-என்னக்கா நைட்டுக்குள்ள முடிஞ்சுருமா,
-எனக்கு என்னடி தெரியும். ஆனா பாவம்டி அந்த பையன் வாழு வேண்டிய வயசு. என்ன பண்றது?
-சரி விடுக்கா நடக்கிறது தான் நடக்கும். விடிஞ்சா தெரிய போகுது.
-ஆமாடி அவங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க. அப்ப முடிஞ்சிருக்கும். பார்க்கலாம்.
-அந்த சர்வசக்தி மாரியம்மா எதுல கொற கண்டாளோ அவங்க கிட்ட?
அந்த வீட்டைச் சுற்றியும் கண்ணீர் துளிகள். வீட்டிலிருந்து கண்ணீர் தொடரோட்டம் ஒடியது. எவ்வளவு கொட்டினாலும் விழுங்குகின்ற கடல் போல தீராத கண்ணீருடன் அழுது கொண்டிருந்தாள் தனம். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கண்களை நிரந்தரமாக மூடப் போகிறான் அருண் (எ) ஒன்ற (எ) அருணகிரி. புற்றுநோய் தன்னிருப்பை காட்டிக் கொள்ள அவன் உடம்பு முழுவதும் பரவியிருந்தது.
விடியல் இருளை விரட்டி கொண்டிருந்தது சேவலின் பொறுப்பை தனம் ஏற்றுக் கொண்டாள்.
-ஐயோ……….. அருணே…………. என்ன விட்டுட்டு போயிட்டியேடா உன்னை இப்படி தூக்கி கொடுக்கவாடா பெத்து போட்டு மணி மணியா வளத்தேன்.
எங்கவீட்டு குல சாமி போயிட்டியேடா.
என்று அவள் வயிற்றிலும் மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுததை கண்டு இருள் எல்லா இடத்திலும் இருந்து ஓடி அவள் வீட்டை மட்டும் சூழ்ந்து விட்டது.
பொழுது விடிய விடிய ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி தலைப்பு செய்தியானது. அனைவருடைய பரிதாபத்துக்கும் ஆளானான் அருணகிரி. புற்று நோயால் நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த தன் மகன் எப்போது வேண்டுமாலும் நம்மை விட்டு பிரிந்து விடுவான் என்பதை நினைத்து நினைத்தே ராஜா மிகவும் மனதளவில் உடைந்து போயிருந்தார். இருந்த போதிலும் நடக்க போகும் துன்பத்தை எதிர் கொள்ள தயாராக இருந்தார். அவனின் இறுதி மூச்சு அவரின் கண் முன்னே நின்றதும் பின் மண்டையை சுவரில் முட்டி முட்டி அழுது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சிறு குழந்தையை போல தேம்பி தேம்பி அழுதார் .
பந்தல் போடும் “பிரபு”க்கு மாது செல்போனில் அழைத்து தகவலை சொன்னான். மிகவும் வருத்ததுடன் ’வருகிறேன்’ என கூறினார். பந்தல், அமரும் சேர் சகிதம் அருணகிரியின் வீட்டிற்கு வந்தடைந்தார். பந்தல் போடுவதை கண்ட பெண்கள் கூட்டம் கல்யாண பந்தல் போடற வயசுல சாவு பந்தல் போட வெச்சுடானேனு பேசி கொண்டார்கள்.
ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் அவனுடைய வயது இருபத்தைந்து. திருமணம் ஆகாதவன். அவனுடைய திருமணமே பரபரப்புக்கு முக்கிய காரணமானது.
அந்த ஊர் வழக்கு படி ஒரு ஆண் திருமணமாகாமல் இறந்தால், அவனுக்கு வாழை மரத்துடன் திருமணம் செய்து வைப்பது வழக்கம். அவ்வூரில் புதிதாக திருமணம் செய்து கொண்டு வந்த பெண்களும், புதிதாக குடி வந்தவர்களும் அத்திருமணத்தை நேரில் பார்க்க ஆர்வமுடன் இருந்தனர்.
தனத்தின் அழுகையை காணும் ஒவ்வொரு கண்களும் களங்கும். அவளின் கதறலை பொறுக்க முடியாமல் நிறையபேர் வீட்டை விட்டு தள்ளி நின்றனர்.
-கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி தருவ அதுங்க பீ மூத்தற துணிய தொவைப்பனு கனவு கோட்ட கட்டுனனேன். அத எட்டி ஓதச்சு இடிச்சு போட்டியேடா அருணகிரி……
-அருண கூப்பிடுங்க பெரியம்மா” அருண விளையாட வர சொல்லுங்கனு கேட்பானுகளே அவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன். டேய் பையா வந்துடுடா, அம்மாவால முடியலடா! நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.
-கயிறு மட்டும் போட்டுருக்க ஆறு பவுனில் கொடி எடுத்து தரமுன்னு சொன்னியேடா அருணகிரி. அருணகிரி… டேயப்பா எப்படிடா அம்மாவ விட்டுட்டு போக உனக்கு மனசு வந்துச்சு.
தனத்தின் புலம்பல்களின் நடுவில் வீட்டின் முன்னே பந்தல் போடப்பட்டது. அருணகிரியின் அப்பா ராஜாவும் அருணகிரியின் அண்ணன் மாதுவும் ஊர் பெரியவர்களுக்கு இறப்பு செய்தியை சொல்லிவிட்டு வீடு திரும்பினர்.
பந்தலை பார்த்துவிட்டு பேப்பர் போடும் சிறுவன் சைக்கிளை தூரமாக நிறுத்திவிட்டு வந்து பேப்பரை அமர்வதற்க்கு போடப்பட்டிருந்த அடுக்கி வைத்திருந்த சேரில் வைத்துவிட்டு ராஜாவின் முகத்தை பார்க்க முடியாமல் பார்த்தான். மௌனமாக கண்களின் வழியே அஞ்சலி செய்து விட்டு சைக்கிளை அடுத்த வீட்டை நோக்கி உருட்டினான்.
அருணனின் வீடு முதல் தெருவிலேயே தொடக்கத்திலே இருக்கும். ஆகையால் வியாபாரிகள் அனைவரும் தெருவில் நுழையும் போது விடும் வியாபாரக் கூவலை பந்தலை கண்டதும் நிறுத்தினார்கள். பின் அடுத்த தெருவில் இருந்து வியாபாரத்தை தொடங்கினர்.
அருண் புதன்கிழமை இறந்தான். புதன்கிழமை தோரும் தேங்காய் புட்டு விற்றுக்கொண்டு ஒருவர் வருவார். அருணுக்கு மட்டும் அதிக தேங்காய்ப்பால் ஊற்றுவார். செய்தி தெரிந்ததும் கையில் ஒரு தேங்காய் புட்டை காகிதத்தில் சுருட்டி கொண்டு பந்தலை நோக்கி நடந்து வந்தார் . அருண் சாயலில் அவரின் மகன் இருப்பான். விளையாடும்போது கிணற்றில் விழுந்து இறந்துவிட்டான். அதனால் அவன் மேல் தனி கரிசனம். தனம் அவரை கண்டதும் போட்ட கூப்பாடு தெருவையே உலுக்கிவிட்டது.
அருணின் முகம் காண முடியாமல் அவனை கும்பிட்டு விட்டு அருகே இருந்த மேஜை மேல் தேங்காய் புட்டை வைத்து விட்டு சென்று விட்டார்.
தனத்தின் அண்ணன் வழக்கமாக பார்க்கும் ஜோசியரிடம் ஜோசியம் பார்க்கச் சென்றார்.
“நல்ல நேரத்தில் இருந்திருக்கிறான்“
“எல்லோருக்கும் நல்லா இருக்கு “
“நல்ல சாவு தான்” ஆயுள் முடிந்துவிட்டது என ஒவ்வொன்றாக சொன்னார். பின் வாழை மரத்துக்கு திருமணம் செய்து குப்பற கிடத்தி புதைக்குமாறு சொன்னார்.
கல்யாணம் ஆகாததால் கொட்டு மேளம் போடவில்லை. அதற்கு பதிலாக தனத்தின் அழுகையும் கத்தலும், ஊர் முழுதும் ஒட்டிருந்த போஸ்டர்களும் இறப்பை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
பந்தலில் ஊர் பெரியவர்களும் ஊர் நிர்வாகிகளும் கூடினார் .”மாமா மூன்றைக்கு மேல நாலரைக்குள்ள எடுக்கறது நல்லதுன்னு ஜோசியர் சொன்னார்” ஊர் நிர்வாகி ஒருவரிடம் மாது சொன்னான்.
‘குழி வெட்ட கூலி கொடுத்தாச்சா, சாங்கியம் செய்ய மதல வந்துட்டானா, சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் சொல்லியாச்சா?’ என பல்வேறு கேள்விகளை ஊர் நிர்வாகிகள் ராஜாவிடமும் மாதுவிடமும் கேட்டனர்.
சொந்தக்காரர்கள் மாலையோடு வரத் தொடங்கினர். அவனோடு விளையாட போகும் நண்பர்கள் பெரிய மாலையுடனும் அழுகையுடனும் வந்தனர்.
சொந்தக்காரர்கள் வருகை தனத்தின் கண்ணீரை சேந்தி சேந்தி ஊற்றிக் கொண்டே இருந்தது.
தாளாத வயதில் “அட அருணு பையோனு” “என் சாமி“ என்றெல்லாம் கத்திக்கொண்டு இருவர் தாங்க தனத்தின் தாய் பாக்கியம் வந்தார்.
“வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னியே அருணகிரி உன்ன எப்படிவர வச்சுட்டான் பாத்துட்டியாம்மா” என்று வெடித்தாள் தனம். ’இதுக்கு தான் வரணும்னு எனக்கு எழுதி இருக்கா’ என அவரும் வெடித்த அழுத்தார்.
மணி இரண்டை நெருங்கியது. பந்தலின் நடுவே கவுத்து கட்டில் போட்டனர். அழுது கொண்டே மாது அருணை தூக்கினான். உறவினர்களும் அருணை தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு சென்றனர்.
“இனி இந்த ஊட்டு வாசப்படிய மிதிக்க மாட்டியா”
“சோறு போடுமான்னு கேக்க மாட்டியா”
“மருந்து மாத்திரை வாங்க போக மாட்டியா”
-ஐயோ ……. அருணே ……. ஊட்ட வுட்டு போறானே . மாது உன் தம்பிய எங்கடா எடுத்துட்டு போற?. அவளின் அழுகையை கடக்க முடியாமல் கடந்து சென்றனர்.
பந்தல் முழுவதும் மனித தலைகளால் நிரம்பியது. அருணின் தாய்மாமன் அருணுக்கு பட்டு சட்டை பட்டு மற்றும் வேட்டி கட்டி விட்டார். நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டு காலில் மெட்டி போடும்போது அவன் கால்களை முகத்தில் வைத்து வெடித்து அழுதுவிட்டார்.
ஊரே ஆவலில் கூடியது. ஏனென்றால் இது போன்ற சடங்குகள் நடப்பது அரிது. திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களையும் அருணுக்கு முறையாகின்ற முறை பெண்களையும் அவர்கள் அவரவர் வீட்டிற்கு போக சொன்னார்கள் ஊர் நிர்வாகிகள்.
சடங்கு செய்யக்கூடிய “மதலைமுத்து” என்ற “முதல” இரண்டடி உயரம் உள்ள வாழை மரத்தை சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். அப்போது தனம் “டேய் அருணு பொண்ணு வந்துட்டாடா எப்பேர்பட்ட பொண்ணு பாருடா” என ஓங்கி அழுதாள்.
பொண்ணு வீட்டாரராக இருக்க ஒரு நிபந்தனை உண்டு. அவர்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்து இருக்க வேண்டும். அருணுக்கு முறைமாமன் பெரியசாமி என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நாலு பசங்க மட்டும் தான்.
ஊர் பெரியவர்கள் பெரிய சாமியிடமும் பேசினர். அவர் ஒத்துக் கொண்டார். வாழை மரத்துக்கும் நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டார்கள். புது மாப்பிள்ளை வேடத்தில் கிடக்கிறான் அருணகிரி. அப்போது தனத்தை அழுக வேண்டாம் என சொன்னார்கள். தனமும் ராஜாவும் பெண் கேட்டனர் பெரியசாமி – காவேரி தம்பதியினரிடம் .
அழுது கொண்டே இருவரும் ’எங்க பையனுக்கு உங்க பொண்ண தர சம்பந்தமா?’ என கேட்டனர்.
“மனப்பூர்வ சம்மதம்ங்க”
பெரியசாமியும் அவனின் மனைவியும் அழுது கொண்டு சம்மதம் சொன்னார்கள்.
ஊர் நிர்வாகிகள், ’அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிடலாம்’ என சொன்னார்கள். அருளின் தாய் மாமன் தன் பேண்ட் பையிலிருந்து லட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற பர்சை எடுத்தார். அதில் நிஜ திருமணத்தில் கட்டுவது போன்ற தாலி ஒன்று இருந்தது. அருணகிரிக்கு அக்கா முறை உள்ள ஒருவர் அவன் தலைமாட்டில் நின்று கொண்டாள். தாலி எடுத்து அருணகிரியில் கை விரல்களின் இடையே வைத்தனர். வாழை மரத்தை அவன் முன்னே காட்டினார்கள். தலைமாட்டில் இருந்த அக்கா ஒரு முடிச்சை அருணகிரியே போடுவது போல் போட வைத்தாள். பின் இரண்டு முடிச்சுகளை அவளே போட்டாள். தனத்தின் அழுகை சத்தம் பந்தலை பிரித்து எறிந்து விடுவது போல் இருந்தது. நீண்ட அழுகைக்கு பின் அருணின் கையில் அறிவாள் கொடுத்து வாழை மரத்தை வெட்ட வைக்கிறார் சடங்கு செய்பவர். சடங்கு முடிந்தது திருமணமும் முடிந்தது. இனி அருணகிரி திருமணம் ஆனவன் தான். ’மொய் எழுத எத்தனை தல வந்திருக்கு பாருடா அருணகிரி’ என்று ராஜாவும் கதறி அழுதார்.
பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் “சொர்க்க ரதம்” தெருவுக்கு முன்னே வந்து நின்றது. அருணகிரியின் நண்பர்கள் மற்றும் அவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுவர்கள் அனைவரும் அவனுக்கு போடப்பட்டிருந்த மாலைகளை எல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டு சொர்க்க ரதத்தை நோக்கி நடந்தனர். ராஜா இறுதியில் என்ன நினைத்தார் என தெரியவில்லை “பையன கையிலே தூக்கிட்டு போலாம்” என சொன்னார். அனைவரும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு அருணகிரியை பாடையில் ஏற்றி தோள்களில் சுமந்து சொர்க்க ரதம் முன்னே செல்ல சுடுகாடு வரை நடந்தே சென்றார்கள்.
பாடையில் பிணம் ஏற்ற மணப்பெண்ணான வாழை மரமும் உடன்கட்டை ஏறிக்கொண்டது. சுடுகாட்டு முனையில் பெண்கள் நிறுத்தப்பட்டனர். ஆண்கள் அருணகிரியை மண்ணில் புதைக்க நடை போட்டனர்.
“பட்டுத்துணி நீயுடுத்தி பாடையில போகறயே”
“வந்த சனம் வவுறு நெறைய சோறு போடாம போகறயே”
”பொண்ணு வீடு பாக்கல
மாப்பிள்ளை வீடு பாக்கல
பத்திரிக்கை அடிக்கல
பந்தக்கால் நடல
அச்சத போடல
கல்யாணம் மட்டும் முடிஞ்ச போச்சே!
இப்பேர்ப்பட்ட கல்யாணம் செய்ய
நானென்ன புண்ணியம் செஞ்சன்னு தெரியலையே.!”
சுடுகாட்டு முனையில் முட்டி போட்டு தனம் அழுது கொண்டே ஒப்பாரி வைத்தாள். வெளியே அழுவதை தடுக்க முடியும். வேகும் வரை உள்ளே அழுவாளே அதை யார் தடுப்பார் என தன் மனைவி அழுவதை பார்த்துக்கொண்டே ராஜா சுடுகாட்டை அடைந்தார்.
00

கார்த்திக் வாசன்.
சேலம் மாவட்டத்தில் GST Practitioner ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மேல் ஏற்பட்ட சிறு ஆர்வம் என்னை கடந்த 2016 – ல் இருந்து நிரந்தர வாசிப்பாளனாக மாற்றி இருக்கிறது. மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் நான் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக கட்டுரைகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். தீவிர வாசகனாக இயங்கி கொண்டே சிறுகதை, கவிதை, சிறார் கதைகள் போன்றவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்.