சட்டைகளில் உள்ள புள்ளிகளும்

சிலசமயம்

எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளும்

உயிர் வந்தது போல்

ஓடுகிறது

ஒவ்வொரு ஓட்டமும்

ஏதோவொன்றை பிடுங்கிச் செல்ல

இடைவெளியின் துளைகளில்

இரத்தம் கொப்பளித்து

குளிருடன் குப்பென வீசுகிறது

மூச்சை அடக்கவோ

விடவோ முடியவில்லை

சாளரத்தின் ஒளிகள்

சுற்றிச் சூழ்ந்து

என்னைக் காட்சியாக்கி

இம்சிப்பதால்

அவற்றை அடைத்துவிட்டேன்

சூரியனின் கதிர்களில் சில

ஊடுருவி ஒளிர்கிறது

வெக்கை இறங்க இறங்க

தோல்களை அறுத்துக் கிழித்து

நிர்வாணப்படுகிறேன்

துளைகள் குழிகளாகி

எஞ்சிய குருதியை

கசிய விட

செவ்வண்ணம் பூசுகிறேன்.

பிசுபிசுப்பில் ஒன்றுடன் ஒன்று

ஒட்டிப் பிணைந்துள்ள மயிர்கள்

கொத்துக் கொத்தாக விழுவதை

தரையால் தாங்கிக் கொள்ள

முடியாதிருந்ததோ என்னவோ

காற்றை ஓடவிட்டு

தூக்கிப் போட்டு அசைக்கிறது

++

வரைந்து முடித்து காட்டிய

அந்த சித்திரம்

ஓவியனின் நட்புக்குறி

அசல் உருவத்திற்கு

எப்படி வேண்டுமானாலும்

தெரிந்திருக்கலாம்

அதிலொன்றும் தவறில்லை

அழுத்திச் சொல்லும்

திராணியிழந்த 

அந்த நொடிக்குள்

அதிக மணிநேரங்கள்

ஒளிந்துகொண்டு 

கண்மூடி மூச்சுவிடும்

ஓய்வின் திருப்தியைத் தராமல் 

தொந்தரவாகத் தொடரும் கணிப்பை 

காலம் கழுத்தோரம் 

பச்சைக் குத்திவிட 

மறந்துவிட்டாலும்

சில நேரம் அவற்றை

நினைவாக்கி 

தெளித்து விடவும்

மறக்கவில்லை

தெளிப்பின் துளிகள்

தோலில் ஒட்டும் போது

சரீரத்தை மூடியிருக்கும்

சர்மத்திலெல்லாம்

உணர்ச்சிகளின் கண்களுடனான

குழிகளும் திட்டுகளும்

படர்ந்து நின்று

பைத்தியமாகி 

வாயோரத்தில்

கண்ணீர் சிந்தி

உள்ளுக்குள் முட்டுகிறது

வீக்கம் தாளாமல்.

++

காற்றின் அலையாட்டத்தில்

பறந்து வந்த

காகிதத் துணுக்குக்குள்

கொட்டியும்

சிதறியும்

குவிந்தும்

ஒழுங்கின்மையின் முழுமையான

ஒழுங்கோடு கிடந்த

எழுத்துகளுக்கு

எதிரினத்து உயிர்

பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

பென்சில்களாலும்

பரிசளிக்கப்பட்டிருந்த 

பால்பாய்ண்டு பேனாக்களைப் பறித்தும் 

எழுதப்பட்ட

மின்னஞ்சல் முகவரியிடமிருந்து 

காகிதம் பறந்து வந்திருக்கும்

வாய்ப்புக்கான சதவீதம்

எத்தனையாக இருக்குமென

ஒரே யோசனை

அந்த உயிருக்கு

இந்த மொழியை பழக்கப்படுத்தவும்

மின்னஞ்சல் முகவரியிடமிருந்து

கடிதம் பெறுதலும்

அத்தனை சுலபமானதல்ல

கண்முன் வந்த கிடக்கும்

காகிதத்தை கையிலெடுத்து

எழுத்துக்களைக் கொஞ்சம்

கோர்வையாக்கி

கொஞ்சும் மொழியையும்

வெறுப்பின் துளிக்கான ஆதாரத்தையும்

கேட்கும் பத்திரமான சொற்கள் 

உருவாக்கப்பட்டு விட்டன

சொற்களுக்கும் 

சோர்ந்து கசங்கிய

அலைச்சலின் நெடி வீசும்

காகிதத்துக்கும் உயிரூட்ட

அர்த்தமளிக்கும் 

பொருளீட்டும் வினைகள்

செய்யப்படும் போது தான்

அச்சொற்களின் இணைப்புக்கு பின்னே

புரியும் முயற்சியில் இறங்காத

எதிரினத்தின் பாசாங்குகள்

ஒளிந்து கொண்டிருக்கின்றன.

++

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *