பச்சைசேல் என்ற வயல்வெளிகள் ஒரு புறமும் அக்ரகாரம் மறுபுறமும், சூழ எழில் கொஞ்சும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கோவில். கோவிலின் பின்புறம் ஓடும் தாமிரபரணியின் ஆற்று நீரின் சுவை அமிர்தத்தையே மிஞ்சிடும்

இந்த கோவில்ல  மக்கள் கூட்டத்துக்கு பஞ்சமே கிடையாது. அதுலையும் என்ன பாக்குறதுக்குனே தனி கூட்டம் வரும் . இப்பக்கூட என்ன பாக்குறதுக்கு  தான் இவ்வளவு மக்களும் கூடியிருக்காங்க.

என்னோட பெயர் அரியநாச்சி. இங்க இருக்குறவங்க என்ன அப்படி தான் கூப்பிடுவாங்க. ஆனா என்னோட உண்மையான பெயர் இது கிடையாது. “யானை” இது தான் என்னோட நிஜமான பெயர்.உங்கிட்ட கொஞ்சம் நேரம் இருந்த என் கதைய சொல்லுறேன் கேக்குறீங்களா?

நான் பிறந்தது காட்டுல தான். எனக்கு ஒன்னறை வயசு இருக்கும் போது தான் நான் இந்த கோவிலுக்கு வந்தேன். அப்ப நான் ரொம்ப சின்ன குட்டியா இருந்தேன் என்ன வளத்தது இதோ இங்க உக்காந்திருக்காருல முருகன் அவருதான். ரொம்ப பாசமான மனுஷன். நான்னா அவருக்கு இஷ்டம். என்ன குழந்தை மாதிரி பாத்துக்கிடுவாரு. எனக்கு சாப்பாடு குடுக்குறது, குளிப்பாட்டுறது,அலங்காரம் செய்றது, என்னோட இடத்த சுத்தமா வச்சுக்கிறது இப்படி எல்லா வேலையும் ஒத்த ஆளா செய்வாரு மனுஷன். இவர மாதிரி வேலைபாக்க யாராலையும் முடியாது.

நாலுபுறமும் கருங்கல்லால எழுப்பபட்ட உயரமான மதில் சுவர்களுக்கு மத்தியில பிரம்மாண்டமான ராஜா கோபுர நுழைவாயில் வரவேற்க உள்ள வந்தா விஸ்தாளமான பிரகாரம் இருக்கும். அதுக்கு நடுநாயமா இருக்கு இந்த கோவிலோட மூலவர் சந்நிதில இந்த தலத்தில் மூலவர் கஜேந்திர வரத ராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி புஜங்க சயனராக ஆணைக் கருளியவராக பாம் பணையில் பள்ளி கொண்ட படி காட்சியளிப்பார்.

சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகல்பத்து உற்சவம் இப்படி எப்போதும் கோலாகலமா இருக்கும் இந்த கோவில் .

அப்பறம் சொல்லமறந்துட்டனே இங்க கிடைக்கிற லட்டோட சுவையே தனி. முந்திரி, உலர்திராட்சைலாம் போட்டு நல்ல நெய்விட்டு செஞ்சிருப்பாங்க, புளியோதரை, சக்கரை பொங்கல் கூட ரொம்ப ருசியா இருக்கும்.

கோவில பாத்தாச்சு இப்ப வாங்க என்னோட இடத்துக்கு போகலாம். அதோ தெரியுது பாருங்க அந்த உயரமான தகர கொட்டாய் அது தான் எனக்கான இடம். இங்க வசதிக்கு எந்த குறைவும் இல்ல. நல்ல காற்றோட்டமான இந்த கொட்டகைல எனக்கு வெக்கையே தெரியக்கூடாதுனு தகர கொட்டகைக்கு கீழ ஓலையால கூர வேஞ்சிருப்பாங்க. நா குளிக்கிறதுக்கு குட்டி குட்டியா நிறைய ஷவர் இந்த கொட்டகைல இருக்கு தெரியுமா? என்ன பராமரிக்கிற முருகனுக்கும், மணிக்கும் பக்கத்துலயே தான் ரூம்.

அதிகாலைல எல்லாம் எழுந்திருச்சு வந்து என்ன தடவிகுடுத்துட்டு தன்னோட பணிகளை செய்ய போயிடுவாரு முருகன். தினமும்  அரிசி,பாசிப்பயறு,கம்பு, புல்,உப்பு வெல்லம் எல்லாம் கலந்து வேகவைத்து கவளம் கவளமாக பிரித்து கொடுப்பாரு. பச்சை தென்னை ஓலை , வாழைப்பழம் இப்படி எனக்கான உணவுக்கு இங்க பஞ்சமே கிடையாது .

பரந்து விரிந்த காட்டில் பல மைல் தூரம் நடந்து உணவு தேடி சாப்பிடுற எங்களுக்கு ஒரே இடத்துல இருந்து சாப்பிட்டா எப்படி ஜீரனமாகும்? அதனால செரிமானத்துக்கான சூரணத்த எஙாகளோட உணவுல கலந்து  தருவாங்க. 

உயரமான கிளைகளை உடைக்க, நீர் அருந்த பயன்படவேண்டிய என்னோட துதிக்கை உணவு கவளங்களையும் வாங்க  தென்னைமட்டைகளையும் உங்கள், உங்களை போன்ற பக்தர்களை ஆசிர்வதிக்கவும் தான் பயன்படுது. இதுக்காக நாங்க எப்படி பழக்கப்படுத்தபடுறோம்னு உங்களுக்கு சொல்லட்டா..

என்ன போல புதிய யானைகளை பழக்க எங்கள சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கி யானைய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் எங்களுக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கியானை நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புதுசா வந்த நாங்க குச்சிய எடுக்கமாட்டோம். நாங்க எடுக்கற வரைக்கும் கும்கிகளும் எங்கள விடாது. புதுசா வந்த எங்கள தந்தங்களால் முட்டி நெறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அப்படி இருக்கும் அதுல அடிக்கிற அடி அப்படி பட்ட கம்ப வைச்சு தான் எங்கள அடிச்சு வெளுப்பாங்க.

அடிதாங்க மாட்டாம நாங்க பிளிருவோம், ரெண்டு கால்ல எழுந்து நிற்போம் ஆனா குச்சிய மட்டும் எடுக்க மாட்டோம். நாங்க குச்சிய எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் எங்கள விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குறமோ, அவனைதான் எங்களுக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே நாங்க  கட்டுப்படுவோம். அவன்தான் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு தலைமை பாகன். இப்படி தான் நாங்க எங்களுக்கான பாகனை தேர்வு செய்வோம்.

பாகனை தேர்வு செஞ்சதுக்கு அப்பறம் எங்கள பழக்க ஆரம்பிப்பாங்க. எங்கள பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு ,மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் எங்களோட பாகன் வருவாரு அவர பாத்து நாங்க கெஞ்சுவோம். நாங்க அப்படி கெஞ்சவும் கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா,கரும்பு வெல்லம் கிடைக்கும்னு  எங்களுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவாங்க. பாகனை கண்டாலே எங்க மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவாங்க. என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் நாங்க எங்க மேல யாரையும் ஏற விடமாட்டோம்.

கட்ட கடைசியா, என்னைக்கு நாங்க பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, எங்க முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்கிறமோ, அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் எங்க மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அதுதான் நாங்க முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும்.

ஒருவழியா எங்கள பழக்கினதுக்கு அப்பறமா எங்கள இப்படி கோவில்களில் கொண்டுவந்து விடுவாங்க. நாங்க இங்க எங்க பாகனுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.

இவ்வளவு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு ஆறடி அங்குசத்துக்கு பயப்படுறீங்களேனு எங்கள பாத்து நீங்க கேட்கலாம். என்ன பண்ண எல்லாம் இந்த வயிறு படுத்துற பாடுதான். எங்களோட உடல் எடைக்கு தகுந்தார் போல உணவு அதிகமா தேவைப்படும், அதிக அளவு தண்ணீர் , நீண்ட தூர நடை இப்படி எங்களுக்கான தேவைகள் நிறைய இருக்கு. நாங்க பாகன் சொல்லுறத கேட்டா தான் எங்களுக்கு தேவையானது குறைந்த அளவாவது கிடைக்கும். அதனால தான் நாங்க பாகன்களுக்கு அடிபணியிறோம்.

மனுஷங்கள போலவே எங்களுக்கும் தனிதனி குணாதிசயங்கள் உண்டு. எங்களுக்கும் விருப்பு வெறுப்புகள் தனிதனி எங்களில் சிலருக்கு அவங்க பின்னாடி யாரும் நடந்த பிடிக்காது, பாகனை தவிர வேற யாரும் எங்கள தொடுவதோ, எங்கிட்ட வருவதோ பிடிக்காது.

முன்னதாக ஒரு சமயம் எனக்கு மதநீர் வழிய ஆரம்பிச்சது. மதநீர் அப்படினா என்னனு தான கேக்கிங்க? இணை சேர்க்கைக்கான ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது எங்களுட கண்ணுக்கும் காதுக்கும் இடையிலிருந்து நீர் வடியும், மதக்கண்ணும் வீங்கி இருக்கும். அப்படி இருந்தா எங்களுக்கு மஸ்த் பிடிச்சிருக்குனு சொல்லுவாங்க. பொதுவா இந்த மஸ்த் ஆண் யானைகளுக்கு தான் பிடிக்கும். என்ன போல பெண் யானைகளுக்கு பிடிப்பதில்லை. மதநீர் மட்டும் தான் வடியும். ஆண் யானைகள் அளவுக்கு இருக்காது.

அந்த சமயத்தில மணி இருக்கான்ல கோவிலுக்கு வந்த சிலர் கிட்ட பணம் வாங்கி கிட்டு என்ன புகைப்படம் எடுக்க விட்டான். அந்த கேமராவேட வெளிச்சம் தாளாமல் எனக்கு கோவம் அதிகமாகிட்டு. ஏற்கனவே இணைச்சேர்கைகாக நான் ஏங்கி இருக்கைல இப்படி என்ன கஷ்டப்படுத்துனா என்ன செய்ய முடியும் சொல்லுங்க? அதனால தான் என் தும்பிக்கையால போட்டோ எடுத்தவனை தள்ளி விட்டேன். ஆனா பாருங்க என்னோட கெட்ட நேரம் அவன் பின்மண்டைல அடிபட்டு அந்த இடத்துலயே இறந்துட்டான். உடனே அங்க இருந்தவங்க யானைக்கு மதம் பிடிச்சிட்டுனு சொல்லி கத்திக்கிட்டே ஓட ஆரம்பிச்சாங்க தெரியுமா.

அந்த நேரம் எங்க இருந்தோ ஓடிவந்த முருகன் தான் என்ன  தடவிகுடுத்து சமாதானம் படுத்துனான். நான் இயல்பு நிலைக்கு திரும்புறதுக்குள்ள எனக்கு கொலைகாரன் பட்டம் குடுத்துட்டாங்க

அப்பறம் கொஞ்ச நாளைக்கு யாருமே என்ன பாக்க வரல. நான் தனியா தான் இருந்தேன். அவ்வளவு ஏன் முருகன் கூட எங்கிட்ட ஒரு வித பதட்டத்தோட தான் பழகுனான். இப்படியே நாட்களும் கழிஞ்சது. சில மாதங்களுக்கு அப்பறமா மறுபடியும் மக்கள் என்ன பாக்க வந்தாங்க. ஆனா இந்த முறை யாரும் எனக்கு பழம்,தேங்காய் குடுக்க கூடாது, என் கிட்ட வந்து புகைப்படம் எடுக்க கூடாதுனு கண்டிப்போட சொல்லிருந்தாங்க.  எல்லாரும் தூரமா நின்னு என்ன பாத்துட்டு போவாங்க.

இப்ப தான் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா சரியாகிட்டு வருது ஆனா அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. என்னாச்சுனு தான கேக்கிங்க.

இது புரட்டாசி மாதங்கிறதால கோவில் முழுக்க வண்ண வண்ண விளக்குகளால அலங்காரம் தோரணங்கள தொங்கவிட்டு இருந்தாங்க. அந்த விளக்குகளுக்கு கரண்டு பாச்சுற ஓயர் ஒன்னு என்னோட கூரை மேல இருந்த ஓலைல உரசினதால தீ புடிச்சி எரிய ஆரம்பிச்சிடுச்சு. முருகனும் மணியும் சுதாரிக்கிறதுக்குள்ள தீ வேகமா பரவி என்ன சூழ்ந்துருச்சு. என் காலுல இருக்குற சங்கிலி என்ன வெளிய போகவிடல. கொழுந்துவிட்டு எரிகிற தீக்குள்ள மாட்டிக்கிட்டப்போ என் கண்ணு முன்னால அந்த கானகம் தான் வந்து போச்சு. நா ஆசப்பட்ட காட்டுக்கு என்னால போகவே முடியலயேனு வருத்தமா இருந்துச்சு .

தீ கொஞ்ச கொஞ்சமா என்ன நெருங்கி என்னோட உடம்புல பரவும் போது நான் எப்படி கத்துனேன் தெரியுமா! இந்த கோவில்ல இருக்குற பெருமாள் முதலைகிட்ட இருந்தது யானைய காப்பாத்துன மாதிரி என்னையும் இந்த தீக்கிட்ட இருந்து காப்பாத்திட மாட்டாறானு ஏங்குனேன்.

ஆனா அந்த கடவுளால கூட முடியல. தீ என்னோட உடல் முழுவதும் பரவவும் தடிமனான என் தோல் கூட தீயில கருகிடுச்சு.

ஒருவழியா தீயணைப்பு துறைல இருந்து வந்தவங்க என்ன காப்பாத்துனாங்க.

ஒரு பக்கம் முழுவதுமா வெந்து தோல் இல்லாம இருந்தேன். முருகன் தினமும் என்ன குளிப்பாட்டி ரசிச்சு ரசிச்சு படம் வரையிற என் காதுல ஒன்னு இப்ப இல்லை. முழுவதுமா எரிஞ்சு போச்சு. நான் நடக்கும் போது முன்னும் பின்னுமா எங்கூடவே ஆடுற என்னோட வால் தீயில கருகி இப்ப குச்சியாட்டம் இருக்கு.

எனக்கு வலி தாங்கல. என்னென்னவோ மருந்துலாம் என் மேல போடுறாங்க. ஆனா எரிச்சல் மட்டும் அடங்கவே மாட்டுக்கு.

திடீர்னு ஒரு வலி வந்தது. அந்த வலி தாங்காம நான் என்னோட கண்ண மூடுனேன். நான் இத்தன நாள ஆசைபட்ட என்னோட கனகத்துல நான் நின்னேன். சுத்திலும் உயரமான மரங்கள். செடி, கொடினு பார்க்கவே பச்சை பசேல்னு இருந்துச்சு. ஒருமரம் விட்டு ஒரு மரம் தாண்டிய படி குரங்குகள் சேட்டை செய்யுது. பளிங்கு கண்ணாடி மாதிரி ஓடுற ஆறுல என்னை போல ஏறாளமான யானைகள் கூட்டமா வந்து தண்ணீர் குடிக்குது. எனக்கு பின்னால ஏதோ ஒரு சத்தம் கேட்டது. என்னனு திரும்பி பாத்தா சில மயில்கள் அங்க நின்னு கூவுச்சு. கிளிகளும் இன்னும் சில பெயர் தெரியாத பறவைகளும் கூட வானத்துல பறந்துட்டு இருந்துச்சு.

அந்த கானகத்தோட அழகுல நான் என்ன மறந்து நிக்கிறப்ப யாரோ என்ன அரியநாச்சினு கூப்பிடுறமாதிரி இருந்துச்சு. திரும்பி பாத்தா நான் இறந்துட்டதா சொல்லி முருகன் கத்தி அழுகுறான். மணியும் அவன்கூட சேந்து அழுகுறான்.

எனக்கு என்ன ஆச்சுன்னு புரியிற்றதுக்குள்ள என்ன பாக்க மனுஷங்க கூட்டம் கூட்டமா வந்துகிட்டு இருக்காங்க.

எல்லாரையும் பொருத்தவரை நான் இறந்துட்டேன். ஆனா கால்ல சங்கிலி இல்லாம கானகத்துல திரியிற விடுதலை எனக்கு கிடச்சிருச்சு.

000

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *