இப்போதெல்லாம் யாரவது என்னை உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் சற்று தயக்கம் வரும். என்னுடைய குடும்பம் என் அப்பா அம்மா இருவரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஓர் கிராமத்தை சேர்ந்தவர்கள். நானே அங்குதான் பிறந்தேன். நான்கு ஐந்து வயது வரை அக்ராஹாரத்தில் இருந்த பெரிய வீட்டில்தான் வளர்ந்தேன். அப்புறம்தான் எங்கள் குடும்பத்தில் ஓர் மிகப்பெரிய புயல் வீசியது. ஊரில் எல்லோரும் எங்களை கண்டால் கதவை சாத்திக்கொண்டனர். அந்த அளவுக்கு பகையா இல்லை வெறுப்பா என்று நீங்கள் கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து பெரும் புயலாக மாறி, எங்கள் குடும்பத்தை குலைத்தது என்பது பெரும் உண்மை. இந்தக் கதை அந்த புயல் பற்றியது அல்ல; அது வீசி ஓய்ந்து போய் பல ஆண்டுகளாகி விட்டது. அதை சோகம் என்று தள்ளுவதா இல்லை படிப்பினை என்று கொள்ளுவதா என்றும் எனக்கு தெரியவில்லை.
அப்புறம் வாழ்க்கை தலை கீழானது. உதவி பெற்றவர்கள் கூட உதவிக்கரம் நீட்ட தயங்கினர். சிலர் மறுத்தனர். பலர் வருத்தம் தெரிவித்தனர். அவ்வளவே. அந்தக் காலத்தில், அதற்கு மேல் எதிர்பார்க்கவும் முடியாது.
சரி. அது போனால் போகட்டும். ஐந்து வயது பையனாக அந்த ஊரை விட்டு வந்த எனக்கே இப்போது எழுபத்தி ஐந்து வயது. அதை ஏன் நினைவு கூர்கிறேன் என்று தோன்றலாம். எனக்கு ஓர் அபார ஞாபக சக்தி. பல விஷயங்கள் எனக்கு மனதில் பதிவாகி இன்னும் நினைவில் நிற்கிறது. பல மோசமானவை; சில மனதை இன்றும் தொடுபவை. அதில் குறிப்பாக எனக்கு வீட்டில் வந்து சில மாதங்கள் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ரகோத்தம ராவ் எனக்கு அளித்த நற்சான்றிதழ்.
ஊரும், உறவும், மொழியும் விலகி போனபோதும் என்னிடம் ஓரளவுக்கு அவை ஒட்டிக்கொண்டுதான் இருந்தன; இன்னும் இருக்கின்றன.
நான் வேலையில் இருந்த நாட்களில் ஒருமுறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. அங்கிருந்து ஊட்டி போக வேண்டும். நாங்கள் ஓர் சில நேரங்கள் தங்கி இருந்த ஒருவர் வீடு பழையகால வீடு. பெரிய முன்பக்கத்து வராந்தா, ரேழி, அதைதாண்டி பெரிய உயரமான தூக்கி இருந்த மேற்கூரை, தூண்கள், முற்றம் என்று அப்பட்டமாக அந்த காலத்து வீடு என்று காட்டியது. பெரிய வளைவான வாசல்கள்.
எங்களை உள்ளே அழைத்து சென்ற சற்று பெரியவராக இருந்தவரிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன். தமிழில்தான். அவரே நடுவில் ‘உங்களுக்கு எந்த ஊர்?’ என்று கேட்டார். நான் ‘சென்னை’ என்றேன். உங்கள் சொந்த ஊர் அதாவது உங்கள் அப்பா, அம்மா அவர்களின் ஊரும் சென்னைதானா என்று திரும்பவும் கேட்டார். நான் சற்று ஆச்சர்யத்துடன் ‘இல்லை நான் பிறந்து கொஞ்ச நாள் வளர்ந்தது தஞ்சாவூர் அருகில் உள்ள ஓர் கிராமம்.’ என்றேன்.
அவர் புன்னகை செய்தார். ‘அதானே பார்த்தேன். உங்கள் பேச்சு சென்னை சேர்ந்தவர் மொழியாக இல்லை. உங்கள் பேச்சு வித்தியாசமாக இருந்தது.’ என்றார். எனக்கு ஆச்சர்யம்.
‘எப்படி?’ என்றேன். எனக்கு சென்னை வாசிகள் பேச்சு தெரியும். உங்கள் பேச்சு அப்படி இல்லை. நீங்கள் இந்த வீட்டை பற்றி கூறும் பொது ‘பெரிய்ய வாசல்..எத்தனை அழகான வளைவு’ என்றீர்கள். நீங்கள் சொல்லுவதிலேயே அது எவ்வளவு பெரிசு, எத்தனை அழகான வளைவு என்பதை உணர்த்துவதாக இருந்தது. ஆங்கிலத்தில் ‘figurative’ என்பார்கள். அதாவது அந்த சொல்லும் விதமே அந்த இடத்தை கண்முன் கொண்டு நிறுத்துவது போல் இருக்கும். அது தஞ்சாவூர் தமிழுக்குத்தான் உண்டு. அதைத்தான் நான் உணர்ந்து கேட்டேன்,’ என்றார். எனக்கு வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.
காலப்போக்கில் நான் பேசுவது மாறிக்கொண்டே வந்தது; இருந்தாலும், அந்த தஞ்சை மாவட்டத்தின் தனித்தன்மை மாறவில்லை. சில சொற்கள் பலரும் பயன் படுத்தாத வார்த்தைகளாக இருக்கும். இந்த உணர்வு நான் கதைகள் எழுத தொடங்கிய பின் உதவியது. என்னால் ஓர் காட்சியை மனத்திற்குள் உருவாக்கி அதை எழுத்தில் கொண்டு வரும்போது திருப்தி தனியாக வந்தது. எழுதுபவர்களுக்கு எல்லாமே இந்த குணம் இருக்கும். அவைதான் கதைகள் மூலம் தெரிய வரும்.
நான் ஏன் இதை எல்லாம் இப்போது நினைவு கூர்கிறேன் என்று நினைக்கிறீர்களா? சொல்கிறேன்.
இப்போது நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஓர் வசதியானவர்கள் வாழும் முதியோர் இல்லத்தில் இருக்கிறேன். இந்த பிளாட் மிக நவநாகரீகமான புது அமைப்பில் வடிவமைக்க பட்ட பிளாட். எனக்கு திடீரென்று நான் பிறந்து கொஞ்சகாலம் வாழ்ந்த வீடு கிராமத்தில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது.
கையில் பணமும், உடலில் தென்பும் இருந்தால் இன்று போதுமே? எங்கு நினைத்தாலும் போகலாமே? சென்று அந்த அக்ராஹாரம் இப்போது எப்படி இருக்கிறது, குறிப்பாக நான் பிறந்து கொஞ்ச காலமே வளர்ந்த வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசையாக இருந்தது.
ஓர் நாள் காரில் ஏறி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். என் நண்பர் ஒருவரை அழைத்தேன். ‘உங்க கிராமத்திற்கா? எனக்கு அங்கே என்ன வேலை? தஞ்சாவூர் கோவில்களுக்கு போகலாமே என்றால் போன வருஷம்தான் நானும் என் மனைவியும் சென்று வந்தோம். நீங்கள் ஜாலியாக உங்க விருப்பப்படி போய்வாருங்கள்’, என்று பதில் சொல்லி விட்டார்.
நான் தனியாக ஓர் காரை ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டேன்.
***
தஞ்சை செல்லும் பாதைகள் எல்லாம் கண்ணுக்கு குளுமையாகவே இருந்தன. நீண்ட நெடும் வயல் வெளிகள்; தொடர்ந்து வரும் சாலையோர மரங்கள். பசுமையான காட்சிகள். சுத்தமான காற்று. அங்கங்கே மக்கள். எல்லாமே ரசிக்கும் படியே இருந்தன. சமீபத்தில் உங்களில் பெரும்பாலானவர்கள் ‘மெய்யழகன்’ என்ற பிரபல திரைப்படத்தில் பார்த்திருப்பீர்களே?
எங்கள் அக்ரஹாரத்தை ஒட்டி இருந்த சிறு நகரங்கள் மாறி இருந்தன. ஹோட்டல்கள், கடைகள், வங்கிகள் என்றும், சென்னை போலவே ஏராளமான இரு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டும், பறந்து கொண்டும் இருந்தன.
இது அக்ராஹாரமா? என்ன இது?
திண்ணை, தூண்கள், என்று இருந்த வீடுகள் இன்று கான்க்ரீட் கட்டிடங்களாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன. இரண்டு அல்லது மூன்று மாடிகள். வீடுகளும் எந்த தயக்கமும் இன்றி தெரு வரை நீண்டிருந்தன. அநேகமாக எல்லா வீடுகளும் நடுவில் உள்ளே செல்வதற்கான ஓர் வாசல் கதவை தவிர இரு புறங்களிலும் கடைகள். பத்திரக்கடை; நவீன உடைகள் கடை; சிறு தேநீர் கடைகள். ஜெராக்ஸ் போடும் கடைகள். காய்கறி கடை. ஒரு சிறு நகைக்கடை கூட. என் காரை நான் மெதுவாக செலுத்த சொன்னேன். இருபுறமும் கடைகள்; கடைகள்; கடைகள். . அநேகமாக எல்லா கடைகளிலும் ஆட்கள் இருந்தனர். வியாபாரம் மும்முரமாகவே நடந்து கொண்டிருந்தது.
ஏதோ ஓர் வீட்டின் வாசலில் மட்டும் ஓர் பெரியவர் வேஷ்டி, மேல்துண்டுடன் நின்று கொண்டிருந்தார். காரை நிறுத்த சொல்லி இறங்கினேன். அவர் என்னை முகத்தில் கேள்விக் குறியுடன் பார்த்தார்.
நான் அவர் அருகில் சென்று ‘வணக்கம்’ என்றேன்.
அவரும் சற்று தயக்கத்துடன் ‘வணக்கம்’, என்றார். பின் தொடர்ந்து ‘உங்களுக்கு யாரை பார்க்க வேண்டும்?’ என்றார்.
நான் சற்று தயக்கத்துடன் பேசினேன். ‘இது என் பூர்விக கிராமம். பல காலங்களுக்கு முன் நான் சிறுவனாக இருக்கும் போதே இந்த ஊரை விட்டு போய் விட்டோம். என் வீடு இந்த அக்ராஹாரத்தில் ஒன்பதாம் எண் வீடு.’
அவர் முகத்தில் ஆச்சர்யம் தென்பட்டது. ‘எத்தனை வருஷங்களுக்கு முன்னால் இந்த அக்ராஹாரத்தை விட்டு போனீர்கள்?’ என்று கேட்டார்.
நான் சற்று தயக்கத்துடன் ‘கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருக்கும்,’ என்றேன்.
அவர் என் முகத்தை பார்த்ததில் கேலியா அல்லது ஆச்சர்யமா என்று எனக்கு தெரியவில்லை.
‘ஐம்பது வருஷங்கள். அரை நூற்றாண்டு. ஓர் இடம் அதே போல் இருக்கும் என்று நினைத்தா பார்க்க வந்தீர்கள்?’ என்றார். இப்போது அவர் குரலில் கேலி இருந்தது.
நான் பதில் சொல்லாமல் தலை அசைத்தேன். ‘நம் நாட்டில் கிராமங்களும், அக்ராஹாரங்களும் மாறிக் கொண்டு இருக்கின்றன என்று தெரியும். இருந்தாலும் சில ஊர்கள் அப்படியே உள்ளன என்று சில பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். ஓர் சில அக்ராஹாரப் புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறேன். அந்த நினைவில் என்னுடைய இந்த பழைய கிராமம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை திடீரன்று தோன்றியது. அதனால் புறப்பட்டு வந்தேன்.’ என்றேன் தயக்கத்துடன்.
‘வேடிக்கைதான். உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு இருக்கிறது. மனிதர்களும் அப்படியே. என்றோ எங்கோ, எப்போதோ விட்டு சென்றதை இன்று அந்த இடத்தில் வந்து தேடினால் எப்படி கிடைக்கும்? இந்த அக்ராஹாரம் புது வேஷம் பூண்டு பல வருஷங்கள் ஆகி விட்டது. கடைகள் தான் இப்போது எல்லா இடத்திலும். என் வீடு. இதோ இதன் முன்னாலும் ஓர் கடை. எனக்கு வருமானம். பணம். அதை தவிர நமக்கு வேறென்ன வேண்டும்?’ ‘இந்தியாவின் எதிர்காலம் இளையதலைமுறை என்றார்கள். இந்தியாவின் இளையதலைமுறையில் பாதிப்பேர் வெளிநாடுகளில் அல்லவா இருக்கிறார்கள்? அவர்களின் கனவே வெளிநாடு சென்று அங்கு நிரந்தரமாக இருக்க வழி தேடுவதுதானே? ஏன்? என் மகனே யு.எஸ்ஸில் தானே இருக்கிறான்? ஏன்? உங்கள் குழந்தைகளும் அங்கோ அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டிலோதானே இருப்பார்கள்? ‘உலகமே பணத்தையும், பலத்தையும் நம்பித்தான் சுழல்கிறது. அதில் நீங்கள் என்றோ இருந்த ஓர் வீட்டை பல ஆண்டுகள் கழித்து தேடி வந்திருக்கிறீர்கள், என்ன அபத்தம்.’ என்றார் அவர் நிர்தாட்சண்யமாக.
‘கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்று இன்றும் சொல்கிறார்களே?’
அவர் பெரிதாக சிரித்தார்.
‘கிராமத்துடன் ஒன்றி, அதோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்ட ஓர் சிலர் இன்னும் இருக்கிறார்கள். மறுக்கவில்லை. ஆனால், அதுதான் இன்றைய இந்தியா என்று சொல்ல முடியாது. மனித வாழ்க்கையின் கொள்கைகளும், தேவைகளும் அதை சொன்ன காந்தி காலத்தை போல் இன்று இல்லை. உண்மையை சொல்லப்போனால் இன்றைய வாழ்க்கையின் ஆன்மா ‘வலைத்தளம்’. இதை உங்களை போன்றவர்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. ‘உங்களை பார்த்தால் படித்தவர் போல் தெரிகிறது. அவை எல்லாம் அரசியல் பேச்சு. அர்த்தமற்ற பிதற்றல். அதை நீங்களுமா நம்புகிறீர்கள்?’ என்றார் கேலியாக.
நான் பதில் சொல்லாமல் காரை நோக்கி திரும்பினேன்.

இயற் பெயர் ஜி. சுவாமிநாதன். மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமகன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் நல்ல பரிச்சயம் உண்டு. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ‘தேவவிரதன்’ என்ற என் புனைப்பெயரில் தமிழின் பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. எழுதுவது தவிர படிப்பது, இசை, மற்றும் ஓவியம் இவற்றிலும் தேர்ச்சி உண்டு. ‘தி ஹிந்து’ பத்திரிகையில் பல ஆண்டுகளாக கர்நாடக இசை விமர்சனங்களை எழுதி வருகிறேன். வலைத்தள தொடர்பு வந்தபின் ஆங்கிலத்தில் முக நூலிலும், பல சமூக, இலக்கிய, திரைப்படங்கள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன். இலக்கியம், எழுத்து, இசை, ஓவியம் இவற்றுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் உறவுகளே இன்றும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

