இந்த பிரபஞ்சத்தின் வாயிலாக காலம் நமக்கு ஏதேனும் ஒரு பாடத்தை எப்போதுமே கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. நாம் யாரென பிறருக்கும் மற்றவர்கள் யாரென நமக்கும் வெளிக்காட்டியுணர்த்த பிரபஞ்சத்துகளான நம் அனைவருக்கும் நம் மீது படும் அனுபவங்களென்ற ஒளிச்சிதறல்கள் தேவைப்படுகின்றன.

நதியை போல ஓடிக்கொண்டிருந்தாலே, இந்த பூமியின் பல முகங்களைக் காணலாம். துய்க்கிறேன், துடிக்கிறேன், தவிக்கிறேனென்ற உணர்வு குழிகளுக்குள் சிக்குண்டு தேங்கி விடுவதுதான் ஆபத்து. அது நம் குணநலன்களை பாழ்படுத்த தொடங்கிவிடும்.

புத்துணர்வு பெற புதியக் காற்றை சுவாசிக்க வேண்டும். அடைப்பட்டுக் கிடக்காமல் திறந்த வெளிகளுக்குச் செல்ல வேண்டும். சுயமாய் இட்டுக்கொண்ட எல்லைகளைக் கடந்து ஜீவிப்பதின் சாத்வீகத்தை உணர வேண்டும்.

இருப்பினும் உயிர் வாழ ஆக்சிஜன் போல், ஊர் பாராட்டும் உயர்வோடு வாழ இங்கே பணம்தானே இன்னொரு பிராண வாயுவாகிவிட்டது!

விதிப்படி எனக்கு வேலைப் போன பின்னர்தான் தங்கைக்கு மாப்பிள்ளை அமைய வேண்டும் போலிருந்திருக்கிறது. ஏறக்குறைய ஆறேழு வருடங்கள் வளைகுடாவில் அந்தா இந்தா என்று பிழைப்பு ஓடியிருந்தாலும் தங்கைக்கு என் பங்கிற்கு நகைகள் சேர்த்ததிலும் ஓரளவு சுகபோகமாக வாழ்ந்ததிலும் ஊர் திரும்பும்போது மேலதிக கையிருப்பென ஏதுமில்லாமல் போனது.

மேலும் நிறுவனம் வழங்கிய வைப்பு தொகையின் பெரும்பகுதி எஞ்சிருந்த சிறு சிறு வங்கிக்கடன்களுக்கும் பயணத்திற்கான படோபடத்திற்கும் சென்றுவிட்டன. மீதமிருந்த மிச்ச சொச்சத்தை வைத்துதான் அதுநாள் வரை ஊர் காணா தேரொன்றை எப்படியோ இழுத்து பிடித்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.

சட்டென அமைந்துவிட்ட சம்பந்தத்தில் குடும்பமாய் எல்லோருக்கும் அளவுக்கடந்த மகிழ்ச்சியென்றாலும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற ஐயமும் கவலைகளும் என்னை தொடர்ந்து பீடித்துக் கொண்டிருந்தன. தந்தையின் சக்திக்கு பட்டங்கள் பெருமளவிற்கு எங்களைப் படிக்க வைத்து அழகுப் பார்த்ததே அவரது வாழ்நாள் சாதனை!

பாவம், வாப்பா உடன் பிறப்புகளுக்காகவும் எங்களுக்காகவும் ஆயுசுக்கும் மளிகை கடையில் நிலையாய் நின்று நின்று ஓடாய் தேய்ந்தவர். நான் சம்பாதிக்க ஆரம்பித்திருந்துதான் மனுசன் திண்ணையில் சற்று கால்களை நீட்டி மடக்கி கொஞ்சம் ஓய்வெடுத்து வருகிறார்.

என்னதான் எங்களிருவரையும் நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியிருந்தாலும், தங்கைக்கு திருமணம் நிச்சயமானதிலிருந்து பொருளாதாரப் பிரச்சனைகளையொட்டி உள்ளூற அவரும் தடுமாறிக் கொண்டிருந்தார். அதை அவருடைய சோர்வான முகத்திலும், தளர்வேறிய நடையிலும் தொடர்ந்து உணரவும் செய்தேன். கேட்டால் ஒன்றுமில்லை எல்லாவற்றிற்கும் படைத்த ரப்பு இருக்கிறான் என்று சிரிப்பார்.

அவரை ஆசுவாசப்படுத்த நினைத்தேன். கல்யாண செலவுகளைப் பற்றி அதிகம் யோசித்து கவலைகள் கொள்ள வேண்டாம் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேனென அவருக்கு தெம்பூட்டினேன். என்றாலும் அதை எந்த அளவிற்கு நம்பினாரென இளையவனான எனக்கு சரியாக ஊகிக்க முடியவில்லை. மனதளவில் எனக்குள்ளும் எப்படி சமாளிக்க போகிறோமென சிந்தனைகளும் சீற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றன.

அதை அவரும் கவனிக்காமலில்லை.. மகனுக்கும் இப்படி நெருக்கடியாகிவிட்டதே யென எண்ணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஊரில் தனக்கு மிகவும் நெருக்கமான செல்வந்தர் நண்பரைத் தேடி கடனுதவிக் கேட்டுச் சென்றிருக்கிறார். துயர் நீக்கும் வல்லமை இருக்கிறதோ இல்லையோ சக மனிதனின் கஷ்டங்களையுணர்ந்து கண்ணீர் சொரிவது எளியவர்களுக்கு மட்டுமே அதிகம் உரித்தான பண்பு என்று மீண்டுமொருமுறை அந்த தனவான் மூலம் தெரிய வந்தது.

இதனால் தந்தைக்கு விளைந்த தலைகுனிவும் சங்கடங்களும் அதிகமென்றாலும் என் பக்கிங்கிற்கு நானும் அவரை, குடும்பத்தில் யாரிடமும் ஆலோசனைக் கேட்காமல் செய்து வந்த செயலுக்கு கடிந்து கொண்டேன். ஆனால் நிஜத்தில் எல்லாவற்றிற்கும் காரணம் என் வேலையின்மைதான். இல்லையென்றால் அந்த சீமான் தனது நண்பருக்கு சிவப்பு கம்பள வரவேற்பையல்லவா தந்திருப்பார்!

பணி பறி போய், ஊருக்கு வந்த வேகத்தில் தெளிவில்லாத விருப்பத்தின் பேரில் நானும் கூட அசட்டையான வேலையொன்றைச் செய்துவிட்டிருந்தேன். சில நண்பர்களை போல நானும் ஊரிலேயே ஏதேனும் தொழில் தொடங்கிப் பிழைத்துக் கொள்ளலாமென முடிவெடுத்தேன். தொழிலென்றால் எங்களது குலத்தொழிலான மளிகைக்கடையைதான் எளிதென தேர்ந்தெடுத்திருந்தேன்.

விருப்பத்தைச் சொன்னபோது தந்தையும் சரியென்பது போல்தான் தலையாட்டினார். அது எனக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால் அவர் கேட்ட ஒரே ஒரு கேள்வி ‘முதலுக்கு என்ன செய்வாய்?’ அதற்கும் குறைந்தபட்சம் ஐந்து லட்சங்கள் தேவைப்பட்டன. அதனையொட்டி நெருக்கமான நண்பனொருவனைத் தொடர்பு கொண்டேன்.

அவன் பரமக்குடியில் கடை வைத்திருந்தான். அதிகம் படிக்காதவன் என்றாலும் திறமை மிக்கவன். மாதத்திற்கு வீட்டு செலவுகளை போக நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் வரை மிச்சம் பிடிப்பதாய் உள்ளுக்குள் ஆசைகளூட்டினான். அவனும் ஒரு காலத்தில் சவுதியில் கிடந்து வந்தவன்தான். பெயர் ஜமால்.

ஒரு சோதனை முயற்சியாக தனது கடையில் வந்து முதலில் இணைந்து கொள்ளும்படி அறிவுறுத்தினான். சில மாதங்களில் அவனே மதுரை பக்கம் புதிய கடையொன்றைப் பிடித்து தருவதாகவும் மொத்த முதலும் அவனே போடுவதாகவும் வாக்குறுதி கொடுத்தான். வீட்டு மளிகைகள் போக லாபத்தில் சரி பங்கு தருகிறேன் என்றான். ஆரம்ப நகர்வுக்கு அது எனக்கு பரவாயில்லை என்பது போல் தோன்றிற்று.

தந்தையிடம் சொன்னபோது இவ்வளவு முழு மூச்சாக இறங்குவேனென அவரே எதிர்பார்த்திருக்கவில்லை போலும், அப்போதுதான் கொஞ்சம் யோசித்து நிதானமாக முடிவெடு என்றார். ஏனென்றால் எங்கள் கடையிலேயே அவ்வளவாக நின்றதில்லை. தந்தையும் நிர்பந்திக்காமல் படிக்கிற பிள்ளையென என் போக்கிற்கு விட்டுவிடுவார். என்றாலும் பள்ளி படிப்பு வரை அவ்வப்போது அவருக்கு சிறு சிறு உதவிகள் செய்து வந்த பட்சத்தில் எனக்கும் மளிகைக்கடையைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்கவேச் செய்ததாகவே நம்பினேன்.

மேலும் ஒரு இடத்தில் வேலை செய்து வருமானம் ஈட்டுவதை விட, சொந்த தொழிலில்தான் இறைவனின் அருள் அதிகம் இருக்கிறதென மார்க்கம் சார்ந்த நம்பிக்கையும் அந்நேரத்தில் என்னை ஊக்கப்படுத்தியது. நமது விருப்பங்களுக்கும், சூழல்களுக்கு ஏற்ப வாதங்களை ஏற்றுக்கொள்வதும் மாற்றிக் கொள்வதும்தானே மனித இயல்பு? சொந்த தொழிலே சிறந்ததென மனதை ஒருமுகப்படுத்தினேன்.

நான் பட்டறையில் நிற்க பரமக்குடிக்குச் சென்ற செய்தி சொந்த பந்தங்களுக்கிடையே ஏகத்திற்கும் பரவியது. மேலும் ஊருக்கு வந்தபின்னரும் யோயோ பாய் நினைப்பில் அங்கேயும் இங்கேயும் நின்று செல்பிகள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததில் மற்ற நண்பர்களுக்கும் நான் மளிகைக்கடைக்காரனானது தெரிந்துவிட்டிருந்தது. சிலர் வாழ்த்தினார்கள், பலரால் என் போக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஓரளவு அனுமானங்களோடுதான் சென்றேன் என்றாலும் தற்கால மளிகைக்கடை வேலை, என் சிறு பிராயம் போல இரவு ஒன்பது பத்து மணிக்குள் முடிந்துவிடவில்லை; நள்ளிரவு பன்னிரெண்டு, ஒன்றென கடந்து என் பொறுமையை கொன்றுக் கொண்டிருந்தது.

கூடவே கடந்த ஆறேழு வருடங்களாக கார்ப்பிரேட் ஊழியனாக டை கட்டி, குளிரூட்டப்பட்ட அலுவலக வளாகங்களில், சட்டை கசங்காமல் மார்நிமிர்த்தி நடந்தவனுக்கு, பட்டறை வேலைகளிலேற்பட்ட சின்னச் சின்ன தடுமாறல்கள் எனது முடிவை மறுபரிசீலனைச் செய்யும்படி அறிவுறுத்தியது. இடையிடையே வந்து விழும் நண்பனின் நாராசமான ‘ஹாஹா’ சிரிப்பொலிகள் நீண்ட கால நட்பை சீக்கிரமே பாழ்படுத்தி விடுமோவென அஞ்சவும் செய்தேன்.

அந்த ஊரின் புழுதி வெயிலும், குழாயைத் திறந்தால் அரக்கு – மஞ்சள் நிறத்தில் சொட்டுச் சொட்டாய் வழியும் தண்ணீர் தட்டுப்பாடும், இரவுகளில் பிய்த்து தின்னும் கொசுக்கள் தொல்லையும் இனியுமா இங்கிருக்க ஆசைப்படுகிறாய்? பேசாமல் ஊரைப் பார்க்க செல்! என நிகழ்வுகளெல்லாம் என்னை பீதிக்குள்ளாக்கின. பிறகு என்ன மூட்டை முடிச்சுகளோடு மீண்டும் வீடு வந்து சேர்ந்தேன். அது ஊர் மத்தியில் எனது இமேஜை இன்னும் பாதிக்கச் செய்தது.

மேலும் ‘துபாய் ரிட்டர்ன் டு துறந்து வந்த மளிகைக்கடை’ என்ற தலைப்பிலான பயணக்கட்டுரை ஊரின் பண்பலைகளில் விவாதம் செய்யப்பட்டு, இவன் இனி சம்பாதிக்க லாயக்கில்லையோ? என்ற பொது முத்திரையும் குத்தப்பட்டது. எனது இந்த ரிஷிமூலத்தையெல்லாம் அறிந்து வைத்துதான் தந்தையின் நண்பர், நாடி பிடித்து நன்னயம் செய்துவிட்டிருக்கிறார்.

சரி, நாம் நிகழ்காலப் பிரச்சனைக்கு வருவோம். கணக்குப்படி குறைந்தபட்சம் ஏழு லட்சங்களாவது தங்கையின் திருமணத்திற்குத் தேவைப்பட்டது. மண்டப ஏற்பாடுகள் மற்றும் சாப்பாட்டு செலவுகள் போக ஐந்து நாத்தனார்களுக்கும் குறைந்தது அரை அரை பவுனாவது போட வேண்டுமென மாப்பிள்ளையின் தந்தை பெரிய மனசு பண்ணி இரண்டு பவுனிலிருந்து கொஞ்சம் இறங்கி வந்தார். இதை தவிர சீர்வரிசைகள் கணக்கில் மேலும் ஒரு ஒண்ணு ஒண்ணரை லட்சங்கள் கூடக் கூடும்.

பிராதானத் தேவைகளுக்கு மற்ற, உற்ற நண்பர்களிடமிருந்து ஏற்பாடு செய்துவிட்டாலும், சீர்வரிசைகளுக்குதான் என்ன செய்வதென விழித்துக் கொண்டிருந்தேன். அதற்கும் அவர்களிடம் போய் நிற்க கூச்சமாக இருந்தது. இடையிடையே தரையிறங்கிறவன் மீண்டும் விமானம் ஏறியிருந்தால் இந்த நிலை உங்களுக்கு வந்திருக்குமாவென என் குடும்பத்தினரை விட உறவினர்களே அதிகம் அங்கலாயித்துக் கொண்டனர்.

அதனால் என் அம்மா எதிர்ப்படும் நேரங்களில், அக்கறையாய் விசாரிப்பது போல் கீச்சு குருவிகளாகி ஆறுதல் சொல்கிறேனென்ற பேரில் உச்சுக்கொட்டுவதையே வழக்கமாய் தொடர்ந்தனர்.

ஏதோ அவர்கள் வீட்டில்தான் மூன்று வேளையும் எனக்கு வடித்து கொட்டுவது போல காணும் நேரங்களிலும் அறிவுரை அலைவரிசைகளை ஒலிபரப்ப துவங்கிவிடுவார்கள். சலிப்பில் காதை கூட பொத்திக் கொள்ள இயலாது அப்புறம் அவமரியாதை செய்துவிட்டேன் என்ற பழியையும் சேர்ந்து சுமக்க வேண்டும்!

நான் திரும்பவும் துபாய் செல்வேன் என்ற எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் எனது விட்டேத்தி செயல்கள் தவிடுபொடியாக்கிக் கொண்டிருந்தன என்றாலும் நான் அவ்வளவு அறிவிலியோ, பொறுப்பில்லாதவனோ இல்லை. உண்மை நிலவரம் யாதெனில் இடையில் எனது ரகசிய முயற்சிகளில் நண்பர்கள் மூலம் வேலைக் கிடைத்தும், விசா ஏற்பாடாகி வர காலதாமதமாகிக் கொண்டிருந்தது. என்ன மறுபடியும் வெளிநாடா என்று கேட்கிறீர்களா?

அந்நிய நாட்டு ஆடு ஜீவிதம் போதும், ஒரு பிடி சோறு என்றாலும் இனி என் அன்னை தேசமே எந்நாளும் என்று என்னை போல் வீரவசனம் பேசி வந்தவர்களில், வருபவர்களில் பலர் எதார்த்தங்களின் முரண்களறிந்து எத்தனை பேர் அதே மூட்டைகளை திரும்பவும் ஏற்ற முனைந்திருப்பார்கள்! வெளிநாட்டில் வருடங்களைக் கடத்தியவனுக்கு உள்ளூர் வாழ்க்கை உடனேப் பொருந்திவிடாதென்பது பலர் விட்டுச் சென்ற அனுபவக் குறிப்பு!

சரி, திரும்ப போவதென முடிவாகிவிட்டது வேறு நிறுவனத்தில் முயற்சி செய்யலாமென்றால் அதற்கும் விடாமல் ஆசை வார்த்தைகள் காட்டிய வண்ணம் என்னை இந்தா அந்தா என செய்தியை அடைக் காக்க வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஊர் பார்வைக்கு கவலையில்லா இளங்காளையாகவே வலம் வந்துக் கொண்டிருந்தேன்.

இது போன்ற இரகசியங்களை பேணுவதிலும் ஒரு இன்பமிருக்கிறது. அதுவும் ஒரு பரவச நிலையே! அதனால் வீட்டில் கூட வேலை கிடைத்ததைப் பற்றி இந்த கள்ளன் காட்டிக்கொள்ளவில்லை.

குடும்ப கஷ்டம், அது இது என்று காசு பணம் எதுவும் கேட்டுவிடுவானோ என்று வாசலில் நிற்பவனை வாயாற உள்ளே கூப்பிடலாமா வேண்டாமா என தயங்கிக் கொண்டிருந்த உறவுகளைக் கண்டால்தான் பெரும் வேடிக்கையாகத் தோன்றும். உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேன்.

இதுபோன்றவர்களிடம் கடன் கேட்டால் கொடுப்பார்கள்?

இன்னொரு தரப்பு சொந்தங்களும் உண்டு. இவன் எப்போது உதவிகள் கேட்டு வருவானெனக் காத்திருப்பார்கள். குறிப்புணர்ந்தவர்கள் போல ‘வா வா’வென வாய் நிறைய வரவேற்பார்கள். ஆனால் அந்தா இந்தா என்று கொடுப்பது போல் சில நாட்கள் இழுத்தடிப்பார்கள்.

பிறகு தெருவில் நடக்க இயலாது. காணும் யாவரும் ‘அவரிடம் கடன் வாங்குனியாமே..!’ என்று கேட்டுக் கேட்டு காகம் வடையை கவ்விக் கொண்டது போல நமது காதுகளை ஒரு வழியாக்கிவிடுவார்கள். வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனுக்கு காலத்திற்கும் கட்டிக்காத்த அத்தனையையும் காவு கொடுக்க வேண்டியது வரும்.

அதனால் கொஞ்சம் மிதவாதி பட்டியலில் யாரும் இருக்கிறார்களா என சிந்தித்துப் பார்த்ததில் காதர் மச்சான்தான் சட்டென நினைவுக்கு வந்தார். நல்லவர்தான். எந்த அளவிற்கென்றால் கண்ணெதிரே நாம் உதவிக்காக தயங்கி தயங்கி நின்றாலும் கவனிக்காதவர் போல கனடாவிலிருக்கும் யாரோ ஒருவர் கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதாக கண்ணீர் விடுவார்.

அதாவது முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்கு நீளும் அவரது உதவிக்கரம், என்னைப் போன்ற அறிந்தவர்களைக் கண்டால் ஏனோ சற்று பின்வாங்கும். கொஞ்சம் விசித்திரமான இரக்க குணம்தான். செய்த உதவிகளை பேச்சு வாக்கில் பிறருக்கு கடைபோட்டுக் காட்டும் ஓட்டை வாய்க்காரரும் கூட.

இருந்தாலும் எதற்கும் உதவாத எனது அதீத மதிப்பீடுகளையும் தீவிர எதிர்சிந்தனைகளையும் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, இந்த சமயத்தில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை மச்சான் என்று துபாயிலிருக்கும் அவருக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பி பார்த்தேன்.

நிறைய நம்பிக்கை வைத்தேன். ஏனென்றால் நான் வேலையிலிருந்த போது நிதம் நிதம் மார்க்க பொன்மொழிகளையும், சொற்பொழிவு காணொளிகளையும் ஏகத்திற்கும் அனுப்புவார்.

அவ்வப்போது அவரே அக்கறையுடன் அழைத்தும் பேசுவார். சேமிப்புகள் அவசியத்தையும் சிக்கனத்தையும் வலியுறுத்துவார். அதனால் நானிருக்கும் சூழலுக்கு கேட்டதற்கு நிச்சயம் செய்துவிடுவாரென ஓரளவு நம்பினேன்.

கூடவே அச்சமயம் அவர் ஒரு வீட்டுமனை வாங்கும் பொருட்டு முன்பணமாக பத்து லட்சம் ஊருக்கு அனுப்பியிருப்பதாகவும் அந்த தொகை இதுவரை உரியவருக்கு கைமாற்றப்படவில்லை எனவும், மேலும் கூட அவர் கையில் பணமிருப்பதாகவும் எங்களுக்கு பொதுவான நெருங்கிய நண்பனொருவன் எனது முயற்சியை தீவிரப்படுத்தினான்.

ஆனாலும் அவைகள் யாவும் வருமானமில்லாத என்னை நம்பி கடன் தருவாரா என்ற ஐயப்பாட்டை கொஞ்சமும் தணிக்க உதவவில்லை. இருந்தாலும் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, இரண்டு நீல அடிப்புக்குறியைக் காண ஒருவித தவிப்போடு காத்திருந்தேன். அவரிடமிருந்து பதில் வரும்வரை நொடிமுள் போல மனம் துடித்துக் கொண்டேயிருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே திருவாளர் மறுகர்ணன் நான் அனுப்பிய குறுஞ்செய்தியை ஓட விட்டுக் கேட்டிருந்தாலும், உடனே பதிலேதும் சொல்லாமல் என்னை அந்நியன் பட அம்பி போல தொடர்ந்து குறுக்க மறுக்க நடக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர்தான் அவரது கட்செவி அஞ்சல் வந்தது. அதாவது வாட்சப் குறுஞ்செய்தி. முகமனுக்கு பதிலளித்ததிலும், திருமண செய்திக்கு ‘மாஷா அல்லாஹ்’ போட்டதிலும் தனக்கே உரிய ஒழுங்கையும் கரிசனத்தையும் கடைப்பிடித்திருந்தார். ஆனால் தான் மிகவும் சிரமத்திலிருப்பதாகவும் இந்த ஒரு நெருக்கடியானச் சூழலில் எனக்கு உதவ முடியாத நிலைகளை விவரித்து சுருக்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

பாதிக்கு பாதி எதிர்பார்த்த பதில் என்றாலும் அந்த பதில் அப்போதிருந்த மனநிலைக்கு பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தரவேச் செய்தது. இருந்தாலும் ‘பரவால்ல மச்சா, துஆ செய்ங்க’ என்று பதிலுக்குப் பேசி அனுப்பியிருந்தேன்.

அவர் எனது கோரிக்கையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.. சிறிது நேரத்தில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. மறுபடியும் தனது பத்து லட்ச சூட்கேஸையும், கூடுதல் மஞ்சள் பையையும் எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு, பழைய பஞ்சப்பாட்டை சில வினாடிகள் பாடினார். அது அவர் சொல்ல வந்த செய்திக்கு முன்னோட்டம் போலும்.

தானிருக்கும் நிலைமைக்கு ஒரு லட்சம் முடியாது, ஒரு இருபதாயிரம் தருகிறேன் என்றார். அதுவும் ஒரு நண்பர் மூலம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தனது கபடத்தை முடிந்தவரை மறைக்கப்பார்த்தார்.

அதன் உள்ளர்த்தம் ‘நீயிருக்கும் நிலைமைக்கும் எப்படியும் உன்னால் திருப்பி தர இயலாது. அதனால் இந்த காசை தருகிறேன். ஒரு வேளை நீ திருப்பி தந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி!’ என்பதாகும். கிட்டத்தட்ட கடன் கேட்டவனுக்கு கரிசனத்தோடு பிச்சை போட தயாரானது போல!

நான் உத்யோகத்திலிருந்த காலத்தில், இதுபோன்று இன்னொருவருக்கு அவர் பதிலளித்த வரலாறு நினைவிலாடி என்னை மிகவும் குறுக வைத்தது. அந்த நிகழ்வைச் சொல்லி தனது சாதுரியத்தை சிலாகித்துக் கொண்டவரும் அவரேதான். இதில் வேதனையான விசயம் யாரோடு என்னை ஒப்பீடு செய்து இதுபோன்றதொரு உதவியைச் செய்ய முன்வந்துள்ளார் என்பதுதான்.

காதர் மச்சானுக்கு நெருங்கிய உறவினரான அந்த குறிப்பிட்ட மனிதர், குடி, சூது, கும்மாளமென்று குடும்பத்தை சரிவர கவனிக்காதவர், எனக்கு தெரிந்து எந்த வேலையிலும், தொழிலும் தொடர்ந்து தரித்து நிற்காதவர். வாழ்நாளில் அவர் எவ்வளவு நாள் உழைத்தார் என்பதும் கேள்விக்குறியே. மற்றவர்கள் கதைகள் நமக்கெதற்கு என்றாலும் நமது நிலை இவ்வளவு மோசமாகிவிட்டதே என்ற வருத்தமும் தன்னிரக்கமும் அவர் பதிலால் சூழ்ந்துக் கொண்டன. எல்லாம் கொஞ்ச நாளைக்குதானே என்று அந்த கசப்பையும் விழுங்கிக் கொண்டேன்.

கொஞ்சம் நகைச்சுவையாக எல்லாவற்றையும் ஒரு முறை அசைபோட்டுப் பார்த்து இங்கே விவரித்துக் கொண்டிருந்தாலும் வாழ்க்கையில் எனது தன்மானத்தை தளர்த்திக் கொண்ட தருணங்களில் அதுவுமொன்று. வெட்கம், மானம், ரோஷத்தை பார்த்து காதர் மச்சானிடம் சட்டெனப் பேச்சை அத்தோடு முறித்துக் கொண்டிருந்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை ஒரு வேளை அன்று மணமேடைக்கு வராமல் கூட போயிருக்கலாம். பரவாயில்லை முடிந்ததை தாருங்கள் மச்சான் என்று கூறி நன்றியும் தெரிவித்தேன்.

காரிய ஜெய சூட்சமங்கள் ஒருவரின் புத்திசாலித்தனத்திலும், நெளிவு சுழிவான அணுகுமுறையிலும் மட்டுமல்ல இது போன்ற சூழல்களில் கடைபிடிக்கும் சகிப்புத்தன்மையிலும் நிதானத்திலும் கூட ஒளிந்துள்ளன. அதிலும் எந்த சமயமோ, குலமோ, கோத்திரமோ பெண்வீட்டுக்காரனுக்கு பொறுமையும் பெருந்தன்மையும் சட்டையும் வேஷ்டியும் போல. பொது நியாயம் பேசினால் கிழிபடுவதும், உருவப்படுவதும் நமது அங்கியாகவேயிருக்கும். சரி, அது வேறு கதை… அதை வேறு வேறு கதைகளில் பார்த்துக் கொள்ளலாம்.

திருமணம், பந்தி, சீர்வரிசை, மறுவீட்டு அழைப்புகள் என எல்லாமே நன்றாகவே நடந்து முடிந்தன. ஏனென்றால் அவையெல்லாம் காசைக் கொண்டு சாதித்துக் கொள்ள முடிந்தது. அதற்குமேலான வாழ்வின் வெற்றிகளும் கொடுப்பினைகளும் தம்பதிகளிக்கிடையேயான பக்குவங்களிலேயே உள்ளன. அதனால் ஒரு சகோதரனாக எனது கடமைகளை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறேனென நம்பினேன்.

நீண்ட காத்திருப்பிற்கு பின் ஓரிரு மாதங்களில் ஒரு வழியாக விசா வந்து சேர்ந்தது. ஒரு வேளை என் நேரடி முயற்சிகளில் அந்த திருமணம் நல்லபடியாக நடந்து முடியத்தானோ அதுவரை நான் ஊரிலேயே கிடந்ததென என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இடைப்பட்ட காலத்தில் மீதமிருந்த சொச்ச சேமிப்புகளும் சிறுகச் சிறுக தீர்ந்து நண்பர்கள் சிலரிடம் சில லகரங்கள் கடன்பட்டிருந்தாலும், காதர் மச்சானிடம் வாங்கிய அந்த இருபதாயிரம் மட்டும் ஆயிரம் டன் பளுவை போல நினைக்கும்போதெல்லாம் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டோமா? ஓரிரு சந்தர்ப்பங்களில் என்னையுமறியாமல் கண்ணீர்த்துளிகளும் உருண்டோடியதுண்டு. உறவுமுறைக்கும், பழகிய பழக்கத்திற்கும் காட்டி வந்த பிரியத்திற்கும் கேட்டவுடன் உதவியிருக்க வேண்டாமா? மீண்டும் தன்னிரக்க புலம்பல்கள்..

கஷ்டங்கள் அறிந்தும் முதலில் கதைகள் சொல்லி தவிர்க்க முயற்சித்து, பின்னர் பேருக்கு சிறுதொகையொன்றை கொடுத்து வந்தால் வருகிறது இல்லையென்றால் ‘ஜகாத்’ என்று நினைத்துக் கொள்வோமென்ற காதர் மச்சானின் அந்த மனோபாவத்தை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? மனஉளைச்சல்களை மென்று விழுங்கினேன். 

முதல் மாத சம்பளத்திற்காக முதல் நாளிலிருந்தே காத்திருந்தேன். எனக்கு உதவிகள் செய்த மற்ற எந்த கரமும் என் சட்டைப்பையைப் பிய்க்கவில்லை, ஆனால் காதர் மச்சானின் குரல் மட்டும் ஒவ்வொரு கணத்திலும் லப்டப்பை விட அதிகமாக கேட்டுக் கொண்டேயிருந்தது. வார்த்தைக்கு வார்த்தை இமாம் போல மார்க்கச் சொற்பொழிவு நடத்தியவராச்சே!

சம்பாதிக்க தொடங்கிய நாள்தொட்டு சம்பளம் வந்தால் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மறுவேலைப் பார்ப்பவன், அந்த மாதம் முதல் பணியாக காதர் மச்சானிடம் கடன்பட்ட இருபதாயிரத்தை அவரது வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு தகவல் தெரிவித்தேன்.

“ஏம்ப்பா இவ்வளவு அவசரம்? இப்பதானே வந்தா.. பொறுமையா கொடுக்கலாமே..! எங்கேயும் ஓடியா போக போறா?” பழைய பாசத்துடன் பேசினார்.

“கடனாக் கேட்டேன். நிச்சயமா திருப்பி தந்துருவேன்னு நம்பி கொடுத்த உங்க நம்பிக்கைய காப்பாத்துறதுதான மச்சா மொற?” உண்மைதான். என்ன தொகைக் கொடுத்திருப்பினும் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் தானே தொடர்பு கொண்ட அவரது மனப்போராட்ட அறத்தையும் நான் கவனத்தில் கொள்ளதானே வேண்டும்!

அந்த இக்கட்டான சூழல்களிலும் என்னளவில் நான் உதவியென்று நாட விரும்பாத உறவுகளும்தான் எத்துனை பேர்! அப்படியென்றால் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை விட அவர் மேன்மையானவராகவே என்னுள் பதிந்திருக்கிறாரல்லவா? மேலும் அன்னப்பறவைக்கு தேவை பாலென்றாலும் தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அறிவையும் தன்னகத்தே கொண்டுள்ளதே! அது போதாதா தேவையில்லாதை ஒதுக்கிவிட்டு பிரியத்திற்குரியதை அரவணைத்துச் செல்ல? அதுதானே அறிவார் செயலும் கூட!

அவருடைய வழக்கமானப் பேச்சைக் கேட்டதும் என் மனம் கனிந்தும் போனது.

அவரளவில் தானமாய் கொடுத்தது தங்கமாய் திரும்பி வந்திருப்பதை எதிர்பார்த்திராத அவர் குரலில் சிறுதடுமாற்றம் பின்னர் ஓரிரு நொடி மௌனம். எனக்கும் மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியவில்லை. பின்னர் தொடர்பு கொள்ளலாமென உரையாடலை முடிக்க நினைத்தேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சா!” அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றேன்.

“வ அலைக்கும் ஸலாம் மாப்ள. திரும்பவும் காசெதும் தேவைப்பட்டா சொல்லு” குரலில் பரிவும் மரியாதையும்.

“இன்ஷா அல்லாஹ் மச்சா” என்று அர்த்தமான புன்னகையோடு போனை அணைத்தேன். 

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சும்மாவா சொன்னாங்க?

***

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *