மரத்தின் முதுமையில் சில
காற்றின் வலிமையில் சில
மற்றபடி மானுடத்தின்
அறுவையில் தான்
பிறக்கிறது விறகு
வெள்ளத்தில் மிதந்து வரும்போது
உயிர்களுக்கு தஞ்சம் தருகிறது
மண்ணோடு மக்கி
புதைபடிவ எரிபொருளாகிறது
வீச்சரிவாள் போல
வீணாய் கிடக்கும் விறகுதான்
அடிதடிக்கும்
அதை ஒடுக்க நடத்தப்படும் தடியடிக்கும்
முதற்கருவியாய் வடிவம் எடுக்கிறது
முழுமையாய் எரியாத விறகு
கரிக்கட்டையாகி
ஒரு ஓவியனை
அடையாளம் காட்டுகிறது
கருப்பசாமி படையலுக்கு
கறிசோறு ஆக்குகிறது
மாரியம்மன் கோயிலுக்கு
பூக்குழியில் எரிகிறது
சமபந்திக்கு ஆக்கிப்போட்டு
சமூக நல்லிணக்கம் போற்றுகிறது
சமையலறை தொடங்கி
சாக்காடு வரை
மானுடர்க்காய்
எரிந்து முடித்த பிறகு
தான் சாம்பலாகி
சிறகு விரித்து
பறக்கிறது விறகு

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.