எந்த ஒரு கூடுகையிலும்
வட்டி என்ற சொல்லை
பயன்படுத்தாமல்
ஒரு உரையாடலை
நிறைவு செய்ய
சிலர் முயல்வதில்லை
,
அவர்களின் பார்வையில்
வட்டிக் கணக்குப் பார்த்து
வாழும் நிலையே
பிறப்பின்
மேலான நிலை
,
தங்களின்
வட்டிப் பேரறிவை
தன்னைச் சூழ்ந்த
யாவருக்கும் புகட்டுதல்
அவர்கள் ஆற்றும்
ஆகப்பெரும் சமூக சேவை
,
வட்டிப் பேரறிவு
இருப்பதனாலேயே
தனக்குப்
பகுத்தறிவு இருப்பதாக
தன்னம்பிக்கை கொள்வதினால்
அவர்கள்
அரை மூடர்கள் அல்லது
குறை மூடர்கள் அல்லது
அரைகுறை மூடர்கள்
அந்தக் கூடுகையில்
ஓர் அங்கமாய்
அமர்ந்திருக்கும் சூழல்
இதுவரை உனக்கு
வாய்க்கவே இல்லையெனில்
நீ பாக்கியவான்
,
ஒருவேளை
அந்தக் கூடுகையில்
நீ அமர்ந்திருந்தால்
அவர்களின்
வட்டிப் பேரறிவு
மறந்தும்
வெளிப்படுவதில்லையெனில்
நீ எனக்குத் தலை
நான் உனக்குத் தளபதி
00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

