வாஷிங் மெஷின் ஒன்று வாங்கவேண்டியிருந்தது.

          திவாகர் ஒரு புகழ்பெற்ற கடையைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான்.

          ராஷ்மியும் தன் பங்குக்கு கூகுளில் அலசி ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.

          “என்னங்க… நீங்க சொன்ன அதே மெஷின் மூவாயிரம் ரூபாய் குறைவாகக் கிடைக்குது. நான் சொல்ற கடையில் வாங்கினால் காசு மிச்சமாகும்.” என்றாள் ராஷ்மி.

          “நீ சொல்ற கடை அவ்வளவு ரிலையபிள் கிடையாது. அங்கே வாங்கினால் பொருளுங்க எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. பணம் போனாலும் பரவாயில்லை. நான் சொல்ற கடையில்தான் வாங்கணும். மெஷினும் நல்லவிதமா இருக்கும். கியாரண்டியும் உண்டு.” – பதிலுக்கு தன் விருப்பத்தைத் தெரிவித்தான் திவாகர்.

          “இருந்தாலும் பிராண்டு ஒண்ணுதானே? எங்கே வாங்கினாலும் அதனோட சர்வீஸ் சென்ட்டர் ஒண்ணுதானே? அதே கியாரண்டிதானே கிடைக்கப் போகுது?”

         “குவாலிட்டி பத்தி உனக்கு என்ன தெரியும்? நான் சொல்ற இடத்துலதான் வாங்கப்போறோம். சரியா?”

          சாதாரண பேச்சு முற்றி வாக்குவாதத்தில் மாறப்போகும் அபாயத்தை உணர்ந்த ராஷ்மி ‘சட்’டென, “உங்கள் விருப்பம்.” என்று சொல்லி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

      திருமணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஈகோதான் எல்லாவற்றிர்க்கும் மூல காரணமாக அமைகிறது. அது திவாகர்-ராஷ்மி தம்பதியையும் விட்டுவைக்க வில்லை.

          புரிதல்தான் மிக முக்கியமானது. கணவன்-மனைவி இடையே புரிதல் இல்லையெனில் வாழ்க்கை நரகம்தான்.

          எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் தனக்குத் தோன்றும் மாற்று வழியைச் சொல்வாள் ராஷ்மி. பெரும்பாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை வேண்டுமென்றே தவிர்ப்பான் திவாகர்.

          கை நிறைய சம்பளத்தில் அரசு உத்தியோகம் அவனுக்கு. தான் சொல்வதுதான் சரியென்கிற செருக்கு. தான் எதைச் சொன்னலும் அதை கை கட்டி, வாய்ப் பொத்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தான்.

          என்ன மனுஷர் இவர்? நான் சொல்ற இடத்திலிருந்து பொருட்கள் வாங்கினால் எவ்வளவு காசு மிச்சமாகும். நன்மைக்குத்தானே சொல்கிறேன்? ஏன் இவர் புரிந்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்? என்கிற ஆதங்கம் அவளுக்கு  நாலு எழுத்து படிச்சிட்டோம் என்கிற திமிர் பொட்டைக் கழுதைக்கு. புருஷன்

-2-

 சொல்லைக் கேட்டு நடக்காம அவ்வளவு என்ன தெனாவட்டு? தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்கிற மமதை. அப்ப நான் கேணையனா? என்கிற ஆத்திரம் அவனுக்கு.

          விளைவு?

          நாளுக்கு நாள் பிரச்சினைகள்தான் பூதாகரமாகக் கிளம்பியதே தவிர குறையவில்லை.

         ஞ்ச் அவர்.

         அலுவலக கேண்டீனில் அமர்ந்து டிபன் பாக்ஸைப் பிரித்தான் திவாகர்.

         எதிரில் அமர்ந்து தன்னுடைய பாக்ஸைப் பிரித்தான் மதன்.

         நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.

         “இந்த ஜெனரேஷன் பொம்பளைங்க படுமோசம்பா. தான் சொல்றதுதான் சரின்னு அடிச்சுப் பேசுவாங்க.” என்றான் மதன்.

         ‘ஆமாம்’ என சொல்ல வாயெடுத்தவன், ‘சட்’டென சுதாரித்துக்கொண்டான் திவாகர். சொன்னால் ‘அட, உன் வீட்டிலும் அதே பிரச்சினயா?’ என்று கேட்பான். எல்லாவற்றையும் சொல்லவேண்டிவரும். எதற்கு அநாவசியமாய் என் பெர்சனல் மேட்டரை இவனுக்குச் சொல்லவேண்டும்? என்று மெளனமாய் இருந்தான்.

         ஆனால், மதன் தொடர்ந்தான்:

         “என் எதிர்வீட்டில் புதுசா குடிவந்த இளம் ஜோடிக்குள் தினம் சண்டை, சச்சரவு. ஒரே கூச்சல், குழப்பம். கொஞ்சநாள்தான். அவன் அவளோட ஆணவத்தை அடக்க, அவளை அதிரடியா விவாகரத்து செஞ்சுட்டான். விளைவு? இப்ப அவள் வாழாவெட்டின்னு பேரெடுத்து தாய் வீட்ல முடங்கி கிடக்குறா.”

         திவாகர் கைகழுவ எழுந்துகொண்டான்.

         தன் சொன்ன அந்த சேதி அடிக்கடி திவாகரின் செவிகளில் அலையடித்துக்கொண்டேயிருந்தது.

         ராஷ்மியின் ஆணவத்தை அடக்க அது ஒன்றுதான் சரியான வழி. அவளும் வாழாவெட்டி என்று பெயரெடுக்கட்டுமே? அப்போதுதான் அவள் அடங்குவாள். பொட்டைக் கழுதை.

         தீர்மானித்துவிட்டான்.

         சமய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.

         சொல்லிவைத்தாற்போல் ஒரே வாரத்தில் மீண்டும் வெடித்தது பூகம்பம்.

         இருவருக்கும் கடும் வாக்குவாதம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.

         அன்றிரவு அவன் சாப்பிடாமல் வெளியேறிவிட்டான்.

         ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நடு இரவில் வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டான்.

         மறுநாள் ஞாயிறு என்பதால் லேட்டாக எழுந்தான்.

         ராஷ்மி ஹாலில் அமர்ந்து செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருந்தாள்.

         அந்த இடியை அவள் மீது இறக்கிவிடவேண்டியதுதான்.

-3-

         தான் அவளை விவாகரத்து செய்யப்போகும் விஷயத்தை அவளிடம் சொல்லிவிடவேண்டியதுதான்.

         பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டவன், தலையைத் துவட்டிக்கொண்டே அவள் எதிரில் போய் நின்றான்.

         “இதோ பாரு… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…”

         அவனுக்காகவே காத்திருந்தவள் போல் அவள் அவனை இடைமறித்தாள்:

         “நீங்க சொல்றது இருக்கட்டும் முதல்ல நான் சொல்றதைக் கேளுங்க…”

         அவன் அவளை ஆச்சரியத்துடன் ஏறிட்டான்.

         “என்னை ஓர் அடிமையாக நீங்க நடத்தறது எனக்குக் கொஞ்சங்கூட பிடிக்கலை. அதென்னது, ஆம்பிளைங்கன்னா கொம்பு முளைச்சிருக்கா என்ன? வாழ்நாள் முழுக்க ஆம்பிளைங்களுக்குக் கட்டுப்பட்டு ஒடுங்கி இருக்கணுமா? பெண்டாட்டியை ஏன் லைஃப் பார்ட்னர்னு சொல்றோம்? அவளையும், அவளோட உணர்வுகளையும் மதிச்சு அவளை ஒரு மனுஷியா, சமமா நடத்தத்தான். அடிமையா நடத்தறத்துக்காக இல்லை. எல்லா பொம்பளைங்களையும் ஒரே மாதிரி எடை போடாதீங்க. நான் படிச்சவ, வேலைக்குப்போய் சம்பாதிக்கறவ. என் சொந்தக்கால்ல நிக்கற தைரியம் எனக்கிருக்கு. ஆணவம் புடிச்ச உங்ககூட இனிமேலும் என்னால் வாழ முடியாது. அதனால நான் என் தாய் வீட்டுக்குப் போறேன். சட்டப்படி விவாகரத்துக்கான ஏற்பாடு செஞ்ச பிறகு உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வரும். பை…”

         சொல்லிவிட்டு அவன் பதிலுக்கும் காத்திராமல் தயாராக வைத்திருந்த சூட்கேசுடன் ‘விசுக்’கென்று வெளியேறிவிட்டாள்.

         திடுக்கிட்டு, நிலைகுலைந்து நின்றான் திவாகர்.

00

மலர்மதிஎன்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இயற்பெயர் ஜி.ஆசிப் அலி. இதுவரை 650 சிறுகதைகள், 5 நாவல்கள், 6 தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. துபாயில் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுப் பெற்றவன். வேலூர் சொந்த ஊர் என்றாலும், தற்சமயம் குடும்பத்துடன் வசிப்பது சென்னை ஆவடியில்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *