இம்முறை கடவுளுக்குப் போரடித்துவிட்டது. மனிதர்களுக்கு வரங்கொடுத்து. கிள்ளிக் கொடுத்தாலும் சரி.. அள்ளிக் கொடுத்தாலும் சரி மனிதர்களுக்கு நிறைவே வரவில்லை. வாய் ஓயாமல் அலுப்போ சலிப்போ இல்லாமல் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
கடவுள் சொன்னார்.. இன்றிலிருந்து நாம் விலங்குகள், பறவைகள் என அஃறிணை உயிர்களுக்கு வரந்தருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனமாய் வரச்சொல்லிக் கேட்டுக் கொடுப்போம்.
விலங்குகள், பறவைகள், புழு,பூச்சிகள் என எல்லாமும் அளவுகடந்த மகிழ்ச்சியாகிவிட்டன. என்னென்ன வரம் கேட்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டன.
கடவுள் வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்தன.
கடவுள் வந்து அடர்ந்த வனத்துள் பெரிய அகன்ற மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டார். சுற்றிலும் அவருக்கு உதவியாக சில குட்டிக் கடவுள்களும் வந்து நின்றுகொண்டிருந்தனர்.
ஒருமுறை எதிரே குவிந்துகிடந்த விலங்குகளையும் பறவைகளையும் என எல்லாவற்றையும் பார்த்து எத்தனை வகைகள் படைத்திருக்கிறோம் என்று எண்ணிப் பெருமைகொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது அவருக்கு. வனத்தின் அடர்த்தியான பசுமை அவருள் இன்னும் ஆனந்தத்தைப் பெருக்கியது. அவர் படைத்தது என்றாலும் சாதாரணமாகப் பார்த்து மகிழ்ந்துகொண்டார்.
-யார் முதலில் வருகிறீர்கள்? என்று கேட்டார்.
-ஒரு பெண் சிங்கம் முதலில் வந்தது.
-கேள் என்ன வரம் வேண்டும்?
-அடுத்தப் பிறவியில் நான் ஆண் சிங்கமாகப் பிறக்கவேண்டும். தினமும் வேட்டையாடி வேட்டையாடிக் களைத்துவிட்டது. நான் உட்கார்ந்து இரையுண்ணவேண்டும்.
-சரி அப்படியே தருகிறேன்.
ஒட்டகச் சிவிங்கி வந்தது..
-என்னை விலங்கு தாக்க வரும்போது நான் சட்டென்று மறைந்துவிடவேண்டும்..
-நீ கேட்டபடியே நடக்கும்.. என்றார் கடவுள்.
அடுத்து மான் வந்தது..
-எனக்கு இன்னும் வேகமாக ஓடக்கூடிய வலிமை என் கால்களுக்கு வேண்டும்..
-தந்தேன்! என்றார் கடவுள்.
-எங்களைப் புலியோ சிறுத்தையோ தாக்கும்போது சேர்ந்து தாக்கிக் காப்பாற்றிக் கொள்ளும் யோசனை சட்டென்று வரவேண்டும்..
-இனிமேல் வரும், என்றார் கடவுள்.
பட்டாம் பூச்சி சிறகடித்தபடி சொன்னது..
-எனக்கு எதுவும் வேண்டாம். உங்களைப் பார்த்ததே வரந்தான்! என்றது.
-இன்னும் சில வண்ணங்களை எடுத்துக்கொள் என்று பட்டாம்பூச்சியின் இறகுகளின் மேல் வண்ணங்களைக் கூட்டினார் கடவுள்.
யானை வந்தபோது சற்றுநேரம் பேசாமல் இருந்துவிட்டு சொன்னது.
-காட்டிலேயே நாங்கள்தான் உயர்ந்த உருவம்.. ஆனாலும் எங்களை புலியோ, சிறுத்தையோ தாக்கிச் செயலிழக்கும்போது அவமானமாக உள்ளது. எங்களைப் பார்த்தால் அவற்றுக்குப் பயம் வரவேண்டும். எங்களிடம் நெருங்கக்கூடாது! என்றது.
-இனி உன் உருவங்கண்டு எல்லா விலங்குகளும் அஞ்சும். அருகில் வராது உறுதியாக! என்றார் கடவுள்.
யானை மகிழ்ந்துபோய் பிளிறியது. சுற்றிலும் உள்ள விலங்குகள் பயந்தன.
ஒவ்வொன்றாய் வரவர கடவுள் கேட்ட வரத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கடவுளுக்குப் பக்கத்தில் நின்ற ஒரு குட்டிக் கடவுள் கேட்டார். ’பெருமானே இப்படி சில பண்புகளோடும்.. குணாதசியங்களோடும் படைத்த நீங்களே வரம் எனும் பெயரில் விதிகளை மாற்றலாமா?’
கடவுள் சிரித்துக்கொண்டார். எனக்கு எல்லாந் தெரியும் என்பதுபோல.
கூட்டங்கள் குறைய அந்த ஆட்டுக்குட்டியைக் கண்டார். இருளை உருக்கித் திரட்டிச் செய்ததுபோல ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. நிதானமாகக் கடவுளையே பார்த்தபடி நின்றது.
-அருகே வா அழகிய ஆட்டுக்குட்டியே, என்று அழைத்தார் கடவுள்.
மெல்ல நடந்து அவர் முன் வந்து நின்றது.
-என்ன நீ? சிறு ஆட்டுக்குட்டி.. இன்னும் உனக்கு எதுவும் பழகவில்லை.. அதற்குள் வரமா? எங்கே உன் பெற்றோர்கள்? என்று கேட்டார் கடவுள்.
-அப்பாவையும் அம்மாவையும் கெடாவெட்டுக்கு கொண்டுபோய் விட்டார்கள். நான் இப்போது யாருமற்ற ஆட்டுக்குட்டி? என்றதும் கேட்ட கடவுளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
-இங்கே அருகில் வா! என்று கூப்பிட்டு அதை இரு கைளாலும் அணைத்துக்கொண்டார்.. அணைப்பில் அந்த ஆட்டுக்குட்டி முண்டிக் கொண்டேயிருந்தது.
சற்றுகழித்து இறக்கிவிட்டுவிட்டு, ’கவலைப்படாதே உனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று சொன்னார்..
-இல்லை.. நான் கவலைப்படவும் அச்சப்படவும் கூடாது என்று என் அம்மா சொல்லிவிட்டுப்போயிருக்கிறாள்..
-அப்படியா என்றார் கடவுள்.
-ஆமாம்.. நாம் பிறந்ததே சாவதற்குத்தான் என்று சொல்லியிருக்கிறாள். எல்லா உயிருக்கும் சாவு நிச்சயம் என்றாலும்.. சாகும்வரை வாழ்கின்றன. ஆனால் நாங்கள் வாழ்வதே சாவதற்குத்தான் ஆகவே சாகும்வரை எதுவுமின்றி வாழ்ந்துவிடு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என் அப்பா.
கடவுளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டி உயிர்ப்படைப்பின் அறிவியல் புரியாது என்று விட்டுவிட்டுக் கேட்டார்..
-உனக்கு என்ன வரம் வேண்டும்?
-எனக்கு எந்த வரமும் வேண்டாம்.
-ஏன்?
-நான் கேட்பதை உங்களால் தர முடியாது..
கடவுள் வியப்பின் உச்சத்திற்குப் போய்விட்டார்..
-என்ன சொல்கிறாய் இன்னொரு முறை சொல் என்றார்.
-நான் கேட்பதை உங்களால் முடியாது..
-முடியாதா?
-முடியும்… ஆனால் முடியாது.. என்றது.
-உங்களால் எதுவும்முடியும்.. நான் கேட்பதைக் கொடுப்பதற்கு உங்களுக்கு அச்சம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றதும் கடவுள் ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.. தான்தாம் இதையும் படைத்தோமா என்று..
-கேள் நான் நிச்சயம் தருகிறேன்.. உறுதியளிக்கிறேன்.. என்றார்.
-நீங்களும் நானும் சேர்ந்து பிறக்கவேண்டும்! என்றது ஆட்டுக்குட்டி..
-என்னது? நானும் நீயும் சேர்ந்து பிறக்கவேண்டுமா?
-ஆமாம்
-அது எப்படி முடியும்?
-முடியும் என்றது ஆட்டுக்குட்டி.
-சரி சொல்.. என்றார்.
-நான் ஆட்டுக்குட்டியாகவே பிறக்கிறேன் நீங்கள் என் குரலாகப் பிறக்கவேண்டும் சேர்ந்து..
-இது வித்தியாசமான வரம்.. கடவுள் ஒருநொடி யோசித்து சரி.. அப்படியே நான் உன் குரலாக வந்து பிறக்கிறேன்..
…….
கடவுள் கேட்டார்.. எதற்கு இப்படியொரு வரங்கேட்டாய்…
ஆட்டுக்குட்டி நிதானமாய் சொன்னது.. ’ஒவ்வொரு கெடா வெட்டிலும் வெட்டுவதற்கு முன்பு எங்கள் முன்னோர்களின் கதறலை யாரும் பொருட்படுத்துவதில்லை.. அது சொல்லமுடியாத வலி.. அதை நீங்கள் உணரவேண்டும்… என்றுதான் என்றது ஆட்டுக்குட்டி..
கடவுளால் எதுவும் பேசமுடியவில்லை..
000
இயற்பெயர் பேரா.முனைவர். க.அன்பழகன் (ஹரணி) (1961)
தமிழ்ப்பேராசிரியர் (பநி)
1979 முதல படைப்புலகில். 1000க்கு மேற்பட்ட சிறுகதைகள்.. கொஞ்சம் கவிதைகள்.. குறுநாவல்கள், நாவல்கள், 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பெற்றவை. கொஞ்சம் பரிசுகள். விருதுகள். பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. படைப்புகளில் எம்பில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பார்வை நூலாக என் நல்கள் வைப்பட்டுள்ளன. இதுவரை 70 நூல்கள் ஆய்வியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், மொழியியல், இலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கணம், சிறார் இலக்கியம், கட்டுரைகள், நாடகங்கள், கதைப்பாடல்கள் என 45 ஆண்டுகாலம் படைப்புலகில். கற்றது கடுகளவு. இன்னும் கல்லாதது உலகளவு.