ஐந்து மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அவர்கள் வீடு. வீட்டின் முன்னறையில் யாராவது பேசினால், ஒட்டி இருக்கும் சமையலறையில் இருப்பவருக்குக் காதில் விழாது. ஆனால். முன்னறையில் பேசும் அத்தனையும், தொலைக்காட்சியின் அலறலும், அந்த தளத்தின் நடை வராந்தாவில் நன்றாகவே கேட்கும்.

அன்றும் அப்படித்தான் ! வராந்தாவில் மிகத் தெளிவாகக் கேட்டது, குணாவும் அவன் தம்பி ராஜூவும் கத்துவது. கூடவே, தொலைக்காட்சி அவர்களால் மாறி மாறி மாற்றப்படுவதால் வந்த ஒலிச்சிதறல்களும்.

“அலெக்ஸா! தமிழ் ஜங்கிள் புக்” குணாவின் குரல்.

“மோக்ளி…இ…ஷேர் கான் வந்து… ஊ…ச்ஹி…ஹி”

ராஜூ ரிமோட் வைத்து ஏதோ மாற்றுவதால் சில தடங்கல்கள்.

“அலெக்ஸா ! தமிழ் ஜங்கிள் பீட்” ராஜூ கத்தினான்.

எந்த மொழி என்று புரியாத சில உரையாடல்கள்.

“ச்ஹ்… ரிஹ்..ப்பல..கீக்…”

குணா அவன் கையில் இருந்து ரிமோட்டைப் பிடுங்கினான்.

“விடுடா ! டேய் ! “ குணா.

“மாட்டேன் ! ஜங்கிள் பீட் தான் பாக்கணும்”

இருவரின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. அப்பா அலுவலகத்தில் இருந்து வரவில்லை. அம்மா காய்கறி வாங்கப் போயிருந்தார். அம்மா வழிப் பாட்டி பூஜையறையில் இருந்தார்.

“அப்பப்பா ! விளக்கு வைக்கிற நேரம். ஒரு வத்தியக் கொளுத்தி விளக்கப் பொருத்தலாம்ன்னு பாத்தா, இப்படியா சத்தம் போடுவீங்க “ என்ற படி வந்தார் பாட்டி.

“பாட்டி, ஜங்கிள் புக் போட விட மாட்டேங்குறான் இந்த ராஜூ”

“பாட்டி, எனக்கு ஜங்கிள் பீட் தான் பிடிக்கும். அதான் பாப்பேன்”

“அடக் காட்டுப் பயலுகளா ! ரெண்டு பேரும் ஏதோ ‘ஜங்கிள்” தான் பாக்கணுமா? அதுக்குத் தான் இந்தக் காட்டுக்கத்தலா?” என்று சொன்ன பாட்டி, தன் சொல் விளையாடலை நினைத்துத் தானே பெருமைப்பட்டுக் கொண்டு சிரித்தார்.

குணாவும் ராஜுவும் சிரிக்கவில்லை. அவர்கள் தீவிரமாக அலெக்ஸாவுக்கு ஆணையிட்டுக் கொண்டு இருந்தனர்.

ரிமோட்டைக் கைப்பற்றுவதற்காக எம்ஜியார்-நம்பியார் ரேஞ்சில் சண்டையும் போட்டுக் கொண்டு இருந்தனர்.

தீடீரென தொலைக்காட்சிப் பெட்டி இருளானது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொலைக்காட்சி அமைதியானது. வீடே இருட்டாகிவிட்டது.

“பாட்டி” என இருவரும் கூச்சலிட்டுக் கொண்டு அவர் அருகில் ஓடி வந்தனர். பாட்டியின் அண்மையும் அவர் ஏற்றிய விளக்கின் ஓளியும் சிறிது பயத்தைப் போக்கியது.

“எதுக்குப் பயப்படணும்? தைரியமா இருங்க! இதோ கரண்ட் வந்துடும்” பாட்டி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குடியிருப்பு வளாகத்தின் மின்னாக்கி மூலம் மின்சாரம் வந்தது.

எல்லா விளக்குகளும், மின்விசிறிகளும் மீண்டும் இயக்கத் தொடங்கின. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் வேலை செய்யவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி, “அலெக்ஸா, அதப் போடு, அலெக்ஸா, இதப் போடு” அப்பிடின்னு ஆர்டர் போட்டதில டிவி சூடாகி ரிப்பேர் ஆயிடிச்சு” என அறிவித்தாள் பாட்டி.

“அதெல்லாம் அப்பிடி ஆகாது, பாட்டி! ஏதாவது வோல்டேஜ் …” என ஆரம்பித்த சின்னவன் ராஜூவைப் பேச விடவில்லை குணா.

“உன்னால தாண்டா ! நீ தான் அடம் பிடிச்ச!”

அம்மாவும் அப்பாவும் வந்தார்கள்.

பாட்டி பிள்ளைகளால் தான் தொலைக்காட்சி போய் விட்டது என அவர்களிடம் சொன்னாள்.

“அந்த அலெக்ஸாவுக்கு வாயிருந்தா, ‘ஓ’ ன்னு அழுதிருக்கும். பாவம்! யார் பெத்த பொண்ணோ, பூமாதேவி போல பொறுமையா இருந்துட்டு பொக்குன்னு போயிட்டா” என டிரமேட்டிக்காகச் சொன்னாள்.

“இல்லம்மா ! கரண்ட் கட் ஆனதில தான் டிவி போயிடிச்சு” என்றான் குணா.

“ஆமா! எங்களால இல்ல” என ஒத்து பாடினான் ராஜு.

“பசங்களா, கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா?” என அம்மா சொல்லி விட்டு, அவர்களுக்காக வாங்கி வந்திருந்த வேர்க்கடலையைப் பாகம் பிரித்துக் கொடுத்தாள்.

நேரடி மின்சாரம் வந்த பின்னும், தொலைக்காட்சி இயங்கவில்லை.

மறுநாள் எலெக்ட்ரீசியன் சீனு வந்து பார்த்தார். மின் இணைப்பில் பழுது எதுவும் இல்லை.

“ம்ம் ! பாத்தீங்களா, பசங்களா! சண்டை போடாம ஒரே நிகழ்ச்சியைப் பாத்து இருந்தா இப்பிடி ஆகியிருக்காது இல்ல” என்றாள் பாட்டி.

“இல்ல பாட்டி! கரண்ட் தீடீரென போனா இப்படி ஆகும். போன வாரம் சுஜித் வீட்டில இப்படி தான் ஆச்சு” ராஜூ.

“ராஜூ, சும்மா வாயாடாத. பாட்டி என்ன சொல்ல வராங்க? எல்லாப் பொருளையும் அழகா, நிதானமா பயன்படுத்தணும்ன்னு சொல்றாங்க, புரிஞ்சுதா? பேசாம போய் படிங்க” என்றார் அப்பா.

தொலைக்காட்சி வேலை செய்யாது. பெருஞ்செலவு செய்ய வேண்டும். இல்லை, புதியதாக வாங்க வேண்டும். 

அவ்வப்போது அம்மாவும் அப்பாவும் அவர்களது கைபேசியை பிள்ளைகள் இருவரும் விளையாடக் கொடுப்பார்கள்.

ஆனால், டிவி பழுதான சோகம், கோபம், சோர்வு, செலவு… இப்படி பல காரணங்களால், “உங்களுக்கு பத்து நாளைக்கு ‘செல்’ கிடையாது” என்ற தண்டனையை குணாவுக்கும் ராஜுவுக்கும் கொடுத்தார்கள்.

“அமைதியா விளையாடத் தெரியாதவங்களுக்கு இதான் தண்டனை” எனத் தீர்ப்பு!

மறுநாள், பள்ளி முடிந்து வந்தார்கள் சிறுவர்கள் இருவரும்.

குடியிருப்பில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் பொழுது இருக்கும் போது விளையாடி விட்டார்கள். வீட்டுக்கு வந்து, வீட்டுப்பாடம் செய்து, நடத்திய பாடங்களை உரக்கப் படித்து, கணக்கு போட்டுப் பழகி, ஓவியம் வரைந்து… எல்லாம் செய்தாகிவிட்டது.

அப்படியும் பொழுது போகவில்லை, குணாவுக்கும் ராஜுவுக்கும்.

கேரம் போர்ட், செஸ், லூடோ போன்ற விளையாட்டுக்கான அட்டைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டுக்கும் எல்லா காய்களும் இல்லை.

“ஒரு விளையாட்டு சாமானையாவது ஒழுங்கா வச்சிருந்தா தான “ என அம்மா சொன்னார்.

“டேய், குணா ! தாயம் விளையாடலாமா?”

“சரிடா!”.

இருவரும் தாயம் ஆட உட்கார்ந்தார்கள்.

“ஐ! தாயம்! நாந்தான் முதல்ல தாயம்  போட்டுருக்கேன்” கத்தினான் குணா.

“இல்ல, கிடையாது. தாயம் விழவே இல்லா.நீ தான் கட்டையை லேசா நவுத்தி தாயம் விழுந்துடுச்சுன்னு சொல்ற. நா ஒத்துக்க மாட்டேன் போ!” ராஜூ கத்தினான்.

“ஆங் ! நீயும் போடேன்”

அழுது கொண்டே, ராஜு, கட்டையை உருட்டிப் போட்டான்.

“தாயம்”

“இல்ல… ரெண்டு தான்”

ராஜூ சட்டென தாயக் கட்டையை எடுத்து தூர வீசினான்.

“ஏண்டா அத எறிஞ்ச? என்று சொல்லி, குணா ராஜு தலையில் ‘நங்’ என ஒரு குட்டு வைத்தான்.

இருவரும் அடித்துக் கொண்டு புரள ஆரம்பித்தனர்.

தன் கால் அருகில் விழுந்த தாயக்கட்டையைக் கையில் எடுத்த பாட்டி, “அலெக்ஸா, இதுக்கு எதனா பாட்டு இருந்தா போடு” எனச் சொல்லிக் கொண்டு இருவரையும் நோக்கி வந்தாள்.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *