1. முருகனில் தேடு
சிரிப்பினைப் போல் ஒரு கொடுப்பினை உண்டோ
சிந்தனை போல் ஒரு ஆயுதம் உண்டோ
வஞ்சனை போல் ஒரு வேதனை உண்டோ
உயிரினைப் போல் ஒரு மறைபொருள் உண்டோ
முருகனைப் போல் ஒரு தெய்வமும் உண்டோ
மறைபொருள் தன்னை முருகனில் தேடு
வேதனை தன்னை அவனிடம் பாடு
சிந்தனை என்னும் ஆயுதம் கொடுப்பான்
சிந்தனை முடிவில் சிரிப்பினை அடைவாய்
சிந்தனை முடிவில் சிரிப்பினை அடைவாய்
,
2. கடவுளும் மாமனிதனும்
மதவெறி எனும்
அறம் இல்லா செயலுக்கு
மன்னிப்பு அருளும்
புனிதநீர்
இந்த பூமியில்
எங்கேயும் பாயவில்லை என்றார்
மாமனிதனின்
கனவில் வந்த கடவுள்
மதமே பிடிக்காத என்னிடம்
கடவுள் எதற்காக
இதைச் சொல்கிறார் என்ற வினா
மாமனிதனின் உள்ளத்தில் எழுந்ததை
அவனுடைய முகக்குறிப்பால்
உணர்ந்தார் கடவுள்
மதவெறி பிடித்தவன்
இதை நானே சொன்னலும் நம்பமாட்டான்
மதம் பிடித்தவன்
இதை நான் சொன்னால் நம்புவான்
ஆனால் யாருக்கும் சொல்லமாட்டான்
மதமே பிடிக்காத நீ தான்
இதை நான்கு பேர் அறியும்படி
சொல்வாய் என்றார் கடவுள்
மாமனிதன் கண் விழித்த போது
அடுத்த மாமனிதனுக்கான தேடலோடு
நடைபோட்டுக் கொண்டிருந்தார் கடவுள்
00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

