பூக்கடையிலிருந்து மதியம் அடிச்சி புடிச்சு மார்க்கெட் வசூலுக்கு பாண்டிச்சேரி பஸ் ஏறி உட்கார்ந்த போதுதான் அன்புவுக்கு அல்லையில் கொஞ்சம் மூச்சடங்கியது போல் இருந்தது. கூட வேலை செய்கிற மூர்த்தி அன்றைக்கு வேலைக்கு வரதாதால் அவன் தூக்கும் பூ மூட்டைகளையும் சேர்த்து அன்புவே தூக்கவேண்டியிருந்தது.

  காலையிலேயே தலைக்குள் இரண்டு ஆள் கணத்தை ஏற்றி வைத்தது போல்  இருந்தது. விசேஷ நாட்களில் எறும்பு புற்றுக்குள் ஓடுவது போல சம்சாரிகள் பூ மூட்டையோடு மார்க்கெட்டுக்குள்  வந்தபடியே இருப்பார்கள். நிமிடத்தில் இறங்கி ஏறும் விலைக்கு தகுந்தார் போல உள்ளூர் வியாபாரிகள் ஈ மொய்ப்பதை போல  பூ வாங்க மார்க்கெட்டுக்குள் பறந்துக்கொண்டிருந்தார்கள். மார்க்கெட்டுக்கு வெளியில் இருக்கும் டாய்லெட் தொட்டி நிரம்பி அத்தோடு சாக்கடை நீரும் கலந்து உள்ளே வரும் படிக்கட்டில் வழிந்துக்கொண்டிருந்தது. அதைக்கூட சகித்துக்கொள்ள முடியும் ஆனால் அத்தோடு வாடிய பூக்களும் கலந்து போகையில் கால் வைக்கவே அருவருப்பா இருக்கும். வெளியூர்களுக்கு பஸ்ஸில் காலை பத்து மணிக்குள்ளே எழு எட்டு முறை மூட்டை ஏற்றிக்கொண்டு போய் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் மார்க்கெட்டுக்குள் உள் நுழையும் போதும் அவனையறியாமல் ஒரு அசூயை வந்து அவன் உடம்பில் ஏறிக்கொள்ளும்

மார்க்கெட்டிலிருந்து மாடவீதி வழியாக வண்டி ஒட்டு போது எல்லாம் அவனுக்குள் ஒரு எரிச்சல் தலைக்குள் ஏறி தாண்டவாடும். அது எதிரில் வருபவர்கள் மேல் வண்ட வார்த்தைகளாக வந்து விழும். அறுவது கிலோ  மூட்டையை தலையில் வைத்து பஸ்ஸின் பின் பக்க ஏணியில் ஏற்றும் போது நடு முதுகு வின்னென்று அழுத்தும் வலி தாங்க முடியாமல் கண்களில் தானாகவே தண்ணி கலங்கும். அந்நேரங்களில் எல்லாம் உள்ளுக்குள் விதியை திட்டிக்கொண்டிருப்பான்   

இந்த ஈனங்கெட்ட பய வராதாதால் எனக்கு இவ்வளவு அலைச்சல் என்று இரண்டாவது மூட்டைய ஏற்றியவாறே மூர்த்திக்கு போன் போட்டான். ரிங் போய்க்கொண்டே இருந்தது அவன் எடுக்கவே இல்லை. எரிச்சல் அடைந்த அன்பு மூட்டையை போட்டு விட்டு மலையை பார்த்து காரி துப்பினான். அம்மாதிரி நேரங்களில் கடவுள் மீது அருவருப்பும்,குற்ற உணர்வும் மாறி மாறி அவனுக்குள்  அலைக்கழிக்கும்.மொத்த மூட்டையும் பஸ் டாப்பில் தூக்கி போட்டு விட்டு வண்டி எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் ஆள் அரவற்ற ரயில் பாலத்துக்கு போய் தனியாய் உட்கார்ந்து ஒரு தம்மை அடித்தான். கொஞ்சம் நிதானம் அடைந்தது போல உணர்ந்ததும் அப்படியே மலையை பார்த்தான் அன்று கொஞ்சம் வானம் மந்தகாரமாக இருந்தது. மலையில் கரு மேகங்கள் கடந்து போய்க்கொண்டிருந்தது. மேகங்களை உரசி போகிற மாதிரி ஒரு பறவை கூட்டம் கீழ்நாத்தூர் ஏரிக்கு போய்க்கொண்டிருந்தது. ஏனோ அவனையறியாமல் கையெடுத்து கும்பிட்டான்.

