ராஜேஷ் வைரபாண்டியனின் ‘அறல்’ சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் முன்பாக- நன்றி என்று கதைகள் வெளிவந்த இதழ்களை குறிப்பிட்டிருந்தார். அதில் நடுகல் இதழுக்கும் நன்றி இருக்கவே இவரு எப்படா நடுகல்ல எழுதுனாப்டி? என்றே ஆச்சரியப்பட்டேன். சமீப காலங்களில் கதைகள் விசயத்தில் பெரிதாய் ஞாபகத்தில் இருப்பதில்லை. தொகுப்பின் தலைப்பான ‘அறல்’ சிறுகதையை வாசிக்கையில் ‘அட இந்தக்கதை தானப்பா!’ என்று ஞாபகத்தில் வந்துவிட்டது.

கதையானது பிரிட்ஜினுள் ஐஸ் துண்டுகளுக்குள் நடைபெறும் உரையாடல் என்பதை கதை முடிகையில்தான் நம்மால் உணர முடியும். முன்பாக வாசிக்கையில் கேரட் அல்லது பீட்ரூட்டாய் இருக்குமோ? என்று வாசித்தேன். மூன்று ஐஸ்க்கட்டித்துண்டுகள் சரியாக சாத்தப்படாத பிரிட்ஜினுள் இருந்து தப்பி குழாய் இணைப்பின் வழியே பயணித்து ஒரு பூச்செடியின் வேரில் விழுந்து கரைந்து செடிக்கு உயிர்கொடுப்பதாய் முடிகிறது. வித்தியாசமான யோசனை. நவீன விமர்சகர்கள் கையில் சிக்கினால் பிரிட்ஜ் என்பது சிறை என்றும்.. தப்பிக்கும் மூன்று கைதிகளும்.. என்றெல்லாம் வளைத்து அடித்துவிடுவார்கள். அதெல்லாம் எதற்கு? நேரடியாக பேசும் புதிய யுக்தியான கதை என்றே சொல்வேன். இந்தமாதிரியான முயற்சிகள் தமிழில் பலர் முயற்சித்தார்கள் வேறு வேறு வகைகளில். எஸ்.ராமகிருஷ்ணன் வெற்றிபெற்றதாக ஆரம்பகாலங்களில் நினைத்தேன். இப்படி எழுதப்படும் எழுத்துகள் அதிகம் பேசப்பட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் எழுத்தாளன் பலவிதங்களில் வடிவ மாற்றங்களை தன் கதைகளில் செய்துகொண்டேதான் இருக்கிறான்.

உயிர்மையில் வெளிவந்தபோதே வாசித்திருந்த கதை ‘கதவுகள்’. முதலாக இப்படியொரு யோசனை தோன்றியதும் அந்தக்கதையை பெண் பார்வையில் வைத்து மிக நேர்த்தியாய் சொல்லிச்சென்றார். சென்னையில் ஐ டி கம்பெனியில் பணியிலிருக்கும் பெண் நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் தனியாக பயணம் செய்ய முடிவெடுத்து வயநாடு என்று முடிவு செய்து மலை கிராமமான வெப்பாடி சென்று நான்கு நாட்கள் தங்குகிறாள். நான்கு நாட்களும் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள். அங்கே பாத்ரூமில் மாட்டிக்கொண்டு அவள் தவிப்பதை மிக நேர்த்தியாய் ஆசிரியர் சொல்லுகையில் ஒருவித பதைபதைப்பு வாசகனுக்கு ஏற்படுகிறது. இந்தப்பெண் எப்படியாவது தப்பிவிடட்டுமே! என்கிற தவிப்பை வாசிப்போர் மனதில் உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்ச்சிறுகதையில் இப்படியான பதைபதைப்புக்கதைகள் படித்து பலகாலமாகிவிட்டது.

’கழுமரம்’ கதை ஆண் பாலியல் தொழிலாளியின் சிரமங்களையும், கோபத்தையும், அடங்கி ஒடுங்குதலையும் சொல்கிறது. முன்பாக ஒரு நாவல் இப்படி தமிழில் வெளிவந்தது. கேபிள் சங்கர் எழுதியதாக நினைவு. ’பனிக்காலத்தின் பகல்’ சிறுகதையானது ஞாபகமறதிக்கார பெரியவராக காட்டி, அடிபட்டு மண்டையில் ஒழுகும் ரத்தமுடன் சாலையில் கிடப்பவரை ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனை அனுப்பும் நாயகனை காட்டுகிறது. எல்லாம் சரியாய் செல்கையில் பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பெரியவராகச்சொல்லி கதையானது அதிர்ச்சியை கொடுக்கிறது. அவரது மரணத்தையும் சொல்லி முடிக்கிறது. ‘வடக்கத்தி’ கதையானது நகைச்சுவையுடனும், நல்லவித சம்பாசனைகளுடனும் புன்னகைத்தபடி வாசிக்க வைத்தது. அந்தக்கதையின் முடிவிலும் காட்சிகளாகக்காட்டி ‘அட!’ என்று சொல்லவைக்கிறார்.

‘ஏன் எனக்கென்ன கொறச்ச? இனி மயிலு குயிலுன்னு மருவாதி இல்லாம பேசனன்னு வெய்யி செவுள்லயே வெச்சிப்புடுவேன். இனி அவ எம் பொஞ்சாதி. உனக்கு தங்கச்சி மொற, புரியுதா சொடல’

தொகுப்பில் சிறப்பான கதையாக ‘ஜடேஜாவைக் காதலித்தவள்’ தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த கண்மணி டிவியில் ஜடேஜாவின் விளையாட்டைக்கண்டு காதலாகிறாள். உள்ளூரில் ஜடேஜா போன்றே மட்டைப்பந்தாடும் தங்கதுரையின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்து அவன் மீது காதல்கொள்கிறாள். இருவரும் வாழைத்தோப்பினுள் காதலிக்கிறார்கள். தங்கதுரையின் அப்பா கண்மணியின் தந்தையிடம் அவள் காலை ஒடிக்கச்சொல்கிறார். கண்மணியின் நாயின் உதவியுடன் தப்பி வந்தவர்கள், அன்றே  தந்தையின் அறிவுரைப்படி சொந்தக்காரர் வீடு செல்வதாய் முடிகிறது. ஏழு வருடங்கள் கழித்தும் கண்மணிக்கு என்னவாயிற்று என்று வாசகர்களுக்கும் தெரியாத சமயத்தில் ஒரு முடிவை நமக்குக்காட்டுகிறார். மிகச்சிறப்பானதாகவும், வடிவ நேர்த்தியுடனும் வந்தகதை இது.

தொகுப்பின் முதல் கதையாக ‘கொண்டலாத்தி’ சிறுகதை கொண்டலாத்தி என்கிற யட்சி-யைப்பற்றி பேசுகிறது. பழைய சம்பிரதாய பேச்சுகள் யட்சி பற்றி பேசு பொருளாக இந்தக்கதையிலும் இடம்பெறுகிறது. யட்சி வந்தா கூடவே ஒரு வாசனையும் வரும்! அந்த வாசனை ஆணை மயக்கிவிடும். அப்புறம் அவன் தீர்ந்தான்! இதான் கான்செப்ட். இந்த கதையின் நாயகன் தான் உணர்ந்த வாசனை பற்றி தன் அம்மாவிடமும் வினவுகிறான். அம்மா ஒரு புதுப்புனைவை எடுத்து இயம்புகிறது மகனுக்கு. யட்சியை விட அதன் வாசனை இந்தக்கதையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதே உண்மை.

‘சின்னக்கிளி குட்டியப்பன் என்கிற கதையும் தன் மகன் மீது பாசம் வைத்த தாயைப்பற்றி முழுமையாகவே ஒரு சிறுகதைக்குள் சொல்லி முடித்துவிடுகிறது. இந்தக்கதையில் மாடும் அதன் கன்றும் உயிர்ப்புடன் வாழ வைத்தது ஆசிரியரின் திறமை. போக ‘ரயிலில் பயணிக்கும் பெண்’ கதை உலக மகா இழுவை. முடிவு முன்பே தெரிந்து விடுகிறது என்பதே இந்தக்கதையின் இழுவையான தோல்வி. ‘சித்திரைப்பூ’ கொடுமை!

வாசிக்க உகந்த தொகுப்பு ‘அறல்’

வெளியீடு :- எழுத்து பிரசுரம். விலை : 150. போன் : 89250 61999

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *