எந்த ஒரு பார்வை அவாட்ட இருந்து வராதானு மடத்துல படுத்துக் கெடந்தா ராசுப் பாண்டியன். இவெ காதலிச்ச பொண்ணு வீடு அவெ வீட்டுலருந்து நாலு வீடுதா தள்ளி இருக்கு. எப்பயாச்சும் ஒருதடவதா அவளப் பாப்பா. ஆனா ஏதும் பேச முடியாது. பேசுனா யாராச்சும் பாத்து ஏதும் சொல்லிருவாங்களோனு ஒரு நெனப்பு. இன்னொன்னு கூச்ச சொபம். அந்தப் பிள்ளைக்கு வயசுப் பதினெட்டு பத்தொம்பது இருந்தாலும் பத்தாம் வகுப்புல பெயிலானதுனால காட்டு வேலைக்குப் போவா. காட்டு வேலனா தென்னங்கன்னுகளுக்கு தண்ணி ஊத்த, குப்ப அள்ள, ஒடம்பு நல்லா இருந்தா கட்டட வேலைக்குப் போவா. அவா வீட்டுல அம்மா எள்ளுக்காடுகளுக்கு களவெட்ட வெறகு வெட்டி விக்க, காடுகள்ல களவெட்ட வேலைக்குப் போவா. ஒரு நாளைக்கு என்ன சம்பளம் வந்திரப் போது இருபத்தஞ்சு இல்லனா முப்பது ரூவா வரும். இவா அய்ய, நாயக்கர் தோப்புகள்ள தண்ணிப் பாச்ச, வெறகுக்குப் போக, செல நேரம் நைட்டு தேங்கா உரிக்கப் போவா. இதுபோக இவுங்க வீட்டுல ரெண்டு சின்னப்பெயங்க இருக்கானுக. அவனுக ஆறு எட்டாம் வகுப்பு படிக்கிறானுக. தாயும் தகப்பனும் ஒழச்சாலும் அதுப்பத்தலனு மூத்த மகா வேற வேலைக்குப் போறா. எப்பிடியும் வீட்டுக்கு, மூணு பேரும் வேல செஞ்சும் ஒரு நாளைக்கு நூறு ரூவாயத் தாண்டுறது அதிசயம்தா. சொந்த வீடுதா. அன்னைக்குத் தெருவுல கரண்டு இருந்தாலும் வீட்டுல மண்ணெண்ண வெளக்குதா. இந்த சின்னப் பெயலுக பள்ளிக்கொடம் முடிஞ்சதும் தெரு வெளக்குல செத்த நேரம் படிப்பானுக. அந்த தெரு வெளக்கு வெளுச்சம் மஞ்சளா அந்தப் புத்தகத்துல விழுகுறது தெரு வெளக்கு வெளிச்சமா இல்லனா நெலா வெளிச்சமானு கண்டுபுடிக்குறது செரமம்.

      இவெனுக்கு வயசு இருவது இருவத்திரெண்டு இருந்தாலும் மீசகீச வச்சு ஆளு பெரியாளு மாதிரி தெரியுவா. ஒடம்பு நல்லா தேக்க கட்ட மாதிரி இருக்கும். மொகம் அகலமா இருக்கும். மத்தப் பிள்ளைக்கு இவெ மேல ஆச இருந்தாலும் இவெனுக்கு அவதா வேணுமா. அவா இவெனப் பாப்பானாங்கிறா, வேற எங்குட்டுக்கூடி அவாட்ட இவெ பேசுறது. பேசுனாத்தான ஒறவ உண்டாக்க முடியும். ஆனா எப்பெல்லாம் இவெனப் பாக்குறாளோ அப்ப ஒரு பார்வ இவெ கண்ணுல வந்து விழும். அத அப்பிடியே நெஞ்சுக்குள்ள இழுத்துக்கிடுவா. நாளாக நாளாக அந்த ஒத்தப் பார்வையும் நெஞ்சுக்குள்ள இருந்து கரையும்போது மொகத்துல ஒரு ஏக்கம் தெரியும். திரும்ப அவள எப்படா பாக்கனும்தா மடத்துல படுத்துக் கெடக்கா.

      இவெ படுத்துக் கெடக்கா சரி இந்தப் பெருசுக எதுக்கு படுத்துக் கெடக்குதுக. அந்தப் பிள்ள அன்னைக்குனு பாத்து பெரியஓடப்பக்கம் தென்னங் கன்னுகளுக்கு தண்ணி எடுத்து ஊத்திட்டு, ஒடையார்பட்டிலிருந்து ரோட்டு மேல இருக்குற உயிர்வேலி மரத்து வழியாப் போகாம மடத்துப் பக்கம்தா வருமாம். காலையில டென்னிஸ் பள்ளிக்கொடத்துக்குப் போனவ இவென்ட சொல்லிட்டுப் போய்ருக்கா. அவளப் பாக்கணுமனு; அப்பருந்து கஞ்சி கிஞ்சி குடிக்காம மடத்துல இருக்கா. பெருசுக எதுக்கு இருக்குதுங்கனு இவெனுக்கும் தெரியல.

      மடம் எப்பிடி இருக்குதுனா நாலு பக்கமும் செவுரு இல்ல. வடக்கால மட்டும் செவரு. ரெண்டு குத்துக்கல்லு இருக்கு மொகத்த தாங்கிப் பிடிக்க. ஒரு ஆளு ஒசரத்துக்கு பேஸ்மட்டம் இருக்கு. கெழக்கருந்து மடத்துமேல ஏற படிக்கட்டுக இருக்கும். பாரஸ்ட் பங்களாலருந்து வடக்கால அர்ச்சுனபுரம் வழியா வத்றாப்புக்கு ஒரு ரோடுப் போகுது. அந்த ரோட்டப் பாத்தா வெறும் கல்லும் முள்ளுமா இருக்கும். அந்த ரோட்டுல மினி பஸ்சுதா போகும். காலையில ஒருதடவ சாந்தரம் ஒருதடவ பி.ஆர்.சி பஸ்சும் போகும் வரும் புதுப்பட்டி பஸ்டாண்டுக்கு. அப்பிடி அந்த ரோட்டுலருந்து ரெண்டு எட்டு எடுத்து கெழக்காம எடுத்து வச்சா இவெ தெரு. இந்த எடத்துக்கும் மேலூர்னு பேரு. பள்ளனுக மட்டும்தா குடியிருக்காங்க. ஆனா ரெண்டு மதத்துக்காரங்க இருக்காங்க. கிறிஸ்தவக்காரங்களும் இந்துக்காரங்களும் ஒரே தெருவுல. அந்த ரோட்டு மேல ஒரு வீட்டுச் செவுத்துல பசுவதிப் பாண்டியன வரஞ்சு இது எங்க கோட்டனு எழுதிருப்பாங்க. மடத்துக்கு மேக்கட்டு ஒரு போர்டு இருக்கு. அதுல கிருஷ்ணசாமி படம் புதிய தமிழகம் கட்சியினு எழுதிருஞ்சு. அந்தத் தெருவப் பாத்தா பள்ளனுக கோட்ட மாதிரித்தா இருக்கும். தெருவுக்கு வடக்க அனுப்ப கொளம் கம்மா. மேக்க மேலூர் கம்மா தெக்க உயிர்வேலி மரங்க. தோப்புக, இன்னும் போனா காடுக. கெழக்க ஒரு தென்னந்தோப்பு அதத்தாண்டுனா ஓட. அதுக் கடுத்தும் ஒரு தென்னந் தோப்புதா. ரெண்டு தோப்பு பள்ளனுகதா சொந்சதமா வச்சுருக்காங்க. தோப்புக்கு தெக்க ஆர்.சி பள்ளிக்கொடம் இன்னும் தள்ளி வந்தா ஸ்ரீ ரேணுகா தொடக்கப் பள்ளிக்கொடம் இருக்கு.

      டென்னிஸ் சொன்னது மாணிக்கா மதியானம் ஒரு மணி வாக்குல அவா அந்த மடத்துவழியா வரும்போது இவெ எந்துச்சு ஒக்காந்தா. மனசுக்குள்ள ஒரே எண்ணம். அவா பாப்பாளா இல்லையானு. மொதவே இவெ அவாள பாத்துட்டா. அவா கழுத்துல துண்ட தொங்கப் போட்டுருந்தா. ஆம்பளப் பெய சட்டப் போட்டுருந்தா. பச்சக் கலர்ல பாவாட உடுத்திருந்தா. ஒத்தச் சட பின்னாடி அங்கிட்டு இங்கிட்டு ஆட்டிக்கிட்டு வருது. இவா கையில செவப்பு கலர் கொடமும் தூக்குச் சட்டியும் இருக்கு. கால்ல செருப்பு இல்ல. இந்தப் பாழாப்போன மணலு வெயில்ட வாங்குன சூட்ட அவாட்டையா குடுக்கணும்னு வெயிலப் பாத்து ஒரு மொற மொறச்சுட்டு இவாளப் பாக்கும்போது அவாளும் இவெனப் பாத்துட்டு அவா வீட்டுக்கு நடந்துப் போனா. மொகத்துல சிரிப்போட அவா பாதத்தையே பாத்துட்டு இருக்கா. அந்த சமயத்துல அய்யனாரு கையில தட்ட புடிச்சுகிட்டு காட்டுக்கு புல்லு அறுக்கப் போனா. போகும்போது இவெனப் பாத்ததும் ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டா. அந்தப் பார்வ எப்பையும் எனெக்கு வேணும்னு அய்யனாரு மனசுக்குள்ள நெனச்சுகிட்டே போறா. ராசுப் பாண்டியன் அவா வீடுபோய் சேர்றவரைக்கும் பாத்துகிட்டே இருக்கா. ஆனா அந்த ஒத்தப் பார்வையத் தவிர வேற பாக்கல. அதுவே இவெனுக்குப் போதும்போல.

      சாந்தரம் கம்மாயில பெயக வெளையாடிக்கிட்டுருக்கும் போது டென்னிஸ்சுகூட ராசுப் பாண்டிப் போனான். ரெண்டுப் பேரும் பேசிகிட்டே போனானுக. இந்த மேலூர் கம்மா ஒன்னும் பெரிய கம்மா இல்ல. ரொம்ப சின்னக் கம்மா. பெரிய ஓட, பெரியார் டேம் நெறஞ்சு தண்ணி வந்துச்சுனா அர்ச்சுனாபுரத்து கம்மாய்க்கு வந்து இந்த கம்மாய்க்கு வரும். அப்பிடி இல்லனா ரெண்டுநா மழயில கம்மா நெறஞ்சிரும். கம்மாயில அங்னயிங்ன பள்ளமும் மேடுமா இருக்கும். இந்த மேலூர் பெயலுக கிரிக்கெட் வெளாடுறதே இந்தக் கம்மாயிலதா பில்டிங் எங்ன நிப்பானு பாக்குறது செரமம். மத்தியானம் ராசுப்பாண்டி ஆளா பாத்தப்ப பேத்தி, அவாட்ட செல்போன குடுக்குறதப்பத்தி, சென்னைக்கு வேலைக்குப் போறதப் பத்தி பேசிகிட்டே இருந்தானுக. அப்ப இந்தப் பட்டன் போனுதா பத்துரூவா இருவது ரூவாய்க்கு துட்டு எத்திக்கலாம். போன்ல பேச. ரேட்கட் போட்டு எத்தன மெசேஜ்னாலும் இருந்தாலும் ஒரு நாளைக்கு அனுப்பிக்கலாம்.

      காலையில புல்லுக்கட்டோட அய்யனாரு மேக்கருந்து ரோட்டு மேல நடந்து வந்துகிட்டு இருக்கும்போது ராசுப் பாண்டியனப் பாக்குறா. ஆனா அவெ இவெனப் பாக்கல. டென்னிஸ் பாத்தா. “ஏலே இந்த அய்யனார் ஏன்டா ஒன்னையே பாக்குறா”னு டென்னிஸ் கேட்டா.

      “எதுக்காச்சும் பாப்பான்டா”

      “அவெ நடையும் சரி இல்ல பார்வையும் சரியில்லடா”

      “அவெ நட எப்பிடி இருக்கு”

      “ஒம்பது மாதிரி நடக்குறான்டா”

      “ஊருக்குள்ள அவென அப்பிடித்தா சொல்லுறானுக நீயுமா”

      “அது உண்மதா”

      “என்ன உண்ம?”

      “இவெ ஒம்பதுக மாதிரித்தா நடந்துக்கிறா. நைட்டு எவெனு பாக்காம அவுங்க பக்கத்துல ஒக்காந்துக்கிறா. மடத்துல பக்கத்துல படுத்துகிறா. படுத்துட்டு கைய அதுல போடுறா”

      “ஏலே சுன்னி”னு சிரிச்சுகிட்டே குறுக்க பேச வந்தப்ப டென்னிஸ் சொன்னா “இத நா சொல்லல. குமார் சொன்னா. அவென்ட இவெ அந்த மாதிரி ஒருதடவ பண்ணிருக்கா”னு இவெ சொல்லும்போது “அதுக்கு அவெ என்ன செஞ்சா”னு சிரிச்சுகிட்டே கேட்டா.

      “அவெ என்ன செய்வா. இதா சமயமுனு அனுபவச்சிருக்கா. என்னானு தெரியுமா. ஓ மேல அவெனுக்கு ஒரு இது”

      “ஏ மேலயா… எதுக்குடா”

      “நீ அவாகூட பேசுறேல. அது இவெனுக்குப் பிடிக்கல”

      “அதெல்லா இருக்காது. இவெ அவாட்ட நல்லாப் பேசுவான்டா. அதுனால அவென்ட போனக் குடுத்து அவாட்ட குடுக்க சொல்லலனு இருக்க. நீ வேற”

      “என்னமோ பண்ணுடா”னு ரெண்டுப் பேரும் எந்துருச்சு வீட்டுக்கு வந்துட்டானுக.

      அய்யனாரு வீடு அவா வீட்டுக்கு கிட்டதா. அதனால அடிக்கடி அவாட்ட பேச வீட்டுக்கு வரவும் போகவுமா இருப்பா. ராசுப்பாண்டி இவாள விரும்புறது அய்யனாருக்கு தெரியும். இருந்தும் இவெனுக்கு இவெ மேல ஒரு நெனப்பு. இவென்ட போகும்போது ராசுப்பாண்டி கையத் தொட காலத் தொடவுமா இருப்பா. அப்ப அய்யனாரு மொகத்தப் பாக்கனுமே அப்பிடி சந்தோசமா இருக்கும். ராசுப்பாண்டி மேல அய்யனாருக்கு கோவம் இருக்கதா செய்யும். நான் இருக்கும்போது எதுக்கு அவாளப் பாக்குறானு. பலப்பேருக்கூட அய்யனாரு பேசுனாலும் ராசுப்பாண்டிக்கூடப் பேசும்போது மட்டும் அய்யனாரு ரத்தம் குளுந்து கெடக்கும். அந்த குளுந்த ரத்தம் அவெனுக்கா எதையும் செய்யும்போல.

      அப்பிடித்தா ஒருநா ராசுப்பாண்டி அய்யனாருட்ட அவாளப் பத்திப் பேசிகிட்டு இருக்கும்போது “நானு அவாட்ட பேசனும்டா. எப்பையாச்சும் அவாட்ட பேசனும்னா யாராச்சும் இருக்காங்க”னு சோகமா சொல்லும்போது அய்யனாரு மொகம் சுருங்கிப் போச்சு. அய்யனாருக்கு விருப்போ இல்லாட்டாலும் அவெனுக்கா “சரி நாளைக்கு மத்தியானம் அவா வீட்டுக்கு வா. நா அவாட்ட பேச வைக்கிற”னு சொல்லவும் ராசுப்பாண்டி சந்தோசத்துல அய்யனாரு கையப் புடிச்சு “அய்யனாரே”னு முத்தம் குடுத்தா. இவென விரும்புனதுக்கு அந்த முத்தமாச்சும் குடுத்தானேனு அய்யனாருக்கு சந்தோசம்.

      சொன்னது மாணிக்க அடுத்தநா மத்தியானம் மடத்துல ராசுப்பாண்டி நல்ல கைலி ஒன்னு கட்டிகிட்டு கட்டம் போட்ட வெள்ளச் சட்டைய நைட்டே அயனிங் பண்ணி போட்டுகிட்டு ஒக்காந்துட்டு இருந்தா. அய்யனாரு வருவானு.

      அய்யனாரு மடத்துகிட்ட வந்து “இங்க வா”னு சொல்லிட்டு மொத கெழக்கால நடந்து போனா. இவெனும் அவெ பின்னாடி நடந்துப் போறா. கால்ல செருப்பு இல்ல. தலைய நல்லா வலிச்சிருந்தா. அவாட்ட பேசப் போறேனு மனசுல சந்தோசம் இருந்தாலும் மொகத்துல பயம் இருக்கு. என்ன சொல்லுவா எது சொல்லுவானு. சரினு இப்பவே சொன்னாலும் அங்னயே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவா. இருந்தாலும் இவெ போறது ரெண்டு விசயத்துக்கு ஒன்னு காதலச் சொல்ல இன்னொன்னு சென்னைக்கு வேலைக்குப் போறதப் பத்தி.

      அய்யனாரு அவா வீட்டுக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கா. ராசுப்பாண்டி நடு மத்தியானத்துல தெருவுல நடந்து வரும்போது வீடுகள்ல ஆளுகள காணும்.; யாராச்சு இருக்காங்களானு வர்றவரைக்கு பாத்துகிட்டே வர்றா. யாரையும் காணும். கெழட்டுகெட்டைக மத்தியான வெயிலுக்கு வீட்டுக்குள்ள படுத்துக் கெடக்குதுக. பள்ளிக்கொடத்து நாளாங்காட்டி சின்னப் பெயலுக யாரும் இல்ல. பொம்பள ஆம்பளைக வேலைக்கு போய்ட்டானுங்க. இவா அம்மையும் அய்யனும் வேலைக்குப் போய்டாங்க. அவா அன்னைக்கு வேலைக்குப் போல. வீடு குடுசவீடுதா. வீட்டுக்கு முன்ன மண்ணு திண்ணெ இருக்கு. கதவு மரக்கட்டையில செஞ்சது. ஒத்தக் கதவுதா. வீட்டுக்கு முன்னாடி வாசல்ல ஒரு அஞ்சாறு வெறகு கட்டைக கெடக்கு. பக்கத்துல அடுப்பு இருக்கு. காலையில அதுலதா சோறு காச்சிருப்பாங்கப் போல சாம்பலும் எரிஞ்ச கம்புக்குச்சிகளும் கெடக்கு. வீட்டுச் செவரு மண்ணு செவருதா. செம்மண்ணு செவரு. வீட்டு வாசல்ல தெளிச்ச சாணி காஞ்சு போய் இருக்கு வெயிலுக்கு.

      ராசுப்பாண்டி வந்ததும் அய்யனாரு அந்த திண்ணையில ஒக்காந்துட்டா. ராசுப்பாண்டி இவெனப் பாக்கவும் “உள்ளதா இருக்கா. பேசிட்டு சீக்கிரமா வா”னு கோவத்துல சொல்லுறா. அத ராசுப்பாண்டி எப்பிடி எடுத்துகிறானா ரெம்ப நேரம் பேசதானு. ஆனா அய்யனாருக்குதா அந்த கோவத்துக்கான அருத்தம் தெரியும்.

      கதவு தெறந்துதா கெடக்கு. இவெ உள்ள போனதும் அவா பயத்துல துணிமணிக தொங்கிட்டு இருக்கிற பக்கம் தொணைக்கும் தெம்புக்கும் அதப் புடிச்சுகிட்டு நிக்கிறா. இவெ வீட்டுக்குள்ள போனது அவளப் பாத்ததும் பயத்துல இருக்கானு கதவுக்கு இந்தப் பக்கம் நின்னுட்டு “நா எதுக்கு வந்தேனா”னு சொல்லும்போது “அய்யனாரு சொல்லிருக்கா என்னனு சொல்லிட்டு சீக்கிரம் போ”னு அந்த கயித்த துணியோட புடிச்சுகிட்டு இருக்கா.

      “எனெக்கு ஒன்ன புடிச்சிருக்கு”னு இவெ முழுசா சொல்றதுக்குள்ளையும் ‘அது எனெக்குத் தெரியும்’னு அவா சொல்லவும், அப்பிடினா இவாளுக்கு விருப்பதான்னு நெனச்சு “அப்ப ஒனக்கு பிடிச்சிருக்கானு”னு கேக்கவும் அவா எதுவும் சொல்லல.

      கொஞ்ச நேரம் அங்னையே நினா. அவா ஏதும் பேசாததுனால கைலிக்குள் இருந்து ஒன்ன எடுத்தா. என்னத்த எடுக்குறானு இவாளுக்கு பயம். கத்தியக் காட்டி மெரட்டப்போறானானு. அது செல்போனு. நோக்கியா பட்டன் போனு. அத அவாட்ட குடுக்காம அவெ நின்ன எடத்துல வச்சுட்டு “நா நாளைக்கு சென்னைக்கு வேலைக்கு போற. ஒனக்கு விருப்பம்னா நா போன் பண்ணும்போது சொல்லு”னு சொல்லிட்டு வெளியில வந்துட்டா.

      அவாளுக்கு நிம்மதி வெளில போய்டானு. ஆனாலும் அந்த செல்போன எடுத்துப் பாக்கணும்னு ஆச. மொதத்தடவ செல்லப் பாக்குறவ இல்ல. இவா அய்யா ஒரு செல்லு இதுமாதிரி வச்சிருக்காரு. அதுனால அந்த செல்ல எப்பிடி பயன்படுத்தனும் அவாளுக்குத் தெரியும். இந்தப் போனு இவாளுக்கு சொந்தமானது. வீட்டுல யாருக்கும் தெரியக்கூடாது. தெரியாம அந்தப் போன வச்சிருக்காணும். இல்ல அவென்ட குடுத்திறலாமானு நெனப்பு அவா மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. இவெ போனதும் அய்யனாரு அவாளப் பாக்க வந்தவ அந்தப் போனப் பாத்ததும் எடுத்து “அவெ குடுத்தானா”னு அதட்டிக்கேட்டா “ஆமா”னு சொல்லிட்டு அந்தப் போனவே பாக்குறா.

      “என்னத்த சொல்லிட்டு போறா”னு கேட்டா

      “சென்னைக்கு வேலைக்குப் போறானா. புடிச்சிருந்தா போன் பண்ணி சொல்லச் சொன்னா”

      “என்ன செய்யப் போற”

      “அதான்டா எனெக்கு கொழப்பமா இருக்கு”

      “இங்கப் பாரு ஓ வீட்டுக்குத் தெரிஞ்சு ஒன்ன கொன்னுருவானுக பாத்துக்கோ”

      “இப்ப என்னடா செய்ய”

      “போன நா வச்சிருக்கே. ஒனக்கு போன் பண்ணா நா வந்து குடுக்குறே. நீ பேசனும்னா அப்ப வாங்கிக்கோ”

      “சரி போன நீயே வச்சிரு”னு சொன்னாலும் கெடச்சப் போனு ஓன்ட இல்லையேனு வருத்தம் அவா மொகத்துல தெரியுது.

      இவெ போன எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா. இவெனப்பத்தி தெரு பூரா ஆவலாதிதா ஒம்போத இருந்துகிட்டு தெருவுல கத்திக்கிட்டு கெடக்கானு ஆம்பள பெயலுக பூரா இவெமேல கோவத்துல இருந்தானுக. ஆனா, இவெ வீட்டுல அப்பிடி எந்த இதும் இல்ல. யாரு என்ன சொன்னாலும் புள்ளதா முக்கியமுனு பெத்தவங்க இருந்தாங்க.

      ராசுப்பாண்டி சென்னைக்குப் போய் நாலாவது நாளு போன் பண்ணா. அய்யனாரு போன எடுக்கல. அன்னைக்கு ராத்திரி இவெ அவெனுக்கு எஸ்சமெஸ் அனுப்புனா. அந்த மெசேஜ் பாத்ததும் ராசுப்பாண்டிக்கு ஒரே சந்தோசம். அப்பிடியே இவுங்க மெசேஜ்ல பேசிகிட்டாங்க மணிக்கணக்கா. காதலும் காத்தோடு காத்தா கலந்து ரெண்டு பேரு இதத்துக்குள்ள வந்திருச்சு. ரெண்டுப் பேருமே நீ இல்லாம நா இல்ல. நா இல்லாம நீ இல்லங்கிற அளவுக்கு போய்ருச்சு. ஆனா ஒத்த வார்த்த போன்ல பேசிக்கிறல.

      அஞ்சு ஆறு மாசம் கழிச்சு ராசுப்பாண்டி வீட்டுக்கு வர்றதா மெசேஜ் பண்ணா. வீட்டுக்கு வந்த ஒன்னப் பாக்கணும்னு மெசேஜ்ல சொல்லிருந்தா. அதுக்கு சரினு அய்யனாரு மெசேஜ் அனுப்பிட்டா.

      மெசேஜ்ல பேசி காதல்ல உருகிப் போய்டா. நேர்லப் பாத்து இத எல்லாத்தையும் சொன்னா தன்ன எதுக்கிருவானு இவெ நெனப்பு.

      சொன்ன மணிக்கு ஒருநா காலையில “நா நம்ம கம்மாய்க்கு மேக்க கொய்யாத் தோப்புல இருக்க நீ வந்திரு”னு மெசேஜ் போட்டுருக்கா. அதப் பாத்த அய்யனாருக்கு பயம் வந்திருச்சு. அவெ தூரத்துல இருக்கும்போது வரதா பயம் வீட்டுக்கு வரவும் எப்பிடி வருது. நேர்லப் பாத்தா என்ன சொல்லுவா. பேசுனது நானே. அவா இல்லையில. அவெ அவா பேசுறா காதலிக்கிற பாக்க வாரானுல நெனச்சிருக்க. அவா இல்லாம பேசுனது நாந்தானு சொன்னா அடிப்பான் இல்லப் போடானு சாதாரணமா சொல்லுவா. இல்ல இவாள கூட்டிட்டு போகவா. இந்த அஞ்சாறு மாசத்துல அவா அவென்ட ஒத்த வார்த்தக்கூடப் பேசலயே. இத அவட்ட சொன்னா “வீட்டுப் பக்கமே வராதே”னு வெரட்டிலவிட்டுருவா. என்ன செய்றது ஏது செய்றதுனு தெரியாம பேமுழி கிமுழி முழிச்சுகிட்டு இருக்கா. எந்த இதும் வேணா. நானே போறே. நடந்த எல்லாத்தையும் அவென்ட சொல்லுறே. அவெ எ காதல ஏத்துக்கிட்டா ஒத்துகிரட்டும் இல்லாட்டனா நடக்குறது நடக்கட்டும்னு நல்லா ஒரு கைலி சட்டையப் போட்டுகிட்டு சும்மா ரோட்டுமேல நடந்துகிட்டு கையில போனோடப் போறா. எந்த நம்பிக்கையில போறா. இவெ காதல ஏதுக்குவானா இல்ல ஒ காதல்லெல்லா வேணாம் ஏன்டா என்ன ஏமாத்துனனு இவென வையிவான. காலையில அந்த தெருவே நடுங்குறமாதிரி ஒன்னு நடக்கப்போறது நெசம்.

      ராசுப்பாண்டி சொன்னது மாணிக்க கொய்யாத்தோப்புல வெள்ளக் கலர் சட்ட. லைட் பச்சையில கையிலி கட்டிருந்தா. தலைய விரிச்ச மொகத்துல பட்டும் படாமலும் பவுடரப் போட்டுருந்தா. கொய்யாத் தோப்புக்குள்ள தண்ணி தொட்டிகிட்ட ஒக்காந்து “எங்க இருக்க”னு மெசேஜ் பண்ணிட்டு மரத்து கெளைகளப் பாத்து சிரிச்சுகிட்டு இருக்கும்போது ஒரு மணிச் சத்தம் வரவும் செல்லப் பாக்குறா. ‘நா வந்துட்ட’னு வருது. ஒடனே பதறியடிச்சு எந்துச்சு மொகத்துல கைய வச்சு தொடச்சு படப்படத்துப் போய் நின்னா.

      நேரா அய்யனாரு வந்தா. கையில செல்லு இல்ல. அவெ கைலிக்குள்ளப் போட்டுருக்கா. இவெனப் பாத்தப்ப ராசுப்பாண்டி இவெ எதுக்கு வந்தா. அவா வர்ற நேரத்துல. இவெ எப்ப போவா. அவா வந்துட்டான. இவெ இருக்கும்போது அவா வந்தாலும் ஒன்னு பெரச்சன இல்ல. அவாட்ட தனியா பேசுனுன்னா இவெ வேற. சரி என்னத்தையாவது பேசி இவென அனுப்பனும்னு “வாடா எப்பிடி இருக்க? புல்லு அறுக்க வந்தயா. அவா எங்கடா. அவாளப் பாத்தையா”னு மொகத்த சாதாரணமா வச்சாலும் மனசுப் போட்டு அடிக்கிது. எங்க அவா வந்திருவாளோனு

      “நா நல்லா இருக்கே. நீ எப்பிடி இருக்க. எப்ப வந்த”னு கேட்டா நடந்து வந்துகிட்டு.

      “நா நல்லா இருக்கே. இன்னைக்கு விடியக்காலைல வந்தே”னு செல்லும்போது போனவே பாக்குறா.

      “இங்க என்ன செய்ற”

      “ஒன்னு இல்ல வெளிக்கு இருந்தே குண்டி கழுவ வந்தே”னு இவெ சொல்லும்போது அய்யனாரு சிரிச்சா.

      “சரி கையில தாட்டு இல்ல. புல்ல அறுத்துட்டு எப்பிடி கொண்டுகிட்டுப் போவ, இங்கன என்னப் புல்லா இருக்கு. அந்த சினைய முத்துராசு தென்னந்தோப்புக்குள்ள புல்லு அப்பிடி கெடக்கு. அங்க போடா”னு சொல்லி அவெனப் போக அவசரப்படுத்துனா.

      “இல்லடா ஒன்ட ஒன்னு சொல்லனும்”

      “சரி சொல்லு”

      எப்பிடி சொல்லுறது. எத நம்பி நா இங்க வந்தே. அவெ மொகம் அவாளத் தேடுது. இந்தக் காதலு எனெக்கானது இல்ல. வேற எதுக்கு வந்தோ. இவென நம்பியா இங்க வந்தே. ஒன்ட பேசுனது நாதானு சொல்லிட்டா. என்ன சொல்லுவானே. சரி வந்தது வந்தாச்சு. காதலத்தானே சொல்லுறே என்ன நடந்தாலும் சரி “அவா வரமாட்டா”னு இவெ சொன்னதும் “எங்கடா வேலைக்குப் போய்டால. இல்ல பிடிக்கலயா. என்ன சொன்னா. இதச் சொல்ல ஒன்ன அனுப்புனாளா”னு கேட்டுக்கிட்டே இருந்தா.

      “இல்லடா ஒன்டப் பேசுனது நாந்தா. அவா இல்ல. ஒன்ன எனெக்கு புடிச்சிருக்கு”னு இவெ சொல்லும் போது ராசுப்பாண்டி இவெ கையப் பாத்தா. போனு இல்ல.

      “சும்மா வெளாடாத. ஒனக்கு தெரியும்ல அவாட்ட பேசுனது” இவெ கையில போன்னு இல்லாததுனால பொய் சொல்லுறானு பாதி ஒடஞ்சு மனசுல சொன்னா.

      “நெசத்துக்கே நாந்தா ஒன்ட பேசுனே அவா இல்ல”னு இவெ சொல்லும்போது ஒரு காத்து அடிக்கல. எந்தச் சத்தமும் வரல. குருவிக கிளிக சத்தமாச்சும் வரும்னு பாத்தா அதும் வரல.

      “சுன்னி”னு இவெ சத்தம் கணீருனு வந்துச்சு. அய்யனாரு திடுக்குனு நின்னா. வேற ஏதும் பேசாம அவெ வீட்டுக்கும் போய்டா. இவெ பின்னாடி அய்யனாரு நடந்து வந்தா.

      எல்லா ஆசையும் போச்சேனு ராசுப்பாண்டி மடத்துல ஒக்காந்துகிட்டு இருந்த ராமராசாவ கூப்படுகிட்டு ஒடையார்பட்டிகிட்ட இருந்த ஒயின் சாப்புக்கு போனா. இந்த ஒயின்சாப்பு புதுப்பட்டி பஸ்டாண்டுலதா இருந்துச்சு. தண்ணியப் போட்டுகிட்டு பள்ளப் பறப் பெயலுக சண்ட போட்டதுனால இங்க வந்திருச்சு. தண்ணியடிக்க பறப் பெய எவெனு இங்கிட்டு வரமாட்டானுக. ஒன்னு ரெண்டு பெருசுக வரும். சரக்குப் பாட்டுலோட ஒடையார்பட்டி ஓட வழியா தெக்கக் கொஞ்சத்தூரம் போய்ட்டு ஒரு உயிர்வேலி மரத்து நெனழ்ல ஒக்காந்து தண்ணியடிச்சானுக. தண்ணியடிக்கும்போது இந்த அய்யனாரு சொன்ன எல்லாத்தையும் ராமராசுகிட்ட சொல்லவும் “அவென இப்பவே அதே எடத்துக்கு வரச் சொல்லுடா”னு சொல்லவும் “எதுக்கு”னு கேட்டதுக்கு “அந்த ஒம்பது கூதிமகென வெட்டி கொன்னு துண்டு துண்டா நறுக்கி யாருக்கும் தெரியாம பொதச்சிறணும். அவெனால தெருபூரா நாறிக் கெடக்கு. இந்த விசயத்த வெளில யாருக்காச்சு தெரிஞ்சு ஒன்ன விடமாட்டானுக. அசிங்கமா கேவலமா பேசுவானுக தெருக்கார”னு அத இத சொல்லி இவென ஏத்திவிட்டா. போத ஏறுச்சோ இல்லையோ இவெ சொன்னது ஏறிப்போச்சு.

      ராமராசு சொன்னது மாணிக்க அய்யனாருக்கு போனப் போட்டு தனியா காலையில வரச் சொன்ன எடத்துக்கே வரச் சொன்னா.

      அய்யனாரு ஏதோ ஆசையில அந்த எடத்துக்கு வந்துட்டா. யாரையும் காணும். அங்னையே ஒக்காந்திருந்தா.

      ஒரு சாக்கு பையில ரெண்டு அருவாள வச்சு அத மடிச்சு கையில புடிச்சுகிட்டே ரோட்டுல நடந்து அந்த கொய்யாத் தோப்புக்கு வந்தானுக.

      தோப்புக்குள்ள இவெனுக வர்ற சத்தம் கேக்கவும் அவெ வந்துட்டானு அய்யனாரு எந்துச்சு நின்னு இவெனப் பாத்தா. கூட ராமராசு நிக்கிறா. இவெ ஏ வந்தானு அய்யனாரு பயந்துப்போய் இருக்கா. தெருவுல அய்யனார எல்லாத்துக்கும் முன்னாடி வைவா கேவலமா. ராசுப்பாண்டி இருக்கானு அய்யனாருக்கு ஒரு மனத்தெம்பு.

      “எதுக்குடா இப்பிடி பண்ண”னு கேக்கவும் ரெண்டுப் பேரும் தண்ணிலதா இருக்காங்கனு அய்யனாரு தெரிஞ்சிகிட்டா.

      “இனிமே பண்ணலடா. நா வீட்டுக்குப் போறே”னு பயத்துல சொல்லிட்டு எட்டு வைக்கும்போது ராமராசு பையில இருந்த அருவாள எடுத்து அய்யனார கழுத்த சேந்து ஒரு வெட்டு வெட்டவும் “ஏம்மா”னு கத்திகிட்டு கீழ விழுந்துட்டா. ரத்தம் அவெ ஒடம்புலருந்து தரயில ஓடுது. ராசுப்பாண்டியும் பையிலருந்து அருவாள எடுத்து “ஒம்மாப்புண்ட”னு ஒரு வெட்டு வெட்டுனா. அதும் நெஞ்சோட சேந்து கழுத்துல விழவும் பேச்சு மூச்சக் காணும். “இந்த ஒம்பது புண்டைய சும்மா விடக்கூடாதுடா”னு ராமராசு கண்டமாணிக்கு வெட்டுனா. ரெண்டுப் பேரும் அய்யனார கையி வேற காலு வெற வெட்டு அத சின்ன துண்டு துண்டா வெட்டி ஒடம்ப நாலா மூனா வெட்டி கொண்டுகிட்டுவந்த பையில கல்லுகலப் பெறிக்கி போடுறதுமாதிரி போட்டு மேக்கா ரெண்டுப் பேரும் நடந்துப் போய் அர்ச்சுனாப்புரத்து கம்மாய்க்கு அங்கிட்டு பொதச்சுட்டானுங்க.

++

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *