கேபிள்களாலான வலைக்குள்

கோடு தீட்டி உயிர்கள் தொங்குகிறது

கருப்பு நிற வயர்களின்

ரப்பர் சீவல்களும்

கட்டப்பட்ட வெள்ளை டேக்குகளின்

பிளாஸ்டிக் சீவல்களும்

தூவப்பட்ட உயிர் ஆட்டத்தின்

மிதவை அலைகள்

உதறிய போர்வையின் தூசுகளோடு

ஈரம் தங்கும் பூனையின்

நாசித்துளைகளுக்குள் நுழைகிறது

,

வயர்கள் நெளியும் பிரளயம் அடங்காது

கேபிள் உலகம் துள்ளிக் குதிக்கும்

மறுபுத்தாக்கம் நிகழ்கிறது

பலநிற வயர்களின் பின்னல்கள்

குந்தி குந்தி நின்று அடங்காது

ஓடித் திமிரும் வேகம் எல்லாம்

உள்ளுக்குள் சுழலும்

டிஜிட்டல் இயக்கக் காற்றுடன்

கருந்துளைக்குள் சென்ற கருந்தூசியை

மூளைநெஞ்சுக்குள் தள்ளி

செவிப்பள்ளத்தின் அக்கினியில்

நழுவி விழாது உறுத்தலின் உறுத்தலில்

நசநசத்துக் கூடி கண்மூடி

பூனை தும்மிய தும்மலின் எச்சில்

நாக்கை கருநாக்காக்கி

என்னைத் துப்பியது

,

பூங்காவிற்குள் துப்பப்பட்டவன் நான்

என்னைச் சுற்றிலும் எச்சில் குமிழ்கள்

குமிழிகள் பொறிந்து வெடித்து

எறும்புகள் சாரை சாரையாகப்

பெருகி வளையமிடுகிறது

மரித்துக் கிடந்தவனின்

உடலைச் சுற்றி வரையப்படும்

சுண்ணாம்பு பவுடர்களாக

எறும்புகள் என்னை வனைந்தெடுக்கின்றன

ரோமத்தைப் பிடித்துத் தொங்கி விளையாடும்

எறும்புக் குஞ்சுகளை என்னவென்று சொல்வது?

என்னருகில் சிவப்பு நிற

பிளாஸ்டிக் கலவையாலான

சருக்குமரப் பலகையில் விளையாடும்

குட்டிக்குழந்தைகள் அவை

,

என் ரோமத்தில் ஊறும் எறும்புகள்

ஊஞ்சல் ஆட்டிவிடும் தாத்தாக்களுடன்

பூங்காவிற்குள் வருவதில்லை

தள்ளுவண்டி இட்லிக்கடையின்

பொந்துக்குள்ளிருந்து வருகின்றன

வரும் தடத்தில்

குடுகுடுவென ஓடிப்பிடித்து

கடித்து விளையாடும்

விளையாட்டினிடையில் வரும்

உங்கள் சண்டைகளில் எல்லாம்

என்னைக் கடிக்கிறீர்களென

கோபித்துக் கொண்டு

தூக்கம் கலைந்து மீண்டும் தூங்க

கல் இருக்கைக்கு வந்து படுக்கிறேன்

,

பசும்புல் தவழும்வாறு

சிமெண்ட் கற்கள்மீது

பச்சை சாயம் பூசப்பட்டிருக்கிறது

பசுமையின் மடியில் உருண்டு தவழ்கிறேன்

என் மீது ஏறி இறங்கும்

ஒவ்வொரு எறும்புகளும்

கொலுசு சினுங்க தரையை உதைத்து

சீசா விளையாடும் கிராப் வெட்டிய

சிறுமியை நினைக்க வைக்கிறது

படுத்திருக்கும் எனது கண்கள்

இன்றும் விழித்திருக்கிறது

எத்தனை அலுப்பு என் முதுகுகளில் தழும்பாகியும்

கண்கள் மட்டும் மூடவில்லை

விளையாடிய எறும்புகளுக்கு

சுறுசுறுப்பின் சோர்வு

களைப்பின் தாகம்

,

மென்முனையில் கூர்மையுடன்

கண்ணீர் கசிகிறது

வியர்க்கும் இந்த கோடையில்

உப்பு போட்டு தண்ணீர் குடிக்கலாம்

குடியுங்கள் குடியுங்கள் என்கிறேன்

மன ஓசையைக் கேட்டு

கிருதாக்கள் வழி ஏறும் எறும்புகள்

கண்ணீர் குடித்து விளையாடும்

,

நான்கே பாய்ச்சலில் வானத்தை சுட்டும்

என் கால் விரல்களுக்கடியில்

ஒரு குழிதோண்டி மலம் கழித்து

குழி மூடிய பூனை

கருநாக்கில் நக்கி நக்கி

வெள்ளை உடலில்

வண்ணம் கீறி

எப்படி இருக்கிறேனென

நெகிழிக்குள் மூக்கை நுழைத்த

நாயிடம் கேட்க

அது துரத்தி வருகிறது

வேகம் வந்து என் வயிற்றில் பாய்ந்த

வரிகளை உடலில் ஏந்திய பூனை

நெஞ்சில் படுத்துவிட்டது

துரத்திய நாய் கல் இருக்கைக்கு

அடியில் வந்து படுத்துவிட்டது

,

ஈரம் படிந்த பூனையின் உலர்த்துகிறேன்

கண்சாய்த்து உறங்கும் பூனையின் கண்கள்

திடீரென விளித்து மீசையை

அடிக்கடி பார்க்கிறது

கருநாக்கால் என் தாடியை நக்குகிறது

நாயின் கண்களை

கற்பிளவுகள் வழி பார்க்கிறேன்

அதுவும் முளித்திருக்கிறது

மூன்றடுக்கு கட்டிலாக

நாங்கள் மூவரும் படுத்துள்ளோம்

ஏதோவொரு செம்புச் சங்கிலி

எங்கள் முன்னங்கால்களில்

சுற்றப்படுகிறது

கண்ணாடிக்கூண்டுக்குள் சிறைபிடிக்கப்படுகிறோம்

,

குற்றவாளிகள் நாங்கள்

எங்களுக்கு இனி தூக்கம் கிடையாது போலும்

தூதர்கள் இறங்கி வந்து

தீட்சை கொடுத்தால்

தூக்கம் வர வழியுண்டா?

நித்தமும் சில நொடிகள் யோசிக்கிறேன்

உடனிருக்கும் இருவரும்

யோசனைகளை வெறித்துப் பார்க்கின்றனர்

ஒன்றும் புரிபடவில்லை

குழம்பி குழம்பி கண்கள் ஓய்கிறது

ஓய்ந்து தெளிகிறது

,

சாரம் வீசும் மீசை வைத்த

எறும்புகள் ஊறும்

டிஜிட்டல் மரக்கம்பத்தின்

உச்சி முனையிலிருந்து உதிரும்

ஒளிவிளக்கின் இலைகளில் ஒன்று

ஜொலித்து கரணமிட்டு இறங்கி

இடப்பக்க கண்மீது விழவும்

ஆறு கண்களும் மூடியது.

+++

மலையே அவளது உடல்

பச்சை நரம்புகளாய் படர்ந்திருக்கும் கொடிகளும்

மரங்களும் செடிகளும்

உள் பதிந்துள்ள பருக்களென கிழங்குகளும்

உடல் முழுவதும் சுற்றி வளைந்து பின்னியிருக்க

அங்கங்கள் ஒவ்வொன்றையும்

ஆசையாய் பிடித்துத் தடவி மேலேறுகிறேன்

நரிகள் ஊழையிட வெளியேறும் பொந்தென்றின்

இடுக்குகளினூடே மண்டியிருக்கும்

புதர்களுக்கிடையில் பிளந்திட்ட கல்லிலிருந்து

செஞ்சுனை பெருக்கெடுக்கிறது

மலையரசியின் யோனி அது

உயிர்களின் ஊற்று அது

,

உடல் வியர்க்க படபடத்து

ஆடத் தொடங்கிய கால்களின் நடுக்கத்தை

நான் நிற்கும் அவளது தொடை வழி அறிந்தவள்

அப்படியே மடியில் கிளர்த்துகிறாள்

என் நரம்புகள் முறுகி முறுகி உடைகின்றன

குறிஞ்சி உயிர்களின் தாகம் தீர்க்கும்

தாய்ச்சுனை என் கண்முண்ணே கொட்டுகிறது

நான் தலை குனியும்போதொல்லாம்

தண்ணீரை பீச்சியடித்து பார்க்கச் சொல்கிறது

,

திராணியற்று நிற்கும் என் உடலும்

உடல்மீதுள்ள ஆடைகளும்

அடிக்கும் காற்றில் கழன்றோட

அப்படியே யோனியின் மீது விழுகிறேன்

அவள் ஆக்ரோஷம் கொண்டு

அரவணைக்கிறாள்

வெப்பம் உருகி உடல் குளிர

கல் அரிந்து தூக்கி

அவளது சேய் ஆகிறேன்.

+++

தூக்கிக் கொண்டே நிற்க முடியவில்லை

பாரம் அதிகமாயுள்ளது

கனக்கிறது

சாய்ந்து விடு சாய்ந்து விடு

என்ற கட்டளை வேறு

,

சாய்கிறேன் சிலுவையோடு

எவனோ அடிக்கப்படுகிறான்

சிலுவையோடு தோள் ஏறுகிறது

சுமந்தவாறு ஒருசாய்த்துக் கிடக்கிறேன்

சில சமயம் மல்லாந்து பார்க்கிறேன்

பிரம்மை பிடிக்கிறது

,

ஒரேயொரு துளி எச்சிலைத்

துப்பி ஒட்டிவைக்க

சிலந்தியால் முடியும் என்ற

நம்பிக்கை வேறு

தினமும் பார்க்கிறேன்

அதற்கு வேலை இருக்கிறது

வலை கட்ட வேண்டிய இடங்கள்

அதிக மிச்சப்படுவதை நிரப்ப

தாவித் தாவி பறக்கிறது

,

கால்கள் கொண்டு கவனிக்கும்

அந்த சிலந்திக்கு

என் வேலை வேடிக்கை பார்ப்பது

அதன் வேலை வலை பின்னுவது

மாறி மாறி இருவரும்

கூலியின்றி

சுரண்டலின்றி

பிய்த்தலின்றி

பிடுங்கலின்றி

வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்

,

ஏதோவொன்று மாட்டுவதற்கான

வேலையும்

மாட்டப்பட்ட சங்கிலி வளையங்கள்

நெறிபட்டு விலகி முறிய முறிய

மீளேறி சிவனிக்கும்

கங்கின் வெம்மையில்

குளிர குளிரத் தடவப்பட்ட

தீக்களிம்பின் எரிச்சலும்

குறைவதற்கென நடந்து கொண்டிருக்கும் வேலைகள்

இன்னும் சில காலங்கள் நீடிக்கலாம்

தன் விபரக்குறிப்பைக் குறிப்பைக்

கொடுத்து வையுங்கள்

இருபத்து நான்கு மணி நேர

உறக்கமற்ற வேலை

உங்களுக்கும் கிடைக்கும்

+++

அடிப்பிடித்து கருகும் நெடி

அறை முழுக்க

சுற்றிக் கொண்டிருக்கும் போது

ஓரமாய் வைக்கப்பட்டிருந்த பானை

அடி மணலில் இருக்கும் நீரை

உறிஞ்சுவதை நிறுத்தவில்லை

,

சுற்றிக் கொண்டு காற்றடித்த

மின்விசிறியும்

சுழல்வதை நிறுத்தவில்லை

,

மூலையோரம்

சாய்த்து வைக்கப்பட்டிருந்த

ஒட்டடைக் கம்பைச் சுற்றி

வலைபின்னுவதை

எட்டுக்கால் பூச்சி நிறுத்தவில்லை

(உண்மையைச் சொல்லப்போனால்

அது எட்டுக்கால் பூச்சி அல்ல

ஏழரைக் கால் பூச்சி தான்)‌

,

குப்பைத் தொட்டிக்குள்

இறங்கும் எறும்புகள்

நிறுத்தாமல் ஊர்ந்தன

,

திருகிவிடப்பட்ட நல்லியிலிருந்து

தண்ணீர் சிந்தாமலும் இல்லை

காலையில் எழுந்திருக்கும் நேரத்தில்

இயக்கிய ட்யூப்லைட்

இன்னும் எறிந்துகொண்டே இருக்கிறது

,

வெளியில் கட்டிப்போட்டிருந்த

காயம்பட்ட நாய் மட்டும்

தூக்கத்தை நிறுத்திவிட்டு

தலையை ஆட்டிக்கொண்டு

வாடை பிடித்து

குரைத்துக் கொண்டிருக்கிறது

எலும்புத் துண்டைப் பார்த்து

வாலாட்டப் பழகிய

நாய் தானே அது

அப்படித்தான் இருக்கும்.

+++

கீறிப் பிளந்து கூடான

மரத்தின் தூண்

ஈரம் ஊறி

மச்சுப்போன வாடை வீசி

கை உயர்த்தி ஓலமிட

ஓசையைக் கடன் வாங்கியது

பளபளக்கும் சில்வர் நிற

பறவையிடம்

,

கிளைகளைப் பரப்பி

உயர்த்தின கைகள்

சுழி விழுந்து சுருண்டுள்ள

நெஞ்சுக்கூட்டின்

பால் தரும் முலைகளிடையே

கூடி கட்டிய இரட்டைவால் குருவியை

அடிக்க வராது

அப்படியே நிற்கிறது.

,

நெஞ்சில் அடித்து ஒப்பாரியிட

இடம் மாறிச் சென்ற

இரட்டை வால் குருவியைக்

கொன்றழிக்க

அதன் நினைவுகள் மீது

மரப்பட்டைகளைப் பூசி மொழுக

கலைகள் கற்றாக வேண்டும்

,

புண் விழுதுகளின் பக்குகளாக

நீட்டித் துருத்தும்

ஒவ்வொரு பட்டைக்கும் பின்னால்

குளிர குளிர ராவப்பட்ட

களிம்பு மருந்துகள்

தழும்புகளாகி

மேலும் கீழுமாக

இடையிட்டு

துளிர்த்து

சப்பளிந்து

சங்கார ஓவியமாகி

மொட்டின் காம்பில் கூடித் திரண்டு

சுரபி சுரப்பியென

சுரந்து கொட்டுகிற

மரக்குருதியைக் குடிக்கும்

அண்டை மரங்களின்

வேர்கள் வலுக்கிறது.

,

மரத்தைப் பிளந்து

நார்கள் முளைத்து

புறத்தே தாவும்

தேரையொன்று

கல்லைக் கடைந்து குதித்த

தேரையுடன்

வேர்களைக் கடித்துத் துப்பும்

கலைகள் சில பயில

குருதட்சணையுடன்

காத்திருக்க

காத்திருந்து காத்திருந்து வந்த

வேடனொருவனின்

கவட்டைக் கற்களில்

தலை முட்டி

கழுத்து குத்தி

சயனிக்கும் வேளை

கொண்டாட்ட நாட்களாகவோ

அல்லது

கொண்டாடும் நாட்களாகவோ

துக்ககரமாகச் சிரிக்கும்

*******

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *