-பாலமுருகன்.லோ-

கந்தசாமி, தன் மனைவியைக் கூப்பிட்டுக்கொண்டே உள்ள வந்தார்.

“சகுந்தலா.. சகுந்தலா.. எங்க இருக்கிற, நேரம் ஆகுது இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க உள்ள?” அவங்க வீட்டுக்கு போகனும்னு சொல்லியிருந்தேன்ல! இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற?

ஏங்க எல்லாம் கிளம்ப தயாராதான் இருக்கேன், நம் பையன் இதோ வெளிய போயிட்டு வர்றேன்னு சொன்னான். சரி அவன் வர்றதுக்குள்ள நாம இருவருக்கும் ஒரு கப் காபி போடலாமே என்று சமையலறைக்கு வந்தேன்.

“இந்தாங்க அவசரப்படாம இந்த காபியைக் குடிங்க பையன் வந்ததும் நாம கிளம்பிடலாம். எல்லாம் சரியான நேரத்துக்குப் போய் சேர்ந்திடுவோம் கவலைப்படாதீங்க.”

“ஏம்மா உனக்கு அறிவில்லை, இப்ப போய் அவனை வெளிய அனுப்பியிருக்க. எல்லாம் நாளைக்கு பார்த்துக்கக்கூடாதா? எல்லாத்தையும் இன்னைக்கே செய்தாகணுமா?”

“அப்படி இல்லைங்க, இதோ பக்கத்தில்தான் போயிட்டு வந்திறேன்னு சொன்னான், அதான் சரின்னு சொன்னேன்.”

“போதும் அவனுக்கு போன் போடு, எங்க இருக்கிறான்னு கேளு முதல்ல.“

“சரிங்க நீங்க பதட்டப்படாம, கத்தாம இருங்க நான் இப்ப அவனுக்கு போன் போடுறேன்.”

“ஹலோ வினோத், எங்கடா இருக்க? சீக்கிரம் வர முடியுமா? அப்பா கத்திக்கிட்டு இருக்காரு.”

“அம்மா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன். நீ போய் அவரிடத்தில சொல்லு, இன்னும் நமக்கு நிறையவே நேரம் இருக்குன்னு. இப்பவே ஏன் இவரு இவ்வளவு அவசரப்படுறாரு.”

“நான் மாப்பிள்ளை, நானே அவசரப்படாம இருக்கேன், இவரென்னடான்னா மாப்பிள்ளையோட அப்பா, ஏன் இவரு இவ்வளவு அவசரப்படுறாரு. கொஞ்சம் நீ போய் அவரிடம் பக்குவமா சொல்லு. நமக்கு நிறையவே நேரம் இருக்கு. சரியான நேரத்துக்குப் பெண் வீட்டுக்குப் போயிடலாம்னு சொல்லும்மா.”

“சரிடா நீ சீக்கிரம் வா” நான் வைக்கிறேன் போனை என்று பேசிக்கொண்டிருந்த கைப்பேசியை அணைத்தாள்.

கந்தசாமியின் படபடப்புக்கும், பதற்றத்துக்கும் அவருக்குக் காரணம் உள்ளது. வினோத்துக்கு வரன் தள்ளிப் போயிட்டே இருக்கிறதால அவருக்குக் கொஞ்சம் பயமும் பதற்றமும் கூட ஒட்டிக்கிச்சு. என்ன செய்யச் சொல்றீங்க? பெத்தவங்கதான் பிள்ளைகளைக் காட்டிலும் பயப்பட வேண்டியிருக்கு இந்தக் காலத்தில. எல்லா பிள்ளைகளும் நல்லா ஜாலியாதான் இருக்காங்க, எந்த கவலையும் இல்லாம.

“ம்மா.. நான் வந்துட்டேன், அப்பா எங்கே? அவரைக் கூப்பிடு. நாம இப்பக் கிளம்பலாம்.”

“ஏங்க எங்க இருக்கீங்க? இவ்வளவு நேரம் நீங்க என்னைக் கேட்டுக்கிட்டு இருந்தீங்க. இப்பக் கிளம்புற நேரமா பார்த்து எங்க போயிட்டீங்க?”

“இதோ அரை நிமிஷம் கொடு, காபி குடித்தேன்ல, சிதறினதைக் கழுவலாம்னு, அதான் கக்கூசுக்கு போயிட்டு வந்தேன்

“சரி வாங்க போகலாம், இன்னும் நமக்குச் சரியா அரை மணி நேரம் இருக்கு, இது சரியா இருக்கும் அங்கு போறதுக்கு.”

ஆட்டோவில் போயிட்டு இருக்கிறப்ப வினோத் அவனது அப்பா அம்மாவிடம் ஒரு உண்மையைச் சொன்னான்.

“ம்மா.. அப்பா, நாம இப்பப் பார்க்கப்போற பெண் எனக்குத் தெரிந்த பெண். என்னுடைய கம்பெனியிலதான் அவளும் வேலை செய்கிறாள், அக்கவுன்ட்ஸ் பிரிவில். நான் எப்படி புரொடக்‌ஷனைப் பார்த்துக்கொள்கிறேனோ, அப்படி அவளும் அக்கவுன்ட்ஸைப் பார்த்துக்கிறா.”

“ஏன்டா இதை முதல்ல சொல்லவே இல்ல எங்களிடத்தில்?”

“சொன்னா எங்க காதல் கத்திரிக்காய் எல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று சொல்லிடுவீங்கன்னு சொல்லாம மறைச்சுட்டேன்.”

நாங்க ரெண்டு பேரும் கடந்து அடிச்சுக்கிறோம், எப்படியாவது அந்த வரனாவது அமையணும்னு. நீ என்னடான்னா, அதான் கூலா சுத்திக்கிட்டு இருக்க.

“சரி, அவங்க வீட்டுல தெரியுமா உங்க விவகாரம் எல்லாம்?”

“அவ சொல்றேன்னு சொன்னா கண்டிப்பா சொல்லிருப்பா.”

“ஏன்டா, எவ்வளவு வருஷமா லவ் பண்றீங்க ரெண்டு பேரும்?”

“அப்பா… ஒரு வருஷமாதான்.”

“அப்போ இப்பதான் சொல்லியிருக்கா. நல்லா புரிஞ்சுகிட்டீங்களா இருவரும்?”

“ஏம்பா, நீங்க வேற… அதான் நீங்க தினமும் படுத்துறீங்களே, கல்யாணம் கல்யாணம்னு. அதான் அவ கிட்டயும் சொன்னேன், ‘எங்க வீட்டுல அவசரப்படுறாங்க கல்யாணத்துக்கு. நீ உன் வீட்டுல சொல்ல முடியுமா?’ன்னு கேட்டேன். அவளும், ‘வீட்டுல பேசிட்டுச் சொல்றேன்’னு சொன்னா. போன வாரம் கம்பெனியில வந்து என்கிட்ட, ‘எங்க வீட்டுல சொல்லிட்டேன். உங்க வீட்டிலிருந்து வந்து என்னை எங்க வீட்டுல பெண் பார்க்கச் சொன்னாங்க’ என்றாள்.”

“ஆட்டோக்கார அண்ணா, இந்த லெஃப்ட்ல திரும்பி நாலாவது வீடு, லெஃப்ட்ல நிறுத்துங்க, அவங்க வீடு அதுதான்.”

ஆட்டோ பெண் வீட்டு வாசலில் வந்து நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். முறையான அறிமுகமெல்லாம் முடிந்த பின்னர், பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வழக்கம் போல பெண் எல்லோருக்கும் டீ அல்லது காபி எடுத்து வந்தாள். தாம்பூலத்தட்டில் இருந்த ஒவ்வொரு டம்ளராக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.

பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம், அதாவது பெண்ணுடைய அம்மா வந்தவர்களிடம், ‘எங்க பொண்ணு சொன்னா, ரெண்டு பேரும் ஒரு வருஷமா லவ் பண்றாங்க என்று. நாங்களும் கேட்டோம் அவளிடம், ‘நல்லா புரிஞ்சுகிட்டீங்களா இருவரும்?’னு. அவ சரியா பதில் சொல்லல. நாங்க என்ன நினைக்கிறோம்னா, இன்னும் பிள்ளைங்க நல்லா புரிஞ்சுக்கட்டும், அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாமே.

இதில் உங்க கருத்து என்ன?’ என்றாள் பெண்ணுடைய அம்மா.

கந்தசாமியும், சகுந்தலாவும் அதைக் கேட்டவுடனே ஆடிப்போய்விட்டனர். ‘இப்பவே இவனுக்கு இருபத்தைந்து ஆகுது. இன்னும் ரெண்டு மூணு வருஷம் என்றால் அப்புறம் வயசு போயிக்கிட்டே இருக்கும்ல, உங்க பெண்ணுடைய வயசும் ஏறிக்கிட்டே இருக்கும்ல. பின்னாடி இருவருக்கும்தான் காம்ப்ளிகேஷன்ஸ். அதான் நாங்க உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நினைக்கிறோம்.’

‘இல்லைங்க, மாப்பிள்ளை இதைப் பத்தி என்ன நினைக்கிறாருன்னு கொஞ்சம் தெரிந்தால் நல்லா இருக்கும். ஏங்க, எங்க விருப்பம்தான் என் பிள்ளையோட விருப்பமும்.’

“என்னடா வினோத், சரிதானே?”

“அப்பா, என்னப்பா இன்னும் பழைய காலத்துல இருக்கீங்க. பெண் வீட்டுல நல்லா புரிஞ்சுகிட்ட பிறகு கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு சொல்றப்ப, நாம ஏன் அதற்கு முட்டுக்கட்டையா இருக்கணும்? கல்யாணம் ஒண்ணுதான் தீர்வா இதற்கு?

ஏன் லிவிங் டுகெதர் இருக்கக் கூடாதா? இப்ப மேலை நாடுகளில் எல்லாம் லிவிங் டுகெதர் சகஜம் ஆயிப்போச்சு. ஏன், இப்ப இங்க கூட பல பேர் லிவிங் டுகெதர் தான் இருக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்னா சில மாற்றங்களை நாம ஏத்துக்கத்தான் வேண்டும் அப்பா.”

“என்னடா உளறுற? எப்படி டா நம்ம வீட்டுல கல்யாணம் ஆகாம நீங்க ஒண்ணா இருப்பீங்க? இதெல்லாம் சரி வராது.”

“வா, போய் யோசிச்சு சொல்லலாம்.”

“ம்மா… அப்பா… அதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. இங்க பல அப்ரூவ்டு பி.ஜி (PG) இருக்கு. அங்கு நாங்க இருவரும் லிவிங் டுகெதரா தங்கலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை.”

“மீரா, உங்க வீட்டுல கேட்டு சொல்லு, இது ஓகேவா?” என்று கேட்டான் வினோத். மீராவும் தன்னுடைய அப்பா அம்மாவிடம் கேட்ட பிறகு, சம்மதம் என்று சொல்லிவிட்டாள். பெண்வீட்டிலும், ‘இவளுக்கு இவருன்னு முடிவாயிடுச்சு, பின் நாம் ஏன் பிரித்து வைக்கணும்? அவங்க சந்தோஷம் தானே நம்ம சந்தோஷம். நல்லா புரிஞ்சுகிட்டாங்கன்னா அவங்க நல்லபடியா வாழ்க்கையை நகர்த்தப் போறாங்க. எங்களுக்கும் அதில் சம்மதம்’னு சொல்லிட்டாங்க பெண்வீட்டாரும்.

கந்தசாமியும், சகுந்தலாவும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

கந்தசாமி வினோத்திடம், “ஏன்டா, ஏதாவது தப்பு நடந்திடாதே!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது அப்பா,” என்று நம்பிக்கையாகச் சொன்னான் வினோத். “எனக்கு அவன்னு முடிவாயிடுச்சு. சில காலம் ஒண்ணா பி.ஜி-யில் இருக்கப் போறோம். பின் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்,” என்றான்.

கந்தசாமியும், சகுந்தலாவும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இவர்களது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா? இல்லை, ரெண்டு பேருக்கும் இன்னும் யோசிக்கக் கொஞ்சம் கால அவகாசம் தேவையா? அவர்களது மௌனத்தில் பல கேள்விகள் மறைந்திருக்கிறது. ஊர் என்ன சொல்லும்? உலக நடைமுறைகளுக்கு இது சாத்தியமா? நாம் தவறு ஏதும் செய்றோமா? என்று தங்களுக்குள்ளேயே யோசித்துக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.

00

பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *