உணவு இடைவேளைக்கான மணி அடித்தது. மாணவ மாணவிகளின் கலகலப்பான பேச்சுக் குரல்கள் பெரும் இரைச்சல்களாக மாறத் தொடங்கியிருந்தன. நான்கு மாணவர்கள் மட்டும் உண்ணாமல் பேசிக்கொண்டிருந்தனர்.

“டேய், ராஜூ ! உன்னால் தான் இன்னிக்கு கண்ணன் அடி வாங்கினான்” என்றான் கார்த்திக்.

“கண்ணன் வீட்டுப்பாடம் முடிக்கல. அதனால அடி வாங்கினான். அதுக்கு, ராஜூ என்னடா செய்வான் ?” இது ராமனின் கருத்து.

“ஸ்கூலுக்கு வந்தவுடன் உன்னோட நோட்புக்கை குடுன்னு கேட்டேன். ஏண்டா நீ தரல்ல? நீ மட்டும் தான் எழுதியிருக்க. நான் எழுதலன்னு ஐயாவுக்குத் தெரியணும். நான் அடி வாங்கணும்.அதான உன் திட்டம்”. என்றான் கண்ணன்.

ராஜூ உடனே, “ஐயா நம் இரண்டு பேருக்கும் தனியா சிறப்பு வீட்டுப்பாடம் கொடுத்திட்டு என்ன சொன்னாரு? தனித்தனியா சிந்தித்து உங்களுடைய பதில்களை எழுதுங்கன்னு சொன்னாரு. அப்படி இருக்கும் போது, என்னுடைய பதிலப் பார்த்து நீ எழுதக் கூடாது”என்றான்.

கண்ணன் கோபமாகப் பேச, ராஜூ அவனுக்குப் பதில் சொல்ல என நிமிடங்கள் கரைந்து போனதால் சாப்பிடாமலேயே வகுப்பறைக்குத் திரும்பினர்.

கண்ணன், ராஜூ இருவருமே நன்றாக படிக்கக்கூடியவர்கள், திறமைசாலிகள். ஆனால், ராஜூ எப்பொழுதும் தனது வேலைகளை அப்பழுக்கில்லாமல் செய்து முடிப்பவன். அதனால், அவன் ஆழமான அறிவையும் தேர்ச்சியையும் பெற்று வந்தான். செல்வமோ, தன் திறமையைத் திறம்படப் பயன்படுத்தாமல் தேர்வுக் காலங்களில் மட்டும் சற்று உழைப்பவன்.

ஆசிரியர் தன்னைக் கடிந்து கொண்டதற்குக் காரணம் தான் வீட்டுப்பாடம் எழுதாதது தான் என்று நினைக்காமல், ராஜூ தனது பதிலைக் கொடுக்காததுதான் என்று கண்ணன் நினைத்தான். ராஜுவைப் பழி வாங்கத் துடித்தான். பள்ளி முடிந்த பின், வகுப்பு மாணவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போதும், செல்வத்தின் மனதில் ராஜுவைப் பற்றிய எண்ணமே இருந்தது.

மற்ற மாணவர்கள் சென்றுவிட்டனர். கண்ணன் மட்டும் மெதுவாக காரிடாரில் வந்து கொண்டிருந்தான். ஆசிரியர்களின் அறை பூட்டப்படவில்லை. அந்த அறையின் வாயிலுக்கு எதிராகத் தான் அறிவியல் ஆசிரியர் அமர்வார். அவர் மேசையின் மீது ஒரு கோப்பு இருந்தது. திடீரென செல்வத்தின் மனதில் ஒரு எண்ணம். தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்பதைச் சரி பார்த்துவிட்டு, விடுவிடுவென உள்ளே சென்றான். அந்தக் கோப்பைத் திறந்து, சில பக்கங்களைப் புரட்டினான். அவன் தேடிய  காகிதங்கள் கிடைத்ததும், அவற்றை எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

‘இயற்கை சக்திகளின் பயன்பாடு—எண்ணங்களும், அனுபவங்களும்’ என்ற தலைப்பில், “நுகர்வோர் கழகம்’ ஏற்பாடு செய்திருந்த கட்டுரைப் போட்டிக்கான கட்டுரை அது. ராஜூ அன்று ஆசிரியரிடம் தன் கட்டுரையைக் கொடுத்ததை கண்ணன் பார்த்தான். ராஜுவின் கட்டுரை தான் இப்போது செல்வத்தின் கைகளில் ! 

அடுத்த வாரத்தில், ஒரு நாள், ‘நுகர்வோர் கழக’ கட்டுரைப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. அக்கழகத்தில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர் முடிவினை அறிவித்து, பரிசு வழங்க  வந்திருந்தார். ”இந்நகரத்தின் அனைத்து பள்ளிகளில் இருந்து வந்திருந்த கட்டுரைகளில், உங்கள் பள்ளி மாணவனின் கட்டுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மாநில அளவிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் இக்கட்டுரையை எழுதியது,’ராஜு’ என்று அறிவித்தார் சிறப்பு விருந்தினர்.

மிகுந்த கரவொலிகளுக்கிடையில் மேடையேறிய ராஜு, அங்கிருந்தோரை வணங்கினான். அவனது கைகளில் ஒரு ‘மைக்’ திணிக்கப்பட்டது. அக்கட்டுரை பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு பணிக்கப்பட்டான்.

தனது பாட்டி, இயற்கை சக்திகளான சூரிய ஒளியையும், காற்றையும், மழையையும் சாதுர்யமாகப் பயன்படுத்துவதையும் அது போலவே ஒவ்வொரு வீட்டிலும் முயற்சிக்க வேண்டும் எனவும் ராஜூ சொன்னான்.

பள்ளியில் சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்தியைச் சேகரித்து விளக்குகள் எரிக்க, நீர் இறைக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தன் திட்டங்களையும் சொன்னான்.

விழா முடிந்த பின், எல்லா மாணவர்களும் அவனைப் பாராட்ட, கண்ணன் மட்டும் தனியே நின்று ராஜுவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் கண்ணீர் !

ராஜுவின் கண்கள் கண்ணனைத் தேடின. இருவரும் சில நாட்களாகப் பேசிக் கொள்வதில்லை. தனியாக நின்ற கண்ணனை நோக்கி இரு கைகளையும் நீட்டினான் ராஜு.

“ராஜு, நீ சூப்பர் டா…” எனக் கதறிக் கொண்டே அவனைக் கட்டிப் பிடித்தான் கண்ணன்.

ராஜுவின் கட்டுரையை ஆசிரியரின் கோப்பில் இருந்து எடுத்த போது அதைக் கிழித்துவிடத்தான் நினைத்தான் கண்ணன்.

ஆனால், படித்துப் பார்த்த பின், அவன் மனது மாறிப் போனது. அருமையான கட்டுரை எழுதியுள்ள ராஜு, இக்கட்டுரைக்கு பரிசு பெற்றால் நன்றாக இருக்குமே எனத்தான் தோன்றியது.

மறு நாள் காலையிலேயே ஆசிரியரின் கோப்புக்குள் அந்தக் கட்டுரையை வைத்து விட்டான் கண்ணன்.

தற்செயலாக உள்ளே நுழைந்த ராஜு, கண்ணன் ஏதோ செய்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.

ஆனாலும் யாரிடமும் கண்ணனைப் பற்றி புகார் சொல்லவில்லை.

இன்று இருவர் மனதிலும் அமைதி! மகிழ்ச்சி! பழைய நட்பு கனிந்தது.

தவறான பாதைகள் பயன் தராது. அன்பும் பண்பும் நம் ஆக்க சக்திகளாகட்டும். !

++

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *