அந்த வீட்டின் முழு வரலாறு

மூலையில் இருக்கும்

வலையில் வசிக்கும்

ஸ்பைடரின் தலைமுறைக்கு

மட்டுமே தெரியும்

,

வீட்டின் சுவர்கள்

மாறும் போதெல்லாம்

சுற்றுலா சென்று

ஸ்பைடர் குடும்பம் திரும்பி வரும்

சுவர்கள் எத்தனை முறை

தனது வண்ணத்தை மாற்றியுள்ளதென

அந்த தலைமை ஸ்பைடருக்கு

நன்றாகவே தெரியும்

,

பல்லாண்டுகளாக வாடகை தராமலேயே

வசிக்கும் எட்டுக்காலனிடம்

யாரும் இதுவரை வாடகை கேட்டதில்லை

அவனது அறையை

கிழிக்கவும் தவறுவதில்லை

,

இப்போது இருக்கும் அந்த வீடு

கட்டப்படும் காலத்திலேயே

ஸ்பைடர் தலைமுறைக்கு

வாழும் உரிமை கையளிக்கப்பட்டிருக்கிறது

,

எத்தனை குடும்பங்கள்

வாடகைக்கு வந்தாலும்

வீட்டை ஒத்திக்கு எடுத்தாலும்

இருந்த பத்து பன்னிரண்டு வாரங்களில்

ஓரிரு மாதங்களில்

தொன்னூற்று சொச்சம் நாட்களில்

சாத்திரம் பார்த்து சூனியமாகி

திரும்பினாலும்

ஸ்பைடர் தலைமுறை

அங்கிருந்து வெளியேறுவதே கிடையாது

,

கிரயமிட்டு நிலம் வாங்கி

வீடு கட்டிய நெடுமாறன் கூட

அந்த வீட்டைக் கைமாற்றி விட்டான்

,

எத்தனையோ கைகள் மாறி

கனம் கூடும் வீட்டுப் பத்திரத்தின்

ஒவ்வொரு தாள் கூடும் போதும்

வீட்டு வாசல் திறக்கப்படுகிறது

புதிதாக ஒருவர் மேலேயும் கீழேயும்

விடாது பார்க்கும் போது

டாட்டா போட்டு ஸ்பைடர் குடும்பம்

சுற்றுலா சென்று மீண்டும்

அந்த வீட்டிற்கே வருகிறது

,

நிரந்தரமாக ஸ்பைடர்

அந்த வீட்டைவிட்டு

மூளையிலுள்ள தன் அறையை விட்டு

எங்கும் போவதே இல்லை

********

கருமேகம் சூழ்ந்து நிற்கும்

பெருவெளியின் ஓரத்திலொரு

யாருமற்ற அநாதைச் சிறுவன்

வருவதற்கான கண்களோடு

திருதிருவென சாலையோரம் முழிக்க

,

மேகத்தின் கண்களில் பேரிரைச்சலோடு

சோகம் நிரம்பிய கண்ணீர் கொட்டுகிறது

யூகித்துப் பேசிய கூட்டமெல்லாம்

ஏகமாய் ஓட்டம் பிடிக்க

வேகமாய் தொடர்ந்தது பெருவெள்ளம்

,

போக்கு வழி தெரியா சிறுவனின்

யாக்கை எல்லாம் நடுநடுங்க

தாக்கிச் சூழ்ந்தது பெருவெள்ளம்

தண்ணீரின் தத்தளிப்பின் நடுவே -அவன்

கண்களில் மட்டும் கண்ணீர்

,

எங்கிருந்தோ விரைந்து வந்த

மங்கிய நிற படகினுள்

தொங்கிய கயிற்றல் ஏறி

ஏங்கி நின்ற சிறுவனுக்கு

நோக்கும் திசையெல்லாம் உறவினர்

*******

வாய் திறந்து

பேசமுடியாத மரத்திடமும்

அதில் சஞ்சரித்த அணிலிடமும்

பேசினேன்.

ஆகாயத்தில் வாய் திறந்தவாறு

என்னிடம் எதையோ

கேட்டுக் கொண்டே நகர்ந்த

மேகத்திடம் பேசினேன்

ஒலியற்ற அசைவு மட்டும் மிஞ்சியது.

பேச முடியாவற்றிடம்

பேசிக்கொண்டே இருந்தால்

பைத்தியமென

நிசப்தத்தில் நிச்சலனமாய்

அந்த சப்தம் ஒலித்தது.

ஒருவேளை

அந்த சப்தத்தின் பொருள்

உண்மையாக இருக்கலாம்.

*******

பேய்க் காற்று அடிக்கிறதென

பேந்த பேந்த முழித்துக் கொண்டு

என் முன் அவன் வந்தான்

எனக்கென்னவோ அந்த காற்று

இதமாக இருந்தது

,

அந்தக் காற்றை சிறையிட்டு

அனுதினமும் கன்னத்தில் பட்டு

வேகமாய் மேலெழும்பி

முன்னால் படுத்துள்ள முடிகளை

அசைத்திடு என்று

ஆணையிடத் தோன்றியது

,

ஆணையிடும் தொனியை விட்டெறிந்து

ஆசையாக காற்றிடம் பேசினேன்.

ஆனால் அந்த பேய்க் காற்று

அசட்டை செய்யாமல்

ஆன்மீக வேப்பமரத்தோடு

போரிட்டுக் கொண்டிருந்தது

,

அவன் சொல்லும்போது இருந்த

இவன் இரவில் அமர்ந்து

அசையும் மரத்தின்

கொடூர நிழலை பார்த்தவாறு

பேய்க்காற்று என்று படுத்தான்..

*******

ஏ.. ஏஹேய்.. ஊ.. ஓ..

கொண்டாட்ட ஓசைகள்

சுற்றிலும் கேட்கிறது

எல்லோரும் நரம்புகள் புடைக்க

கத்துகிறார்கள்

நான் மயிர்கள் புடைக்க நிற்கிறேன்

மயிர்களால் மடக்கப்பட்டு

இரத்தம் கேட்கும் விகாரக் குரல்களாலான

மயிர்கள் அது

,

பின்னப்பட்டு குறுகி

குறுகி குறுகி ஊசி முனையாகி

குத்தும் மயிர்கள் அது

ஊசிமுனை மடக்கப்படும் நாட்கள் உண்டு

அவை வெறிகொண்டு தீவிரமாக

இரத்தம் கேட்கிறது

முயல் இரத்தம் கேட்கிறது

வெள்ளைத்துணி தோய்க்கப்பட்ட

முயல் இரத்தம் கேட்கிறது

தோய்த்துக் காயப் போட்ட

இரத்தத் துணியை எடுத்து

சிறு துணுக்குகளாக வெட்டச் சொல்கிறது

,

உச்சந்தலையில் விழுந்து இறக்கிய

தென்னை மரத்தின் தேங்காய்க் கூட்டை

நார் பிரிக்க வேலை ஏவுகிறது

தேங்காய்க் குடுமியில் கைவைத்து

பலவந்தப்படுத்தி அவிழ்ந்து

பிய்த்தெறிய சொல்கிறது

தலையை உடைத்த தேங்காயை

தரையில் உடைத்து

சுட்டெரிக்கும் வெயிலில்

வெக்கை உமிழும் நிலச்சூட்டில்

சூரியன் சாட்சியாக

இதயம் பிளந்து வாட்டச் சொல்கிறது

வாடிச் சுருங்கி சுக்காகும் தேங்காயை

செக்கில் ஆட்டிப்பிழிந்து

எண்ணைய் எடுக்கச் சொல்லி

என் தலைமுடியைப் பிடித்து

குனிய வைத்து

முதுகில் இரண்டு அடி கொடுக்கிறது

.

பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தில்

வெட்டிய துணியை ஊறவிட்டு

சேறாக கலங்கிய எண்ணெயை

தலையில் பூசச் சொல்லி

மயிரை நனைக்கச் சொல்லி

ஈட்டியை விலாவிற்குள் இறக்கியது மயிர்

முயல் இரத்தம் அல்ல

என் இரத்தம் கொப்பளிக்கிறது

விலாவைச் சுற்றி சுனையெடுத்து

இரத்தம் ஓடுகிறது

ஒரு மதுக்கோப்பையில் இரத்தம் கொண்டு

பூசிக்கொள்ளுமாறு

மயிருக்குக் கடிதம் போடுகிறேன்

போய்ச் சேருமா?

தெரியவில்லை எழுதி வைத்துதைப்

போட்டுவிட்டேன்

முகவரியின்றி

*****

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *