விளையாட்டுக்களம் ஒன்றும்
போர்க்களம் இல்லை
விளையாட்டில் புண்
எங்கு கொண்டாலும்
விழுப்புண்ணே
விளையாடும்போது விழுவதை
விதி என்று சொல்வோரிடம்
சொல்லால் மோதி விளையாடு
சாதிக்க விளையாடு
சாதிக்காக விளையாடாதே
சிந்தனை விளையாட்டில்
மதம் ஏற்றும் அணிக்கு
எதிர்க்களத்திலேயே
எப்பொழுதும் விளையாடு
பள்ளிக்கூடத்தில்
நீங்கள் விளையாடும் நேரத்தில்
ஓடவோ ஆடவோ முடியாது
ஒதுங்கியிருந்து
வேடிக்கை பார்க்கும்
உன் பள்ளித் தோழமைக்கும்
இடையிடையே
கொஞ்சம் நேரம் ஒதுக்கி
பேசி சிரித்து பாடி விளையாடு
இந்த விளையாட்டு விதிமீறலை
விளையாட்டுக்களத்தில்
எப்பொழுதும் கடைப்பிடி
மகளே இது
உன் தந்தை கூறும்
அன்புக்கட்டளை இல்லை
நம் தமிழ் கூறும் அறக்கட்டளை
++
ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பட்டய படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார் இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.