அந்த கடல்
மீன்கள் வாழ பழக்கப்பட்டது
வகை வகையான மீன்கள்
முட்களுடன் அலைகிறதை ஏற்றுக்கொண்ட கடலுடன்
விளையாடிப் பார்ப்பதும்
மீன்களை இழுத்து வந்து கரையில் போடுவதும்
டவுசர் தெரிய கைலி கட்டிக்கொண்டு
முள்ளாக குத்திட்டு நிற்கும் தாடியை
கொஞ்சம் கூட தடவாமல் நெஞ்சை முன்தள்ளி
படகின் பக்கம் செல்லும் பரதவர்களின் வேலை
,
இழுக்கும் போதெல்லாம் வலைக்குள்
மீன்கள் சிக்குவதேயில்வை
இப்போதும் இழுக்கிறேன்
இன்னும் மீன்கள் சிக்காததால்
,
அசையாடி உள்ளேறும் தண்ணீருக்குள்ளிருந்து
மீன்களின் மூச்சு ஏறியிறங்கி கூச்சலிடுகிறது
அப்பாவியான உருண்டை கண்களின்
குளிர்மையான வறட்டுப் பார்வையில்
கரைசேரும் வாழ்க்கைக்குப்பின்
முட்களற்ற பிண்டமான மீன்கள்
மண்தேடி வீழும் வாழ்க்கைப்படிக்குள்
திறந்த கண்களை மூடாமலிருக்கிறது.
000
கொப்புளங்கள் உடலெல்லாம்
பல்லி விட்டையாக உலர்ந்து
துருத்திக் கொண்டிருக்கின்றன
,
வடக்கே போகும் வழியிலும்
கொஞ்சம் வடகிழக்காக போனாலும்
தெற்கோரத்திலும் நீயிருக்கும் வடமேற்கிலும்
கொட்டிக் கிடக்கும் விட்டைகளை
அள்ளிப் போட்டு அப்புறப்படுத்த
எதைக் கொண்டு வருவதென்று ஒரே யோசனை
,
காந்தத்துண்டுகளைக் காலில் கட்டிக்கொண்டு
சிரைக்காத முகத்துடன் இங்குமங்கும்
ஓடித்திரிந்தும் ஒன்றும் ஒட்டவில்லை
,
உடல் முழுக்க பூத்திருக்கும் மொட்டுகள்
கவுச்சி வாடையைக் கக்கத் தொடங்கிவிட்டன
மொட்டுகள் விரியும்போது பிளக்கும் தோல்களின்
இராட்சத குரூரம் கொட்டும் செந்தேற்ற பிளவில்
சிறுசிறு புள்ளிகளாக ஒட்டிக்கொண்டிருக்கும்
நுண்ணியிர்களின் நகர்விலெழும் அலைக்காற்றின் ஓசை
நடுநடுங்க வைக்கிறது
000
அந்தக் கடையில் விற்கப்பட்ட
அன்பையும்
கனிவான சொற்களையும்
காதல் மொழிகளையும்
பரஸ்பர விசாரிப்புகளையும்
வாங்குவதற்கு நேரமில்லை
,
தேவை நிமித்தப்பாட்டில்
அவற்றை வாங்கலாமென கடைக்குச் சென்றால்
விற்பனைக்காரர்,
தருவேன் தரமாட்டேன் என்று வாய் திறவாமல்
தருவது போல் வந்து தராதவராக
தொடர்ந்து பகடியாடுகிறார்
தரமுடியாததன் காரணம் கேட்டதற்கு
கதவை மூடி எங்கோ சென்றுவிட்டார்
,
காரணமெதற்கு தரவில்லை
காரணம் வேண்டும் தராததற்கு என்ற
வீண் விவாதங்களின்றி
மீண்டும் நேரத்தை முடுக்கியோட
தயாராகின்றேன்
,
கடைவீதிகளின் வெளிச்சத்தில்
இன்றுவரை எனக்குள் ஒளிவீசும்
ஒற்றைக் கடைக்கு மீண்டும் சென்று
விலையென்ன? என்றொரு முறை கேட்க முடியாது
பார்த்துக் கொண்டிருப்பதில்
பகுதி பகுதியாக கிழிந்தோடுகின்றன நாட்கள்
,
பட்டியல் போட்ட உணர்வுகளின் குவியல்
விற்கப்பட்டதா? பதுக்கி வைக்கப்பட்டதா?
என்கிற யோசனையிலேயே
ஒவ்வொரு நாளும் தூங்குகிறது
காலையில் விழிக்கிறது
அலுவல் சென்று அப்படியே திரும்புகிறது
000
எத்தனையோ தொலைவிலிருந்து வரும்
துளித்துளியான நீரை
உள்ளிழுத்து பொசுக்கித் தள்ளும்
வெப்பத்தின் உறைவான
அந்நிலத்துடைய வேருக்குள் வேர் புகுத்தி
வளர்ந்து நின்ற காய்ந்த மரத்தின்
உயிர் சரடுக்குள் ஏதோவொன்று
எட்டிப் பார்த்தபடி இருக்கிறது
உற்றுப் பார்த்தால் மனித உருவம்.
அது யாராக இருக்கும் என்பதோ
அது யாராக இருக்கலாம் என்பதோ
அனாவசியமான யோசனைகள்
வெறுமனே எட்டிப் பார்க்கும் உருவம்
அருவமாகி களையும் நாட்களில்
அதனைப் பற்றிய நினைவுகள் சுழலாமல் இருக்க
அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு
மீண்டும் தரையைப் பார்த்தால்
துளி நீர் உள்ளிறங்கி பொசுங்குகிறது
,
அது என்று அழைத்திட முடியாத பேரழகின்
எதிர்ப்பால் குறிகள் பொசுங்கும் நீரின் ஆவியில் மேலேறி
தனது முகமூடிகளை போர்த்திக்கொண்டது
எனக்கு எப்போதும் மூடிவைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும்
நெளியும் புழுக்களின் உண்மையைத் தடவிக்கொடுப்பதிலேயே ஆர்வம்
,
யோசனைகள் அறுபட முகமூடிக்கு மேல் பூசப்பட்ட
அரிதாரத்தின் பளபளக்கும் கட்டமைப்பின் கரங்களை
என் கைகளின் மீதிருந்து விலக்குகிறேன்
எனது முகமூடிகளின் விரிசலில்
காய்ந்த மரத்தின் கசப்புகள்
உதிரி உதிரியாகக் கொட்டி விழுகிறது
000
அரசனாகவும் அகதியாகவும் தனியறை ஒன்றில்
எனது அரசாங்கத்தை அமைத்துக்கொள்கிறேன்
அங்கம் வகிக்கும் வேலையாட்கள் எவர்க்கும் சுய அறிவில்லை
ஆனாலும் ஆற்றல் மிக்கவர்கள்
,
ஆட்சியைக் கவிழ்க்கும் அரசாங்கத்தைக் களைக்கும்
பிரளய சொற்களை தன் பக்கங்களுக்குள் அடக்கியுள்ள
புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் சிறைபிடிக்கப்பட்டன
,
அவை எதிர்த்துப் பேசுபவை
என்போக்கில் என்னைச் செல்லவிடாமல் தடுப்பவை
கையில் தலையேந்தி உட்கார வைப்பவை
சிலநேரம் கண்ணீர் சொரிய உடைபவை
எனது வெறியை கோபத்தையெல்லாம்
தணியச் செய்பவை
கொடுங்கோல் ஏந்தி முதுகைக் கிழிக்கவிடாது
குறுக்கே வந்து கழுத்தினருகில்
குறுங்கத்தியை நீட்டுபவை
,
அவையெல்லாம் இப்போது கைக்குள்ளிருக்கும்
படைத்தளபதியால் சிறைபிடிக்கப்பட்டு விட்டன
மேசையில் இருக்கும் டெல் மடிக்கணினி எனது அமைச்சர்
தண்ணீர் வீரர்களை ஏவி ஆட்சியைத் தொடர்கிறேன்
கதவைத் தட்டி போரைத் தொடங்க சைகை செய்கின்றனர்
திறக்கப்பட்ட கதவைக் கடந்து அறைக்குள் வருபவருடன்
நான் பேசிய மறுகணம்
அரசாங்கம் கவிழ்ந்து அகதியாக்கப்பட்டேன்
000
அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.