நகரின் பெரிய சாலையில் ஓர் அரசாங்க மருத்துவமனை இருக்கிறது.

நீங்கள் அந்தக் கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள்.

அது எல்லா நகரங்களிலும் இருப்பது மாதிரியானதே

மங்கலான பசுமை சுவர், ஓரங்களில் உடைந்த கற்கள், சுத்தமில்லாத ஜன்னல்கள், உள்ளே சிதைந்த நாற்காலிகள்.

ஆனால் அதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் நுழைந்து செல்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு வேறு இடமில்லை.

அந்த மருத்துவமனைக்குள்

இரண்டாவது மாடியில்,

நீண்ட நிறமற்ற வழித்தடத்தில்,

ஒரு அறை இருக்கிறது.

அது அறை எண் – 27.

அங்குதான் இந்தக் கதையின் நாயகன் படுத்திருக்கிறான்

அவனின் பெயரைச் சொல்லத் தேவையில்லை.

ஏனெனில் அவன் யாரும் ஆகலாம்

நீங்களே கூட.

அவன் படுக்கையில் படுத்திருப்பது

மருத்துவ உபகரணங்களின் சத்தத்தோடு கலந்துள்ளது.

லப்… டப்… பீப்…

ஒவ்வொரு ஒலியும்

அவனது இதயம் இன்னும் துடிக்கிறது என்பதற்கான சான்று.

ஆனால் அதே நேரத்தில்,

ஒவ்வொரு ஒலியும் அவனுக்கு இன்னும் எத்தனை துடிப்புகள் மீதமிருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

அவனது கண்கள் சுவரை நோக்கிக் கிடக்கின்றன.

அந்தச் சுவரில் ஒரு சிறிய பிளவு

அந்தப் பிளவை அவன் நீண்ட நேரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அது சாதாரண பிளவா?

அல்லது அது வழியாக இன்னொரு உலகம் தெரிகிறதா? என்பதாக

நீங்கள் சுவரின் பிளவுகளை ஒருபோதாவது நீண்ட நேரம் பார்த்திருக்கிறீர்களா?

பார்த்தால் அதில் உருவங்கள் தெரியும்.

அவை சில நேரம் முகங்கள்

சில நேரம் எழுத்துக்கள்

சில நேரம் வெறும் இருள்.

அவனுக்குப் பிளவின் உள்ளே ஒரு முகம் தெரிகிறது.

அது அவனுக்குப் பழக்கமான முகம்.

ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை.

இது உங்களுக்கும் நடக்கும் இல்லையா?

முகம் நிச்சயம் தெரியும்.

ஆனால் பெயர் எங்கோ மறைந்து விடும்.

அந்த நொடியில் தான் மனம் பதற்றம் அடையும்.

அறைக்குள் நர்ஸ் ஒருவர் நுழைந்தாள்.

அவள் கைப்பேசியில் ஏதோ குறிப்புகளைப் பார்த்தாள்.

அவனை நோக்கி சிரிக்கவில்லை.

அவள் செய்த வேலை வெறும் நடைமுறையே.

அவனது இரத்த அழுத்தத்தை அளந்தாள்.

மருந்து கொடுத்தாள்.

“எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

ஆனால் பதிலுக்கு அவன் பேசவில்லை.

அவள் காத்திருக்கவும் இல்லை.

அவள் உடனே வெளியேறினாள்.

அவன் சிரித்தான்

அந்தக் கேள்வி வெறும் சடங்கு.

உண்மையில் யாருக்கும் பதில் தேவையில்லை.

மருத்துவமனையில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் வெறுமையானதுதான்.

அவன் சிந்தித்தான்

“நான் எப்படி இருக்கிறேன்?”

பதில் அவனுக்கே தெரியவில்லை.

உடல் உடைந்து போயிருக்கிறது.

உயிர் எங்கே இருக்கிறது என்று புரியவில்லை.

சில சமயம் உடல் இல்லாமல் உயிரோடு மட்டுமே இருக்கிறேன் என்று தோன்றுகிறது.

சில சமயம் உயிர் இல்லாமல் உடல் மட்டும்.

அவன் அருகே இருக்கும் படுக்கையில் இன்னொருவர் இருந்தார்.

அவர் முதியவர்.

அவரது முகத்தில் சுருக்கங்கள்,

சுவாசத்தில் சிரமம்

ஆனால் கண்களில் இன்னும் பார்வை தெளிவாக இருந்தது.

முதியவர் திடீரென கேட்டார்

“நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள்?”

அவன் பதிலளிக்கவில்லை

முதியவர் மீண்டும் சொன்னார்

“இந்த அறையில் யாரும் சிகிச்சைக்காக மட்டும் வருவதில்லை.

அனைவரும் யாருக்கோ காத்திருக்கிறார்கள்.”

அவன் ஆச்சரியப்பட்டான்

தான் உண்மையிலேயே யாருக்காக, யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறேனா என்று யோசித்தான்.

ஆம், ஒருவருக்காக

ஆனால் அந்த முகம் யாரென்று மீண்டும் தெளிவாக அடையாளம் காணமுடியவில்லை.

முதியவர் சிரித்தார்.

“உங்களுக்கு நினைவில்லை போல

ஆனால் அந்த நிழல் உங்களைத் தேடி வரும்.”

அவன் நடுங்கினான்

முதியவர் யார்?

முதியவர் உண்மையில் இருக்கிறாரா?

அல்லது அவர் கற்பனையா?

இரவு ஆனது

மருத்துவமனையின் வழித்தடங்கள் வெறிச்சோடி இருந்தன.

சில நேரம் வெளிச்சம் அணைந்தது.

சில நேரம் மின் விளக்குகள் துடித்தன.

அந்தச் சத்தங்களில் அவனால் தூங்க முடியவில்லை.

இறுதியில் தூக்கம் வந்தது

அந்தத் தூக்கத்தில் அவன் கனவு கண்டான்.

அவன் அதே அறையில் இருந்தான்

ஆனால் படுக்கைகள் இல்லை.

மருத்துவ உபகரணங்களும் இல்லை.

வெறும் வெற்றிடமே.

அறையின் நடுவில் ஒரு சிறிய மேசை

அதில் ஒரு பை

பையைத் திறந்தான்.

அதன் உள்ளே வெறும் காகிதங்கள்.

அவை பழைய மருத்துவ அறிக்கைகள்.

ஆனால் ஒவ்வொரு அறிக்கையிலும் அவனது பெயர் இல்லை.

மற்றவர்களின் பெயர்கள்.

அவன் அறியாதவர்கள்.

ஆனால் அதில் எழுதப்பட்ட நோய்கள் அனைத்தும் அவனுடையதுபோலவே இருந்தன.

அவன் காகிதங்களை எறிந்தான்

ஆனால் அவை மீண்டும் மேசைக்கு  திரும்பின.

நிகழ்வு ஒருவித வட்டம் போல இருந்தது

விடுபட முடியாத வட்டம்.

அவன் விழித்துக் கொண்டான்

மீண்டும் சுவரின் பிளவைப் பார்த்தான்.

அதில் இப்போது வேறு காட்சி.

அதன் உள்ளே ஒரு மருத்துவமனை வழித்தடம்.

அதில் மக்கள் நடக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரும் முகமில்லாதவர்கள்

வெறும் வெற்றிட முகங்கள்

அவன் பயந்தான்.

அந்த முகமற்ற கூட்டத்தில் ஒருவனாக  தான் சேர்ந்து போய்விடுவேனோ என்று.

மீண்டும் நர்ஸ் வந்தாள்

இம்முறை அவள் சிரித்தாள்.

“இன்று discharge,” என்று சொன்னாள்.

அவன் குழப்பமடைந்தான்

தன்னுடைய சிகிச்சை முடிந்துவிட்டதா?

அல்லது வாழ்க்கையே முடிந்துவிட்டதா? ( இங்கே நீங்கள் சிரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.ஆனால் நீங்கள் சிரித்துவிட்டீர்கள்).

அந்த discharge என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள்.

ஒரு நோயாளி வீடு திரும்புவது.

அல்லது உடலும் ஆன்மாவும் பிரிந்து விடுவது.

அவன் கண்ணீர் விட்டான்

நர்ஸ் கவனிக்கவில்லை.

அவள் மீண்டும் நடை நடையாக சென்றுவிட்டாள்.

முதியவர் இன்னும் அங்கே இருந்தார்.

அவர் சொன்னார்

“நீங்கள் வெளியே போகிறீர்களா?

அல்லது உள்ளேதான் தங்குகிறீர்களா?”

அவன் பதில் சொல்லவில்லை.

ஏனெனில் வெளியே என்றால் என்ன, உள்ளே என்றால் என்ன என்று அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

அந்த இரவு அவன் இன்னொரு கனவு கண்டான்.

அவன் மருத்துவமனைக்குள் இல்லை.

ஒரு வெறுமையான நகரத்தில் நடந்தான்.

அங்கு எங்கும் படுக்கைகள்

ஒவ்வொரு படுக்கையிலும் ஒருவர்.

அவர்கள் அனைவரும் அவனைப் போலவே இருந்தனர்

அவனது முகம்.

அவனது குரல்.

அவனது உடல் அமைப்பு.

அவன் சத்தமாகக் கத்தினான்

“எது உண்மை? யார் உண்மை?”

அவனின் குரல் நகரம் முழுதும் எதிரொலித்தது.

ஆனால் யாரும் அவனுக்கு பதில் அளிக்கவில்லை.

கதை இங்கே முடிந்திருக்கலாம்.

ஆனால் இது பின்நவீனத்துவம்.

இதற்கு முடிவு இல்லை.

0

ஒரு முடிவு

அவன் உண்மையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறான்

வீடு திரும்புகிறான்.

ஆனால் அந்த நினைவுகள் அவனை ஒருபோதும் விடுவதாயில்லை.

மற்றொரு முடிவு

அவன் ஒருபோதும் discharge ஆகவில்லை.

அறை எண் – 27 அவனுடைய நிரந்தர வீடு.

அவன் அங்கேயே சிக்கித் தவிக்கிறான்.

மற்றொரு முடிவு

அவன் இறுதியில் அந்த சுவரின் பிளவுக்குள் சென்று விடுகிறான்.

அதன் அப்பால் இன்னொரு உலகம்.

அது கனவா நிஜமா யாருக்கும் தெரியாது.

மற்றொரு முடிவு

நீங்கள் வாசிப்பதை நிறுத்துகிறீர்கள்.

அந்தக் கதாபாத்திரம் உடனே அழிந்து விடுகிறான்.

ஏனெனில் அவன் உங்களது வாசிப்பில் மட்டுமே உயிரோடு இருந்தான்.

இப்போது நீங்கள் நினைக்கிறீர்கள்

“அந்த நாயகன் யார்?”

அவன் யாரும் இல்லை.

அவன் நானும் இல்லை.

அவன் நீங்கள் தான்.

அல்லது நீங்கள் ஆகக்கூடிய ஒருவன்..

அறை எண் – 27 எங்கேயோ அந்த நகரத்தில் இருக்கிறது.

ஆனால் அது உங்கள் மனதிலும் இருக்கிறது.

ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரு மருத்துவமனை அறை உள்ளது.

அதில் நாமே படுத்திருக்கிறோம்.

நம்முடைய பயங்களை நினைவுகளை கனவுகளை இழப்புகளை அங்கே வைத்திருக்கிறோம்.

அந்த அறைக்குள் ஒருநாள் ஒவ்வொருவரும் செல்லவேண்டும்.

சிலர் வெளியே வருவார்கள்

சிலர் ஒருபோதும் வரமாட்டார்கள்.

ஆனால் அனைவருக்கும் அந்த அனுபவம் இருக்கும்.

நீங்கள் இன்னும் வாசித்து கொண்டிருக்கிறீர்களா?

அப்படியெனில் அந்த அறை இன்னும் திறந்திருக்கும்.

அந்த நாயகன் இன்னும் படுத்திருப்பான்.

அவன் இன்னும் சுவரின் பிளவைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

நீங்கள் மூச்சை நிறுத்தும் வரை அவன் உயிரோடு இருப்பான்

நீங்கள் வாசித்த கதையை மூடும் போது அவன் மறைந்து விடுவான்.

000

ஏ.நஸ்புள்ளாஹ் (1974)

கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் பிறந்தவர்.தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றி வருகிறார்.

தொகுப்புக்கள் துளியூண்டு புன்னகைத்து(கவிதை 2003),நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (கவிதை 2009),கனவுகளுக்கு மரணம் உண்டு (கவிதை 2011),காவி நரகம் (சிறுகதை 2014), இங்கே சைத்தான் இல்லை (கவிதை 2015),ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர் (கவிதை அமேசான் 2016),மின்மினிகளின் நகரம் (கவிதை அமேசான் 2017,ஆகாய வீதி (கவிதை அமேசான் 2018)

A.Nasbullah Poem’s (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைகள் 2018),டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (கவிதை 2020),நான் உமர் கய்யாமின் வாசகன் (கவிதை 2021-2022 அரச சாகிதய அகாதமி விருது பெற்றது),யானைக்கு நிழலை வரையவில்லை ( கவிதை 2022),பிரிந்து சென்றவர்களின் வாழ்த்துக்கள் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள் 2024), ஃபிதா (கவிதை 2025),மந்திரக்கோல் (கவிதை 2025) 

மற்ற பதிவுகள்

One thought on “அறை எண் – 27 அல்லது மருத்துவமனை

  1. படத்தை வைத்தோ அல்லது தலைப்பை வைத்தோ ஒரு படைப்பை முழுமையாக எடைபோட்டுவிடக் கூடாது. ஆம், இந்தக் கதை இந்த மாதம் ‘நடுகல்’ இணைய இதழில் வெளிவந்திருக்கிறது. இதன் எழுத்தாளர் திரு. ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கையைச் சேர்ந்தவர். இவர் 2003-ஆம் ஆண்டு முதல் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் மற்றும் இலங்கையில் அரசாங்கப் பணியிலும் இருக்கிறார்.
    இந்தச் சிறுகதையை ஒரு கவிதை நடையில் எழுதியிருப்பது சிறப்பு. ‘அறை எண்-27 அல்லது மருத்துவமனை’ என்ற தலைப்பை ஏன் சூட்டினார் என்பதற்கான விளக்கத்தையும் கதையின் வாயிலாகவே அழகாக அளிக்கிறார்.
    ஒவ்வொருவருக்கும் ஆழ்மனதில் ஒரு ‘இருண்ட பக்கம்’ (Dark Side) இருக்கும். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்து மாறுபடும். சிலர் தங்களது கனவுலகில் இந்த இருண்ட பக்கத்திற்குச் செல்லும்போது, அவர்களது வெளிவராத மற்றொரு முகம் அங்கு வெட்டவெளிச்சமாகும். அதில் சிலர் உழன்றுகொண்டிருப்பார்கள்; சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் கோபத்துடனும், இன்னும் சிலர் சோகத்துடனும் காணப்படுவார்கள். பலர் அங்கு ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.
    சிலர் தங்களை அரசனாகவும், சிலர் திரைப்படக் கலைஞராகவும், வேறு சிலர் பெரும் பணக்காரராகவும் கருதிக்கொண்டு வாழ முற்படுவார்கள். இன்னும் சிலரோ, நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக எண்ணி, மனதளவில் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறார்கள். சுருக்கமாக, அந்த நேரத்தில் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ, அதுவாகவே வாழ முற்படுகிறார்கள்.
    இந்த சைக்கலாஜிக்கல் மாற்றத்தையே எழுத்தாளர் ஒரு சிறுகதையாக இங்கு விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
    எழுத்தாளர் திரு. ஏ. நஸ்புள்ளாஹ் அவர்களுக்கும், இக்கதையைப் பிரசுரித்த ‘நடுகல்’ இணைய இதழ் குழுமத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
    -பாலமுருகன்.லோ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *