நல்லவேளை
பறவையாய் பிறக்காததால்
பட்டாம்பூச்சிகளும்
பறவையாய் பிறந்தும்
காகங்களும்
சில மனிதர்கள்
தங்கள் வீடுகளில்
அன்பின் நிமித்தமாக
கூண்டுகளில் வளர்க்க விரும்பும்
உயிர்களின் பட்டியலுக்குள்
இதுவரை சிக்கவில்லை
கூடு சிக்கலாய்
சின்னதாய் இருந்தாலும்
கூட்டுப் பறவைக்கு
வானமே எல்லை
கூண்டு ஒழுங்கமைப்புடன்
பெரியதாய் இருந்தாலும்
கூண்டு பறவைக்கு
அப்படி இல்லை
கூண்டுகளை
சுக்குநூறாய்
உடைத்து நொறுக்குங்கள்
அந்த உடைசல்களைக் கொண்டு
பறவைகள்
தனக்கான கூட்டை கட்டி
ஒரு நாள்
நிச்சயம் குடியேறும்.
ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.