மார்க்கெட்டில் பனிரெண்டு மணிக்கு கூட்டம் குறைந்த போது அப்படியே போய் சாயலாம் போல இருந்தது. ஆனால் ஓனர் மாச பட்டி இறக்க சொன்ன போது கோவத்தில் கடைக்குள் அடுக்கி வைத்திருந்த சாமந்தி கூடையை காலால் எத்தி தள்ளி விட்டு கடையை விட்டு வெளியேறினான்

சிவாஜி குளத்துக்கு எதிரே இருந்த ஒரு டீ கடையில் மறுபடியும் ஒரு தம்மு அடித்தான். வீட்டுக்கு போலாம் என்று வெளியேறும் போது தான் சைக்கிளின்  மேல் வவுத்தான் மாமா ஈர்க்குச்சி தலையை சொறிந்தபடி சிவாஜி குளக்கரையில் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்த பொங்கல் பானைக்கு பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டிருந்தார்.

முகமெல்லாம் வெய்யிலில் வரட்டி தட்டின சானமாட்டாம் திட்டுதிட்டாய் வெளிறிப்போயிருந்தது.அவர் அருகே போய் நின்றதும்

”வா மாப்ள உன்னத்தான் பாக்க காத்திட்டு இருந்தேன் எப்படியும் மதியம் ஆனா இந்த டீ கடைக்கு வருவேன்னு உட்கார்ந்திரேந்தே மாப்ள” என்றார்

”எதனா வேலையா மாமா?” என்றதும்

”இல்ல மாப்ள பழையபடி குள்ளம்மா காணாமா போயிட்டா மாப்ள”. என்று சொல்லும் போதே அவரை அறியாமல் அழுது விட்டார். பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்ததும் அவரை யானை கட்டி தெரு பக்கமாக கூட்டி கொண்டு போனான்

அவர் இருந்த கோலமும் முக வாட்டமும் பார்த்தா இன்னும் சாப்பிடலன்னு அவனுக்கு தெளிவா தெரிந்தது

”மாமா நீங்க எதுவும் கவலைப்படாதிங்க எப்படியும் மலை சுத்துற பதையிலத்தான் எங்கனாவது உட்காந்து இருக்கும். நானும் போயி தேடி பார்க்குறேன் நீ கவலைப்படாம வா ஏதாவது சாப்டலாம்” என்றதுக்கு வவுத்தான் மாமா, வேணாம் என்று தலையாட்டி விட்டு வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் 

அதற்குள் பக்கத்து கடை பையன் பட்டி சீட்டை கொடுத்து. ’உன்ன ஒனரு வசூலுக்கு பாண்டிச்சேரிக்கு போவ சொன்னாரு. அப்புறம் எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து பணம் வாங்காம வர வேணான்னு சொன்னாரு’ என்றதும்

அன்புவுக்கு ஆத்திரம் கழுத்து முட்ட அந்த பையனிடம்,

”ங்கோத்தா இவனுக்கு முத்திரம் பெய்ய கூட வெளிய வரகூடாது அதுக்குள்ளே அவ வீட்டு பீரோவுல பணம் கொறஞ்சுடும்” என்று திட்டிவிட்டு

’மாமா நீ வீட்டுக்கு போ நாளைக்கு பாக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டே பைக்கை திருகினான்

கடையிலிருந்து பஸ்டேண்ட் போறதுக்குள்ள ஆறேழு முறை மூர்த்தி போன் போட்டபடியே இருந்தான்

ஜன்னல் ஓரமாக சீட்டில் உட்கார்ந்து ரோட்டை பார்த்தபோது மூர்த்தி வருவது தெரிந்தது. அவனை பார்த்தவுடன் கண் எரிகிற அளவுக்கு கோவம் தலைக்கேறியது. ஆனால் ஊள்ளேரிய கோவம் வார்த்தைகாளாக வராமல் தொண்டைக்குள்ளே சிக்கிக்கொண்டிருந்தது. மூர்த்தி சிரித்தபடி ஒரு சீட்டை எடுத்து கொடுத்து விட்டு யாருக்கும் தெரியாமல் காதோரம் வந்து அதை சொன்னான். கோவத்தில் அவன் சொன்ன வார்த்தை ஒன்று அவன் காதுக்குள் போகவே இல்லை. வண்டி நகர நகரத்தான் ஒவ்வொரு சொல்லாக கோர்த்து  பார்த்தான். போனை எடுத்து மூர்த்திக்கு போட்டான். அவன் போனை எடுத்த கணம்   

வாய் வரை வந்து விட்டது ஆனால் ஏதோ ஒன்று தடுக்க கேட்காமல் போனை ஆப் செய்துவிட்டு ஜன்னல் பக்கமாக ஓடும் நிலங்களையே பார்த்துக்கொண்டு வந்தான் அன்பு.முன் சீட்டில் நிறைமாத கர்ப்பிணியும், அவளுக்கு பக்கத்தில்  இரண்டு வயசு குழந்தையோடு ஒருவரும் சிரித்து பேசிகொண்டிருந்தார்கள். அதை பார்த்தவனுக்கு அவளுடைய சாடை குள்ளம்மாளை போலவே இருந்தது. ஏனோ அவனையறியாமல் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த மலையை பார்த்து கண் மூடி பிரார்த்தித்துக்கொண்டான்.

செஞ்சி எல்லையை தொடுவதற்குள் பத்து தடவைக்கு மேல் போன்  செய்துக்கொண்டே இருந்தான் மூர்த்தி. போனை எடுக்கவே இல்லை. அதுவும் இல்லாமல் தன்னை இந்த வேலை செய்ய சொல்கிறானே என்ற கோபம் தலைக்கேறியது. பேன்ட் பையிலிருந்த பேப்பரை எடுத்து வீசி விடலாம் போல் இருந்தது.

திண்டிவனம் பக்கம் ஒரு வாரம் அடித்த மழை இன்று தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ள காடாக இருந்தது. செஞ்சி  மலைகளில் உருட்டி அடுக்கி வைத்த பாறைகளில் ஊத்து எடுத்து கசிந்து இறங்கி கொண்டிருந்தது. பஸ் ஒரு பாலத்தை தாண்டியத்தும் மழை வெள்ளம் ரோட்டை பிளந்து வாகனம் போகாத அளவுக்கு சாரையாக வண்டிகள் நின்று விட்டிருந்தது. பஸ்சிலிருந்த சனங்கள் எல்லாம் இறங்கி வெள்ளைத்தை பார்க்க ஓடினார்கள் .

ஆனால் அன்புக்கு இதில் எதுவும் நாட்டமிலாமல் இறங்கி ரோட்டை ஒட்டியுள்ள ஆலமரத்து பக்கம் போனான். விழுதுகள் பரந்து இருக்கிற மரத்தக்கடியில் அருவாளோடு அய்யனார் வெறிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார். மரத்தில் உள்ள விழுதுகள் எல்லாம் அவனுக்கு குழந்தையின் தொப்புள் கொடி போல காட்சி அளித்தது. அய்யனார் கோயிலுக்கு கீழே இருந்த கன்னி மாடத்தில் எப்போதோ ஏற்றி வைத்த அகல் திரி நனையாமல் இன்னும் எரிந்து படி இருந்தது. அதை பார்த்தவுடன் திக்கென ஒரு கணம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பச்சிலை குழந்தையை கையில் வாங்கிய காட்சி அவன் நினைவுக்குள் உறைத்து குத்தியது.

சித்திரை மாத பெளர்ணமிக்கு மலை சுற்றும் பாதையில் ஜீஸ் கடை போட்டு வந்த ஒரு இரவு பெரும் வருமானத்தில் இரண்டு குவாட்டரை சேர்த்து இழுத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தான் முருகனின் அப்பா வவுத்தான் மாமா  வீட்டு கதவை  தட்டினார். எழுந்து வெளியே வந்து பார்த்தபோது நிலவு மேற்கில் சரிந்தபடி வெளிச்சத்தை பிரகாசித்திருந்தது

  இரண்டு நாள் கிள்ளாமல்  விட்ட மஞ்சள் சாமந்தியாய் அவர் முகம் வாடிக்கிடந்தது. அதை பார்த்தவனுக்கு போதை தலையிலிருந்து கொஞ்சம் இறங்லியது போல் இருந்தது.

”வா மாப்ள பெரியாஸ்ப்பட்டல் வரைக்கும் போயிட்டு வரலாம்” என்று எந்த உற்சாகமும் இல்லாமல் சொன்னது அன்புவுக்கு ஏதோ போல் இருந்தது. மூஞ்சை கூட துடைக்காமல் அவர் சைக்கிளின் பின் கேரியரில் உட்கார்ந்து போக ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று முறை கேட்ட பிறகும் அவரிடம் எந்த பதிலும் இல்லாதாதால் அன்பு முருகனுக்கு போன் போட்டான்

”என்ன மச்சான் ஆச்சு?” என்றதுக்கு,

”ஒண்ணுமில்ல மச்சான் உன் தங்கச்சியை ஆஸ்பிட்டலுக்கு கூட்டியாந்திருக்கம் அதான் அப்பாவும் நீயும் இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்குன்னு கூட்டி வரக்சொன்ன”

”நேத்தே வந்து  பார்த்தன் மச்சான் நீ பவுர்ணமி கடைக்கு போயிட்டனு சொன்னாங்க”

’சரிடா’ என்று போனை அழுத்தியதும்

எழுத்து மண்டபத்துக்கு எதிரில் இருக்கும் ஆலமர கூட்டத்துக்கு பக்கம் சைக்கிளை நிறுத்தினார் வவுத்தான் மாமா.

அந்த இடம் ரோடு போடுவதற்கு முன்பிருந்தே ராத்திரியில் யாரும் அதற்குள்ளே போக மாட்டார்கள். அப்படி மீறி போகிறவர்கள் உள்ள இருக்கற கன்னிமாரு சாமி காவு வாங்கிடும்னு சின்ன வயசுல சொல்லுவாங்க. மாடு உறுப்பு போட்டால் மட்டும் அதை பால் மரத்தில் கட்டுவதற்க்காக பகலில் ஒன்றிரண்டு பேர் போவதை பார்த்திருக்கிறான்

ஆல மர தோப்புக்குள் போனவர் கொஞ்ச நேரமா வராமல் இருந்தது அன்புக்கு கிலி வந்தது போல இருந்தது. அதுவும் இல்லாமல் வானில் நிலவு மறைந்திருந்தது. இருட்டில்  தனியாக ரோட்டில் நின்றுக்கொண்டிருந்தான்   போதை வேற மறுபடியும் தலைக்குள் ஏறி சுற்றுவது போல் இருந்தது.

முருகனும் அன்பும் அஞ்சாங் கிளாசில் ஏறி வாய்க்காலில் பள்ளம் தோண்டி மூத்திர போட்டி போட்டதிலிருந்து நண்பர்கள். அதுவும் இல்லாமல் ஒரு செம்பு தண்ணி குடித்து அதை வாய் வழியாகவே அந்த செம்பு நிறைய திருப்பி எடுப்பான். வேப்ப கணுவ வைச்சி கிணறு தோண்ட ஊத்து நாடி பார்ப்பான்   முருகன். அதை பார்த்தலிருந்து அன்புவுக்கு சாகசமான நண்பன் பக்கத்திலிருப்பது ஊருக்குள் கெத்தாக இருந்தது. அதன் பிறகு முருகனுடைய சாகசங்களில் அன்பு கூட இல்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை

முருகன் படிப்பை விட்டு மெட்ராசுக்கு ஓடிய சாகசத்தில் இருந்து அங்கு பதினைந்து வருடம் வேலை செய்த இடத்திலே படுத்து எழுந்து மீன் பாடி லாரியை ஒட்டியவரைக்கும் அன்புதான் அவனுக்கு கையால் ஏதோ அடித்து பிடித்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு கல்யாணத்துக்கு ஊர் திரும்பிய போது கூடவே அன்புவும் ஊர் வந்து சேர்ந்தான்

முருகனுக்கு பொண்ணு பார்த்திலிருந்து மறு வீடு அழைத்து வைக்கும் வரை அன்புவுக்கு  நண்பனை தாண்டிய ஒரு உள்ளுறவை முருகன் தாராளமாய் தந்திருந்தான்.

முருகனின் மனைவி குள்ளம்மாளை அண்ணி என்று கூப்பிட்டு கொண்டிருந்தவன் பாப்பா என்று அழைத்த பொழுதுதான் அவன் மனசுத்துக்குள் ஒரு நிறைவை அளித்தது. அதை ஊர் சனம் மெச்சுகிர அளவுக்கு வலைகாப்புக்கு பொறந்த சீர்க்கு கொஞ்சமும் குறையில்லாமல் அத்தனையும் அன்பும் செய்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்

புள்ளதாட்சியா இருந்த குள்ளம்மாவுக்கு ஜுரம் வந்தபோது நேந்துகிட்டு கன்னி கழியாத பையன வச்சி கிணத்து மேட்டுல பழம் பொறி அவுளு வெத்தல பாக்கு கருவமணிய வைச்சி பச்ச படையல் போட்டு குள்ளம்மாளுக்கு கொடுத்து அனுப்பினான் அன்பு.

ஆல தோப்புக்குள்ளயிருந்து வெளிய வந்த வவுத்தான் மாமா விழுதுளிருந்து அவுந்து கீழே விழுந்திருந்த ஒரு மாட்டு உறுப்பை காலால் எத்தி தள்ளிவிட்டு சைக்கிளை நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

ஏதோ சகுனம் தப்பி போவது போல நினைத்தான் அன்பு.

குபேர லிங்க பள்ளம் இறங்கி கன்னிமார் ஓடையை தாண்டும்போது தான் வெவரத்தையே சொன்னார்

”திக்கெல்லாம் அலைஞ்சி  திரிஞ்சி ஊர் வந்து சேர்ந்தாநேன்னு இப்பத்தான் கொஞ்சம் நெஞ்சு ஈரமாயிருந்தது அதுக்குள்ளே இந்த கண்ணிமாருக்கு பொறுக்கல அவளுக்கு இட்ட படையலில ஒரு வருஷம் கூட தப்பாத்தாத்தான் போட்டிட்ட்டுருக்கேன் இருந்தாலும் ஏ எங்கள இப்படி சோதிக்கிறாள்னு தெரியில” என்று பொலம்ப ஆரம்பித்துவிட்டார். அதற்குள் வண்டி ஓட்ட முடியாமல் அன்புவை ஓட்ட சொல்லி விட்டு தலை தொங்கியபடி பின் கேரியரில் மவுனமாக உட்கார்ந்து வர ஆரம்பித்தார்

ஆஸ்பித்திரியில் சைக்கிள் ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தும் போது சீட்டுக்கடியிளிருந்து ஒரு மஞ்ச வையை உருவி வெளியே எடுத்தார் வவுத்தான் மாமா.

அன்பு குழப்பமாக அவர் பின்னாடியே  நடந்து போனான்

பிரசவ வராந்தாவில் ஏழு எட்டு பேர் புள்ளையை தரையில் ஒரு போர்வையை  மட்டும் விரித்து போட்டபடி படுத்து கிடந்தார்கள்

குள்ளம்மா அந்த வராந்தாவின் மூலையில் அவள் மட்டும் வயிறு பாரம் இறங்கி தனியே கிடந்தாள்

அன்பு சுற்றும் முற்றும் முருகனை தேடிக்கொண்டிருந்தான்

”ஏப்பா கையெழுத்தை போடுப்பா விடியறதுக்குள்ள எல்லா பார்மையும் சரி பண்ணத்தான் அடுத்து வர்றவங்கள உள்ள சேக்க முடியும்” என்று முருகனிடம் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு நர்ஸ்.

மார் வரை வளர்த்திருந்த தாடியில் ஒரு பிச்சைக்காரன் போல அவளிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான் முருகன் 

”அவ கண்ணு முழிச்சி ஒரு தடவ பார்த்துட்டாளுனா நா எடுத்துட்டு போயிடுறேன்” என்று உடல் நெளிவால் சாகசங்களை காட்டிக்கொண்டிருந்தான்

அவள் படம் எடுத்த நாகம் போல அசையாமல் சொன்னதையே சொல்லிக்கொன்டிருந்தாள்.

வவுத்தான் மாமா குள்ளம்மாவின் பக்கம் போய் பார்த்தார். அவள் மூச்சில்லாமல் முடங்கி கிடந்தாள்.

அதை பார்க்க முடியாமல் நேராக போய் அந்த நர்சிடம் கைபையை நீட்டினார்.

அன்புவுக்கு மூச்சு முட்டி முருகனை வெளியே இழுத்துக்கொண்டு வந்தான்.

கொஞ்ச நேரத்தில் மஞ்ச பையில் கணத்தோடு வெளியே வந்தார். வவுத்தான் மாமா,  ”சீக்கிரம் வாடா  பொழுது விடிய போது அதற்குள்ளே வேலையை முடிச்சிடலாம்” என்று அன்புவிடம் அந்த பையை நீட்டினார்.

அதை பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.

ஆல தோப்புக்குள் நுழைந்த வவுத்தான் மாமா அங்கிருந்த காட்டு சுள்ளிகளை பொருக்கி போட்டு குவியலாக்கினார்

”சீக்கிரமா எடுடா நாய் நரி வர்ற நேரம் தலைச்ச புள்ளியை கண்டா உடாது” விரக்தியாய் கத்தினார்

அன்பு அந்த பையிலிருந்து அந்த கனத்தை எடுத்தான். அது ஒரு பொம்மை போல வெளியே வந்தது. கால்,கை விரலெல்லாம் துரிஞ்ச்ச விளாரின் காய்ந்த நுனி போல சிண்டு சிண்டாய் நீண்டிருந்தது. தலையில் ஆட்டு மசுரு போல கன்னகறேலேன்று விசிறியிருநதது. உச்ச தலையின் பின் பக்கம்  மட்டும் ஒரு கையளவுக்கு பள்ளம் தட்டுபட்டது

”உடம்பு முழுக்க கூட்டு கட்டா அப்பனாட்டம் வந்திருக்கு, ஏ இந்த தலையை மட்டும் குறையா வச்சாளோ அந்த கண்ணிமாருக்கத்தான் வெளிச்சம் .ஒத்த நாழி சூரியனை கூட பார்க்காம போறதுக்கு இந்த புள்ளைய ஏ படைச்சானோ அந்த மானங்கெட்டவ ஏ குலத்த தொலங்கரக்குள்ள பாம்பு விழுங்கனுமா. இந்த பாவி மவளுக்கு கண்ணார பாக்க கூட கொடுத்து வைக்கிலேயே” என்று அழுது குலுங்கியபடி சுள்ளிகளை அடிக்கிக்கிக்கொண்டிருந்தார் வவுத்தான் மாமா.

ஒரு எலி குஞ்சுவை சுடுவதை போல அந்த சுள்ளி குவியலில் குழந்தைய மேலே வைத்து தீ மூட்டி திருப்பி போட்டார்.

அவனுள் எந்த பிரமையும் எழாமல் நீல தூம்பளாக வெளியேறும் புகையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு சின்ன பொம்மை புகையாய் வெளியேறுவது போல் அவனுக்கு தெரிந்தது

கன்னி மாடத்தின் வெளிச்ச நுனியை பார்த்துக்கொண்டிருந்த அன்புவுக்கு ஏதோ உடலெல்லாம் நடுங்கி தலை முழுக்க பாரம் ஏறுவது போல் இருந்தது.

அந்த நேரம் பார்த்து தான் மூர்த்தி போனில் அழைத்திருந்தான்.

அதை எடுத்தவனுக்கு கோவம் தலைக்கேரி கத்த ஆரம்பித்தான்.

”தாயோளி புள்ள கலைக்க மருந்து வாங்கி வர வேற ஆளே  கிடைக்கிலையாடா? வைடா ங்கோத்தா”

அவன் கத்தி முடித்து பார்த்தபோது தன் உடம்பிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல் இருந்தது.

கன்னி மாடத்தில் சுற்றி இருந்த இருளின் அழுத்தம் ஒரு காற்றசைவில் அகல் சுடரின் வெளிச்சம் தூண்ட மாய சாயல் ஒன்று நிழலாடியதை கண்டான்.

++

கிருஷ்ணமூர்த்தி.மா

நான் திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவன்.தொடர்ச்சியாக கனலி,தளம்,யாவரும் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.அத்துடன் விவசாயப்பனியும்,சமூக பணிகளிலும் ஈடுபடுத்தியுள்ளேன்.எங்கள் கிராமத்தில் குழந்தைகளுக்கான தும்பட்டான் என்ற நூலகமும் மாலை நேர பள்ளியும் நடத்தி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

One thought on “ அருக கணம்

  1. அற்புதமான நடை.
    கதையின் முடிவில் வெளிப்படும் கோபம் சிறப்பு.
    திருவண்ணாமலையின் நிலவியலை தோழர் அற்புதமாகக் காட்சியாக்குகிறார்.
    எறும்பு,எலிக்குஞ்சு உவமைகள் நல்ல சொல்லடல்.
    வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *