1.
மூன்றடி உயரமுள்ள சிமெண்ட் திண்டின் மேல் ஆளுயர குதிரை மீது பெரிய திரண்ட கண்களுடன் அழுத்தம் திருத்தமாக வளைந்த புருவங்களோடு கிடா மீசை வைத்தபடி எங்கள் எல்லைக்கருப்பு நின்று கொண்டிருந்தது. வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் ஏராளமானோர் வாங்கிக் கட்டியிருந்த மணிகள் காற்றின் வேகத்தில் ஒன்றோடொன்று உரசி கிண்கிணி சப்தத்தை எழுப்பியபடி இருந்தன. வரிசையில் நின்றிருந்த வேல்கள் அதன் பங்கிற்கு எட்டி எட்டி மோதிக்கொண்டிருந்தன. கருப்புக் கோவிலைச் சுற்றிலும் பெரிய கருங்கற்களை வைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட சுவர் கரடுமுரடாக வடிவங்கள் அற்று எழும்பிக்கிடக்க, உட்புறம் கருப்புக்குக் கொஞ்சம் தள்ளி எதிரே கன்னிமார் உருவங்கள் சிறியனவாக வைக்கப்பட்டிருந்தன.
சுவருக்கு வெளியே இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்த பூசாரி சிலைகளைக் கழுவி பூஜைக்கு ஏற்பாடு செய்தபடியிருந்தார். கருப்புக்கு நேரெதிரே கருநிறத்தால் ஆன ஒரு பெரிய கல் இருந்தது. கூரை எதுவும் வேயப்படாமல் பல வருடங்களாக கல் வெயில் மழை எல்லாவற்றையும் தாங்கி நின்றது. ‘ஏனிப்படி கூர இல்லாமக் கெடக்கு’ என ஊரில் பேசிக் கொண்டபோது யாரோ ஒருவர் கனவில் ‘இதக்கூட தாங்கலீனா அப்பறம் சனத்த எப்படி காப்பாத்துறதென’ கேட்டதாகப் பேச்சு இருந்ததால் அப்படியே திறந்தவெளி கருப்பாகவே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தது ஊர். ஒரு சிறிய சுற்றுச்சுவர் மட்டும் கல்லைச்சுற்றி இருந்தது. அதில் மரங்களில் இருந்து விழுந்த குப்பைகளை அகற்றி குடங்குடமாக தண்ணீரை ஊற்றி அந்த இடத்தை பளிச்சென்று மின்னும் கருப்பாக மாற்றிக் கொண்டிருந்தார் பூசாரி முத்தண்ணன். ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவர் ஒருவர்தான் கருப்போடு கருப்பாக ஒன்றிக்கிடந்தார். வயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுந்து கிடக்க வெள்ளையில் அழுக்கடைந்த நிறத்தில் ஒரு வேட்டியும் அதன் மேல் கட்டப்பட்ட ஒரு துண்டுமாக மெல்ல மெல்ல நண்பனுக்கு கடமைப்பட்டவன் போல தள்ளாடிய உடலோடு போராடி நிதானமாகக் குனிந்து கல்லுக்கு மஞ்சள் விபூதி வைத்தபடி எதையோ உச்சரித்தவர் முனகிக்கொண்டே நிமிர்ந்து நின்றார்.
யாரென்றே தெரியாதவர் வேண்டிக் கட்டியிருந்த ஊஞ்சலில் மகன் வழிப்பேரன் மித்ரன் ஆடியவாறிருந்தான். மருமகள் மதுமிதா காலையில் நேரத்தோடு வந்து பொங்கல் வைத்துவிடவேண்டும் என்று சொன்னதால் வந்திருந்தாள்.
‘எத்தினி கெடா அய்யனு’ என்றார் பூசாரி.
இரண்டு என்றவுடன் அங்கிருந்தபடியே ‘ரெண்டு கிடானா ரெண்டு பொங்க வைக்கோணுமாத்தோவ்’ உடல் உள்ளிருந்து சக்தியைத் திரட்டி சத்தமான குரலில் மருமகளிடம் சொன்னார்.
மருமகளுக்கு இதெல்லாம் பழக்கமில்லையாதலால் மூன்று அதனருகே மூன்று என இரண்டு பொங்கல் வைக்கத் தயாராக கல்கூட்டி அருகில் இருப்பவர் ஒருவர் தயார் செய்து தந்தார். யார் என்று விசாரித்தபோது நல்லமாபட்டி என்றார். ‘பயலப் பாம்பு கடிச்சு ஆசுபத்திரில கெடக்கப்போட்டுட்டு வவுறு பத்தப்பத்த ஓடியாந்தமுங்க… ஓடியாந்து நம்ம கருப்பு கால்லதே நீதே ஏதாச்சும் பண்ணோணும்னு உழுந்தே…அம்புட்டு நேரம் பேச்சு மூச்சில்லாம கெடந்தபய வந்து பொலம்பிட்டு போவாங்காட்டி கண்ண முழிச்சி உசுரு பொழச்சுகிட்டெ. அதேம் பொங்க வச்சி கோழிசாவ கொடுக்கலாமுன்னு வந்தணுங்கொ’ என்றார்.
தயார் செய்து வைத்த அடுப்பில் சூடத்தைப்போட்டு ஏற்றி காகிதத்தில் பற்றவைத்து அதனுள் சுள்ளிகளை எடுத்து வைக்கப்போனாள் மருமகள். சுவருக்கு வெளியே மண்டிக்கிடந்த குச்சிகள் நேற்றிரவு பெய்த மழையில் நனைந்து நமத்துக்கிடந்தன. தினமும் இரண்டொருவர் பொங்கல் வைப்பதால் குதிரை காலுக்கு கீழே சிலர் எடுத்து வைத்திருந்த குச்சிகள் கிடந்தன. அதை எடுத்து வந்து அடுப்புக்குள் வைத்து மீண்டும் காகிதங்களைப்போட்டு தணல் உண்டாக்கினாள்.
‘பொங்கப்பொங்கிருச்சினா சரியாச்சொல்லோணுமாயா…இங்கிட்டு கெடாவ வெட்டிப்போடலாம்’ என்றார் பூசாரி முத்தண்ணன்.
இரண்டு பொங்கலையும் மாற்றி மாற்றி எரித்தவளுக்கு கண்கள் சிவந்து வியர்வை கொட்டி முகமே சிவந்து கிடந்தது. கை கன்னங்களில் அங்கங்கே கரியை அடுப்பு எரிக்கத் தெரியாமல் அப்பிக்கொண்டிருந்தாள்.
முதல் அடுப்பில் பொங்கல் பொங்கியவுடன் மருமகள் பூசாரி போன்றே வேகமாக கத்த இரண்டு ஆடுகளையும் பிடித்து வரச்சொன்னார் பூசாரி.
‘நம்ம அய்யனு குடும்ப நல்லாருக்கோணு, பட்டி பெருகோணு, பாலாறு செல்வமா பொங்கோணுமினு உத்தரவு குடு கருப்பு’ என்றார். கயிற்றில் கட்டிய இரண்டு ஆடுகளும் தலையை ஆட்டியபடியே வர ஒரு ஆட்டை மட்டும் முன்னிழுத்து தண்ணீரைத்தெளித்தார். ஆடு சலனமின்றி அப்படியே நின்றது.
விபூதித் தட்டில் இருந்து விபூதியை எடுத்துப்போட்டார். லேசாக நகர்ந்து ஒரு அடி தள்ளி நின்ற ஆடு துள்ளாமல் அப்படியே நின்றது.
‘என்னாச்சு, ஏனாங்கருப்பு’ என்றபடியே மீண்டும் தண்ணீர் தெளித்தவுடன் உடலுடன் தலையைச் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கியது.
‘அதான பாத்தேன், ஒங்கிட்டே கெடக்கறவன் தண்ணி தெளிச்சு துளுக்காம போயிருவியா’ என சிரித்துக்கொண்டே ஆட்டை வெட்டுபவரிடம் தந்துவிட்டு அடுத்த பொங்கல் பொங்க காத்திருந்தார் முத்தண்ணன்.
கண்கள் எரிய எரிய அடுப்பு அணைந்து, அதை ஊதி என அல்லாடிய மருமகள் முதல் உலையில் அரிசியைப் போட்டுவிட்டு இரண்டாம் அடுப்பை மேலும் சில குச்சிகளை வைத்து வேகமாக எரித்தாள். நமக்குத் தெரியாத ஓரிடத்தில் மொழியோ இடமோ பழகும்போது ஆரம்பத்தில் இருக்கும் சிரமம் போல உணர்ந்தவள் அடுப்பு எரித்தலின் நுணுக்கத்தை
சற்று நேரத்திற்கெல்லாம் கற்றுக் கொண்டு குதூகலமாக எரிக்க ஆரம்பித்தாள். இரண்டாம் பொங்கல் தண்ணீர் மூலையில் விழ ‘பொங்கிருச்சுங்க தாத்தா’ என்று குரல் கொடுத்தாள்.
அவள் குரல் கேட்டவுடன், கோவிலுக்கு வந்தவர்களுக்கு விபூதி அளித்துக் கொண்டிருந்த முத்தண்ணன் அதை முடித்துக்கொண்டு இரண்டாவது கிடாவை அருகில் கொண்டு வரச்சொன்னார். இரண்டு கிடாக்களும் நல்ல கருப்பு நிறத்தில் இருந்தன. பலிகொடுக்க எங்கள் பக்கங்களில் கருப்புக்கிடா அமோகமாக விற்பனையாகும். நாமக்கல் சென்று பிடித்து வந்ததாக அண்ணன் மகன் சொல்லியிருந்தான். கிடாவை அருகில் அழைத்து வந்து நிறுத்தியவுடன் அதன் மீது நீர் தெளித்தார் பூசாரி முத்தண்ணன்.
கிடா துளுக்கவில்லை. ஐந்து நிமிடங்கள் ஆனவுடன் கல்லருகே சென்று வேண்டியபடி மீண்டும் வந்து விபூதி போட்டார். ம்ஹூம். எந்த அசைவும் இல்லை. ஜில்லென்று தண்ணீர் பட்டதற்காகக்கூட உடலில் ஒரு லேசான அசைவில்லை. முதல் கிடாவாவது ஐந்து நிமிடம்தான் ஆனது. இது பத்து நிமிடமாகியும் பொட்டு அசைவில்லை.
பூசாரி முத்தண்ணன் வானத்தை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ‘ஏழ வேண்டுதலு ஏழு வருசெ பாவி வேண்டுதலு பத்து வருசெ எங்க அய்யனு…அதையுந்தாண்டிப்போட்டாப்புடினு கோவமாப்பு. இருவத்தி ரெண்டு வருசெங்கழிச்சு மறக்காம ஒன்னத்தேடித்தானெ வந்திருக்காப்புடி. சீக்கிரம் துளுக்கச்சொல்லு’ என்றார்.
கிடா இருந்த இடத்தை விட்டு ஒரு அடிகூட நகரவில்லை. சுற்றிலும் எல்லோரையும் ஒரு முறை பார்த்து விட்டு அமைதியாக நின்றது. பத்து நிமிடம், கால்மணி நேரம் என நகர்ந்தது நொடிகள்தானே தவிர ஆடு நகரவில்லை. மீண்டும் நீர் தெளித்துப்பார்த்தார். கிணற்றில் போட்ட கல்லைப்போல கிடந்தது ஆடு. மீண்டும் விபூதி போட்டார்.
‘எங்க அய்யனுவ ஏனப்பா சோதிக்கிற…ஒனக்குக் கொறவில்லாம அல்லாஞ்செய்வாப்டி துளுத்தூடுப்பா’ மன்றாடினார் முத்தண்ணன்.
நல்லாபட்டிக்காரர் , முத்தண்ணன், நான், மருமகள், நல்லாபட்டிக்காரர் வீட்டுப்பெண்கள் என்று எல்லோரும் ஆட்டையே கண் எடுக்காது பார்த்தபடியே இருந்தோம். லேசாக நகர்ந்தது ஆடு. எல்லோர் முகத்திலும் பரவசம். ஒரு அடி நகர்ந்து பின் மீண்டும் நின்றுகொண்டு அனைவரையும் பார்த்தது.
‘குத்தங்கொற ஏதாச்சு இருந்தாலு சொல்லிப்போடு ஆமா… இப்படி மனுசர ஏன் கொழப்பற கருப்பு’ என்று இந்த முறை முத்தண்ணன் மிரட்டினார்.
“அய்யனு, பதனோரு ரூவா முடிஞ்சு அறிஞ்சு அறியாம தெரிஞ்சுந்தெரியாம ஏதாச்சும் குத்தம் பண்ணியிருந்தா மன்னிச்சிருனு சொல்லி குத்தங்கட்டு அய்யனு. என்னதே பண்ணுதுனு பாக்கலாம்” என்றார்.
குத்தம் கட்டியானது. ஆடு நகர்ந்தபாடில்லை. ஆடு துளுக்காமல் நிற்பதன் காரணம் பிடிபடாமல் தவிக்க ஆரம்பித்தார் முத்தண்ணன்.
‘ஒனக்கு ஏதாவது வேணுமினாலுங்கேளு. எய்யா, இப்படி எங்களச்சோதிக்கற’ என்று தானாகப்பேச ஆரம்பித்தார் முத்தண்ணன்.
‘அம்மாடி இங்க வாயா, கவுத்த ஊட்டுக்கு வந்த புள்ள நீயாச்சும்புடி’ என்றார் முத்தண்ணன். மருமகள் லேசாகத் தயங்கி நிற்க ‘ஒண்ணுஞ்செய்யாதாயா எங்ககொலந் தழைக்கோணு, குடும்ப நல்லாருக்கோணுமின்னு வேண்டிப்புடியாயா’ என்றார்.
மதுமிதா பிடித்தவுடன் லேசாக அவளைப் பார்த்த ஆடு அவளருகே வந்து ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் நின்றது. ஒரு மணி நேரம் தாண்டிவிட்டது. என்னாயா ஒரே கொசகட்டுது இன்னிக்கு என்றபடி மீண்டும் விபூதி எடுக்கப் போனவரை ‘வேணாம்னே இனிமேட்டு எதும் போடவேணாம். சாமி வெளாடுது. எவ்வளவு நேரமானாலும் நிப்பம். இத்தினி வருசமா வராததுக்குக் கோவிச்சுக்கெடக்கு அதே எறங்கி வரட்டும். வரும்…’ என்றேன்.
ஒரு முறைகூட இப்படி கிடா துளுக்காமல் நின்றதில்லை. சுத்துப்பட்டு கோவில் அத்தனையிலும் முருகேசங்கெடானா கண்ண மூடி தெறக்கக்குள்ள துளுத்துரும் என்று பெயரெடுத்திருந்த என்னை, என் கிடாவை வைத்து வேடிக்கை நிகழ்த்தியது கருப்பு.
2.
சிறுநீரகம் இயங்குவது தொந்தரவுக்குள்ளானதால் அப்பாவை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். கடுமையான வயிற்றுப்போக்கும் முதுமையும் சேர்ந்துகொள்ள அவரைத் தள்ளாட்டத்துக்கு உள்ளாக்கின. ஜெனரல்வார்டு பிரிவில் இருந்ததால் ஒவ்வொரு முறையும் எழுந்து பொதுக்கழிப்பறைக்குப் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததால் ஒரு ட்யூபை சிறுநீர் கழிக்கவும், ஃபெட்பேனையும் எந்நேரமும் அவரது இடுப்புக்குக் கீழ் வைத்திருந்தது அவரை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. பேசுவது குறைந்து கைகளால் ஜாடை காண்பித்தபடி தனது தேவைகளை எங்களிடம் சொல்லும் நிலையில் இருந்தார். அவரது கண்கள் வழியே இங்கிருந்து என்னை விடுவித்து விடுங்கள் என்பது போல வெளிப்படுத்தியபடியே இருந்தார்.

மாரி அண்ணன் வீட்டுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்து அங்கே வைத்தியம் தோதுப்படவில்லையென்பதால் இங்கே வந்து சேர்த்துவிடலாம் என்று சேர்த்திருந்தார் அண்ணண். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அண்ணணிடம் கடுமையான பணப்பற்றாக்குறை நிலவியதும் ஒரு காரணம்.எனக்கும் கூரையைப் பொத்துக்கொண்டெல்லாம் பணம் விழவில்லை. இருந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்க யோசிக்காமல் வாங்குவேன். அண்ணன் கொஞ்சம் யோசித்துத்தான் கடன் வாங்குவார். அதுவும் ஒரு காரணம்.
ஒரு வாரமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லையென்றானதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லலாமா என்று யோசித்தபடியே அண்ணணிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அவரின் வயோதிகம்தான் அவரை வாட்டுகிறது என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. என் மனதில் ஏதோ ஒரு பட்சி அவருக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்லியபடியே இருந்தது.
“ஏண்ணா, நம்ம கஷ்டத்தைப்பாத்தா ஆவுமா? கோயம்புத்தூருக்குக் கூட்டிட்டு போலாம். இங்க ஒண்ணுஞ் செரியாகும்னு எனக்குத் தெரியல” என்றேன்.
“ஆமாடா, ஒனக்கு இப்பவே அவுக்கறானா எவனாவது? எனக்கு மட்டும் என்ன ஆசையா? இங்கே எழுதித்தர்ற மருந்துக்கே காசுக்கு வழியில்ல. தங்கியிருக்க ரூமுக்குக் கொடுக்கவே மாத்தி மாத்தி சட்டப்பைய தடவிக்கிட்டு கெடக்கோம். தெரியுதுதே என்ன பண்றது? கொஞ்செ பொறுமையா இரு. இன்னிக்கு மெட்ராஸ்ல இருந்து பெரிய டாக்டர் வாராங்கன்னாங்க. அவிங்க என்ன சொல்றாங்கனு ஓரெட்டு கேட்டுட்டுப் போயிடலா” எனச்சொல்லி வாயடைத்தார் மாரி அண்ணன்.
ஏழு நாட்களுக்கு மேலாக பொழுது கடந்து கொண்டிருந்தது. மருத்துவமனையில் ஒருவர் மட்டுமே கூட இருக்கவேண்டும் என்பதால் நானும், மாரி அண்ணணும் மருத்துவமனைக்கு வெளியே அறை எடுத்து தங்கியிருந்தோம். பெரியக்காவை ஊரில் இருந்து அழைத்து வந்திருந்தபடியால் அவள் மட்டும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதாவது தகவல் என்றாலோ மருந்து வேண்டும் என்றாலோ பக்கத்து இருக்கைக்காரர்களிடம் சொல்லி பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்து எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். நாங்கள் வாங்கித் தந்தவுடன் ஓட்டமும் நடையுமாக பறந்துபோய் அப்பாவுக்கு மருந்தைக் கொடுத்து, நாங்கள் வாங்கி அனுப்பும் இட்லியை ஊட்டிக்கொண்டிருந்தாள். முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு இட்லி குறைந்து ஒன்று, அரை என்றாகி அதற்கு மேலும் மோசமானதால் வெறும் ஜூஸ் மட்டுமே குடிக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தார் அப்பா.
காலை பதினோரு மணிக்கு சிறுநீரகத்துறையின் பெரிய டாக்டர்கள் இருவர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். பெரியக்கா அப்பாவிற்கு ஜூஸ் தந்துவிட்டு எங்கள் அறைக்கு வந்திருந்தாள். நானும் மாரி அண்ணணும் அவளை இங்கிருக்க வைத்துவிட்டு டாக்டர் வரும் நேரம் அங்கே போய்ப் பேசிவிட்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். கடையில் வாங்கி வந்திருந்த இட்லிப்பொட்டலத்தைப் பிரித்து நானும், பெரியக்காவும், மாரி அண்ணணும் சாப்பிட்டபோது அக்கா அந்த விஷயத்தைச் சொன்னாள்.
“லே, தம்பி அப்பன் பொழப்பாரானு தெரிலீடா?”
“ஏம்மா அப்படிச் சொல்ற?” நான் அக்காவைப் பெயர் சொல்லியோ அல்லது ஏம்மா என்றழைப்பதோதான் வழக்கம்.
“காலைல நாலு மணிக்கு அவரு பெட்டுக்கிட்ட தலய வச்சவாக்குல தூங்குனனா! அவரு கைய வச்சி எந்தலையத்தொட்டுக் கூப்டாரு அப்பன். என்னப்பானு கேட்டுக்கிட்டே எந்திரிச்சு பார்த்தா கண்ணெல்லாம் மேலமா நட்டுக்குட்டுப்போனாப்ல விளுக் விளுக்னு இழுத்தாரு. எனக்கு அஞ்சுசுரும் போயிட்டு வந்துருச்சுரா. ஒங்களக்கூப்டலாம்னா மணி நாலு.. ஆர ஒக்கார வச்சிட்டு வாரதுனு தெரியல. கொஞ்ச நேரத்தில் தண்ணி கேட்டு வாங்கிக்குடிச்சாரு. அப்பறம் அப்படியே கண்ண மூடி தூங்குனாருடா தம்பி. நேரத்துக்கு ஒரு கொணமா இருக்காரு. தாக்காட்டுவாரானு தெரிலீடா தம்பி நம்ப அப்பென்” எனச் சொல்லியபடியே வாய்க்குழறியபடி பேச ஆரம்பித்திருந்தாள்.
“நாஞ்சொன்னா ஆரு கேக்குறீங்க. ஒனக்கும், அண்ணணுக்கும் பணமுஞ்செலவாவக்கூடாது. வைத்தியமும் நல்லாருக்கோணு. காசுக்கேத்த வைத்தியந்தேனிருக்கு. முந்தாநாள் அப்பங்கூட இருக்கப்ப அங்கன இருக்கற பாத்ரூமப்பாத்தா நமக்கே புதுசா வியாதி வந்துரும் போல. என்னமோ பண்ணுங்கெ. டாக்டர் வந்தவுடன் பாத்துட்டு என்ன சொன்னாலுஞ்செரி இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணி நான் அப்பன கோயம்புத்தூருக்கு கூட்டிட்டு போவப்போறேன்” என்று அவர்களிடம் கத்தியவாறே சட்டையை மாட்டியபடி வெளியே வந்து செருப்பைப் போட்டுக்கொண்டு கிளம்பினேன். நான் கோபமாக இருப்பதை உணர்ந்து மாரி அண்ணணும் எதுவும் பேசாது என்னோடு கிளம்பி நடையை எட்டி வைத்தார்.
மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே இருந்து பார்த்தால் மக்கள் மங்கலாக புலப்பட்டார்கள். அரசு மருத்துவமனையோடு மருத்துவக் கல்லூரியும் இணைந்திருந்ததால் அடர்ந்த மரங்களும், பெரிய மைதானமும், கேன்டீனும் மருத்துவமனை வளாகத்தையொட்டி இருந்தன. மாணவர்கள் கையில் கோட்டும், ஸ்டெதஸ்கோப்புமாய் சுற்றிக்கொண்டிருந்தார்கள். கண்களுக்கு எட்டியவரை மாணவர்கள், மருத்துவர்கள் நடமாட்டங்கள், விதவிதமான வியாதிகளோடு பொதுமக்கள், அவர்களோடு கூட இருப்பவர்கள் எனகூட்டம் ஓயாமல் அலைமோதிக்கிடந்தது. நாங்கள் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளாமல் வேகமாக நடந்து வளாகத்தின் இரும்பு கேட்டை அடைந்திருந்தோம்.
ஒருவர் உள்ளே போனால் இன்னொருவர் வெளிவரும் படியான சுழல் இரும்பு கேட்டைத் தள்ளிக்கொண்டு நான் நுழைந்தவுடன் மாரி அண்ணணும் வேகமெடுத்து வந்தவர் ‘டே, பறக்காதரா .அப்பனுக்கு ஒண்ணுமாவாது. நாம்மட்டும் வேணுமின்னா இங்கே சேக்கோணும்னு நெனப்பேன். முன்ன மாதிரி இல்லீடா கவர்மெண்டு ஆசுபத்திரி இப்ப எவ்வளவோ முன்னேறிருச்சு.. அதா இங்கே கூட்டிட்டு வந்தேன்’ என்று தன்னிலை விளக்கம் தந்தபடியே வேகவேகமாக எனக்கு ஈடுகொடுத்து நடந்து கொண்டிருந்தார்.
“நீ பேசாத, இங்கனக்குள்ள நமக்குன்னு ஆரிருக்கா? ஒரு சாதிசெனமிருக்கா? நம்ம மூணு பேரும் கெடந்து அல்லாடறம். நம்மூரு கிட்டக்க பாத்துகிட்டா மாத்தியூடவாச்சும் ஆளிருக்கும். தெரிஞ்ச டாக்டருங்கனா பேசச் சவுரியமா இருக்கும். நம்ம அப்பனுக்கு இன்னும் ஒடம்பு எப்படி கின்னுன்னு கெடக்கு நம்மளய விட நல்லா.. அதே மனசு துடிக்குது” என்று நான் சொல்லியபோது பொதுப்பிரிவு வராந்தாவிற்கு வந்திருந்தோம்.
மாரி அண்ணன் ஏதோ ஒரு குற்றவுணர்வில் தத்தளிப்பது போல அமைதியாக வந்தார். அப்பாவின் இருக்கைக்கு அருகில் சென்றபோது அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். எங்களுக்குத் தெரிந்த நாளில் இருந்து வெளிர் நீலநிற சட்டையும், வெள்ளை வேட்டியும் அவரது அடையாளம். இடுப்பில் வெள்ளி அரைஞாண் கயிறு கடைசிவரை இருந்தது. அவர் முகத்தில் இருந்த மீசை மழிக்கப்படாமல் இருந்தது. எப்போதும் முறுக்கியவாறு இருக்கும் அடர்த்தியான வெண்ணிற மீசை கீழிறங்கிக் கிடந்தது. முகத்தை மறைக்கும் அளவுக்கில்லாது ஆனால் கன்னம் வரை சற்றே நீண்ட கம்பீரமான மீசை அப்பாவுக்கு. அவருக்கு ஒரு பழக்கம் உண்டு. அடிக்கடி தனது வலது கையால் மீசையை முறுக்கி விட்டபடியே இருப்பார். கறிச்சோறு சாப்பிடும் நாட்களில் அவருக்கு ஒரு குவார்ட்டர் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அவர் அந்த பாட்டிலை உடைக்கும் அழகை ஈத்து பேத்துகள் எல்லாம் வாயைப்பிளந்து வேடிக்கை பார்க்கும்.
பாட்டிலை எடுத்து ஒரு தட்டு தட்டினால் மூடி கழன்று விழ கீழிருந்து ஒரு தட்டு தட்டி கைகளை வைத்து மூடியபடியே ஒரு குலுக்கு குலுக்கி அப்படியே தொண்டைக்குழியில் இறக்குவார். பிறகு மெல்ல அந்த மூடியால் மூடிவைத்துவிட்டுக் காரமாக வைத்திருக்கும் கறிக்குழம்பு சோற்றை மீசையில் ஒழுக ஒழுக ஒரு பிடிபிடிப்பார். சாப்பிட்டு முடித்த பிறகு ‘ங்ங்ங்க்க்க்கும்’ என்கிற ஒரு கனைப்போடு அம்மாவிடம் அல்லது மருமகள்களிடம் கண்கள் சிவந்தபடி தட்டில் மீசையைக் கழுவி முறுக்கிக்கொண்டு தட்டை எடுக்கலியா என்பது போல பார்ப்பார்.
‘இதக்குடிச்சுத்தான ஈரலு வெந்து கொண்டோயிப்போட்டுது ஒன்ன, இந்த வயசுக்கும் அடங்குறியா’ என்று அம்மா கத்துவதை பொருட்படுத்திய மாதிரியே இருக்காது.
‘நாங்குடிக்கறனே இத்தனெ வயசுக்கு..எதுனா ஆச்சா நல்லாத்தானெ இருக்கே. குடி எவ்வுசரப் புடுங்கிருமா? பேசறா, மசுரக்கூட புடுங்காதுல போலெ’ என்பார்.
கோபம் கொப்பளிக்க அம்மா அவரை அவரது தோள்பட்டையில் ஒரு இடிஇடித்தபடி தட்டை எடுக்கும் போது மீண்டும் ‘சூத்தப்பொத்திட்டுப் போல’ என்பார் கண்கள் சிவக்க சிவக்க.
அம்மாவும் சளைத்தவளல்ல. ‘அப்படியே இடிச்சன்னா பல்லு பவுடெல்லாம் பேந்துரும்’ குடிச்சுப்போட்டு பேச்சப்பாரு … எல்லாம் இந்தப் பயலுகளச் சொல்லோணு… இத்தனெ வயசுக்கு குடிக்கன்னு கேட்டா வாங்கித் தரானுங்கெ! அதான் நீ ஆடறெ. காலம்போன கடைசில உசுரெடுக்கிறியா கெழவா’ யெனத் திட்டியபடியே தட்டுத்தடுமாறி தட்டு, சொம்பு, தரையில் சிந்திக்கிடக்கும் எலும்புகளை எடுக்க மாட்டாமல் எடுத்துச்செல்வாள் அம்மா. எல்லாவற்றையும் தாண்டி எங்கள் யாருக்குள்ளும் இல்லாத ஒரு காதல் அவர்களுக்குள் இருந்ததை நாங்கள் அனைவரும் உணர்ந்திருந்தோம்.
அப்பா படுத்திருந்த தோரணை அவர் தன் மரணத்திற்கு தயாராகி விட்டாரோ என்பது போல எனக்குத்தோன்ற மனம் கலக்கம் கொண்டது. அதை அண்ணணுக்குக்கூடக் காண்பிக்காமல் அவரை ‘அப்பா அப்பா’ என்று தலையைத் தடவி எழுப்பினேன்.
அப்பாவின் தலையைத் தடவி நான் எழுப்புவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பின்னால் ஒரு கதை இருந்தது. அப்பா என்றாலே ஆயிரம் கதைகள் கிளை நீட்டி ஒவ்வொன்றாக முளைத்து குழந்தை பருவத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றதையெண்ணி மனமும் உடலும் எனக்கு ஒருசேரப் பூரித்தது.
அப்பாவின் இடுப்பில் ‘கச்சாப்பை’ என்றழைக்கப்படும் பணம் போட்டு வைத்துக் கொள்ளும் பை எப்போதும் இருக்கும். சாம்பல் நிறத்தில் நீளமான வடிவில் ஜிப் வைத்து முன்புறம் பணம் வைக்கும் இடமாகவும், இடுப்பின் பின்புறத்தோடு கயிறும் வைத்து கட்டிக் கொள்ளலாம்.
பின்புறம் வரை இழுத்துக்கட்டி அதைத் தனது வெள்ளி அரணாவில் சொருகியிருப்பார். அவர் தூங்கும் நேரங்களில் கூட அந்தப்பையை கட்டியபடியேதான் தூங்குவார். அவர் வியாபாரத்திற்கென சென்ற நாட்களில் இரவில் யார் வீட்டுத்திண்ணையிலாவது தூங்குவது வழக்கம். சந்தைக்குச்சென்று சம்பாதித்த பணத்தினை வைத்துக்கொள்ள இடம் இருக்காது. ஒரு நாடோடியைப்போலிருந்த அவர், உண்டு உறங்கி எழுந்து செல்ல வேண்டும் என்பதால் அதிக சுமைகள் இருக்காது. அதனால் பணப்பையை யாரும் திருடி விடுவார்களோ என்று யோசித்தபடியே இடுப்பில் கைகளை வைத்தபடி உறங்குவார். நாங்கள் இளமையில் இருந்த காலங்களில், இப்போது எங்கள் வீடுகளில் இருக்கும் வரை கூட பையில் கை வைத்தபடிதான் தூங்குவார். அதனால் நாங்கள் யார் அப்பாவை எழுப்ப வேண்டும் என்றாலும் கால்களைத் தொட்டுத்தான் எழுப்ப வேண்டும். தலையைத்தொட்டு எழுப்பினால் சரேலென்று தூக்கத்தில் ஆளை சுழற்றிப்பிடித்து அறைந்துவிடத் தயாராகிவிடுவார். அந்த பயம் எங்கள் எல்லோருக்கும் இருந்ததால் நாங்கள் காலைத் தொட்டுத்தான் எழுப்புவோம். எங்கள் குழந்தைகள் இந்த கதை தெரிந்து அவரை வேண்டுமென்றே தலையை நோண்டி எழுப்புவார்கள். அவரை அப்படிச் சீண்டி அவரிடம் திட்டு வாங்குவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் தலையைத்தொட்டு எழுப்பியவுடன் எந்த எதிர்வினையும் செய்யாமல் அப்பா கண்விழித்து என்னை மேல்நோக்கிப் பார்த்தது அவர் தன் திடகாத்திரமான உடலையும் மனதையும் முற்றிலும் இழந்து விட்டாரோ என்று தோன்றியது. ஆனால் அவரது கைகள் மட்டும் இடுப்பைத் தடவியபடியே விரல்கள் துடிதுடித்தபடி இடுப்போடு ஒட்டிக்கிடந்தன.
3.
நினைவுகளில் மூழ்கி நனைந்து எழுந்தபோது இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடியிருந்தது.
கிட்டத்தட்ட ஒருமணிநேரம் தாண்டியிருந்தது. கிடா நின்றமேனிக்கு அப்படியே நின்றது. நானும் கால்களின் அச்சு தரையில் படியும் வண்ணம் அப்படியே நினைவுகளைச் சுமந்து நின்றிருந்தேன்.
இன்னும் இரண்டு நாட்கள் கூட தாங்காது என்று மெட்ராஸிலிருந்து வந்த பெரிய டாக்டர்களும் சொல்லி விட அன்று நாங்கள் மூவரும் செய்வதறியாது அண்ணன் வீட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்தோம்.
தஞ்சாவூரில் இருந்து மாரி அண்ணன் வீட்டில் வந்து இறங்கிய போது அப்பா சுத்தமாக நினைவை இழந்திருந்தார். மூச்சு சப்தம் மட்டும் கரட்கரட்டென இழுத்தபடியே இருந்தது. என்னால் என் அப்பாவை கம்பீரமான மீசையுடன் கனைத்தபடி வலம் வரும் அப்பாவை சுத்தமாக அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அண்ணன் வீட்டுத்திண்ணையில் கண்களில் திரண்ட துளிகளை துண்டால் யாரும் அறியாமல் ஒற்றியெடுத்தபடி கனத்தோடு நின்றேன். உள்ளே சென்றால் எல்லா பேரன் பேத்திகளும் பால் ஊற்ற ஆரம்பித்திருந்தனர். அவ்வளவு தானா இந்த வாழ்வு அவ்வளவு தானா அப்பா அவ்வளவு தானா ஒரு மனிதன்..இத்தனை வயதுக்குப் பிறகு ஏன் இன்னும் அப்பாவென்றால் மனம் இப்படி துடிக்கிறது. அதுசரி, எத்தனை வயசானாலும் நான் அவருக்குக் குழந்தைதானே.
அப்பா இறந்து விட்டால் மாரி அண்ணன் வீட்டருகே அவரை வைத்து விடலாமென நாங்களும், பொறந்த பிள்ளைகள் எங்கள் சொந்த ஊரான நாயக்கம்பட்டி கிராமத்திற்குக் கொண்டு செல்லலாமுமென வாதிட்டதில் பிள்ளைகள் வென்றனர்.
ஆம்புலன்சில் போகும் போதே ‘இந்தக் கெழவெ அப்பயுஞ்சேரி இப்பயுஞ்சேரி பாடாப்படுத்தி வச்சானெ’ யென அவர் கன்னத்தில் லேசாக ஒரு இடி இடித்தாள் அம்மா.
‘ஏம்மா, பேசாம கெடக்க மாட்டெ..சாவக்கெடக்கற மனுசன இடிக்கற நீயெல்லாம்’ என்று வந்த கோவத்தில் அம்மாவை இரண்டு திட்டு திட்டினேன்.
“ஏண்டா தம்பி, நீதானெ பறக்குற! இந்தக் கெழவனுக்குத் தோணுச்சா என்னெய அம்போனு உட்டுட்டுப் போறமின்னு” என சொல்லிவிட்டு அவர் முகத்தில் முகம் புதைத்தாள்.
ஊருக்கு வந்தபோது மணி நள்ளிரவை நெருங்கியிருந்தது.
எல்லாரும் இறங்கிய பின்னர் அப்பாவை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்தனர். திடீரென மின்னல் வெட்டி இடியுடன் மழை பெய்யத்தொடங்கியது.
என் மனம் மிகவும் சஞ்சலத்தில் கிடந்தது. அம்மா முகம் புதைத்த காட்சி மீண்டும் மீண்டும் மனதுக்குள் வந்து போனது. பொடக்காலிக்குப் போய் ஒண்ணுக்குப் போயிட்டு வாரேனென்று சொல்லிவிட்டு வேகவேகமாக வீட்டில் இருந்து எட்டி வைத்தேன். எங்கள் தோட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் எல்லைக் கருப்பைத் தவிர எனக்கு இனி வேறு வழியில்லை. உடனே கருப்பைப் பார்த்துவிட்டால் மட்டும் போதும் என்று தோன்றியது.
மழையால் வழிநெடுக சேறும் சகதியுமாகக் கிடந்தன. காற்று பலமாக வீசி என்னை எதிர்த்திசையில் இழுத்துத் தள்ளியது. இதயம் வேகவேகமாக துடித்தது. காற்றோடு போராடி நடக்க முடியாமல் தண்ணீரில் நீந்துவது போல காற்றைக் கிழித்து நடக்க வேண்டியிருந்தது. போட்டிருந்த சட்டை வேட்டி இரண்டும் தொப்பலாக நனைய ஓட்டமும் நடையுமாக எல்லைக் கருப்பு காலில் விழ ஆவேசமாக போய்க்கொண்டிருந்தேன். ஊரின் எல்லைப்புறமென்பதால் நிறைய வீடுகள் இல்லை. ஒதுங்கிக்கொள்ளக்கூட இடமற்று வழியில் இருந்த ஒன்றிரண்டு குடிசை வீடுகளும் சிம்னி விளக்கு வெளிச்சம் தவிர வேறேதுமின்றிக் கிடந்தன. வேறெந்த சிந்தனையும் இல்லாது எனக்குள் கருப்பே புகுந்தாற்போல ஆவேசமாக நடந்தேன்.
நள்ளிரவு வேளையில் எல்லைக்கருப்பு குதிரையில் ஏறி காவல் காக்க தினமும் கிளம்பும் என்றும் அந்நேரத்தில் மிகவும் உக்கிரமாக இருக்கும் என்றும் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டாள் அம்மா. நடுநிசியில் குதிரையில் சலங்கை ஒலி ஜல்ஜல் என்று கேட்டிருக்கிறதென வழிப்போக்கர்கள் சொல்வார்கள் என்பாள். கையில் கிடந்த வாட்ச்சில் தண்ணீர் இறங்கி துல்லியமான நேரம் என்னவெனத்தெரிந்துகொள்ள முடியாதபடி என் அமைதியைக் குலைத்தது. நேரம் என்னவாக இருந்தாலென்ன ஓடு ஓடு ஓடு என்றொரு மனம் துரத்தியது. போட்டிருந்த செருப்பு சேற்றில் மாட்டி ஒன்று மட்டும் காலில் இருக்க இன்னொன்றையும் எட்டி வீசிவிட்டு இதே கல் சுவரை நெருங்கியிருந்தேன். அதன் கரடுமுரடான படிகளில் கால் வைத்தபோது ஜல்ஜல் ஒலி கேட்டது.
கருப்பு கிளம்புவதற்குள் வந்துவிட வேண்டும் என்று நினைத்தது வீண் போகவில்லை. வேகமாக ஓடி ‘எஞ்சாமி எங்கருப்பு’ எனக் கத்தியபடியே நெடுஞ்சாண்கிடையாக குதிரை இருந்த இடத்தில் காலில் விழுந்தேன். கிளம்பிய குதிரை கால்களைப் பற்றியழுதேன்.
‘ஒன்ன விட்டா ஆரிருக்கா..இன்னுங் கொஞ்ச நாளைக்கு அம்மாவ சுமங்கலியா வச்சிரு கருப்பு..அதுக்கு அப்பனு வேணு..ஒன்னோட ஒண்ணாக் கெடக்கோணும்னுதே இந்த தோட்டத்த வாங்கிப்போட்டாரு அப்புனு..அவரு பேச்சுமூச்சில்லாம கெடக்காரு அய்யா..அவரு நல்லாயிட்டா ஒனக்கு கெடாவெட்டிப் பொங்கவெச்சு ஊரு சனத்துக்கு சோறு போடறனய்யா அய்யா’ என்று கதறினேன். நான் கதறிய சற்று நேரத்திற்கெல்லாம் ஜல்ஜல் ஒலி மெதுவாக கரடுமுரடான படிகளில் கேட்டது. ஆமாம், எங்கள் கருப்பு கிளம்பியிருந்தது.
எந்நேரம் வரை கிடந்தேனெனத் தெரியவில்லை. மசக்கலில் வீடு வந்தபோது வாசலில் பந்தல்போட ஆள் வந்து இறங்கினர். மாரி அண்ணன் அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போதே ஆட்களை கோழிக்கூப்புட வரச்சொல்லி தகவல் அனுப்பி இருந்தார்.
திடீரென யாரும் எதிர்பாராமல் அப்பாவின் குரல் அசரீரி போலக் கேட்டது.
‘எவெம்ல எனக்கு பந்தப்போடறது…நான் உசுரோட இருக்கப்ப பந்தப்போடறானுக’ என்று கர்ஜித்தார். அப்பாவா, இரவு பால் ஊற்றிய அப்பாவா, இரண்டு நாட்கள் கூட தாங்காதென கைவிடப்பட்ட அப்பாவா, எங்கள் அப்பாதானா என நான் ஒரு நிமிடம் செய்வதறியாது நின்றபடியிருந்தவன் ஓடி அப்பாவைக் கட்டிக்கொண்டு ஓஓவென்று அழுதேன். ‘ஆருட இது ஆம்பளப்புள்ள அழுவறானாம்..நீ எம்மவெந்தானா’ என்று மீண்டும் என்னைப்பார்த்து கர்ஜித்தார்.
அதன் பின்னர் அப்பா மூன்றாண்டுகளுக்கு மேல் நல்ல நடைஉடையோடு இருந்தார். எப்படி என்றால் வீட்டில் இருந்து ஒரு மைல் இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு தினமும் நடந்து வரும் அளவிற்கு.. கருப்பை வந்து அன்றாடம் பார்த்துவிட்டுப் போகும் அளவிற்கு.
கண்கள் பனித்தபடி கால்கள் தரையில் அமுங்க ‘தப்புத்தே கருப்பு. நானு இம்புட்டு வருச வராததுக்கு மன்னிச்சிக்க…ஏந்தள்ளிப்போச்சுனு எனக்கும் புரிலெ’ என்று வேண்டியபடி கண்களைத் திறந்தபோது ஒன்றரை மணி நேரமாகி இன்னும் ஆடும் மற்றவர்களும் அப்படியே நின்றிருந்தனர்.
முத்தண்ணன் கடைசி யோசனையாக “அம்மா எங்க அய்யனு” என்றார். “நடக்க முடியாமல் வெளியே உட்கார வச்சிருக்கண்ணே” என்றேன். ஓரெட்டுப் போய் அம்மா கையில திண்ணூறு வச்சி வாங்கிட்டு வந்தாச்சும் போடுவமா என்றவுடன் எனக்கும் அது சரியெனத் தோன்றியது. ஆடு இவ்வளவு நேரம் ஆகியும் துளுக்காததால் எல்லோர் முகமும் கவலையுடன் இருந்தது. தூக்குக் கைதியின் கடைசி வாய்ப்புபோல கல் படிகளுக்குக் கீழே வீல்சேரில் உட்கார்ந்திருந்த அம்மாவை நோக்கி விபூதியை வாங்கிக்கொண்டு சென்றேன்.
“ஏஞ்சாமி, இப்படி நம்மளெ கருப்பு சோதிக்குது” என்றாள் அம்மா.
“ஒண்ணுமில்லம்மா எனக்குத் துண்ணூறு வச்சு விட்டுட்டு ஓங்கையால வேண்டிக்குடம்மா” என்றேன்.
அம்மா உட்கார்ந்திருந்த கல் படிக்கட்டின் அருகில் இருந்து நேராக பார்த்தால் ஆடு நிற்குமிடம் நன்கு தெரிந்தது. அம்மாவிடம் குனிந்து விபூதி இட்டபடி யதேச்சையாகப் பக்கவாட்டில் திரும்பினேன். ஆடு உடலோடு சேர்த்து தலையை வேகவேகமாகக் குலுக்கியது.
000

சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.
இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், பண்புடன் இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ், சிற்றுளி அச்சிதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதை பரிசு பெற்றுள்ளது.
‘மாதவிடாய் சிறப்பிதழ்’ மற்றும் ‘ ‘உணவு சிறப்பிதழ்’ கட்டுரைகள் புழுதி இதழில் வெளிவந்தது. ‘காதல் _ ஹார்மோன்களின் விளையாட்டு’ கட்டுரை ஹர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் புத்தகத்திலும், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிவோம்’ கட்டுரை திருச்சி ஆத்மா மனநலை மருத்துவமனை வெளியிடும் மருத்துவ இதழிலும் வெளியாகி உள்ளது.