ரவி அல்லது.
தின்பண்டங்கள் இருக்கும் பிளாஸ்டிக் வாளியை துலாவிக்கொண்டிருந்தபொழுது மனைவி அதில் நீங்கள் சாப்பிடும் எதுவும் இல்லை என்றார். கடந்த வாரம் கமார்க்கெட் மிட்டாய் கண்ணன் ஸ்டோரில் வாங்கியது நினைவுக்கு வர கையை பிஸ்கெட்டுகளை விளக்கி அதைத் தேடிக்கொண்டிருந்தேன். பாக்கெட்டை எடுத்து கத்திரிக்கோளால் மூலையில் கட் பண்ணி மூன்று மிட்டாய்களை எடுத்தேன். அதில் ஒன்றின் கவரை வாயால் கிழித்து குப்பைத் தொட்டியில் அதன் கவரை போட்டு விட்டு மிட்டாயை வாயில் சுவைத்து இரண்டை பேண்டின் பின் பாக்கெட்டில் வைத்தபோது
“எனக்கு இது இருந்தது தெரியாதே.” என்றார் மனைவி.
அவருக்காகத்தான் அதை நான் வாங்கினேன். அவர் இந்த மிட்டாய் விரும்பி சாப்பிடுவார். நான் பொறி உருண்டை விரும்பி சாப்பிடுவேன்.
வண்டியில் போகும் போது மிட்டாய் சுவைத்துக் கொண்டே ஏதாவது சிந்திப்பது பயணத்துக்கு ஏதுவாக இருக்கும். அந்தோணியார் கோயில் தெருவில் செல்லும்போது சிசில் வசந்த ரோஸ் வண்டியை நிறுத்தினார். அவர் நண்பர் ஒருவருடன் எங்கோ வெளியே கிளப்பிக்கொண்டு இருந்தார்.
வழக்கமாக என் பரபரப்பை கிண்டலடித்தவர் ‘வாயில் பாக்கா சார் சாப்பிட்றீங்க.’ என்றார்.
” இல்லை வசந்த்(சிசில் என்றுதான் முன்பு நான் அவரை அழைப்பேன். சர்டிபிகேட்லதான் சார் அந்த பெயர் இருக்கு. நீங்கள் கூப்பிடும்போது தான் அது ஞாபகத்துக்கு வருது என்று ஒரு முறை சொன்னார். அதிலிருந்து நானும் வசந்த் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டேன்.) நான் சாப்பிட்றது கமார்க்கட் ” என்று சொன்னதும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
“எப்படி சார். எப்பவுமே சிரிச்சுக்கிட்டு ஜாலியாக சின்னப் பசங்க மாதிரி துருதுருன்னு இருங்கீங்கன்னு முன்னாடி கேட்பேன். இப்போ என்னடான்னா சின்ன பசங்க மிட்டாய் சாப்பிட்றீங்க.”
“நான் சின்னப் பையன் தானே வசந்த்.”
பின் பாக்கெட்டிலிருந்து ஒரு மிட்டாய் எடுத்துக் கொடுத்தபோது அவர் நண்பர் எனக்கு பின்னால் இருந்ததால் அவருக்காக இன்னொரு மிட்டாய் எடுத்துக்கொடுத்தேன்.
“டிராவல்ல சாப்பிடலாம்ன்னு வைத்து இருந்தேன். அது உங்களுக்கும் கொடுக்கனும்ன்னு இருத்திருக்கு.”
“சார் நீங்க கொண்டு போங்க.”
“வேண்டாம் வசந்த். நான் கிளம்புறேன் டைமாச்சு.”
“சார் எப்போதும் பரபரப்பு தான். நானும் ஒரு கல்யாணத்துக்கு போறேன் சார்.”
நான் கிளம்பும்போது எனக்கென்று நினைத்து எடுத்த மிட்டாய் அவர்களுக்கு சென்றதன் வியப்பிலேயேப் பயணமாகிக் கொண்டு இருந்தேன்.
கடந்த வாரம் ஒரு நாள் இரவு வெளியே போக வேண்டிய நான் சாப்பிட உட்கார்ந்த போது ரஜினி போன் செய்தார்.
“சொல்லுங்க ரஜினி.”
“லோக்கல்லதானே இருக்கீங்க.”
“ஆமாம் சொல்லுங்க.”
“கடைக்கு வரலாமா ஒரு செய்தி சொல்லனும்.”
“சாப்பிட்டு வருகிறேன்.”
அவர் அழைத்தால் ஏதாவது பிரச்சினையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
காலையில் வாங்கிய தட்டைக்காரப் பொடி மீன் சில பேர் கரண்டிப்பொடி என்றும் சொல்வார்கள். அந்த குழம்பு வாசனை சின்ன வயதில் சாப்பிட்ட பல நினைவுகளை மனதில் ஓட வைத்தது. மனைவிக்கும் மகளுக்கும் இந்த மீனில் பெரிதாக ஆர்வம் காட்டமாட்டார்கள். குழம்பை மட்டும் ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். இதைக் கவனமுடன் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் தொண்டையில் முள் மாட்டி விடும். குழந்தை பெற்றவர்கள் பால் ஊற இதைத்தான் சாப்பிடுவார்கள்.
ரஜினி மீண்டும் போன் செய்தார்.
“போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்களா. ஞாயிற்றுக்கிழமை மணிக்கூண்டுக்கிட்டக்க இருக்கிற சிசிடிவி புட்டேஜ் பார்க்கனும்.”
“எனக்கு யாரும் தெரிஞ்சவங்க இல்ல. இருந்தவங்க டிரான்ஸ்ஃபர் ஆயிட்டாங்க. பசங்ககிட்டே வேண்டுமானால் விசாரிக்கலாம். கடைக்கு வர்றேன் நேர்ல பேசிக்கலாம்.”
கரண்டிப்பொடியை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொன்னாலும் வீட்டில் உள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
உண்மையில் சிறிய மீன்கள் பட்டியல் என்னிடம் நீளமாக உண்டு. அது ஒவ்வொன்றும் ஒரு சுவையில் இருக்கும். ஊடகம் போன்ற சில மீன்களைச் சமைக்கும்போது அதனுடன் பூவாளி மீன் ஒன்றைச் சேர்த்துச் சமைத்தால் அதன் சுவையே பிரமாதமாக கொஞ்சம் கூடுதலாகவேச் சாப்பிட முடியும்.
இரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது யாரோ உணவகத்தில் வாங்கிச் சென்ற இட்லி கீழே விழுந்து சிதறி கிடந்தது. அதனை நாய்கள் இரண்டு சண்டையிடாமல் சாப்பிட்டக் கொண்டு இருந்தன.
டிராபிக்கில் நிற்கும் போது முன்னாடி நின்ற பைக் பின்னாடி நகர்த்தியதில் ரஜினியுடைய வண்டியில் மோதி இருக்கிறது . அதற்கு அந்த ஆள் ரஜினியிடம் சண்டைக்கு வந்திருக்கிறார். இதை விவரமாக ரஜினி சொன்னதைக் கேட்டுவிட்டு அவரிடம் நான் பல விசயங்களைப் பேசி முடித்தபோது அவர் சொன்னார்.
“தலையே அடங்கிப் போகும்போது வால் ஆடக்கூடாது. சுருட்டி வச்சிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.”
“பத்து வயதிலேயே என்னைய இடம் மாத்தி வேற மாதிரி வளர்த்துட்டாங்க. நீங்கள் நினைக்கிற மாதிரி நான் இல்லை ப்ரதர். ஒதுங்கி வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் கடந்துவிட்டீர்கள். வேற வழியே இல்லை. நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய தான்.நான் போகும்போது அந்த இடத்தைப் பார்க்கிறேன். ஏதாவது கேமரா அந்த இடத்தை கவர் பண்ணி இருந்தா உங்களுக்கு போன் செய்கிறேன்.எனக்கு என்னமோ இது தற்செயலான நிகழ்வாகத்தான் தோன்றுகிறது.”
அவர் கடையிலிருந்து கிளம்ப நான் நினைத்ததைவிட கூடுதல் நேரமாகிவிட்டது. கண்ணன் ஸ்டோருக்கு செல்ல பழைய நீலா தியேட்டர் சாலையிலிருந்து திரும்பிய நேரம் இடதுபுறமிருந்து வேகமாக பைக்கில் வந்த இளைஞன் பிரேக் அடிக்க நான் மெதுவாக வந்தததால் நானும் பிரேக் அடிக்க பெரிய விபத்தொன்று நடைபெறாமல் போனது.அவன் “சாரி சார்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் வேகமெடுத்து கிளம்பிவிட்டான்.
விபத்துக்களைப் பற்றிய அக்கறையற்று வேகமாக பைக்கை ஓட்ட வேண்டும் என்று இவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது என்று தெரியவில்லை. சிறுவயதிலிருந்து வீடியோ கேம் விளையாடியதால் மனம் வேகத்திற்கு பழகிவிட்டது என்று ஒரு முறை நண்பரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. “சார் குறுக்கே நீங்க வரலைன்னா இந்நேரம் நான் போய் சேர்ந்திருப்பேன் சார். அவன் நேரா என்னை நோக்கித்தான் வந்தான்.எல்லாம் முடிஞ்சிதுன்னு நினைச்சேன்.தெய்வாதீனமா நீங்க வந்தீங்க.நன்றி சார் “
வலதுபுறம் பைக்கில் வந்தவர் சொன்னார்.எனக்கு வயிற்றில் ஜிவ்வென்று ஏறியதும் கோபமும் மாறாமல் இருந்தது.
பக்கத்தில் உள்ள மங்களா ஜூவல்லர்ஸ் கடை வாசலில் பைக்கை நிறுத்தியபோது ஒரு வயதானவர் தர்மம் கேட்டார். ஸ்கூட்டியில் கைபேசி வைக்கும் இடத்தில் போட்டு வைத்திருந்த சில்லறை காசுகளில் இரண்டு ஐந்து ரூபாய் காசுகளை அவருக்கு எடுத்துப் போட்டு விட்டு சாலையைக் கடந்தபோது மனம் பழைய நிலைக்கு மாறிவிட்டது.
கண்ணன் ஸ்டோர் உள்ளே நுழைந்தபோது பாலாயிக்குடிக்காடு ஜெயக்குமார் தம்பி சந்துரு நின்று கொண்டு இருந்தார். கல்லாவில் கண்ணன் ஸ்டோர் ஓனர் அசோக் இல்லை.பெங்களூர் செல்வதற்கு முன் அவருக்கு வாட்ஸ் ஆஃப் செய்கிறேன் என்ற செய்தியை செய்யாமல் விட்டத் தயக்கம் எட்டிப் பார்த்தது.
நான் வழக்கமாக எதிரில் பார்ப்பவரை பார்க்காததுபோல் கடந்து சென்று பின்னால் நின்று இடித்து வெறுப்பேத்திக் கிண்டலடிப்பது வழக்கம். சந்துருவிடம் அனிச்சையாக காணாததுபோல நகர அவர் சிரித்துவிட்டார். அப்படி கிண்டலடித்துப் பழகுகிற மாதிரி அவரிடம் நான் பழகவில்லை. அண்ணனின் நண்பர் என்ற கண்ணியம் அவருக்கு என்மேல் எப்பொழுதும் இருக்கும். நான் பேசும்போதே பல முறை கிண்டலடித்து விடுவேன். எவரையும் கிண்டலடிக்காமல் எனக்குப் பேசுவது சிரமம்.
ஒரு முறை செந்தில் நாதன் சிங்கப்பூரிலிருந்து வந்து என்னைச் சந்தித்தபோது ஜெயச்சந்திரனைத் தெரியுமா என்றுக் கேட்டான். நான் சரியாக நினைவு இல்லை. யார் என்றுக் கேட்டேன்.
“ஏங்க சார். உங்கள மாதிரி இன்டெலக்சுவல் ஆட்கள் எல்லாம் இப்படித்தான் தலைகனமா பேசுவீங்களா. அந்த ஆள் தண்ணியைப் போட்டால் உங்களப் பத்திதான் சொல்வாப்ள. ‘அவர் மட்டும் அன்னைக்கு பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் போடும்போது பேசாட்டி. நான் சிங்கப்பூர் வந்திருக்கமாட்டேன்.’ன்னு அடிக்கடி சொல்வார். நீங்க என்னடான்னா கடுப்பேத்திக்கிட்டு.”
“நீ ஏன்டா பொங்குறே. பாளையம் கவர்மென்ட் பங்கில் பெட்ரோல் போடும்போது அவரிடம் பேசியது நினைவுக்கு வருது. ஆனா நான் என்ன சொன்னேன்னு நினைவுக்கு வரல.”
“வராது சார்.வராது. அது எப்படி உங்களுக்கு ஞாபகம் வரும். எத்தனையோ பேர்ல அவர் ஒருத்தர்.”
அவன் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ‘இறைவன் நாடினால் அவனுக்கான செய்தியை எவர் மூலமாகவும் அதற்குரியவரிடம் சேர்த்துவிடுவான்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன் நான். அந்த வகையில் அவர் வெளிநாடு சென்றதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று நினைத்தேன். இதைச் சொன்னால் செந்தில் நாதன் இன்னும் அரை மணி நேரம் பேசுவான் என்று விட்டுவிட்டேன்.
ரவி ஆறுமுகம் அப்பா இறந்த அன்று ஜெயக்குமார் துக்கத்திற்கு வராததால் பிறகு ஒரு நாள் அவன் என்னை அழைத்துக்கொண்டு சென்றான். திரும்பி வரும்போது நான் அவனிடம் எதார்த்தமாகக் கேட்டேன்.
“சந்துரு நல்லா இருக்காரா. போன் பேசினாரா.”
“அவனுக்கும் எனக்கும் ஒரு மேட்டர் முட்டிக்கிட்டு இருக்கு. கொஞ்ச நாளாக பேசல.”
“லூசாடா நீ.”
சந்துரு போன் நம்பரை வாங்கி அவரிடம் பேசி சமாதானம் செய்த பிறகு அவரும் ஜெயக்குமாரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினார்கள். ஜெயக்குமார் முகத்தில் அத்தனை சந்தோசம். அந்தப் பக்கம் சந்துரும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
இப்பொழுது அவரை கண்ணன் ஸ்டோரில் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி தான்.
“சினாக்ஸ் வாங்க வந்தேன். நாளைக்கு ப்ளைட்டா.மிளகு முறுக்கு நல்லா இருந்தது. அதான் வாங்க வந்தேன். உங்களுக்கு வேணுமா.”
“இல்ல வேணாம். ஒய்ஃப் அதோ உள்ளாரப் போறாங்க சாமான்கள் எடுக்க.”
நானும் அதற்குத்தான் காத்திருந்தேன். அவரும் அதை ஆமோதிப்பது போலச் சொன்னது எனக்கு ஏதுவாக அமைந்தது.அவர் மனைவி பக்கத்தில் நின்ற சமையத்தில் தான் முறுக்கோடு நான் கமார்க்கட்டு ஒரு பாக்கெட் எடுத்து பில் போடச் சொல்லிவிட்டு அவரிடம் பேசினேன்.
“உங்கள் அப்பா இறந்ததுல நீங்க இரண்டு பேரும் சண்டைகள் போட்டு நாறப் போறீங்கன்னு ஊரே எதிர் பார்த்தது. ஆனா சிறப்பாக கருமாதி வரையும் முடிச்சிட்டீங்க. ரொம்ப சந்தோஷம்.”
“இன்னும் கொஞ்ச நாள் இருந்தா வம்பாகிவிடும்ன்னுதான் நானேக் கிளம்புறேன். முப்பதுக்கு படைக்கிறதை அவர் இருந்துப் பார்த்துக்குவார்.”
“எது எப்படியோ உங்கள் இருவருக்குள் யாரையும் எப்போதும் அனுமதித்து விடாதீர்கள். நான் சிறுவயதிலிருந்தே கூட்டுக்குடும்ப சிக்கல்களை கூடவே இருந்து பார்த்தவன். அந்த அடிப்படையில் தான் சொல்கிறேன். அவன்கிட்ட உங்கள் அப்பா இறக்கின்ற முதல் நாள் பேசினேன். ‘இறந்த பிறகு நீ எப்படி நடக்க வேண்டும். எதை எல்லாம் செய்யக்கூடாது’என்று பேசிய பிறகு தான் அவன் சொன்னான். இப்பதான் ஃப்ரியா இருக்கு மனசு. காலையில் இருந்து டென்ஷனாகவே இருந்தேன்’ என்றான்.”
“அடிக்கடி கோபப்படுவார்.” சந்துரு.
“நானே அவன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கிறேன். சந்துரு உன்கிட்ட பேசாம ஒதுங்குறார்ன்னா. பேசக்கூடாதுன்னு இல்லைடா. அவர் ப்ரஷருக்கு மாத்திரை போட்றார். நீ பிரஷர் ஏத்துனா மறுபடியும் மாத்திரை போட முடியாது. அடுத்த வேலை இல்லைன்னா அடுத்த நாளைக்குத்தான் போட முடியும்.’ நாங்கதான் அண்ணன் ஒத்துக்கிட்டோமே.பிறகு பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதானே’ என்று சொன்னேன்.”
இப்படிச் சொன்னதும் சந்துரு சிரித்தார்.
“கடையில் வியாபாரம் எப்படி போகுது. கூட இருந்தவன் பணத்தை வல்லாப் போட்டுட்டானாமே.”
“ஆமாம்.இப்போ தனியாக வச்சிருக்கோம். நல்லா இருக்கு.”
“கேள்விப்பட்டேன். நான் பேசியதைக் தவறாக நினைக்கவேண்டாம். நான் ஒரு உரிமையில் நீங்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லைன்னு பேசுறேன். ஆக்ஸூவலா நான் என் ப்ரண்டப் பார்க்கப்போகும்போதே இங்க வரவேண்டியது. உங்கள சந்திக்கனும்ன்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான்.அதான் என் ப்ரண்ட் கொஞ்சம் நேரம் கூடுதலாகவேப் பேசி இருக்கிறார். நானும் உங்களைக் கரைட்டாக சந்திச்சுட்டேன்.”
“ஆமாம். ஆமாம். அது நிஜம்தான். போன் பண்ணுங்க எனக்கு.”
“நீங்க பேசுங்க. நான் எப்போதும் ப்ரிதான்.”
‘உங்கள் இருவருக்குள்ளும் எவரையும் அனுமதித்து விடாதீர்கள்’ என்று சொன்னதை சந்துரு தெளிவாக புரிய வேண்டும் என்ற கவலை உள்ளே இருந்தது. அவர்களுக்குள் தீர்க்கப்படாத ஒரு சிக்கல் அப்படியே இருக்கிறது.அதற்கான விதையை நான் அவருக்குள் விதைத்திருக்கிறேன்.அவர்தான் அதை வளர்க்க வேண்டும்.அந்த சமயத்தில் ஜெயக்குமார் வழியாகத்தான் சரி செய்ய வேண்டும். அவர்கள் அதை எப்படி கையாலப்போகிறார்கள் என்பதில்தான் அவர்களின் எதிர்கால இணைவு இருக்கிறது. சகோதர பாசத்தை பேணுவதற்கு அப்போது ஏதாவது நடக்கலாம்.
“அவுங்க எல்லா வேலையும் தலைமேலத் தூக்கிப்போட்டு சிறப்பாகச் செஞ்சாங்க.” என்று இரண்டு முறை ஜெயக்குமாரின் மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். இப்படிச் சொன்னதற்கு சந்துரு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாரா என்று நான் அவரிடம் எப்படிக் கேட்டு உறுதி செய்ய முடியும். ஒரு வேலை இது அவர் மனைவி காதில் விழாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
நான் வீட்டை நெருங்கும்போது நண்பரும் அவர் பையனும் தூரமாக பேக்குடன் வருவது தெரிந்தது. அவர் பையனை வெளியூருக்கு அனுப்பப் போகிறார் என்று தெரிந்ததும் வண்டியை நிறுத்தி போன் வருவதைக் கேட்பதாக பாவனை செய்தேன்.
அவர்கள் என்னிடம் நின்று பேசுவதை அபசகுனம் என நினைத்துவிடக்கூடாது என்று அஞ்சினேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றுவிட்டார்கள்.
அந்தப் பையன் காலேஜ் டிகிரி முடிக்காமல் அதிக அரியர்ஸ் வைத்திருந்ததற்கு தேர்ச்சி பெற நான் எடுத்த முயற்சியும் அந்தப் பையனுக்காக நான் நோம்பு இருந்ததும் அது தொடர்பான பல நிகழ்வுகளுமென எனக்குள் இருக்கும் கதையைப் பிறகு எப்போதாவது சொல்கிறேன். ஒரு வேலை அவர்களுக்கான செய்தி எதுவும் இப்போது என்னிடம் இல்லைபோலும்.
அன்று வாங்கிய கமார்க்கெட்டை மறந்து இப்போது எடுத்து சாப்பிட்டு வரும்போதுதான் வசந்தை சந்தித்து அவரிடம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. எது எது எவருக்கு எப்போது போக வேண்டுமென இறைவன்தான் தீர்மானிக்கிறான்.
****

