தாள். அவள் ஒரு நாள் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனது தோழியின் வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவளுடைய அப்பா மட்டும் இருந்தாராம். அவருடைய அப்பா அன்று ரதிக்குப் பிடிக்காத இடத்தில் எல்லாம் கைகளை வைத்தாராம். ரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். பயத்தோடு அழுதாளாம். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறி அழுதாளாம்.
“அச்சச்சோ பாவம்! அந்த மாமா ரொம்ப மோசம். இப்படியும் கூடவா இருப்பாங்க. அப்புறம் என்ன ஆச்சு? அங்கிருந்து தப்பிச்சிட்டாங்களா?” என்று பதட்டத்தோடு கேட்டாள் ரஞ்சனி.
“சொல்லறேன் கேளு!அப்பொழுது அந்த மாமா ‘நான் இப்பொழுது இங்கு செய்ததை யாரிடமாவது கூறினால் உன்னைத்தான் திட்டுவார்கள். யாரிடமும் கூறி விடக்கூடாது அப்படி மீறி கூறினால் அவ்வளவுதான் என்ன செய்வேன் என்று தெரியாது’ என்று மிரட்டினாராம்”
“அய்யய்யோ ரதி என்ன செய்தாள்?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் ரஞ்சனி.
“நானும் இப்படியே தான் என் அம்மாவிடம் கேட்டேன். அதற்கு என் அம்மா ‘உனக்கு இப்படி நடந்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய்? என்று என்னிடம் கேட்டார்”
“நீ என்ன சொன்னாய்?”
“நான் பயந்து இருக்க மாட்டேன். நான்தான் தற்காப்புக் கலை கற்றுக் கொண்டிருக்கிறேனே! அவரை அடித்து விட்டு ஓடி வந்திருப்பேன்’ என்று கூறினேன்.
ரொம்ப சரியாச் சொன்ன! என்று என்னம்மா என்னை அணைத்துக் கொண்டார். நீ என்ன செய்து இருப்பாய்?” என்று ரஞ்சனியைப் பார்த்துக் கேட்டாள் மாலினி.
“தெரியலையே. எனக்குத்தான் தற்காப்புக் கலை தெரியாதே. நான் என்ன செய்திருப்பேன்? எனக்கே தெரியலையே. சரி சரி நீ கதையைக் கூறு” என்று கையில் வைத்திருந்த மைனாக் குஞ்சுகளின் முதுகை நீவியபடியே கேட்டாள் ரஞ்சனி.
ரதி அன்று வீட்டுக்கு வந்து அழுது கொண்டே இருந்தாள். அம்மாவிடமும் அப்பாவிடமும் வயிற்று வலி என்று கூறிவிட்டாள். அவர்களும் சாப்பிட்டது ஜீரணமாகவில்லையோ என்று ஏதேதோ வைத்தியம் செய்தார்கள். அன்று இரவு பெட்டிக்குள் இருந்து ஒரு சத்தம் வந்தது. மெதுவாக பெட்டியை திறந்து பார்த்த ரஞ்சனி அவள் பாட்டி கொடுத்த மந்திரக் கிலுகிலுப்பைக்குள் இருந்து சத்தம் வந்ததை கேட்டாள். மெதுவாக மந்திரக் கிலுகிலுப்பையைக் கையில் எடுத்தாள். மந்திரக் கிலுகிலுப்பைக்குள் இருந்த கற்கள் குதித்துக் கொண்டிருந்தன. `ஏன் சோகமாக இருக்கிறாய்? உனக்கு என்ன ஆயிற்று?’ என்று மந்திரக் கிலுகிலுப்பை ரதியிடம் கேட்டது. ரதி, ஒன்றுமில்லை என்று கூறினாள். `எனக்குத் தெரியாதா எனக்குத் தான் எல்லாம் தெரியுமே!’ என்று மந்திரக் கிலுகிலுப்பை கூறியவுடன் நடந்த எல்லாவற்றையும் மந்திர கிலுகிலுப்பையிடம் கூறினாள் ரதி.
“மந்திரக் கிலுகிலுப்பை என்ன செய்தது? ” என்று கண்கள் விரியக் கேட்டாள் ரஞ்சனி.
“கவலைப்படாதே நாளை உன்னோடு என்னை அழைத்துச் செல்” என்று கூறியது மந்திர கிலுகிலுப்பை. அடுத்த நாள் ரதி பக்கத்து வீட்டு மாமாவின் வீட்டிற்கு செல்லும் பொழுது மந்திரக் கிலுகிலுப்பையை எடுத்துச் சென்றாள். அன்று வீட்டில் எல்லோரும் இருந்ததால் மாமா ரதியை எதுவும் செய்யவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு மாமா மட்டும் தனியாக இருக்கும் பொழுது ரதி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாள். ரதியை மாமா தன் வீட்டிற்கு அழைத்தார். ரதி மந்திர கிலுகிலுப்பையோடு மாமாவின் வீட்டிற்குச் சென்றாள்.வழக்கம் போல மாமா ரதிக்கு பிடிக்காத இடத்தில் தொட ஆரம்பித்தார். அப்பொழுது மந்திரக் கிலுகிலுப்பையினுள் இருந்து பூதம் ஒன்று வந்து மாமாவை அடித்து நொறுக்கியது. திரும்பவும் அந்த பூதம் மந்திரக் கிலுகிலுப்பையினுள் சென்றது. ரதி மந்திரக் கிலுகிலுப்பை எடுத்து வந்து வீடு சேர்ந்தாள்.
`உன் அம்மாவிடம் இதை உடனே கூறு!’ என்று மந்திர கிலுகிலுப்பை கூறியது. ரதி தன் அம்மாவிடம் நடந்ததை கூறினாள். ரதியை வாரி அணைத்துக் கொண்ட அம்மா இதுபோன்ற தவறுகள் ஒருபோதும் குழந்தைகள பொறுப்பு ஆக மாட்டார்கள். `இப்படி எங்கு நடந்தாலும் நீ தைரியமாக அவர்களைத் தொட வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நடந்தால் அவர்களை அடிக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் சத்தமிட வேண்டும். பிறகு அங்கிருந்து ஓடி வந்து விட வேண்டும். வந்து அப்பாவிடமோ அம்மாவிடமோ அல்லது உனக்கு யார் நம்பிக்கையானவர்களோ அவர்களிடம் கூற வேண்டும்’ என்று அம்மா ரதியிடம் கூறினார்.
ரதியின் தம்பியை பார்த்து, `ரதிக்கு மட்டுமல்ல நாளைக்கு உனக்கும் இப்படி நடந்தால் நீயும் இதைத்தான் செய்ய வேண்டும். நீ வளர்ந்த பிறகு ஒரு நாளும் பெண்களிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. பெண்களை மதிக்க வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்!’ என்றும் கூறினார். பிறகு,
அம்மா ரதியின் தைரியத்தை பாராட்டினார்.
அடுத்த நாள் அந்த மாமாவைப் போலீஸ் அழைத்துச் சென்றது.
ரதி மந்திரக் கிலுகிலுபையைக் கட்டி அணைத்துக் கொண்டு மந்திரக் கிலுகிலுப்பையைப் பார்த்து கண்ணடித்தாள்.
“அடடா! கதை அருமையாக இருக்கிறதே இது மாதிரி கதைகளை என் அம்மா இதுவரை என்னிடம் கூறியதே இல்லையே” என்றாள் ரஞ்சனி.
“நம்மிடமும் இப்படி ஒரு மந்திரக் கிலுகிலுப்பை இருந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் ரஞ்சனி.
“நானும் இப்படித்தான் என் அம்மாவிடம் கேட்டேன். ரெண்டு பேரும் ஒரே மாதிரி கேட்கிறோம் இல்லையா!” என்றாள் மாலினி “அம்மா அதற்கு என்ன சொன்னார்?”
அதற்கு அம்மா, `மந்திரமும் வேண்டியதில்லை கிலுகிலுப்பையும் வேண்டியதில்லை. தந்திரம் இருந்தால் போதும். நம் தன்னம்பிக்கையும் உடல் வலுவும் இருந்தால் போதும். அதற்காக தானே உனக்கு தற்காப்புக் கலைக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்’
“நாளையிலிருந்து நானும் உன்னோடு குங்ஃபூ கற்றுக்கொள்ள என் அம்மாவிடம் கேட்டு விட்டு வருகிறேன் மாலினி” என்றாள் ரஞ்சனி.
இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மைனா “பேஷ் பேஷ் அருமை” என்றது. மைனாவின் குஞ்சுகள் புரிந்தது போல் ‘கீச் கீச்’ என்று கத்தின.
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
அருமையான சிறார் கதை. வாழ்த்துகள். மகிழ்வுடன்,
முனைவர் இரா. கோதண்டராமன்
சென்னை