துப்பாக்கிக் குழல்கள் மீதான அச்சம் எனக்குள் தொற்றிக் கொண்டது. இதற்கு முன் நான் கொலை செய்ததில்லை. வராந்தாவில் வழக்கமான இடத்தில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த அப்பாவைக் கொல்ல சிறுவயதில் முயற்சித்திருக்கிறேன். சட்டெனத் திரும்பிய அவர் உதறித் கொண்டிருக்கும் எனது வலது கையில் இருக்கமாக பிடித்திருந்த பெயின்ட் கறை பதிந்த ஆக்சா பிளேடைப் பார்த்துவிட்டார்.

மெல்லிய உதறலுடன் அதை கீழே எறிந்து விட்டு படிகளில் சரசரவென ஏறி மொட்டை மாடியின் இருட்டுக்கள் தொலைந்துபோனேன். அறிவியல் புத்தக அட்டைப் படத்தைப் போல் வானம் நிலவும் நட்சத்திரங்களுமாக அசைவற்றிருந்தது. காதுகளில் ஊழை கொட்டும் காற்றின் பாரத்தில் எனது கனவுகளாலான அதன் இருண்மைக்குள் பதுங்கிக் கொண்டேன். தெருக்கோடியில் இருக்கும் கடைக்குச் சென்ற அம்மா வாங்கி வருவதாக சொன்ன கிரீம் பிஸ்கட்டை குறித்த  கவலை என்னைத் தொற்றியது. படிக்கட்டுகளில் இருந்து ஒரு தலை துருத்திக்கொண்டு எட்டிப் பார்த்தது என்னை. நான் எனது இருள்களுக்குள்ளான அச்சத்தில், தலைக்குமேல் கவிழ்ந்துகிடக்கும் வானத்தை பெருமூச்சுடன் இமைகளுக்குள் இழுத்து வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காற்றின் மர்மமான ஊளைகள் என்னை மயக்கியது.

தூக்கத்திலிருந்து விழித்த போது சுவரோரத்தில் நின்று வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. திடீரென எங்கிருந்தோ எழுந்த  ஆக்சா பிளேடின் ஞாபகம் என்னை வாட்டத் தொடங்கியது. தெரிந்திருக்குமோ என்ற விசாரமற்ற கேள்வி தலைக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. உடலை ஒருமுறை உலுக்கினேன். திரும்பிப் பார்த்த அவள் கிரீம் பிஸ்கட் கிரீம் பிஸ்கட் என ரகசிய குரலில் சொன்னாள். கிரீம் பிஸ்கட்டுக்கும் காற்றுக்கும் மத்தியில் பிளேடைப் பற்றி கொஞ்சம் மறக்கமுடிந்திருந்தாலும் மாடியை விட்டு இறங்கும் துணிவு வரவில்லை.

நினைவு தெரிந்தது முதல் நான் காதலித்த அந்த மொட்டை மாடியிலேயே வெட்டவெளியில் தூங்க அடம்பிடித்தேன். வழக்கமான குறுகுறுப்புடன் என்னைக் கீழே இழுத்துச் சென்றாள் அவள். தரையில் அமர்ந்து ஒரு நாயின் ஆவலுடன் தலையைக் குனிந்து பிஸ்கட்டில் வடிவாய்ப் பதிந்திருந்த கிரீமை எச்சில் வடிய நக்கிக்கொண்டிருந்தேன். இரண்டு கால்கள் என்முன் வந்து நின்றன.

என்ன நடந்தாலும் நிமிர்ந்து பார்த்து விடக் கூடாது என்ற மூர்க்கம் எனக்குள் தொற்றிக் கொண்டது. மயங்கந்தருவதுபோல் கால்கள் மெல்ல அங்கும் இங்குமாக நகர்ந்தன. எனது உச்சந்தலைக்கு மேல் வெறித்து கொண்டிருக்கும் முகம் என்ன பாவனையில் நிலைத்திருக்கும் என்ற கற்பனையில் மூழ்கினேன்.

கொலை செய்ய வேண்டும் என்ற மெனா எனக்குள் எப்படி வளர்ந்திருக்கும்.. லாவகமாக கையைக் கிழிக்கும் வீட்டுக் கத்திக்கு பதிலாக கொடூரத்துடன் கறகறத்து அறுக்கும் ஆக்சா பிளேடு மீது விருப்பம் கொண்டது எப்படி.. துருப்பிடித்த தகரத்தின் வாசனை தந்த போதை தானா இதெல்லாம்? என்பது போன்ற பலநூறு கேள்விகளுக்கு எனக்குள் விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.

அந்த கால்களும் அதன் ஈவிரக்கமற்ற நிழலும் என்னை விட்டு இதுநாள்வரை அகலவே இல்லை. சுழியிட்ட உச்சந்தலைக்கு மேல் வெறித்து கொண்டிருக்கும் முகத்தின் பிரம்மையில் உடல் சில்லிட்டது. தலைக்கு நேராக செங்குத்தாக ஊசியிரங்கும் உணர்வு எனக்குள் எப்போதும் நீங்காத உதறலை பிறப்பிக்கிறது. அந்த முகத்தினின்று  துருத்திய கண்களை நேருக்கு நேர் சந்திப்பதிலிருந்து தப்பிக்க அன்று கவிழ்ந்த எனது தலை இதுநாள் வரை நிமிரவே இல்லை. மனிதக் கண்களை சந்திக்காத இத்தனை வருட கால வாழ்வும் எனக்குள் தீராது பெருக்கெடுக்கும் அச்சதோடான எண்ணங்களை எனக்குள்ளேயே சேமித்து துயரங்கொள்ள உதவுகின்றது.

மணிக்கட்டுகள் ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு கண்ணாமூச்சி விளையாடிய அந்த வராந்தா பெருக்கெடுக்கும் குருதியினால் நிரம்பி வழிவதான கனவினால் பல இரவுகளாக துரத்தப்பட்டு வருகிறேன். பெயிண்ட் கரை பதிந்த ரத்தத்தை சல்லடையாக உதிர்க்கும் அந்த மொன்னை ஆக்சா பிளேடை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் துண்டிக்கப்பட்ட கையின் சித்திரம் தலைக்குள் வெட்டிப் பளிச்சிடுகிறது. வெளிச்சத்தை வைத்து சித்திரவதை செய்யும் சிறைக்கூடமாக பிரக்ஞை என்னை இம்சிக்கிறது. எதையும் புரிந்துகொள்ள முடியாத கூரான கேள்விகளின் பாரத்தால் கழுத்தை நிமிர்த்த முடியாமல் கூனாகிப்போன எனது தலைக்குள் அந்த கொலை முயற்சி இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

என்னை உயிருடன் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்துக் திண்ணும் அந்தப் பைசாசத்தின் நகைப்பு, பொறுத்துக்கொள்ள முடியாத வெறுப்புணர்ச்சி, உடலத்தின் அணுஅணுவான நொய்மைகளின்மீது சூடுபோட்டு விளையாடுகிறது.

துப்பாக்கிக் குழல்கள் மீதான அச்சம் எனக்குள் தொற்றிக்கொண்டது. கற்பனையில் மட்டுமே துருத்திக்கொண்டு நின்ற அவற்றின் குழல்கள் மரணத்தின் பொந்துகள். ஒற்றைக் குழல்களும்  இரட்டைக் குழல்களும் நீண்டு வசீகரகரிக்கும் அவற்றின் தோற்றத்தில் சாவு மயக்கங்கொண்டிருக்கிறது. அடிவயிற்றிலிருந்து இழுத்த அருவறுப்பான கண்டத்தைப் போல் அலட்சியத்துடன் மரணத்தைத் துப்பும் அவற்றை நான் அஞ்சுகிறேன். ஆக்சா பிளேடுகளைப் போலல்லாது அவை சுத்தமான சாவை வழங்குகின்றன. குற்றவுணவில்லாமல் கொலை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் அவற்றை நான் அஞ்சுகிறேன். பொலபொலத்து உதிரும் ஊன் மனம் கொண்ட ரத்தக்கரையின் பிசுபிசுப்பு கைகளில் படியாமல் முகதத்தில் தெரிக்காமல் கொலை செய்ய வடிவமைக்கப்பட்ட அந்தப் பேய்களை நான் அஞ்சுகிறேன்.

அன்று இரவு எனது நடுங்கும் கைகளில் பரிதாபத்திற்குரிய ஆக்சா பிளேடுக்கு பதிலாக சிற்றின்பத்தின் குழல்களை நீட்டும் வக்கிரமான துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் வராந்தாவில் வழக்கமான இடத்தில் புகைத்துக்கொண்டிக்கும் அப்பாவை எளிதாகக் கொன்றிருப்பேன். அவலம் நிறைந்த எனது எஞ்சிய வாழ்வு முழுமைக்கும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கும் கால்களோ நிழலோ இருந்திருக்காது. உச்சந்தலைக்கு மேல் யாரோ துளைக்கும் கண்களால் ஊசியை இறக்கும் குற்றவுணர்வு இருந்திருக்காது. எனது குழந்தைமையின் காதலினால் நிறைந்த அந்த மொட்டை மாடிச் சுவரருகே அருவமில்லாமல் நின்றுகொண்டு வானத்தை வேடிக்கை பார்க்கும் அம்மாவின் சலமற்ற கண்கள், நான் கடைசியாய் நிமிர்ந்து பார்த்தவையாக இருந்திருக்காது.

000

எனது பெயர் கி. தினேஷ் கண்ணன், இலக்கற்ற பயணங்களை விரும்புபவன். இலக்கியத்திலும் சினிமாவிலும் நாட்டம் உண்டு. கூதிர் இதழில் கண்ணிவெடிகளின் தேசம், ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தீனன் என்ற பெயரில் இதுவே முதல் கவிதை. ஊர் இராஜபாளையம். தற்சமயம் இதழியல் துறையில் இயங்கி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *