கமலா முரளி   

முகாமில் பங்கு பெறும் மாணவர்களின் பட்டியல் பள்ளி அறிவிப்புப் பலகையில் ஓட்டப்பட்டது.

“டேய், நா செலக்ட் ஆயிட்டேண்டா”

“நானுந்தான்”

என்று பல குரல்கள்.

தேர்வாகாத மாணவர்கள் முகத்தில் வருத்தக் கோடுகள்.

ராஜூ மற்ற மாணவர்களைப் போல அறிவிப்புப் பலகை அருகில் ஓடிச் செல்லவில்லை. முண்டி அடித்துக் கொண்டு தன் பெயர் இருக்கிறதா எனப் பார்க்கவில்லை.

தன் பெயர் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள அவனுக்கும் ஆசை தான்.

கடந்த ஆண்டு அவன் வேறு பள்ளியில் படித்தான். அங்கு ஏதேனும் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்தால், அவரவர் வகுப்புக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் சொல்லுவார்கள். முகாம்களுக்கும் அப்படித்தான்.

“ராஜூ…! ராஜூ ! நீ இருக்க. உன் பேரு இருக்கு…”கத்தினான் ராகவ்.

ராஜுவுக்கு மிக்க மகிழ்ச்சி.

பள்ளியில் மாணவர்களுக்குப் பல குழுக்கள் இருக்கின்றன. அதில் “பசுமை வீரர்கள்’ குழு சார்பில் தான் இந்த முகாம்.

மூன்று நாள் முகாமில் பசுமைப் பொருட்கள்  தயாரிப்பு, சுற்றுப்புற சூழல் பற்றிய கருத்தரங்கம், போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் எடுத்து வர வேண்டிய உடைகள் மற்றும் பொருட்கள், நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி ஆசிரியர்கள், ஒரு சிறு குழுக்கூட்டம் கூட்டி அறிவுறுத்தினார்கள்.

முகாமுக்குக் கிளம்பும் நாள் வந்துவிட்டது.

ராஜூ இதுவரை எந்த முகாமிலும் கலந்து கொண்டதில்லை. மிகக் கவனமாகத் தேவையான பொருட்களை நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு வந்து இருந்தான்.

முகாமில் அவன் மேலும் நான்கு மாணவர்களுடன் ஒரு அறையில் தங்க வேண்டும். ராகவ் அந்த அறை தான்.

அறையின் ஓரத்தில் இரண்டு துணி போடுவதற்கான கொடிகள் இருந்தன.

ராகவ், “இங்க இந்த இடது பக்கத்தில இருக்கற கொடியில நானும் விதுரும் எங்க துணியைப் போட்டுக்கிறோம்”.

அது போலவே படுக்கும் இடங்கள், பொருட்கள் வைக்கும் இடம் என எல்லாவற்றையும் வரையறுத்துக் கொண்டார்கள்.

ராஜூ மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.

“வந்தவுடனேயே டக் டக்ன்னு ஆர்கனைஸ் பண்ணுகிறாயே” என வியந்தான்.

“ஆமாம், நான் ஏற்கனவே முகாம்களுக்கு வந்து இருக்கிறேன். இந்த மூணு நாளில நாம நிறைய கத்துக்குவோம்” என்றான்.

விசில் சத்தம். மாணவர்களுக்கான அழைப்பு.

அனைவரையும் வரவேற்று, உணவு வழங்கப்படும் முறை, குடிநீர், கழிவறை வசதிகள் பற்றியும் முக்கியமாக சுத்தம் சுகாதாரம் பற்றியும் பேசினார் முகாம் பொறுப்பு ஆசிரியர்.

சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பற்றிய நிகழ்வுகளுக்கு நிறைய தயாரிப்புகளுடன் வந்திருந்தான் ராஜூ.

முக்கியமாக ஓவியம், போஸ்டர் முதலியவற்றில் அவனது வார்த்தைகளும் வண்ணங்களும் அழகாக இருந்தன.

“ராஜூ, உன்னுடைய வண்ணங்கள் மிகத் தெளிவாக, நேர்த்தியாக இருக்கிறதே !”என்று சொல்லி, அவனது வண்ணக் குப்பிகளைப் பார்த்தான் ராகவ்.

“விலை அதிகமோ?”

“ஆமாம். யூகே ப்ராடக்ட். எங்க மாமா வாங்கி வந்தது”.

பயிற்சி பட்டறைகளில் ராஜூ, ராகவுக்கு பலமான தோழனாக இருந்ததால், முகாமில் இலகுவாகத் தங்கி இயங்க ராஜுவுக்கு ராகவ் பலமான துணையாக இருந்தான்.

“உன்னோட பொருட்களை உபயோகப் படுத்திவிட்டு, மீண்டும் கவனமாக உள்ளே வைக்கணும். கொஞ்ச நேரம் காய வைக்கணும் என்றால், திரும்ப ஞாபகமாக எடுத்து வைக்கணும்”, ராகவ்.

“ஏன் மற்றவர்களைத் திருடர்களாக நினைக்கிறாய்?”, ராஜூ.

“அப்படியில்லை. நாம் நம் பொருட்களை நேர்த்தியாக வைத்திருக்கிறோமா என்பதைக் கூட வந்து பார்ப்பார்கள். ஜாக்கிரதையா இருக்கறதும் நல்லது தான”

மறுநாள் காலை.

வளாகத்தின் ஒரு மூலையில் வரிசையாக பத்து குளியலறைகள் இருந்தன.

அதற்கு சற்று தள்ளி, நீர் மேடை, நீர்க்குழாய்கள், தோய்க்கும் கல்கள் சில இருந்தன.

“ராஜூ, நாம முதல்ல தோச்சிடலாம்” என்றான் ராகவ்.

“நா மூணு நாளைக்கும் தயாரா ட்ரெஸ் வச்சிருக்கேன்”

“சரி, அழுக்குத் துணியை நாத்தத்தோட கொண்டு போகணுமா?”, ராகவ்.

“நோ ப்ராப்ளம். என்கிட்ட செண்ட்டட் பேக்ஸ், அதாவது பை வந்து வாசனையா இருக்கும். அதில நம்ம அழுக்குத் துணிகளை வச்சிட்டா, பெட்டில எந்த நாத்தமும் இருக்காது” என்றான் ராஜூ.

“ஹை! இதெல்லா நா கேள்விப்பட்டதே இல்ல”

“ஆமா, நாம போற இடத்தில எல்லாம் தண்ணி கிடைக்குமான்னே தெரியாதே.  அதனால நாங்க எப்பவுமே இந்தப் பைகளை எடுத்துட்டு போயிருவோம்”, என்றான் ராஜூ.

”சரி, நான் தோய்க்கப் போறேன்” என்றபடி, துண்டைக் கட்டிக் கொண்டு உள்ளாடைகளையும் இதர உடுப்புகளையும் தண்ணீரில் அமிழ்த்தினான் ராகவ்.

“நா தினமுமே என் துணிகளைத் தோச்சிட்டுத் தான் குளிப்பேன்” என்றான் ராகவ்.

ஆச்சரியப் பட்டுப் போனான் ராஜூ.

“நீ நீயே தோச்சிடுவியா? நா அழுக்குத் துணி போட ஒரு ‘பின்’ இருக்கும். அதுல போட்டுருவேன். ஒரு நா கூட தோச்சதில்ல. வாஷிங் மிஷன் தான்”

“அதுல உள்ளாடைகள் போட மாட்டாங்களே”

“போடுவாங்களே. தனியா ஒரு நாள் போடுவாங்க. கொஞ்சமா ’லிக்விட்’ ஊத்தி, ”ஸாஃப்ட் ஸ்பின்” கொடுப்பாங்க”

“அப்படின்னா… மென்மையா தோய்க்குமா?”

“ஆமா, உங்க வீட்டுல மெஷின் இல்லயா?”

“முதல்ல இருந்தது. இருந்தாலும் சாயம் போயிடும். நூல் பிரிஞ்சிடும் அப்படின்னு சொல்லி, பாதி துணி அம்மா தான் தோய்ப்பாங்க. அதுவும் ரிப்பேராயிடிச்சி”

“நீ ஏன் தினம் தோய்க்கிற? கஷ்டமா இருக்காதா?”எனக் கேட்டான் ராஜூ.

“துணி தோய்க்கிறது ஒரு கஷ்டமே இல்லை”

ராஜூ பதில் எதுவும் பேசவில்லை.

“நா இப்ப என்ன பண்ணினேன் பார்த்தியா? ஜஸ்ட், துணிய நனைச்சி, லேசா சோப்பு போட்டு, இப்படி கையால குமுக்கணும். “

ராகவ் கையால் துணியைக் குமுக்குவதும் அதிலிருந்து சோப்புத் திவலைகள் மேலே படுவதும் ஒரு ‘ஜாலியான” அனுபவம் போல அதை அனுபவித்து செய்ததும் ராஜுவுக்கு ரொம்ப பிடித்தது.

“நானும் என் துணியத் தோய்க்கிறேன்” என்றான்.

ராகவ் அவனுக்கு துணி தோய்த்தல் நுணுக்கங்களைச் சொன்னான்.

“சோப்ப நிறைய போடாத. அளவா போடு. அழுக்கு எங்க இருக்கோ அங்க கொஞ்சம் நல்லாப் போடு. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேத்து குமுக்கணும். அப்புறம் திருப்பி தண்ணில் போட்டு அலச்ணும். மூணு நாலு தரம் அலசினா, சோப்பு போயிரும். இறுக்கமா பிழிஞ்சி காயப் போடணும்”

ராஜு சுவாரசியமாக துணி தோய்த்தான்.

அவன் முகத்தில் அலாதி பெருமை!

“இதையும் கத்துக்கோ ! துணிகளை காயப் போட்டு க்ளிப் போடணும்.” என்றபடி, தன்னுடைய க்ளிப்புகளைக் கொடுத்தான் ராகவ்.

அறைகளைத் துப்புரவாக வைத்திருப்பதற்கான சிறப்பு பரிசு அவர்கள் அறைக்குக் கிடைத்தது.

அறைகள் வாசலில் இருந்த அறிவிப்பு பலகையில் ஓவியங்கள், போஸ்டர்கள் கொண்டு அழகு படுத்தவதற்கான சிறப்பு பரிசும் அவர்களுக்குத் தான் கிடைத்தது. 

“நீ சொன்னது சரி தான், ராகவ்! இந்த முகாமில்ல ஒரு பசுமை வீரனா, சுற்றுப்புற சூழல் சார்ந்த விஷயங்களைக் கத்திகிட்டதோட மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில நாம எளிதா பின்பற்றக் கூடிய நல்ல பழக்கவழக்கங்களையும் நான் நிறைய கத்துகிட்டேன், ரொம்ப தேங்ஸ், ராகவ்” என்றான் ராஜு.

“இறுதி நிகழ்ச்சில, நாம சின்னதா ஒரு நகைச்சுவை துணுக்கு ட்ராமா பண்ணலாமா ?” எனக் கேட்டான் ராகவ்.

“என்ன ஐடியா?”

“ஒரு பழைய தமிழ் படத்தில பூரி செய்யறத சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வரும். அது போல…”

இறுதி நாள் நிகழ்வு.

“வா, வா, ராஜு!  இந்த துணியத் தோச்சுப் போடு”

“அடடா ! எனக்குத் தோய்க்கத் தெரியாதே “

”அதுக்கென்ன! இதையும் கத்துக்கோ!”

“சரி சொல்லு, எப்படி தோய்க்கணும்?”

“முதல்ல துணிகளைத் தண்ணில நனைக்கணும்”

“அதான் எனக்குத் தெரியுமே”

“அப்புறம் என்ன செய்யணும்ன்னு தெரியுமா?”

அதான் எனக்குத் தெரியல”

“ம்ம்ம்… சோப்பு… துணிக்குப் போடற சோப்பு…”

“அதான் எனக்குத் தெரியுமே”

”அத எடுத்துக் குழச்சு…”

“அதான் எனக்குத் தெரியுமே”….

“அதுக்குப்புறம் என்ன செய்யணும் சொல்லு”

“அதான்பா எனக்குத் தெரியாது”

“ம்…குழச்ச சோப்ப பக்கெட் தண்ணில கரைக்கணும்”

“அதான் எனக்குத் தெரியுமே”

“கரைச்ச தண்ணிய எடுத்து தலைக்கு மேல ஊத்தணும்”

“அதான் எனக்குத்….”

மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *