நான் 2015 க்கு முன்புவரை பெய்ஜிங்கிற்குப் போனதே இல்லை என்பது மிகவும் விந்தையான ஒரு விஷயம். சில வருடங்களாக இந் நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவோ, தன் வகுப்புத் தோழி ஒருத்தியின் திருமணத்தில் பங்கேற்கவோ, இவை எதுவுமே இல்லை என்றாலும் குறைந்தபட்சம் புகழ் பெற்றவர்களின் சடலங்களைப் பார்ப்பதற்காகவாவது தலைநகருக்குச் சென்றிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் ஏதோவொரு காரணத்தால் போகவேண்டி இருந்திருக்கும். ஒரு பயிற்சி வகுப்புக்காக சென்ஷெனுக்கும், வணிக ரீதியான சந்திப்புகளுக்காக செஷ்வானுக்கும் நான் சென்றிருந்தாலும் பெய்ஜிங்குக்குப் போனதே இல்லை. அவ்வளவு ஏன், ஹெபெய் மாகாணம்வரைகூட நான் சென்றதில்லை.

ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய நான் 2013 இல்,என் வேலையை விட்டுவிட்டு புனைகதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் சில கதைகள் நிரந்தரமாக மூடப்படும் சூழலில் இருந்த உள்ளூர் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டன.

பின்னர், நவம்பர் 6, 2015 அன்று, எனது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்தப் பரம்பரை நோயின் விளைவாக ஏற்கனவே என் குடும்பத்தில் ஐந்து அல்லது ஆறு பேர் இறந்துபோய்விட்டனர்.  குயிங் வம்ச வழித் தோன்றல்களின் இறுதி வாரிசும், சீப்பு முதல் சவப் பெட்டிவரை எதையும் சிறப்பாகத் தயாரிக்கக் கூடிய விற்பன்னரான என்னுடைய கொள்ளுத் தாத்தாவும் அதில் ஒருவர்.

சற்றும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று, அவருடைய ஐம்பத்தைந்தாவது வயதில் நெஞ்சு வெடித்து, மரக் குவியலின் நடுவே விழுந்து அவர் இறந்துபோனார். அவருடைய உடலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் விஷம் குடித்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் நினைத்தார்கள். அவர்கள் அவருடைய உடலைக் கூறாய்வு செய்தபோது ஒரு அடி உயரமுள்ள புத்த விகாரத்தைக் கட்டுவதற்குப் போதுமான அளவுக்கு அவருடைய இதயம் மிருதுவான மரச் சீவல்களால் நிறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அப்போதிருந்து, என் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பத்துக்கு மூன்று பேர் என்ற கணக்கில், இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் காலம் மாறிவிட்டது. நாங்கள் யாரும் இப்போது மரவேலை செய்வதில்லை என்பதுடன் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இந்த அறுவை சிகிச்சை என்பது இதயத்தின் அறைகள் ஒன்றினுள் சிறிய இயந்திரம் ஒன்றைப் பொருத்தி, உறுப்புகளில் எதிர்பாராத விதத்தில் பிளவுகள்  ஏற்பட்டு அதனால் விளையக்கூடிய பலவீனத்தைச் சரிசெய்து, இதயத்திற்குள் அசுத்தங்கள் நுழைவதைத் தடுக்க, வடிகட்டி போன்ற ஒன்றை பெரு நாடியில் வைப்பது. இத்தகைய அறுவை சிகிச்சை வசதி என்னுடைய எல்——- நகரத்தில் கிடைக்காததோடு, கிடைக்கும் என்று நான் நம்பிய எந்த இடத்திலும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் வடிகட்டியைப் பொருத்துவதில் உள்ள சிரமம்.   தேர்ந்த தச்சர் ஒருவரின் கைவண்ணத்தைப்போல எல்….. நகரில் இது கைகளாலேயே பொருத்தப்படும். ஆனால் பெய்ஜிங்கிலும் அமெரிக்காவிலும் இதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் எடுத்திருந்த மருத்துவக் காப்பீடு அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆகவே என் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது,உள்ளூர் மருத்துவமனையிலிருந்து எங்களை பெய்ஜிங்கிற்கு அழைத்துச் செல்ல மருத்துவ அவசர ஊர்தி ஒன்றை நான் ஏற்பாடு செய்தேன்.

நாங்கள் மாலை ஏழு மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். அதற்குள் என் அப்பாவின் முகம் லேசாக நீலம் பாரித்ததாகத் தெரிந்ததுடன் அவரால் பேசமுடியாமல் போனது. அவருடைய முகத்தில் பிராண வாயுக்  கவசம் பொருத்தி, ஒருவித நீலநிற நெகிழி உறை போர்த்தி, தூக்குப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.  அவசர சிகிச்சை அறையில் அப்போது பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவர் எங்களுடன் பயணித்தார். சிறிது பருமனாக, அடர் பழுப்பு நிறத் தலைமுடியோடு, மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த அவருக்கு முப்பது வயது இருக்கலாம்.

“அங்கு போய்ச் சேர எட்டு மணி நேரம் ஆகும் என்பதையும் அதுவரை உங்கள் அப்பா தாக்குப்பிடிப்பாரா என்று உறுதியாகச் சொல்லமுடியாது என்பதையும் நான் இப்போதே உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

நான்,”புரிகிறது” என்றேன்.

மருத்துவர், “என் பெயர் சூ. நான் சமீபத்தில் தான் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளேன். இரவு நேரத்தில் நான் பெய்ஜிங்குக்கு அவசர ஊர்தியில் செல்வது இதுதான் முதல் முறை. இவருடைய உடல்நிலை இவ்வளவு மோசமாக இருப்பதால் நாம் ஒன்றிணைந்து செயல்படுவது நல்லது என்று நினைக்கிறேன்” என்றார்.

“நிச்சயமாக” என்றேன்.

“நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நான் சொன்னதற்கு  அர்த்தம், நான் சொல்வதைமட்டும் நீங்கள் செய்தால்போதும் என்பதுதான். புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைத்து நான் சொல்லாத எதையும் நீங்களாகச் செய்யக்கூடாது; முட்டாள்தனமான கேள்விகள் கேட்கக்கூடாது என்பதுதான்” என்றார்.

“நிச்சயமாக” என்றேன். எப்படியும் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் என்னிடம் இல்லை.

மருத்துவர்,” நீங்கள் மட்டும்தான் அவருடன் அவசர ஊர்தியில் பயணிக்கப்போகும் ஒரே குடும்ப உறுப்பினரா?” என்று கேட்டார்.

“ஆமாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லையே?”

“அவசர ஊர்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உடன் வரவேண்டி இருக்கும். ஒரு மருத்துவராக நான் ஸ்ட்ரெச்சரைத் தள்ளலாம். ஆனால் நோயாளியைத் தூக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் ஒருவர் தலையையும் மற்றொருவர் காலையும் பிடித்துத் தூக்க வேண்டியிருக்கும். நான் அவரைத் தூக்கக்கூடாது”

நான், ” இரண்டையும் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

மருத்துவர், “உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். பயம் வேண்டாம். ஒருமுறை நோயாளியின்  குடும்ப உறுப்பினர் ஒருவர் நோயாளியைத் தவறிக் கீழேபோட்டுவிட, நோயாளி இறந்துவிட்டார். இதைக் கேட்க நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் சொல்லியாக வேண்டியது என் கடமை” என்றார்.

நான்,” அதாவது நாம் ஒன்றிணைந்து ஒழுங்காகப் பணியாற்றவில்லை என்றால் என் அப்பா கீழே விழுந்து இறந்துபோக வாய்ப்பிருக்கிறது என்கிறீர்கள். புரிந்தது. சிகரெட் வேண்டுமா?” என்றேன்.

“நான் புகை பிடிப்பதில்லை. நீங்கள் புகைத்த பிறகு வண்டியில் ஏறுங்கள். இடையில் எங்கும் வண்டியை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் நம்மால் பயணிக்க இயலும் என்று நம்புகிறேன்”

ஜன நெருக்கடி மிகுந்த அந்த அவசர சிகிச்சை அறையைவிட்டு நாங்கள் வெளியேறியபோது சிலர் அங்குமிங்கும் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததையும், சிலர் தங்கள் கைகளில் முகத்தைத் தாங்கியபடி அசையாது உட்கார்ந்திருந்ததையும் பார்க்கமுடிந்தது.

கண்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த ஒரு ஆழமான வெட்டுக் காயத்தில் இருந்து இரத்தம் கசிய, இரவு உடையுடனிருந்த இளம் பெண் ஒருத்தி எங்கிருந்தோ திடீரென ஓடி வந்தாள். உறுதியான தலைக் கவசம் அணிந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரைத் தூக்கியபடி அவரது சக ஊழியர்கள் இருவர் எங்களைக் கடந்து சென்றனர். அவருடைய ஒரு கால்,  குழாயைப் போலப் பக்கவாட்டில் வளைந்திருக்க அவர் வலியில் துடித்தபடி முன்னும் பின்னும் வேகமாக அசைவது, அந்தக் குழாயின் மறுபுறம் அவர் குதிக்க முயற்சிப்பது போலிருந்தது. சாலையில் ஏற்கெனவே முழு இருள் சூழ்ந்திருந்தது. நான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட் பாதி தீர்கிற நேரத்தில் அதை ஒரு துப்புரவுத் தொழிலாளி உற்றுப் பார்ப்பதைக் கவனித்ததும் அதை அணைத்துவிட்டு குப்பைக் கூடைக்குள்  போட்டேன்.  பெரும் பிரயாசையுடன் நான் அவசர ஊர்திக்குள் ஏறி உட்கார்ந்ததுமே, ஓட்டுனரைப் பார்த்த மருத்துவர் சூ, “போகலாம்” என்றாள்.

மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் அருகே பழங்களும் இறுதிச் சடங்குகளுக்கான பொருட்களும் விற்பனை செய்த கடைகளின் நீண்ட வரிசையைக் கடந்து நாங்கள் நெடுஞ்சாலையை அடைந்தோம். போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தது. ஓட்டுனர் நிதானமாக வண்டியை ஓட்டினார். பச்சை நிறத்தில் அவர் அணிந்திருந்த மருத்துவமனைச் சீருடை தடிமனாக இருந்த அவருடைய கழுத்துப் பகுதியில் அகலமான கழுத்துப் பட்டையோடு இருந்தது. மருத்துவருக்கும் அந்த ஓட்டுனருக்கும் சிறிது பணம் தரவேண்டும் என்ற விஷயம் அந்த நொடியில்தான் எனக்கு உறைத்தது. இது எனக்கு முன்பே தோன்றாததற்குக் காரணம் இது அவசரமாக ஏற்பாடாகிய பயணம். அத்துடன் இது குறித்து முடிவெடுக்க நான் வெகு நேரம் எடுத்துக்கொண்டேன் என்பதுதான். இதுபோக நான் எப்போதும் வீட்டிலேயே அதிக நேரம் செலவழித்ததால்  ஜனங்களின் நடுவில் வாழவே பழகவில்லை. என் முதுகில் இருந்த பையில் சிறிதும்  நம்பிக்கையற்றுத் துழாவினேன். நான் நினைத்தது போலவே என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பெய்ஜிங் போய்ச் சேரும்போது நான் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை, மற்ற செலவுகளை நினைத்துப் பார்த்தபோது, மனதில் அவநம்பிக்கை அலையடித்தது.

இது பரம்பரை வியாதி என்பதால் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய பாணியில் அதைக் கையாண்டனர். சிலர் எப்போதும் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தனர்; சிலர் நோய் வந்துள்ளதா என்று தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டே இருந்தனர்; சிலர் தமக்குத் தோன்றிய எல்லாக் கருமத்தையும் செய்தும் எந்தப் பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதாவது நாற்பது வயதோ அல்லது அதற்குப் பிறகான சில ஆண்டுகளிலோ, இதய நோயால் சாகாமல் குடித்துக் குடித்துக் கெட்டுப் போன குடலால் தங்கள் உயிர்போகும்வரை மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். என் தாத்தா, தன்னுடைய ஓய்வு நேரத்தில் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு இதை வெல்ல முயன்றார்.

அவருடைய மூன்று மகன்களுக்கும் அவரிடமிருந்துதான் குத்துச்சண்டை மீதான ஆர்வம் வந்திருக்கவேண்டும். அந்த மூவரில் இளையவரான என் அப்பாவுக்கு அதில் மிகக் குறைந்த அளவு திறமையே இருந்தது. எந்தவித விளையாட்டுக்கும் பொருந்தாதபடி அவருடைய உடலின் மேற்பகுதி நீண்டும் கால்கள் சிறுத்தும் இருந்தன. அவருடைய நடையும் மிக மெதுவாகவே இருக்கும். ஆனால் அவர்தான் நீண்ட காலம் பயிற்சி எடுத்தார். *பண்பாட்டுப் புரட்சி நடந்தபோது கிராமத்துக்கு அனுப்பப்பட்டவர் அங்கும் விடாது குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு பிறகு நகரத்துக்கு வந்த பிறகும் அதைத் தொடர்ந்தார். அவருடைய தந்திரம் என்னவென்றால் இதை அவர் ரகசியமாகச் செய்தார் என்பதே. எங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் அவருக்கு குத்துச்சண்டை தெரியும் என்றே தெரியாது. வழக்கமான பணிகளில் ஈடுபடுவதற்கு முன் சில மணிநேரங்கள் பயிற்சி செய்வதற்காகவே தினமும் அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் அவருக்கு இருந்தது. அதேபோல் படுக்கைக்குச் செல்லும் முன்பும் ஒரு சுற்றை முடித்துவிடுவார். இந்த வழக்கத்தை ஒரு நாள்கூட அவர் தவறவிட்டதாக எனக்கு நினைவில்லை. சும்மா பேசிக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. அவர் யாருடனும் நெருக்கமாக இல்லை.

என் தாத்தா உயிருடன் இருந்தவரை, அடிக்கடி என் தந்தையிடம், “ஏய், மூன்றாம் எண்! நீ யாரோடும் பழகாமல் எப்போதும் தனியாகவே இருக்கிறாய். உனக்கு வயதாகும்போது இது உன்னைப் பெரிய பிரச்சினையில் சிக்க வைக்கப் போகிறது” என்பார். என் தந்தை அவருக்கு எந்த பதிலும் சொன்னதில்லை. என் தாத்தா இறந்துபோன பிறகு என் அப்பாவைத் திட்டுவதற்கு யாரும் இல்லை. பொறுமையின் நற்பயன் என்பது இதுதான்.

நான் குழந்தையாக இருந்தபோது,குத்துச்சண்டையின் ஓன்றிரண்டு வகைத் தாக்குதல் முறைகளையாவது எனக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்லி நான் என் அப்பாவை நான் நச்சரிப்பேன்.

அப்பா, “நீ என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

நான்,” ஆட்களை எப்படி அடிக்கவேண்டும், எந்த விதத்தில் ஓங்கி அடித்தால் அவர்கள் அப்படியே கீழே சாய்வார்கள் என்று கற்றுக்கொள்ளவேண்டும்” என்றேன்.

“அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாது” என்றார்.

நான், “அப்படியானால், யாராவது என்னை அடித்தால் நான் எந்த வலியையும் உணராமல் இருப்பதோடு என்னை அடித்தவர்களின் கைகளில் வலி ஏற்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுங்கள்” என்றேன்.

“அதுவும் எனக்குத் தெரியாது. குத்துச்சண்டை குறித்த நம்  புரிதல்களில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அதைப் பற்றி நாம் இனி பேசக்கூடாது என்று நினைக்கிறேன்”

அவர் அப்படித்தான். பெரும்பாலும் அமைதியாக இருப்பவர், ஏதாவது பேசினால் அது மிகவும் தீவிரமானதாக இருக்கும். எனக்கு அப்போது பத்து வயதுதான். அப்படியிருந்தும் அவர் ஒவ்வொரு வார்த்தையையும் மாவு போல நன்கு பொடியாக அரைப்பது போலவும், பழங்களின் செறிவான பகுதியைக் கூழாகும்வரை அடித்துத் துவைத்துச் சுவையற்றுப் போகச் செய்வதுபோல யோசித்து, நிதானமாகப் பேசுவார்.

என்னுடைய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குச் சற்றுமுன்பு நான் அவரிடம், “நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் குத்துச்சண்டை பயிற்சி செய்கிறீர்கள். நான் படிப்பதற்கு அதே அளவு நேரத்தைச் செலவிடுகிறேன். ஏன் நான் செலவிடுவதைவிட நீங்கள் அதிக நேரம் செலவிடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் கல்வியில் சிறப்பாக இருப்பதைவிடவும் நீங்கள் குத்துச்சண்டையில் சிறப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா? ” என்று கேட்டேன்.

அவர்,” நீ படிக்காமல் இருக்கும்போது படிப்பைப் பற்றி நினைப்பாயா? என்றார்.

நான், “வாய்ப்பே இல்லை. வேலை செய்யும்போது வேலை. விளையாடும்போது விளையாட்டு. அவற்றுக்கிடையே ஒரு கோடு இருக்க வேண்டும்” என்றேன்.

“இதுதான் விஷயம்.  நான் குத்துச்சண்டையில் ஈடுபடாதபோதும், என் மனதுக்குள்ளேயே குத்துச்சண்டை இடுவேன். என் இதயம் மட்டுமல்ல, என் சதை, எலும்புகளில்கூட குத்துச்சண்டை கலந்துள்ளது. சில நேரங்களில் நான் என் தூக்கத்தில் குத்துச்சண்டை செய்து, விழிக்கும்போது சோர்வாக எழுவேன். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?” என்றார்.

நான், “அப்படியானால் நீங்கள் குத்துச்சண்டையில் சிறந்தவர் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்? “

அவர் அதைப் பற்றி யோசித்து, “என்னால் முடியாது, ஆனால் ஒரு உருவகத்தை முயற்சிக்கிறேன். ஐந்தாவது மாடியில் இருந்து ஒரு  பூனை கீழே விழுந்து சாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். இதில் பூனை நிரூபிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா?” என்றார்.

நான், “நான் ஐந்தாவது மாடியில் இருந்து எப்போதும் விழமாட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? குத்துச்சண்டை அவ்வளவு சிறப்பானது என்றால், அதை நீங்கள்  ஏன் எனக்குக் கற்பிக்கக்கூடாது?” என்று கேட்டேன்.

அவர், “உன்னிடம் இனி எந்த உருவகத்தையும் கலந்து பேசாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவற்றை உனக்குச் சமாளிக்கத் தெரியவில்லை. அது போகட்டும். நான் ஏன் உனக்கு குத்துச்சண்டை சொல்லித் தரவேண்டும்?”

“ஏனென்றால் நான் உங்கள் மகன்” என்றேன்.

அதற்கு அவர், “இதெல்லாம் ஒரு காரணமா?  நீ என் மகன் என்ற ஒரே காரணத்திற்காக குத்துச்சண்டைப் பயிற்சியோ அல்லது வேறெந்த விஷயமோ நடக்கவேண்டும் என்று நினைக்காதே. நீ பிறந்த பிறகு என்னவாக ஆகப் போகிறாய் என்று நீ பிறப்பதற்கு முன் எனக்குத் தெரியாது” என்றார்.

நான் பொறுமையை இழந்து கோபத்துடன், “சரி. வாருங்கள். இப்போதே என் முகத்தில் குத்துங்கள்” என்றேன்.

அவர், “நீ நினைத்த அடுத்த கணமே என் முட்டியால் உன் முகத்தில் குத்துப்பட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயா, என்ன? என் கைகள் தேவையின்றி யாரையும் குத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. நீ  போய் உறங்கு” என்றார்.

என் தாத்தா தூக்கத்தில் இறந்துபோனபோது அவருக்கு எண்பத்தைந்து வயது. கலாச்சாரப் புரட்சியின்போது ஏற்பட்ட வன்முறையில் என்னுடைய மாமா ஒருவர் இறந்துவிட்டார். பணி ஓய்வுபெற்றிருந்த இன்னொரு  மாமா குழப்பமில்லாத ஒரு வாழ்க்கையைத் தன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். சில காலமாக நான் அவருடன் தொடர்பில் இல்லை.

மருத்துவ அவசர ஊர்தியில், என் தந்தையின் கால் நடுங்கியது.  அவரது காலணிகளை நான் கழற்றியிருக்கவேண்டும் என்று அப்போதுதான் எனக்குத் தோன்றியது. அவருடைய பாதங்கள் மோசமாக வீங்கியிருந்தன. அவர் ஒரு மரத்துண்டைப் போல அசையாமல் அமைதியாகப் படுத்துக் கிடந்தார். அவருடைய இதயத் துடிப்பும் இரத்த அழுத்தமும் அருகில் இருந்த கருவியின் திரையில் தெரிந்தன. அப்பாவுடைய பாதங்களைக் கவனித்த மருத்துவர் சூ தன் ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு பாதமாக நன்கு அழுத்திப் பார்த்தார்.

நான், “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டேன்.

மருத்துவர், “உங்கள் அப்பாவின் பாதங்கள் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கின்றன?” என்றாள்.

நான், “ஏன்? அதனால் என்ன” என்று கேட்டேன்.

“ஒருவருடைய பாதத்தின் அளவுக்குத்தான் அவருடைய இதயம் இருக்கும் என்று சிலர் சொல்வது அர்த்தமற்றது என்றாலும், உன் அப்பாவின் பாதங்கள் உண்மையில் மிகச் சிறியனவாக உள்ளன. அத்துடன் எனக்கு இன்னொரு விஷயமும் புரியவில்லை. அவரை நான் முதலில் பரிசோதித்தபோது அவருடைய உடல் இருந்த நிலைமையை வைத்துப் பார்த்தால் அவருடைய இதயம் இப்போதுவரை துடித்துக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது பார்த்தால் அவருடைய இதயத் துடிப்பு இருபத்தி ஐந்து ஆகவும், இரத்த அழுத்தம் நாற்பதுக்கு எண்பது ஆகவும் நம்ப இயலாத அளவுக்கு அவருடைய உடல்நிலை வெகு இயல்பாக இருக்கிறது. அப்பட்டமாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இந்த நேரத்திற்கு செத்திருக்கவேண்டும்.  எனக்கு இதில் அதிக அனுபவம் இல்லையென்றாலும், முப்பது வருட அனுபவம் வாய்ந்தவர்கள்கூட இது போன்ற சூழலைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை.  சரி. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?”

நான்,”நானா? நான் எந்த வேலையும் செய்யவில்லை” என்றேன்.

“ஏன்?”

நான்,”ஏனென்றால் எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. நான் ஒரு பெரிய சோம்பேறி. இது ஒருவிதமான வியாதியா?” என்று கேட்டேன்.

“நீங்கள் சோம்பேறி இல்லை. சோம்பேறிகள் வழக்கமாக எதற்கும் கலக்கம் அடையமாட்டார்கள். நீங்கள் சோம்பேறி என்று எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு வேலை இல்லை என்றால் பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

“வீட்டில் சும்மா இருப்பேன்”

“நீங்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரா?”

“இல்லை. சில சமயங்களில் சலிப்பு ஏற்படும்போது நான் தட்டச்சு செய்வேன்”

“என்ன தட்டச்சு செய்வீர்கள்? நீங்கள் எழுத்தாளரா?”

நான், “ஆமாம் புனைகதைகள் எழுதுவேன். அது சிறுபிள்ளைத் தனமானவையாக இருக்கும். ஆனால் எனக்கு சிறுகதைகள் எழுதப் பிடிக்கும்”

” உங்களுக்குத் தூக்கம் வருவதுபோல் இருந்தால் நீங்கள் தூங்குங்கள்.  உங்கள் அப்பாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. நான் அவரைப் பார்த்துக்கொள்கிறேன்”

 “உங்களுக்கு எவ்வளவு கடமை உணர்வு!” என்றவன் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மெல்லிய குரலில், “நாம் கிளம்பும்போது பணம் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டேன். அதை நினைத்து வருந்துகிறேன்”

“இது கடமை உணர்வெல்லாம் கிடையாது. நான் வேலைக்குப் புதிது என்பதால் மருத்துவமனையில் எடுக்கப்படும் எந்த முடிவும் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகு எடுக்கமாட்டார்கள். கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து மிக அதிக அளவில் பகலும் இரவும் ஆகப் பணியாற்றி வருகிறேன். முயற்சி செய்தாலும் என்னால் இப்பொழுது தூங்கமுடியாது. அதேசமயம் எனக்குக் களைப்பு ஏற்பட்டால் நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் என்னால் கண் விழித்திருக்கமுடியாது. நீங்கள் ஒரு எழுத்தாளர் என்கிறீர்கள். இதுபோன்ற வினோதமான சிந்தனைகள் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?”

“அதுமட்டுமின்றி உங்கள் அப்பாவின் உடல்நிலை இப்படி மோசமாக இருக்கும்போது, மருத்துவத் துறையில் பணிபுரியும் எவரும் அவரை நன்கு கவனித்துக்கொள்ளவே விரும்புவார்கள். இது பரம்பரை நோய் என்று சொன்னீர்களே?”

நான்,”ஆம். பரம்பரையாக வரும் மாரடைப்பு” என்றேன்.

“உங்கள் குடும்பத்தில் இது வேறு யாருக்கு இருக்கிறது?”

நான்,”இது இடையில் ஒரு தலைமுறையை விட்டுவிடும். என் கொள்ளுத் தாத்தா இதனால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால் என் தாத்தாவுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர் நன்றாக இருந்தார்” என்றேன்.

அவர்,”உங்கள் கொள்ளுத் தாத்தா 1900 வாக்கில் பிறந்தவராக இருப்பார்தானே. அவர் எப்போது இறந்தார்?” என்று கேட்டார்.

நான்,” அவர் இறந்தபோதுஎன் தாத்தாவுக்கு இருபது வயது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்”

மருத்துவர் சூ, “நோயைக் கண்டறிந்தது சீனரா அல்லது மேற்கத்திய மருத்துவரா?”

நான்,  “எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நிச்சயமாக இதய நோயால் தான் இறந்தார்” என்றேன்.

அவர்,” உங்களால் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லமுடியும்?” என்று கேட்டார்.

“நான் அவருடைய வாரிசு. எனக்கு நிச்சயமாகத் தெரியும். இது எங்கள் குடும்ப வரலாறு”

மருத்துவர் இதற்கு பதிலளிக்கவில்லை. நான் உரையாடலைத் தவறான திசையில் எடுத்துச் சென்றுவிட்டது எனக்குப் புரிந்தது. நான் ஓட்டுனரைத் திரும்பிப் பார்த்தேன். ஆனால் அவருடைய கழுத்தின் பின்புறம் இருந்த  கழுத்துப் பட்டைமட்டுமே என் கண்களில்பட்டன. நாங்கள் பேசியது எதையும் அவர் கேட்டதாகத் தெரியவில்லை. திடீர்த் திருப்பங்கள் இல்லாமல் வாகனம் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. ஆனாலும் நாங்கள் பல வேகமான வாகனங்களை முந்திச் சென்றோம்.

வெளியே முற்றிலும் இருட்டாக இருந்தது. சுற்றிலும் இருந்த மலைகளின் விளிம்புகளைத்தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. வாகன ஒலிப்பான்களின் ஓசை இல்லை, வானொலிச் சத்தம் இல்லை. என் அப்பாவின் தலைக்குமேல் தொங்கும் ட்ரிப் கருவியில் இருந்து  அவரது நரம்புகளில் இறங்கிக் கொண்டிருந்த மருந்துத் துளிகளைப் போல அந்த இரவுக்குள் அமைதியாக ஊடுருவியபடி நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம்.

அடுத்த ஒருமணி நேரத்துக்குள் எனக்குத் தூக்கம் வர ஆரம்பித்தது. நான் வீட்டில் இருந்திருந்தால், இரவு வெகுநேரம் விழித்திருப்பேன். புத்தகத்தைப் புரட்டுவது அல்லது ஒன்றிரண்டு பத்திகளை எழுதுவது அல்லது இசையை அசைப்பது போன்ற வேலைகள் எதுவும் இல்லாதபோதும் நான் பெரும்பாலும் அதிகாலை இரண்டு மணிவரை விழித்திருந்து பிறகு தாமதமாக எழுந்திருப்பேன். என் அப்பா சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரம் எழுந்துவிடுவார். இரவில் சில சமயங்களில்  இருமல் வந்தாலும் அவர் குறட்டை விட்டதில்லை. பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவர் மூச்சுக்குழாய் அழற்சியால் பலகாலம்  பாதிக்கப்பட்டிருந்தார். இரவில் அவருக்கு இருமல் வந்தாலும் அதனால் அவர் கண் விழித்து எழுந்து நான் பார்த்ததே இல்லை. அது அவருடைய உறக்கத்தின் ஒரு பகுதியாக, ஒருவர் தூக்கத்தின் இடையே புரண்டு படுப்பதுபோல இயல்பானதாக மாறியிருந்தது.

அவர் எப்போதும் தனது தோள்களை இறுகப் பிடித்துக்கொண்டு உறங்குவார். படுக்கையில் நிறைய ஆட்கள் படுத்துக்கொண்டு அவரை நெருக்குவதுபோல மிகச் சிறிய அளவு இடத்தைமட்டுமே ஆக்ரமித்தபடி சுருண்டு படுத்திருப்பார். ஏன் இப்படி உறங்குகிறீர்கள் என்று கேட்டால் தான் குத்துச்சண்டை பற்றி கனவு கண்டதாகக் கூறுவார். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது.

கோடையில், அவரது போர்வை அவரது கால்களுக்கு இடையில் கிடக்கும். அத்துடன் சட்டை அணியாதிருப்பதை விரும்பாத என் அப்பா எப்போதும் கை வைக்காத மஞ்சள் நிற டிஷர்ட் ஒன்றை அணிந்திருப்பார். குளிர்காலத்தில், போர்வையைக் கழுத்துவரை இழுத்துப் போர்த்தியிருப்பார். ஆனாலும் அவர் அதேபோல் சுருக்கிக்கொண்டு படுத்திருப்பது நன்கு  தெரியும்.

லேசாகப் புரண்டுகொண்டிருந்த நான் விழித்தெழ பத்து நிமிடங்களுக்கு மேலாகி இருக்கும். கண் விழித்து நினைவு தட்டியதுமே நான் குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்டேன்.அந்தப் பத்து நிமிடங்களில் அவர் இறந்துவிட்டிருந்தால் என்ன செய்வது? இந்தக் குட்டித் தூக்கம்  பல வருடங்கள் நீடித்து முழு உலகமுமே மாறிவிட்டது போல் தோன்றியது.

மருத்துவர் சூ என் அப்பாவின் கைகளைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.  முதலில் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்த்தவர பிறகு அருகில் சென்று அவருக்கு அருகில் சம்மணமிட்டு அமர்ந்தபடி பார்த்தார்‌

நான்,  “என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.

மருத்துவர் சூ, “உங்கள் அப்பா பியானோ வாசிப்பாரா?”என்று கேட்டார்.

நான்,” இல்லை, அவர் ஒரு தொழிலாளி” என்றேன்.

“அவருடைய விரல்கள் அசைவதைப் பாருங்கள்”

நான் தூக்குப் படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தேன். அவருடைய இடது கை ட்ரிப் அருகே நங்கூரமிடப்பட்டாற்போல அசையாமல் இருந்தது. அவரது வலது ஆள்காட்டி விரலில் காட்சித் திரையுடன் இணைக்கப்பட்ட க்ளிப் இருந்தது. அவர் தனது கட்டைவிரலால் கிளிப்பைத் தள்ளிவிட்டார். பிறகு கட்டை விரல் தொடங்கி சுண்டு விரல்வரை அவருடைய ஐந்து விரல்களும் மெத்தையின் விளிம்பில் தட் தட் என விடாமல் தட்டின. க்ளிப்பைத் தள்ளிவிட அவை பனிரெண்டு முறைகளுக்குமேல் முயன்று தோல்வியுற்றன.

டாக்டர் சூ மானிட்டரைப் பார்த்தார். “அவருடைய இதயத்துடிப்பு இந்த விரல்களின் வேகத்துக்கு ஈடாகப் குறைந்து வருகிறது. என்னதான் நடக்கிறது?” என்றார்.

நான், “எனக்கு தெரியாது” என்றேன்.

அவள் சிறிது நேரம் காத்திருந்த மருத்துவர் அப்பாவுடைய கை மீண்டும் நகரப் போவதில்லை என்பதை உறுதிசெய்த பின், கிளிப்பை மீண்டும் அதனுடைய இடத்தில்வைத்தார். மீண்டும் தன்னுடைய இடத்தில் அமர்ந்தவர்,  “இங்கு என்ன நடக்கிறது?” என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

நான் , “என் அப்பா சிறுவயதிலிருந்தே குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்” என்றேன்.

“என்ன வகையான குத்துச்சண்டை?”

நான், “அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் குத்துச்சண்டையில் எப்போதும் ஒரே பாணிதான். அவர் தினமும் காலை ஒரு முறை மாலை ஒரு முறை எனச் சில மணிநேரங்கள் பயிற்சி செய்வார். எப்போதும் ஒரே மாதிரியான நகர்வுகள்தான் இருக்கும்” என்றேன்.

“பூங்காவிலா?”

நான், “இல்லை, அவருடைய படுக்கையறையில்” என்றேன்.

“படுக்கையறையில் தற்காப்பு கலைப் பயிற்சியா?”

“ஆமாம். அவருக்குக் கோடை குளிர்காலம் எல்லாம் ஒன்றுதான்”

மருத்துவர்,”சரி, இது நரம்புப் பிடிப்பாகவோ அல்லது அனிச்சைச் செயலாகத் தன்னையறியாமல் விரல்களை அசைப்பதாகவும் இருக்கலாம். இது அசாதாரணமான விஷயமல்ல. நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தந்தை இறந்து கொண்டிருக்கிறார். அவரது இதயம் பலவீனமடைந்து வருகிறது. பெய்ஜிங்கிற்குச் செல்வோமா என்பது உறுதியாகத் தெரியவில்லை” என்றார்.

“ஆனால் அவரது விரல்கள் மிகவும் சீராக நகர்ந்தனவே” என்றேன்.

அவர், “அது ஒரு விஷயமல்ல. சில சமயங்களில் நம் உடல்கள் உருமறைப்புப் போல இப்படிச் செய்யக்கூடியவை. நீங்கள் உங்களை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

“நீங்கள் சொல்வது போல் ஏதாவது ஆகிவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும்? “

“வண்டியை அப்படியே மறுபடி திருப்பவேண்டியதுதான். அவருக்கு இப்போது வலி இல்லை என்று நினைக்கிறேன்”

நான், “இதை எப்படி வைக்க வேண்டும்?” என்று கேட்டேன்.

“இது ஒரு பலூன். எப்படி பலூனுக்குள் இருந்து காற்று எப்படி இறங்குகிறதோ, அது போலத் தான் இதுவும்”

நான், “இந்த ஒப்பீடு எனக்கு வலி தருகிறது”

“உங்கள் வலியும் அவருடைய வலியும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்”

நான், “ஆம், உங்களால் இரண்டையும் குறைக்க எதுவும் செய்ய முடியாது” என்றேன்.

அந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளியேறிய நொடியே அதற்காக நான் வருந்தினேன். அந்த மருத்துவரால்  எதாவது செய்யமுடியும் என்று நான் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அவர் அவசர அறையில் பணிபுரியும் ஒரு மருத்துவர்மட்டுமே. அவர் எங்களுக்கு ஒரு அந்நியர். அவர் இந்த வாகனத்தில் இந்த நொடியில் என்னுடன் பயணிக்க என்ன காரணம் என்று கடவுளுக்கே தெரியும்.

நான், ” மன்னித்துவிடுங்கள், அது உங்கள் வேலை இல்லை” என்றேன்.

என் தந்தையின் போர்வையை உயர்த்திய மருத்துவர் சூ, “மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை . நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எனக்கு ஒரு கை கொடுங்கள். அவருடைய மூத்திர உறையை மாற்ற வேண்டும்” என்றார்.

நான் ஜன்னல் வழியே சாலையைச் பார்த்தபோது போக்குவரத்து குறைவாக இருப்பதைக் கவனித்தேன். அப்போது அதிகாலை மூன்று மணி இருக்கலாம். அநேகமாக ஹெபெய் மாகாணத்தை அடைந்திருப்போம். கடந்த ஒரு மணி நேரமாக நான் என் தந்தையின் இறுதிச் சடங்கைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.என் முன் இருக்கும் எண்ணற்ற பணிகளை யோசித்தால் உண்மையில் தலை வலித்தது.என் தந்தை தன் படுக்கையில் எப்போதும் வைத்திருந்த உள்ளங்கை அளவிலான ஒரு புத்தகத்திலிருந்து  தொலைபேசி எண்களை எடுத்து பல ஆண்டுகளாக நான் பேசாதிருந்த எங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

அரசு நடத்திய தொழிற்சாலையில் இருந்து ஓய்வு பெற்ற உடனே ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்ட் பூசும் வேலையில் சேர்ந்துவிட்ட அப்பா நோய்வாய்ப்படும்வரை அங்கு பணியாற்றினார். நான் இப்போது அவருடைய சக ஊழியர்களை அணுக வேண்டும். அவர்கள்தான் அவருடைய இறுதிச் சடங்குக்கான செலவுகளுக்குப் பணம் கொடுப்பார்கள். ஊர்வலத்திற்காகச் சில வாகனங்களைவேறு ஏற்பாடு செய்யவேண்டும்.  அந்தச் சிறிய தொழிற்சாலையின் அலுவலகத்தில், அலட்சியமான முகபாவம்கொண்ட நடுத்தர வயது ஆட்களுடன் அமர்ந்து நான் இதைப் பற்றி விவாதிப்பதைக் கற்பனை செய்ததும் மேலும் அதிக மன அழுத்தத்தை உணர்ந்தேன். இதையெல்லாம் நான்மட்டுமே தனியாகச் செய்யவேண்டும்.

இந்த இரவில் என்னுடன் குறைந்தபட்சமாக இரண்டு பேர் இருந்தனர். என் தந்தையால் தன் பங்குப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். காரணம், எந்த நிலையில் இருந்தாலும், அவர் எப்போதும் என் வாழ்க்கையில் பங்கேற்பார். அத்துடன் அவர் இறந்துவிட்டால்  என் வாழ்க்கையில் நான்மட்டுமே எனக்காக எஞ்சியிருப்பேன் என்பது சுமையளிப்பதாக இருந்தது. ஆனால்  சுதந்திரம் என்பது இப்படித்தான் இருக்கும்போல என்று யூகித்தேன். ஆனால் அது நிகழும்போது நான் அதை எழுதவேண்டுமா என்ன?  என் அப்பா என் எழுத்தைப் பற்றி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை. அவர் என் கதைகளில் ஒரு வார்த்தையைக்கூடப் படித்ததில்லை. ஆனால் நான் என்ன  அவருக்காகவா எழுதினேன்? இதற்கு இல்லை என்பதே பதில் என்றால், இப்போது எனக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகிறது?

நிச்சயமாக நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் அவருக்காக இதைச் செய்யவில்லை. அவரைத்தவிர உலகில் உள்ள அனைவருக்காகவும் எழுதுகிறேன். ஆனால் இந்த எண்ணவோட்டங்கள் பாலைவன பள்ளத்தாக்கு ஒன்றில் இருந்து யாரோ போடும் கூச்சலின் எதிரொலிகளைப்போல என் தலைக்குள் ஓசை எழுப்பின.

விடியற்காலை மூன்றரை மணியளவில், டாக்டர் சூ,” எனக்கு லேசாகத் தூக்கம் வர ஆரம்பிக்கிறது” என்றார்.

நான், “சிறிது  நேரம் கண்ணை மூடி ஓய்வெடுங்கள்” என்றேன்.

” நான் அரை மணிநேரம் தூங்குவேன். ட்ரிப் ஏறுவதையும் அவரது இதயத் துடிப்பையும் கண்காணிக்க வேண்டும். ஏதாவது சிக்கல் என்று தோன்றினால் என்னை எழுப்புங்கள்”

நான், “சரி” என்றேன்.

மருத்துவர் தன் கையைத் தலையணையாக வைத்தபடி இருக்கையில் படுத்துக்கொண்டதுமே உறங்கிவிட்டார்.

மணி நான்கு ஆகியும் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் நான் அவரை எழுப்பவில்லை. காரணம் என் தந்தையின் முக்கிய உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் தென்படவில்லை; மருத்துவர் கணித்தபடி அவருடைய இதயத் துடிப்பு குறையவில்லை. எனக்குச் சோர்வு எதுவமில்லை. ஆனால் நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் இருந்ததால் கழுத்து வலித்தது.   சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியின் குழாயை யாரோ இழுத்துத் திறப்பது போலச் சிறுநீர் கழிக்கும் உந்துதல் திடீரென எழுந்தது.

மெல்லிய குரலில் ஓட்டுனரிடம், “நான் சிறுநீர் கழிக்கவேண்டும். வழியில் எங்காவது ஓய்வறை இருக்கிறதா?”  என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லாமல் சாலையை நோக்கியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். என்னால் சிறுநீரை அதற்கு மேல் அடக்கமுடியும் என்று தோன்றவில்லை.

நான் சிறிது முன்னால் சென்று,” ஐயா, உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் நான் கழிவறையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்” என்றேன்.

அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. எனது கோரிக்கை அவருக்குக் கேலிக்குரியதாக இருந்ததுபோல.

நான் அவருடைய தோளைத் தட்டி, “ஐயா, நான் சிறுநீர் கழிக்கப் போகிறேன், உங்களால் வண்டியை நிறுத்தமுடியுமா?” என்று கேட்டேன்.

அப்போதுதான் அவருடைய கண்கள் மூடியிருந்ததைப் பின்பக்கக் கண்ணாடிவழியே பார்த்துத் திடுக்கிட்டேன். இல்லை. நான்தான் தவறாக நினைத்திருக்கவேண்டும். ஒருவேளை அவருடைய கண்கள் மிகச் சிறியனவாக இருக்கின்றனவா? நான் முன்னோக்கிச் சாய்ந்து பார்த்தேன். இல்லை. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் சமமாகச் சுவாசித்தபடி, லேசாக குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்.

அவருடைய முகத்தில் இருந்த ஒவ்வொரு தசையும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் கிரீஸின் மெல்லிய பளபளப்பு முகத்தில் ஒளிர அவருடைய கைகள் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தன. சாலையில் இருந்த ஒரு சிறிய வளைவை  ஆக்சிலரேட்டரையும் க்ளட்சையும் மிதித்துச் சிறு தயக்கமும் இன்றிக் கடந்து வாகனத்தை ஓட்டினார். அவருடைய தோளைப் பிடித்து உலுக்கியபோதும் அவர் கண்விழிக்கவில்லை. அடுத்து நான் அவரது கழுத்தின் பின்புறத்தைக் கிள்ளினேன். ஆனால் அப்போதும், எதுவும் நடக்கவில்லை. பிட்டத்தில் ஊசி குத்தியது போல் லேசாகத் துள்ளினார். அவ்வளவுதான். அப்போது நாங்கள் மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். என்னால் அவரை அசைக்கக்கூட முடியவில்லை.

இறுதி வகுப்பின் மணி அடிப்பதற்காகக் காத்திருக்கும் அடங்காத ஒரு  பள்ளிக்குழந்தையைப் போல் என் சிறுநீர்ப்பை தவித்தது. என் அப்பாவின் அருகே சென்று, போர்வையைத் தூக்கி, நன்றாக உலர்ந்து, சற்றுச் சூடாக இருந்த மூத்திரப் பையை வெளியே எடுத்தேன். மருத்துவர் சூவைப் பார்த்தேன். அவர் அப்போதும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.

நான் என் காற்சட்டையைக் கீழே இறக்கியதும் திரவம் மூத்திரப் பைக்குள்   விரைவாக உறிஞ்சப்பட்டது. இன்னமும்கூட சிறுநீர் பெய்யலாம் என்ற நிலையில் நான் இருந்தாலும், அதற்குள்ளாகவே சிறிய பருத்திப் போர்வை போல் மாறியிருந்த மூத்திரம் பை முன்பை விட மிகவும் கனமாக இருந்தது. நான் அதை மீண்டும் என் தந்தையின் பிட்டத்தில் அடைத்தேன். தளர்ந்துபோயிருந்த  கால்களைப் பார்த்தபோது அவர் பிறந்தபோதிருந்து அவருடைய வலது தொடையில் இருக்கும் சிவப்பு நிற அடையாளக் குறி என் கண்ணில்பட்டது. நான் குழந்தையாக இருந்தபோதே அதைப் பார்த்திருந்தாலும் அதை மறந்துவிட்டிருந்தேன்.

மீண்டும்  கால்சட்டையை  மாட்டிக்கொண்ட பிறகு, நான் மருத்துவர் சூவைத் தட்டி, “எழுந்திருங்கள்! ஓட்டுனர் தூங்குகிறார். அவரை எழுப்ப நாம் ஏதாவது செய்யவேண்டும்” என்றேன்.

மருத்துவர் நகரவில்லை என்பதால் நான் அவருடைய கையைத் தலைக்கு அடியில் இருந்து வெளியே இழுத்தேன். அதனால் இருக்கையில் இருந்து கீழே விழுந்தாரேதவிர தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. நான் அவருடைய சுவாசத்தைச் சரிபார்த்தேன். இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். புருவம் சுருங்கி முகம்மட்டும் முன்பைவிட அதிக கவலையுடன் இருந்தது; இடையிடையே  பெருமூச்சுவிட்டார்.  அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் அவருடைய தலை வண்டியின் தரைப் பகுதியில்  மோதியது. நான் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி இருக்கையில் கிடத்தியபோது திடீரெனக் கண் விழித்து,”இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டார்.

நான்,” எனக்குத் தெரியாது” என்றேன்.

மருத்துவர், “எனக்கு இன்னும் சிறிது நேரம் கொடுங்கள், நான் கிட்டத்தட்ட முடித்துவிட்டேன்” என்றார். அவ்வளவுதான். அதன் பிறகு, மௌனம்.

நான் மறுபடி இருக்கையில் அமர்ந்தேன். சாலையில் வேறு வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. எல்லாத் திசைகளிலும் பால் போன்ற வெண்ணிற மூடுபனி சூழ்ந்திருந்தது. நாங்கள் பெய்ஜிங்கை நெருங்கி இருக்கவேண்டும். பணம் எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டதுபோலவே வாசிப்பதற்கும் எதையும் எடுத்து வரவில்லை  என்பதை இப்போது உணர்ந்தேன். இந்த நேரத்தில், இந்தச் சூழலைக் கடந்துபோக ஒரு புத்தகம் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. காலாவதியான ஓர் இலக்கியப் பத்திரிக்கைகூட அந்த வேலையைச் செய்திருக்கும். நான் சமீபத்தில் படித்த ஏதாவது ஒன்றை என் நினைவுக்குக் கொண்டு வரக் கடுமையாக முயற்சித்தேன்.

ஒரு கவிதை, இல்லை பாதி கவிதை, என் மனதில் தோன்றியது. அந்தக் கவிஞர் யாரென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் என்னுடைய எழுத்தாள நண்பர் ஒருவர் இந்தக் கவிதையை இணையத்தில் பதிவிட்டிருந்தார்:

இன்னும் இளமையோடும்,

இன்னும் இலட்சியத்தோடும், இடதுசாரியாக இருந்தும்

வலதுசாரியின் நிலைப்பாட்டோடு

கொழுத்த உடலுடன்

சின்ஜியாங்கில்

பட்டினி கிடந்தவர்,

சாங்ஷாவில் இருந்த தன்

வீட்டிற்குத் தப்பி ஓடினார்.

பாட்டி அவருக்காகத் தயாரித்தளித்த

பன்றி இறைச்சி சேர்த்த

முள்ளங்கி சூப்பில்

சிவப்பு பேரிச்சம்பழங்கள்

மிதந்தன.

வீட்டிற்குள் புகையும் ஊதுவத்திகள்

குழப்பத்தை அதிகமாக்குபவை.

அன்றைக்கு

என்ன செய்வது என்று

அவருக்குத் தெரியவில்லை.

அந்தக் கவிதையில் இன்னும் நிறைய வரிகள் இருந்தன. ஆனால் நான் அவற்றை மறந்து விட்டேன். பாட்டிமாவும் சூப்பும் மனதுக்கு இதமான உருவங்கள் என்பதால் ஒருவேளை அவை எனக்கு நினைவில் நன்கு பதிந்திருக்கலாம். இந்தத் தருணத்தில் குழப்பத்தில் மூழ்கிக்கொண்டிருந்த என்னைக் காக்கவும், இந்த உலகில் மனிதர்களுக்கு இடையே உண்மையிலேயே தொடர்பு உள்ளதை எனக்குக் காட்டவும், வெம்மையைத் தணிக்கக் கூடிய,  சிறிதளவு ஓசையும் சலசலப்பும் கொண்ட ஏதாவது காட்சிகளோ ஆறுதலான எண்ணங்களோ  எனக்குத் தேவைப்பட்டன. வண்டியோட்டத்தில் மருத்துவர் சூவின் முகம் அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறம் அடிக்கடி இடித்துக்கொள்வதைக் கவனித்தேன்.  என்னுடைய குறுஞ் சட்டை,  இரண்டு டிஷ்யூ காகிதப் பொட்டலங்கள் ஆகியவற்றுடன் மெத்தென்று இருந்த என்னுடைய பையை மருத்துவரின் தலைக்குக் கீழே வைத்தேன். ஓட்டுனர் வண்டியைத் தொடர்ந்து லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். சாலையில் முன்னோக்கிச் செல்லும் வாகனங்களின் நகர்வுகளைக் கூர்மையாகப் பார்த்தபடி, பின்புறக் கண்ணாடியைத் தன் காதுகளாக பாவித்து அவர் வண்டியோட்டுவதாக நான் நினைத்துக்கொண்டேன்.

என் சிறு வயதில் ஒருமுறை நானும் என் அப்பாவும் மரணத்தைப் பற்றி பேசியிருக்கிறோம். நான் அப்பாவிடம், “மரணத்தை வென்று விடுவேன் என்று அந்தக் குண்டுப் பையன் என்னிடம் இன்று சொன்னான். அவனால் அப்படிச் செய்ய முடியுமா?” என்று கேட்டேன்.

அப்பா,”அவன் நினைத்தால் முடியும்” என்றார்.

அவர் அப்போது காய்கறிகளை நீரில் கழுவிக் கொண்டிருந்தார்.  எளிமையாகத் தயாரிக்கக் கூடிய சில உணவுவகைகளை சமைப்பாரேதவிர உருளைக் கிழங்குகளையோ முள்ளங்கிகளையோ தொடவேமாட்டார். காரணம் அவர் கிராமப்புறத்திற்கு அனுப்பப்பட்டபோது அவைமட்டுமே அங்கு அவருக்கு சாப்பிடக் கிடைத்தன. அவை அவருடைய வயிற்றைப் பதம் பார்த்தன. அதன் பிறகு அவற்றைக் காய்கறிச் சந்தையில் பார்த்தால்கூட அவர் வேகமாக நடந்து அவற்றைக் கடந்துபோய்விடுவார்.

நான்,”நான் இறந்த பிறகு என்னாகும்? என்னால் பழிவாங்கமுடியுமா?” என்று கேட்டேன்.

அவர்,”இல்லை. நீ முற்றிலும் தோல்வியைச் சந்திப்பாய்”  என்றார்.

நான்,”நீங்கள் சாகப் போகிறீர்களா?” என்றேன்.

அவர்,”ஆம். நான் எந்த நொடியிலும் இறந்துபோகலாம்.  உன் உள்ளங்கை முட்டி அளவுள்ள இதயம் என்ற ஒன்று மனிதர்களுடைய உடலில் உள்ளது. அது துடிப்பதை நிறுத்தும்போது மனிதன் இறந்துவிடுவான்” என்றார்.

  “அது ஏன் துடிப்பதை நிறுத்தப் போகிறது? இப்போது அது துடித்துக்கொண்டிருக்கிறது. நாளையும் துடிக்கும். திடீரென ஏன் ஒரு நாள் துடிப்பை நிறுத்தும்?”

“அது இப்போது துடிக்கிறது. இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாலுமே ஒருவேளை அது நாளை துடிக்காமல் போகலாம். ஆனால் இதய பிரச்சினையால் நீ இறக்கப் போவதில்லை”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?

“நீ பிறந்தபோது அது பேசுவதை நான் கேட்டேன். அதனுடைய குரலைவைத்து அது ஆரோக்கியமானது என்று எனக்குத் தெரிந்தது. அத்துடன் என் இதயத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. ஆகவே  உன்னுடைய இதயத்தில் பிரச்சினை இருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி இருந்தால் அது பகுத்தறிவுக்கு முரணான சிலவற்றுள் ஒன்று. எது எப்படியாயினும் இந்தப் பேச்சை இத்தோடுவிடுவோம். அடுத்த முறை அந்தக் குண்டுப் பையன் உன்னைத் தாக்க நினைத்தால் உன்னால் முடிந்த அளவுக்கு நீ வேகமாக ஓடி உயிர் பிழைத்துக்கொள்”.

புரண்டு படுத்த மருத்துவர் சூ இருக்கையில் இருந்து கீழே விழாமல் வேகமாக சமாளித்துக்கொண்டார். நானும் கண்களை மூடிக் கொண்டேன். இப்போது என்னையும் சேர்த்து அவசர ஊர்தியில் பயணித்த அனைவருடைய கண்களும் மூடியிருக்க நாங்கள் அனைவரும் பொதுவான ஒரு இருளுக்குள் நுழைந்தோம். திடீரென இருமல் சத்தம் கேட்டதும்  நான் அது ஓட்டனரிடமிருந்து வருகிறது என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் உப்புக் காகிதத்தைத் தேய்ப்பதுபோன்ற அந்தக் குரல் எனக்கு மிகப் பரிச்சயமான ஒன்று என்பதால் அது யார் என்பது உடனேயே புரிந்துவிட்டது. நான் கண்களைத் திறந்து பார்த்தபோது என் அப்பா எதனுடனோ மென்மேலும் கடுமையாகப் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்படியோ இறுதியில் அவர் கண் விழித்துவிட்டார்.

நான்,”அப்பா” என்றதும் என்னை நிமிர்ந்து பார்த்தவர், எழுந்து உட்கார்ந்தார்.  அவர் கண் விழித்ததும் வழக்கப்படி இருமல் நின்றுவிட்டது.

“என்ன இதெல்லாம்?” என்றார்.

“நாம் பெய்ஜிங்கை நேருங்கிவிட்டோம்”

“பெய்ஜிங்கா? எதற்காக?”

நான், “உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவம் பார்ப்பதற்காக நாம் அங்கு போகிறோம்” என்றேன்.

அவர்,”வேண்டாம், விடு. என்னுடைய இதயத்தைச் சில நிமிடங்களுக்கு முன் நான் என் கண்ணால் பார்த்தேன். அது புழுக்கள் அரித்துப்போய்க் கிடக்கிறது.  என்னிடம் பேசிய ஒரு புழு, “உன் தாத்தாவை எனக்குத் தெரியும்” என்றது. நீயும் பெய்ஜிங்குக்கு வருகிறாயா என்ன?”

நான், “ஆமாம். பிறகு வேறு யார் உங்களை பார்த்துக் கொள்வார்கள்?” என்று கேட்டேன்.

அவர், “என்ன அபத்தம் இது? என்னை யாரும் பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இப்போது மணி என்ன?” என்று கேட்டார்.

நான்,”காலை ஐந்து இருபது” என்றேன்.

“நான் வழக்கமாகச் செய்யும்  குத்துச்சண்டைப் பயிற்சியை இன்று செய்யவில்லை. நாற்றமடிக்கும் இந்த மூத்திரப் பையை அகற்ற எனக்கு உதவி செய்” என்றார்.

பிறகு கம்பளியில் இருந்து ஊர்ந்தபடி வெளியேறி குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமர்ந்தவர், “பயிற்சியை நான் மறந்துவிட்டேன் என்றார்.

நான்,”அதற்கு வாய்ப்பே இல்லையே. நீங்கள் நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து வரிசையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளாயிற்றே” என்றேன்.

அவர்,”எனக்கு எதுவுமே நினைவில்லை. ஒரே ஒரு பயிற்சிகூட நினைவில்லை. என்னுடைய மொத்த வாழ்க்கையும் ஒரே நொடியில் இல்லாமல் ஆகிவிட்டது” என்றார்.

நான்,” அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. இப்போது உங்களுடைய உடல்நிலை நன்றாக இருக்கிறதுதானே?” என்று கேட்டேன்.

அவர், “என்னுடைய மொத்த வாழ்க்கையும் கடந்த காலமாகிவிட்டது. இது இப்படி நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். என்னுடைய வாழ்க்கை என் கைகளைவிட்டு நழுவிப்போய்விடும் என்று எனக்குத் தெரிந்ததால்தான் நான் குத்துச்சண்டைப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும?  இப்போது அதுவும் மறந்துவிட்டதால் நான் நிம்மதியாக உணர்கிறேன். இறுதியில் இத்தகையதொரு கடினமான சூழலை நான் வெற்றி கொண்டுவிட்டேன். எல்லாம் முடிந்தது” என்றார்.

“சிறிது தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“எனக்குத் தாகமாக இல்லை. இப்போது என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

நான், “எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை இந்த நொடிவரை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தயவுசெய்து இன்னும் சிறிது காலம் இருங்கள்” என்றேன்.

அவர், ” என் இருப்பைப் பற்றி நீ மிக உயர்வாக நினைக்கிறாய். ஆனால் உன் வாழ்க்கை என்னுடையதைவிட அதிக அர்த்தம்கொண்டது என்பதற்கான சாத்தியங்கள் உள்ளன; உன்னுடைய இருப்பு என்னுடைய இருப்பைப் பேரார்வத்துடன் விழுங்குகிறது. நீ பிறந்ததில் இருந்து என்னுடைய இருப்பை தினம் தினம், சிறிது சிறிதாக ஒரு சின்ன ஸ்பூனால் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய். ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. அதற்காக நீ குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை. நீ எப்போது திருமணம் செய்துகொள்ள உத்தேசித்திருக்கிறாய்?”

நான்,”அதைப் பற்றி நான் இதுவரை யோசிக்கவே இல்லை” என்றேன்.

“சரி. உனக்கு ஒரு மகன் பிறந்த பின் நீயும் ஒரு ஸ்பூனை வைத்து அவனைச் சாப்பிடுவாய். அந்தளவுக்கு உனக்குக் கடும் பசி எடுக்கும். நான் முன்பே சொன்னதுபோல், நீ என்னைக் கவனிக்காதபோது நான் உன் இதயம் பேசுவதைக் கேட்டேன். அது ஒரு விமானத்தின் இயந்திரம்போல திடகாத்திரமாக இருக்கிறது.  அது தினம் என்னருகே உறுமிக்கொண்டிருப்பது எனக்குக் கேட்குமேதவிர உனக்குக் கேட்காது. அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன்”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கமாக இடையிடையே  மௌனமாக இருப்பதுபோல, இப்போதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை தான் சொல்ல வந்ததை அவர் மறந்துவிட்டிருக்கலாம்.

மறுபடி புரண்டு படுத்த மருத்துவர் சூவின் முகம் இப்போது எங்களை எதிர்நோக்கி இருந்தது; அவருடைய கண்கள் திறந்திருந்தாலும் அவர் எங்களைப் பார்க்கிறாரா என்று உறுதியாகத் தெரியவில்லை.

“நீ சொல்லும் விஷயங்கள் எனக்கு எந்த விதத்திலும் உதவாது” என்று மிக உறுதியாகச் சொன்ன மருத்துவர் சூ மீண்டும் ஒருமுறை “சுத்தமாக உதவாது” என்றார். “என்னால் வேறு எதுவுமே செய்யமுடியாது. கருவிகள் வழியே அனைத்தும் துல்லியமாகத் தெரிகின்றன. எல்லாக் கருவிகளும் உண்மையைத்தான் சொல்லும் என்பதால் நீங்கள் என்னிடம் பொய் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? வரலாறு எப்போதும் பொய் சொல்லாது. உங்களைப் போன்றவர்களால் எந்தப் பயனும் இல்லை என்று வரலாறு நிரூபித்திருக்கிறது. உங்களுடைய மருத்துவ ஆவணங்களை என்னிடம் கொடுங்கள்” கண்கள் பாதி மூடியிருக்க, தன் தலையை லேசாக இருபுறமும் அசைத்த மருத்துவர், கடுமையான குரலில் “யார் இதை எழுதியது? இதெல்லாம் என்ன கையெழுத்து? இதை யாரால் படிக்கமுடியும்!” என்று பேச்சைத் தொடர்ந்தார்.

இதைக் கேட்ட என் அப்பா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவருக்கு எதுவும் புரியவில்லை என்பது அவருடைய முகத்தில் இருந்து தெரிந்தது. அந்தப் பெண் என்ன பேசுகிறார் என்பதும்  இப்படிப்பட்ட ஒரு நோயாளி ஏன் இந்த அவசர ஊர்தியில் பயணிக்கிறார் என்பதும் அவருக்குப் புரியவில்லை.

அப்போது யாரோ எட்டி உதைத்ததுபோல மருத்துவருடைய முழு உடலும் அதிர்ந்தது. பிறகு அவர் மறுபடியும் கண்களை இறுக மூடிக் கொண்டார்.

அப்பா,”நான் எழுந்துகொள்ள சிறிது உதவி செய்” என்றார்.

அவரை நான் தூக்குப் படுக்கையில் இருந்து தூக்கியபோது, தன் கைகளால் என்னைச் சுற்றியணைத்துக் கொண்டார். முடைநாற்றத்திற்குப் பதில்  சிறு குழந்தைகள் மீதிருந்து வரும் இனிய  நறுமணம் அவர்மீது வீசியது.

என் காதருகே “நான் விடைபெறுகிறேன். நம் பயணம் இத்துடன் முடிவுக்கு வருகிறது” என்றார்.

“இல்லை. அப்படிச் சொல்லாதீர்கள். உங்களுக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. கிழவனாகும்வரை நீங்கள் காத்திருந்தாகவேண்டும்” 

மறுபடியும் அவர் ,”விடைபெறுகிறேன்” என்றார்.

அவருடைய கண்கள் அலைவுற ஆரம்பித்ததும், நான், “தூங்கிவிடாதீர்கள். நாம் சேரவேண்டிய இடத்திற்கு மிக அருகே வந்துவிட்டோம்” என்றேன்.

கண்களை அகலத் திறந்தவர்,”நீங்கள் யார்?” என்றார்.

“நான் உங்கள் மகன்”

“சரி” என்று தலையாட்டியவர், “பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். பத்திரம்” என்றார்.

பிறகு படுத்துக்கொண்டவர் கைகளை நீட்டிப் போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டார். சில முறை இருமலுக்கு இடையே உறங்கியவர் பிறகு மூச்சுவிடுவதை நிறுத்திக்கொண்டார்.

இதயத் துடிப்பைக் காட்டும் கருவியில் இருந்து பீப் எனும் ஒலி எழத் தொடங்க, அந்தச் சத்தத்தைக் கேட்டு மருத்துவர் சூ விழித்துக்கொண்டார். தன்னைச் சுற்றி கைகளால் துழாவியவர் தன்னருகே எதுவும் இல்லை என்று உணர்ந்ததும் முழுதாக விழித்துக்கொண்டார்.  தன் தலைக்குக் கீழிருந்த அந்தப் பையை வைத்தது என்று கேட்டார். நான்தான் என்றதும் அது தனக்கு மிக அசௌகரியமாக இருந்ததாகச் சொன்னார்.

நான் அவரிடம், “இங்கு இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒன்று, ஓட்டுனர் நீண்ட நேரமாக ஆழ்ந்து உறங்கிவருகிறார் . இன்னொன்று என் அப்பா இறந்துவிட்டார்” என்றேன்.

மருத்துவர் என்னைச் சமாதானப்படுத்த விரும்பியது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் தன்  தொழில் சார்ந்த அவருடைய மனப்பாங்கு அதைச் செய்யவிடாமல் அவரைத் தடுத்தது. தலையை அசைத்தவர் ஒரு கம்பளியின் இழைகளைப்  பிரித்து மறுபடி அதை நூலாக மாற்றுவது போல என் அப்பாவுடைய உடலில் பொருத்தியிருந்த ட்ரிப் கருவியை அகற்றினார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்ட ஓட்டுனரின் முகத்தில் எந்தவிதக் கூச்சமும் தெரியவில்லை. அதுமட்டுமின்றி ‘மோசமாக எதுவும் நடந்துவிடவில்லைதானே. ஆகவே என்னைப் பொருத்தவரை எல்லாம் சரியாகவே நடந்தது’ என்ற முகபாவம் தெரிந்தது. அத்துடன் அந்தக் குட்டித் தூக்கம், அப்போதுதான் விடிந்ததுபோல அவரைப் புத்துணர்ச்சிகொள்ளச் செய்திருந்தது. அவர் மருத்துவர் சூவைத் திரும்பிப் பார்த்துப் பேசிய பிறகு வந்த வழியே திரும்பிச் செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.

நான் மருத்துவர் சூவிடம்,” இடையில் எங்காவது வண்டியைக் கொஞ்சம் நிறுத்தமுடியுமா?” என்று கேட்டேன்.

பயணத்தில் அடுத்து வந்த ஓய்வறை அருகே வண்டி நின்றதும் நான் கழிவறைக்குச் சென்றுவந்தேன். வண்டிக்குள் ஏறியபோது அதில் இருந்த மற்ற இருவரும் உறங்காமல் இருப்பதை உறுதி செய்துகொண்டேன். பிறகு என் அப்பாவின் கால்களுக்கு அருகே சுருண்டு படுத்துக்கொண்டேன்.

சுமைகள் இன்றி, இலக்குகள் அற்று இலகுவாக உணர்ந்தேன். என்னுடைய இதயத்துடிப்பு என்னுடன் பயணிக்க, சிறிது நேரத்தில் உறங்கிப்போனேன்.

*கலாச்சாரப் புரட்சி:

பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சைனா எனும் கட்சியின் நிறுவனரான மாவோ தொடங்கிய சீனப் பண்பாட்டுப் புரட்சி 1966 ஆண்டு முதல் 1976 ஆண்டுவரை நீடித்தது. இதனால்  சீனாவில் பரவலான சமூக, அரசியல் கிளர்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் குழப்பமான சூழலும், பொருளாதார ஒழுங்கின்மையும் நிலவின. இறப்பு எண்ணிக்கை மதிப்பீடுகள் ஏறத்தாழ ஐந்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை இருந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது. துணை ராணுவ சிவப்புக் காவலர்கள் ஏராளமான கோவில்கள், தேவாலயங்கள் மசூதிகளை தாக்கியும், சிலவற்றை நெருப்பிட்டுக் கொளுத்தியும் நிர்மூலமாக்கினர்.

——

எழுத்தாளர்: ஷுவாங் சுவடாவோ

சமகாலச் சீன நாவலாசிரியரான ஷுவாங் சுவடாவோ(40) ஜிலின் பல்கலைக்கழகத்தின்  ஸ்கூல் ஆஃப் லா’ வில் பட்டம் பெற்றவர். 2010 ஆம் ஆண்டில் சீனா டெவலப்மென்ட் வங்கியின் லியானிங் கிளையின் ஊழியராகப் பணியாற்றியபோது ‘கார்கோயில்’ எனும் தன்னுடைய முதல் நாவலை 20 நாட்களில் எழுதி ‘சைனா டைம்ஸ் ஃபிக்சன்’  விருதை வென்றார். 2012 ஆம் ஆண்டில், 14வது தைபே இலக்கிய விருதுகளுக்கான  பட்டியலில் இடம் பிடித்து 200,000 (நியூ தைவான் டாலர்) ரொக்கப் பரிசு பெற்றார். இப் பரிசைப் வென்ற முதல் சீன எழுத்தாளர் இவரே. அதே ஆண்டில், ஷுவாங் தனது வங்கி வேலையை இராஜினாமா செய்துவிட்டு முழுநேர எழுத்தாளரானார்.  2015 இல், பெய்ஜிங்கில் உள்ள ரென்மின் பல்கலைக்கழகத்தில் ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ கில் மேற்படிப்பு படிப்பதற்காக ஷென்யாங்கைவிட்டு வெளியேறினார்.

2016 ஆம் ஆண்டு  தொடங்கி, ஷுவாங் ‘தியான்வுஸ் அக்கவுண்ட்’ , ‘எரா ஆஃப் தி டெஃப் அண்ட் டம்ப்’  எனும் நாவல்கள்,  ‘தி ஏவியேட்டர்’ , ‘தி ஹண்டர்’  எனும் சிறுகதைத் தொகுப்புகள் என நிறைய படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
தி ஏவியேட்டர் தொகுப்பில் உள்ள ‘அசாசினேட் தி நாவலிஸ்ட்’ சிறுகதையைத் தழுவி நிங் ஹாவ் இயக்கத்தில் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

‘தி ஹார்ட் ‘ எனும் இச் சிறுகதை நியூயார்க்கர் இதழில் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

மொழிபெயர்ப்பு – கயல்

தொடர்ந்து இவ்வளவு அழகாக மொழிபெயர்ப்பு செய்யும் கயலுக்கு நடுகல்லின் வாழ்த்துக்கள்!

கயல் எஸ்

வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.

கல்லூஞ்சல்  (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.


‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

One thought on “இதயம் – ஷுவாங் சுவடாவோ

  1. மிகவும் சிறப்பான சிறுகதை மொழிபெயர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *