இப்போதெல்லாம் அம்மாவை எங்காவது கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவளை கூட்டிச் சென்று கூட்டி வருவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.
இதற்காகவே மருத்துவமனைக்கெல்லாம் கூட்டிச் செல்வதில்லை. தெரிந்த மருத்துவரிடம் சொல்லி நர்ஸ் ஏற்பாடு பண்ணி வைத்தாகிவிட்டது. அவள் வார இறுதியில் வந்து பார்த்துச் செல்வாள். உடம்புக்கு ரொம்ப முடியவில்லை என்றால் மருத்துவரே நேரில் வந்து செல்வார்.
எங்காவது சென்றே ஆகவேண்டும் என்றால் கார் அல்லது ஆட்டோவில்தான் கூட்டிச் செல்வோம் என்றாலும் அதில் ஏற்றுவதும் இறக்குவதும் பெரும் போராட்டமாகத்தான் இருக்கும். ஏற இறங்கச் சிரமம் ஏற்பட்ட போதே பேருந்தில் வெளியிடங்களுக்குச் செல்வதை அம்மா நிறுத்திவிட்டாள். அதுவரைக்கும் என் கூடப் பிறந்தவர்கள் வீட்டுக்கு மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்தாள்.
அப்பா சாகும் வரை அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார். வாடி போடி என்றழைத்தோ, கை நீட்டியோ நாங்கள் பார்த்ததில்லை. சுலோச்சனாவைச் சுலோ என்று அழைப்பார். எந்த நிலையிலும் அப்படித்தான் அழைத்திருக்கிறார். எத்தனை கோபம் என்றாலும் வெளியில் போய்விட்டு வரும் போது மறந்துவிட்டு அல்லது அதை வெளியிலேயே விட்டு விட்டு வந்துவிடுவார். அம்மாதான் அதைச் சுமப்பாள். அம்மாவிடம் எப்போதும் ஒரு பிடிவாதக் குணம் உண்டு. சின்னச் சண்டை என்றாலும் அப்பாவின் குடும்பத்து மனிதர்களை இழுத்துப் பேசாமல் இருக்கமாட்டாள்.
அப்பா விவசாயம்தான் பார்த்தார் என்றாலும் வானம் பார்த்த சிவகங்கை மாவட்டத்தில் அதை மட்டும் வைத்துப் பெருங்குடும்பத்தை எப்படி ஓட்ட முடியும்… ஆடு, மாடு, விவசாயம் எல்லாம் இருந்தாலும் கையில் பணமில்லாமல் எதுவும் செய்ய முடியாதே. அப்பா ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தார். வயல் வேலைகள் இருக்கும் போது கடைக்கு விடுமுறை விட்டுக் கொள்வார். அப்பா இறக்கும் வரை குடும்பத்துக்காகவே உழைத்தவர்.
அப்பா எப்போதும் ‘அவளுக்கு கோபம்தான் வருமே தவிர அதைச் சுமந்துக்கிட்டு பிரச்சினை பண்ணத் தெரியாது. நான் இல்லைன்னா அவளால நாலு நாளைக் கடத்துறதே கஷ்டம்… அதனால எனக்கு முன்னால அவ போயிறணும்ன்னு சாமியக் கும்பிடுறேன். அவ இல்லைன்னா எனக்குக் கூட பாதி உயிர் போன மாதிரித்தான் ஆனா நான் என்னைய பாத்துப்பேன். நான் போயி அவ இருந்தா அவளால அவளையே பாத்துக்க முடியாது. அவளோட கோபமே அவளுக்கு எதிரியா வந்து நிற்கும்’ அப்படின்னு அடிக்கடி எல்லார்க்கிட்டயும் சொல்லிக்கிட்டே இருப்பார்.
நாம என்ன நினைச்சாலும் விதிப்பயன்னு ஒண்ணு இருக்குல்ல. அதுதானே நடக்கும். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் இரவு படுத்தவர் காலையில் எழவில்லை. ஊரே நல்ல சாவுன்னு சொன்னுச்சு. எங்களுக்கு அப்பா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்ன்னு தோணுச்சு. அம்மா ரொம்பவே உடைந்து போனாள். அவளைப் பார்க்கவே ரொம்பக் கஷ்டமாயிருந்துச்சு. மெல்ல மெல்லத் தேறி வர ஆரம்பிச்சப்பத்தான் நாங்க எங்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டோம்.
நாங்க ஆறு பேர். நாலு பெண்கள், இரண்டு பையன்கள்… எங்கப்பா எங்க எல்லாரையும் தன்னால் முடிந்தளவு படிக்க வைத்தார். நான் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன். தம்பி ஆடிட்டராக இருக்கிறான். திருப்பத்தூரில் இருக்கும் பெரும்பாலான டாக்டர்கள், லாட்ஜ் உரிமையாளர்களின் ஆஸ்தான ஆடிட்டர் அவன் என்பதால் அங்க ஒரு சிறிய அலுவலகம். இரண்டுமாடி வீடு, தோட்டம் என எங்க ஊரிலேயே செட்டிலாகிவிட்டான். அம்மா அவனுடன்தான் இருந்தாள்.
அக்காக்கள் இருவரும் பத்தாவது வரை படித்திருந்தார்கள். தங்கைகள் இருவரும் அரசு பள்ளியில் தமிழாசிரியைகளாக இருக்கிறார்கள். எங்கப்பா எங்களை உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார். நாங்கதான் அப்பா அம்மாவோட இறுதிக் காலத்தில் அருகில் இருந்து பார்க்கவில்லை. தம்பி ஊருக்குள் இருந்தாலும் இருவரும் தனியே, எங்களின் பழைய வீட்டில்தான் இருந்தார்கள்.
அப்பா இறந்தபின் அம்மாவை தனியாக இருக்க வேண்டாமெனச் சொல்லி வலுக்கட்டாயமாக தம்பி வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தோம். நாங்க பிறந்து, வளர்ந்து, ஆட்டம் போட்ட வீட்டுக்கும் தம்பி வீட்டுக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. அவன் விவசாயம் இழந்த, ரோட்டோரத்தில் இருந்த எங்களது வயலில் வீட்டைக் கட்டி, அதை ஒட்டிக் கிடந்த எங்களது வயல்கள் போக உறவுகளின் வயல்களையும் வாங்கி அடைத்துத் தோட்டமாக்கி வைத்திருந்தான்.
அவனுக்கு விட்ட பழைய வீட்டை என்னிடம் கொடுத்து விட்டுத்தான் எனக்குப் பிரித்து விடப்பட்ட வயல்களை அவன் வாங்கிக் கொண்டான். பழைய வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் அதற்கான காலம் இன்னும் வராததால் பழுது பார்த்து வைத்திருக்கிறேன். மதுரையில் சொந்த வீடு இருப்பதால் எப்போதாவது நல்லது கெட்டதுக்கு வரும்போதுதான் தங்குவதுண்டு. அதுவும் பிள்ளைகள் பெரும்பாலும் தம்பி வீட்டில் படுத்து விடுவார்கள்.
அம்மாவுக்கு ஒரு பத்து வருசத்துக்கு முன்னால வலது கால் முட்டிக்கு கீழே லேசாக வளைய ஆரம்பிக்க, ஒரு மாதிரி நொண்டி நடக்க ஆரம்பித்தாள். நாட்கள் நகர… நகர… கால் நன்றாக வளைந்து தூண்டி முள் போல் வளைந்து விட்டது. இடது காலும் அதே போல் ஆக, காலை வளைத்துக் கொண்டு நிற்பது போல் ஆகி, நடையும் மாறிப் போனது… உயரமும் குறைந்து போனது.
அம்மா வயது காலத்தில் நடக்காத நாளில்லை. எல்லா இடங்களுக்கும் நடந்தே போய்விட்டு வந்துவிடுவாள். அதேபோல் விவசாய வேலையில் எல்லாம் அவளுக்கு அத்துபடி. வருடாவருடம் பழனிக்கு நடந்து போவாள். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் நடந்து போயிருக்கிறாள். கால் வளைய ஆரம்பித்த போது கூட அக்கா, தங்கைகள் வீடு, என் வீடு எனப் பயணப்பட்டுக் கொண்டே இருப்பாள். ‘இவளைத் தொட்டு நம்மளால நடக்க முடியாதுப்பா. இரை கட்டுன பந்தயக்காளை மாதிரி நடக்குறா… வாங்கருவாக் கம்பு மாதிரி உடம்பை வச்சிக்கிட்டு என்ன வேகமா நடக்குறா’ன்னு அப்பா சொல்வார்.
