சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், ‘ஆஸ்பத்திரி ஸ்கூல இடிச்சுட்டாங்க…,’ என்று காலையில் தெருவில் யாரோ பேசிக்கொண்டு போனது காதில் விழுந்ததும், துயரம் ஓர் அலை போல வந்து அவன் உள்ளத்தை மோதியது. அப்பாவின் சைக்கிளைக் கிளப்பி மிதித்துக்கொண்டு போய் பார்த்த போது, முழுமையாக இடிக்கப்பட்டு பள்ளிக்கூடம் இருந்தத் தடமே இல்லாமல் இருந்தது. உடைந்த செங்கல் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, மண் முழுக்க சிவப்பாய் கிடந்தது. அருகில் சென்று அதில் ஒரு சிறிய செங்கல்லை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டான். இறுக்கிக் கொண்டபோது கல்லின் மழுங்கிய முனைகள் கைகளில் மென்மையாய் அணைத்துக் கொண்டது.

தனக்கென கொண்டு வந்த டிபன் கேரியரிலிருந்து, சாதத்தை சாம்பாரில் பிசைந்து உருட்டி அவனுக்கு ஊட்டி விட்ட ஒன்றாம் வகுப்பு ஆசிரியையின் பெயர் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவரின் மயில் மூக்குத்தி அணிந்த முகமும், சிரிப்பும், சாத உருண்டையும் பளிங்கு போல மனதில் நிற்கின்றது எல்லோருடைய ஒன்றாம் வகுப்பு டீச்சர் போலவே. வயோதிகத்தின் முடிவில் நின்ற தலை முழுவதும் நரைத்த, எப்போதும் கடகடவென பேசிக் கொண்டும் கோபப்பட்டுக் கொண்டுமிருக்கும் இரண்டாம் வகுப்பு டீச்சர், முதல் முறையாக அவனுக்கு ஆங்கிலம் எடுத்த மூன்றாம் வகுப்பு டீச்சர், அந்த வகுப்பின் லீடர் பாரதி, உடன் படித்த சிந்தன், கேசவன், விசு, தேவி, ராணி, விஜயா, முருகன், சசிகலா, கோவிந்தராஜ், சம்பத்குமார், வசந்த், சுப்ரமணி என முகங்களோடு அவர்களுக்கிடப்பட்ட பட்டைப் பெயர்களும் நினைவிலெழுந்து வரத்தொடங்கியது. 

கழுத்தில் வெள்ளி சிலுவை போட்ட, எப்போதும் அமைதியாய் பேசும் நாலாவது டீச்சர், கண்ணாடியைக் கழட்டி துடைக்கும் போது, சுருங்கிய கண்களும் அதைச் சுற்றி அடர்க் கருவளையமும், அவரை வேறு ஒருவர் போலக் காட்டும். பெரிய வட்டக் கண்ணாடி, பொட்டில்லா உருண்டை முகம், சுருள்முடி, அதைச் சுருட்டிப் போடப்பட்ட வளையக் கொண்டையோடு, கனத்த உடல் கொண்ட பெரிய டீச்சரை பார்த்தாலே தோன்றும் பயம். ஒன்றாம் வகுப்பில் சேர்த்தவர் அவர் தான். அவன் ஐந்தாம் வகுப்பு போன போது அவர் இல்லாதது நினைத்து அடைந்த மகிழ்ச்சி எல்லாமும், தள்ளிக் கொண்டே போன சைக்கிளின் பின்னாலேயே வந்தது. பள்ளி நாள் நினைவுகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நீங்குவதில்லை. அடைய முடியாத மலைச் சரிவின் பசுமையை எண்ணி ஏங்கும் உள்ளம் போல.

தரைத் தளத்தில் நகராட்சி மருத்துவமனையும், மேலே இருந்த ஒற்றை மாடியில் பள்ளியும் இணைந்தே நடைபெற்றன. பள்ளிக்குள் நுழையும் போது, மாடிக்கு செல்லும் படிக்கருகில் போடப்பட்ட மரப்பெஞ்சில் நெஞ்சில் கை வைத்தபடி, தலையை, வயிறை அழுத்திப் பிடித்தபடி எப்போதும் இரண்டு முதிய நோயாளிகளைப் பார்க்கலாம். அவர்களைத் தாண்டி ஏறும் படிக்கட்டுகள் வலப்புறம் திரும்பி ஏறும். சிமெண்ட் சுவரால் கட்டப்பட்ட கைப்பிடிகளில் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும். மேலே ஏறினால், தென்படும் சிறியக் கூடத்தின் இடப்புறம் பெரிய டீச்சர் அறையிருக்கும். கூடத்தைத் தாண்டி, நுழைந்தவுடன் சிமெண்ட் தளம் போட்ட விசாலமான பகுதியில், இடப்பக்கம் நான்காம் வகுப்பு வலப்பக்கம் மூன்றாம் வகுப்பு, மேற்குப்பக்கம் வலது மூலையில்  ஒன்றாம் வகுப்பு நேர் எதிரே இரண்டாம் வகுப்பும் அமைந்திருந்தது. நான்கு மூலைகளிலும் சன்னல் அருகே சுவரில் கருப்புப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கரும்பலகையாக மாற்றப்பட்டு வகுப்பறைகள் செயல்பட்டன. குட்டைக் கால்கள் கொண்ட மரப் பெஞ்சுகள் தடுப்புகளாக வகுப்பறைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும். தடிமனான இரும்புக் கம்பிகள் போட்ட சன்னல் வழியே வேடிக்கைப் பார்க்க போட்டி நடக்கும். மேற்குச் சன்னல் வழியே கீழே பார்த்தால் சத்துணவுக் கூடமும், அதன் வாசலில், மூன்று பெரிய கற்கள் வைத்த அடுப்பின் மேலே விறகு எரிந்து கொண்டிருக்க அதன் மேலே பெரிய அண்டாவில் சோறும், சாம்பாரும் கொதித்துக் கொண்டிருப்பதைக் காண முடியும். 

சத்துணவுக் கூடத்தை ஒட்டிப் போகும் குண்டும் குழியுமான, இரண்டுப் பக்கமும் முட்செடிகள் வளர்ந்து கிடந்த சாலை, காவேரி ஆற்றின் தெற்குக் கரையில் போய் சேர்ந்து கொள்ளும். ஐந்து நிமிடங்களில் ஆற்றை அடைந்துவிடலாம். அந்த முட்செடிகள்தான் எல்லாருக்கும் ஒன்றுக்குப் போகும் இடம். சற்றுத் தள்ளி நகராட்சிக் கக்கூஸ் இருந்தாலும், உள்ளே போகமுடியாத அளவுக்கு வழியெங்கும் மலம் பொழிந்தும்,காய்ந்தும் கிடக்கும். உள்ளே சென்றால் ஒரு சிமெண்ட் தொட்டியில் பச்சை நிறப் பாசிகளுக்கிடையே தண்ணீர் இருக்கும். கக்கூஸிற்கு செல்லும் பாதைக்கு இணையாக குடிசை வீடுகள் இருக்க, இடையில் ஒரு வரிசை முட்செடிகள் குறுக்கில் இருந்தன.

அன்று மதிய உணவு இடைவேளை முடிந்து கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு வயிற்றைப் பிசைந்து பிசைந்து வலித்தது. ஆரஞ்சு சிவப்பில் மைசூர் பருப்பு போட்ட சாம்பார் வயிற்றை என்னவோ செய்தது. தினமும் சாப்பிடுவதுதான் என்றாலும் அன்று கலக்கியது. டீச்சரிடம் சொல்லிவிட்டு படிகளில் வேகமாக இறங்கி பின் பக்கம் ஓடினான். சமையல் பாத்திரங்கள் தேய்க்கப்பட்டுக் கொண்டிருக்க, அந்த தண்ணீர் கரிய நிறத்தில் சாலையின் குழிகளில் நிரம்பி மெதுவாய் ஓடிக் கொண்டிருந்தது. கூடத்தை தாண்டிச் செல்லும்போதே காக்கி டிரவுசரைக் கழட்டித் தோளில் போட்டுக் கொண்டு, கக்கூஸ் செல்லும் பாதையில் கால்கள் வைத்து அமரும் வகையில் இடைவெளி தேடி குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டான். வேலிக்கருவை இலைகள் பிட்டத்தில் உரச, கைகளை வீசி கொத்தாகப் பற்றி இலைகளைப் பிடுங்கி, அதிலிருந்த சிற்றிலைகளை ஒவ்வொன்றாய், நிதானமாய் உருவத் தொடங்கினான். 

“யார்றாவன் எங்க வந்து பேள்ற.? ஒடுறா…!”

திடுக்கிட்டு எழுந்துத் திரும்பிப் பார்த்தான். வெளியேறும் வழியில் பாதையை மறைத்தபடி ஆக்ரோஷமாக அவள் நின்றிருந்தாள். கைகளில் மரக்கைப்பிடி போட்ட வளைந்த கறுமை நிற கருக்கரிவாள் ஒன்று பளபளத்தது. பரட்டைத் தலையும், கறுத்த உருவமுமாக, கையில் வீசிக் காட்டிக் கொண்டிருக்கும் அரிவாளுமாக அவளைப் பார்க்கவே பயமாய் இருந்தது. இதயம் வேகமாக துடிக்கத் தொடங்க பீதியில் அழுகை வந்தது. வெளியேறி ஓட முடியாதபடி வழியின் குறுக்கே அவள் நின்றிருக்க பதட்டத்தில் “அய்யோ, அம்மா” என்று அலறியபடி டிரவுசரைக் கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு திரும்பி முட்செடிகளுக்குள் புகுந்து, குடிசைகளின் சந்து வழியே வெளியேறி ஓடினான். பின்னால் அவள் ஓடி வருவது போலத் தோன்றியது. திரும்பிப் பார்த்தபோது அவள் ஏதோ திட்டிக் கொண்டே துரத்திக் கொண்டு வந்தாள். காவேரிக் கரைக்கு செல்லும் மண் பாதையில் ஏறி திரும்பாமல் வேகமாக ஓடிக் கொண்டேயிருந்தான். கை, கால்களில் முட்செடிகள் ஏற்படுத்திய சிராய்ப்புகளில் இரத்தம் கசியத் தொடங்கியது. 

அந்த சம்பவத்திற்குப் பின் எப்போது அவளைப் பார்த்தாலும் ஓடி ஒளிந்து கொள்வான். அரிவாளோடு துரத்திக்கொண்டு வந்த அவள் பிம்பம் மனதில் அழியாமல் பதிந்து போயிற்று. படிப்பு, பணி என வருடங்கள் வேகமாக உருண்டு, பல ஊர்கள் மாறினாலும் அவ்வப்போது அவள் முகம் கனவுகளில் வந்து பயமுறுத்தும். 

மறுநாள் காலையில் டீக்கடையில் இரண்டு டம்ளர் டீயை வாங்கி ஒரே நேரத்தில் குடித்த அந்த முதியவளை உற்றுப் பார்த்தபோது முதலில் அடையாளம் தெரியவில்லை. பின்பு மெல்ல மெல்ல அவளை ஆழ்மனம் அறிந்து கொண்டது. அவளேதான். முதுமை அவளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருந்தது. மனதில் பதிந்து கிடந்த அந்த முகம் அவளிடமிருந்து எங்கே போனதென்று தெரியவில்லை. காலம் அவள் உருவத்தை களைத்துப் போக வைத்து சுருக்கியிருந்தது. சடைப்பிடித்த நரைத்தத் தலைமயிர். சேலையின் உண்மையான வண்ணம், என்னவென்று தெரியாத அளவிற்கு அழுக்காய் கிழிந்திருந்தது. சிவப்பு நிற ஜாக்கெட் கருப்பாய் மாறியிருந்தது. அவளை விடச் சற்று உயரமாக ஒரு கம்பு கைகளில் இருந்தது. பிளாஸ்டிக் உரச் சாக்கு ஒன்றை தோளில் போட்டுப் பிடித்தபடி கம்பை ஊன்றி மெல்ல நடந்து சென்றாள். 

இரண்டு டீ தான் அவள் காலை உணவு. குடித்துவிட்டு வீசப்படும் பாட்டில்கள் பொறுக்கி அதை விற்று ஒற்றை மனுசியாய் வாழ்க்கையை நகர்த்துகிறாள் என டீ மாஸ்டர் சொன்னார். சாக்கு பைக்குள் அந்த கருக்கரிவாள் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்கூல் பக்கம் போய் அவன் பார்த்தபோது, புதுக் கட்டடம் கட்டுவதற்காக தூண்கள் அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. சிமெண்ட், செங்கற்கள், ஜல்லிக்கற்கள், மணல் குவியல், கலவை இயந்திரம், வேலையாட்கள் என அந்த இடமே பரபரப்பாய் இருந்தது.

பெயர் ஜெய்சங்கர். சொந்த ஊர் திருச்சி. பயணங்கள் செய்வதிலும், இலக்கியங்கள் வாசிப்பிலும் அதிக ஆர்வம். முதல் சிறுகதை மயானக் கொள்ளை நடுகல் அச்சிதழில் வெளியானது. இணைய இதழ்களில் பயணக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *