இருபத்தியாறு ஆண்களும் ஒரு இளம்பெண்ணும்

மக்சிம் கார்க்கி

தமிழில்: நிழல்வண்ணன்

000

நாங்கள் இருபத்தியாறு பேர் – இருபத்தியாறு உயிருள்ள இயந்திரங்கள், ஒரு நிலக் கிடங்கில் வைத்துப் பூட்டப்பட்டு இருந்தோம். அங்கு நாங்கள் காலையிலிருந்து இரவு வரை மாவுப்பிசைந்து கொண்டும், பிஸ்கட்டுக்களும் கேக்குகளும் தயாரித்துக் கொண்டும் இருந்தோம்.  எங்கள் கிடங்கின் சன்னல்கள் வழியே பார்த்தால் சாக்கடைதான் தெரியும், அது செங்கற்களால் மூடப்பட்டிருந்தது, ஈரத்தினால் பச்சைப்பாசி படர்ந்திருந்தது. சன்னல் சட்டங்கள் வெளிப்புறத்தில் அடர்த்தியான இரும்புவலையால் தடுக்கப்பட்டிருந்தன. மாவுப் புழுதிபடிந்த சன்னல் கண்ணாடிகளின் வழியே சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியவில்லை. சன்னல் கண்ணாடிகளை எங்கள் உரிமையாளர் இரும்பு வலை கொண்டு தடுத்து வைத்ததற்குக் காரணம், நாங்கள் சன்னல் வழியே ஏழைகளுக்கோ, வேலையில்லாமல் பட்டினியிலிருந்த எங்களுடைய சகாக்களுக்கோ ரொட்டியைக் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான்; எங்கள் உரிமையாளர் எங்களை ஏமாற்றுக்காரர்கள் என்று குறிப்பிட்டு, எங்களுக்கு இறைச்சி உணவுக்குப் பதிலாகக் கெட்டுப்போன காய்கறிகளைப்போட்டுச் சமைத்த உணவை அளித்தார்.

எங்களுடைய கிடங்கு கல்லால் ஆனது, மூச்சுத் திணவைக்கும் அளவுக்குக் குறுகியதாக இருந்தது. கனத்த கூரையில் புகைக் கரியும் சிலந்திவலைகளும் சூழ்ந்திருந்தன. தடிமனான சுவர்களுக்குள் நெருக்கமாக வெறுப்பூட்டும் வகையில் இருந்தது; அவற்றின் மீது சேறும் பூஞ்சைக் காளானும் படிந்திருந்தன…. நாங்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்தோம், போதுமான தூக்கம் இருக்காது, நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எங்கள் சக தொழிலாளர்கள் தயாரித்துவைத்த மாவைக்கொண்டு பிஸ்கட்டுக்கள் செய்வதற்காக, மந்தமாகவும் அலட்சியமாகவும் ஆறு மணிக்கு மேசைக்கு வந்து சேர்ந்தோம். நாள் முழுவதும் காலையிலிருந்து இரவு பத்துமணி வரை, எங்களில் சிலர் மேசைக்கு அருகில் அமர்ந்து நெகிழ்ந்து நீளும் மாவிலிருந்து எங்கள் கைகளால் உருட்டி, உலுக்கி, கெட்டிப்பட்டுவிடாமல் செய்தோம், அதேநேரத்தில் பிறர் மாவை நீருடன் சேர்த்துப் பிசைந்தார்கள்.  கொதிகலனில் கொதித்துக்கொண்டிருக்கும் நீரில் பிஸ்கட்டுக்கள் வேகவைக்கப்படும், அந்தக் கொதிகலன் நாள் முழுவதும் சோகமாகவும் சிந்தனையுடனும் ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது; அடுமனை வாரிப்போடும் கரண்டி விரைவாகவும் கோபத்துடனும் அடுப்பிலிருந்து நழுவும் மாவுத் துகள்களை வாரி சுடு செங்கற்கள் மீது வீசிக்கொண்டிருந்தது. அடுப்பின் ஒருபக்கம், காலையிலிருந்து இரவுவரை விறகு எரிந்து கொண்டிருந்தது; எரியும் தீயின் சுவாலையின் சிவப்புப் பிரதிபலிப்பு எங்களைப் பார்த்துக் கேலி செய்வது போல அதிர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. பெரிய அடுப்பு, தேவதைக் கதையில் வரும் அரக்கனின் சிதைந்து போன தலையைப் போலத் தெரிந்தது. அது தரைக்கு அடியிலிருந்து பொத்துகொண்டு வந்தது போலவும், அதன் அகன்ற நெருப்புமிழும் வாயைத் திறந்தது போலவும், எங்கள் மீது மூச்சுவிட்டு வெப்பத்தை வீசியடித்தது போலவும், எங்கள் முடிவற்ற வேலையை அதன் நெற்றியிலிருந்த கறுப்பு காற்றுப்போக்கிக் கண்கள் வழியே கண்காணித்துக் கொண்டிருந்தது போலவும் இருந்தது.  இந்த இரு குழிகளும் கண்களைப் போல இருந்தன –துன்பத்தை உணர்ந்துகொள்ளும் தன்மையற்ற, இரக்கமற்ற ஓர் அரக்கனின் கண்கள்: அவை அதே இருண்ட பார்வையுடன் எங்களை முறைத்துப் பார்த்தன, அடிமைகளைப் பார்த்துப்பார்த்து சோர்வடைந்தது போலவும், அவற்றிடமிருந்து மனிதத்தன்மை எதையும் எதிர்பார்க்காமல் அறிவின் மீதான மோசமான அவமதிப்புடன் அவர்களை வெறுத்தது போலவும் இருந்தது. ஒவ்வொரு நாளும், மாவுப் புழுதிக்கு மத்தியிலும், சேறும், தடித்த மோசமான வாடையுடன் மூச்சுத்திணற வைக்கும் வெப்பத்திலும், நாங்கள் மாவை உருட்டி, பிஸ்கட்டுக்கள் செய்தோம், எங்கள் வியர்வையால் அவற்றை ஈரமாக்கினோம், எங்கள் வேலையை நாங்கள் மிகுந்த வெறுப்புடன் பார்த்தோம்; எங்கள் கரங்களால் உருவான பிஸ்கட்டை நாங்கள் ஒருபோதும் தின்றதில்லை, சுவையான பிஸ்கட்டுக்களுக்குப் பதிலாக நாங்கள் கருப்பு ரொட்டியையே விரும்பினோம். நீண்ட மேசையருகில் இருபுறமும் எதிரெதிரே – ஒன்பது பேருக்கு எதிராக ஒன்பது பேர் – அமர்ந்து, இயந்திரகதியாக பலமணி நேரம் எங்கள் கரங்களையும் விரல்களையும் இயக்கினோம், எங்கள் கரங்களை நாங்கள் தான் இயக்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல் போகும் அளவுக்கு எங்கள் வேலைக்கு நாங்கள் பழகியிருந்தோம். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது எங்கள் முகங்களில் இருந்த சுருக்கங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரிந்தது, அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே பெரும் சோர்வூட்டுவதாக இருந்தது, எங்களுக்குப் பேசிக்கொள்வதற்கு எதுவுமில்லை, நாங்கள் இதற்குப் பழகிவிட்டோம், ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளாதவரை, பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருந்தோம், ஏனென்றால் ஒருவரை, குறிப்பாக ஒரு சகாவைத் திட்டுவதற்கு, எப்போதும் ஏதாவது இருந்தது. ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வது கூட இல்லை. ஒரு சிலையைப் போல இருக்கும்போது, அனைத்து உணர்வுகளும் உழைப்பின் பளுவால் நசுக்கபட்டிருக்கும் போது, பாதி இறந்து போன மனிதன் எப்படிக் குற்றம் செய்பவனாக இருக்கமுடியும்? ஆனால் அனைத்தையும் சொல்லிவிட்ட, அதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லாமல் போய்விட்டவர்களுக்கு மட்டும்தான் மௌனமாக இருப்பது பயங்கரமாகவும் வேதனையாகவும் இருக்கும்; ஆனால் சொல்வதற்கென்று எப்போதும் எதுவும் இல்லாதவர்களுக்கு – மௌனம் என்பது எளிதானதும் இலகுவானதும் ஆகும். …. சிலநேரங்களில் நாங்கள் பாடினோம், எங்கள் பாடல் இப்படித் தொடங்கியது: வேலையினிடையே யாரோ ஒருவர் திடீரென்று பெருமூச்சு விடுவார், களைத்துப் போன ஒரு குதிரையைப் போல, பின்னர் நீட்டிப் பேசுவது போன்ற பாடல்கள் மென்மையாகத் தொடங்கும், அதன் இதயத்தைத் தொடும் இசை எப்போதும் பாடகரின் நொந்துபோன ஆன்மாவுக்கு இதத்தைக் கொடுக்கும். எங்களில் ஒருவர் பாடினார், முதலில் நாங்கள் அவரது தனிமைப் பாடலை அமைதியாகக் கேட்டோம், ஒரு ஈரக்காற்று வீசும் இலையுதிர்கால இரவில் ஸ்டெப்பி புல்வெளியில், வெளுத்த வானம், ஓர் ஈயக்கூரை போல பூமியின் மீது கவிந்துகொண்டிருந்த போது, சுள்ளிகளின் குவியலில் பற்றிய சிறு நெருப்புப் போல, அந்த அறையின் கனத்த கூரையின் கீழ் மூழ்கி அந்தப் பாடல் கேட்காமல் போனது.  பின்னர் இன்னொருவர் அந்தப் பாடகருடன் சேர்ந்துகொண்டார், இப்போது இரண்டு குரல்கள் எங்கள் குறுகிய சாக்கடையின் மூச்சுத்திணறச் செய்யும் வெப்பத்தின் மீது துயரார்ந்த வகையில் மெதுவாக உயர்ந்தன. பின்னர் திடீரென்று இன்னும் சில குரல்கள் அந்தப் பாடலை இசைக்கத் தொடங்கின – அந்தப் பாடல் குமிழிகள் ஓர் அலையைப் போல எழுந்து, வலிமை பெற்று, எங்கள் கற்கலால் ஆன சிறையின் ஈரமான கனத்த சுவர்களைப் பிளந்துகொண்டு செல்வது போல, உரத்து ஒலித்தன.

இருபத்தியாறு பேரும் பாடுகிறார்கள்; உரத்த குரல்கள் ஒத்திசைவுடன் ஒலித்துப் பணிமனையை நிரப்பின; அந்தப் பாடலுக்கு அங்கு இடமிருக்கவில்லை; அது சுவர்களின் கற்களின் மீது மோதித் தாக்கின; அது வேதனையை வெளியிட்டது, தேம்பி அழுதது, எரிச்சலூட்டும் பழைய காயங்களால் மேலெழுந்த துயரத்தால்,     மென்மையான உணர்ச்சியூட்டும் வலியால் இதயத்துக்குப் புத்துயிரளித்தது.

பாடகர்கள் ஆழமாகவும் கனத்தும் மூச்சுவிடுகின்றனர்; யாரோ ஒருவர் எதிர்பாராமல் தனது பாடலைக் கைவிட்டு, தனது சகாக்கள் பாடுவதை நீண்ட நேரம் கேட்கிறார், மீண்டும் அவரது குரல் பொதுவான அலையில் கலந்துவிடுகிறது. இன்னொருவர் துயரத்துடன் வியப்படைகிறார், ஆ! அவரும் பாடுகிறார், அவரது விழிகள் மூடியிருக்கின்றன, அது விரிந்த அடர்ந்த ஒலியலை அவருக்கு எங்கோ வெகுதூரம் இட்டுச் செல்லும் ஒரு சாலையைப் போல, பிரகாசமான கதிரவனால் ஒளியூட்டப்பட்டு ஒரு அகன்ற சாலை போலவும் அதில் தான் நடந்து போவதைக் காண்பது போலவும் ….. தோன்றியிருக்கலாம்.

அந்தத் தீச்சுவாலை அடுப்பில் இடையறாமல் அசைந்தாடிக் கொண்டிருந்தது, அடுமனைக்காரரின் வாரிப்போடும் கரண்டி செங்கல் மீது சுரண்டிக்கொண்டிருந்தது, கெட்டிலில் தண்ணீர் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது, நெருப்பின் பிரதிபலிப்பு சுவரின் மீது அசைந்தாடிக்கொண்டு, மௌனமாகச் சிரித்துக்கொண்டிருந்தது. நாங்கள் யாரோ ஒருவரின் சொற்களை, எங்கள் மந்தமான சோகத்தை, வாழும் மனிதர்களின் கனத்த துயரத்தை, கொள்ளையிடப்பட்ட கதிரொளியை, அடிமைகளின் துன்பத்தைப் பாடித் தீர்க்கிறோம். இவ்விதமாக, நாங்கள் இருபத்தியாறு பேர், அந்தப் பெரிய கற்களாலான வீட்டின் அறையில் வசித்தோம், அந்த வீட்டின் மூன்று அடுக்குகளும் எங்கள் தோள்கள் மீது கட்டியெழுப்பபட்டது போல் வாழ்வது எங்களுக்குக் கடினமாக இருந்தது.

ஆனால், அந்தப் பாடல்களோடு, எங்களுக்கு இன்னுமொரு நல்ல விடயம் இருந்தது, அது நாங்கள் அனைவரும் விரும்பிய ஒன்று, அது கதிரவனுக்குப் பதிலாக எங்களிடம் வந்ததாக இருக்கலாம். எங்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஒரு சித்திரத் தையல் வேலைக் கடை இருந்தது, அங்கு பல பெண் தொழிலாளர்களிடையே, பதினாறு வயது வீட்டு வேலைக்காரப் பெண், தான்யா வசித்தாள். ஒவ்வொரு நாள் காலையிலும், அவளுடைய சிறிய, இளஞ்சிவப்பு முகம்,  உற்சாகமிக்க நீலவண்ணவிழிகளுடன் எங்கள் வீட்டின் முன்பக்கக் கூடத்தின்  சன்னலின் சிறிய கண்ணாடிக் கதவின் மீது சாய்ந்து கொண்டு, அவளுடைய கனிவான கிண்கிணிக் குரலில் எங்களைப் பார்த்து இரைந்து கேட்பாள்: “சிறிய சிறைக் கைதிகளே! எனக்கு பிஸ்கட்டுக்கள் கொடுங்கள்”       

நாங்கள் அனைவருமே இந்த நன்கு பழக்கமான தெளிவான ஒலியைக் கேட்டுத் திரும்பி, அந்தத் தூய இளம் முகத்தை மகிழ்ச்சியடனும் கனிந்த இதயத்துடனும் பார்த்தோம், அந்த முகம் எங்களைப் பார்த்து உவகையுடன் முறுவலித்தது. அவளது முகம் சன்னல் கண்ணாடியில் அழுந்திச் சப்பையாகி இருப்பதையும், சிறிய வெண்மையான பற்கள் புன்னகையுடன் விரிந்திருந்த இளஞ்சிவப்பு உதடுகளுக்கிடையே பளிச்சென்று மின்னியதையும் பார்த்து மகிழப் பழகிவிட்டிருந்தோம். அவளுக்காகக் கதவுகளைத் திறந்துவிட ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ஓடினோம்; அவள் அன்போடும் உற்சாகத்தோடும் அவளது சமையல் நேர முன்னாடையை நீட்டுவாள். தலையை ஒருபக்கமாகச் சாய்த்துக்கொண்டு, எங்களுக்கு முன்பாக எந்த நேரமும் புன்னகைத்தவாறே நிற்பாள். அடர்த்தியான செந்தவிட்டு நிற முடி அவளுடைய தோள்கள் வழி இறங்கி மார்பின் மீது விழுந்திருக்கும். அழுக்கடைந்து, இருண்டு, உருக்குலைந்த மனிதர்களான நாங்கள் அவளைக் கீழிருந்து மேல்வரை பார்ப்போம், அந்த வாசல் தரையைவிட நான்கு தப்படிகள் உயர்ந்திருந்தது – எங்கள் தலைகளை மேல்நோக்கி உயர்த்திப் பார்த்து அவளுக்குக் காலைநேர வாழ்த்துச் சொல்வோம். அவளிடம் சில குறிப்பான சொற்களைச் சொல்வோம், அந்தச் சொற்களை நாங்கள் அவளுக்கென்று மட்டுமே பயன்படுத்துவோம். அவளிடம் பேசும்போது எங்கள் குரல்களும் எங்கள் நகைச்சுவையும் மென்மையாக இருக்கும். ஒவ்வொன்றும் அவளுக்கென்று மாறியிருக்கும். அடுமனைக்காரர் ஒரு வாரி நிறைய அடர்காவி நிறத்திலும் அடர்சிவப்பு நிறத்திலுமிருந்த பிஸ்கட்டுக்களை தான்யாவின் முன்னாடையில் சாதுர்யத்துடன் வீசுவார்.

“முதலாளி உன்னைப் பார்க்காமல் இருந்துகொள்!” நாங்கள் எப்போதும் அவளை எச்சரிப்போம். அவள் குறும்புத்தனமாகச் சிரித்து, எங்களைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினாள்.

“போய் வருகிறேன், சிறிய சிறைக் கைதிகளே!” ஒரு சிறிய சுண்டெலியைப் போல அவள் விரைவாக மறைந்துபோவாள். அவ்வளவுதான். ஆனால் அவள் விடைபெற்றுச் சென்ற பிறகு வெகுநேரம் வரை, ஒருவருக்கொருவர் அவளைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்வோம். முந்தைய நாள், அதற்கு முந்தைய நாள் நாங்கள் பேசிக்கொண்ட அதே விடயத்தையே பேசுவோம், ஏனென்றால், அவளும் நாங்களும், எங்களைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொன்றும் நேற்றைப் போல, அதற்கு முந்தைய நாளைப் போல, அப்படியே இருந்தோம். தன்னைச் சுற்றிலுமுள்ள எதுவுமே மாறாமல் இருக்குமானால், ஒருவருக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாகவும் வேதனையாகவும் இருக்கும்.  அது அவனுடைய ஆன்மாவை கொல்லாமல் விட்டால் நல்லது, சுற்றுச்சூழலின் அசைவின்மை அவன் வாழுங்காலம் வரை இன்னும் மிகுதியான வேதனையைத் தருவதாக ஆகிறது.  சில நேரங்களில் எங்கள் சொந்த முரட்டுத்தனமான, வெட்கமற்ற சொற்கள் குறித்து எங்களையே வெறுத்துக்கொள்ளும் விதத்தில் நாங்கள் எப்போதும் பெண்களைப் பற்றிப் பேசினோம். இது மிகவும் தெளிவானது, ஏனென்றால் எங்களுக்குத் தெரிந்த பெண்கள் யாரும் ஒருபோதும் அதைவிடச் சிறந்த சொற்களுக்குத் தகுதியானவர்களாக இருந்ததில்லை. ஆனால் தான்யாவைப் பற்றி நாங்கள் எப்போதுமே தவறாகப் பேசியதில்லை.  எங்களில் ஒருவர் கூட, தனது கரத்தால் அவளைத் தொடுவதற்குக் கூடத் துணிந்ததில்லை. அதுமட்டுமல்ல, அவள் ஒருபோதும் எங்களிடமிருந்து ஒரு கிண்டல் கேலிப் பேச்சைக் கூடக் கேட்டதில்லை. இது கூட அவள் எங்களோடு ஒருபோதும் தங்காமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம்; வானத்திலிருந்து வந்த விண்மீனைப் போல மின்னலென அவள் எங்கள் கண்களின் முன்னே தோன்றி, பின்னர் மறைந்துபோவாள், அல்லது அவள் சிரியவளாகவும் மிகவும் அழகானவளாகவும் இருந்ததனாலோ என்னவோ, அழகாக இருக்கும் எல்லாமே மதிப்பை பெறும் என்பது போல, அவள் முரட்டுத்தனமான ஆட்களிமிருந்து கூட மரியாதையை பெற்றாள்.  அதன் பிறகு, எங்களுடைய கடின உழைப்பு எங்களை மந்தமான எருதுகளாக மாற்றிவிட்டிருந்தாலும், நாங்கள் மனிதர்களாகவே இருந்துவந்தோம், மற்ற அனைத்து மனிதர்களையும் போலவே, எதையாவது வழிபடாமல் எங்களால் இருக்க முடியவில்லை. எங்களில் ஒருவர்கூட அவளைவிடச் சிறந்தவர்களாக இல்லை, அந்த வீட்டில் பதின்மக் கணக்கான மனிதர்கள் வசித்தாலும், அந்தக் கிடங்கில் வசித்த எங்களிடம் அவளைத் தவிர ஒருவருமே கவனம் செலுத்தியதில்லை. இறுதியாக – இதுதான் முதன்மையான காரணமாக இருக்கவேண்டும் – அதாவது நாங்கள் அனைவருமே எங்களுக்குச் சொந்தமான ஒன்றைப்போல, எங்கள் பிஸ்கட்டுக்கள் காரணமாக மட்டுமே நிலவிய ஒன்றைப்போல, கருதினோம். சூடான பிஸ்கட்டுக்களை அவளுக்குக் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை என்றும் இது அந்த அழகுச் சிலைக்கு எங்கள் அன்றாடக் காணிக்கை என்றும் நாங்கள் கருதினோம், அது எங்களுக்குப் புனிதமான வழக்கமாகவும் எங்களுடைய அன்றாடக் கடப்பாடாகவும் ஆகியிருந்தது.  பிஸ்கட்டுக்கள் மட்டுமின்றி இன்னும் வெதுவெதுப்பான ஆடைகளை அணிய வேண்டும், படிக்கட்டுக்களில் வேகமாக ஓடக்கூடாது, கனமான விறகுக்கட்டுக்களைச் சுமந்து செல்லக் கூடாது என்பது போன்ற பல அறிவுரைகளையும் அவளுக்கு வழங்கினோம். அவள் ஒரு புன்னகையுடன் எங்கள் அறிவுரைகளைக் கேட்டாள், தன் சிரிப்பால் அவற்றுக்குப் பதிலளித்தாள், ஒருபோதும் நாங்கள் சொன்னதைக் கேட்டதில்லை, ஆனால் இதனால் எங்களுக்கு எந்தக் கோபமும் வரவில்லை. நாங்கள் விரும்பியதெல்லாம் நாங்கள் அவள் மீது அக்கறையுடன் இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான். அவள் பலநேரங்களில் பல்வேறு கோரிக்கைகளுடன் எங்களிடம் வந்தாள். எடுத்துக்காட்டாக, கனமான கிடங்குக் கதவைத் திறக்கவும், விறகை வெட்டித்தரவும் கேட்டாள். அவள் எங்களிடம் எதை கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்துகொடுத்தோம், அது எங்களுக்கு ஒருவகையில் பெருமையாகவும் கூட இருந்தது.

ஆனால் எங்களில் ஒருவர் அவளிடம் தனது ஒரே சட்டையின் கிழிசலைத் தைத்துத் தருமாறு கேட்டபோது, அவள் வெறுப்புமிழும் ஏளனச் சிரிப்புடன் மறுத்துவிட்டாள்.

நாங்கள் அந்த சந்தேகத்துக்கிடமான நபரைப் பார்த்து மனப்பூர்வமாகச் சிரித்தோம், மீண்டும் ஒருபோதும் அவளிடம் எதையும் கேட்கவில்லை. அவளை நாங்கள் நேசித்தோம், இதில் அனைத்தும் அடங்கும். ஒரு மனிதர் எப்போதும் யாரிடமாவது தனது அன்பைச் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார், இருந்தாலும் அவர் சிலநேரங்களில் அவரைத் தடுக்கவோ அவதூறு செய்யவோ நேரலாம்; தனது அன்பின் மூலம் தனக்கு அன்மித்தவரின் வாழ்வை நச்சாக்கலாம், ஏனென்றால், அன்பு செலுத்துவதன் மூலம் நேசிப்பவரை அவர் மதிப்பதில்லை. நாங்கள் தான்யாவை நேசிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் நாங்கள் நேசிப்பதற்கு வேறு ஒருவருமில்லை.

சில நேரங்களில் எங்களில் யாரோ ஒருவர் திடீரென்று இவ்வாறு காரணம் கற்பிக்கத் தொடங்குவார்:

“அந்தப் பெண்ணுக்காக நாம் ஏன் இந்த அளவுக்கு மெனக்கெடுகிறோம்? அவளிடம் என்ன இருக்கிறது? நாம் அவளுடன் அளவுக்கு மிகுதியாகப் பழகுகிறோம்.”  நாங்கள் விரைவாகவும் முரட்டுத்தனமாகவும் அப்படிப்பட்ட சொற்களைக் கூறத் துணிந்த அந்த நபரைத் தடுத்து நிறுத்தினோம். நாம் ஏதோ ஒன்றை நேசிக்க வேண்டியிருந்தது. அதை நாம் கண்டுபிடித்து, அதை நேசித்தோம், நாம் இருபத்தியாறு பேரும் நேசித்த அந்த ஏதோ ஒன்று நம்மில் ஒருவருக்கும் அணுகமுடியாததாக, நாம் மீறக்கூடாததாக இருக்க வேண்டியுள்ளது, இந்த விடயத்தில் நமக்கு எதிராக யார் வந்தாலும் அவர் நமக்கு எதிரி. நாங்கள் நேசித்தோம், ஒருவேளை உண்மையிலேயே நல்ல ஒன்றை நாங்கள் நேசிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இருபத்தியாறு பேர் இருந்தோம், ஆகவே எங்களுக்கு நெருக்கமான விடயம் மற்றவர்களின் பார்வையில் புனிதமானதாக இருக்கவேண்டும் என்று எப்போதும் நாங்கள் விரும்பினோம்.  எங்களுடைய அன்பு வெறுப்பைவிடக் குறைந்த வேதனை தருவது அல்ல. ஒருவேளை இதனால்தான் சில அகங்காரம் கொண்ட மனிதர்கள் எங்களுடைய வெறுப்பு எங்கள் அன்பைவிட மிகவும் வஞ்சப் புகழ்ச்சியாக இருப்பதாக கூறிக்கொள்வார்களோ என்னவோ. அப்படியானால், அது உண்மையாக இருந்தால் அவர்கள் எங்களிடமிருந்து ஓடிவிடமாட்டார்களா?

பிஸ்கட்டுக்கள் தயாரிப்புத் துறை தவிர எங்கள் உரிமையாளருக்கு வெள்ளை ரொட்டிப் பணிமனை ஒன்றும் இருந்தது; அதுவும் அதே வீட்டில் இருந்தது, எங்கள் சாக்கடையிலிருந்து ஒரு சுவரால் அது பிரிக்கப்பட்டிருந்தது; வெள்ளை ரொட்டித் தயாரிப்பாளர்கள் நான்கு பேர் இருந்தனர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர், அவர்களுடைய வேலையைக் கருத்தில் கொண்டால் அது எங்களுடையதை விடத் தூய்மையானதாக இருந்தது, ஆகவே அவர்கள் எங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டார்கள்; அவர்கள் ஒருபோதும் எங்கள் பணிமனைக்கு வரமாட்டார்கள், முற்றத்தில் எங்களைப் பார்க்கும்போதெல்லாம் எங்களைப் பார்த்துச் சிரித்தார்கள்; நாங்களும் அவர்களிடம் செல்லமாட்டோம். நாங்கள் வெள்ளை ரொட்டியைத் திருடிவிடலாம் என்ற அச்சத்தில் உரிமையாளர் அங்கு செல்வதைத் தடை செய்துள்ளார். எங்களுக்கு வெள்ளை ரொட்டி பிடிக்காது, ஏனென்றால் அவற்றின்மீது எங்களுக்குப் பொறாமையாக இருந்தது. அவர்களுடைய வேலை எங்களுடைய வேலையை விட எளிதானதாக இருந்தது, அவர்களுக்கு எங்களை விட நல்ல ஊதியமும் அளிக்கப்பட்டது, அவர்களுக்கு நல்ல உணவும் வழங்கப்பட்டது, அங்கு விசாலமான, வெளிச்சமான பணிமனை இருந்தது, அவர்கள் அனைவரும் தூய்மையாகவும் உடல்நலத்துடனும் இருந்தார்கள், எங்களை அருவருப்புடன்  பார்த்தார்கள்; நாங்கள் அனைவரும் மஞ்சளாகவும் சாம்பல் நிறத்திலும் நோயாளிகளாகவும் இருந்தோம். விடுமுறை நாட்களின் போதும், அவர்கள் வேலையில்லாமல் ஓய்வாக இருந்தபோதும், அவர்கள் நேர்த்தியான மேலங்கிகளையும் கிரீச் என்று ஒலி எழுப்பும் காலணிகள் அணிந்திருந்தனர்; அவர்களில் இருவரிடம் இசைக் கருவிகள் இருந்தன, அவர்கள் அனைவரும் நகரப் பூங்காவுக்குச் சென்றனர், எங்களிடம் அழுக்குக் கந்தல்களும் வெடித்துப்போன காலணிகளும் தான் இருந்தன, மாநகரக் காவல்துறையினர் பூங்காவிற்குள் எங்களை அனுமதிக்கவில்லை – எங்களால் வெள்ளை ரொட்டிகளை விரும்ப முடியுமா?

அந்த ரொட்டி சுடுபவர்களில் ஒருவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது என்றும் உரிமையாளர் அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டு, அந்த இடத்தில் வேறு ஒருவரை அமர்த்திவிட்டார் என்றும், அந்த ஒருவர் ஒரு படைவீரர் என்றும் அந்தப் படைவீரர் ஒரு பட்டுத்துணி போன்ற பளபளப்பான உடையும் அவருடைய கைக்கடிகாரத்திற்கு ஒரு தங்கச் சங்கிலியை பூட்டியிருந்தார் என்றும் ஒருநாள் நாங்கள் தெரிந்துகொண்டோம், நாங்கள் அத்தகைய பகட்டான ஆடையைப் பார்க்க ஆவலுடன் இருந்தோம், அவரைப் பார்க்கும் நம்பிக்கையில், அவ்வப்போது, ஒருவர் மாற்றி ஒருவராக முற்றத்துக்குள் ஓடிப்போய்ப் பார்க்கத் தொடங்கினோம்.

ஆனால் அவனே எங்களுடைய பணிமனைக்கு வந்தான். கதவைத் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்துக்கொண்டு, அதைத் திறந்துவைத்துவிட்டு, வாசலில் நின்று, புன்னகைத்தாவாறே, எங்களிடம் சொன்னான்:

 “கடவுள் உங்களுக்கு உதவட்டும், ஆட்களே!” அவன் வாசலில் நின்று, மேலிருந்து எங்களைத் தாழ்வாகப் பார்த்தான், குளிர் காற்று அடர்த்தியான, புகை மூட்டத்துடன் கதவின் வழியே அவனுடைய பாதத்தைச் சுற்றிக்கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தது, அவன் அழகான, முறுக்கு மீசையுடன் இருந்தான், அவனுடைய பெரிய மஞ்சள் நிறப் பற்கள் மின்னின. அவனுடைய இடுப்பு அங்கி நீலநிறத்தில், மலர்களின் சித்திர வேலைப்பாட்டுடன் இருந்தது; அது ஒளிவீசிக்கொண்டிருந்தது, பொத்தான்கள் சிவப்பு நிற கற்களால் செய்யப்பட்டிருந்தன. அங்கே ஒரு சங்கிலியும் இருந்தது. அந்தப் படைவீரன் அழகாக, உயரமாக, சிவந்த கன்னங்களுடன் இருந்தான், அவனுடைய பெரிய, இலேசான கண்கள் – இரக்கத்துடனும் தெளிவாகவும் – அழகாகத் தெரிந்தன. அவனுடைய தலையில் வெள்ளை நிறத்தில், கஞ்சிபோட்ட விறைப்பான தொப்பி இருந்தது. அவனது தூய்மையான முன்னுடைக்கு அடியிலிருந்து நாகரிகமான, பிரகாசமான, பளபளப்பான காலணிகளின் விரல்நுனிப்பகுதிகள் நீட்டிகொண்டிருந்தன.

எங்கள் ரொட்டி சுடுபவர் அவனிடம் கதவை மூடுமாறு மரியாதையுடன் கேட்டுக்கொண்டார், அவன் அதை அவசரமின்றிச் செய்துவிட்டு, உரிமையாளரைப் பற்றி கேள்வி கேட்கத் தொடங்கினான். ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு, எங்கள் “முதலாளி” ஒரு போக்கிரி, ராஸ்கல், வில்லன், கொடுங்கோலன், என்று அவரைப்பற்றிச் சொல்லக்கூடிய, சொல்லவேண்டிய அனைத்தையும் கூறினோம், ஆனால் அதை இங்கே மீண்டும் சொல்லமுடியாது. அந்தப் படைவீரன் கேட்டுவிட்டு, அவனது மீசையை முறுக்கிக்கொண்டு, எங்களை மென்மையாகவும் மேம்போக்காவும் ஆராய்ந்தான்.

“இங்கு பல பெண்கள் இருக்கிறார்களா?” திடீரென்று அவன் கேட்டான்.

எங்களில் சிலர் மரியாதையுடன் சிரிக்கத் தொடங்கினோம், மற்றவர்கள் இலேசாக முகத்தைச் சுழித்துக்கொண்டனர்; யாரோ ஒருவர் அந்தப் படைவீரனுக்கு அங்கு ஒன்பது பெண்கள் இருப்பதாக விளக்கமளித்தனர்.

“அவர்களிடம் நீங்கள் சுதந்திரம் எடுத்துக்கொள்வீர்களா?” கண்களைச் சிமிட்டிக்கொண்டே அந்தப் படைவீரன் கேட்டான்.

மீண்டும் நாங்கள் வெடிச்சிரிப்பில் ஆழ்ந்தோம், அது மிகவும் உரத்ததாக இல்லை, அது குழப்பமான சிரிப்பாகும். எங்களில் பலர் அந்தப் படைவீரன் முன்பு அவனைப் போலவே புத்திசாலியாகக் காட்டிக்கொள்ள விரும்பினோம், ஆனால் ஒருவரால் கூட அதைச் செய்யமுடியவில்லை. யாரோ ஒருவர் தாழ்ந்த குரலில் ஒப்புக்கொண்டார்:

“நாங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் அல்ல…”

“ஆம், அது உங்களுக்குக் கடினம் தான்!” அந்தப் படைவீரன் எங்களை உற்றுப்பார்த்து நம்பிக்கையுடன் சொன்னான். “உங்களிடம் அதற்கான நடத்தை இல்லைதான் …. அதற்கான உருவத் தோற்றம் – உங்களிடம் இல்லை என்று சொல்ல வந்தேன்! ஒரு பெண் ஓர் ஆணிடம் நல்ல தோற்றத்தை விரும்புகிறாள். அவளுக்கு அது முழுநிறைவாக இருக்க வேண்டும்! அதன் பிறகு அவள் வலிமையை மதிக்கிறாள்…. ஒரு கை, இப்படி இருக்க வேண்டும்!” அந்தப் படைவீரன் அவனது வலது கையை கால் சட்டைப்பையிலிருந்து வெளியே இழுத்தான். அவனுடைய சட்டைக் கை அவனது முழங்கை வரை சுருட்டி மடித்துவிடப்பட்டிருந்தது. அவன் தன்னுடைய கையை எங்களிடம் காட்டினான் …. அது வெண்ணிறத்தில், வலிமையாக, தங்கநிறத்தில் மினுமினுக்கும் முடிகள் நிறைந்து காணப்பட்டது. 

“கால்கள், மார்பு, அனைத்திலும் திடகாத்திரம் தெரியவேண்டும். அதன் பிறகு, அந்த ஆண் நாகரிகத்திற்கேற்ப உடை உடுத்தியிருக்க வேண்டும் …. பொருட்களின் அழகுக்கு அது தேவையாக இருக்கிறது, எடுத்துகாட்டாக, என்னைப் பெண்கள் காதலிக்கிறார்கள், நான் அவர்களை அழைக்கவில்லை, அவர்களைக் கவர்ந்திழுப்பதும் இல்லை, அவர்கள் தாமாகவே என்னிடம் வருகிறார்கள்.”  அவன் ஒரு மாவுமூட்டை மீது அமர்ந்துகொண்டு, பெண்கள் எப்படி அவனைக் கதலித்தார்கள், அவர்களை அவன் எப்படித் துணிவுடன் கையாண்டான் என்று சொன்னான். பின்னர் அவன் சென்றுவிட்டான், அவனுக்குப் பின்னால் ஒரு கிரீச்சொலியுடன் கதவு மூடிக்கொண்டது. அவனைப் பற்றியும் அவனுடைய கதைகளைப் பற்றியும் நினைத்துக்கொண்டே நாங்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம். அதன் பிறகு திடீரென்று நாங்கள் அனைவரும் பேசத் தொடங்கினோம், எங்கள் ஒவ்வொருவரையும் அவன் மகிழ்ச்சியடையச் செய்தான் என்பது உடனே எங்களுக்குத் தெளிவாகியது. அப்படிப்பட்ட ஓர் இரக்கமுள்ள, வெளிப்படையான ஆள். அவன் வந்து ஒரு கணம் அமர்ந்திருந்தான், பின்னர் பேசினான். ஒருவருமே அதற்கு முன்பு எங்களிடம் வந்ததில்லை, ஒருவருமே இது போல எங்களிடம் பேசியதில்லை; மிகவும் நட்புரீதியாக … நாங்கள் அவனைப் பற்றியும் சித்திரத் தையல் வேலைப் பெண்களிடம் அவனுடைய எதிர்கால வெற்றி பற்றியும் பேசினோம், அவர்கள் ஒன்று எங்களைக் கடந்து செல்வார்கள், அவர்களுடைய உதடுகளை அவமதிக்கும் வகையில் மூடிக் கொள்வார்கள், முற்றத்தில் எங்களைப் பார்க்கும்போது, அல்லது அவர்கள் வழியிலேயே நாங்கள் இல்லாதது போல நேராகப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். குளிர்காலத்தில் அவர்கள் குறிப்பான தொப்பிகளையும் மென்மயிர்த் தோல் மேலங்கிகளையும் அணிந்திருப்பார்கள்; கோடைக் காலத்தில் தொப்பிகளில் மலர்களையும், கைகளில் வண்ணச் சிறு குடைகளையும் வைத்திருப்பார்கள். அவர்களை முற்றத்தில் பார்க்கும்போது அல்லது அவர்கள் எங்கள் சன்னல்களைக் கடந்து செல்லும்போது, நாங்கள் எப்போதுமே அவர்களைப் போற்றினோம் –ஆனால் அதன் பிறகு அவர்கள் காதுகளில் விழும்வண்ணம் எங்களுக்குள்ளேயே அந்தப் பெண்களைப் பற்றிப் பேசிக்கொள்வோம், அவமானத்தாலும் அவமதிப்பாலும் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.

“அதெல்லாம் இருக்கட்டும், அவன் தனுஷ்காவைக் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,” திடீரென்று கவலையுடன் ரொட்டி சுடுபவர் சொன்னார்.   

இந்தச் சொற்களால் நாங்கள் அனைவரும் ஊமைகளாக அமைதியானோம். எப்படியோ நாங்கள் தான்யாவை மறந்துவிட்டிருந்தோம்; அந்தப் படைவீரனின் பெருத்த, அழகான உருத்தோற்றம், அவளைப் பார்ப்பதிலிருந்து எங்களைத் தடுத்திருந்தது. பின்னர் கூச்சலுடன் எங்களுக்குள் தகராறு தொடங்கியது. தான்யா இதற்கு உடன்பட மாட்டாள் என்று சிலர் கூறினர், மற்றவர்கள் இந்தப் படைவீரனுக்கு எதிராக அவளால் தாக்குப்பிடிக்க முடியாது என்று வாதிட்டனர், அவன் தான்யாவைச் சீண்டினால் அந்தப் படைவீரனின் எலும்பை உடைத்துவிடுவோம் என்று இன்னும் பிறர் கூறினார்கள், இறுதியாக, அந்தப் படைவீரனையும் தான்யாவையும் பார்த்துக்கொள்வது என்றும் அவனிடம் கவனமாக இருக்குமாறு அந்தப் பெண்ணை எச்சரிப்பது என்றும் அனைவரும் சேர்ந்து முடிவு செய்தனர்…. இது அந்தத் தகராறுக்கு முடிவு கட்டியது.  

ஒருமாதம் கழிந்தது. அந்தப் படைவீரன் வெள்ளை ரொட்டியைத் தயாரித்தான், சித்திரத் தையல் வேலைப் பெண்களுடன் சுற்றிச் சுற்றி வந்தான், அடிக்கடி எங்கள் பணிமனைக்கு வந்தான், ஆனால் அந்தப் பெண்களிடம் வெற்றிபெற்றது பற்றி எங்களிடம் ஒருபோதும் சொல்லவில்லை; அவன் தனது மீசையை முறுக்கிக்கொண்டு, தனது உதடுகளைச் சப்புக்கொட்டிக் கொண்டான்.

தான்யா ஒவ்வொரு நாள் காலையிலும் பிஸ்கட்டுக்களுக்காக வந்தாள், எப்போதும் போல உற்சாகத்துடன், நட்புடன், கனிவுடன் எங்களிடம் வந்தாள். நாங்கள் அவளிடம் அந்தப் படைவீரனைப் பற்றிச் சொல்வதற்கான ஓர் உரையாடலைத் தொடங்குவதற்கு முயற்சி செய்தோம், ஆனால் அவள் அவனை “கண்களை உருட்டி விழிக்கும் ஒரு முட்டாள்” என்றும் வேறு வேடிக்கையான பெயர்களிலும் அழைத்தாள், இது எங்களை அமைதிப்படுத்தியது.  எங்கள் குட்டிப் பெண் குறித்து நாங்கள் பெருமைப்பட்டோம், அந்த சித்திரத் தையல் வேலைப் பெண்கள் அந்தப் படைவீரனிடம் காதல் செய்துகொண்டிருந்தார்கள். அவனுடனான தான்யாவின் உறவு ஒருவாறு எங்கள் அனைவரின் மனநிலையையும் மேம்படுத்தியது, நாங்கள், அவளது உறவால் வழிகாட்டப்பட்டது போல், அந்தப் படைவீரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினோம். நாங்கள் தான்யாவை இன்னும் மிகுதியாக நேசிக்கத் தொடங்கினோம், அவளைக் காலையில் இன்னும் உற்சாகமாகவும் கனிந்த மனதுடனும் சந்தித்தோம்.

ஆனால் ஒருநாள் அந்தப் படைவீரன் சிறிதளவு போதையுடன் எங்களிடம் வந்து, அமர்ந்துகொண்டு, சிரிக்கத் தொடங்கினான், எதற்காகச் சிரிக்கிறான் என்று நாங்கள் அவனிடம் கேட்டதற்கு அவன் விளக்கினான்: “என்னை வைத்து இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டார்கள் … லிட்காவும் கிரஸ்காவும் … அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி அலங்கோலப் படுத்திக்கொண்டார்கள்! ஹா, ஹா! ஒருத்தி அடுத்தவளின் முடியைப் பற்றி, நடைவழியில் தரையில் தள்ளிவிட்டு அவள் மீது ஏறி அமர்ந்துகொண்டாள் …. ஹா, ஹா! அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பிராண்டிக் கொண்டார்கள் … சிரிப்புச் சிரிப்பாக வந்தது! பெண்கள் ஏன் நேர்மையாக சண்டை போட்டுக்கொள்ள முடியாது? அவர்கள் ஏன் பிராண்டிக்கொள்ள வேண்டும்?” 

வலிமையாகவும் தூய்மையாகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடிவனாகவும் இருந்த அவன் நீளமான இருக்கை மீது அமர்ந்துகொண்டான்; எந்நேரமும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தான். நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏதோ ஒரு வழியில் இம்முறை அவன் எங்களுக்கு வெறுப்பூட்டக் கூடியவனாகத் தெரிந்தான்.

“பெண்கள் விடயத்தில் எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் தெரியுமா? மிகவும் வேடிக்கையாக இருக்கிறது! சிறிது கண்ணசைத்தால் போதும் அவர்கள் என்னிடம் வந்துவிடுகிறார்கள்” 

மினுமினுக்கும் முடியுடன் அவனது வெண்மையான கரங்களை உயர்த்தி, பின்னர் ஓர் உரத்த சத்ததுடன் முழங்கால்கள் மீது அடித்தான்.  பெண்களுடனான விவகாரத்தில் அவனுக்கு ஏன் இவ்வளவு அதிர்ஷ்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவனைப் போல, அப்படி ஒரு மகிழ்ச்சியான திகைப்பூட்டும் பார்வையுடன் எங்களை முறைத்துப் பார்த்தான். அவனது திடமான, சிவந்த முகம் மகிழ்ச்சியிலும் சுயதிருப்தியிலும் ஒளிவீசியது, அவன் தொடர்ந்து நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டே இருந்தான். 

எங்கள் ரொட்டி செய்பவர் வாரிப்போடும் கரண்டியை உறுதியாகவும் கோபத்துடனும் அடுப்பில்விட்டு சுரண்டிக்கொண்டே, திடீரென்று எள்ளலுடன் சொன்னார்:

“சிறிய ஃபர்- மரங்களை வீழ்த்துவதற்கு பெரிய வலிமை ஒன்றும் தேவையில்லை, ஆனால் ஒரு பைன் மரத்தை தரையில் வீழ்த்த முயற்சி செய்யுங்கள்….”

“அதாவது, என்னைக் குறிப்பிடுகிறீர்களா?” படைவீரன் கேட்டான்.

“உங்களைத்தான் ….”

“என்ன அது?”

“ஒன்றுமில்லை….., காலம் கடந்துவிட்டது”

“இல்லை, பொறுங்கள்! என்ன விடயம்? எந்தப் பைன்?”

எங்கள் ரொட்டி சுடுபவர் பதில் சொல்லவில்லை, அடுப்பில் தனது வாரிக் கரன்டியைக் கொண்டு விரைவாக வேலை செய்துகொண்டிருந்தார். கொதிக்கும் கெட்டிலிலிருந்து பிஸ்கட்டுக்களை அவர் அடுப்பில் வீசிவிட்டு, தயாரானவற்றை எடுத்துவைப்பார், அவற்றைச் சத்தத்துடன் தரையில் வீசுவார், அதைப் பையன்கள் நாரில் கோர்த்து வைப்பார்கள். அவர் படைவீரனைப் பற்றியும் அவருடனான உரையாடல் பற்றியும் முற்றிலும் மறந்துவிட்டவர் போல தீவிரமாக தனது வேலையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்தப் படைவீரன் மிகவும் அமைதியிழந்தவனாக ஆகிவிட்டான்.  அவன் எழுந்து அடுப்புப் பக்கம் நடந்து சென்றான், காற்றில் முன்னும்பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த வாரிக் கரண்டியின் கைப்பிடி அவனுடைய நெஞ்சுக்கு நேரே மோதும் அளவுக்கு ஆபத்தான இடத்துக்குச் சென்றான்.

“இல்லை, நீங்கள் என்னிடம் சொல்லுங்கள் – யார் அவள்? நீங்கள் என்னை அவமதித்துவிட்டீர்கள் …..? ஒருத்தி கூட என்னிடமிருந்து தப்பிக்க முடியாது, ஒருபோதும் முடியாது! அப்படிப்பட்ட தாக்குதல் சொற்களை என்னிடம் சொல்கிறீர்கள்.”…. உண்மையிலேயே அவன் தாக்குண்டவன் போலத் தெரிந்தான். .பெண்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் திறமையைத் தவிர, அவன் தன்னைத் தானே மதித்துக்கொள்வதற்குச் சான்றாக ஒன்றுமே இல்லை; இந்தத் திறமையைத் தவிர அவனிடம் எந்த வாழ்க்கையும் இல்லை, இந்தத் திறமை மட்டுமே அவன் தன்னை ஒரு வாழும் மனிதனாக உணர்வதற்கு அனுமதித்தது எனலாம்.

உடல் அல்லது ஆன்மா வின் ஒருவகை நோயே வாழ்வில் மிகச் சிறந்த, மிகவும் நெருக்கமான விடயம் என்று கருதும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதிலும் அதை பற்றியே பெரிதுபடுத்திக்கொண்டு, அதனாலேயே வாழ்வார்கள்; அதனால் துன்புறுவார்கள், அதனாலேயே பேணி வளர்க்கப்படுவார்கள், அதைப் பற்றியே எப்போதும் மற்றவர்களிடம் குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள், அதன்மூலம் தங்களின் அண்டை அயலாரின் கவனத்தை ஈர்ப்பார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு மக்களின் கருணையைப் பெறுவார்கள், இது தவிர அவர்களுக்கு எதுவும் இருக்காது. அவர்களிடமிருந்து அந்த நோயை அகற்றிவிட்டால், குணப்படுத்திவிட்டால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவர்களாக விடப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அதன் மூலம் வாழ்வதற்கான ஒரே வழியை இழந்துவிடுவார்கள், பின்னர் அவர்கள் வெற்று ஆளாக ஆகிவிடுகிறார்கள். சிலநேரங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கிறது, அவன் தானாகவே தனது குறைபாட்டை உயர்வாகக் கருத நிர்ப்பந்திக்கப்படுகிறான், அதன் மூலம் வாழ்கிறான். மக்கள் பலநேரங்களில் அவர்களுடைய வெறும் களைப்பினால் சீர்கெட்டுப் போய்விடுகிறார்கள் என்று ஒளிவுமறைவில்லாமல் சொல்லிவிடலாம். அந்தப் படைவீரன் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தான், எங்களுடைய ரொட்டி சுடுபவரை நெருக்கி, உருமினான்:

“சொல்லுங்கள் – யாரது?”

“நான் சொல்லட்டுமா?” ரொட்டி சுடுபவர் திடீரென்று அவன் பக்கம் திரும்பினார்.

“சரி?”

“உங்களுக்குத் தான்யாவைத் தெரியுமா?”

“தெரியும்?”

“சரி, முயற்சி செய்யுங்கள்”

“நானா?”

“நீங்கள் தான்!”

“அவளா? அது மிகவும் எளிது!”

“பார்ப்போம்”

“பார்க்கிறீர்களா!” ஹா, ஹா!”

“அவள் உன்னை ….”

“ஒருமாதம் கால அவகாசம்!”  

“என்ன ஒரு தற்பெருமைக்காரராக இருக்கிறீர்கள் படைவீரரே!”

“இரண்டு வாரங்கள்! நான் உங்களுக்குக் காட்டுகிறேன்! யார் அது? தான்யா! முட்டாள்!”…

“நான் சொல்கிறேன், போய்விடுங்கள்!”    

“போய்விடுங்கள், …. நீங்கள் வீறாப்புப் பேசுகிறீர்கள்”

“இரண்டு வாரங்கள், அவ்வளவு தான்!”

திடீரென்று எங்கள் ரொட்டி சுடுபவர் சீற்றமடைந்தார், அவர் தனது வாரிக் கரண்டியைப் படைவீரனுக்கு எதிராக உயர்த்தினார். படைவீரன் பின்வாங்கினான், திகைத்துப்பொனான், சிறிதுநேரம் அமைதியாக இருந்தான், பின்னர் தீக்குறியாக, தாழ்ந்த குரலில், “அப்படியானால் மிகவும் நல்லது!” சொல்லிவிட்டு எங்களை விட்டுச் சென்றான்.

தகராறின் போது நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம், அதன் முடிவில் ஆர்வமாக இருந்தோம். ஆனால் அந்தப் படைவீரன் வெளியே சென்றுவிட்ட பிறகு, ஓர் உரத்த நீண்ட உரையாடலும் சத்தமும் எங்களிடையே தொடங்கியது.

யாரோ ஒருவர் ரொட்டி சுடுபவரிடம் கத்தினார்:

“நீங்கள் ஒரு மோசமான விடயத்தை உருவாக்கிவிட்டீர்கள்,பாவெல்!”

“வேலையைப் பாருங்கள்!” கோபமடைந்த ரொட்டி சுடுபவர் பதிலளித்தார்.

அந்தப் படைவீரன் உணர்வு தூண்டப்பட்டுவிட்டதாகவும், அது தான்யாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நினைத்தோம். நாங்கள் இதை நினைத்தபோதும், அதேநேரத்தில் என்ன நடக்கும்? அவள் அந்தப் படைவீரனைத் தாக்குப்பிடிப்பாளா? மிதமிஞ்சிய, மகிழ்ச்சியான, ஆர்வத்தால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். நாங்கள் அனைவருமே ஏறத்தாழ நம்பிக்கையுடன் கத்தினோம்:

“தான்யா? அவள் எதிர்த்து நிற்பாள்! அவளை எளிதாக வளைக்க முடியாது!”

எங்களுடைய தேவதையின் வலிமையைச் சோதிப்பதற்கு நாங்கள் மிகுந்த விருப்பத்துடன் இருந்தோம்; எங்கள் தேவதை ஒரு வலிமையான தேவதை என்றும் தான்யா இந்தப் போட்டியில் வெற்றியாளராக வருவாள் என்றும் ஒருவருக்கொருவர் விடாப்பிடியுடன் நிரூபித்துக்கொண்டோம். பின்னர் இறுதியாக அந்தப் படைவீரனைப் போதுமான அளவுக்குச் சீண்டவில்லை என்றும், அவன் தகராறு குறித்து மறந்துவிட்டிருக்கலாம் என்றும் அவனுடைய சுயகாதல் குறித்து இன்னும் எரிச்சல் மூட்டிவிட வேண்டும் என்றும் எங்களுக்குத் தோன்றியது. அந்த நாளிலிருந்து, நாங்கள் ஒரு குறிப்பான பதட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினோம் – அந்த வாழ்க்கையை அதற்கு முன்பு ஒருபோதும் வாழ்ந்ததில்லை. எங்கள் அறிவு மிகுந்துவிட்டது போல நாள் முழுவதும் ஒருவருடன் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் மிகுதியாகவும் சிறப்பாகவும் பேசினோம். நாங்கள் தான்யாவை எங்கள் தரப்புப் பணயமாக வைத்து, பிசாசுடன் ஒரு விளையாட்டை, ஆடிக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. அந்தப் படைவீரன் “எங்கள் தான்யாவின்” அன்பைப் பெறுவதற்கு முயற்சி செய்யத் தொடங்கிவிட்டான் என்று ரொட்டி சுடுபவர்களிடமிருந்து நாங்கள் தெரிந்துகொண்டோம். நாங்கள் மிகவும் அச்சம் கொண்டோம், எங்கள் போட்டியின் முடிவை அறியும் ஆர்வத்தில் மூழ்கிப்போனதால், எங்கள் உரிமையாளர் எங்கள் வேலையில் மேலும் நாற்பது பவுண்டுகள் மாவைக் கூடுதலாகச் சேர்த்துவிட்டார் என்பதைக் கூடக் கவனிக்கவில்லை. வேலையின் களைப்பும் கூட எங்களுக்கு ஏற்படவில்லை. தான்யாவின் பெயர் நாள் முழுவதும் எங்கள் நாவிலிருந்து அகலவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் மிகவும் பொறுமையிழந்து அவளை எதிர்பார்த்தோம். சிலநேரங்களில் அவள் எங்களிடம் வரக்கூடும் என்றும் அவள் அதே தான்யாவாக இருக்க மாட்டாள், மாறாக இன்னொருத்தியாக இருப்பாள் என்றும் கற்பனை செய்துகொண்டோம்.

இருப்பினும், அவளிடம் அந்தத் தகராறு பற்றி எதுவும் சொல்லவில்லை. அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை, அவளை முன்பு போலவே நடத்தினோம். ஆனால் தான்யா பற்றிய எங்கள் முந்தைய உணர்வுகளுக்கு அன்னியமாக ஏதோ புதிய ஒன்று அவளுடனான எங்கள் உறவில் திருட்டுத்தனமாக நுழைந்திருந்தது, அந்தப் புதிய ஏதோ ஒன்று தீவிரமான அறியும் ஆர்வமாக, ஒரு எஃகுக் கத்தியைப் போலக் கூர்மையாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது.

ஒருநாள் காலையில், வேலை தொடங்கும்போது, ரொட்டி சுடுபவர் கூறினார்: “சகாக்களே! இன்றுதான் கெடு நாள்!”

அதன் மீது எங்கள் கவனத்தை அவர் கோருவதற்கு முன்பே நாங்கள் அதை நன்கு அறிந்திருந்தோம். இருந்தபோதிலும் அதற்கு ஒரு தொடக்கத்தை அளித்தோம்.

“அவளைக் கவனியுங்கள்! …..  அவள் வந்துவிடுவாள்!” ரொட்டி சுடுபவர் தெரிவித்தார். யாரோ ஒருவர் வருத்தத்துடன் “நாம் எதை எதிர்பார்க்க முடியும்?”

மீண்டும் ஓர் உயிரோட்டமான, கூச்சல் நிறைந்த தகராறு தொடர்ந்தது. நமக்குள் இருக்கும் மிகச் சிறந்த அனைத்தையும் பொதித்து வைத்திருக்கும் ஒரு கலசம் எந்த அளவுக்கு தூய்மையானதாக, அணுகமுடியாததாகவும் இருக்கும், அதைத் தீய அருவருக்கத்தக்க ஒன்றால் அணுகமுடியுமா என்று நாங்கள் இன்று கடைசியாக அறிந்துகொள்ள இருந்தோம். உண்மையில் நாங்கள் ஒரு பெரிய ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தோம் என்பதையும் எங்கள் தேவதையின் தூய்மைக்கான இந்தச் சோதனை நாங்கள் வழிபடும் உருவச்சிலையை அழித்துவிடக்கூடும் என்றும் இன்று காலை முதன்முறையாக உணர்ந்தோம்.  அந்தப் படைவீரன் தான்யாவைப் பிடிவாதமாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான், ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக, எங்களில் ஒருவர் கூட, அவள் அவனை எப்படி நடத்தினாள் என்று கேட்கவில்லை. அவள் தொடர்ந்து பிஸ்கட்டுக்களுக்காக எங்களிடம் வந்துகொண்டுதானிருந்தாள், எப்போதும் போலவே இருந்தாள். இன்றும் கூட நாங்கள் விரைவில் அவளுடைய குரலைக் கேட்டோம்.

“சிறிய சிறைக் கைதிகளே நான் வந்துவிட்டேன்….”

அவள் உள்ளே வருவதற்கு நாங்கள் அவசரப்பட்டோம், அவள் உள்ளே நுழைந்தபோது, எங்கள் வழக்கத்துக்கு மாறாக, அமைதியாக அவளைச் சந்தித்தோம். அவளை நிலையாக உற்றுப்பார்த்த எங்களுக்கு அவளிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஒரு இருண்ட, அமைதியான அவள் முன்பு கூட்டமாக நின்றோம். அவள் எங்களுடைய வழக்கத்துக்கு மாறான வரவேற்பால் அவள் திகைத்துப் போனாள் என்பது தெளிவாகத் தெரிந்தது, திடீரென்று அவள் முகம் வெளுத்துப் போய், அமைதியிழந்தவளாக, குழப்பமடையத் தொடங்கியவள் மூச்சுத்திணறும் குரலில் கேட்டாள்:

“நீங்கள் ஏன் …. இப்படி இருக்கிறீர்கள்?”

“நீ?” ரொட்டி சுடுபவர் கண்களை அவளிடமிருந்து அகற்றாமல் கண்டிப்புடன் கேட்டார்.

“நானா, என்னிடம் என்ன விடயம்?”

“ஒன்றுமில்லை …. “

“நல்லது, சீக்கிரம், சீகிரம் எனக்கு பிஸ்கட்டுகள் கொடுங்கள்…”

அவள் அதற்கு முன்பு ஒருபோதும் எங்களை அவசரப் படுத்தியதில்லை…

“நிறைய நேரம் இருக்கிறது” ரொட்டி சுடுபவர் சொன்னார், அவரது கண்கள் அவள் மீதே நிலைத்திருந்தன.

பின்னர் திடீரென்று திரும்பி கதவுக்குப் பின்னால் அவள் மறைந்துபோனாள்.

ரொட்டி சுடுபவர் அவரது வாரிக் கரண்டியை எடுத்துக்கொண்டு அடுப்பைப் பார்த்துத் திரும்பிக்கொண்டு, அமைதியாகச் சொன்னார்:

“அது நடந்துவிட்டது, அப்படித்தான் தெரிகிறது!… அந்தப் படைவீரன்! … ராஸ்கல் … பொறுக்கி!” ஒரு செம்மறியாட்டு மந்தை போல, ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு, நாங்கள் திரும்பி மேசையை நோக்கி நடந்து, அமைதியாக அமர்ந்து, மெதுவாக வேலை செய்யத் தொடங்கிவிட்டோம். உடனே யாரோ ஒருவர் சொன்னார்:

“ஒருவேளை இன்னும் இல்லாமல் இருக்கலாம்” ….

“பேசுங்கள், பேசுங்கள், அதைப்பற்றிப் பேசுங்கள்!” ரொட்டி சுடுபவர் கத்தினார்.

அவன் ஒரு புத்திசாலியான ஆள், எங்களில் எவரையும்விடப் புத்திசாலி என்று எங்களுக்குத் தெரியும், அவர் அந்தப் படைவீரனின் வெற்றியை உறுதியாக நம்பினார் என்று நாங்கள் அவருடைய சொற்களிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் வருந்தினோம்; அமைதியிழந்தோம். பன்னிரெண்டு மணிக்கு, உணவு நேரம் அந்தப் படைவீரன் வந்தான். அவன் வழக்கம் போல தூய்மையாகவும் துருதுருப்பாகவும் இருந்தான், வழக்கம் போல எங்கள் கண்களை நேராகப் பார்த்தான். நாங்கள் அவனைப் பார்ப்பதற்கு அருவருப்பாக உணர்ந்தோம்.

“நல்லது, பெருமைக்குரிய கனவான்களே, நீங்கள் விரும்பினால், என்னால் ஒரு படைவீரனின் துணிவைக் காட்ட முடியும்,” …பெருமிதமாகப் புன்னகைத்தவாறே அவன் சொன்னான். “நீங்கள் வெளியே நடைவழிக்குச் சென்று, அந்தத் திறப்பில் பாருங்கள்… புரிகிறதா?”

ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு நாங்கள் வெளியே சென்றோம், முற்றத்திற்கு இட்டுச் சென்ற நடைவழியின் மரச் சுவர்களின் அந்தத் திறப்பைப் பார்த்துத் திகைத்துப் போனோம். நாங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை … தான்யா உருகிய பனியின், சேற்றின் குட்டைகளைத் தாண்டிக் குதித்து வேகமாக எங்களைக் கடந்து சென்றாள். அவளுடைய முகம் கவலை தோய்ந்ததாக இருந்தது. அவள் கிடங்கின் கதவுக்கு அப்பால் மறைந்து போனாள். பின்னர் அந்தப் படைவீரன் சீழ்க்கை அடித்துக்கொண்டே மெதுவாக அங்கு சென்றான். அவன் தனது கைகளைச் சட்டைப் பைகளுக்குள் திணித்துக்கொண்டிருந்தான், அவனுடைய மீசை முறுக்கியிருந்தது.

மழை பெய்துகொண்டிருந்தது, மழைத்துளிகள் பனிச்சேற்றுக் குட்டைகளில் விழுவதையும் அந்தக் குட்டைகள் அவற்றின் தாக்குதலில் தெரித்துக் கொண்டிருந்ததையும் பார்த்தோம்: அது ஈரமான, மப்பும் மந்தாரமுமான நாளாக இருந்தது. பனி இன்னும் கூரைகளின் மீது படிந்திருந்தது, அதேநேரத்தில் தரையில், இங்கும் அங்குமாக, சேற்றின் இருண்ட பகுதிகள் இருந்தன. கூரைகளின் மீதிருந்த பனியின்மீது அடர்காவி நிறத்தில் சேறு பூசியது போல இருந்தது. ஒரு துயர ஒலியை எழுப்பிக்கொண்டு, மழை மெதுவாகத் தூறியது. நாங்கள் குளிரையும் வெறுப்பையும் உணர்ந்தோம்.

படைவீரன் முதலில் கிடங்கைவிட்டு வெளியே வந்தான், மீசையை முறுக்கிக்கொண்டும் கைகளைச் சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டும் முற்றத்தை மெதுவாகக் கடந்தான். பின்னர் தான்யா வெளியே வந்தாள். அவளது கண்கள் — அவளது கண்கள் இன்பத்திலும் மகிழ்ச்சியிலும் மின்னின, அவளது உதடுகளில் புன்னகை பூத்திருந்தது. அவள் தூக்கத்தில் இருந்தது போலத் தடுமாறிக்கொண்டு, தாறுமாறாக அடிஎடுத்துவைத்து நடந்தாள். இதைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. நாங்கள் அனைவரும் கதவுக்கு ஓடினோம், முற்றத்திலிருந்து குதித்து வெளியேறினோம், அவளைப் பார்த்து கோபத்துடனும் கடுமையாகவும் சீறினோம். எங்களைக் கவனித்த அவள் நடுங்கினாள், தனது காலடியில் இருந்த சேற்றில் கல்லாகச் சமைந்துவிட்டது போல நின்றாள். நாங்கள் அவளைச் சுற்றி நின்றுகொண்டு, அவளை மிகவும் அருவருப்பான மொழியில் பழித்துத் தூற்றினோம்.  அவளிடம் வெட்கமற்ற விடயங்களைச் சொன்னோம்.

இதை நாங்கள் உரத்துச் சொல்லவில்லை, மெதுவாகச் சொன்னோம், நாங்கள் சூழ்ந்துகொண்டதால் அவளால் நகர முடியவில்லை, எங்களால் முடிந்தவரை அவளைக் கேலி செய்தோம். அவளை நாங்கள் ஏன் அடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவள் ஏதாவது ஒரு வழியில் முகத்தைத் திருப்பிக்கொண்டு நாங்கள் கேலி செய்வதைக் கேட்டுக்கொண்டு எங்கள் மத்தியில் நின்றாள். எங்கள் சொற்களின் சகதியையும் விசத்தையும் தொடர்ந்து அவள் மீது வீசினோம்.

அவள் முகம் வெளுத்துப்போனது. ஒரு கணத்திற்கு முன்பு மிகவும் மகிழ்ச்சியுடனிருந்த அவளது நீல விழிகள் விரியத் திறந்திருந்தன, அவளது மார்பு விம்மி எழுந்தது, அவளுடைய உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

நாங்கள் அவளைச் சுற்றிவளைத்து, அவளைப் பழிதீர்த்துக்கொண்டோம், ஏனென்றால் அவள் எங்களைக் கொள்ளையிட்டாள். அவள் எங்களுக்குச் சொந்தமானவளாக இருந்தாள், எங்களிடம் இருந்த சிறந்த எல்லாவற்றையும் அவளுக்காகச் செல்வழித்திருந்தோம், அந்தச் சிறந்தவை பிச்சைக்காரர்களின் திருவோடுகளாக இருந்தாலும், நாங்கள் இருபத்தியாறு பேர் இருந்தோம், அதேநேரத்தில் அவள் ஒருத்திதான், ஆகவே அவளுடைய குற்றத்திற்காக அவளைத் தண்டிப்பதைவிட வேதனை எதுவும் இல்லை! நாங்கள் எந்த அளவுக்கு அவளை இழிவுபடுத்தினோம்! அவள் அமைதியாக இருந்தாள், எங்களை அவள் கடுமையாகப் பார்த்தாள், அவளது ஒவ்வொரு அவயமும் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் சிரித்தோம், உருமினோம், அச்சுறுத்தும் வகையில் முணுமுணுத்தோம். இன்னும் சிலர் எங்களை நோக்கி ஓடிவந்தனர்.  எங்களில் ஒருவர் தான்யாவின் ஆடையைப் பற்றி இழுத்தார் ….

திடீரென்று அவளுடைய கண்கள் மின்னத் தொடங்கின; மெதுவாக அவள் தனது கரங்களைத் தலைக்குத் தூக்கி, அவளுடைய முடியை ஒழுங்குபடுத்திக்கொண்டு, உரத்து, ஆனால் அமைதியாக, எங்கள் கண்களை நேரடியாகப் பார்த்து சொன்னாள்:

“பரிதாபகரமான சிறைக்கைதிகள்!”

அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள், அவளுக்கு முன்பாக நாங்கள் நின்றிராதது போல, அவள் வழியில் நாங்கள் இல்லாதது போல, அவள் நடக்கவும் செய்தாள். ஆகவே எங்களில் ஒருவரும் அவள் வழியில் இல்லை, எங்களுடைய வட்டத்தை விட்டு வெளியே வந்த அவள், எங்களைத் திரும்பிப் பார்க்காமல் விவரிக்க முடியாத வெறுப்புணர்வுடன் உரக்கச் சொன்னாள்:

“போக்கிரிகள், ஒழுங்கீனக் கும்பல்! …”

அதன் பின்னர் அவள் சென்றுவிட்டாள்.

முற்றத்தின் நடுவில், சேற்றில், கற்கள் பாவிய சாக்கடையில், நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். முன்பு போல, கதிரவன் எங்கள் சன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கவில்லை, தான்யா அங்கு ஒருபோதும் மீண்டும் வரவேயில்லை! ….

*****

மொழிபெயர்ப்பாளர் பற்றி:

நிழல்வண்ணன் – இயற்பெயர் இராதாகிருஷ்ணன் – முதுகலை ஆங்கிலமும் சட்டமும் பயின்றவர். வழக்கறிஞர், இலக்கிய ஆர்வலர், மொழிபெயர்ப்பாளர்,.

எண்பதுகளில் வெளிவந்த மனஓசை இதழில் ஒரு சில ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாடமிக்காக பஞ்சாபி இலக்கிய வரலாறு நூலை எழுத்தாளர் திரு. ப.செயப்பிரகாசத்துடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். விடியல், அலைகள், என்சிபிஎச், அடையாளம், செஞ்சோலை பதிப்பகங்களுக்காக 50 க்கும் மேற்பட்ட அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமூகம் தொடர்பான நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சிற்றிதழ்களில் இவருடைய கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சட்டம் சார்ந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்துவருகிறார்.

இது இவருடைய முதலாவது சிறுகதை மொழிபெயர்ப்பு.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *