அவளுஞ்சலாடிய முந்திரிமரக்கிளையில்

“கக்கூஸ் கெட்டிலாம்ன்னு சொன்ன எடத்தில அவளுக்கு இப்போ ஆபீஸ் கெட்டனுமாம்…. நிமிசத்துக்கு நிமிசம் மாறுத புத்தி…ஸ்கூலுக்க எண்டிரன்ஸ் மனுசபார்வ இல்லாத நாலடி பாதைல வைப்பினுமா !!, இல்ல, நாலு மனுசன் நடக்குத கீலிட்ட ரோட்ட பாத்து வைப்பினுமா !!… சாபம்பிடிச்ச அந்த கொல்லாவுமரத்த பவுடர் இட்டு அலங்கரிச்சு பள்ளி பிள்ளியளுக்கு காட்டபோறாளாம்… இவளுக்கு முழு வட்டு….. இதெல்லாம் நம்ம பேசி கொள்ளிலாம், அவளுகிட்ட சொல்லபோன தெய்தெய்ன்னு நிப்பா….” 

              “ஆமா…நீங்க வாய வைச்சோண்டு சும்மா இருங்க… இனி இதுமதி பிள்ளியளையும் பையையும் கெட்டியோண்டு மெட்ராஸ் பெங்களூர்ன்னு போவா….” சார்லெட் குறித்த தங்களது ஆற்றாமையைப் பெற்றோர் அருளப்பன் வல்சலா தம்பதி காதோடு காதுவைத்தது போல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

            கணவருடன் விவாகரத்து வாங்கியவளின் ‘தனிக்காலில் நின்று சம்பாதித்து சென்னையிலே மகாராணியாவேன்’ என்ற சூளுரைக் கூச்சலுக்கு இருவருட ஆயுள் கூட இல்லை. தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர்களுக்குள் ஆயுளைத் தொலைக்கவேண்டாம் என்ற முடிவு தாமதமானது தான். பைபிளின் கெட்டகுமாரன் கதையாக ஊருக்கே சென்று தந்தையிடமே மண்டியிடலாம் என்ற தேவை அவளுக்கில்லை. வெற்றிலை வைத்து அழைக்காத குறையாக அழைக்கும் பெற்றோர். வேலைச்செய்து தான் பிழைக்கவேண்டுமென்றால் உனது விருப்பம் போல் அல்லது வீட்டிலே அமர்ந்து விருப்பம் போல் செலவு செய்ய அருளப்பனிடம் கோடிகள் கொட்டிக்கிடந்தது. ரப்பர் மரங்களிலிருந்து மட்டும் பத்து லட்சத்துக்கு குறையாத மாத வருமானம். 98 ஆம் ஆண்டே முந்நூறு பவன் தங்கம் விலையுயர்ந்த கார் என தான் விரும்பிய டாக்டர் மாப்பிளையைப் பிடித்தடக்கிய அருளப்பன் சென்னையில் வீடுவாங்கிக்கொடுத்தும் வருடாவருடம் வரதட்சணைப் பலவடிவில் சார்லெட்டைத் துரத்தியது.

              மருத்துவமனைக் கட்ட பத்து கோடி பதினைந்து கோடி என எண்களைக் கூட்டி சார்லெட்டை அடித்து துவைத்ததின் உச்சம், அவனது போதைப்பழக்கம். நீதிமன்றத்தில் மகளை நிறுத்தி அவதூறு சேற்றை வழித்தெடுக்க விரும்பாத அருளப்பன், பிடித்த வினைக்கு விலை தங்கமும் காரும் என மியூச்சுவல் விவாகரத்து வாங்கி மகளை மீட்டெடுத்தார். கண்ணீர் சிந்தவைத்த சென்னையில் புரட்சி செய்யும் ஆவேசத்தில் தனது முதுகலைச் சான்றிதழோடு கண்ணாடி பொருத்திய கட்டிடங்களாக ஏறி இறங்கி பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியைப் பணியை எட்டிப்பிடித்தாள். வீட்டிற்கு வாடகை இல்லையென்றாலும் அந்த மாத சம்பளம் அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பாக்கெட் மணி. கொழுந்துவிட்டெரிந்த புரட்சிக்கனல் சில மாதங்களிலே சோவைக் கண்டது. தோல்வியடைந்து சொந்த ஊர் திரும்பிச்செல்வது அவளை உறுத்தியது. மறுபுறம் தன்னைச் சித்ரவதைச் செய்து கடித்த பண்டமாக தூக்கி வீசிய கணவன் மற்றொரு பெண்ணுடன் இன்புற்று வாழும் செய்தி வாழும் மண்சார்ந்ததாகி சென்னை மேல் வெறுப்பானது.

             ஒவ்வொரு மாதமும் குமரி மாவட்டத்திலிருந்து ரயிலேறி வரும் பெற்றோரின் அபேட்சைப் பேச்சுக்களை முளையிலே கிள்ளி எறிந்து பெண்ணிய சாகச நினைப்பிலிருந்தாள். தான் வசிக்கும் நகரிலே தன்னைக் கருவேப்பிலையாக தூக்கி வீசிய கணவன் செந்தளமாக வாழுவதை வண்ணம்கூட்டி விவரித்து வலைவிரித்த தந்தையிடம் அவள் மெல்ல மண்டியிட திண்ணம் கொண்டாள்.

               “ஒரு மெட்ரிகுலேசன் ஸ்கூல் செயில்ஸ்க்கு வந்திருக்கு!! நீ ‘ம்னு’ சொன்னா அவனுவ கேக்க வெல கொடுத்து வாண்டுவேன்… ஒன்ன பட்டிய போல அடிச்சு வெரட்டியோண்டு அவன் ஏசில நம்ம கொடுத்த பணத்தில வெலசுதான்.. நீ இந்த வேவாதவெயில்ல பிள்ளியள பைக்கில கொண்டு பள்ளில விட்டு, நீயும் வெயர்த்து வெழுத்து பள்ளிக்கு போய் கிட்டுத பத்தாயிரம் உலுவயில இந்த அன்னியதேசத்தில ஜீவிக்கனுமா!! நீயும் ஒரு பள்ளிக்க கரஸ்பாண்டன்ட் சொல்லி இரு!! இந்த போக்கற்ற பட்டி பயலுக்கு நம்மளும் படம் காட்டுவம்…”

            “யார் ஸ்கூல் விக்குறாங்க?” சார்லெட்டிடமிருந்து முதன்முதலாக சிறுபுள்ளியாக கிரீன் சிக்னல் வந்தது. பெற்றோர் இருக்கையை இழுத்து அவள் அருகில் நகர்த்து பல்கள் தெரிய விவரிக்கத் துவங்கினர்.

           குழித்துறை அருகில் விளவங்கோடில் அந்த பள்ளி துவங்கப்பட்ட சிலவருடங்களிலே படுத்துவிட்டது. இரு சிறிய நம்பகமில்லாத கட்டிடங்களில் குழந்தைகளை விட பெற்றோர் தயங்கினர், விடுகின்ற பெற்றோரும் பலகுறைகளைச் சொல்லி பள்ளிக்கட்டணத்திற்கு போக்கு காட்டினர். சிட்பண்ட் தொழிலில் ஆழம் தெரியாமல் கால்வைத்த தாளாளரை அங்குலம் அங்குலமாக இழுத்து அனைத்தையும் விற்கும் நிலைக்குத் தள்ளியது.

              “பெர்மிசன மட்டும் வாங்கீட்டு புதிய ஸ்கூல நம்ம பாலவிள முக்கில கெடக்க கண்டத்தில கெட்டிலாம்… ரெண்டே முக்கா ஏக்கரு… அதில நிக்க ரப்பர் சாட்டர் கொடுக்க பருவம் ஆவல.. நமக்கு அதா முக்கியம்.. நாளையே எல்லாத்தையும் வெட்டி கண்டத்த நெரத்தி தாரேன்…”

             “அந்த ஸ்கூலுக்க பேரு இந்த கள்ளனுக்க பேரு…” வசந்தம் பால் மெட்ரிக்குலேசன் பள்ளி பெயரை அவள் வெறுத்ததில் காரணம் இருந்தது. அவள் அதிகம் வெறுத்த ‘ஸ்டூவர்ட் பால்’ கணவனின் பெயரின் பால் இருந்தது.

              “மக்ளே.. அததேன் நான் மொதல்ல கேட்டேன்… நமக்கு இஷ்டபட்ட பேரு வைக்கிலாம்… அதுக்கு செல புரசியூஜர் உண்டாம், வசந்தன் சாருக்க மோன் கிறிஸ்துபால் சொன்னான்…”

            “பேரு மாற்ற முடிஞ்சா எனக்கு ஓகே… நீங்க பேசுங்க….”

             “இயேசுவே எங்களுக்க பிரார்த்தனய கேட்டீரு…” கையுயர்த்தி இருவரும் வேண்டியபடி மகளைப் பார்த்தனர்.

             “ஸ்கூலு கெட்டதுக்கு உனக்க அப்பா நெறய பிளான் பண்ணி வச்சிருக்காரு.. ஒனக்க சம்மதம் ஒண்ணு தான் பாக்கியாயிருந்திது…”

              “நம்ம கண்டத்துக்க தெக்க அற்றம் அந்த பள்ளத்தில கெடக்க விஸ்வம் ஆசாரிக்க நாலு சென்ட வாண்டினா, பேக்ல போற அந்த சின்ன ரோடும் நமக்கு வரும்… அதிலோடி ஸ்கூல் வேன் எல்லாம் கொண்டு வருலாம்… அங்கேயே வண்டியள நெறுத்தினா பள்ளிக்கு எடஞ்சலு இருங்காது…. மூத்றபெர அங்ஙின கெட்டதுக்கு ஏற்ற எடம்..” அருளப்பன் கனவிலேறி பறக்கத்துவங்கினார்.

             “என் கூட படிச்ச கிரிஜா வீடு தானே அது!! அதுக்கு அந்த ஆசாரி பேமிலி அத விக்கனுமே!!” சார்லெட்டிற்கு நினைவுபடுத்த முடிந்தது.

             “அந்த பெண்ணு மட்டும்தேன் உயிரோட இருக்கா.. அவளும் அந்த வீட்டுக்கு வந்து வருசங்க இருக்கும்.. வீடு இடிஞ்சு பொடிஞ்சு கெடக்கு…. ரெண்டு வருசத்துக்கு மின்ன வெலைக்கு வந்து, நான் தான் வேண்டாம்னு விட்டேன்… மூணு தற்கொல நடந்த வீடு, அதுவும் பள்ளத்தில கெடக்கு… ஒரு வாஸ்துகாரன கொண்டுவந்து காட்டினேன்… அவன் சொன்னான் கக்கூஸ் கெட்டோக்கோ!! உயிரில்லாத்தத கொண்டிடவோ அந்த எடம் கொள்ளாம்னு.. .அத நான் அப்பம் விட்டன்….. பள்ளிகொடத்துக்கு கக்கூஸ் கெட்டதுக்கோ வண்டி நெறுத்தவோ அடிபொளி எடம் அது…. வீட தட்டி இட்டு பத்து லோடு மண்ணிட்டு நெரத்தின நம்ம கண்டத்துக்க ஈக்கோல் ஆவும்….” பத்தாம் வகுப்பு வரையிலும் படித்த மாத்திசாமி பாண்ணையாரின் மகனான அருளப்பன் பள்ளிக்கூட முதலாளி அவதற்கான கணக்குகூட்டலைத் துவக்கினார்.

            சென்னையிலிருந்து மகளையும் குடும்பத்தையும் இடம்பெயர்த்துவதற்கு முன்பாகவே கிறிஸ்துபாலிடம் மெட்ரிக்குலேசனுக்கான பணபரிவர்த்தையை முடித்த கையோடு திருவனந்தபுரத்தில் கிரிஜாவின் கணவன் வீட்டைத் தேடிப்பிடித்து அவள் கேட்ட விலைக்கு மறுப்புச் சொல்லாமல் பேசிமுடித்தார் அருளப்பன். முன்பணம் கைமாறி சார்லெட் ஊருக்கு வந்த உடன் கிரயபத்திரம் எழுதி பத்திரப்பதிவு அலுவலகம் செல்லலாம் என நாள் குறித்து வந்தார். ‘அருள் வல்சலா மெட்ரிக்குலேசன் பள்ளி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாலவிளையில் கட்டிடங்கள் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரவமானார். இருபது வருடமேயான ரப்பர்மரங்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் ஆயுளுண்டு என்றாலும் வேகவெட்டுக்கு கொடுத்து பாலை முடிந்தமட்டும் எடுத்துவிட்டு மரங்களை அகற்றி பள்ளிக்கூடத்திற்கான முன்வடிவத்திற்கு வெள்ளோட்டமிட தயாரானார். மரங்களை வெட்டி அகற்றியபிறகு மகளை அழைத்து நிலத்தைக் காட்டவேண்டும், சிறுவயதில் அவள் வந்தது. நிலத்தின் உருவ அமைப்போ வழித்தடமோ அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் ரப்பர் மரங்கள் நடுவதற்கு முன்பிருந்த தென்னைமரங்களில் தேங்காய் பறிக்கையில் தந்தையுடன் ஜீப்பில் சென்றுவந்ததை அவளால் மீள்வரவு செய்யமுடிந்தது.

               இருபது வருடங்களுக்கு பிறகு கிரிஜாவைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தித்தாள். கையொப்பமிட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு உடனே செல்லவேண்டும் என்ற திடுக்கில் அவள் நின்றாள். மலையாள வகுப்பில் படித்த அவளும் ஆங்கில மீடியத்தில் படித்த சார்லெட்டும் சந்திப்பது ஆங்கில மொழிபாடத்துக்கான வகுப்பில் மட்டுமே. பண்ணையாரின் பேத்தி மற்றும் அவர்களில் பல நிலங்களின் ஒன்றின் தும்பில் ஒட்டுநிலத்தில் வசிப்பவள் என்ற தன்அடக்கத்தோடு புன்னகைப்பதைத் தவிர அவர்களுக்குள் பழக்கமில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பழைய புன்னகையைப் புதுப்பித்ததோடு சரி. இருவரும் தங்களது பகுதியில் கையொப்பமிட்டு விலகி நின்றனர். அருளப்பன் எண்ணிக்கொடுத்த பணத்தை தனது மாமனாரிடம் கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து வந்த ஆட்டோவில் ஏறிசெல்ல வெளியே வந்தவள் என்ன நினைத்தாளோ!! சார்லெட்டை நோக்கி வந்தாள்.

              “ஆ வீடு நெனக்கு பாத்தியபட்டதா.. அதுகொண்டா ஏழு கொல்லமாட்டு யாரும் மேடிக்காதே இட்டிருந்நது… பின்னே, நெனக்குள்ள நிதி!! அமூல்ய நிதி அவன்ற முறிலு உண்டு… சகலம் குளிச்சு நோக்கியா காணும்!!… அவனு பிராந்தா… முழு பிராந்து…. கொளத்திலு கண்ட அம்பிளி அம்மாவனே சொந்தம் கொண்டாடிய ஆம்பல் பூவினே போலே …. ” காதில் வந்து மென்மையாக செல்லிவிட்டு விருட்டென ஆட்டோவை நோக்கி நடந்தாள்.

             “கிரிஜா எனிக்கு ஒந்நும் மனசிலாயில்லா!! நிந்நு பறஞ்ஞிட்டு போ…” சார்லெட் கண்ணைக்கட்டி விட்டது போல் நின்றாள்.

             “ஞங்ஙட கண்டத்திலு ஒரிக்க நீ காலுவச்சு!! ஓர்க்குந்நுண்டோ? அதா நின்ன, அம்பிளி அம்மாவன்… சாரி, தமிழில் நிலா எந்நு பறஞ்ஞது… ஆம்பல் பூ யாரெந்நு நீ வழியே அறியும்… பிராந்தா.. முழு பிராந்து… மரகட்டய தலங்கணக்கு பகரம் யாரெங்கிலும் வைக்குமோ!! அதுவும் பத்து இருபது கொல்லம்!!!” சார்லெட் கேட்க பிதற்றியபடி ஆட்டோவில் ஏறினாள். சார்லெட்டின் மூளையின் நரம்புநாளங்கள் மின்னலாக பின்னோக்கி பயணித்தும் எந்த தடமும் தட்டுப்படவில்லை.

               கிரிஜாவின் அண்ணன் சிவன், அவளது வீட்டின் ஆஸ்தான ஆசாரி. நாற்காலியின் கால் ஆடினாலோ மரங்கள் தொடர்புடைய அறிவுரைத் தேவைப்பட்டாலோ அருளப்பனின் மனதில் வரும் ஒற்றை முகம். சார்லெட்டிற்கு திருமணமான பத்துவருடத்தில் ஒருமுறைகூட அவள் சிவனைக் கண்டதுமில்லை அவனைக் குறித்த விவரங்களைக் கேட்கும் வாய்ப்பும் அமையவில்லை. பாலவிளையில் பள்ளிகட்டிடம் கட்டுவது தொடர்பான பேச்சு வருகையில் பள்ளத்தில் கிடக்கும் ஆசாரியின் நிலத்தை வாங்கி தெற்கு சாலையோடு இணைக்கும் யோசனையைத் தந்தைப் பகிர்கையில், சிவன் தற்கொலைச் செய்ததை துணுக்குச்செய்தியாக சொல்லிச் செல்கையிலும் அவளுக்கு அது அயர்ச்சியில் இருப்பவரின் பின்னணியில் நெடுந்நேரம் ஒலிக்கும் செய்திவாசிப்பு போலிருந்தது. கிரிஜாவின் தந்தையின் தற்கொலை அவளது சிறுவயதில் இதேபோலொரு சம்பவமாக அவளது வீட்டில் சொல்லக்கேட்டது. பாலவிளையிலிருந்து மூன்று கிலோமிட்டர் தொலைவில் வசித்தாலும், பாவாடைப் பருவத்தில் தந்தையுடன் தங்களது பல எஸ்டேட்டுகளுக்கு சென்றவகையில் கிரிஜாவின் வீட்டின் வடக்கில் நீண்டு கிடந்த நிலத்தின் ஞாபகம் தனது வகுப்பு மாணவியைத் தொடர்புபடுத்தி இருந்தது. சில சமயங்களில் கிரிஜாவை மேட்டிலிருந்து பார்த்து பண்ணையாரின் பேத்தியாக கைவீசி லாந்தியது மட்டுமே நினைவுபடுத்தினாள்.

             “அந்த ஆசாரி பேமிலிக்கு என்ன ஆச்சு!!? அந்த கிரிஜா பேச்சுல ஏதோ உள்நோக்கம் இருந்தத கவனிச்சேன்.. சூனியகாரியள போல என்னல்லாமோ சொல்லீட்டு கண்ண உருட்டி சிரிச்சிட்டு போனா… அந்த சிவன் ஏன் தற்கொல பண்ணினான்? கல்யாணம் ஆச்சா அவனுக்கு?…” கிரிஜாவின் புதிர் பார்வையும் வார்த்தைகளும் அவளது உறக்கத்தைக் கெடுத்தது. மெதுவாக தந்தையின் பேச்சுக்கொடுத்தாள்.

             “அவன் ஒரு மெண்டல்… ஆனா நல்ல பய…. நான் விளிச்சா, எங்க இருந்தாலும் ஓடி வருவான்… இந்நா… இந்த வீட்ல உள்ள சகலத்தையும் முறுக்கினது அவன்தேன்… ஒனக்கு தெரியுமே…. தள்ளயும் தொவப்பனும் தற்கொல செஞ்ச வீட்ல சாமியார போல இருக்கவனுக்கு, தலைல புத்தி உள்ளவன் பெண்ண கொடுப்பானா!! இந்த பெண்ணுக்கும் வட்டு இருக்குமாயிருக்கும்!! அதுகொண்டு ஒனக்கு அப்பிடி தோணீருக்கும்…”

              “கிரிஜாய விட அஞ்சு ஆறு வயசு கூட இருக்கும்ல?”

               “இருக்கும்… பத்து பன்னென்டு வயசுலே தொவப்பன மிஞ்சின ஆசாரியானான்…. எப்பவும் சொல்லுவான் நான் கொடுத்த சம்பளம் தான் அவனுக்க கன்னி சம்பளமாம்…. ஒனக்கு ஓர்ம உண்டா!! ஒரிக்கா நீ தேங்க பறிக்க எனக்க கூட வந்தப்பம் கொல்லாவு மரத்த கண்டதும் ஊஞ்சலாடனும்னு சொல்லி, சிவன விளிச்சு நான் ஒரு ஊஞ்சல் செதுக்க சொன்னேன்… அப்பம் நூறுரூபா கூலி கொடுத்தேன், அத எப்பவும் சொல்லுவான்… அப்பம் அவனுக்கு பதினஞ்சு வயசாம்…”

             “ஞாபகம் இல்ல அப்பா…”

             “அது எப்பிடி ஞாபகம் இருக்கும்… அண்ணு ஒரு நாளு தான் அந்த ஊஞ்சல்ல ஆடின, மறுநாளு நீ சடங்கான… அதுக்க பெறவு பாலவிள கண்டத்துக்கு நீ வந்ததில்ல…”

             “அந்த முந்திரிமரம் நிக்குதா? ரப்பர வச்சப்பம் வெட்டினியளா?”

              பெருஞ்சிரிப்பு சிரித்த அருளப்பன், “இனிவாற காலத்தில நம்ம பேரபிள்ளியளுக்கு கொல்லாவு மரம் காணோக்கு யோகம் இருக்காதுன்னு அப்பளே தோணிச்சு… அதுகொண்டு அதமட்டும் வெட்டாத விட்டேன்… ஒனக்க பிள்ளியள கொண்டு போய் ஒருநாளு காட்டு, விளவங்கோடு தாலுகா ஒருகாலத்தில கொல்லாவு காடா கெடந்திது…” சற்று நிறுத்தி யோசித்தவாறு, “பின்ன சொல்லமறந்தேன், ரப்பர்கள முறிச்சதுக்கு முன்னால பிள்ளியள கொண்டு காட்டி கொல்லாவு மரத்துக்க கீழ நெறுத்தி போட்டோ எடுத்து வச்சுக்கோ…. ஏன்னா, மொதல்ல அந்த கொல்லாவுமரத்தத்தேன் வெட்டனும், அந்த சிவன் பய சாவோக்கு ஒரு எடமும் கிட்டாத நம்ம கண்டத்தில ஏறி அந்த கொல்லாவுக்க கெளைல தூங்கி நின்னான்….” சார்லெட்டுக்கு சிலிர்த்தது. தனக்காக மட்டும் ஒரு மேகம் தன் மீது நிழல்பரப்பி வந்தது போன்ற தோணலோடு பாலவிளைக்கு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தாள். அந்த முந்திரிமரத்தைப் பார்த்தால் மனக்கண்ணாடியில் வெளிச்சம் விழும், கிரிஜாவின் கண்ஜாடைக்கு பதில் கிடைக்கும் என கருதினாள்.

              தோலை உரித்தெறிந்த பாம்பைப் போல் ரப்பர்மரங்கள் இலையுதிர்கால சாட்சிகளாக நின்றன. சருகுகள் குவிந்து மரங்களின் மூடுகளைப் பற்றி கிடத்தது. ‘சாவ போறவனுக்கு எது செரப்பு’ என்பதற்கேற்ப வெட்டப்போகும் மரங்களைப் பராமரிக்காமல் போட்டிருந்தார் அருளப்பன். முள் வேலியில் நடுப்புக்காட்டி தொங்கிநின்ற இரும்புவேலியைத் தூக்கி ஓரமாக வைத்து உள்ளே சென்றாள். அவளின் காதுகளில் தென்னம் மற்றும் மாவு மரங்களின் அழுகுரலின் பெருஞ்சத்தம். இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு பழமுதிர் சோலையாக எங்கும் அமுதம் தொங்கிய அந்த நிலத்தில் பறவைகளின் கீச்சரிப்பு இல்லாமல் பழங்களின் சுயச்சாவு கோபுரங்களில்லாமல் ஓடிமறைந்து விளையாட பள்ளமும் அன்னாசிசெடி திட்டுகளுமில்லாமல் பைத்தியக்காரர்களைச் சிலையாக்கி சமப்படுத்திய பாலைவனத்தில் நிறுத்தியது போல் ரப்பர்மரங்கள் கருகிய தோகைமுழைக்காத காக்காகுஞ்சுகள் போல நின்றன.

            மதியத்தின் ஊளைக்காற்று சன்னமாக குரலெழுப்பியடித்தது. ரப்பர்மரங்களை வெறித்துப்பார்த்தபடி தெற்குமூலைக்கு அவள் நடந்தாள். இரவில் கலிமூட்டி எழுப்பும் சொப்பனம் போல முந்திரிமரம் தூரத்தில் காட்சிதந்தது. அங்கிருந்து சிவனின் வீட்டுக்கு கூரையின் மேல்நிரை தெரிந்தது. நந்தவனத்தின் நுழைவாயில் போல ஒரு முந்திரிபழத்தில் அவள் மிதித்தாள், கொட்டையும் வெருட்டென சில அடிதூரம் பாய்ந்து சென்றது. ரப்பர்மரங்களைச் சபித்ததாலோ என்னவோ!! இலையுதிர்காலம் அதன் எல்லைக்கு அப்பால் விளையாடிச்சென்றிருந்த அறிகுறியோடு பச்சைப்பரப்பி நின்றது முந்திரிமரம். பாவாடையும் பச்சைநிற பிளவுசுமணிந்த சார்லெட் அதன் கீழ் கைகளை விரித்து நின்றாள். ரப்பர்காடுகளுக்குள் பிரவேசிக்கும் முன்பாக ஊளைக்காற்றுக்கு வேறுபெயர். அந்த தென்றல்காற்று அவளைத் தழுவி கண்களுக்கு தாழ்பாளணிவித்து விரித்த கைகளோடு பரவசமாக தரையில் விழவைத்தது. கண்திறந்தால் கிளையில் ஒரு ஊஞ்சல், அதனடியில் உளியால் கொத்தப்பட்ட “சார்லெட் கிறிஸ்டினா” பெயரின் மீது தங்கஜரிகை.

              “அப்பா. இந்த மரத்தில ஒரு ஊஞ்சல் கட்டி தாங்க…” தேங்காய் பறித்து முடிக்க மதியம்வரைக்கும் ஆகலாம், அதுவரைக்கும் ஊஞ்சலாடி களிக்க அவள் கேட்டாள். ஆண்பிள்ளைகள் முந்திரிமரத்தில் தொங்கியாடுவதை அவள் பார்த்திருந்தாள். 

            “இது கொல்லாவுமரம்…பண்டுகாலத்தில இந்த மரமே எங்களுக்கு ஊஞ்சல் தான்… எல்லா கெளைலயும் தொங்குவம்….. நில்லு.. விசுவம் ஆசாரி இருக்கானான்னு பாப்போம்….”

           “ஆளு குடிச்சிட்டு நல்ல ஒறக்கம்…செறிய பணியெங்கி சிவன் செய்யும்..அவனும் பணியறியாம்….” அருளப்பனுக்கு சிவனின் தாய் பதிலளித்து முடிக்கும் முன்பாகவே வீட்டினுள்ளிருந்து குதித்து வந்தான் சிவன்.

            “செறிய ஒரு ஊஞ்சலு தட்டிக்கூட்டி தாடே…. மோள்க்கு கொறச்சு நேரம் களிக்கான்…”

              “சாரே..பத்தி நிமிசத்திலு தராம்…” வீட்டினுள் ஓடினான். தந்தை வைத்திருந்த சில தேக்குக்கட்டைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து வேகமாக நான்கு ஓட்டைகளை உருவாக்கி, அமர்வதற்கான பகுதியை சீவி பளபளப்பாக்கி தனித்துவமாக்கத் துவங்கினான்.

            “தேச்சு அழகுபடுத்தாண்டாம்டே… சும்மா கொண்டு வந்து கெட்டு….” பத்துநிமிடத்தைக் கடந்ததும் மேட்டிலிருந்து சத்தம் போட்டார் அருளப்பன். “அப்பா, நான் கிட்ட போய் பாத்திட்டு வாரேன்…” என மண்சரிவில் இறங்கிய சார்லெட் அவன் செதுக்குமிடமான வீட்டு முற்றத்திற்கு போனாள்.

             “அண்ணா, இதுல எனக்க பேர உளில கொத்தமுடியுமா?” சார்லெட் கேக்க, “பின்ன..அடிபொளியா கொத்தி தாரேன்… அஞ்சு நிமிசம் மதி…” சிவன் சுறுசுறுப்பாக பதிலளிக்கையில் அருளப்பனின் சத்தம் வந்தது.

            “மதி..மதி..கொண்டு வா… கெட்டீட்டு எனக்கு தேங்க எண்ண போணும்…..” பதினைந்து வயதான சிவனுக்கு அருளப்பனின் சாதாரண பேச்சே பேராணைப் போலிருந்தது. கயிறு நுழைக்க துளைத்த ஓட்டையுடன் கயிறை எடுத்துக்கொண்டு மேட்டிற்கு ஏறினான்.

             “இதென்னடே!! தேக்கு கட்டையா!!”

             “அதே சாரே…”

             “தெங்குமட்டயே மதி….”

             “மோளில்ல சாரே..இரிக்கட்டு…” சட்டைப்பாக்கெட்டிலிருந்து நூறுரூபாயை எடுத்துக் கொடுத்தார். ஜீப் கிளம்பும் வரைக்கும் அவள் ஓய்யாரமாக முந்திரமரக்கிளையில் பொன்னூஞ்சல் ஆடினாள். தாழ்வாரத்தில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தன்னிலை மறந்து கண்டுரசித்தான். ஊஞ்சலை நிறுத்தி அவள் சென்ற கணம் கூட அவன் நினைவில் இல்லை.

           அவள் சென்ற சாயங்காலத்தில் ஊஞ்சல் பலகையைக் கழற்றி அதில் ‘சார்லெட் கிறிஸ்டினா’ என அழகாக தமிழில் கொத்தி தங்க ஜரிகைப் பூசினான். தினமும் ஊஞ்சலைத் துடைத்து அவளுக்காக காத்திருந்தான். அவளுஞ்சலாடிய முந்திரிமரக்கிளை அவனை ஏக்கமாகப் பார்த்திருந்தது. இரவெல்லாம் அது தனித்து வெண்மேகத்தில் ஆடுவது போல அவனது தாழ்வாரக்கனவுகள் காட்டின.

              “பண்ணையாருக்கு பத்தாயத்த பொளிக்கணுமாம்” அவளைப் பார்க்கும் துள்ளிய மனதோடு செய்தி வந்த சிலநிமிடங்களிலே அருளப்பனின் வீடடைந்தான். பத்தாயத்தின் பலகைகளை அவனது கைகள் மட்டும் பார்த்தன. சார்லெட்டுக்காக கண்ணையும் காதையும் உலவ விட்டு தவித்திருந்தான்.

                “சாரே…ஊஞ்சலு அவிடதன்ன உண்டு…. மோள கூட்டிக்கோண்டு வரீன் வல்லப்பளும்…” சம்பளம் வாங்கியபடியே அருளப்பனிடம் சொன்னான்.

              “அத களத்தி எடுத்தோ…அவளினி வரில்லா…சடங்காயி !!”

              குலையொடிந்து போனவனுக்கு அவளுஞ்சலாடிய முந்திரிமரக்கிளையே வண்ணக்கனவுத் தேரானது வாழ்க்கையை முடிக்கும்வரைக்கும்.  என்றைக்குமே அவளிடத்தில் பேசியதுமில்லை முகத்திற்கு நேராக எதிர்பட்டாலும் பணிசாமான்களில் குறைப்பார்ப்பது போல் பாவனைக் காட்டிக்கடந்து செல்வான்.

             பாவாடைச் சிறுமி சார்லெட் கண்மூடியே படுத்திருக்க, விவாகரத்தாகி இருகுழந்தைகளுக்கு தாயானவள் பள்ளத்தில் சிதிலடைந்து கிடந்த வீட்டைப் பார்த்து நின்றாள். மேற்கிலிருந்து வந்த நீலநிற வண்ணத்துப்பூச்சியொன்று அவளைச் சுற்றிப்பறந்தது, காற்றின் திசைக்கு செல்லாமல் போராடி அவளின் கவனத்தை ஈர்த்தது. மண்மேட்டிலிருந்து கீழிறங்க வழிகாட்டியாக தாழ்வாகப்பறக்கவே, இரண்டாவது முறையாக கீழே இறங்கினாள். கதவுகள் பெயர்ந்து சுவர்கள் வாய்பிளந்து கிடந்த வீட்டின் அந்தகார இருட்டினுள் அது பழகிப்போன விதமாக நுழைந்தது. மாந்திரீக நூலில் இணைத்ததுபோல் அவளும் பின்நடந்தாள். அவனது அறையின் கதவு கீழேகிடந்தது. திருடர்கள் கூட தவிர்த்து புறக்கணத்த வீடாயிருந்தது.

             தூசுகள் படலமாகிப்போன ஒரு மரக்கட்டிலின் தலைமாட்டில் போய் அமர்ந்தது அந்த வண்ணத்துப்பூச்சி. அதன் அழகில் சொக்கிய அவள் பிடிக்க பாய்ந்தாள். அது பறந்தது. ஆனால் அது அமர்ந்திருந்த பலகைச் சிவன் பலகாலம் பயன்படுத்திய தலையணை. அதிலிருந்த நான்கு ஓட்டைகளை அவள் பின்னால் வந்திருந்த பாவாடைச் சார்லெட் பட்டென உணர்த்தவே, அவள் அதை எடுத்தாள், அவன் பின்தலை உருவாக்கிய மரத்தழும்பைக் காட்ட மரத்துடன் சமமாக்கி படிந்திருந்த தூசிகள் நேரம் பாத்திருந்தது போல் சரிவாக தரையில் கொட்டின. பலகையின் அடிப்பக்கத்தில் ‘சார்லெட் கிறிஸ்டினா’ பெயர் பாதுகாப்பாக மின்னிக்கொண்டிருந்தது. அவள் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். சிந்திய கண்ணீர் ஊஞ்சலில் அவன் தலைவைத்த பகுதியில் பட்டு வடிந்தது.

            அருகிலிருந்த இரும்புப்பெட்டி திறந்தநிலையில் மரப்பொம்மைகள் நிரம்பிக்கிடந்தது. பொம்மைகள் அணிந்திருந்த உடைகள் கண்ணைப்பிடுங்கி எடுக்க, வெருட்டென ஒரு பொம்மையை எடுத்தாள். அவளுடுத்திய பட்டுப்பாவாடை அந்த பொம்மையின் அளவுக்கு ஏற்றார்போல் கத்திரித்து தைக்கப்பட்டிருந்தது.

             “இதோட இவளுக்க பத்தாவது பட்டுபாவட காணாத பொய்ருக்கு…. இவா, பள்ளில கூட படிச்சித பிள்ளியளுக்கு ஒளிச்சு கொண்டு கொடுக்காளோன்னு தோணுது…. அல்லாத, இத மோட்டிச்ச கள்ளன் வருவானா!!” வல்சலா கணவனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

             “அப்பிடி கொடுக்கதுண்ணா கொடுக்கட்டு… இவளுக்கு இல்லாத துணியளா!! பாவபட்டதுவ நெறைய அவளுக்க தமிழ்மீடியம் கிளாஸ்ல படிச்சிதுன்னு சொல்லுவளே…”

            “ஆனா, கொடுத்ததையும் சம்மதிச்சுதால்லியே!!..”

           “நீ பறவண்ணாயிருக்கும்….  அல்லாத இஞ்ச ஏது கள்ளன் வரதுக்கு!! லட்சகணக்குக்கு ரப்பர்சீட்ல ஒண்ணயும் எடுக்காத ஒரு கள்ளனா!!” அருளப்பனுக்கு குனிந்த தலை நிமிராத சிவன் மீது அதீத நம்பிக்கை இருந்தது.

            “அப்போ.. சேட்டன் தையலும் படிச்சா!! இனி ஆசாரி பணியில்லங்கிலும் ஜீவிக்காம்….” சார்லெட் முகவெட்டில் அவன் செதுக்கிய மரப்பொம்மைகளில் திருடிய பட்டுப்புடவைகளைச் சிறுக வெட்டித் தைத்துக்கொண்டிருந்தான்.

           “நீ யாரிடத்தும் பறயாதிருந்நா மதி…”

            “ஞான் பறயில்லா!! பண்ணையாரு குடும்பம் அறிஞ்ஞா, நம்மட வீட்டின இடிச்சு தரமட்டமாக்குந்நு எனிக்கு அறியாம்…. இங்ஙன கொண்டுநடந்நா மதியா? அவளடத்து பறயண்டியா ?”

           “காட்டிலு வளருந்ந முல்லப்பூ ஒரு தலையிலும் கேறீல்லங்கிலும், அவிட பூத்து யாரும் காணாத அலிஞ்ஞு போணதும் ஒரு பங்ஙியா…”

           “நெனக்கு முழு பிராந்து…” கிரிஜாவுக்குத் தெரியும் அது ஒருதலைக் காதலாகவே முடியப்போவதை.

            கிரிஜா கூறிய பொதிந்த வார்த்தைகளின் இறுதிவரிக்காக அவள் தரையைத் தோண்டினாள். தரைமுழுக்க அவளுருவ மரப்பொம்மைகள் பட்டு உடையுடுத்தி புழுதிவாரிக்கிடந்தது.

கு.கு. விக்டர் பிரின்ஸ்

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் பயின்றவர். குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். சால்ட் பதிப்பகம் வயிலாக இவரது ‘செற்றை’ சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *