பாலத்தின் கீழிருந்து வளர்ந்து மேல் நிற்கும் கட்டிடங்களின்
கீழே நெளிந்து செல்லும் ட்ரைனேஜ் தொட்டிகளுக்குள்
என் மூத்திரம் கலக்கவில்லை
பெரு நகரத்தில் ஒரு இன்ச்க்கும் குறைவான உயரத்தில்
காய்ந்து நிற்கும் புற்களின் மீதும்
அதன் பரட்டை வேர்களில் ஒட்டியிருக்கும் மண்களின் மீதும்
சொரியப்படும் எனது மூத்திரம் வேர்களைக் கழுவுகிறது
கட்டிடத்தின் வேர்களில் சாவாதனமாகவும் சட்டெனவும்
மாறி மாறி ஓடும் நீர்க்கால்களில்
என் உப்பின் சாரம் இத்தினி அளவிலும் இல்லை
,
இப்போதெல்லாம் வெட்டவெளியில் மோள்வதற்கு
வயிற்றை நான்கைந்து முறை பிழிந்தெடுத்தாலே
கொஞ்சமேனும் நீர் சொட்டுகிறது
மேலும் கீழுமாக உள்ளும் புறமுமாக நின்றுகொண்டே
வயிற்றைப் பிழிவது உடற்பயிற்சியென
தடுப்புகளற்ற மூத்திரக் கால்வாய்களிலும்
வெட்ட வெளியில் நிற்கும் கோப்பைகளிலும்
தொடர்கிறது
,
ஒன்றுகலந்து உலகமயமாகும் மூத்திரத்தை
மூத்திரத்திலுள்ள மனிதர்களின் உதிர உப்பை
கலக்கிச் சேர்க்கும் பாதாளப் புரட்சி
மண்ணுளியென ஒவ்வொரு பக்கமும் தலைகொண்டு நீள்கிறது
மீப்பெரும் உலகத்தின் ஓரிடத்தில்
சமத்துவமாக ஐக்கியமாகின்றன கச்சாப் பொருட்கள்
******
போருக்கென அழைப்பை சாப்பிட வா என்று
அழைத்து அறிவித்துவிட்டாள் அம்மா
களத்தில் போர் தொடங்கிவிட்டது
வாளுக்குப் பதில் கையில் உணவுத்தட்டு இருக்கிறது
என்முன் வைக்கப்பட்ட தட்டிலுள்ள உணவை
வலக்கையில் எடுத்து வாயிலிட்டு
மௌனத்துடன் மெல்லும்போது வலியில் கத்துகிறேன்
ஒவ்வொரு வாயசைவிலும் முள்வாள்
உடலின் ஓர் பகுதியில் ஆழ இறங்குகிறது
முதலில் கால்களிலும் தொடைகளிலும் இறங்கிய ஆயுதம்
வயிற்றிலும் குத்தப்பட்டது
நாட்கள் பொழுதடைந்து செல்ல செல்ல தீவிரம் கூடி
நெஞ்சிலும் முதுகிலுமாக உள்நுழைந்து
குருதி பார்த்த வாள்
கன்னத்தினுள் இறங்கி
வாய்க்கு நடுவே பாலமிட்ட
சில நொடிகளில்
பாலம் உடைந்திட உருவப்பட்டு
கண்களுக்குள் பொதிகிறது
சத்தமின்றி கண்களில் குருதியொழுக
ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்
போரோ நடந்துகொண்டே இருக்கிறது
சில சமயம் தேர்ப்படையும் எனக்கெதிராக வருவதுண்டு
ஒருநாள் இரவில்
பஞ்சர் ஒட்டப்பட்ட சைக்கிள் டயரை
இடது பக்கவாட்டில் கொண்டவாறு உட்கார்ந்திருந்த போது
என் முன்னே படுத்திருந்த அப்பாவை சந்தித்தேன்
உறங்கிக் கொண்டிருந்ததால் பேச முடியவில்லை
நான் நாள்தோறும் பார்த்தாலும்
சந்தித்து வெகுநாட்களாகின்றன
இப்போதெல்லாம் அவரது கண்களை என்னால்
எதிர்கொள்ள முடிவதேயில்லை
போர்வீரர் வரும் தேருக்குப் பதிலாக
எப்போதும் சைக்கிளை எடுத்துவந்து
என் மார்பில் ஏற்றுகிறார்
இப்போதிருந்து
முடிவற்ற போரின் நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டேன்
*****
வயோதிகனின் முகத்து ரேகைகளை
தன் இரட்டைக் கால்களிலும் வடித்திருந்த
இளம்பறவையொன்று
மண்டைமீது வட்டமிட்டு பறந்து
பைத்திய மிதப்பில்
உற்சாக வெள்ளோட்டத்தில்
துன்பங்கள் அயர சட் சட்டென சிறகடித்து
கிழட்டு மரத்தைப் மொய்த்துப் பொய்த்திட வைக்கும்
கரையான் கூட்டமொன்றின் படையெடுப்பில்
சாவகாசமாகத் தொங்க
உழுத்த மரத்தின் ஓட்டைகள் அடர்ந்த கவைக்குள்
கால்களைச் சொருகி
க்யை க்யை என ஒலியிட்டுத் தொங்கிய
விநாடிகளின் முடிவில்
தட்டுத் தடுமாறி ஓய்ந்த கட்டிடத்தினருகில் கூடியது
அவளுடனான சந்திப்பு
,
பரவசங்கொண்ட பார்வை துளைநெருக்கி விழ
நினைவுகளினுள் சென்றபோது
தள்ளிவிடுதலும் கொத்துதலும்
பறந்து தூக்குதலும் சிதறலுடன் தெரிய
எத்துணையுமின்றி அதிகாலை மரத் தாவல்களும்
றெக்கை எழும்பாத போது
பக்கவாட்டில் அசைந்த மென் இறகுகளின் உயிரோட்டமும்
படமென முழுதும் விரியுமுன்னே
தூக்கப்பட்ட பறவையின் கால்களை
யாரோ சொல்லியனுப்பியது போல
இதமாகத் தேய்த்து விளையாடுகிறாள்
,
சுதந்திரந்தேடிய இமைகளின்
எழுதிக்கொண்டிருக்கும் அவ்விரல்களால்
எப்போதும் எடுத்தெடுத்துத் தின்னும் பையில்
தின்பதெற்கென வைத்திருந்த தீனிகளை
கொஞ்சம் கொஞ்சமாக
கொத்தும் நிலையற்றிருந்த அலகுக்குள் திணிக்கிறாள்
மறக்காமல் அவள் இதையெல்லாம் படமெடுத்து
யாருக்கோ அனுப்பும் போது
விட்ட இடத்தில் தொடங்கிய படம் தொடர
அவள் இமைகளின் சுதந்திரத்தைத் தூக்கிக்கொண்டு
சிறகடித்து பறந்தது பறவை
*****

அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.