செத்தபிறகு தான் தெரிகிறது

தெரிகிறதா? என்றால் 

ஆழ்ந்த இரங்கல்,

அனுதாபங்கள், 

அஞ்சலி என்ற குறிப்புகளும்

ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வாசகங்களும்

எனக்கு அப்பட்டமாகவே தெரிகிறது

,

நான் அமைதியாக செத்தவன்

செத்த பிறகும் சாகடிக்கும் 

சாப வரம்  எனக்கு அளிக்கப்பட்டதே இல்லை

நான் அமைதியடைந்து சாய்ந்தே சாகிறேன்

செத்து அமைதியடைகிறேன்

,

அனத்தலற்ற அமைதிவெளியின்

இருள் காண்பித்த

ஓர் அஞ்சலி குறிப்பின் நடுக்கம் 

இன்னும் குறைந்தபாடில்லை 

,

ஆன்மா சாந்தியடையட்டும் என முடிந்த

நெடுங்கட்டுரை முழுக்க 

அவருடன் நான் நிகழ்த்திய 

கொஞ்சல்களை பகிர்ந்திருக்கிறார்

,

ஆச்சர்யம் சூழ்ந்தது

மறதி வேறு மறக்கடித்து இருக்குமோ

என்ற குழப்பத்தில் கூட 

அவர் யாரென்றே தெரியவில்லை.

சாகடிக்கும் சாபம் கிடைக்கவும்

வாழ்வு அவனைக் கொன்றது

வாழ்விற்கு

என் ஆழ்ந்த இரங்கல்

,

வார்த்தைகளின் துணுக்குகள் கொண்டு

வாழ்வு என்மூலம் 

தன்னை சாகடித்துக் கொண்டது

வாழ்விற்கு

என் ஆழ்ந்த இரங்கல்

+++

அந்தப் பேருந்து

ஒரு சின்ன வகுப்பறையாகவே

இருந்தது.

ஏறும் போது வணக்கங்களும்

இறங்கும்போது நன்றிகளும் 

ஏகோபித்து விழுந்து

அதை உணர்த்தின

,

சாலைத் தூசுகளோடு சேர்ந்து

அந்த வார்த்தைகளும் பறந்தன

சிலரது சொற்கள் மட்டும் 

மண்டைக்குள் சென்று

ஏதோ செய்தது.

,

சாலையோரத்தில்

படர்ந்து கிடந்த

கரும்பச்சை நிற

செடிகளில் எல்லாம்

சிமெண்ட் தூசு

ஏன் இப்படி என கேட்டதற்கு

மூன்றரை வருடமாக 

மேம்பாலம் கட்டுகிறார்கள் 

இரண்டு வருடத்திற்கு மேலாக

பாதாள சாக்கடை எனச் சொல்லி

தோண்டி தோண்டி மூடுகிறார்கள்

அதன் சாட்சியே இந்தத் தூசி 

என சொன்னது அந்தச் செடி.

,

இத்தனையும் மாறிப்போனது

மாறுவதற்கு 

எவ்வளவு நேரம் பிடித்ததென

தெரியவில்லை.

கிழிந்த கவருக்குள் ஒடுங்கிக் கிடந்த

எனது செல்போன் 

குழாய்ப்பைக்குள் இருந்தது.

அதை எடுத்துப் பார்க்கவும் 

எண்ணமில்லை

,

எந்தத் தடங்கலுமின்றி

நேரம் பார்க்க 

கைக்கடிகாரம் ஒன்றை

இதுவரை எவரும்

பரிசளிக்கவுமில்லை

காலை நேரம் என்பது மட்டும்

பொதுப்படை.

,

சிமெண்ட் தூசு நிறைந்த 

செடிகள் எல்லாம் காணாமல் போனது

பனித்துளி விழுந்த 

பச்சையம் மினுங்கும்

குளிர்ச்சியான செடிகள் இருந்தன.

நான் வந்த சாலை

இது கிடையாது.

இதில் மேடேறி உள்ளது.

சுற்றிலும் தண்ணீர்

அதன்மேல் பூக்கள் கொழித்த செடிகள்.

,

எங்கு இருக்கிறோமென

எண்ணம் ஓடிக்கொண்டிருக்க

பேருந்தும் ஓடிக்கொண்டிருந்தது.

,

போய்க்கொண்டே இருந்த பேருந்தை

தடுத்து நிறுத்திய 

வேகத்தடையின் ஓரத்தில்

ஒரு பச்சைநிற போர்டு

அதில் ஏதோ எழுதியிருந்தது

எல்லாமே தமிழ் எழுத்துக்கள் தான்

பாதிக்கு மேல் அழிந்திருந்தது

அதை யூகிக்கும் நேரமும் 

கொடுக்கப்படாமல்

பேருந்து தடையைத் தாண்டி

வேகமெடுத்தது.

அப்போதும் நேரம் என்ன 

என்பது எனக்கு தெரியாது

அதைப் பார்க்கவும் தோன்றவில்லை.

சாலையின் வடக்கே சென்ற

பாதைக்குள் பேருந்து நுழைய

இருபுறமும் வெள்ளைப் பூக்கள்

மஞ்சள் கலந்த பச்சையோடு

வரவேற்றது.

பேருந்தும் போய்க்கொண்டே இருந்தது.

நானும் சலனமின்றி 

முன்னிருக்கையில் அமர்ந்தே இருந்தேன்.

+++

அங்கு ஒரே கூத்தும் கும்மாளமும் தான்..

நான்கு டயர்களும் 

தொந்தியில் விழுந்த எலுமிச்சை போல சுற்றுகிறது. 

,

நகர்ந்தோடும் பாதைகள் காட்டும் 

காற்றோட்டமான சாளரங்கள் திறந்த  

குங்குமம் பூசிய தீயணைப்பு கருவியும் 

நாமம் தீட்டிய முதலுதவி பெட்டியும் மாட்டிய சின்ன வகுப்பறை  

,

வாத்தியார் படிக்கட்டில் கால் வைக்கும் முன்பே

குட் மார்னிங் சார் என ஒருமித்த பேரலையும் 

வணக்கம் சார் என்ற சிற்றலையும் பாயும்

இங்கும் சிலர் புத்தகத்தைக் கையில் ஏந்தியுள்ளனர் 

,

இன்னும் சிலர் 

மந்திரம் சொல்லிக்கொண்டே ஐயர் 

மணமக்களிடம் அதை செய் இதை செய் என ஓத

பூம் பூம் மாடு மாதிரி 

தலையாட்டி இசைவது போல 

ப்ராக் பார்த்துக்கொண்டே 

எதையோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

,

ஒருபுறம் வகை வகையான வண்ண பாக்கெட்டுகள்

வாய்க்குள் தீர்ந்துகொண்டிருக்க

மறுபுறம் காதில் தொங்கும் தொங்கட்டத்தைத் தொட்டவாறு

பலமாக சிலர்  சிரித்துக் கொண்டிருந்தனர். 

இராணுவ இரகசியத்துக்கும் மேலான ரகசியங்களை  

காதில்  குசுகுசுத்துக் கொண்டிருக்கும் 

இவர்களெல்லாம் பயிற்சிக்கு செல்கின்றனர்

+++

அவனை காதலித்தோரெல்லாம் 

பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் ஒளிக்கும் 

பச்சைநிற புள்ளிக்குப் பின் 

ஒளிந்திருக்கின்றனர் 

இன்னும் சிலர் கிளப்ஹவுஸை 

ஹெட்போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவன் மட்டும் 

கையிலொரு மொபைலை 

எடுத்து பார்க்கவும் வைக்கவுமாக உட்கார்ந்திருக்கிறான் 

என் புத்தகம் மீதும் 

என்மீதும் விழுந்த ஈரக்காற்று 

இப்போது அவன் திசை நோக்கி நகர்கிறது

+++

நான் விலகிய இடத்தை

நீயும் பிரிந்து விட்டாய் 

அந்த இடத்தில்

நாம் பார்த்து 

குலைந்த போது இருந்த

ஆணியும் விழுந்து விட்டது

அதன் துவாரம் அப்படியே உள்ளது

யாரும் அதை வேறொரு 

ஆணி கொண்டு

அடைக்கவில்லை

ஒருநாள் அது‌மறக்கப்படும்

ஆனால் நினைவில் இருக்கும்

இருந்தாலும் கூட

நினைவிற்கே‌வராது

+++

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *