ஆசிரியர்: ஆமினா முஹம்மத்
பிரிவு: சிறுகதைகள்
பதிப்பகம்: கேலக்ஸி புக்
அழகான வடிவமைப்பு.
மொத்தம் பதிமூன்று கதைகள் இத்தொகுப்பில். ராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமிய சமூகத்தில் நடக்கும் கதைகள்.
எழுத்தாளர் சம்சுதீன் மற்றும் பதிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் அணிந்துரைகள் சிறப்பு.
ஆகாத தீதார் என்றால், நான் செத்தாலும் என் எழவுக்குக்கூட நீ வரக்கூடாது, என்று அர்த்தம்.
பெரும்பாலும் அனைத்து கதைகளுமே மரண வீடுகளைச் சுற்றியே புனையப்பட்டுள்ளது.
கணவன் இறந்த பிறகு, இச்சமூகத்தில் பெண்கள் படும் துன்பங்களை விவரிக்கிறது. பெண்களின் உணர்வுகளை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கிறது. பெண்களின் துன்பங்களுக்குப் பெரும்பாலும் பெண்களே காரணமாக இருப்பது வேதனை.
பெயர்களை எடுத்து விட்டு வேறு பெயர்களை வைத்தால், இக்கதைகள் அனைவருக்கும் பொருந்தும். இக்கதைகளின் காலம் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம்.
செவத்தா, மங்கா கதை பகடியுடன் கூடிய வித்தியாசமான கதை. ஊரிலுள்ள அனைவருக்கும் பட்டப் பெயர் வைப்பது, சிறுவர் முதல் பெரியவர் வரை கெட்ட வார்த்தைகள் பேசுவது என சுவாரஸ்யமான களம்.
வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் கிடக்கும் பஷீராவின் கதையே இருட்சிறை. கணவனின் தற்கொலையும் அவள் தலையில் விழுவதே கொடுமை.
பாத்துகனியின் கணக்கே தனி. அனைவரையும் அவள் அழகாக கையாளுவதை விவரிக்கிறது. அம்மா கணக்கு. ஒரு அழகான உவமை: தலை நிற்காத குழந்தையை கைமாற்றுவது போல, பீரோக் கைப்பிடியைக் கவனமாய் நகர்த்துவாள்.
ஆகாத தீதார் – ஒரு மனிதனின் இறப்பில் எத்தனையோ ரகசியங்களும் சேர்ந்து புதைக்கப்படுகின்றன. அந்த ரகசியம் ஜைத்தூனைக் கழட்டி விட, ரியாஸ் கட்டி விட்ட கதையாகவும் இருக்கலாம்.
ஊர்வாய் – தலைப்பிற்கு நேரடியான அர்த்தம் தரும் கதை. கொரோனாவால் இறந்த சமதுல்லாஹ், இறப்புக்குப் பின், எப்படி ஊர்வாய்க்கு அவலாகிறார் என்பதை விவரிக்கிறது கதை.
புகைப்படம் – மற்றுமொரு இறப்பு, மற்றுமொரு ரகசியம். உசேனின் கொடிய இறப்புக்கு, சாராவின் மகிழ்ச்சி சரியான ஒன்றாகவே படுகிறது. மனித மனத்தின் இருட்டறை.
இன்ஸ்டன்ட் புனிதம் – இறப்பு எப்படி ஒரு மனிதனை புனிதாக்குகிறது என்பதே கதை. அப்துலின் இறப்புக்கு அழாததே பாரிஸா அவருக்குக் கொடுக்கும் தண்டனை.
ரேகை போல் வாழ்க்கை – மற்றுமொரு இறப்பு, மற்றுமொரு ரகசியம். இம்முறை மாமியாரின் இறப்பில், மருமகள் தனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றை அறிகிறாள். சம்சுதீன் மற்றும் ஆபிதாவின் திருமணத்திற்குப் பிறகான காதல் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
வீடென்ற உயிர் – மனிதர்கள் தங்கள் பிடிமானத்திற்கு ஏதேனும் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். பௌசியாவிற்கு அவளது வீடு. அலிமத் எவ்வளவு தொண்டு வேலை செய்திருந்தாலும், மனிதர்களின் கீழ்மைத்தனம் அவளை ஆயாசப்படவே செய்கிறது.
கைப்பற்றப்பட்ட வஸிய்யத் – சொகராவின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், கணவனின் மற்றொரு மனைவியை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவளின் ரகசியம் அமீரோடு நின்று விட்டது. அவளின் சாமர்த்தியம், கணவன் இறக்கும் தருவாயில் அவளுக்கே கேடாக அமைந்துவிட்டது.
இயலாமைக்கு இரு குணம் – பாத்தியாவின் அத்தனை வருடக் கொடுமைகளையும், அவள் படுக்கையில் விழுந்தபின், ஆறே மாதத்தில், மருமகள் சமீரா செய்து முடிப்பதே கதை. இயலாமை சரியான தருணத்தில் பழிவாங்கும் என எச்சரிக்கை செய்கிறது கதை.
பொம்மக்குட்டி – பட்டாம்பூச்சியாகச் சுற்றித் திரிந்த ஹாஜிராவைத் திருமணம் எப்படியெல்லாம் அழைக்கழிக்கிறது என்பதே கதை. கடைசியில் கணவனின் இறப்புக்குப் பின், பெற்றோரால் மீண்டும் கைவிடப்படுகிறாள். இக்கதை ஹாஜி ராவுக்கு மட்டுமல்ல, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.
தடமிழந்த ஆறு – ஒரு ஆணின் இறப்பு குடும்பத்துப் பெண்களின் மீது எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதே கதை. கொடிகட்டிப் பறந்த செய்யிதாவை ஒன்றுமில்லாதவளாக மாற்றி விடுகிறது. தாயை எதிர்க்க இயலாத சாய்ரா, பள்ளியிலிருந்து நிறுத்தப் படுகிறாள்.
பல இறப்புகள், பல ரகசியங்கள். பெண்களின் பாடுகள்.
மீண்டும் மீண்டும் மரண வீடுகளைச் சொல்லியிருப்பதை சற்று மாற்றி இருக்கலாம்.
ஒரு கதையிலாவது இறப்பு சடங்குகளை முழுமையாக விவரித்திருக்கிறார்.
பல சொற்கள் புரியவில்லை. அர்த்தங்களை கொடுத்திருக்கலாம்.
ஆசிரியரின் கருத்துக்கள் பல இடங்களில் தனியாகத் தெரிகிறது. வாசகனுக்கு விட்டிருக்கலாம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.