இந்த நேரங்கெட்ட நேரத்தில கலைத் தாகம் இருக்கறவள எங்கனுபோய்த் தேடி எப்படினு நான் கண்டுபிடிச்சுக் கூப்பிட்டு வர்றது?
இப்படித்தான் அர்த்த ராத்திரியில் புலிப் பால் கொண்டா ஒட்டகப் பால் கொண்டா என்பதுமாதிரி திடீரென ஐஸ்கிரீம் வேணும் என்பார். வெளியே தலைகாட்டமுடியாத குளிர்காலத்தில் விடியும்போதே எனக்கு இந்த புக் உடனே வேண்டும் வாங்கி வா என்பார். அதெல்லாம்கூட பிரச்சினை இல்லை. கஷ்டப்பட்டாவது, செஞ்சிடலாம். ஆனா, இது?
வெகு நேரம் யோசித்ததில் கதிரேசனுக்குத் தலை வலித்தது. அதற்கு முந்தின நாள் ஐயாவுடன் உட்கார்ந்து அடித்த வெளிநாட்டுச் சரக்கு நினைவுக்கு வந்தது. என்னா சொல்லு, வாங்கி வெக்குற சரக்கில் இருந்து, அதை அடுக்கி வெக்கிற அரைகுறை ஆடையுடன் இருக்கும் அழகான பெண்களின் படங்கள் இழைத்த பெரிய மர அலமாரி, கலை நயத்தோடு இருக்குற மதுக் கோப்பைங்கனு ஐயாவோட ரசனைய அடிச்சுக்கவேமுடியாது.
“கிளாசுனு சொன்னா அப்புறம் அதுல இருக்கறதக் குடிச்சு வர்ற போதைக்கு என்னடா மரியாதை? கோப்பைனு சொல்லிப் பழகுடா. தமிழுக்கும் உயிரென்று பேர். எழுதுனான்பாரு எங்காளு. இதைவிட எளிமையா வேற எப்படிடா உங்களுக்கெல்லாம் என் மொழியோட பெருமைய சொல்றது? கிளாசு பிளாசுனுகிட்டு. கோப்பைனு சொல்டா” என்று ஐயா சொல்லிச் சொல்லி இந்த வார்த்தை ஒட்டிக்கொண்டது.
கை வைத்த வெள்ளை பனியனும் மெல்லிய பருத்தியால் ஆன முழுக்கைச் சட்டையும் கழுத்திலிருந்து லேசாக எட்டிப் பார்க்கும் தங்கச் சங்கிலியும் பட்டு வேட்டியும் சந்தனத் தீற்றலுமாக ஐயா அறையில் இருந்து நிகழ்ச்சிக்குக் கிளம்பிவிட்டதை ஹோட்டல் ரிசப்ஷனில் தவழத் தொடங்கும் அத்தர் வாசமே தெரியவைத்துவிடும் கதிரேசனுக்கு.
ரிசப்ஷனை நெருங்கியவர் அவனைப் பார்த்து, “கிளம்பலாமா, கதிரு?” என்றார்.
பவ்யமாக,”போலாம்ங்க ஐயா” என்றபடி ஓட்டமும் நடையுமாகப்போய் கார் கதவைத் திறந்துவிட்டு அவர் உட்கார்ந்ததும் சத்தமில்லாமல் கதவைச் சாத்தி, பிறகு ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். இது பல வருடப் பழக்கம்.
எம்.எஸ்.விசுவநாதன் கண்ணதாசன் கூட்டணியில் சுசீலாம்மாவின் பாடல்கள் மெலிதாக ஒலிக்க, கண்மூடி லயித்து இடையிடையே ‘ப்ச்’ ‘அடடா’ என்றபடி தலையாட்டி சிலாகித்துக்கொண்டே நீளும் பயணத்தில் ஒரு வார்த்தை பேசமாட்டார்.
வாசலில் காத்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் வண்டியில் இருந்து இறங்கும் ஐயாவைப் பார்த்ததும் ஓடோடி வந்து அவர்களில் யாராவது ஒருவர் கார் கதவைத் திறந்து, உடலைப் பாதி வளைத்துப் பவ்யமாக வணங்கி, “ஐயா வணக்கம்ங்கய்யா. வாங்க. வாங்க” என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றபடியே, “பயணம் சௌகரியமா இருந்ததுங்களா?” என்று கேட்பதையும், ஐயா பதில் பேசாது லேசாகத் தலையாட்டியபடி நடப்பதையும் காட்சி பிசகாமல் அதே வரிசையில் ஒவ்வொரு கூட்டத்திலும் பார்த்து, கதிருக்குச் சலித்துப்போயிருந்தது.
ஐயா மேடை ஏறியதும் பார்க்க வேண்டுமே, அது வேறொரு மனுசன். என்னென்னவோ இலக்கியப் புத்தகங்களில் இருந்து செய்யுட்களை அட்சரம் பிசகாமல் ஐயா அநாயாசமாகச் சொல்லிக்கொண்டேபோவார். இடையிடையே தன்னுடைய அனுபவங்களைச் சரம் சரமாகக் கோர்த்து மக்களிடையே வீசுவார். பட்டினத்தார் பாடல்கள் தொடங்கி பாரதி, பாரதிதாசன் பாடல்கள் என்று தொடர்ந்து, நேற்று எழுதத் தொடங்கியவர்கள்வரை அவருடைய நாக்கில் தமிழ் விளையாடும். கூட்டம் அசையாது கேட்டுச் சொக்கிக் கிடக்கும்.
ஒருமுறை கூட்டம் தொடங்கியபோது ஆரம்பித்த தூறல் சிறிதுநேரத்தில் லேசாக வலுவாகிச் சட்டென, பலத்த மழையாக மாறியது. ஒரு சொட்டு நீர்விழாத அளவுக்கு மேடை பாதுகாப்பாக இருந்தது. மழைத் தாரைகள் சந்தோஷமாகப் பொழியவும் ஏற்பாட்டாளர்கள் தவிக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஐயாவுக்கு மக்கள் மனதில் இருக்கும் சிம்மாசனம் கதிருக்குக் கண்ணெதிரே தெரிந்தது. மழைக்கு வேகமாக எழுந்த ஜனங்கள் வீதியின் இரண்டு பக்கமும் இருந்த கடைகள், வீட்டுக் கூரைகளின் கீழ் என்று எங்கெல்லாம் நிற்கமுடியுமோ அங்கெல்லாம்போய் ஒடுங்கி நின்றுகொண்டார்கள். ஒருபுறம் மழையோசை இன்னொரு புறம் ஒலிபெருக்கியில் இருந்து பிரவாகமாகக் கொட்டிய ஐயாவின் தமிழோசை. தமிழ்க் கடவுள் சாட்சாத் ஐயாதான் என்று யாராவது அப்போது சொல்லியிருந்தால் கேள்வி கேட்காமல் நம்பும்படியாக இருந்தது அந்தக் காட்சி. பேசி முடித்துக் கூட்டத்தை நோக்கி ஐயா, வணக்கம் சொன்னதும் மக்கள் கைதட்டிய சத்தத்தை மறக்கவேமுடியாது கதிரேசனால்.
எப்போதுமே நிகழ்ச்சி முடிய இரவு வெகு நேரமாகிவிடும் என்பதால்
பெரும்பாலும் அங்கேயே விடுதியில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை கிளம்புவதே வழக்கம். அந்த ஊரில் இருப்பதிலேயே ருசியான உணவு கிடைக்கும் உணவகத்துக்கு அவரை அழைத்துப்போய் மனங்குளிர உபசரித்து, அறைவாசல்வரை வந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்விட்டுப் போன ஐந்தாவது நொடியில் இருந்து சரேலென வெளிப்படும் ஐயாவின் இன்னொரு முகம், சபை கேட்டறியாத வேறொரு குரலில்.
“எடேய், கதிரு, வா. இங்கன வந்து வொக்காரு” என்பார்.
அறையின் இருக்கையில் இருந்து எழுந்து அவர் பக்கத்தில் போய் உட்காரும் அந்த இரண்டு செகண்ட் கூடப் பொறுக்காமல் “வந்தியா? எம்மா நேரம்டா?” என்பார்.
அவர் காலருகே வந்து உட்கார்ந்ததும் “எதுக்கு இப்ப என் கால்கிட்ட உட்கார்ற? நீ என்ன பூனையா இல்ல என் பொண்டாட்டியா? கால் அமுக்கிவிடப் போறியா? அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்துதான் பல வருசமாச்சே” என்று ஆரம்பித்துப் பிரசவத்தில் செத்துப்போன தன் மனைவியைப் பற்றி ஒருபாட்டம் அழுவார்.
ஒருநாள் தனிச் சொற் பொழிவுக்காகப் பாண்டிச்சேரி போயிருந்தார்கள். பேசி முடித்து அறைக்கு வந்து இரவு வழக்கம்போல உருகி உருகி மனைவியின் சமையலை, அவளுடைய குணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென, “வண்டிய எடு கதிரு, போலாம்” என்றார்.
“ஐயா. போலாம். எங்கவேணா போலாம். இப்ப தூங்குங்க. காலையில போலாம்”
“கதிரூ, நல்லபடியா சொல்றேன். வண்டிய எடு” என்றதும், வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி அறையைப் பூட்டி, சாவியை ரிசப்ஷனில் தந்துவிட்டு காரை எடுத்து விடுதியின் போர்டிகோ தாண்டும்வரை எங்கே போகவேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
கையை உயர்த்தி மணி பார்த்தான் கதிரேசன். 2.45. பேய்ங்ககூட டூட்டி முடிஞ்சு தூங்கியிருக்கும் என்று நினைத்தபடி “ஐயா, மெயின் ரோடு வந்துட்டோம். இப்பவாவது சொல்லுங்க. எங்க போகணும்?” என்று கேட்டான்.
“பீச்சுக்குப் போ”
“ஐயா இங்க நிறைய பீச் இருக்கே. எங்க போகணும்?”
“சாந்தோம் பீச்சுடா”
“ஐயா. நாம இப்ப சென்னையில இல்ல. பாண்டிக்கு வந்திருக்கோம்…..”
“வெண்ணெ. அதெல்லாம் எனக்குத் தெரியும். என் பொண்டாட்டி நியாபகம் வந்துடுச்சு. மொத மொதல்ல அவளை அங்கதான்டா பாத்துப் பேசனேன். இப்ப அந்த மண்ணையாவது தொடணும் நான். நீ ஓட்டுற வேகத்துக்கு சல்லுனு போய்ச் சேந்துடலாம், போ”
கதிரேசனுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றுவது போலிருந்தது. கடற்கரைச் சாலை வழியாகப் போனால்கூட சிலமணி நேரங்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் ஐயாவின் பெட்டி, விடுதி அறையில் இருக்கிறது. யார் வந்து அதை எடுத்துப்போவது? என்ன இழவு இது என்று சுர்ரென்று கோபம் வந்தது.
தலையைக் குனிந்தபடி எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான். “எம்மா என் கண்ணு.. என்னத் தனியா வுட்டுப் போயிட்டியே…” காரில் பாடிக்கொண்டிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாட்டை சிறிது நேரம் சேர்ந்து பாடியவர் மறுபடி “ராசாத்தி இவ்ளோ சீக்கிரமா போவனு தெரீலயே. எங்கியும் வெளிவாசல்கூட கூட்டிப் போவாம பட்டிமன்றம் பேச்சுனு இருந்துட்டனே. இதோ இருக்கா எப்பவேணா போலாம்னு நெனச்சதுக்காம்மா இந்தத் தண்டனை” என்று அழ ஆரம்பித்தார். ‘ என் தேவனே உன் தேவி நான். இவ்வேளையில் உன் தேவை என்னவோ?’ என்ற வரி வந்ததும் “நீதான் தேவை. வேறென்ன தேவை எனக்கு. என் ரதி …..என் ரதி” என்று ஏதேதோ பிதற்றிக்கொண்டே இருந்தார். பிறகு சத்தமே இல்லையே என்று திரும்பிப் பார்த்தால் அவர் சரிந்தவாக்கில் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆளரவமற்ற சாலையில் முழு நிலா. நேரத்தோடு வீடுபோய்ச் சேராமல் தன்னைப்போலவே அதுவும் அசமந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தான் கதிரேசன். நீண்ட நேரம் பயணித்த பிறகு பீச் நெருங்கியது. போலீஸ் நிறுத்திக் கேட்டால் என்ன சொல்வது? ஐயா வேறு, ஒருநிலையில் இல்லையே என்றெல்லாம் கவலைப்பட்டபடி வண்டியைச் சீரான வேகத்தில் ஓட்டிப்போனான். நல்லவேளை எந்தப் போலீசும் கண்ணுக்குத் தெரியவில்லை. பீச் வந்ததும், வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கியவன் அசந்து தூங்குபவரை எழுப்பலாமா வேண்டாமா என்று தயங்கி ஒருகணம் நின்றான். இங்கு உட்காரவேண்டும் என்றுதானே இவ்வளவு தூரம்வந்தது என்பது நினைவுக்கு வந்ததும் அவரை நெருங்கி, “ஐயா பீச் வந்துடுச்சு. இறங்குங்க” என்றான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரை எழுப்ப மனசே இல்லாமல்தான் மறுபடி,”ஐயா எறங்குங்க” என்று சத்தமாகச் சொன்னான். லேசாகக் கண்விழித்தவர் எதுவும் பேசாமல் வண்டியில் இருந்து இறங்கி ஒரு பத்தடி நடந்துபோய்ச் சட்டென அப்படியே உட்கார்ந்தார். அடுத்த நொடி இரண்டு கால்களையும் உட்புறமாக மடக்கிவைத்துக்கொண்டு மணலில் படுத்துவிட்டார். அவர் பின்னாலேயே போன கதிரேசன் எதுவும் புரியாமல் அந்த முழு நிலா வெளிச்சத்தில் அலைகளையும், சற்றுத் தள்ளி நிற்கும் வண்டியையும், ஐயாவையும் பார்த்துக்கொண்டே நின்றான்.
ஆறு மாதங்களுக்கு முன்னும் ஐயா இதேபோல் வேறெதற்கோ அடம்பிடித்தது இந்த அகால நேரத்தில் ஒரு பெண்ணைத் தேடி அலையும்போது நினைவில் நிரடியது. இதுமாதிரியான நேரங்களில் காரைவிட்டு இறங்கி சாவியைக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம் என்று எத்தனையோ முறை தோன்றியிருக்கிறது. இந்த மனசு ஒரு நாய்க்குட்டிதான். எப்பவோ ஒரு முறை ஒரு துண்டு பிஸ்கட்டத் தூக்கிப் போட்ட அந்தக் கையின் பின்னாடியே காலத்துக்கும் ஓடும்.
ஆனா ஒரு முறைனு சொல்லிடமுடியாது என்று நொண்டியடித்தது கதிரேசனுடைய இன்னொரு மனசு. எதற்காவது பணம் வேண்டும் என்று கேட்டு கதிர் வாயை மூடுவதற்குள் அள்ளித் தருகிற ஒரு குணம் ஐயாவுக்கு இருந்தது. இதையெல்லாம்விட, கதிர் ஒருமுறை வைரஸ் காய்ச்சல் வந்து படுத்தபோது தினம் கஷாயம், பத்தியச் சமையல் என்று வீட்டுக்கே கொடுத்தனுப்பிப் பார்த்துக் கொண்டதோடு, ஒரு நாளைக்கு நாலு முறை “கதிரு நல்லாருக்கியா? உடம்பைப் பாத்துக்க. சீக்கிரம் நல்லாகிரும், கவலைப்படாதே” என்று ஃபோனில் கூப்பிட்டுப் பேசினார். கதிரேசனின் மனைவி, “இல்ல, தெரியாமதான் கேக்குறேன். இங்க நான் ஒருத்தி எதுக்கு இருக்கேன்?” என்று சிரிப்பாள். கதிர் முகமெல்லாம் பெருமையோடு “ஐயா அப்படிதான். விடு” என்றதும், “ஓ! என்னா பாசம்? நீங்க நல்லானாதான அவர் நிகழ்ச்சிக்குப் போகமுடியும். இப்பவே எவ்ளோ நஷ்டமோ? இல்லனா எஜமானுங்களுக்கு என்னிக்கு வேலக்காரங்க வலி கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு?” என்றாள். அப்படியும் இருக்கலாம். இருக்கட்டுமே. “நெய்யி முந்திரி திராட்சைனு போட்டுத் திரட்டி எடுக்கறப்ப ஊடே மணக்குற கேசரியில்கூடத்தான் நல்லா இனிக்கணும்னு ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கிறோம். அதுமாதிரிதான்” என்றவனிடம், “ஐய்யடா! பாத்து. ரொம்பத்தான். ஏதோ ஒரு சொக்குப் பொடி இருக்கு உங்க ஐய்யாகிட்ட” என்று அழுத்திச் சொன்னவள் மறுபடி சிரித்தாள். அவனுக்கும் சிரிப்பு வந்தது.
கல்லூரி ஒன்றில் ஏதோ இலக்கிய விழாவில் பேசுவதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஐயா பேசப் பேச கரகோஷம் எழுப்பிய மாணவிகள் நிகழ்வு முடிந்ததும் தனியாக வந்து பேசியதையும், ஆட்டோகிராஃப் வாங்கியதையும் மரத்தடியில் நின்ற காருக்குள் உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். மாலை ஆறு மணிக்கு அறைக்கு வந்துவிட்டார்கள். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஐயா, திடீரென்று “கதிரு. நீ போய் ஒரு பொண்ணக் கூட்டி வா” என்றபோது அதிர்ந்து போனவனாக, ஒருவேளை அவர் வேறு ஏதாவது சொல்லி, தான் சரியாகக் கவனிக்கவில்லையோ என நினைத்து “என்னங்கய்யா?” என்று மறுபடி கேட்டான்.
“உனக்குக் காது என்ன நொள்ளையா? இலக்கியம் தெரிஞ்சவளாப் பாத்து ஒரு பொண்ணக் கூட்டி வா”
வேலைக்குச் சேர்ந்த இத்தனை வருடங்களில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. அடிச்ச சரக்கு எதும் சரியில்லையா? இல்லையே. வழக்கமான சரக்கு, வழக்கமான அதே அளவு. நான்தானே ஊற்றித் தந்தேன். இதோ கொஞ்ச நேரத்தில் பாட்டுக் கேட்டபடி மட்டையாகிடப் போறாரு. ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைத்தவன் எண்ணத்தில் “கதிரூ. நீ கெளம்பல?” என்ற குரல் மண்ணைப் போட்டது.
கதிர் எப்போதும் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதால் அவனுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளப் பெரிதாக யாரும் கிடையாது. சாதாரணமாக எதாவது தகவல் வேண்டும் என்றால் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதை என்னவென்று கேட்பது?
சொந்த ஊரில் என்றால்கூட முயற்சி செய்யலாம். யாரையுமே தெரியாத இந்த ஊரில் உதவி என்று, அதுவும் இதைப்போய் யாரிடம் கேட்பது? யோசித்து யோசித்து மண்டை சூடானது. இதென்ன ஈனப் பிழைப்பு? நீங்களாச்சு உங்க வேலையாச்சு னு போய்விடலாமா? கழுத்தில் இருந்த சங்கிலியைத் திருகிக்கொண்டே யோசித்தான். அந்தச் சங்கிலி அவன் கல்யாணத்துக்கு வந்து தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி ஐயா போட்டதுதான். இந்த நெனப்பு இப்ப ஏன் வந்து தொலையுது? ஐயா வேணாம்ங்க னு போய்ச் சொல்லிவிடலாமா? “அமுது அமுதுனு சொல்வீங்களே, அந்தத் தமிழை ஊர் உலகமெல்லாம் பேசி, ஜனம் அண்ணாந்து பாக்குற இடத்தில இருக்கீங்க ஐயா! இது சபைநடுவே அசிங்கப்பட வச்சுடுமே” என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கலாமா என்று பரிதவித்து, இறுதியில் எதற்கும் தைரியமில்லாத கோழையாகப் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.
அப்போதுஅந்த ஊரில்தான் பிரபு இருப்பது திடீரென்று அவனுக்கு
நினைவுக்கு வந்தது. படிப்பு வராமல் பாதியிலேயே கல்லூரியைவிட்டு நின்றுபோனவனைச் சில மாதங்களுக்குமுன் உணவகம் ஒன்றில் எதிர்பாராது சந்திக்க நேர்ந்தது. அவன்தான் கதிரை முதலில் அடையாளம்கண்டு “டேய் கதிரேசா! சென்னையிலா இருக்க? ஆமா, இங்க என்னடா பண்ற” என்று படபடவெனப் பேசினான். தான் தேனியைவிட்டு வந்து சில வருடங்கள் ஆனதையும் ஐயாவிடம் கார் ஓட்டுவதையும் கதிர் சொன்னதும்,”சரிடா. எங்கனயோ நல்லாருந்தா சரி. இதான் என் நம்பர். எப்பனா ஃபோன் பண்ணு” என்று தந்த எண்ணைத்தான் இப்போது தன் மொபைலில் இருந்து தேடி எடுத்து அழைத்தான் கதிர்.
வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகச் செய்தி ஒலித்தது. இணைப்பைத் துண்டித்துவிட்டுக் காத்திருந்தான். இரண்டு நிமிடங்கள் கடந்தன. பிரபு அழைப்பானா? தான் மறுபடி கூப்பிட்டால் தவறாக நினைத்துக் கொள்வானா? அவன் அழைக்கவில்லை என்றால் என்ன செய்வது? அழைத்து முடியாதென்றால்? வேறு யாரைக் கேட்கலாம்? இந்தாளுக்கு இந்த வயசுல இது தேவையா? ஊர் உலகத்தில் அவருக்கிருக்கும் பேருக்கு இது தகுமா? நொடிக்கு நாலு கேள்விகள் என்று தலைக்குள் அதிவேக ரயில் ஓடுவதுபோல தாறுமாறாக யோசனைகள் போய்க்கொண்டிருந்தபோது பிரபுவே கூப்பிட்டான்.
தயங்கித் தயங்கி பிரபுவிடம் விஷயத்தைச் சொன்னதுமே பிரபு “டே நீ என்றா இப்படி ஆகிட்ட” என்றதைக் கேட்டுப் பதறியபடி அவசரமாக,”ஐயியோ. இது ஐயாவுக்காக.வேற வழியில்லாமதான் உன்னக் கேக்குறன்” என்றான் கதிர்.
சில நொடிகள் அமைதியாக இருந்த பிரபு, “சரி. ரெண்டு பொண்ணுங்களோட ஃபோட்டோ, ஃபோன் நம்பர் வாட்சப்பில் இதோ அனுப்புறன்” ரெண்டு டீ பார்சல் என்பதுபோல வெகு சாதாரணமாக அவன் சொன்னதைக் கேட்டதும், “நீங்க ஒரு பேக்கு. ஆனா அதான் எனக்குப் பிடிக்குது” என்று தன்னைக் கொஞ்சுகிற தன் மனைவியின் சொற்கள் கதிருக்கு நினைவுவந்தன.
கதிர் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “கதிரு லைன்ல இருக்கியா? வேணுமா என்ன? தெளிவா சொல்லு” என்றபோதுதான் ஐயா சொன்ன ‘இலக்கியப் பரிச்சயம்’ நினைவுக்கு வந்தது. இதைச் சொன்னதும்தான் அதிர்ச்சி அடைந்தான் பிரபு.
“யே மச்சா, இன்னா? வெள்ளாட்றியா? நானே ஏகப்பட்ட டென்சன்ல இருக்கேன்”
“பிரபு, நான் என்ன பண்ணட்டும். ஐயா கேக்குறாங்க”
“உங்கய்யா தாலிகட்டிக் குடுத்தனம் நடத்தப் பொண்ணு தேடுறாராமா? போடா….எதனா சொல்லிடப் போறேன்”
“டே டே! கொஞ்சம் கருணை வைடா. எனக்கு உன்னத்தவிர யாரடா தெரியும்” என்று கெஞ்சியதும் சிறிது தணிந்த பிரபு, “சரி ஃபோன வை. நான் யோசிக்கணும்” என்றான்.
கதிர்,”கொஞ்சம் சீக்கிரமாடா” என்றதற்குக் கோபமாகப் பிரபு அலைபேசி அழைப்பைத் துண்டித்ததுதான் பதிலாகக் கிடைத்தது.
செய்வதற்கு ஏதுமற்றுக் காத்திருக்கமட்டும் விதிக்கப்படுவதின் கொடுமை கதிருக்குப் பழக்கமான ஒன்றுதான். ஆனால் இன்றைய பயணத்தில் தனக்குத் ஒதுக்கப்பட்டிருப்பது நரகத்தின் அப்பர் பெர்த்போல என்று நினைத்துக்கொண்டான்.
மறுபடி அலைபேசித் திரையில் பிரபு என்ற பெயர் ஒளிர்ந்தபோது உயிரே திரும்பிவந்தது போலிருந்தது.
“நான் பேசிட்டேன். அந்தப் பொண்ணு நம்பர் அனுப்பறேன். லொகேஷன் ஷேர் பண்ணிடு. திரும்ப இது சம்பந்தமா என்னைக் கூப்பிடாத” என்ற அடுத்த நொடி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விடுதியின் ரிசப்ஷனில் காத்திருந்தவனுடைய ஃபோன் ஒலித்தது. புது எண். எடுத்தால், ஒரு பெண் குரல், “ஹலோ கதிருங்களா?” நான் வந்துட்டேன். ரிசப்ஷனில் நிக்கிறேன்” என்றதும் நிமிர்ந்தவன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் ஆர்வம் தாளாமல் அவளைக் கூர்ந்து பார்த்தான். சராசரி உயரத்துடன் இருந்தவளுக்கு வயது முப்பதுக்குமேல் சொல்லமுடியாது. முகம் திருத்தமாகவும், உடல்வாகு, பார்த்த கண்ணை எடுக்கமுடியாது என்பார்களே, அப்படி இருந்தது. ரிசப்ஷன் இருக்கையில் இருந்து எழுந்து தன்னை நோக்கி வந்தவனைப் பார்த்தபடி எந்த உணர்ச்சியுமற்ற முகத்துடன் நின்றாள். அவன், “அது வந்து….பிரபு சொன்னது….” என்று சொல்லிவிட்டுத் தயங்கவும், “ஆமா. எந்த ரூம்?” என்றாள். அவன் தலையசைத்தபடி முன் செல்ல, அவள் பின்தொடர்ந்தாள்.
கதிர் குமிழைத் திருகியதும் கதவு திறந்தது. விசாலமான அறையில், விருந்தினர் வரவேற்பு அறையாக வடிவமைக்கப்பட்டிருந்த முன்புறப் பகுதியைக் கடந்தால் உள்ளே மிகப் பெரிய படுக்கையறை. கதிர் அவளை வரவேற்பறை இருக்கையொன்றில் உட்காரவைத்த பிறகு ஐயாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பலாம் என்று உள்ளே சென்றான்.
“எது…கெளம்புறயா? திரும்ப அந்தப் பொண்ணு தனியாப் போகுமா?”
“ஐயா, வந்தமாதிரியே ஆட்டோவோ வாடகைக் காரோ பிடிச்சுப் போய்க்கும். நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்”
“இந்த இராத்திரி நேரத்துல இங்கிருந்து தனியா போயி எதாவது ஏடாகூடமாயிட்டா, என் பேர் இல்ல கெடும். நீ அப்படியே ஹால்ல இரு. ரொம்பப் போரடிச்சா ஹோட்டல் ரிசப்ஷன்ல உக்காரு”
மறுபடி மறுத்தும் ஐயா ஏற்றுக்கொள்ளாமல்போகவே முகத்தைத் தொங்கப்போட்டபடி வெளியே வந்தவன் அவளிடம், “உள்ளே போங்க. ஐயா வரச் சொன்னாரு” என்றான். கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளும்போது விருப்பமா என்றா கேட்கும் விதி என்று மனங்குமுற ரிசப்ஷனில்போய் உட்கார்ந்தான். அரைமணி ஆகியிருக்கும். ஐயா அலைபேசியில் அழைத்து “ரெண்டு காஃபி வாங்கிவா” என்றதும், இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறோம் என்று நினைத்தபடியே, “ரெண்டு காஃபி பார்சல் தாங்க” என்று சொல்லிவிட்டு விடுதியின் பக்கத்தில் இருந்த தேநீர்க் கடையில் காத்திருந்தான் கதிர்.
காபி வாங்கிக்கொண்டு கோப்பைகளோடு அறைக் கதவைத் தட்டிவிட்டு நின்றான். ஐயா, “வா வா. என்னிக்குமில்லாத பழக்கமா எதுக்கிப்பக் கதவத் தட்டிக்கிட்டு வெளிய நிக்கிற?” என்றார். அவரைத் திரும்பியே பார்க்காமல் தொலைக்காட்சி அருகே இருந்த மேஜையில் கோப்பைகளை வைத்து காபியை ஊற்றியவன் எப்படியும் ஐயாவின் கையில் காபியைத் தந்துதானே ஆகவேண்டும் என்ற யோசனை வந்ததும் மனதில் ஏற்பட்ட கொதிப்பை அடக்கிக்கொண்டு திரும்பினான். கட்டிலின் ஓரத்தில் ஐயாவின் பெட்டி திறந்திருக்க, நிறைய புத்தகங்கள் தலைக் குப்புறக் கிடக்க, தலையணையைச் சுவருக்கு முட்டுக் கொடுத்தபடி மூக்குக் கண்ணாடியுடன் ஐயா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். “இங்க பாருங்க. இதுகூட உங்களுக்குப் பயன்படும்” என்று கட்டிலுக்கு நெருக்கமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவள்
ஒரு நூலை எடுத்து அவரிடம் தருவதைப் பார்த்துத் திக்பிரமையோடு அசையமுடியாது நின்றான் கதிர்.
“குடு கதிரு. பாவம் இந்தப் பொண்ணு ரொம்ப நேரமா எனக்காகக் குறிப்பு எடுக்குது. நாம காலையில நிகழ்ச்சிக்குப் போனமே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்ட்ட பேசி, அந்தக் கல்லூரியில் இருந்து ஒரு பொண்ணக் கூட்டியாரச் சொன்னா நீ வேற யாரையோ கூட்டி வந்திருக்க. பரவாயில்லை. இந்தப் பொண்ணுக்கும் இலக்கிய வாசனை கொஞ்சம் இருக்கு. அதனால்தான் வேலை சுளுவா முடியுது. சரி. நீயும் வேணா கொஞ்சம் குடி” என்றபடி தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அந்தப் பெண் இவனைப் பார்த்து உதடு விரித்து மிக லேசாகச் சிரித்தது போலிருந்தது. இருவருக்கும் காபியைத் தந்த பிறகு சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.
இந்தாளைக் கடைசிவரை புரிந்துகொள்ளமாட்டேன்போல.. என்று முணுமுணுத்தாலும் ஏனோ உரத்து ஒரு சீழ்க்கையடிக்கவேண்டும் போலிருந்தது கதிருக்கு.
000
கயல் எஸ்
வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.
கல்லூஞ்சல் (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன.
பொதுவாக ஆண் எழுத்தாளர்கள்தான் இம்மாதிரியான கதைக்களத்தை எழுதத் துணியமுடியும். ‘கயல்’ என்ற பெண் எழுத்தாளர் முயற்சிப்பது, கதியின் ஆரம்பத்தில் திகைப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசியில் நல்லபடியாகவே முடித்திருக்கிறார்.
அழகான மொழிநடையில், வீணான வட்டார வழக்குகள் இல்லாமல் நல்ல தமிழில், அந்த நாளில் (இராணிப்பேட்டையில்) எங்கள் பாலாற்றில் சலனமற்று ஓடும் அலைகளற்ற நீரோட்டம் மாதிரியாக, கயல் எழுதியுள்ள இக்கதை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
‘கதியின்’ என்பதை ‘கதையின்’ என்று படிக்கவும்.