ரெண்டு நாள் முன்னாடி தம்பி பேசும்போது ‘அண்ணே அம்மாவுக்கு அவுக தம்பியைப் போய்ப் பாத்தே ஆகணுமாம்… வாயைத் தொறந்தா போகணும் போகணும்ன்னு நிக்கிது. எதாவது சொல்லிட்டாச் சின்னப் புள்ளமாரி முகத்தைத் தூக்கி வச்சிக்கிது. அதோட குணந்தான் உனக்குத் தெரியுமே… நானும் சொல்லிப் பாத்துட்டேன். கேக்குதில்ல… நீ வந்தாத்தான் ஆவும்’ என்றான்.
அம்மாவை எங்காவது கூட்டிப் போக வேண்டுமென்றால் அது என்னிடம்தான் வரும். மற்றவர்கள் மறுத்துப் பேசி விடுவார்கள். தம்பி கூட சற்றே கடுமையாகப் பேசிவிடுவான். அக்கா, தங்கைகள் எல்லாம் அம்மாவை வெளியில் கூட்டிப் போக வேண்டும் என்றால் ‘எங்களை ஆளை விடுங்கப்பா… அதுக்கு மதிதான் சரி வருவான்’ எனச் சொல்லி ஜகா வாங்கி விடுவார்கள்.
தம்பியிடம் ‘இந்த வாரம் வர்றேன்டா… இப்ப என்ன அவசரமா அவுக போகணுமாம்’ எனச் சொல்லி வைத்தேன்.
சில மாதங்களுக்கு முன் புத்தகத்தில் ஒரு கவிதை வாசித்தேன், அதில் அப்பாவுக்கு லேசான அடி பட்டப்போ குழந்தையாக இருந்த மகன் அப்பாவுக்கு அடிபட்டிருச்சான்னு கேட்டு, வாயால் அடிபட்ட இடத்தில் ஊதித் தடவி விடுவான். பள்ளி படிக்கும் போது மருந்து தேய்த்துவிடுவான். கல்லூரி படிக்கும் போது மருத்துவமனைக்கு கூட்டிப் போவான். திருமணத்துக்குப் பின் மருந்து தேய்ங்க வாரக்கடைசியில வர்றேன் என்பான். அவன் பேரன் பேத்தி எடுத்த போது இந்தக் கிழவன் ஒரு இடத்துல இருக்க மாட்டானா…? விழுந்துக்கிட்டு… எனத் திட்டுவான் என்பதாய் அக்கவிதை நகரும்.
அப்படியெல்லாம் அம்மாவை விட்டுவிடக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாய் இருப்பேன். மனசுக்குள் நம்மளைப் பார்க்கலைங்கிற எண்ணம் அவளுக்கு வந்துடக்கூடாது என்பதே என் எண்ணம். அதுக்காகவே நான் அடிக்கடி ஊருக்குப் போய் பார்த்து வருவதுடன் எப்போதாவது வெளியில் போகவேண்டும் என்று சொன்னால் சிரமத்தைப் பார்க்காமல் கூட்டிப் போய் வருவேன்.
மாமாக்களுடன் நீண்ட காலமாக உறவென்பது இல்லாமல்தான் இருந்தது. எங்களின் திருமணத்துக்கு எல்லாம் அவர்கள் யாரும் சேரவில்லை. எதற்காக ஒதுங்கிப் போனார்கள் என்பது தெரியாது. ஆயா, ஐயா இருக்கும் வரை வரப்போக இருந்தார்கள். அவர்களின் இறப்புக்குப் பின் மாமாக்கள் மெல்ல ஒதுங்கிப் போனார்கள். மாமாவின் பிள்ளைகள் கூட எங்களுடன் பேசுவதில்லை. அப்பாவின் இறப்புக்கு வந்து நின்றார்கள். ஏன் வந்தீர்கள் என்றோ, நீங்க காரியம் பண்ண வேண்டாம் என்றோ அம்மாவோ நாங்களோ எதுவும் சொல்லவில்லை. அதன்பின் எப்போதாவது மாமாக்கள் அம்மாவுக்குப் போன் பண்ணுவார்கள். அத்தைகள் எல்லாம் அதன் பின் வருவதுமில்லை… பேசுவதுமில்லை. எதனால் இப்படி என்பது ஒருவேளை அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ தெரிந்திருக்கலாம். அவர்களும் சொல்லியதில்லை, நாங்களும் கேட்டதில்லை. இன்றைய உலகில் வேலை, நம் குடும்பம் என்பதே போதுமானதாகிவிட்டது. உறவுகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தானே.
நடுமாமாவுக்கு உடல் நலமில்லை என்பது சில மாதங்களுக்கு முன்னர் எனக்குத் தெரியும். போனமுறை ஊருக்குப் போனபோது அம்மா மெல்லச் சொல்ல, ‘அதுக்கென்ன… அவுக உங்களை வந்து பாத்தது கெட்டுப் போச்சு. நீ இருக்க நிலமையில ஓடிப்போயி பாத்துட்டு வரமுடியுமா..? யாராச்சும் ஒருத்தர் மெனக்கெடனும்… போகலாம்… போவோம்’ எனச் சொல்லிவிட்டு வந்தேன். இந்தா ஆரம்பிச்சிருச்சு.
தம்பிக்குப் போன் பண்ணும் போது அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன். ‘நாளைக்கு காலையில வர்றேன்… கிளம்பி இரு. போய் உன்னோட உடன்பிறப்பைப் பார்த்துட்டு வருவோம்’ என்று சொன்னதுடன் ‘ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி உக்காந்திருக்காதே பத்து மணிக்கு மேலதான் வருவேன்’ என்றும் சொல்லி வைத்தேன் என்றாலும் அம்மா ஆறு மணிக்கே கிளம்பி இந்தப்பய எப்ப வருவான்… இன்னும் காணோம்ன்னு நமுக்க ஆரம்பிச்சிரும். தம்பி வேற கடுப்பாயிருவான்.
காலையில் போனதும் நானும், மனைவியும், தம்பி மனைவியுமாக அம்மாவை மெல்லக் கஷ்டப்பட்டு காரில் ஏற்றினோம். ஏறியதும் ‘ஆத்தா எங்கம்பக் கொடுத்துரு’ என்ற வாங்கி வைத்துக் கொண்டாள்.
‘இப்படி நிலமயில போனாத்தானா… நல்லாத்தான்.. அவுக வந்து பாத்தது கெட்டுப் போச்சு. நீங்க போயிப் பாக்கலன்னா யாரும் வருத்தப்படப் போறதில்ல. வயசான காலத்துல ஒரு இடத்துல இருக்காம எல்லாரயும் படுத்தி எடுக்கிறிய… வயசாயிட்டா சின்னபுள்ளயளா மாறிருவாகன்னு சொல்றாக. ஆனா சின்னப்புள்ளய இப்புடி புடுங்காதுக. முதுகுல ஒண்ணு வச்சா மூலயில போயி உக்காந்துக்கிங்க. உங்கள அடிச்சா திருத்த முடியும். அம்புட்டுத்தூரம் கார்ல போயிட்டு வந்து இடுப்பு வலிக்கிது… காலு வலிக்கிதுன்னு யாரு கெடக்கப் போறா. சொன்னாக் கேளுங்க. உங்க சொந்தங்க ஒண்ணும் இங்க உரிமயோட வந்து இருந்து சாப்பிட்டு சந்தோசப்பட்டுப் போகல. மாமா செத்ததுக்கு வந்தாக… அதுக்கப்புறம் நீங்க யாரோ நாங்க யாரோன்னுதான் இருக்காக.’ அம்மாவைக் காரில் ஏற்றிவிட்டு தம்பி மனைவிதான் அம்மாவிடம் இப்படிப் பேசினாள்.
அவள் பேசலாம் அவளுக்கு நாத்துனா மகள் என்ற உரிமை இருக்கு. அவள் பேசுவதை அம்மாவும் கேட்டுக் கொள்ளும். இதே என் மனைவி சொல்ல முடியுமா…? சொல்லியிருந்தால் எங்கம்மா பேசாமல் இருக்குமா…? அங்கனயே ஒரு பெரும் பிரச்சினைக்கான ஆரம்பம் உண்டாகும். சரி இப்ப எதுக்கு அதெல்லாம்.
‘ரத்த சொந்தம் பத்தி உன்னக்கென்னடி தெரியும்…?’ அம்மா காரில் சாய்ந்து கொண்டே அவளைப் பார்த்துக் கேட்டாள்.
‘ஆமா எங்களுக்குத் தெரியாது… ஆத்தா சுலோச்சனாவுக்குத்தான் எல்லாந் தெரியும். அங்கிட்டுத்தானே தம்பி கூட இருன்னு எறக்கி விட்டுட்டு வந்துருங்க மச்சான். வியாக்கியானம் பேசுறதப் பத்தியளா…?’ எனக் கன்னத்தில் கிள்ளுவது போல் கையைக் கொண்டு போனாள். அம்மா சிரித்துக் கொண்டாள்.
‘டீ… விடுடி… அவுக தம்பியப் பாக்கணுமின்னு ஆசை இருக்குமுல்ல. சரி பொறந்த பொறப்பு பாத்துட்டு வரட்டும்’ என்றாள் என்னவள்.
‘நல்லாச் சொல்லுத்தா… மறுபடியுமா பொறக்கப் போறோம். அவனுகதான் ஒதுங்கிப் போனானுக. உங்க மாமா போனதுக்கு வந்தானுக… அப்புறம் பேசத்தான் செய்யிறானுக. அப்பப்ப போன் பண்ணிக் கேட்டுக்கிறானுக. இன்னக்கி உலகத்துல அதுவே பெரிசுதானே’ என்றாள் காலை மெல்ல நகர்த்தி முகத்தைச் சுளித்தபடி.
‘ஆமாமா… கண்டிப்பாப் பாக்கணும்… இப்பவே காலத் தூக்க முடியல. அங்க போயி மச்சானும் அக்காவும் எப்படி இறக்கப் போறாங்களோ போங்க’ என்றாள் தம்பி மனைவி.
‘நீயும் வாடா’ என்று தம்பியைக் கூப்பிட்ட போது ‘அவனுக வீட்டுக்கு நானெதுக்கு, நீ பொயிட்டு வா’ன்னு சொன்னவன் ‘தோட்டத்துலதான் வீடு… உனக்குத் தெரியுமில்ல’ என்றான். தெரியும் என்பதாய் தலையாட்டினேன்.
காரில் போகும் போது ‘அம்மா இனிமே அங்க இங்க போகணும்ன்னு நெனைக்காத. உன்னால கால மடக்கி எல்லாம் ரொம்ப நேரம் உக்காந்திருக்க முடியாது. பொயிட்டு வந்து நீதான் சிரமப்படணும். என்ன வயசாயி வீட்டுக்குள்ள இருக்கதால வெளியில போகணுமின்னு சின்னப் புள்ளயமாரி ஆசயும் ஏக்கமும் இருக்கத்தான் செய்யும். எல்லாத்தயும் கட்டுப் படுத்திக்கத்தான் வேணும். நாங் கூட்டிப்போக தயாராத்தான் இருக்கேன். ஆனா நீ ஏறி, இறங்க முடியுதா பாத்தியா..? எம்புட்டுச் சிரமம்… உன்னய வருத்திக்காதே’ என்றதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
‘நீங்க எதாவது சொல்லாம பாதையைப் பார்த்து ஓட்டுங்க’ என்றாள் என்னவள். அவளுக்கு அம்மாவைப் பற்றித் தெரியும். கூட்டிப் போகும் போது திட்டிக்கிட்டே வந்தான்னு அக்காக்களுக்கிட்டயும் தங்கச்சிகளுக்கிட்டயும் போனில் சொல்லும். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்பதால் ‘ஆமா நீ இப்படிப் புடுங்குனா அவன் அப்படித்தான் பேசுவான்’ என்று சொல்லி முடித்து விட்டு என்னிடம் போன் பண்ணி அதைச் சொல்லி, ‘நீந்தான் கூட்டுறே… உன்னயவும் கூட்ட விடாமப் பண்ணிரும் போல’ன்னு சொல்லுங்க.
அம்மா பண்ணுவது பல நேரங்களில் கோபத்தை வரவைத்தாலும் சின்னப் புள்ளையைக் கடைவீதிக்கு கூட்டிப் போனால் எப்படி மகிழுமோ அப்படி ஒரு மகிழ்ச்சியை வெளி உலகை வேடிக்கை பார்த்தபடி வரும் அம்மா முகத்தில் காண முடியும் என்பதால் கஷ்டப்பட்டாவது கூட்டிப் போய் வருவதுண்டு.
‘அம்மா காபி சாப்பிடுறியா..?’
‘எனக்கு காபி வேண்டாம்ப்பா…’
‘இளநீ சர்பத் குடிச்சிட்டுப் போகலாங்க…’
‘அம்மாவுக்கு ஒத்துக்குமா…?’
‘அதெல்லாம் ஒத்துக்கும்… அது என்ன பண்ணப் போகுது.’
காரை ஓரமாக நிறுத்தி ரெண்டு வாங்கி, என்னவளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மற்றதை இரண்டு டம்ளரில் ஊற்றி ஒன்றை அம்மாவிடம் கொடுத்து விட்டு மற்றதை நான் குடித்தேன். வெயிலுக்கு இதமாக இருந்தது.
அம்மா பிறந்த ஊருக்குள் கார் நுழைந்தது. ஆயா வீட்டுத் தோட்டத்தில் மூணு மாமாவும் வீடு கட்டியிருந்தார்கள்.
கார் ஊர் எல்லையில் இருக்கும் முனீஸ்வரன் கோவிலைக் கடந்தபோது அம்மா கையெடுத்துக் கும்பிட்டாள். அவளின் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ணாடி வழி பார்த்தேன். பிறந்த மண் எப்போதும் எல்லாருக்கும் உணர்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கிறது இல்லையா…
‘அம்மா நீனும் மேகலாவும் போயிட்டு வாங்க… என்னய கூப்பிடக்கூடாது. எனக்கு அவுகள எல்லாம் பார்க்கப் பிடிக்கல’ என்றேன்.
தலையாட்டினாள்.
‘இப்ப ஆட்டிட்டு அங்க போயி நின்னுக்கிட்டு வாடான்னு நிக்கக் கூடாது’
‘சரிப்பா… நா எதுக்குச் சொல்லப் போறேன்’
‘அப்பறம் இருக்கச் சொன்னாக… சாப்பிடச் சொன்னாகன்னு நிக்கக் கூடாது. அங்க தம்பி சேது ராவுத்தர் கடையில குரும்பாட்டுக் கறி எடுத்தாந்து சமைச்சி வைக்கிறேன்னு சொல்லியிருக்கான். சாப்பிட வீட்டுக்குப் போயிருவோம் சரியா…’ என்றேன்.
அதுக்கும் தலையாட்டினாள்.
அவளின் முகமும் கண்ணும் வருத்தத்தைச் சுமந்திருந்தது. என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பிறப்புல்ல…
கார் மெல்லச் சரளை ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.
மாரியம்மன் கோவிலுக்கிட்ட போனபோது ‘இங்கனதான் நானு அவனெல்லாம் ஓடிப்புடிச்சி வெளாடுவோம். அப்ப இது ஓட்டுக் கொட்டகதான்… முன்னால ஒரு வேம்பு நிக்கும்.’ என மருமகளிடன் சொன்னாள். அப்போது அவள் கண்களில் விரிந்திருந்த மகிழ்ச்சியை என் முன்னே இருக்கும் கண்ணாடி எனக்குக் காட்டியது. நினைவுகள் சுகமானவைதானே.
காரை மாமா வீட்டின் முன் நிறுத்தினேன்.
அம்மாவை காரில் இருந்து இறக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம். தம்பி மனைவி இழுத்து தூக்கியே இறக்கி விடுவாள். அவள் இல்லாமல் சிரமமாக இருந்தது. இடது காலைக் கீழே வைக்கும் போதே ‘ஆஆஆஅத்தாத்தாஆஆஆ’ என்றாள்.
‘சொன்னாக் கேக்குறியாம்மா… ‘ என்றபடி கையை முதுகுப் பக்கமாய்க் கொண்டு போய்த் தூக்கினேன். ஆடு ஓட்டிக் கொண்டு போன ஒருவர் ஓடி வந்து பிடித்தார்.
மெல்ல இறங்கி நின்று கம்பை ஊன்றிக் கொண்டாள்.
‘சுலோச்சனாவா…? நல்லாயிருக்கியா…?’ முன் பல்லில்லாத அந்த மனிதர் கேட்டார்.
‘யாரு… அட பரமசிவம்… எப்படியிருக்கே…? எங்கடா பல்லக் காணோம்” என்று அவரின் கையைத் தனது வலது கையால் பிடித்தவள், ‘மதி… எங்க கதுப்புலியார் வீட்டு கொம்பய்யா மாமா மவன் பரமசிவம்… உனக்குச் சித்தப்பா வேணும்’ என்றாள் வாயெல்லாம் பல்லாக.
‘எனக்குத் தெரியாதாக்கும்… நல்லாத் தெரியும். மாமாக்க உறவுதான் அத்துப் போச்சுன்னானா மத்த உறவுமா அத்துப்போகும்’ என்றேன்.
‘மூத்தவனா..? எனக்குத்தான் மட்டுப்படல. இங்கிட்டு வரப்போக இருந்துச்சுகன்னாத் தெரியும். மூத்தது பார்வதி எங்க பாத்தாலும் சித்தப்பான்னு கையப் பிடிச்சிக்கும்’ என்றார்.
‘ம்… தம்பி வெளியூர்ல இருக்கானுல்ல… நல்லது கெட்டதுக்கு வந்தா ஒரு நா ரெண்டு நா… சின்னவனுக்கு எல்லாரயும் தெரியும்’ என்றாள் அம்மா.
‘ஆமா… அது அவுக அப்பாமாரி… டவுனுக்குள்ள பாத்துட்டா காபியோ, சர்பத்தோ குடிக்காம விடாது’
கொஞ்ச நேரம் அம்மா அவருடன் பேசிக் கொண்டிருந்தாள். அவரின் ஆடுகள் போகவும் அருவாக்கம்பை எடுத்துக் கொண்டு ‘ஏய்…’ எனக் கத்திக் கொண்டு ஓடினார்.
அம்மாவும் மேகலாவும் அந்த வீட்டுப் படியேறினார்கள்.
நான் காருக்குள் போய் அமர்ந்தேன்.
அங்கே அக்கா தம்பி எனப் பாசமழை பொழிந்திருக்கும். வந்து கூப்பிட்டாலும் போகக் கூடாது என நினைத்துக் கொண்டேன்.
காரில் அமர்ந்திருந்தவனுக்கு ‘பாவம்… கடைசி காலத்துல இருக்காரு… சின்ன வயசுல நம்மளத் தூக்கி வளர்த்த மனுசனுல்ல… எத்தனை தடவை அவர் மேல்ல மூத்தரம் பேஞ்சிருப்பேன்’ என நினைவுகள் ஓடியபோது தோள்ல தூக்கி வச்சிக்கிட்டு பலூன் வாங்கிக் கொடுத்தது, ஐஸ் வாங்கிக் கொடுத்தது, கூத்துப் பாக்க வச்சதுன்னு எல்லாம் ஞாபகத்தில் ஆடியது.
நாட்களை எண்ணிக்கிட்டு இருக்க மனுசனை உயிரோட பாத்துடலாமே ஏன் வீராப்பு என நினைத்தபோது இவர்களைப் பார்க்க வேண்டுமா என்ற எண்ணமும் மன்சுக்குள் ஓடியது. அம்மாவுக்கு ரத்த உறவு அதான் ஓடியாந்திருச்சு. நமக்கென்ன வந்துச்சு என்றபடி பாட்டைப் போட்டேன்.
மனசு எதிலும் ஒட்டவில்லை… மாமா முதுகில் யானைச் சவாரி போனது ஞாபகத்தில் வந்து ‘ஆனை… ஆனை… அழகர் ஆனை…’ என மாமா தலையாட்டியபடி திண்ணையில் சுற்றியது மனமெல்லாம் நிரம்பிய போது என்னையறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
நான் மாமா வீட்டுப் படியேறிக் கொண்டிருந்தேன்.
******
பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.