அரைக்கா செண்டு நெலமும், அருமையா முடிஞ்ச பஞ்சாயத்தும்

அனாதிக்காலந்தொட்டு, தலக்கட்டு தலக்கட்டாய், ஒத்தை ஊருக்குள்ளேயே கொடுத்தும் கட்டியும், அச்சுப்பிசகாமல் ஒரே தடத்தில் சுற்றும் செக்கைப் போல் மாறிவிட்ட பெருமை கொண்ட தாத்தா பாட்டிகளால், மொகுடப்பாளயம் என வெகுபிரியத்துடன் சொல்லப்படுவதும், திருப்பூருக்கும், பெருந்துறைக்கும் பயணத்தில் பாதியும் பனியன் பணியில் மீதியுமாய் உழைத்துத் தேயும் தற்கால நாகரீக சிகாமணிகளால் M.K.பாளையம் என பெருமையுடன் பீத்தப்படுவதும், அரசாங்க ரெக்கார்டுகள் துவங்கி, சாலையோரத்தில் சாயம்போய், துருவேறிக்கிடக்கும் போர்டுகள் வரை மொட்டக்குட்டப்பாளையம் என முழுப்பெயர் குறிப்பிடப்படுவதுமான அவ்வூரின் பஞ்சாயத்து கூடும்போது மணி இரவு 7. பஞ்சாயத்து மேடையிலும், அதை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலிலும் இரண்டு LED லைட்டுகள் தங்கள் கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தன.

பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணி மட்டுமல்ல, பஞ்சாயத்து நடக்கும் ஆலமரத்தடியும், அதன் அருகிருக்கும் மேடையிலமர்ந்து அருள்பாலிக்கும் பிள்ளையாரும்கூட, சரித்திரத்தில் இவ்வளவு கூட்டத்தைக் கண்டதில்லை. ஒட்டுமொத்த ஊரும் ஆலமரத்தடியில் கூடிவிட்டார்கள். நேத்துப் பொறந்த பிள்ள துவங்கி, நடமாட முடியாத வம்பெருசுங்கள்கூட வந்து குமிந்தது அதிசயம்தான். இடியும் நிலையில் இருக்கும் பள்ளிக்கூடத்தை எடுத்துக்கட்டுவது, வெய்யிலிலும் மழையிலும் வெட்டவெளியே கெதியெனக் கிடக்கும் பிள்ளையாருக்கு ஒரு சிமெண்டு சீட்டாவது போடுவது, அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் நின்று போகும் டவுன் பஸ் அந்த ஊரிலும் நிற்பதற்கு ஆவன செய்வது என ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்களைப் பற்றிப் பேச கூட்டப்பட்ட பஞ்சாயத்துகளெல்லாம் இதில் காவாசி கூட்டத்தைக்கூட கண்டதில்லை. வந்து சேரும் நாலஞ்சு பேரும், பள்ளிக்கோடம் கட்டுறதெல்லாம் படிச்சவுனுங்க செய்ய வேண்டியது என்றும், சாமிதா நம்மள காப்பாத்தோணும், இதுல நாம எங்கெ போயி சாமிக்கி காபந்து செய்யுறது எனும் ரீதியிலும் பேசிப்பேசியே பஞ்சாயத்தை முடிவெடுக்க விட்டதேயில்லை. இப்படி எதிலுமே பட்டும் படாமல் கலந்துகொள்வதையே பெரிய பங்களிப்பாகக் கருதும் MK பாளையத்தில் இன்றைக்கு கூடிய பஞ்சாயத்து, பள்ளிக்கூடம் கட்டுவது போலோ, சாமிக்கு காபந்து பண்ணுவது போலோ சாமானியப்பட்ட விசியமில்லை. அந்த ஊர் வரலாற்றிலேயே நடக்காத மாபெரும் இழுக்கு இன்றைக்கு நடந்துவிட்டது. அதற்குப் பரிகாரம் தேடத்தான் இந்தப்பஞ்சாயத்து.

பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியின் சொந்த சித்தப்பா மகனும், இடம் பொருள் ஏவல் என எதற்குமே சம்பந்தமில்லாவிட்டாலும், புகையிலை மணக்க வெற்றிலைச்சாறு தெரிக்க ஓரிரண்டு திருக்குறளை உதிர்த்துக்கொண்டு எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாய் திரிவதால் மட்டுமே வாத்தியார் என அழைக்கப்படுபவருமான சுந்தரத்தை, ஊர்ப்பையன் என பொதுவாக குறிப்பிடப்படும் நாவிதர் முத்து கன்னத்தில் அறைந்துவிட்டார் என்பதுதான் பிராது.

சம்பவம் நடந்ததோ சாயங்காலம் 6 மணிக்கு. நடந்த இடம் தொவரக்கரை முக்கு. ஓடோடி வந்து, இந்த விசயத்தை சுப்பிரமணிக்கு தெரிவித்த தெக்கூட்டு குமாரு மட்டும்தான் கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. முதலில் சுப்பிரமணியும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்றுதான் நினைத்தார். சுந்தரத்தின் புத்தி அப்படி. எப்போதும் செட்டு சேர்க்கையும், ஊர் சுத்துவதும் முத்து கூடத்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கூட்டாக ஊத்துக்குளி செல்வதும், ஊத்திக் கொள்வதும், மேற்கொண்டு பரோட்டா குருமா கவனிப்புகளும் என எல்லாமுமே முத்துவின் கைக்காசுதான். ”வாயத்தவுற வாத்தி ஒண்ணத்துக்கும் லாயக்கில்ல” என முத்துவால் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் சுந்தரம். இத்தகைய பல நூறு ”வெளியில சொன்னா வெக்கக்கேடு” ரக பெருமைகளை சிறுவயது முதற்கொண்டே கடும் சிரமப்பட்டு சேகரித்தவர் என்பதால், சுந்தரத்துக்கென ஒரு கல்யாணங்காட்சி அமையவேயில்லை. தன்னுடைய வாழ்வு இப்படி கேட்பாரத்துப் போனது, தன் பெரியப்பா மகன் சுப்பிரமணியின் கைங்கர்யம்தான் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கசிந்த உளவுச் செய்தியை சுந்தரம் நிதானத்தில் இருக்கும் போது லட்சியம் செய்வதில்லை. அன்றாடம் குடித்துவிட்டு வருவதும், குறைந்தபட்சம் அடுத்த தெருவுக்காவது கேட்கும் குரலில், ஒரு பொறுப்பான அண்ணனாக சுப்பிரமணி தன் தம்பியின் வாழ்க்கை மீது அக்கறையில்லாமல் இருந்தது துவங்கி, அவர் குடும்பம் தனக்கிழைத்த அநீதிகளைச் சொல்லிச் சொல்லி நியாயம் கேட்பதும் வழக்கம்தான். போகிற மானம் தன் வீட்டுக்குள்ளேயே போகட்டும் என, சுந்தரத்தை சுப்பிரமணி தன்னுடைய வீட்டிலேயே தங்கிக்கொள்ளச் சொல்லியும், இந்த ரவுசு அதிகமானதே அல்லாமல் குறையவில்லை. ரவுசு எல்லை மீறுகையில் காட்டப்படும் கைப்பிடி கருவாட்டுக் கொழம்போ, கவுச்சி வகையறா ஏதாவதொன்னோ சுந்தரத்தின் ஆறாப்பெருங்காயத்துக்கு அப்போதைய வடிகாலாக அமையும்.

இந்தப் பின்னணியில், ஊர்ப்பையன் கையால் சுந்தரம் அடி வாங்கிய விசயம்  சுப்பிரமணிக்கு பெரும் மகிழ்வைத்தான் தந்தது. கூடவே, கேவலம், ஊர்ப்பையனால முடிஞ்ச இந்த சாதாரண விசியத்தைக்கூட, தலைவராய் இருந்தும் செய்ய முடியாத தன்மீது கொஞ்சம் கழிவிரக்கமும் எட்டிப்பார்த்தது. அதனாலேயே, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தன்முன் நின்று இந்த விசயத்தை சொன்ன குமாரைக்கூட ”குடிகார நாயிங்க சண்டையப் போயி பெரிசு பண்ணோனுமாடா. இது வெளில தெரிஞ்சா நமக்குத்தா அசிங்கரம். சனியன வுடு” என சமாதானப்படுத்தத்தான் முயன்றார் சுப்பிரமணி. ஆனால், குமார் கொதித்தெழுந்தான், “ஓஹோ, கேட்க ஆருமில்லாத ஆளுன்னா, எவமேன்னாலும் ஒதைக்கலாமா? ரெத்தபாசம் ஒங்களுக்கும் அத்துப்போச்சா. கெடக்கட்டும் மாமா, இன்னிக்கு வாத்தியாருக்கு நடந்த கெதி நாளைக்கே ஒங்களுக்கு நடக்காதுங்கறதுக்கு என்ன உத்தரவாதம்? அதயும் பாத்துக்கலாம் மாமா” அவன் பேசின வேகத்தைப் பார்த்தால், அவனே ஆள் செட் பண்ணி சுப்பிரமணியை அடித்துவிடுவான் போல இருந்தது. அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால், தண்டோராப் போடாமலேயே, தன்னை அடிக்க வங்கூட்டம் கூடிவிடும் எனும் உண்மை சுப்பிரமணிக்குத் தெரியாமலில்லை. அதனாலேயே குமாரின் கோரிக்கைப்படி பஞ்சாயத்தைக் கூட்ட வேண்டியதாயிற்று.

ஊர் வழக்கப்படி ஆலமரத்தடி மேடையில் கூடியது பஞ்சாயத்து. மேடையை ஒட்டி பிராது கொடுத்த குமார் நின்றிருந்தான். அவனுக்குப் பின்புறம், பந்தலை தாங்கிக் கொண்டிருந்த மூங்கிலில் சாய்ந்தபடி, சம்பந்தப்பட்ட வாத்தியாரும், லைட் வெளிச்சம் நன்றாக விழும் தொலைவில் முத்துவும் அவர் மனைவி பொன்னாளும் நின்றிருந்தார்கள். பொன்னாளின் முகத்தில் மட்டும் கலவரம் தென்பட்டது. உள்ளுக்குள் தைரியமிருந்தாலும் வெளியில் பயப்படுவதுபோல நடித்துக்கொண்டிருந்தார் முத்து. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி “ஆரம்பிக்கலாமா” என சம்பிரதாயத்துக்கு கேட்டுவிட்டு, குமாரிடம் அவனது பிராதை சொல்லச்சொன்னார் சுப்பிரமணி. அங்கு கூடியிருந்த ஐம்பது வீட்டுக்காரர்களுக்கும் தனித்தனியே சொன்னதை மீண்டும் ஒருமுறை பஞ்சாயத்து நடுவில் ஒப்புவித்தான் குமார், ”இன்னிக்கி மத்தியானமாட்டம் நானு, முத்தன், வாத்தியாரு மாமன் மூணு பேருமா, ஊத்துக்குளி சந்தைக்கி போயிருந்தோம். சந்தசெலவு முடிச்சிட்டு, பொழுதோட திரும்பி வாரவழில, வாத்தியாரும் முத்துவும் எப்பியும்போல தமாசு பேசிட்டு வந்திட்டிருந்தாங்க. நம்ம தொவரக்கர மேட்டுக்கிட்ட வரும்போது, எனக்கு அடிவயித்த முட்டிட்டு வந்திருச்சுங்க. ஒண்ணுக்கு போயிட்டு திரும்பிப்பார்த்தா, வாத்தியாரு ஏதோ கோபமா கேட்க, முத்தனும் சலிக்காமா ஏதோ சொன்னாப்ள. நான் பக்கத்துல போறக்குள்ள, பேச்சு வெவகாரமா போயி விசுக்குன்னு முத்து வாத்தியார் கன்னத்துல ஒரு ஈடு போட்டுட்டாப்புள. தடுக்கப்போன என்மேலயும் ஈடு வுழுந்திருக்க வேண்டியது. நான் நேக்கா தப்பிச்சு ஓடியாந்துட்டே”

ஏற்கனவே கேட்ட கதைதான் என்றாலும், இந்த இடத்தில், நடுவயதுக்காரர்களுக்கு சுண்டிப்போன ரத்தம் கொதிக்க வேண்டியதும், பெரிசுகளோ ஊன்றுகோலை ஒதுக்கிவிட்டு முத்துவின் மீது பாயமுற்படுவதும், இளரத்தங்களிடமிருந்து அடிடா கொல்லுடா ரக கூச்சல்களும் சாதிப்பெருமையைக் காக்க அவசியமென்பதால் அவை அனைத்தும் முறைப்படி நிகழ்த்தப்பட்டன. நிரல்படி, ஒலித்த “செத்த இருங்கப்பா” என்ற சுப்பிரமணியின் குரலும் சரியான இடத்தில் தன்னுடைய வேலையை செவ்வனே செய்தது.

“ஆளுக்காள் பேசுனா அது பஞ்சாயத்தா? ஆயிரந்தா இருந்தாலும் முத்துவும் வேத்தாளில்ல. தலக்கட்டு தலக்கட்டா நம்ம காலயே சுத்திவார பய. எடுத்தோம் கவுத்தோம்முன்னு எதையும் செய்யப்படாது” பக்குவமாய்த் தொடர்ந்தார் சுப்பிரமணி.

“அப்புடியே, எடுத்து கவுத்துட்டாலும், கிழிச்சு தொங்கவுட்டுடுவாப்ள. வக்கில்லைனாலும் வாப்பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல” பஞ்சாயத்து மேடையில் பின்புறமிருந்து மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் ஒலித்தது செல்லப்பனின் குரல். செல்லப்பன் சுப்பிரமணியின் ஒத்தை அக்காளான சந்திரிகாவின் கணவர். ஐம்பது ஏக்கரா சொத்தைப் பிரிப்பதில், அரைக்கா செண்டு முன்பின் ஆக, அதில் துவங்கியது உறவில் விரிசல். நாளாக நாளாக ஆளுக்காள் முறுக்கிக்கொண்டு திரிய, பேசாமல் செல்லப்பனின் ஒரே மகனான கதிருக்கு சுப்பிரமணியின் ஒரே மகளான தேவியைக் கொடுத்து கணக்கை பைசல் பண்ணக்கூட முயற்சிகள் எடுக்கப்பட்டன. எதிர்த்தரப்பினர் யோக்கியதையை விவரிக்க, தமிழிலுள்ள தரங்கெட்ட வார்த்தைகள் கொண்ட நெடும் பட்டியலை இருதரப்பும் மாறி மாறிப் போட, அம்முயற்சிகளும் முடிவுக்கு வந்தன. கூடவே, இரு குடும்பங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளும் நின்றேவிட்டன. அன்றிலிருந்து, சுப்பிரமணி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு சொல்வதே செல்லப்பனின் கருத்தென ஆனது. “சூரியன் கெழக்கால உதிக்குது” என சுப்பிரமணி துவங்கினால் கூட, “இதென்ன, பயித்தியகாரனாட்டம் பேச்சு, அது மேக்கால தான மறையுது” என யாரும் மறுக்கமுடியா வண்ணம் எதிர் திசை நோக்கிப்பாய்வார் செல்லப்பன். “பெரிய ஊட்டுப் பண்ணாடி சொல்லுறதுலயும் ஒரு நாயமிருக்குதுங்கோவ்” என அவர் பேச்சுக்கும் ஊர் மன்றில் செல்வாக்கிருப்பது சுப்பிரமணியை அமைதியாக்கிவிடும்.

இம்முறையும் பஞ்சாயத்தில் அமைதி காத்த சுப்பிரமணி, செல்லப்பன் மீதான கோபத்தை முத்துவின் மனைவி பொன்னாளிடம் காட்டினார்

”ஏம் பொன்னா, எங்கூட்டு ஆளுக்குத்தா புத்தியில்ல. நாங்க கூறுவாரு சொன்னாலும் கேட்குறதில்ல. நீ உம்பட புருசன கொஞ்சம் கண்டீசன் பண்ணக்கூடாதா? இன்னிக்கி பாரு உன்னிய எங்க கொண்டு வந்து நிறுத்திப்போட்டான்னு”

இதற்கெனவே காத்துக்கொண்டிருந்தாப்போல விசும்பலை நிறுத்திய பொன்னாள், “சாமி. ஊர்ப் பொல்லாப்பு வரும்யா. வாத்தியாரு சகவாசம் வேணாம்யான்னு நானும் படுச்சிப்படுச்சி சொல்லிட்டுத்தானுங் சாமி இருக்கறேன். எம்புருச பொட்டாட்ட வூட்லதானுங்க இருந்தாரு. வாத்தியாரு சாமி வுடமாட்டீங்கறாருங்க. இன்னிக்கு காத்தாலகூட வூட்டுக்கு, அளவான மப்புல வந்து நாந்தா கோயிக்கட்டிசோழ, முத்துதா பிசிருட்டாந்தை நாங்க ரண்டுபேருமா வடக்கால போயி சாகுறோமுன்னு ஒரே ரவுசுங்க. நாங்கூட, சாகுறதுன்னா இங்க எங்கியாவது சாவுங்க சாமி, கொண்டுவார செலவாவது மிச்சம்ன்னு கூட புத்தி சொன்னேனுங்க. அப்புடியும் கேட்காம, அடம்புடுச்சு ஐநூறு ரூபா கைமாத்தா வாங்கிட்டு எங்கூட்டுக்காரரையும் கூட்டிட்டுப்போனாருங்க. சாமி நீங்கதான் அந்தக்காச வாங்கித்தரோணும்” என மூச்சுவிடாமல் முறையிட்டார். ஒருவகையில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் பன்னெடுங்காலம் முன்னரே வடக்கிருந்து உயிர்விட்டது நல்லதாகப் போனது.

சுந்தரம் கடன் வாங்கினவர்களது எண்ணிக்கையும், அவ்வூர் மக்கள் தொகையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்பதை உணர்ந்த சுப்பிரமணி சுதாரித்தார். “இதா பாரு பொன்னா. உங்கொடுக்கல் வாங்கல் நாயமெல்லா பேச பஞ்சாயத்தை கூட்டல. என்ன ஒரு நிது இருந்தா வரமொறயில்லாம முத்து கை நீட்டியிருப்பான். அதுக்கு பதிலச் சொல்லு மொதல்ல. இவ என்ன வேணும்னாலும் செய்யுவான், அத சும்மா எங்கள வேடிக்க பாக்க சொல்லுறயா ?” கர்ஜித்த சுப்பிரமணியின் கம்பீரத்தை அடக்க வேண்டிய தன்னுடைய கடமையைச் செய்ய செல்லப்பன் எப்போதும்போல அப்போதும் தவறவில்லை.

“சும்மா, கத்துனா நம்மளுக்கும் கழுதைக்கிம் என்னையா வித்தியாசம். தராதரம் பாக்காமா சுத்துனா கண்டவங்கிட்ட அடிவாங்கத்தான் வேணும். எதுக்கு அடிச்சான்னு கேட்கறத வுட்டுப்போட்டு அடுத்தூட்டுப் பொம்பளகிட்ட என்ன ரோசம் வேண்டியிருக்கு” மேற்கொண்டு தொடராவண்ணம் செல்லப்பன் சாந்தப்படுத்தப்பட்டார்.

“எல்லாப் பிரச்சனயும் ஒன்னாலதா. தரங்கெட்ட நாயி. நம்ம குடும்பத்து பேர கெடுக்கறதுக்குன்னே இதெல்லா பண்ணுறயா” தொடர்ந்து கடும் கோபத்துடன் சுந்தரத்தை நோக்கி வசை மழை பொழிந்த சுப்பிரமணி இப்போது முத்துவிடம் திரும்பினார்,

“என்ன நடந்துது, ஏதாச்சிதுன்னு ஒழுங்கு மருவாதைய சொல்லிப்போடு முத்து. இல்லீன்னா, இப்ப சொம்மா கண்ணக்காட்டுனாப் போதும் பயக ஒம்பட தோல உரிச்சுப்போடுவானுங்க தெரியும்ல. போனாப் போச்சாது நம்ம பய. அதுக்காத்தொட்டு நாயமா நடந்துக்கலான்னு பாக்குறேன். இதாஞ் சாக்குன்னு நீ வெனயமா நடந்துக்காத”

“சாமீ, நானெங்கீங்க வாத்தியார அடிச்சேன். ஆளுக்கொரு கட்டிங்தானுங்க அளவு. இன்னிக்கி குமாரு, எங்க பங்குலயும் சேத்தி கொஞ்சம் எச்சா குடிச்சிட்டாப்ளங்க. மப்பு ஏறிப்போச்சு. அவந்தா குடிகார நாயி, நடக்காததெல்லாம் ஒளர்ரான். நீங்களும் அதப்போயி நம்புறீங்களே. நாயமா?” முத்துவுக்கு அளவான போதைதான். இருந்தாலும் வேண்டுமென்றே அவர் குழறிப்பேசுவது தெரிந்தது.

“டேய் முத்தா, நா எத வேணும்னாலும் பொறுத்துக்குவேன். பொய்யி மட்டும் பேசுன, அப்புறம் நா மனுசனாவே இருக்க மாட்டேன். பொய்யா பேசுற பொய்யி. சொல்ல வேணாமுன்னுதா பாத்தே, ஆனா நீதா எல்லாத்தையும் சொல்ல வைக்குற” கொதித்தெழுந்தான் குமார். பஞ்சாயத்து சூடு பிடிப்பதற்கான அறிகுறி தென்பட, அடி விழுந்த கதையின் அடுத்த கட்டத்தை கேட்கும் ஆவலில் ஊர்சனமும், பஞ்சாயத்தாரும் உசாராய் கவனிக்க, குமார் தொடர்ந்தான் “யாருடா எச்சா குடிச்சா? நீயும் வாத்தியும் எச்செச்சா சரக்க ஊத்திட்டு, எனக்கு மட்டும் ஊருப்பட்ட தண்ணிய கலந்துட்டுட்டு, கடேசீல எனக்கு எச்சாப்போச்சுன்னு பொய்யா சொல்லுற? இத்தனைக்கும் செரி பாதி காசு எம்படது, இது நாயமான்னு நீங்களே கேளுங்க மாமா” முடிக்கும் முன் குமார் முதுகில், சுப்பிரமணியின் இடதுகை இடிபோல் இறங்கியது.

“தெள்ளவாரி நாயி. செவனேன்னு இருந்தவங்களப்பூரா உசுப்பிவுட்டுட்டு, பஞ்சாயத்தையும் கூட்டிவச்சுட்டு, அடி வுழுந்த கதையக் கேட்டா, சாராய அளவு செரியில்லன்னு கதயா வுடுற. இதப் பைசல் பண்ணுறதுக்கா இங்க ஊரே கூடியிருக்குது? கொன்னு போடுவே. ராஸ்கோல். சந்தசெலவு பண்ணப்போன மொகறைகளப் பாரு. குடிகார நாயிங்களா. முத்தா நீ முடிவா என்னதா சொல்லுற?”

 ”சாமீ, ஆயிரங்கண்ணுடையா எங்கொலதெய்வத்து மேல ஆணையாச் சொல்லுறேங்க, உண்ட ஊட்டுக்கு என்னிக்குமே நாங்க ரெண்டகம் நெனச்சதில்லீங்க. மனசார சொல்லுறேனுங்க, மூணு பேர்த்துல சரக்கு குமாருக்கு எச்சாப்போனது உண்மைதானுங்க” முத்துவின் பதில் சுப்பிரமணியை திடுக்கிட வைத்தது.

பின்வரிசையிலிருந்து செல்லப்பன் “அப்புடிப் போடு சபாஷு” என முத்துவை ஊக்கப்படுத்தினார். தான் கோவப்படுவது செல்லப்பனை இன்னும் குஷிப்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்ட சுப்பிரமணி வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் முத்துவை மீண்டும் கேட்டார்

“டே, அதக்கேட்குல. உங்க சாராய நாயமெல்லா எங்களுக்கு வேண்டா. சுந்தரத்தை நீ அடிச்சிப்போட்டைன்னு குமாரு ஊர்பூரா சொல்லி பஞ்சாயத்தை கூட்டிட்டான். அந்தப் பிராதுக்கு நீ என்ன சொல்லுற? அத மட்டும் சொல்லு கண்ட குடிகார நாயமெல்லா பேசுன அப்புறம் மருவாதி கெட்டுப்போகும் பாத்துக்க”

“ஆரோட மருவாதி” என மெல்லியதாய் ஒலித்த செல்லப்பனின் குரலை லட்சியம் செய்யாமல் முத்துவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுப்பிரமணி.

“சாமீ, நீங்க என்ன கொன்னே போட்டாலும் செரி. நான் என்னிக்குமே உண்ட வூட்டுக்கு ரெண்டகம் நெனச்சதில்லை. அது நம்மூருக்கே தெரியுமே. எத்தன தலக்கட்டா இந்தூரே கெதின்னு இருக்கறோம். எம்பட தலக்கட்டுல இப்புடியொரு பழியா? அய்யோ பழனிமல முருகா இதென்ன சோதன? இனி நா எப்புடி மருவாதியா பொழப்பே? மாரியாத்தா ஒனக்குமா கண்ணில்ல? வலுப்பூராத்தா நீயுமா என்னிய சோதிக்குற” எனத் துவங்கினார் முத்து. இதை இப்படியே விட்டால்,  சுத்துப்பட்டிலிருக்கும் ஒவ்வொரு தெய்வமாய் அழைத்து, விடியும் வரை முத்து முறையிடக்கூடும் என உணர்ந்து இடைமறித்தார் சுப்பிரமணி.

“டேய் இந்த பொழம்புற வேலயெல்லா வேணா. முடிவா என்ன சொல்லுற சுந்தரத்த நீ அடிச்சன்னு குமாரு சொல்லுறது உண்மையா ? பொய்யா ? அத மட்டுந்தா சொல்லோனும். ஒந்தொழிலுக்குப் பொதுவா சொல்லு இவன நீ அடிச்சயா? இல்லையா?”

“சாமி, செரியாக் கேட்டீங்க. எந்தொழிலுக்குப் பொதுவா சொல்லுறேங், வாத்தியாரு எனக்கு நெனவு தெரிஞ்ச நாள் தொட்டுப் பழக்கம். அவர ஒரு அண்ணனாட்டந்தா நா பாக்குறேன். இதுநா வர அவருக்கு சரக்குல இருந்து சாப்பாடு வரைக்கிம் என் செலவுதா. அதே மாதிரிதா போக்குவரத்து, வெத்தல பாக்கு, பீடி தீப்பெட்டி… ”

அடுக்கிக்கொண்டே போனவரை, இப்போது இடைமறித்தது செல்லப்பன், “அட முத்தா, தே சுத்தி வளைக்கற, கோமணத்த தவுர பூரா ஒங்கைக்காசுன்னு சொல்லு. வெக்கங்கெட்ட பொழப்பு. தலைவராம் தலைவரு. முப்பதேக்கரா இருக்குது, இரவதேக்கரா வெளயுது அப்படின்னு பெரும பீத்த தெரியுது, கூடப்பொறந்த பொறப்புகிட்ட காச்செண்டு அரச்செண்டு கணக்குப்பாக்கத் தெரியுது, ஆனா, ஒடம்பொறந்த பங்காளிய கையேந்த உட்டாச்சு. அவம் பொழைக்க ஒரு வழியும் பண்ணக்காணோம். இந்தப் பொழப்புக்கு…” தொடரவிரும்பாதவராய் அமைதியானார் செல்லப்பன்.

சுப்பிரமணியின் கோபம் எல்லை கடக்கத்துவங்கியது

“டே, சுந்தரா நீ என்ன சொல்லுற. இந்த ரண்டு நாயிங்க பேச்சையும் பவுசையும் பாத்தேல. நம்ம குடும்பத்து மானமே சந்தி சிரிக்கிது. நீ ஒண்ணும் பேசாதிருந்தா என்னடா அர்த்தம் ?” குமுறலுடன் தம்பியை நோக்கித் திரும்பிய சுப்பிரமணி அதிர்ந்துபோனார்.

கூட்டம் துவங்கும்போது, பந்தக்காலில் சாய்ந்தபடி இரு கைகளையும் கட்டிக்கொண்டு அனைவரையும் ஏளனப்பார்வை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த சுந்தரம். இப்போது இத்தனை களேபரங்களுக்கிடையிலும் நின்றபடியே தூங்கிவிட்டிருந்தார். தலை கவிழ்ந்திருக்க, வாயிலிருந்து ஒழுகிய எச்சில் சட்டையை நனைத்திருந்தது. சுப்பிரமணி அதிர்ந்துதான் போனார். பின்னர், சுதாரித்துக்கொண்டு குமாரை நோக்கி “டேய், அவனை எழுப்பு. அப்படிப்போயி மூஞ்சியை கழுவி தெளிய வச்சி கூட்டிட்டு வா” என்றார். சுந்தரத்தை அழைத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாய் இருட்டிலிருந்த தண்ணீர்க்குழாயை நோக்கி செல்போனை உயிர்ப்பித்தபடியே சென்றார் குமார். 

அவர்கள் திரும்பி வரும் வரையில், பஞ்சாயத்தில் ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாக முத்துவை ஊரைவிட்டு ஒரு மூன்று மாதம் தள்ளிவைக்கலாம் என முன்வைக்கப்பட்டது. சுப்பிரமணி யோசித்துக்கொண்டிருக்கையில் வாத்தியாரும் குமாரும் திரும்பி வந்தனர். இப்போது வாத்தியாரிடம் கொஞ்சம் தெளிவும், குமாரிடம் கொஞ்சம் தள்ளாட்டமும் அதிகமாகியிருந்தன. அதைக் கவனிக்காதவராய் சுப்பிரமணி தொடர்ந்தார்.

”செரி, நீங்க ஆளு மாத்தியாளு கதை சொல்ல வேணாம். இப்பவே மணி 10 ஆச்சு. அல்லாருக்கும் நாளைக்கி சோலி கெடக்குது. அடிச்சியாங்கற கேள்விக்கி முத்து ரூப்பா பதில் சொல்லல. இல்லைன்னும் சொல்லல. கூடவே, அடிச்சத பாத்த சாட்சியும் இருக்குது. அடிவாங்குன ஆளு பதில் சொல்லுற நெலமைல இல்ல. சொன்னாலும் கூட்டுக்காரன காப்பாத்தத்தாம் பாப்பான். நல்லா ரோசன பண்ணிப்பாத்தா ஊர்ல பெரும்பாலும் சொல்லுற முடிவு செரின்னுதா நானும் நினைக்கறேன். அதனால ஒரு மூணு மாசத்துக்கு முத்தன நாம நல்லது கெட்டதுக்கு சேத்திக்காம ஊரவுட்டு தள்ளி வெச்சிடலாமா ?”

”சபாசு… அதுதான் செரி” விசிலடித்த குமார் தொடர்ந்தான். “மாமா, நீங்களும் உங்க பெரிய தாத்தனாட்டமே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான். நல்ல முடிவு. அப்ப, நம்ம ஆறுக்குட்டி மாமன் பேத்தி சீருக்கு இன்னும் ரெண்டு நாளுதான இருக்குது. முத்தன் வேண்டாமின்னா, அசலூரு நாசுவன கூப்படோனுமில்ல. அது எப்புடி அவுரு செலவா?”

சுப்பிரமணிக்கும், ஆறுக்குட்டிக்கும் மட்டுமல்ல, பஞ்சாயத்தில் கூடியிருந்த அத்தனை மக்களுக்கும் அப்போதுதான் அந்தச்சிக்கல் உரைத்தது. நல்லது கெட்டதுகளுக்கு சடங்கு சாங்கியம் செய்ய முதலில் அழைக்கப்படுபவர் முத்துதான். கொடுத்த காசை கும்பிடு போட்டு வாங்கிக்கொள்வது, அரிசியோ பருப்போ அளந்து கொடுப்பதே போதுமென்று திருப்தியடைவது, துக்கவீடோ, விசேசமோ ஊர் தரும் காசை முகம் சுளிக்காமல் வாங்கிக்கொள்வது என வேறெந்த ஊரிலும் இல்லாதபடி அனுசரணையாய் இருப்பது முத்துதான். வேறு எந்த ஊரிலிருந்து யார் வந்தாலும், கேட்கும் பணத்தை கொடுத்தாக வேண்டும். கூடவே, போக வர வண்டிக்கு பெட்ரோல் காசும், மேற்கொண்டு கோட்டர் பாட்டில் செலவுகளும் உண்டு. ஆக, முத்துவைத் தள்ளிவைப்பது, ஊருக்குத்தான் பிரச்சனை. அந்த பிரச்சனையை உடனடியாக அனுபவிக்கும் கட்டாயத்தில் இருந்த ஆறுக்குட்டி குமுறினார்

“அதெப்புடி, ஊர்ப்பிரச்சனைக்கு தள்ளிவச்சா அதனால வார செலவ ஊருதான் பொதுக்காசு வசூல்பண்ணியாச்சும் பாக்கோணும். இது வாத்தியாரு தண்ணியப் போட்டுட்டு ஒத வாங்குன பிரச்சனதான இதுக்கெப்புடி எம்பட ஊட்டு விசேசத்துக்கு எடஞ்சல் பண்ணலாம்? இல்ல நாம்மட்டும் கைக்காசு செலவு பண்ணுறதுக்கு இளிச்சவாயனா? இது நல்லாயில்ல சுப்பா”

அதுவரை அங்கு சூடாக விவாதிக்கப்பட்ட மானம் மரியாதை எல்லாவற்றையும் பொதுக்காசு வசூல் எனும் சேதி பின்னுக்குத் தள்ளிவிட்டது. சொன்னதெல்லாம் செய்துவிட்டு, குடுத்த காசை வாங்கிச் செல்லும் முத்துவின் பரிதாப முகம் அங்கு கூடியிருந்த சம்சாரிகளுக்கு இப்போதுதான் நினைவில் வந்தது. கூடவே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் முத்துவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழத்துவங்கின. சூழலைப் புரிந்து கொண்டு, அதுவரை அடக்கமாய் ஒலித்த செல்லப்பனின் குரல் ஓங்கி ஒலித்தது.

”ஹீம் ஊருக்காசு நொட்டுவாங்க, ரெண்டு பேருக்குள்ள தனிப்பட்ட மொறைல நடந்த தகராறுதான. அதெப்புடி, முத்தனமட்டும் தள்ளிவச்சா செரியாப்போச்சா? இல்ல தள்ளிவெச்சே ஆவோணும்ன்னா, மூணு மாசமோ ஆறு மாசமோ, நல்லது கெட்டதுக்குன்னு ஆகுற செலவுக்கு வாத்தியே காச அவுக்கட்டும். வாத்திகிட்ட இல்லாட்டி, பங்காளி நொங்காளின்னு சொல்லிட்டு, வெள்ளையும் சொள்ளையுமா ஊர்ப்பஞ்சாயத்து பேசிட்டு திரியற பயலுக, இந்த மாதிரி ஆகுற செலவுகள செய்யட்டும். அட பணம் செலவு பண்ண வக்கில்லையா, பேசாம வாத்திய ஊர உட்டு தள்ளி வச்சிடுங்க. கூடவே அவங்கண்ணனோ நொண்ணனோ அவங்குடும்பத்தையும் தள்ளி வச்சிடுலாம். கருமத்த நாமளாவது கொஞ்ச நாளு நிம்மதியா இருக்கலாம்”

அவ்வளவுதான், அதுவரை அடக்கிவைத்திருந்த கோபம் எல்லை கடக்க ”எவன எவண்டா தள்ளி வக்கிறது. மாமன் மச்சான்ங்கிற மருவாதி கெட்டுப்போயிடும் பாத்துக்க” செல்லப்பனை நோக்கி கையை நீட்டிப் பேசினார் சுப்பிரமணி.

“அடா புடாண்ணாடா பேசுற. ஒங்களுக்கொரு நாயம் ஊருக்கொரு நாயமாடா? உந்தம்பிக்கார குடிச்சிப்போட்டு ஒதைவாங்குனா அதுக்கு ஊரு என்னடா பண்ணும், இல்ல தெரியாமத்தாங் கேட்குறேன், ஊருக்காரனுங்க எதுக்கு செலவு பண்ணோனும்? நீ அவ்வளவு பெரிய ரோசக்காரந்தான, முத்தன தள்ளிவைச்சிட்டு, மூணு மாசத்துக்கு நல்லது கெட்டதுக்கு ஆவுற செலவ ஒன் கையில இருந்து கொடுத்துட்டு அப்புறமா பேசுடா பாக்கலாம்“ செல்லப்பனும் விடுவதாயில்ல.

கொதித்தெழுந்த சுப்பிரமணி, பஞ்சாயத்து மேடையிலிருந்து இறங்கி, “நாயம் சொல்லுறதுக்கெல்லாம் ஒரு தராதரம் வேணும். நீ பேசுன பேச்சுக்கு மச்சானா இருக்கத்தொட்டுத்தா நாம் கம்முன்னு இருக்கேன். இதே வேற எவனாவது இப்புடிப் பேசியிருந்தா தெரியும்” கையை நீட்டிப் பேசிக்கொண்டே செல்லப்பனை நோக்கி வந்தார்.

”என்னடா பண்ணுவ? என்ன மெரட்டுறயா? பக்கத்துல வந்து பாருடா, பொறவு தெரியும்” சுப்பிரமணியை நோக்கிப் பாய்ந்தார் செல்லப்பன்.

அதற்குள் கூடியிருந்த கூட்டம் சுப்பிரமணியையும் செல்லப்பனையும் விலக்கி விட முயன்றது. விலக்கும் களேபரத்தில் ஆளாளுக்குப் பேச, செல்லப்பனுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் சுப்பிரமணியின் கட்சிக்கு ஒரு கூட்டமும் சேர, மொத்தத்தில் ஊரே ரெண்டுபட்டுப் போனது.

கலவரத்தின் முசுவில் அனைவரும் மூழ்கியிருக்க, “ஏதாச்சிம் மிச்சம் மீதி இருக்குதா?” சுந்தரத்தை நெருக்கிக் கேட்டார் முத்து. இடுப்பைத் தொட்டுக்காட்டியபடி ஓரமாய் இருட்டை நோக்கி நடந்த குமாரைத் தொடர்ந்தார்கள் சுந்தரமும், முத்துவும்.

இருந்த கொஞ்சம் சரக்கையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு முத்து கேட்டார், “என்ன குமாரு, பேசுனியா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

குமார் சொன்னார் “அதெல்லாம், அப்பயே கதிருகிட்ட பேசிட்டேன். ஒரு பிரச்சனையுமில்ல. பஸ்ஸு சேலத்துல இருந்து கெளம்பியே அர மணி நேரம் ஆச்சு. இன்னேரம் தேவியும் கதிரும் தர்மபுரி தாண்டி போயிருப்பாங்க”. சிறிது இடைவெளிவிட்டு சுந்தரத்திடம் கேட்டார், ”தேம் மாமா, இனித்தா சொத்துபத்தெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஆயிடுமே. உங்கொண்ணனும், மச்சானும் இனியாவது திருந்துவானுகளா?”

“நொட்டுவானுங்க. நாளெக்கி பாரு, இதுக ரெண்டும் கொழந்த குட்டியோட வந்து நின்னா, அப்பமட்டும் பல்லிளிச்சிட்டு வந்து சேத்திக்குவானுங்க. எது எப்புடியோ, சின்னஞ் சிறுசுக, நல்லா இருந்தா செரி” சொன்னபடியே பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு இருட்டுக்குள் அமர்ந்த சுந்தரத்தின் இருபுறமும் முத்துவும் குமாரும் அமர்ந்துகொண்டனர். அந்தக் கும்மிருட்டுக்குள், ஒற்றைப்பீடிக் கங்கு மட்டும், அவர்கள் மூவர் கையிலும் சுத்தி சுத்தி வந்தது.

காளீஸ்வரன்.

அம்மா சரஸ்வதி, மனைவி அருணா மற்றும் பிள்ளைகள் கார்த்திக், கிருத்திகாவுடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகில் திருமுருகன்பூண்டியில் வசித்து வருகிறேன். கோவையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். அப்பாவின் மளிகைக்கடையில் வாராந்திர பத்திரிக்கைகளில் துவங்கிய வாசிப்பு கல்லூரிக்காலங்களில் இலக்கிய வாசிப்பாக வளர்ந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *