ஆறு வயதுள்ள அந்த சின்னஞ் சிறுமி, தனது படுக்கையறையில் ரகசியமாக வைத்திருக்கும், அவளுக்கு மிகப் பிடித்தமான பன்றிக் குட்டி வடிவ மண் உண்டியலை எடுத்தாள். அதை உடைத்து, அதில் உள்ள சில்லறைக் காசுகளை கவனத்தோடு மூன்று முறை எண்ணிப் பார்த்தாள். 72 ரூபாய், 50 காசுகள் இருந்தன. 

     அவற்றை ஒரு பிளாஸ்டிக் ஜாரில் போட்டு, இறுக்கமாக மூடிக்கொண்டாள். அதை எடுத்துக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் மருந்துக் கடைக்கு சென்றாள்.

     அங்கே வியாபாரம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. விற்பனையாளர் தன்னிடம் திரும்புவார் என்று பொறுமையோடு காத்திருந்தாள். வெகு நேரமாகியும் அவர் அவளிடம் திரும்பவில்லை. ஏதோ வாடிக்கையாளருடன் வந்த குழந்தை என்று அவர் எண்ணிவிட்டார்.

     ஆனால் சிறுமியோ, தன்னிடம் பணம் இல்லை என்று நினைத்துத்தான் அவர் தன்னிடம் திரும்பாமல் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டாள். எனவே ஜாரைத் திறந்து, அதிலிருந்து கொஞ்சம் காசுகளை எடுத்து விற்பனையாளரிடம் நீட்டிக் காண்பித்து, “இந்தாருங்கள் காசு” என்றாள்.

     விற்பனையாளர் அவளை நோக்கித் திரும்பிப் புன்னகைத்தபடி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

     “எனக்கு அற்புதம் கொடுங்கள். அது என்ன விலை?”

     மருந்துக் கடைக்காரர் நெற்றி சுருங்கினார். “மன்னிக்கவும் குழந்தாய்! நீ என்ன கேட்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை!”

     “எனது குட்டித் தம்பிக்கு மிகவும் உடம்பு சரியில்லை. அற்புதத்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று எனது பெற்றோர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதனால்தான் அவனுக்காக அற்புதத்தை வாங்குவதற்காக என்னிடம் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த காசுகள் முழுவதையும் கொண்டு வந்திருக்கிறேன். அற்புதம் என்ன விலை என்று சொல்லுங்கள்.”

     மருந்துக் கடைக்காரருக்குப் புரிந்துவிட்டது. அவர் அவளை அன்போடு பார்த்து, “இல்லை குழந்தாய்! இங்கே அற்புதம் எதுவும் விற்பனைக்குக் கிடையாது” என்றார்.

     சிறுமிக்கு ஏமாற்றத்தால் முகம் வாடியது.

     அவர்கள் பேசியதைக் கேட்டபடி அருகில் இருந்த ஒரு கனவான் அவளிடம் குனிந்து, “எந்த மாதிரியான அற்புதம் உனது தம்பிக்குத் தேவைப்படுகிறது?” என்று கேட்டார்.

     “அது எனக்குத் தெரியவில்லை. எனது தம்பிக்கு ரொம்ப ரொம்ப உடம்பு சரி இல்லை. அவனது தலைக்குள் ஏதோ பிரச்சனை. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால், அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் எனது தந்தையிடம் இல்லை. அதனால், அற்புதத்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று எனது தாயிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால்தான் என்னிடமிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருக்கிற பணம் முழுதையும் எடுத்துக்கொண்டு, அற்புதத்தை வாங்குவதற்காக வந்தேன். இந்தப் பணம் முழுதையும் வேண்டுமானாலும் கொடுத்து, எனது தம்பிக்காக அற்புதத்தை வாங்குவேன். இந்தப் பணம் போதவில்லை என்றால் இன்னமும் கூட கொண்டுவருவேன்.”

     “சரி,… உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?”

     “72 ரூபாய் 50 காசுகள்!”

     “என்ன ஒரு ஒற்றுமை பார்த்தாயா! வாஸ்த்தவத்தில் குட்டித் தம்பிகளுக்குத் தேவைப்படுகிற அற்புதத்தின் விலை 72 ரூபாய் 50 காசுகள்தான்! அதை என்னால் உன் தம்பிக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் சொல்லவும், சிறுமியின் முகம் மலர்ந்தது. கையில் இருந்த காசுகளை மீண்டும் ஜாருக்குள் போட்டு இறுக்கமாக மூடி, அந்த ஜாரை அவரிடம் கொடுத்தாள்.

     ஒரு கையால் அதை வாங்கிக் கொண்ட கனவான், மறு கையால் சிறுமியின் கையைப் பற்றிக்கொண்டு, “என்னை உன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல். நான் உனது பெற்றோரையும், தம்பியையும் பார்க்க வேண்டும்” என்றார்.

     அவர் அந்த நகரத்தின் மிகப் பிரசித்தி பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர். சிறுமியின் குட்டித் தம்பிக்குத் தேவைப்படுகிற அறுவை சிகிச்சையை செய்யக் கூடியவர்.

     அவர்களின் வீட்டுக்கு வந்த அவர், அவளது பெற்றோரிடம் பேசி, பணம் ஏதும் வாங்காமல், தனது மருத்துவமனையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தார்.

     சிறுவன் உயிர் காப்பாற்றப்பட்டு வீடு திரும்பினான். போதுமான ஓய்வுக்குப் பிறகு பழையபடி செயல்படவும், விளையாடவும் தொடங்கினான்.

     அப்போது தாய், “உண்மையிலேயே அற்புதம் சம்பவித்துவிட்டது! வழக்கமாக எவ்வளவு கட்டணம் வாங்குவார்களோ?” என்று தந்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

     தம்பியுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி புன்னகைத்தபடி, “72 ரூபாய் 50 காசுகள்” என்றாள்.

     அவர்கள் ஆச்சரியப்பட்டு அவளிடம் அது பற்றி விசாரித்தபோதுதான், அவள் சொன்னது ஒரு வகையில் உண்மையே என்றும், வாஸ்த்தவத்தில் அந்த அற்புதத்தின் விலை, அந்த சின்னஞ் சிறுமியின் பேரன்பு என்பதும் அவளது பெற்றோருக்குத் தெரிந்தது.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *