சொட்டு சொட்டாக
அருந்தும் போதெல்லாம்
அறுந்து சொட்டுகிற
துளிகளுக்குள்
பெரிதாக ஏதோ இருக்கலாம்
–
மூன்று சிகப்பு நிற
ரோஜாக்களுடைய முட்கள்
குத்தும் இன்பம்
கடத்தப்பட்டு விட்டது
–
அந்த முட்களுக்கு
குத்தி விளையாட
வேறொரு பதார்த்தம் கிடைத்திருக்கலாம்
–
அறுத்து விட்ட முட்கள் மீதோ
ரோஜாவின் அழகின் மீதோ
எந்தக் குறையுமில்லை
–
அருகில் நின்று
அத்தனை நாட்கள் ரசித்த
உடைந்த பானையோட்டின்
மேனியை அறுக்கும்போதேனும்
காரணம் காட்டியிருக்கலாம்
*******
மரத்திற்கு பிடித்த
இரட்டைவால் குருவி நான்
அங்கு தான்
கீச்சிட கற்றுக்கொண்டேன்
பட பட இதய ஓசை
என் சிறகசைவில் கேட்டதை
இலைகள் சொன்னதும் கூட
அங்கே தான்
–
மரத்தின் வேர்கள் புடைத்த
அடிக்கால்களில்
கோடாரி நழுவி விழும் செய்தி
எனக்குத் தான்
முதலில் கொடுக்கப்பட்டது.
–
மரத்தினுடனான சந்திப்பும்
முழுமையாக கூடவில்லை
மற்றொரு மறுநாள்
மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய்
உதிரத் தொடங்கியதால்
வழிந்த கண்ணீரை
என் இரட்டைவாலால்
துடைத்துக் கொண்டு
பறக்கப் போக எண்ணும் நேரத்தில்
சிறகுகளின் மனம் உடைகிறது
மரத்துடனேயே
இருந்துவிடுகிறேன் என.
*******
தூய ஆன்மாக்கள் இரண்டின்
ஈரம் ஊறிய மனதைக் கலங்கப்படுத்தும்
குச்சியானேன்,
கலங்கிய ஆன்மாக்கள்
காற்றோடு காற்றாக
கரும்புள்ளி இட்டுக்கொண்டு
பட்டமாகிப் பறக்கிறது
–
குளங்களில் இருக்கும் மீன்கள்
ஒவ்வொன்றின் மீதும் விழுந்து
தண்ணீருக்குள் குழி விழ
சுற்றிக் கொண்டிருக்கும் குச்சிக்கு
பைத்தியம் பிடித்து விட்டது
–
யாரோ ஒருவர் எதிரிலிருக்கும்
எதிராளியின் பொச்சில் அடிக்க
குச்சியைத் தூக்குகிறார்
தடிப்பு பூக்குமளவு
சுளீரென அடி விழுகிறது
பௌவ்வ்வ்வ் என்று ஒலியிட்டுச் செல்லும்
இரயில் தண்டவாளக்கோடுகள்
உடலில் இடப்படுகின்றன
–
வேறொருவர் தன்னைக் காக்க
குச்சியெடுத்து சுற்றுகிறார்
சுர்ர்ர்ரென சிலம்பிக் கொண்டிருக்கும்
குச்சியால் இரண்டு பக்கத்திற்குமிடையில்
பிளவு ஒன்று விரிகிறது
–
மற்றொருவர் குச்சியை எடுத்து
புட்டத்தில் ஓங்கிக் குத்தி
கழிவறை அடைப்பு எடுக்கிறார்
பொத் பொத்தென மயிர் உருளைகள்
சாக்கடைக்குள் விழுகின்றன.
–
இன்னும் சிலர் வருகின்றனர்
போகும் வழியில் இருக்கும்
பச்சை மரங்களின் தளிர் இலைகளை
எகிறி அடித்துக் கொல்வதற்கும்
மீந்திருந்து உணவுப் பொட்டலத்தை
தூக்கி வந்து வாயால் பிரிக்கும்
நாயை விரட்ட தூக்கி எறிவதற்கும்
சிலந்தி வலைகளுக்குள் சிக்கியுள்ள
செத்த வண்டுகளை கீழே தள்ளுவதற்கும்
ஓய்ந்து நின்ற காற்றாடியைத்
திரும்ப சுழலவிட
சுகமாய் படுத்துக் கொண்டு
சாவியை(சுவிட்ச்) அடிப்பதற்கும்
பெதஸ்தா குளத்து நீரை கிண்டிவிட்டு
சுகமளிக்கவும்
குச்சி ஒன்று மூலையொரத்தில்
சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது
*******
தாடிக்குப் பின்னே எவரென்ற கேள்விக்குறி
என்னைக் குத்திக் கிழித்து
குறியின் அங்கமாகத் தொங்கும்
ஒரு புள்ளியைத் துளைத்து
உள்ளேறுகிறது
–
விடைத்துப் போய் உட்கார்ந்திருக்கும்
என்னெதிரே
இரண்டு தாடிக்காரர்கள்
சிரிக்கத் தெரியாதவர்களாக
பரட்டைத் தலையுடன்
புகைப்படம் எடுக்க உட்கார்ந்துள்ளனர்
–
சொட்டு சொட்டாய் ஒழுகும் மூத்திரத்தின்
வலி கூடிய இதத்தை
ரப்பர் குழாய் வழி இறக்கியவனும்
இரத்தம் கசியும் மார்பைப் பார்த்தும்
பிள்ளை கொடுத்தவனுமான
இவர்களை
எனக்குப் பிடிக்கிறது
–
காரணமின்றி பிடித்ததும்
காதல் கொண்டதும்
காரணம் கூறி கூறாமல்
பிரிந்ததுமான கதைகள்
ஓயாமல் காதுக்குள் விழுகிறது
–
மாற்றிக்கொள்ளும் துணியில் ஒட்டியுள்ள
அழுக்கைத் துவைத்து தொலைத்து
சட்டை மாற்றும் அறை
இன்னும் ஒதுக்கப்படவில்லை
கோட்டைப் பிடித்தவாறே
போட்டியிட்டு ஓடி ரிப்பன் தட்டி
கோப்பை அடித்து வேடிக்கைக் காட்டும்
நாதியற்று நடுக்காட்டில் நின்று
பழம் தின்னும் அணில்களைக்
ஓவென்று கத்தி விரட்டி விட்டு
வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்
எதிரில் இருக்கும் தோழமைகளை இருவரும்
இப்போது பார்த்து சிரிக்கின்றனர்
உதிர்ந்து கொட்டும்
தாடி மயிர்களை வருடிக்கொண்டே
அலமாரிக்குள் வைத்து அவர்களைப்
பூட்டிவிட்டேன்
********
இரவும் பகலுமாகி
அந்தி சந்தியாகி
பகலின் இரவாகி
சாயங்கால அந்தியாகி
வெளுத்த தண்டுவடத்தின்
கால்சியத் துகள்கள்
கரைகிறது.
–
உனக்கென நீற்றுப்பொடியை
வைத்துள்ளேன்
எப்போதும் கொடுக்க மாட்டேன்
கனவில் மட்டும் விதிவிலக்காகி
கொடுத்துவிடுவேன்
–
முத்தங்களின் இதழ் குவிவில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உடைந்து போன
எலும்பின் வனைவுகள்
நரம்புகளற்ற ரேகைகள்
கண்மூடி திறக்கும் கணத்தில்
வந்து செல்கிறது.
–
இருக்கச் சொன்னாலும்
இருக்கப்போவதில்லை
இருக்கச் சொல்லப்படவுமில்லை
இன்னொரு முறைக்கு
தடை விதிக்க
தள்ளாடி வழுக்கிய பின்
மழைக்கு கொஞ்சமும்
வளவளக்கும் தரைக்கல்லுக்கு
கொஞ்சமுமாக
பிஸ்கட்டுகளைப் போடுகிறேன்
கடிக்க சிரமமானால்
ரொட்டியை பிய்த்து போடுகிறேன்.
–
விக்கல் எடுக்க கட்டளைவிடாதே
குடல் புண்கள் தண்ணீரை
தடுக்கி விழச் செய்கிறது
விழுந்த தண்ணீருக்கு
சிலசமயம் இரத்தம் கூட வருகிறது
தூக்க முடியாமல்
தூங்க முடியாமல்
பொதி கட்டி சுமக்கும் மரங்களுக்கு
ரோஸ் நிற ஆடைக்குள்ளிருந்து
கையசைத்து மெல்ல கத்தி
டாட்டா காட்டி மறைவது எளிமை
*******
அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.