அது எதிர்பார்த்தது என்றாலும், நட்டநடு இரவில் அந்த விஷயத்தை அம்மா சொன்னபோது மனதுக்கு என்னவோ போலிருந்தது செல்லமுத்துக்கு. கண்ணிலிருந்த தூக்கமெல்லாம் ஒரெயடியாக உதிர்ந்துபோனது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து, “என்னம்மா சொல்ற… “என்றான் வலிமிகுந்த குரலில் பதட்டமாக.

 “ஆமடா.. லட்சுமிபாட்டி எறந்துபோச்சுடா”என்றாள் ரொம்ப கவலையாக. சிறிதுநேரம் ஏதும்பேசாமல் அமைதி நிலவியது.

“பாட்டி இருந்தா இன்னும் ஒரு வாரமாவது உயிரோட இருந்திருக்கும்.. இவங்கதான் பாட்டிய பாக்க ஆத்தமாட்டாம ரொம்ப இழுத்துக்கிட்டுக்கிடக்குனு .. குவாட்டருக்குள் பான்பிராக்க போட்டு வாய்ல ஊத்தி கொன்னுபோட்டாங்கே..

 பாட்டி படுத்த படுக்கையா ஆனப்பிறகும் கூட சாகுறதுக்கு விருப்பமில்லை. பாட்டி படுத்தே கிடந்ததால முதுகுபுல்லா புண்ணாகி புழு வச்சுப்போச்சு..புழுவுக்குகூட தீங்கு நினைக்காது இதுக்குபோயி இப்படி அழிஞ்ச சாவு.

மூனு நாளுக்கு முன்னகூட நான் செல்லமுத்து கல்யாணம் வரைக்கும் உயிரோடு இருக்கமாட்டேன் ;அதனால இப்பவே மொய்க்கு ஆயிரம் கொடுத்துறேன்னு சொல்லுச்சு.. அதக்கேட்டு எனக்கு அழுகையா வந்துருச்சு …ப்ச் படுத்தே கிடந்தா பாய்கூட பகையாகும்னு அடிக்கடி சொல்லும்  லட்சுமி பாட்டி

இப்ப அதுவே படுத்த படுக்கையாகி பெத்தபுள்ள, சொந்தங்களுக்கு பகையாகிப்போச்சு.. அதனால இப்படி குவாட்டர ஊத்தி கொன்னுட்டாங்கே..” என்று அம்மா கண்கலங்கி சொன்னாள். அந்த நேர இருள் இன்னும் ஆழமான இருளாக  மாறி பயமுறுத்தியது செல்லமுத்துக்கு.

        படுக்கையிலிருந்து எழுந்த செல்லமுத்து லைட்டை போட்டு கதவை திறந்தான். வாசலில் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தார் அப்பா .

    ஊர்ல மொத மொத செத்தவங்க இறுதிச்சடங்கிற்காக வரி பிரித்தது இந்தப் பாட்டிதான் என்ற நினைப்போடியது செல்லமுத்து மனதில்.

             வாசலில் நின்றவாறே வடக்குப்புறம் இருக்கும் லட்சுமி பாட்டி பழமையான காரை வீட்டைப் பார்த்தான்.

      வீட்டின் முன்னால் இரண்டு டியூப்லைட் எரிந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்  சிறிசு பெருசுகள் .

    அவர்களின் பக்கத்தில் செவல, கருப்பு நிறத்தில் இரு நாய்கள் ஊளையிட்டது. “போங்க கழுதைகளா”என்று ஒரு பொம்பள வந்து விரட்டினாள்.

      பொம்பளைங்க கூட்டம் ‘அந்தக் கிழவி இப்படி வாழ்ந்துச்சு, அப்படி வாழ்ந்துச்சு, நல்ல மனுஷி, வேலையில்ல கெட்டிக்காரி,ஒத்த ஆளு புள்ளய வளத்து கவர்மெண்ட் எஞ்சினியரா ஆக்கிப்புடுச்சு”என்று ஏதேதோ அந்தக் கிழவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

    வீட்டினுள்ளே “ஐயோ.. ஆத்தா போயிட்டயே.. எங்களுக்கு இனி யாரிருக்கா..” என்று பேருக்காக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள்.

     ஒரு பெரியவர் தட்டில் டீ -யை வைத்துக்கொண்டு ஆங்காங்கே உட்கார்ந்த கூட்டத்திற்கு கொடுத்துக்கொண்டிருந்தார்.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நின்றிருந்த செல்லமுத்துக்கு பாட்டியின் நினைவு குறுக்குமறுக்காக வந்துபோனது.

         பாட்டி எப்பவுமே பழைய சோத்துக்கு நீச்சுத்தண்ணி வாங்க செல்லமுத்து வீட்டுக்கு வரும்போது கையில டம்ளரோடுதான் வருவாள்.

        விவரம் தெரியாத சின்னவயதில் செல்லமுத்து “எம்மா நம்மவீட்ல ரொம்ப டம்ளர் இருக்குல அப்ப எதுக்கும்மா தெனம் லட்சுமி பாட்டி டம்ளரோடு வருது”என்பான். அதற்கு பதிலேதும் சொல்ல மாட்டாள்.

     இப்படி ஒவ்வொரு தடவையும் யார் வீட்டுக்கு எது வாங்கப்போனாலும் லட்சுமி பாட்டி தன் வீட்டிலிருந்தே பண்டபாத்திரங்களை எடுத்துச்செல்வாள். தப்பித்தவறிக்கூட எடுக்காமல் செல்லமாட்டாள்.

   இந்த மாதிரி பாட்டி எதுக்கு இருக்குன்னு செல்லமுத்துக்கு வெவரம் தெரிய, தெரிய புரிந்துகொண்டான்.

    பாட்டிக்கு தொழுநோய் பாதிப்பால் கைவிரல்கள் மொட்டக்கட்டையாக இருக்கும். அதுபோலதான் கால்விரல்களும்.

   ஏதோ மருந்துமாத்திரையால் நோய் வளராமல் குறிப்பிட்ட அளவோடு நின்னுபோனது. அந்த அரைகுறை விரல்களை வைத்துக்கோண்டே பருத்தி எடுக்க.. களை எடுக்க.. விதை நட்ட..என எல்லா வேலைக்கும் போவாள்.

    காட்டில் பாட்டி நிறைபிடித்து பருத்தி எடுத்து வந்தாளென்றால்,மற்றவர் மடி நிறையுமுன்னே இவள் மடி நிறைந்துபோகும். வேலையில் படுகெட்டிக்காரி.

     வேலையில் அரைகுறை விரல்களை வைத்து, முழு விரல்கள் உள்ளவர்களை தோற்கடித்துவிடுவாள் பாட்டி.

 அவள் குறைவிரலால் காட்டில் நட்டும் விதைகள் தளதளவெனு வளர்ந்து காய்த்துகனிந்து குலுங்கும்.

    லட்சுமி பாட்டி உழைப்பில் படுகெட்டிக்காரியானது புருஷனோடு வாழ விருப்பமில்லாமல் தன் ஆண் குழந்தையோடு அண்ணன் வீட்டுக்கு வந்தபிறகுதான்..!

   லட்சுமி பாட்டி தன் அண்ணன் தயவில்தான் மகனை படிக்கப்போட்டாள். அவரும் தன் மகன்ளுக்கு படிப்பில் எவ்வளவு முக்கியம் கொடுத்தாரோ அதுபோலதான் லட்சுமி பாட்டி மகன் படிப்புக்கு முக்கியம் கொடுத்தார்.

    கடைசியில் லட்சுமி பாட்டி மகன் படித்து கவர்மெண்ட் எஞ்சினியர் ஆகிவிட்டார். ஆனால் படிக்கப்போட்டவர் மகன்கள் படித்து எந்த வேலைக்கும் போகமுடியவில்லை.

   லட்சுமி பாட்டி அண்ணன் பிள்ளைகள் அடிக்கடி பேச்சுவாக்கில் “மாப்ள எங்க அப்பன்தானா படிக்கப்போட்டாரு. எங்க அப்பா மட்டும் இல்லேனா ஓ வாழ்க்கை என்னாயிருக்கும்.. “என்று அடிக்கடி சொல், செயல்மூலம் வெளிப்படுத்துவார்கள் .

   அது எங்களுக்கு எப்போதும் அடிமையாக இருக்கணும் என்று சொல்வதுபோல இருக்கும்.

ஒருநாள் போதையில் “ஒங்கப்பா ஒங்களையும்தான், என்னைப்போல படிக்கப்போட்டாரு.. ஒங்களால என்னப்போல கவர்மெண்ட் எஞ்சினியர் ஆகமுடிஞ்சுச்சா”என்று பாட்டி மகன் சொல்லிவிட்டார். அதிலிருந்து பகை கொஞ்ச, கொஞ்சமாக கர்ப்பிணிப் பெண்ணின் மார்புபோல பெருக்க ஆரம்பித்தது.

  அதத்தொட்டு, இதத்தொட்டு உச்சகட்ட பகையில் “எங்கப்பா இழவுக்கு வரக்கூடாதுன்னு” சொல்லிட்டாங்கே லட்சுமி பாட்டி அண்ணன் மகன்கள்.

   அதுபோலவே அண்ணன் இறந்தப்ப லட்சுமி பாட்டி வீட்ல உட்கார்ந்துதான் “அடப்பாவிகளா ஓங்க சண்டையில எங்கண்ணன் மொகத்தக்கதட பார்க்க முடியாம ஆக்கிப்பூட்டங்களேடா.” என்று ஒப்பாரி வைத்தாள். அதைப்பெரிதாக கண்டுகொள்ளவில்லை பாட்டி மகன். ஆனாலும் தன் தாய் மாமா செத்தது மனதுக்குள் பெரும் வருத்தம்தான் இருந்தது.

என்பது வயது வரை லட்சுமி பாட்டி அவள் வேலையை அவளே செய்தாலும்..கொஞ்சநாளைக்கு முன்னாடி அவளுடம்பில் சின்ன கிறுகிறுப்பு, படபடப்பு வந்தபிறகு சரியத் தொடங்கினாள் .அதுவே பின்னாலே ரொம்பவும் வந்து படுக்கை படுக்கையாக்கி விட்டாள்.

  லட்சுமி பாட்டி மகன் கவர்மெண்ட் எஞ்சினியர் என்றாலும், பாட்டியை தன் அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ள விருப்பமில்லை. அதனால்தான்  பாட்டி செலவுக்கு மாசம் மாசம் ஆயிரம் ரூபாயை நாற்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்து மணி ஆர்டரில் அனுப்பிவிடுவார்.

   ஏதாவது ஊர் விஷயத்துக்கு வந்தால் மட்டுமே பாட்டி வீட்டில் வந்து தங்குவது மகனுக்கு பழக்கம். அது மாதிரி மகன் வீட்டில் விஷேசம் என்றால் லட்சுமி பாட்டி ஊரிலிருந்து கிளம்பிச் செல்வாள். ரெண்டுமூனுநாளில் ஊருக்குத் திரும்பிவிடுவாள். அங்கே போய்வந்த பெருமையை எல்லோரிடமும் சொல்வாள். பேரன், பேத்தி, மகன், மருமகள் செல்வாக்காய் இருப்பது அவளின் இருப்புக்கு பெரும் சந்தோஷம்.

தான் வேலை பார்த்து சம்பாரித்த பணத்திலேயே எல்லாத்தையும் பார்த்துக்கொள்வாள். மகன் அனுப்பிய பணத்தை பெரும்பாலும் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாள்.

    தெரிஞ்சவங்க யாராச்சும் ஆத்திர அவசரத்துக்கு கைச்செலவுக்கு பணம் கேட்டாள் உடனே “இந்த ஓண்டிக்கழுத பணத்த வச்சு என்ன பண்ணப்போறேன்” என்று வைத்திருக்கிற பணத்தை கைமாத்தாய் கொடுத்திடுவாள்.

   பணம் வாங்கியவர்கள் திருப்பித் தரும்போது தருவார்கள். கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்யமாட்டாள் லட்சுமி பாட்டி.

“கொடுத்த பணத்திற்கு வட்டி, கிட்டி வேணுமா கிழவி”என்று பணம் வாங்கியவர்கள் கேட்பார்கள்

“வட்டியா..” என்று யோசித்துவிட்டு, ’நான் செத்தன்னைக்கு ஓரு மாலை வாங்கிப்போடு அதேன் வட்டி ..” என்பாள் சிரித்துக்கொண்டே லட்சுமி பாட்டி.

   இப்படித்தான் தான் செஞ்ச உதவிக்கு எந்த எதிர்ப்பார்ப்பையும் பாராமல் செய்வாள். பிறருக்கு உதவி செய்வதே இந்த பிறப்பின் பதவி என்பதுபோல் என்பது வயதுவரை வாழ்ந்து வந்திருக்கிறாள்.

       எப்போதாவது ரொம்பயும் உடம்பு சரியில்லாதபோதுதான் மனவேதனையுடன் “எம்மகன் எஞ்சினியரா இருந்து எனக்கு என்னத்த ஆகப்போகுது.. இந்த ஏன்னு கேட்கக்கூட நாதியில்லாம தனியா கெடக்குறேன். என் வாழ்க்கை தனிமையிலே முடிஞ்சு போச்சு. புருஷன்கூட சண்டை வந்து தனியா வந்து வாழ்ந்தேன். இப்ப என் புள்ள தனிமையில தவிக்கவிட்டு அவன் நாப்பது கிலோமீட்டர் தள்ளி வாழ்றான். பத்தாத கொறைக்கு என் கைகாலெல்லாம் இப்படி நோய் வந்து அரைகுறையாய் ஆகிப்போச்சு. கடைசிவரைக்கும் எனக்கு கண்ணீர் பெழப்புதான்”என்று புலம்பவாள்.

     செல்லமுத்துவுடைய அம்மாவுக்கு லட்சுமி பாட்டி சின்னம்மா முறை வேணும்.

செல்லமுத்து சின்னபிள்ளையின்போது ரொம்பயும் அடம்பிடிப்பான். அம்மா தண்ணி எடுக்கப்போனா-ரேஷன் கடைக்குப்போனா பின்னாலே ஓடுவான் வர்ரேன்னு -அப்போது லட்சுமி பாட்டிதான் இரு அம்மா வந்துரும்னு பிடித்து வைப்பாள். அவள் திரும்பிவரும் வரை செல்லமுத்துவை அழாமல் பார்த்துக்கொள்வாள்.

     இப்படித்தான் தெருவில் அம்மாவை விரட்டி அடம்பிடித்து செல்லும் எல்லாம் பிள்ளைகளுக்கும் லட்சுமி பாட்டி ஆதரவாய் இருந்தாள்.

    செல்லமுத்து முத்த அக்கா கல்யாணம் முடித்த புதிதில் மறுவீட்டுக்கு மாப்பிள்ளையுடன் ஊருக்கு வந்தபோது எல்லாம் உதவியும் லட்சுமி பாட்டிதான் செய்தாள்.

    செல்லமுத்து வீடு சின்ன வீடு அதனால் கல்யாணம் முடித்தவர்களுக்கு தூங்க செய்ய வசதியிருக்காது.

அதைத்தெரிந்த லட்சுமி பாட்டி “என்வீடு பெரியவீடு அதனால எம்பேத்தியும், மாப்பிளையும் என் வீட்ல தூங்கட்டும். இனிமே எப்ப ஊருக்கு வந்தாலும் என் வீட்லயே தங்கட்டும்”என்றாள். அப்போது அவள் சொல் கோவிலில் தெளிக்கும் தீர்த்தம்போல இருந்தது.

 அதுபோல செல்லமுத்து அப்பா சாராயம் குடிச்சிட்டு வந்து வீட்ல அம்மாவுடன் சண்டே போடும்போது வந்து சண்டைய விலக்கிவிடுவாள் லட்சுமி பாட்டி. ரொம்ப சண்டை பெரிதாகிவிட்டால் செல்லமுத்து அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவாள். இரவாகி விட்டால் கோபத்தில் ஏதாவது தவறான முடிவெடுத்து விடுவாளென்று தன்தலைமுடியையும்-அவள் முடியையும் இணைத்து பின்னிவிடுவாள்.

செல்லமுத்து காலேஜ் படிக்கையில் துட்டு கஷ்டம் வந்துவிட்டால் லட்சுமி பாட்டி வீட்டுக்குதான் அம்மா போவாள். அதுபோல மருத்துவமனை செலவுவந்தால்.. காட்டுல விதைப்புகால செலவு வந்தால்.. என எல்லாவற்றிற்கும் பாட்டிதான் உதவினாள்.

   லட்சுமி  பாட்டி அரைகுறை விரலால் நிறையான தர்மம் செய்தாள்.

    பழசையெல்லாம் இப்போது செல்லமுத்து நினைத்துப்பார்த்தபோது கண்களில் ஈரம்தான் வந்தது. இனிமேல் நாம் ஆத்திர அவசரத்திற்கு யாரிடம்போய் கையேந்த என்று நினைத்தபோது என்னவோ போலிருந்தது. 

  பாட்டியின் வீட்டை பார்த்தான். அந்த இரவில் அது வேறவீடு மாதிரி தெரிந்தது.

  ரெண்டுநாளைக்கு முன்னகூட பாட்டியை செல்லமுத்துதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போய் வந்தான்.

  பாட்டிகூட வெளிப்படையாய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போனு சொல்லல. இவனாத்தான் பாட்டி வீட்டை கடந்து செல்லும்போது எதார்த்தமாக வீட்டினுள் பார்த்தான். பாட்டி இடத்தைவிட்டு நகராமல் கிரங்கிப்போய் வீட்டுக்குள்ளே சிறுநீர் கழித்து வைத்து உட்கார்ந்திருந்தாள்.

வீட்டுக்குள்போய் “என்னபாட்டி ஒடம்பு சரியில்லையா… வா ஆஸ்பத்திரிக்குப் போவோம்”என்றான். அவள் கண்களில் நீர் ததும்பி விட்டது.

  “எம்மகன் எஞ்சினியரா இருந்து என்ன பிரயோஜனம்.. இங்க நாதியத்துக் கெடக்குறேன்.. பெத்தகடனுக்கு மாசமாசம் ஆயிரம் அனுப்பறதோடு சரி அவன் வேல முடிஞ்சு.. என் சக்களத்தி மகங்கெகூட என்ன பெரியாத்தா ஏதாவது ஒடம்பு சரியில்லேனு சொல்லு நாங்க பார்த்திககிறோம்னு சொல்றாங்கே -ஆனால் எம்மகன் பச்.. என்னத்த சொல்ல”என்றாள் ஆத்திரத்தில் பாட்டி.

 “சரி வா போவோம் ஆஸ்பத்திரிக்கு “என்று பாட்டியின் மொட்டைகட்டையான விரலைப் பிடிக்க கையைக் கொடுத்தான் செல்லமுத்து. அவள் தயங்கினாள். இவன் பட்டென்று கையைப்பிடித்தான் இறுக்கமாக. நீண்ட வருடங்களுக்கு அரைகுறையான விரல் முழுமைபெற்றது மாதிரியிருந்தது லட்சுமி பாட்டிக்கு.

   இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் வந்து லைட்டை ஆப் பண்ணிட்டு இருட்டுக்குள் உட்கார்ந்தான்.

    “நீ வாட்டுக்கு நாளைக்கு தண்ணிகிண்ணி (சாராயம்) அடிச்சிட்டு கொட்டுகூட ஆடிகிட்டுத்தெரியாதா.. பெறகு மத்தவங்க மெதமா நெனப்பாங்க..ஏற்கனவே படிச்சிட்டு நீ வேலைவெட்டிக்கு போகாதனால பொண்ணு தரமாட்றாங்கே எவனும்..நாளைக்கு ஆடுன.. அம்புட்டுதான்” என்றாள் அம்மா.

“ஆமா நான் ஆடுறேன்.. எனக்கு வேற வேலையில்ல.. பேசாம தூங்கும்மா” என்றான் செல்லமுத்து.

“நாளைக்கு பாட்டிக்கு மாலை வாங்கிப்போட்டு அப்படியே வந்துரு.. அதுபோதும்”

அம்மா சொன்னதற்கு “சரி”என்று சொல்லி கண்ணை மூடின செல்லமுத்துக்கு மனதெங்கும் பாட்டியாக தெரிந்தாள்.

கோனில் வைக்கும் ஐஸ்கிரீம்போல வெள்ளேருனு இருக்கும் பாட்டியின் நரைத்த தலை. உடைத்த தேங்காய் உட்பாகம்போல பள்ளமான கன்னம். கடைசி ஸ்டாப்பில் நிற்கப்போகும் பஸ்ஸில் இருக்கும் ஒன்றிரெண்டு ஆட்களையொத்த பாட்டியின் பல்வரிசை என பாட்டி முகம் ஞாபகத்துக்கு வந்தது.

பாட்டியிடம் இருக்கும் ஒரே கெட்ட குணம். வீட்டுச்சுவற்றில் யார் என்ன போஸ்டர் ஒட்டினாலும் உடனே கிழித்துவிடுவாள். கிழித்துவராத போஸ்டரை தண்ணீர் ஊற்றி ஊற்றியாவது ஊரவைத்து கிழித்துவிடுவாள் கண்ட வசவு வைதுகொண்டே.. ‘என்று நினைத்துக்கொண்டே உறங்கிப்போனான் செல்லமுத்து.

  விடிந்ததும் வீட்டைவிட்டு கிளம்பினான் செல்லமுத்து. பாட்டி வீட்டில் முன்னால் பந்தல்போடப்பட்டிருந்நது. ஆங்காங்கே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த பாதிப்பேர் முகங்கள் அறிமுகமில்லாதவை.

  கொட்டுக்காரர்கள் ‘திந்திடு திந்திடு திந்திடதாக்’என்று அடித்து நொறுக்கினார்கள். பாட்டியின் மகனை,பேரனை இழவுக்கு வந்தவர்கள் துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

   வீட்டினுள்ளே மருமகள், பேத்திகள், சொந்தக்காரர்கள் சும்மா பேருக்காக அழுதுகொண்டிருந்தார்கள்.

    விறுவிறுவென வீட்டுக்குள் போன செல்லமுத்து உயிரற்ற லட்சுமி பாட்டியின் முகத்தைப் பார்த்தான். தன்னையறியாமலே அழுகை வந்தது.

பாட்டியின் கழுத்தில் மொக்க மொக்க நகைகள் போலிருந்த மாலைகள் இறப்பு வீட்டுக்குரிய வாசனையை பரப்பிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தன.

     ரொம்ப நேரம் நிற்கமுடியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து மாலை வாங்க விறுவிறுவென நடையைக்கட்டினான் செல்லமுத்து. மனதெங்கும் பாட்டியின் நினைவுகள் களைக்குள் வளர்ந்த பருத்திச்செடியாய் தெரிந்தது.

 போற வழியில் தெப்பத்துச் சுவற்றில் உட்கார்ந்து லட்சுமி பாட்டி சக்களத்தி மகன்கள் தண்ணி அடித்துக்கொண்டிருந்தார்கள்.

வழியில் போகிக்கொண்டிருந்த செல்லமுத்துவை “மாப்ள எங்க போறிங்க.. இங்க வாங்கன்னு..”அழைத்தார்கள்.

   “மாமா பாட்டிக்கு மாலை வாங்கப்போறேன் “என்றான் செல்லமுத்து.

  “மாலை வாங்குறது இருக்கட்டும்.. இங்க வாங்க” என்றார்கள்.

விறுவிறுவென செல்லமுத்து அவர்கள் அருகில் போனதும்

குவாட்டரை கப்பில் ஊத்திக்கொடுத்தார்கள்.

 “இல்ல வேண்டாம் மாமா..அம்மாவுக்கு தெரிஞ்சிச்சின்னா”என்று இழுத்தான்.

 “பாட்டி செத்த துக்கத்தை கொண்டாட வேண்டாமா..? “என்றார்கள் போதையில்.

 சிறிதுநேர மௌனத்துக்குப்பின் சரக்கை வாங்கி சட்னு அடித்தான். நேரமாக நேரமாக ஓரு குவாட்டர் ரெண்டானது.. பிறகு மாலை வாங்க வைத்திருந்த காசு குவாட்டாராக மாறிவிட்டது.

அப்படியே நேரம் ஆகி மணி இரண்டு ஆகிப்போச்சு.

   “ஐயயோ..! மாலை வாங்க வச்சிருந்த காச குவாட்டர் வாங்கி அடிச்சிட்டேனே.. பாட்டி கழுத்துக்கு என் கையால மால வாங்கிப்போட முடியலயே”என்று போதையில் உளறி ஓப்பாரி வைத்தான்.

“மாப்ள நீங்க மாலை வாங்கிப்போடலேனு பாட்டி ஒன்னு கோவிச்சுக்கிட்டு உயிரோடு வந்திடாது” என்று போதையில் சொன்னார்கள் மற்றவர்கள் நக்கலாக .

        அப்போது பாட்டிக்கு நீர்மாலை எடுக்க பெரிய கம்மாய்க்கு  கொட்டடித்துக்கொண்டு கூட்டம் வந்தது.

   பாட்டிக்கு மாலைதான் வாங்கல.. அது நமக்கு செஞ்ச உதவிக்கு  கைம்மாத்தா என்ன செய்ய என்று யோசித்தபோது.. கொட்டுகூட ஆட்டமா ஆடலாம் என்று முடிவெடுத்தான். அப்போது அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது “கொட்டுகூட தண்ணியப் போட்டு ஆடிடதானு”

பாட்டி செஞ்ச நல்லதுக்கு முன்னாடி அம்மா சொல்லெல்லாம் பெரிதாக தெரியவில்லை செல்லமுத்துக்கு.

 பாட்டி இனிமே பெறந்தா வரப்போகுது என்று நினைத்துக்கொண்டு கைலியை ஏத்தி கட்டிக்கொண்டு தளமாறிக்கொண்டே போய் கொட்டு முன்னாடி ஆட்டம் பிடித்தான் புளுதிப்பறக்க..

அவனோடு சேர்ந்து சரக்கு அடித்தவர்களும் ஆட்டம் பிடித்தார்கள்.

புளுதி பத்தடி உயரத்துக்கு கிளம்பும்வரை ஆட்டம் களைகட்டியது.

தரையில் உருண்டு,பெரண்டு ஆடினான் செல்லமுத்து. சட்டை கைலி எல்லாம் வேர்த்து, விறுவிறுத்து செகதியாய் ஆனது. பாட்டியின் நினைவில் கண்ணீர் கசிந்து தலகால் புரியாமல் குதித்து ஆடினான். பற்ற வைத்த பட்டாசை கையிலெடுத்து சுற்றிக்கொண்டே ஆடினான்.

  அவன் ஆடியதைப் பார்த்து “இவன் யார் மகன் ..போதையைப் போட்டு இந்த ஆட்டம் ஆடுறது?’ என்று செல்லமுத்து அப்பாவிடமே இழவுக்கு வந்தவர்கள் கேட்க “அவர் என்மகன்தான் என்று சொல்லத்தயங்கி.. பதில் என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கித்திணறி இடத்தைவிட்டு காலி பண்ணினார்.

   “ஏன்டா குடிச்சுப்போட்டு இந்த ஆட்டம் ஆடுற.. படிச்சவன் மாதிரியா நடந்துக்கிற.. வாடா ஆடுனது போதும்..எல்லாம் பாக்குறாங்கப் பாரு”என்று செல்லமுத்து அம்மா வந்து இழுத்தாள் அவனை.

    அம்மாவை தள்ளிவிட்டு கண்டுகொள்ளாமல் ஆட்டமாய் ஆடினான் பாட்டியின் நினைவில் செல்லமுத்து.

    நீர்மாலை எடுத்து வந்ததும் பாட்டிக்கு செய்கின்ற இறுதிச்சடங்கையெல்லாம் செய்துவிட்டு பாட்டியை சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்ல தேரில் வைத்தார்கள். ஒரே ஒப்பாரிச் சத்தம்.

      தேர் நகர்ந்தது. கொட்டுச்சத்தம் மண்ணையும் விண்ணையும் பிளந்தது. தெருவெங்கும் ஒரே வேட்டுச் சத்தம். புளுதிபறக்க அலுக்காமல் ஆடிக்கொண்டிருந்தான் செல்லமுத்து ‘கோய்ந்தா.. கோய்ந்தா ..என ஒரே முழக்கத்தோடு.

   காளியம்மன் கோவிலைக் கடந்ததும் பெண்கள் கொல்லிப்பானை உடைக்கும் முச்சந்தி வந்தது. லட்சுமி பாட்டியை தேரிலிருந்து இறக்கி மூன்று சுத்து சுத்தி முச்சந்தியில் இறக்கி வைத்தார்கள்.

தாய்க்கு தலைமகள்தான் கொல்லிப்பானை உடைக்கவேண்டும். லட்சுமி பாட்டிக்கு பெண் பிள்ளை இல்லை -அதனால் லட்சுமி பாட்டியின் ஒன்றுவிட்ட அக்கா மகள்தான் முறைக்கு தலைமகள். அவள்தான் பாட்டியை மூனு சுத்து சுத்தி வந்து கொல்லிப்பானை உடைத்தால்.

கொல்லிப்பானை உடைத்த அவளுக்கு தம்பி என்ற முறையில் புதுச்சேலை எடுத்து கோடிச்சேலையாக போட்டார் லட்சுமி பாட்டி மகன்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாட்டி பாட்டினு சொல்லி அழுதுகொண்டே ஆடிக்கொண்டிருந்தான் செல்லமுத்து.

 மீண்டும் பாட்டியை தேரில் ஏற்றி வைத்து தேர் நகர ஆரம்பித்தது-அப்போது தேரிலிருந்தவர்கள் போதையில் பாட்டியின் கழுத்திலிருந்த மாலையை எடுத்து “கோய்ந்தா..கோய்ந்தா “என்ற சத்தத்துடன் நாலாபுறமும் தூக்கி தூக்கி எறிந்தார்கள் .

  தூக்கி எறிந்த ரோஜாப்பூ மாலையொன்று வானத்தை நோக்கி போய்விட்டு மீண்டும் கீழே வரும்போது அத்தனை கூட்டத்திலும் சொல்லிவச்சதுமாதிரி செல்லமுத்து கழுத்திலேயே விழுந்தது. அப்போது செல்லமுத்துக்கு போதையில் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

 “பிணத்து மாலை கழுத்துல விழக்கூடாது “என்று சொல்லி       செல்லமுத்து  கழுத்தில் விழுந்த மாலையை ரொம்பப்பேர் எடுத்துப்போட பார்த்தார்கள் -அவன் விடவேமாட்டேன் என்று சொல்லிவிட்டான். 

  கழுத்தில் கிடந்த மாலையை நெஞ்சோடுநெஞ்சாக இறுக்க அணைத்துக்கொண்டு கண்ணீர் கசிய “பாட்டி கையால எனக்கு ஆசீர்வாதம் கிடைச்சிருச்சு..! ஆசீர்வாதம் கிடைச்சிருச்சு..” என்று சொல்லிக்கொண்டே..! பற்ற வைத்த பட்டாசை சிலம்பம்போல சுற்றிக்கொண்டு

போதையில் கொட்டுச்சத்தத்திற்கு ஏற்றாற்போல தன்னைமறந்து பைத்தியம்போல ஆடிக்கொண்டே இருந்தான் செல்லமுத்து.

++

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *