சேகர் படபடப்பை அடக்க முடியாமல் வழியிலேயே எக்ஸெலை நிறுத்திவிட்டு இசிலி மரத்து வேர்களைத் தாண்டி கரையிலேறி ஓடினான். அவனுக்கு முன்பும் பின்புமாக கிராமமே ஓடிக்கொண்டிருந்தது. கோயில் கண்ணுக்குத் தெரிய அங்கேயே நின்று மூச்சு வாங்கியபடி திரும்பிப் பார்த்தான். சேகரின் மனைவியும் அவன் தம்பியும் சற்று தொலைவில் ஓடிவந்து கொண்டிருந்தனர்.
இத்தனை பேர் சொல்லும்போது நம்பாமலிருக்க முடியவில்லை. கனவு நிஜமாவது குறித்து அவனுக்கு யாதொரு நம்பிக்கையும் இல்லாத அதே நேரம் இப்போது நடப்பதெல்லாம் வெறும் கனவாக இருப்பதற்கான அபத்தக்காட்சி தான்.. சற்று நேரத்தில் மனைவி வந்து முகத்தில் நீர் தெளித்து எழுப்பிவிடப் போகிறாள் என்றெல்லாம் நினைத்தவாறு ஓடியவன் தூரத்திலிருந்தே கண்டுகொண்டான்.
அய்யனார் சிலைக்கு இடப்புறமாக கோயிலின் தெற்கு வாசலில் அப்பா உட்கார்ந்திருந்தார். வெள்ளை வேட்டி சட்டை ஈரமண்ணில் ஊறி நிறம் மாறியிருந்தது. தலை, முகம் என திட்டுத்திட்டாக மண் படிந்திருந்தது. சில இளைஞர்கள் உடனடியாக தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியிருந்தனர். சுற்றிலும் நின்றவர்களை பார்த்துக் கொண்டே வந்தவரின் கண்கள் சேகரின் மீது படிந்ததும் அப்படியே நிலைகுத்தி நின்றன. சேகர் பேச்சு மூச்சற்று உறைந்துப்போய் அவரைப் பார்த்தான். கண்கள் கலங்கி ஒரு துளி திரண்டு கீழே விழும்முன் சட்டென துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.
***
மூன்று நாட்களுக்கு முன்பு டாக்டர் அவசரசிகிச்சை அறையை விட்டு வெளியே வந்து எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னபோது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. சிறு மௌனத்துக்குப் பிறகு அங்கே குரல்களின் பிரளயம் வெடித்து சூழல் துயரத்தில் அமிழத் தொடங்கியது. ஓரிரு உறவினர்கள் வெளியே சென்று போனில் பேசிவிட்டு வந்தார்கள். வயது இன்னும் அறுபதைத் தொடவில்லை. அதற்குள் மரணம் என்ற அதிர்ச்சியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரவு அம்மாவின் கைகளால் கடைந்து வரமிளகாய் தாளிக்கப்பட்ட புளிச்சக்கீரையை விரும்பி உண்டுவிட்டுப் படுத்தவர் சற்று நேரத்திலேயே நெஞ்சு பிசைவது போலிருப்பதாகச் சொன்னார். வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தவரை அரக்கப்பரக்க ஆம்னி வேனில் அள்ளிப்போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தார்கள். அவரது கைகள் மகன்களின் கரங்களை இறுகப் பற்றியிருந்தன.
பார்வை மனைவியை நோக்கி கெஞ்சும் தொனியில் இரைந்திருந்தது. ‘எப்படியாவது காப்பாத்திடுங்க..’ எனக் கூறும் பயந்தக் கண்கள். இளையவன் வரும்போதே அக்காள் மல்லிகாவுக்கு போனில் அழைப்பு விடுத்திருந்தான். அவள் தயாராக கணவனோடு வந்து மருத்துவமனையில் காத்திருந்தாள்.
மருத்துவர் சொல்லிவிட்டுப் போனதும் மூவரும் அரற்றும் குரலோடு ஒன்றாகக் கூடினார்கள். சிறிது நேரம் கழித்து சேகர் மல்லிகாவிடம் கேட்டான்.
“அந்தப் பொம்பளைக்கு தகவல் சொல்லணுமா?”
அவன் சொல்லி முடிக்கும் முன்னே சின்னவன் சீறினான்.
“அவளுக்கெதுக்கு சொல்லணும்? அதெல்லாம் ஒண்ணும் தேவயில்ல”
மல்லிகா இடைமறித்தாள். “இல்லடா.. இவ்ளோ நாளா பிரச்சினையா இருந்துச்சு. இப்பதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.. அப்பா பாவம்டா” என கண்களைக் கசக்கி மூக்கைச் சிந்தினாள்.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ பேசாம இரு. நாங்க பாத்துக்குறோம்.” என்றபடி சின்னவன் மருத்துவமனைக்குள் சென்றான். சேகருக்கு என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தது. முதலில் அப்பா இறந்துவிட்டதையே இன்னும் நம்பமுடியவில்லை. அதிலிருந்து மீண்டு வர எப்படியும் சில மாதங்களாவது பிடிக்குமென கணக்குப் போட்டான். எல்லோரும் தொடர்ந்து படிந்து கொண்டேயிருக்கும் துயரத்தை ஏதேனுமொரு வழியில் துரத்திவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். அல்லது அதனை மறக்குமளவுக்கான சிறிய துயரத்தை தருமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். வயது முடிந்தது போய் சேர்ந்துவிட்டார் என்ற பக்குவப்பட்ட மனதோடு அவர்களால் அம்மரணத்தை அணுக முடியவில்லை.
பால்யம் முடியும் முன்பே அதன் தொடர்பிழையை வலுக்கட்டாயமாக அறுத்தெறிந்துவிட்டு துபாய் போனவர் பதினைந்து வருடங்கள் ஊருக்குத் திரும்பவேயில்லை. சம்பாதித்து வந்தக் கையோடு ஊரின் கிழக்கு மூலையில் பெருமாள் கோயிலுக்குப் பக்கமிருந்த ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டார். ஆயில் கிணற்றில் உழைத்துச் சேர்த்தக் காசை மீண்டும் வறள்கிணற்றில் போடுவதாக நிறைய பேர் கேலி செய்தார்கள்.
ஆனால் விவசாயம் தான் செய்வதென தீர்மானமாக முடிவெடுத்து நிலத்தைத் திருத்தி ஆடிப்பட்டத்துக்கு கடலை விதைத்தக் கையோடு அருகிலுள்ள மல்லியகரையில் அவராகவே பெண்ணெடுத்து மணமுடித்துக் கொண்டார். பிள்ளைகளை சாமி, கண்ணு ஆகிய வார்த்தைகளைத் தவிர வேறு சொற்களில் அவர் இதுவரையிலும் கூட அழைத்ததே இல்லை. அப்பாவின் உழைப்பால் விளைந்த நிலமின்று செழித்து பாக்குத் தென்னையாக வளர்ந்திருக்கிறது. மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு குறையுமற்ற வாழ்வைத் தருவதில் வாழ்நாள் முழுக்க முயன்று கொண்டேயிருந்தவரின் மரணம் எல்லோரையும் சலனமற்றுப் போகச் செய்திருக்கிறது.
பிணக்கோலத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தவரைப் பார்க்க முடியாமல் சேகர் கண்களை தாழ்த்திக் கொண்டான். இளையவன் யாரோ ஒருவரின் தோளில் சாய்ந்து “நேத்து தான் என் ஜாதகத்த எடுத்துட்டுப் போய் கிருஷ்ணாபுரம் ஜோசியர்கிட்ட காட்டிட்டு வந்தாரு. பொண்ணுக்கு தரகர்கிட்ட சொல்லிட்டு வந்ததா வீட்ல எல்லாருகிட்டயும் சந்தோசமா சொல்லிட்டுருந்தாரு.. இனிமே யாரு மாமா என்ன சின்னத் தங்கம்னு கூப்பிடுவா.. முடியல மாமா” என தேம்பிக் கொண்டிருந்தான்.
மல்லிகா அவரது கால்களைப் பிடித்து “அப்பா எழுந்து வந்துடுப்பா.. நான் பஸ்ஸேறி ஊருக்கு வரும்போதெல்லாம் குறுக்குரோட்டுல வண்டியோட வந்து நிப்பியேப்பா.. இனிமே எனக்கு இங்க என்ன இருக்கு? நான் யாருக்காக இனிமே இங்க வரப்போறேன்.. எந்திரிப்பா.. எந்திரிச்சி வந்துடுப்பா” என உலுக்கிக் கொண்டிருந்தாள்.
சேகரின் இளையப்பிள்ளை ஓடிப்போய் தலைமாட்டில் அமர்ந்து கொண்டது. “தாத்தா எந்திரி தாத்தா.. புதுப்பட்டி மாரியாயி நோம்பிக்கு கூட்டிட்டு போறன்னு சொன்னல்ல.. எந்திரி தாத்தா.. நீயில்லன்னா அம்மா அனுப்பவே மாட்டா.. எந்திரி..” என விசும்பிக் கொண்டிருந்ததை கூட்டம் பரிதாபமாகப் பார்த்தது.
பந்தல்காரர்கள் கயிற்றை இழுத்துக் கட்டி நாற்காலிகளை பரப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள். மேளச்சத்தம் வெளியூரிலிருந்து வருவோருக்கு வீட்டை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. அருகிலிருந்த வேப்பமரத்தில் மைக்செட்காரர் ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருந்தார். துக்கத்தில் கலந்துகொள்ள வருவோருக்கு கைக்கொடுத்தபடி நின்றிருந்த சேகரை பங்காளி கணேசன் சற்று தள்ளிக் கூட்டிப் போனார்.
“டேய் தம்பி.. அந்தம்மாளுக்கு சொல்லி விடணும்ல?”
சேகர் உடனடியாக தலையை ஆட்டினான். “அதெல்லாம் சரியா வராதுண்ணே.. வேணாம்”
“என்ன இருந்தாலும் உங்கப்பனோட விருப்பம்னு ஒண்ணு இருக்குல்ல..”
சேகருக்குள் மீண்டும் குழப்பம் மொய்த்தது. இளையவன்தான் ரொம்பவும் வேகமாக இருக்கிறான். அவனுக்கு அந்தப் பெண்மணியையும் அவளது மகனையும் கண்டால் ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை.
எல்லாவிதத்திலும் சரியாக இருந்த அப்பாவின் ஒற்றைத் தவறான அது இன்று நூல்பிடித்து மரணவீடு வரை வந்திருக்கிறது. ஊருக்கு வடக்கே தும்பக்கொட்டாயைச் சேர்ந்தவளோடு அப்பாவுக்குத் தொடர்பு இருந்தது மல்லிகா பிறந்து ஓரிரு வாரங்கள் கழித்தே எல்லோருக்கும் தெரிந்தது. யாராலும் எதிர்த்துக் கேட்க முடியாத இடத்தில் அப்பா இருந்ததால் பஞ்சாயத்து கூட்ட வேண்டிய நிலையும் ஏற்படாதது குறித்து ஊர் வியந்துப் பேசியது. உரிமையோடு கேட்ட ஓரிருவரிடமும் கூட..
‘எனக்கு இவங்களும் அவளும் ஒண்ணுதான்.. யாருக்காச்சும் ஏதாச்சும் குறை வச்சிருந்தா என் சட்டையப் புடிச்சி கேளுங்க’ என உடைத்துப் பேசியதில் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.
சேகரிடம் பெரிய தனக்காரர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தெரு முக்கில் சலசலப்பு கேட்டது. மகனை அழைத்துக்கொண்டு “ராசாவே.. எஞ்சாமி.. இனிமே நான் என்னா பண்ணுவேன்?” என அரற்றிக்கொண்டே அவள் பந்தலை நோக்கி ஓடிவந்தாள். இளையவன் “இவள யாரு இங்க வரச்சொன்னது” என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
மல்லிகாவும் சேகரும் அவனை பிடித்துக் கொண்டார்கள். ஊர்க்காரர்களும் குறுக்கே புகுந்து சமாதானம் செய்தார்கள். அப்பாவின் மேல் விழுந்து கொஞ்சநேரம் புலம்பி விட்டு ஓரமாய் கிடந்த ஆட்டுரலின் மீது அவள் அமர்ந்து கொண்டாள். நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள். சடங்குகள் தொடங்கும்போது சரியாய் ஆரம்பித்தாள்.
“இந்தா பாருங்க எல்லாரையும் வச்சிக்கிட்டு தான் சொல்றேன். இதுவரைக்கும் சொத்து சுகம் எதுலயும் நானோ என் மவனோ பங்கு கேக்கல. இனிமேலும் கேட்கப் போறதில்ல. அந்த மனுசன் இருந்தவரைக்கும் வயித்துப்பாட்டுக்கு ஒரு கொறையும் வைக்கல.. எங்களுக்கு அது போதும். நான் கேக்குறதுலாம் ஒண்ணே ஒண்ணுதான்.. எங்க சாதி வழக்கப்படி அந்த மனுசன தகன மேடைல வைக்கணும்”
அந்த இடம் போர்க்களமாக மாறியது. இளையவனோடு சேர்ந்து சேகரும் கூச்சலிட்டான். பங்காளிகள் ஓரிருவரும் கூட அவளைத் திட்டி வெளியே போகச் சொன்னார்கள்.
“அந்த மனுசன் என்கூட வாழ்ந்த வாழ்க்க என்னனு எனக்குத்தான் தெரியும். என் சொல்லு அம்பலம் ஏறாதுன்னு தெரியாதா எனக்கு.. தொரத்துறீங்கல்ல.. எல்லாரும் நல்லா இருங்க சாமி. நான் போறேன்” என்றபடி பிள்ளையை இழுத்துக்கொண்டு விசும்பலோடு வெளியேறிப் போன காட்சி இன்னமும் நினைவிலாடுகிறது.
***
சேகர் தூரத்திலிருந்தே டார்ச் லைட் அடித்துப் பார்த்தான். விளைந்து உடலுரசும் மக்காச்சோளக் காடுகளுக்கு நடுவே கரண்ட் கொட்டாய் தெரிந்தது. அதற்குள் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா தெரிந்தார். போர்வையை இழுத்து மேலே போட்டபடி தடியை எடுத்துக் கொண்டு நகர்ந்தவனை மல்லிகா இழுத்துப் பிடித்தாள்.
“வேணாம்டா.. எனக்கு பயமாயிருக்கு.. போவாத”
சேகர் மௌனமாய் திரும்பிப் பார்த்தான்.
“நம்ம அப்பா புள்ள.. நம்மள என்ன பண்ணிடுவாரு”
“அப்பனோ பிசாதோ.. உனக்குத் தெரியுமா? இது அதிசயம் கெடையாது. மூடுன குழியிலருந்து எழுந்து வர்றதுன்னா சாமானியமா? அதுவும் மூணு நாள் கழிச்சி..? என்னமோ கெடுதல்னு மட்டும் தெரியுது. எந்த காலத்து சாபமோ.. என்னமோ? அவதான் போவேணாம்னு சொல்றால்ல.. அப்புறம் என்ன இந்நேரத்துக்கு வீம்பு வேண்டிக் கெடக்கு” என்று சொன்ன அம்மா விநோதமாகத் தெரிந்தாள்.
இளையவன் நடக்கும் யாவற்றிலிருந்தும் தொடர்பறுந்தவன் போல எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு கடுமையான ஜுரம் அடிப்பதாக யாரோ சொன்னார்கள். பிள்ளைகள் அம்மாவின் பின்னால் பயத்தில் ஒடுங்கியிருந்தன. வீடு முழுக்க திருநீரின் வாசனை கமழ்ந்து கொண்டிருந்தது. அடுத்து எதுவும் பேசத் தோன்றாமல் தடியை இருள் நிலத்தில் தட்டிக்கொண்டும் களைச்செடிகளை விலக்கிக் கொண்டும் காட்டை நோக்கி நடந்தான்.
தான் வேறொரு விநோதமான உலகில் சஞ்சரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தான் கணேசனுடன் போய் புதைக்குழியை பார்த்துவிட்டு வந்திருந்தான். புதைக்குழி ஏதோ ஒரு வலிய மிருகத்தால் அகோரமாக குதறி வைக்கப்பட்டிருந்ததைப் போலிருந்தது. அமானுஷ்யமான சிந்தனைகள் தொற்றிக் கொண்டு வீடு வரை வந்தன. தெருக்களைக் கடந்து வீட்டை அடையும்வரை இருமருங்கிலும் நிற்கிற முகங்கள் தன்னை பயத்தோடு வெறிப்பது போல உணர்ந்தான்.
மாலை வெளியூர் நண்பனொருவன் விஷயத்தைக் கேள்விப்பட்டு அழைத்திருந்தான். ஆப்பிரிக்கப் பழங்குடியினரில் வூடு மந்திரம் பயின்றவர்கள் இது போன்று இறந்தவர்களை எழுப்புவார்களென மேலும் குழப்பத்தை அதிகரிக்கச் செய்தான். துபாயில் யாராவது ஆப்பிரிக்கர்களிடம் பழக்கம் ஏற்பட்டிருக்குமோவென யோசித்தான்.
கணேசன் அவருக்குத் தெரிந்த திருச்சூர் மாந்திரீகரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். நிச்சயமாக இது சொத்துக்காக நிகழ்த்தப்பட்டிருக்கும் செய்வினையாக இருக்குமென அந்த ஆள் கூறியதாகத் தெரிவித்தார். தாள முடியாத துயரமும் ஏதோ ஒன்று தன் வீட்டை பற்றிக் கொண்டது போலான அசூயையும் அவனை ஆட்டுவிக்கத் தொடங்கியிருந்தது.
அவனது டார்ச் ஒளிக்கு சலனம் காட்டாமல் அப்பா அதே வெறித்தப் பார்வையோடு அமர்ந்திருந்தார். அருகிலேயே தட்டில் வைக்கப்பட்டிருந்த சோறு காய்ந்துக் கிடந்தது. இவன் அருகில் சென்ற பிறகும் அவர் பார்வையில் சலனமில்லை. மெதுவான குரலில் கேட்டான்.
“நீ எப்படிப்பா வந்த?”
அவர் திரும்பி அவனைப் பார்த்தார். அதே வெறித்த பார்வை. இவன் அதை தாங்க முடியாமல் எழுந்து வெளியே வந்தான். இந்தக் காடும் அப்பாவும் ஒன்றென்பது எக்காலத்திலும் மாற்ற முடியாதது. அவர் இறந்துவிட்ட நாளில் இக்காடும் இறந்துவிட்டதோ எனப் பயந்து அவசரமாய் ஓடிவந்து ஒற்றைத் தென்னங்கன்றை கிழக்கு மூலையில் நட்டு வைத்தான். இப்போது டார்ச் லைட் ஒளியில் அக்கன்று சொடுங்கிப் போயிருந்தது நன்றாகத் தெரிந்தது. மீண்டும் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“அப்பா நீ திரும்ப வந்தது சந்தோசம்தான்ப்பா.. ஆனா எப்படி இது நடக்கும்னு தான் எல்லாருமே புரியாம பயந்து போயிருக்கோம்”
அவரிடம் இதற்கும் பதிலில்லை. மேலே பார்த்தான். பௌர்ணமி நிலவின் வெளிச்சம் டார்ச் ஒளியை அநாவசியம் என சொல்லிக் கொண்டிருந்தது. இரவுக்கரண்டில் இதே போல எத்தனை நாட்கள் அப்பாவுக்குத் துணையாக தண்ணீர் கட்ட வந்திருக்கிறான். நுணா மரத்தடியில் அணில் சுட்டுத் தின்ற நடு இராத்திரிகள் கண்முன் வந்துப் போயின.
“சரிப்பா.. நான் எதுவும் கேட்கல..நீ வீட்டுக்கு வந்துப் படு” எனக் கூறி கைகளைத் தொட்டான். கைகளின் தன்மையைப் பார்க்கும் சந்தேகக்குறி அதிலிருந்தது. குளிர்ச்சியாகவோ விரைத்தோ இல்லாமல் சூடாக இருந்தது அவனுக்கு நிம்மதியளித்தது. அவராகவே அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டார். அவன் குழப்பத்தோடு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு நகர்ந்தபோது அவர் வாய் திறந்தார்.
“அம்மா என்கிட்டயே வரலையேப்பா..”
அவன் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினான். ஒருகணம் நின்றிருந்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
வீடு வரும் வரை படபடப்பாக இருந்தது. மதியத்திலிருந்து நிறைய யூடியூப் சேனல்களும் பத்திரிக்கைக்காரர்களும் குழுமி வந்து கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்தான். தொடர்ந்து அப்பா உயிர்த்தெழுந்து வந்த சமூக வலைதளச் செய்திகளை அவனுக்கே அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அவர் இறந்ததாகக் கூறுவதே கற்பனை, கிராமமே சேர்ந்து கதை கட்டுவதாகக் ஒளிபரப்பினார்கள்.
வீட்டுக்கு வந்து உறங்கத் தொடங்கியபோது அவன் மனைவி காதருகில் கிசுகிசுத்தாள்.
“நாம காலைல எந்திரிச்சதும் புள்ளைங்கள எங்க வீட்ல விட்டுட்டு கொடுமுடி வரைக்கும் போயிட்டு வரலாம்.. எதாவது பரிகாரம் சொல்லுவாங்க..”
“இப்போ எதுக்கு இவ்வளவு பயம் உனக்கு? இந்த மாதிரி செத்தவங்க பொழச்சி வந்ததில்லையா உலகத்துல?”
“அதுக்குனு மூணு நாள் கழிச்சா? என்னமோ தப்பு நடக்கப்போவுதுன்னு பயமா இருக்குங்க”
அதற்குமேல் சேகர் பேசவில்லை. மொத்தத்தில் அன்றிரவு அவன் தூங்கவில்லை. பின்சாமத்தில் எழுந்து வெளியே வந்தபோது கவனித்தான். இளையவன் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வாசலில் நின்று கரண்ட் கொட்டாய்க்கு லைட் அடித்துப் பார்த்தான். அங்கே அப்பா இல்லாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அப்படியே துணிக்கல்லில் அமர்ந்தவன் தென்னை மரத்தில் சாய்ந்தபடி உறங்கிப் போனான். அதிகாலையிலேயே கணேசன் பைக்கில் வேகமாக வந்தச் சத்தம் கேட்டுத்தான் விழிப்பு வந்தது.
அவர் பதட்டமான முகத்தோடு அவசரமாக பைக்கில் ஏறச்சொன்னது ஏதோ விபரீதமாகப் பட்டது. வீடே விழித்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தது. கணேசன் எல்லா விவரங்களையும் சொல்லிக்கொண்டே வந்தார்.
“ஒண்ணுமே புரியல சேகரு.. உங்கப்பா நடுராத்திரிக்கு மேல அந்தம்மா வூட்டுக் கதவ தட்டியிருக்காரு. தெறந்ததும் அதுக்கு திக்குனு இருந்துருக்கு. ரொம்ப தாகமா இருக்கு. தண்ணி குடுன்னு கேட்டு சிரிச்சிருக்காரு. அந்தம்மா உள்ள ஓடிப்போய் சாமி படத்தலாம் கொண்டாந்து மேல எறிஞ்சிருக்கு. தொடப்பத்த எடுத்து ரெண்டு மூணு அடி போட்டுருக்கு. அவரு எதுவும் பேசாம போய்ட்டாருன்னு சொன்னுச்சு”
பைக்கை கரையிலேற்றி நிறுத்தினார்கள். இசிலி மரத்தைத் தாண்டி கோயிலை நோக்கி இருவரும் நடந்தார்கள். அதே தெற்கு வாசலில் அப்பா விழுந்துக் கிடந்தார். கண்களை வலுக்கட்டாயமாக மூடிக்கொண்டதைப் போலிருந்தார். சேகர் ஓடிப்போய் கையைத் தொட்டான். குளிர்ந்திருந்தது. சேகருக்கு அழ வேண்டும் போலிருந்தது.
“இப்ப என்னண்ணா பண்ணலாம்?”
“வீட்டுக்கு தான் கொண்டுட்டுப் போகணும். அங்கயிருந்து திரும்பவும் முறைப்படி எல்லாம் செய்ய வேண்டியது தான். மாந்திரீகரும் கோயமுத்தூர் தாண்டி வந்துட்டு இருக்கார்”
கூடி நின்றவர்கள் சேர்ந்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தார்கள். ஆம்னி வண்டியொன்றைக் கொண்டு வந்து நிறுத்தி அதில் அப்பாவைக் கிடத்தினார்கள். கூடவே வண்டியில் ஏறப்போன சேகரை இளையவன் தடுத்து நிறுத்தினான். அவன் கண்களில் படர்ந்திருந்த பயம் கலவரமான முகத்தில் பரவி எந்நேரமும் யாரையேனும் சூழ்ந்து கொள்ளும் தீவிரத்தோடிருந்தது.
“இந்த வண்டியில ஏறு. நாம தும்பகொட்டாய் போகலாம்” என்றவனை சேகர் ஏன் என்பது போலப் பார்த்தான்.
“போய் சித்திய கூட்டிட்டு வரலாம். இந்த தடவ பொதைக்க வேணாம். எரிச்சிடலாம்”

பெயர் ந.சிவநேசன். ஊர் சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் காலச்சுவடு, நடுகல், நீலம், ஆனந்தவிகடன், கணையாழி, நுட்பம், குமுதம் தீராநதி, தி இந்து உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை கவிதை நூல்கள்.