நான் இருக்கும் போது தான்

அவனும் வந்தான்

அவனிடம் அமைதி மௌனித்துக் கொண்டும்

தனக்குத்தானே ஒப்புவித்துக் கொண்டும்

எல்லைக்குள்ளான எல்லையற்ற

சுற்றலின் மேல் கனன்று கொண்டிருந்தது

,

இப்போது நான் போகிறேன்

அவனும் கிளம்பிவிட்டான்

எல்லாவற்றையும் சேகரித்து

தரம்பிரித்து கொட்டுவதற்கு

,

எல்லாம் யதேச்சையாக ஈடேற

எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி

ஏழு நாட்களோ, நான்கு நாட்களோ

வேறொன்றாக மாறும் ஆற்றலுடன்

உயிர்த்திருத்தல் தொடர்கிறது

******

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ப்ளாஸ்டிக் கதவுக்குப் பின்னே

குத்த வைத்து உட்கார்ந்திருக்கும்

உயிரினம் ஒன்றின் மூளைக்கசிவு வாடை

என்னை அப்புகிறது

பிங்க் நினைவுகள் பச்சையாக ஒழுகுகிறது.

மேனி முழுதும் ஊர்ந்து வரும்

புழுக்கள் மூளையை அரித்துத் தின்னத் தொடங்கிவிட்டன

,

கதவுக்கு முன்னேயுள்ள

பச்சை வாடை வீசும்

புது மூளைகளின் வருகை

தொடங்கிவிட்டது

கதவுகளைத் தட்டும் போதெல்லாம்

பிளிந்து விடப்படும் மலத்தின் சக்கைக்குள்

ஈரமான புழுக்கள் வெள்ளியென முளைத்து

தண்ணீருள் தவசியாட்டம் ஆடி

என்னைக் குழிக்குள் அழைக்கிறது

,

தண்ணீர் ஊற்றிக் கழுவி

கால் முழுகி

எழுந்து புறப்படத் தயாராகிவிட்டேன்

உடன் வேறொரு நபரும் வரலாம்.

*******

தோல் பை முழுக்கத் தோல்விகளை

நிரப்பி பரிசளிக்கச் செல்கிறேன்.

அதிலொரு தோல்வி கீழே விழுந்து

சுற்றிச் சுற்றி உடற்சுவரைப் பிடித்து

மேலேறி என் கண் முன் அசைவாடுகிறது

,

மடை திறந்து விழும்

செயற்கை நீர்வீழ்ச்சியின்

குளியலுக்குப் பின்னான

விசாரிப்புகளின் மரணம்

என்னருகே படுத்துள்ளது

,

எனது இடுப்பின் மேல் கால் போட்டு இறுக்கும் பேச்சொலி

மண்டையைத் துளைத்திட

கசியும் மூளையில் வடியும்

ஆல்கஹால் கலந்த நினைவுகள்

புகையில் மேலேறி

கண்மூடி குவிந்து விரியும் கடற்சிப்பியின்

முத்த எச்சிலை முகம் முழுக்க அப்புகிறது

இனிக்கும் எச்சில் துளிகள்

வெக்கையில் உலரும்முன்

விரல் தடவி நக்குகிறேன்

,

உப்பும் இனிப்புமாக கலந்தூறிய

சுவையிட்டத் தோல்வியை

தோளில் தொங்கும் இரத்தம் ஒட்டிய

தோற்பைக்குள் போட்டு நடையேறும் பயணம்

தடம் பதித்துச் செல்கிறது

*******

உரசிச் சென்ற இடத்தில் அழுக்குகள் 

தீராமல் உதிர்கின்றன

உதிர்ந்து கொட்டும் அழுக்குகளுக்குப் பின்னே

சிலுவை முளைக்கிறது

முளைத்த சிலுவைகளை ஆணியாக்கி

அனைவருக்கும் கொடுக்கிறேன்

குப்பைகள் நிரம்பிய பையை

எனது சிலுவையில் தொங்கவிட்டு

புன்னகைப் பூக்க சென்றவர்களின்

மறைவிற்குப் பின் மெதுவாகச் சென்று

குப்பைத்தொட்டிக்குள் படுத்துக்கொள்கிறேன்

மீண்டும் அழுக்குகள் உதிர்வதே இல்லை

*****

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *