இந்திய தேசமும் கிரிக்கெட் என்னும் பெருங்கேடும்

நான் கிரிக்கெட் பற்றி நடுகல்லில் எழுதிய கட்டுரையை நட்புக் குழுக்களுக்குள் பகிர்ந்திருந்தேன். சிறு வயது நட்புக்குழுக்குள் பெரிதாக எந்த சலசலப்பும் இருக்காது. அங்கு நல்ல தேர்ந்த வாசிப்பாளர்களும் கருத்துக்களைப் புகுத்தறியும் தன்மையும் உண்டு. ஆனால் “அஞ்சு ரூவா” கருவாட்டுக்கு ஆலாய்ப் பறக்கும் தெரு நாய்க் குழுக்கள் சில உள்ளன அவற்றில் இந்தக் கட்டுரையை விட்டெறிந்தால் போதும் குதறியெடுப்பதுடன் மட்டுமின்றி, என்னை குழுவிலிருந்து தூக்கியெறிவதும்  உறுதி. அதைப் பற்றியெல்லாம் அஞ்சினால் எழுத முடியுமா என்ன? கண்டிப்பாக இதை அந்தக் குழுவில் பகிர்வேன். சென்ற கட்டுரைக்கே எனக்கு கிரிக்கெட் தீவிரவாதிகளிடமிருந்து கடும் சாபங்கள், மற்றும் வசைகள் வந்தன.

நான் எழுதவில்லை? நான்கைந்து மட்டையான்கள் தவிர இங்கு சொல்லிக்கொள்ள ஓன்றும் இல்லை. அனல் பறக்கும் பந்து வீச்சுக்கு வழியில்லை. இறுதிப்போட்டியில் தோற்றார்கள். இந்தியர்களை ஒரு முக்கியமான உயிர்போகுமளவு சிக்கலான கட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை மீண்டும்  நிரூபித்தது. இப்படி எழுதுவதால் நான் கிரிக்கெட் உயிர்போகும் விஷயம் என்று கருத்தியம்புவதாக அனர்த்தம் செய்துகொள்ளலாகாது. உலக மக்கட்தொகையில் தோராயமாக ஐந்தில் ஒரு பங்கு மக்கட்தொகை கொண்ட நாட்டில் உள்ள மக்கள் இப்பைத்தியம் பிடித்து அலைகின்றனர். அவர்கள்தாம் கிரிக்கெட்தான் தேசபக்தி, கிரிக்கெட்டன்களின் விதைப் பாதுகாப்புக் கவசத்துக்குள்தான் தேசத்தின் மானம் ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறது என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் இவ்வாறெல்லாம் எழுத நேர்கிறது. கிரிக்கெட்டை  விட்டால் சினிமா, மற்றும் சினிமாவில் வரும் தொண்டுத் திரைப்படப் பாடல்கள். சரி அது பற்றி எனக்கென்ன? நான்தான் கிரிக்கெட், மற்றும் தமிழ் உட்பட்ட இந்திய சினிமாக்கள் கேடு என்று விமர்சிப்பவன் ஆயிற்றே?

இப்போது பிரச்சனை அதுவல்ல, கிரிக்கெட் என்னும் பெருங்கேடு வேறு என்னென்ன தீங்குகளை விளைவித்திருக்கிறது என்பதுதான். கிரிக்கெட் என்னும் பெருங்கேடு, கிரிக்கெட் அல்லாத அனைத்து விளையாட்டுக்களையும் அது சார்ந்த சாதனையாளர்களையும் நினைக்ககூட விடாமல் பிசாசுபோல் வியாபித்திருக்கிறது. மில்கா சிங், தன்ராஜ் பிள்ளை, மேரி கோம், சுனில் சேட்ரி, பெய்ச்சங் பூட்டியா, பி. டி உஷா, கர்ணம் மல்லேஸ்வரி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பி. வி சிந்து, குற்றாலீஸ்வரன் போன்ற பெயர்களை எத்தனை பேருக்குத்தெரியும்? இவர்களை ட்டூ. கே சிறுவர் தலைமுறை அறிவார்களா?

முழுவதும் உள்ளே இறங்குவதற்கு முன் – ஆந்திராவில் ஒரு இளைஞன் கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்றதைத் தாங்க இயலாமல் மாரடைப்பில் இறந்தான். நமக்கெல்லாம் அது ஒரு செய்தி. அடுத்து வருவது நான் கண்ணாறக்கண்டது.  எங்கள் சொந்த ஊர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மகன், பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் மதிப்பெண். தந்தைக்கு மகனை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்துவிட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு வரும்போது, தொன்னூற்று இரண்டு உலகக்கோப்பை வந்துவிட்டது.  அடுத்த பத்தே  நாட்களில் மார்ச்சில் தேர்வு. கிரிக்கெட் பைத்தியம் காரணமாக, படிக்கச் செல்கிறேன் பேர்வழி என்று  வீட்டில் சொல்லிவிட்டு, அதிகாலை இரண்டரை மணிக்கு இங்கு பெப்ருவரி தொடக்கம் சில்லறை நண்பர்களுடன் தொலைக்காட்சியில் கிரிக்கெட், எப்படி? தேர்வில் படுதோல்வி. அதே நேரம், அது நடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆசிரியர் போராட்டத்தைத் தூண்டி விட்டார் என்ற வகையில் தற்காலிகப் பணி நீக்கம் பெற்று, உண்மையில் தூண்டி விட்டவர்களெல்லாம் தொழிற் சங்க ஆதரவில் தப்பித்துக்கொள்ள, இவனின் தகப்பன் மட்டும் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நேர்ந்து, மலை போல் நம்பியிருந்த மகனின் தேர்வுத் தோல்வியும் சேர்ந்துகொள்ள, மாரடைப்பில் உயிரைவிட, தாய் உட்பட மொத்தம் ஏழு உருப்படிகள் கொண்ட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது. பிறகு இவன் திருப்பூருக்கு, பீஸ் வெட்ட அனுப்பப்பட, அங்கிருந்து மீட்டு யாரோ ஒரு புண்ணியாத்மா மைசூர் வேத பாடசாலைக்கு அனுப்ப, வயதைக் காரணம் காட்டி வேத பாராயணமெல்லாம் வெறும் கனவு, வேண்டுமானால் வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறோம் என்று வெறும் எடுபிடி வேலைதான் கிடைத்தது. அங்கிருந்தவண்ணம்  வேலை செய்துகொண்டே, யாராலோ அறிவுறுத்தப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை மீழெழுதித் தேர்ந்து, தபால் வழிக் கல்வியில் கணிப்பொறி படித்து, தீவிர முயற்சிக்குப் பிறகு ஒரு வழியாக பெங்களூரில் ஒரு வேலை,  அடுத்தது சுவீடன் பிறகு அமெரிக்கா என்றெல்லாம் சென்று வேலை செய்து கொடும் வறுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தான். அவன் செய்த ஒரே தவறு, படிக்கிற காலத்தில் கிரிக்கெட் பைத்தியத்தால் படிக்காமல் விட்டது. குடும்பத்திற்குப் பிடித்த தரித்திரத்திலிருந்து முழுமையாக மீள, அவனுக்கு மிகச்சரியாக பதினான்கு வருடங்கள் பிடித்தது. அந்தப் பதினான்கு வருடங்களுக்குள் இடையிடையில் இன்னும் படு மோசமான சம்பவங்கள் நடந்தேறின. அவற்றையெல்லாம் தனிக்கதையாக எழுதவேண்டும்.

அடுத்தது என் கதை. இரண்டாயிரத்து மூன்று உலகக்கோப்பை, மும்பையில் நான் பார்த்துக்கொண்டிருந்த கால் காசு வேலையும் பறிபோய்விட்டது. அறைத் தோழருக்கு அடுத்த மாதம் வாடகைக்குக்  கொடுக்க பணமில்லை. பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி, சொற்பக் கையிருப்பிலிருந்து போட்டிகளைக் காண ஆயிரத்தைநூறு ரூபாய்க்கு காயலான் கடையிலிருந்து கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியைத் தூக்கிகொண்டுவந்தேன். அப்போதெல்லாம் கம்பியிணைப்புதான். திருட்டு இணைப்பு கொடுத்து, போட்டிகளைக் கண்டுகளித்தோம். இடையிடையில் வேலைக்கு நேர்காணல் அழைப்பு வந்தபோதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தட்டிக்கழித்தேன். வேலை போன துக்கம் தெரியாமல், உத்தியோகத்திலிருப்பதின் அருமை புரியாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு நன்கு விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியினை  வியந்து பார்த்து, வியந்து பார்த்து எல்லாவற்றையும் மறக்க வைத்து, கிரிக்கெட் வெற்றிகளையும் வாழ்கையையும் போட்டுக் குழப்பிக்கொண்டேன். நான் வேலையை இழந்ததை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் மண்ணைக்கவ்வியது போலவும், பிறகான ஆட்டங்களில் எப்படி இவர்கள் உத்வேகம் பெற்று எழுகிறார்களோ, அதே போல் நானும் எழுவதுபோலவும் கற்பனையில் திளைத்தேன்.

 இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றபோது, அந்த துக்கமும் வேலையை இழந்த துக்கமும் ஒன்று சேர்ந்து  அடுத்தநாள் தூங்கி எழுந்ததும், சட்டென்று வந்து தாக்கியது. இந்திய அணியின் தொடைநடுக்க கிரிக்கெட் தோல்வி,  சுய வாழ்க்கையில் நான் தோற்றதான மாயத்தோற்றம் காட்டியது.  கம்பியிணைப்புக்காரன் வந்து நீங்கள் திருட்டுத்தனமாக இணைப்பு எடுத்திருக்கிறீர்கள். பரவாயில்லை நூற்று இருபத்தைந்து ரூபாய் கட்டிவிடுங்கள் என்றான். இருபது வருடங்களுக்கு முன், நூற்று இருபத்தைந்து ரூபாய் என்பது மதிக்கத்தக்க ஒரு தொகை. பகல் பட்டினி பரவாயில்லை, இரவு தூக்கம் வராது என்பதற்காக நான்கைந்து நாட்கள் தாங்கும் அளவு நூற்றைம்பது ரூபாய் இருந்தது, நான் செய்த குற்றத்தை மன்னித்து தன்மையாகப் பேசி அதையும் வாங்கிக்கொண்டு போனான்.

அப்போதுதான் மண்டையில் உரைத்தது, வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றரை மாதங்களை வீணடித்துவிட்டோம் என்று. வேலையும் இல்லை வெட்டியும் இல்லை என்பதற்கு மோனையாக வேலையுமில்லை இனி கிரிக்கெட் போட்டியுமில்லை என்று வெறுமை படர்ந்து, இனம் புரியாத துக்கத்தை ஏற்படுத்தியது. அறைத்தோழர் வெளியேறிய பிறகு பசிக்கு காலை, மதியம், இரவு என்று பிஸ்கெட்டுகளை நேரத்துக்கு இரண்டு என்று தண்ணீரில் தோய்த்துத் தின்று காலம் கழித்துக்கொண்டிருந்தேன். இரண்டே வாரங்களில் –

 “ஊர்ல இருந்து அம்மா வர்றாங்க, கொஞ்சம் காலி பண்ணிக்குங்க”

என்றார் அறைத் தோழர். அதற்குப் பிறகான சிலகாலம் என் வாழ்வில் நடந்தவைகளும் பசி, பட்டினி, துயரக் கதைகள்தான். இது போன்று இன்னும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. இனி முக்கியப் பிரச்சனைக்கு வருவோம்.

ஹாக்கி என்ற ஒரு விளையாட்டு இந்தியாவில் இருந்தது. 1928 ஆம் ஆண்டு முதல் 1959 வரையிலான மூன்று தசாப்தங்கள் அதன் பொற்காலம். முதன்முதலில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரிய நாடுகளை ஒரு கோல் கூடப் போடவிடாமல் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அதிலும் ஹாலந்தை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதற்கடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளான 1932 மற்றும் 1936 இலும் கூட தொடர் வெற்றி. 1936ல் பெர்லினில் நடந்த, ஒலிம்பிக்கிற்கு கொடுங்கோலன் ஹிட்லர் தலைமை தாங்கியது மட்டுமின்றி, ஹாக்கியில் இந்திய அணியின் புலிப்பாய்ச்சலைக்கண்டு மூக்கின்மேல் விரல் வைத்தான் என்பது வரலாறு. 1928 ல் முதல் வெற்றியின் போது அணித்தலைவர் ஜெய்பால் சிங் என்றால் அடுத்த இரு போட்டிகளில் தியான் சிங். பெர்லின் மைதானத்தில் பீடு நடை போட்டு நடந்து  வந்த இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமை தாங்கிய தியான் சந்த், மைதானம் முழுக்க ஒலித்த ‘ஹிட்லர் வாழ்க’ என்னும் கோஷத்தை உதாசீனப்படுத்தும் விதமாக, முகமன் செய்ய மறுத்தது வரலாறு.

அதற்குப்பிறகான இரு ஒலிம்பிக்குகள் இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட, 1948 ஒலிம்பிக்கில் வழக்கம்போல் அனைத்துப்போட்டிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுதந்திர இந்திய ஹாக்கி அணி, தனது முன்னாள் காலனி ஆதிக்க நாடான ‘க்ரேட்’ பிரிட்டனையே தூக்கிப்போட்டு மிதித்து மிரட்டல் வெற்றி அடைந்ததுதான் இன்று வரை நினைவு கூறப்படும் வெற்றி. இந்திய ஹாக்கி அணியின் வெற்றிமுகம் தொடர்ந்தும் ஏறிக்கொண்டே செல்ல, அதற்குப்பிறகான காலங்களிலும் 1980 வரை உலக அளவில் இந்திய ஹாக்கியின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.  எண்பதுகளுக்குப்பிறகு ஆடுகளங்களில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சில மாற்றங்கள் காரணமாக, ஒரு சிறு சரிவு ஏற்பட, அதன் காரணம் ஏற்பட்ட சறுக்கல்களுடன் சேர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றியும் சேர்ந்துகொள்ள, இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியின் இறங்குமுகம் தொடங்கியது. அதற்குப்பிறகு வந்த அரசாங்கங்கள் எடுத்த எந்த முயற்சியும் கிரிக்கெட் கவர்ச்சியின் முன் எடுபடவில்லை. அப்போது தொடங்கிய வீழ்ச்சி, ஹாக்கி என்னும் தேசிய விளையாட்டு மீண்டு வந்து வேர் பிடிக்க முடியாமல் போனதற்கான, எழுதப்படாத காரணம் கிரிக்கெட்.  கிரிக்கெட் தவிர  இந்தியாவில்  சினிமா என்னும் கவர்ச்சி கிரிக்கெட்டுடன் சேரும்போது ஏற்படுத்தும் தாக்கத்திற்கு எடுத்துக்காட்டு, கிரிக்கெட் சூரன்களின் பாலிவுட் நடிகைகளுடனான காதல் லீலைகள் மற்றும் திருமணங்கள்தான். ஷர்மிளா தாகூர் – அலிகான் பட்டெளடி தொடக்கம் இன்று விராத் கோஹ்லி -அனுஷ்கா ஷர்மா வரை பட்டியல் பெரிது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகள் முதல் எண்பதுகள் வரை ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தியது என்னவோ சீக்கியர்கள்தான். அதே காலகட்டத்தில் காலிஸ்தான் இயக்கம் வலுப்பெற்று, அதன் பின் நடந்த துயர்மிகு சம்பவங்கள்,  இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்பாரா உலகக்கோப்பை வெற்றி என்று அனைத்துக் காரணிகளும் சேர்ந்துகொள்ள, ஹாக்கி மற்றும் பிற தடகள விளையாட்டுக்களை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய சீக்கிய மற்றும் ஹரியான தேசிய இனங்களின் பற்றாக்குறை உணரப்பட்டு, 1987 ஆம் ஆண்டு, Sport Authority of India (SAI), அதாவது இந்திய விளையாட்டு ஆணையம், தனக்கான சுய அக்கறை தந்த உந்துதல் காரணமாக இவர்களுக்கான மாற்றைத் தேடத் தொடங்கியது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    உலகெங்கும் ஒடுக்கப்பட்ட இனங்கள் புகலிடம் தேடி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, வரலாறு முழுவதும் இந்தியா அவர்களை இரு கரம் விரித்துத் தழுவி அனைத்துக்கொண்டது. உதாரணத்திற்கு ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சார்ந்த பார்ஸிகள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, ஈரானை விட்டு வெளியேறி கட்ச் பாலைவனத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த போது, குஜராத் மற்றும் தற்போதையை பாகிஸ்தானின்  சிந்து மாகாணம் உட்பட்ட பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த ஹிந்து அரசன் ஜதி ராணா உடனடியாக அவர்களை ஏற்றுக்கொண்டு அபயமளித்தான். பார்ஸிக்களும் அன்று முதல் இன்று வரை குஜராத்தியைத் தாய்மொழியாக ஏற்று, தனிக்கலாச்சாரம் பேணினாலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பிரிவினராக இருக்கின்றனர். இயல்பாகவே கர்வமிகு இந்தியராக தொழில் முனைவதிலும், புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதிலும், தேசத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதிலும் பெரும்பங்காற்றினர். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை டாடா, மிஸ்திரி, வாடியா, கோத்ரெஜ் மற்றும்  பூனாவாலா போன்ற பார்ஸி இனத்தவர்களின் நிறுவனங்கள் செய்தன. நூறு கோடி மக்கள் தொகையைக்கொண்ட ஒரு நாட்டில் எத்தனை பேருக்கு அரசாங்கம் வேலை தர முடியும்? இவர்கள் செய்தார்கள். ஒரு வேளை ஜதி ராணா பார்ஸிகளை விரட்டி அடித்திருந்தால்? பார்ஸிகள் இல்லா இந்தியாவில் தொன்னூறுகளுக்கு முந்தைய இந்தியா, சோவியத் ரஷ்யாவைப்போல் துண்டு துண்டாகப்போய், மக்கள் கலவரத்தில் அடித்துக்கொண்டு செத்தும் போயிருப்பார்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், சிறிது சிறிதாக நிகழ்ந்திருக்கும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, சாம் மானெக்ஷா என்னும் இந்திராவின் உற்ற தோழன் பார்ஸி ஃபீல்ட் மார்ஷல்  இல்லாமல் போயிருந்தால், இந்தியாவினால் வங்கதேசத்தை நிறுவியிருக்க முடியாது.

பார்ஸிகளுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை யூதர்கள், அதாவது இந்திய யூதர்கள்! உலகெங்கும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, கடும் இன அழித்தொழிப்புக்கு ஆளானவர்கள் இந்தியாவுக்குள் புகுந்து கப்பல் தரை தட்டி போக்கிடம் இல்லாமல் அரபிக்கடலோர மணலில் முதன் முறை அடியெடுத்து வைத்தது இன்றைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு.  உலகின் எங்கு, எந்த மூலைக்குச் சென்றாலும் கடும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகும் யூதர்கள் முதன் முதலில் சுதந்திரக்காற்றைச் சுவாசித்தது இந்திய மண்ணில்தான். அன்று முதல் இன்று வரை, கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இந்திய யூதர்கள் தனி அடையாளத்துடன் வாழ்ந்து வந்தாலும், பொதுச்சமூகத்தில் சக இந்தியனாக வாழ்ந்து வந்து, கடந்த ஐம்பதாண்டுகளுக்குள், நதி மூலம் தேடி கொஞ்சம் கொஞ்சமாக மேற்குப்பக்கம் ஒதுங்க ஆரம்பித்துவிட்டனர்.

பாகிஸ்தானுக்கெதிரான வங்கதேச விடுதலைப்போரில் பார்ஸி மானெக்ஷாவின்  வியூகம் மற்றும் திட்டமிடல் என்றால், களத் தளபதியாக நின்று அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டியவர் ஒரு யூதர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் பக்தாதிலிருந்து குடி பெயர்ந்த யூத வம்சாவழியில் பிறந்தவர். பெயர் ஜெ. எஃப். ஆர் ஜேக்கப் (J.F.R Jacob). அவர் இல்லையென்றால், 1971 கிழக்குப் பாகிஸ்தான் போரில் இந்தியா மண்ணைக் கவ்வியிருக்கும். 71 காலகட்டங்களில் கிட்டத்தட்ட இந்தியா என்னும் நாடு வேலை வாய்ப்பின்மை, பஞ்சம், பட்டினி காரணமாக வங்கதேச அகதிகளின் வருகையும் சேர்ந்துகொள்ள, இந்தியா என்னும் நாடே துண்டுத்துண்டாகப் போய் ஒவ்வொரு துண்டும் மற்றொண்டுடன் அடித்துக்கொண்டு அழிந்திருக்கும். ஆனால் பார்ஸிக்களோ, யூதர்களோ சினிமா, கிரிக்கெட் என்று சீரழியாமல் இந்திய தேசத்தின் முதுகெலும்பாகவும், தேவைப்படும் நேரங்களில் நல்ல தலைவனையும், ரட்சகர்களையும் உருவாக்கிக்கொண்டிருந்தனர். இவர்களில் எவரும் சினிமா அல்லது கிரிக்கெட் கவர்ச்சியின் புட்டத்தை முகர்ந்துகொண்டு, திடீர் பணம் மற்றும் புகழுக்கு ஏங்கித்தவித்துக்கொண்டு திரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே பெறும் இடத்தில் இல்லாமல் கொடுக்கும் இடத்தில் இருந்தார்கள். அதே போல், தடகளம் போன்றவற்றிலும் இந்த இனத்திலிருந்து பெரிதாக ஆர்வமோ பங்களிப்போ வரவில்லை. மண்ணின் மைந்தர்களான பிற தேசிய இனங்களுடன் ஒப்பிடுகையில் விகிதாச்சார அளவில் பத்தாயிரத்துக்கு  ஒன்று என்ற விகிதத்தில் இருக்கும் இவர்கள் வெறும் மேட்டுக்குடி வாழ்க்கை மட்டும் வாழ்ந்துகொண்டு, தாங்கள் வாழும் தேசத்துக்கு தேவையான நேரத்தில் தேவையான சேவையையும் பங்களிப்பையும் நல்குமளவிலான ஆளுமைகளை வழங்கிக்கொண்டிருந்தனர். அதே நேரத்தில் துணைக்கண்ட மண்ணின் மைந்தர்கள், ஜாதி, மத, இன பேதச்சண்டையிலும், கீழ்த்தர அரசியல், கிரிக்கெட், மற்றும் சினிமா போதையிலும் திளைத்துக்கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பற்றி நன்றாகத் தெரிந்த இந்திய விளையாட்டு ஆணையம் , இவர்களிடம் போய் தடகளத்துக்கு ஆள் சேர்க்க முனையவில்லை. அவர்களுக்குத் தேவை, கால் வயிற்றுக்  கஞ்சிக்காக, இவர்கள் ஆட்டுவிப்பதற்கெல்லாம் வாயை மூடிக்கொண்டு ஆட ஒரு கூட்டம், அதே நேரம் மரபணு ரீதியாக உடலுறுதி மிக்க இனம். சரி வேறு யார்தான் இதற்கு ஒத்து வருவார்கள்?

நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் இன்றளவும் அடிப்படைக்கல்வி கூட எட்டாக்கனியாக இருக்கும் தேசியப் பழங்குடி இனங்களை பட்டியலிட்டால், அது அயர்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.  இந்தியா மொத்தத்துக்கும், மக்கட் தொகையில் ஏறத்தாழ ஒன்பது சதவிகிதம் பழங்குடிகள், அதாவது தோராயமாக பத்து முதல் பதினோரு கோடி பேர். எழுநூறுக்கும் அதிகமான பழங்குடிகள் பட்டியலில் இருக்கிறார்கள். இது தவிர பட்டியலில் இல்லாத, கணக்குகளிலேயே வராத பழங்குடிகள் கிழக்கில் நாகாலாந்து தொடங்கி, அந்தமான் தொடங்கி இங்கு நீலகிரி உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வரை எத்தனை பழங்குடி இனத்தினர் இருப்பார்கள்? இன்று வரை கிரிக்கெட், தடகளங்கள் அல்லது சினிமா என்று ஏதாவது ஒன்றிலாவது ஒரு பிரபல முகத்தையாவது காண்பிக்க முடியுமா? யாரவது சாய் பல்லவியைக் காண்பிக்கக்கூடும். நல்லது ஆனால் அது போதாது என்பதுதான் இங்கு வாதம். தங்கள் தேடலில் அடிப்படைக்  கல்வி மற்றும் சுகாதாரத்திற்கே போராடிக்கொண்டிருக்கும் சிறுபான்மை தொல் குடிகள் பற்றிய  எண்ணம் இந்திய விளையாட்டுக் கழகத்தினருக்கு வராமலிருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்திய விளையாட்டு ஆணையம் 1980 களில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, இவர்களையாவது மாற்றாக நினைத்தார்களா என்றால் இல்லை. ஏனென்றால், பழங்குடிகள் என்பவர்கள் வெளியிலிருந்து வந்த அந்நிய இனம் கிடையாது, அவர்களுக்கென்று ஒரு வித்தியாசமான முகவெட்டோ உடலமைப்போ கிடையாது. அது தவிர, இதர தேசிய இனங்களைப் போல் துணைக்கண்ட மரபணுதான், முரட்டு உடலமைப்பும் இல்லை. அதைவிட முக்கியக்காரணம், இவர்களை இந்தக்காரியத்துக்காக அணுகினால், அரசியல் ரீதியாக வேறு சில அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இவர்களால் ஒட்டு வங்கி அடிப்படையில் அனுகூலமிருக்கிறது. இவர்கள் நம் அவசரத்துக்கெல்லாம் உதவ மாட்டார்கள், நீண்ட கால அடிப்படையில், பள்ளிகள் கட்டித்தந்தீர்களா? குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்துகொடுத்தீர்களா? ரேஷனில் கோதுமை போட்டீர்களா? இவர்களின் குடிசை வீட்டில் விளக்கெரிவதற்கு மண்ணெண்ணெய் ஊற்றினீர்களா?  என்றெல்லாம் ஆளுங்கட்சியினரை நோக்கி கேள்வியெழுப்பி மேடையில் முழங்கி, இவர்களிடம் வாக்குப்பெறுவதற்கான இனம் இவர்கள் என்று இவர்களை விடுத்து, அடுத்த ஆலோசனைக்குப் போனார்கள்.

மெதுவாக யூதர்கள், பார்ஸிகளல்லாத ஒரு சிறுபான்மையினத்தை நோக்கி இவர்களது கவனம் திரும்ப, அந்த இனம்தான் சித்திக்கள்! (Siddis). இன்றைய ஆந்திர, கர்நாடக, கோவா, மஹாராஷ்ட்ரா  மற்றும் குஜராத் பகுதிகளில் வாழும் ஆப்பிரிக்கவம்சாவழி இந்தியர்கள். இன ரீதியில் ஆப்பிரிக்கர்கள் ஆனால், இந்திய நாட்டுரிமை கொண்டவர்கள். அவர்கள் வாழும் இடத்தைப் பொருத்து தெலுங்கு, கன்னடம், மராத்திய அல்லது கொங்கணி மொழிகளைப் பேசுபவர்கள். பதினாறாம் நூற்றாண்டில், போர்த்துகீசியர்கள் கடல் வழி இந்தியாவுக்குள் நுழையும்போது, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட அடிமைகள். 

அக்காலகட்டத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மார்கரெட் ஆல்வாவின் முயற்சியால் ஸ்பெஷல் ஏரியா கேம்ஸ் (SAG) என்னும் திட்டத்தின் அடிப்படையில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் வழிநடத்துதலின் பெயரில், குஜராத்தின் கிர் காடுகளிலும், கடற்கரையோர கர்நாடக கிராமங்களிலும்   தொலைந்து போய் ஆப்பிரிக்கத் திறமைகளைக் கண்டு தேர்வதற்காக மாதக்கணக்கில் தேடத்தொடங்கினர் இணை குழுவினர். தேர்ந்தெடுக்கப்பட்ட  குஜராத்தி, கொங்கணி, மற்றும் கன்னட மொழி பேசும் ஆப்பிரிக்க வம்சாவழி கறுப்பின இந்தியர்கள் நாடு முழுவதும் உள்ள SAI முகாம்களுக்குப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டனர். அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டது நான்கே ஆண்டுகள், அதற்குள், திறமைகளைக்கண்டறிந்து, ஊக்குவித்து, தடகளங்களில் பயிற்றுவித்து ஒலிம்பிக்கிற்கு அனுப்பி பதக்கங்கள் வெல்ல வேண்டும். ஏனென்றால், 1900 முதல், ஹாக்கி தவிர  பெரிய அளவில் பதக்கங்கள் வெல்லவில்லை என்கிற கவலை. ஒரு நாட்டுக்குள் என்னதான் உள்நாட்டுக் கலவரத்திலோ, பஞ்சம் பசி பட்டினியில் நாளுக்கு ஆயிரம் பேர் மாண்டாலும் உலக அரங்கில், தலை நிமிர்ந்து நிற்க, தன் சுபிட்சத்தைப் பறை சாற்றிக்கொள்ள, ஒலிம்பிக் போன்ற பெரும் ஒளி மேடைகள் தேவை.

இந்த முயற்சியில்  ஒரு சிலர் மட்டும் தேற, என்ன செய்வது என்றே தெரியாமல் அதிகாரிகளுக்கு நா வறண்டது. கால அழுத்தம் தவிர, இவர்கள் நினைத்ததற்கு மாறாக, இந்தியாவில் இருக்கும் ஆப்பிரிக்க இனம், உலகெங்கும் உள்ள தன்னுடைய சகோதர  ஆப்பிரிக்க இனங்களைக்காட்டிலும் ஊட்டச்சத்தின்மை காரணமாக உடலளவில் மிகவும் நலிவுற்று, சோர்ந்துபோயிருந்ததுதான் காரணம். இவை தவிர அதிகாரிகளுக்குள் உட்பூசல், அதே காலகட்டத்தில் நிலவிய நிலையற்ற மத்திய ஆட்சி, மற்றும் அதற்குப்பின் புதிதாக 1991 இல் அமைந்த அரசாங்கத்தின் முன் இருந்த சவால்கள் என்று அனைத்தும் சேர்ந்துகொள்ள, இத்திட்டமே கேட்பாரற்றுப்போனது SAG மற்றும் SAI யினரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் கிரிக்கெட் மட்டும் கொழுத்து வளர்ந்தது. அதன் கவர்ச்சியும், கிரிக்கெட் மற்றும் ஹிந்தித் திரையுலகமும் பின்னிப் பிணைந்து பிற்காலத்தில் கிரிக்கெட் மாஃபியா விஸ்வரூபம் எடுப்பதற்கு உதவியது.

இத்தனை தகவல்களுக்கும் நடுவில் தொலைந்து போகக்கூடாத மிகவும் முக்கியமான சிக்கலை இந்த இடத்தில் பதிவு செய்தே ஆகவேண்டும். தொடக்கத்தில் நாம் பார்த்த பார்ஸிக்கள், யூதர்களிடம் இருந்த ஒன்று இவர்களிடம் இல்லை. அதுதான் கொஞ்சம் வெளிர் நிறத்தோல்! வெள்ளை இல்லாவிட்டாலும் குறைந்தது செம்பழுப்பு அல்லது வெண்பழுப்பு நிறத்தோல்! அவர்களும் இந்தியர்கள்தான், இவர்களும் இந்தியர்கள்தான். அதாவது கடந்த ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள். மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், அவர்கள் ஏனைய சமுதாயத்துடன் எந்த வேறுபாடும் இன்றிப் பழக முடிந்தது. ஆனால் அதே போல் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டகொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்கள்? வெறும் தோல் நிறத்தைக் காண்பித்து தலித்துகள் என்று அட்டவணைப்படுத்தப்பட்டு ஊருக்கு ஒதுக்குபுறமாக குடியமர்த்தப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். அட மூர்க்கர்களா!

மற்ற தடகள விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில், தேசியக் கிரிக்கெட்டுக்குள் நுழைவதற்கு முன்னைப்போல இல்லாமல் இப்போது பல வழிகள் திறந்துவிட்டிருந்தாலும், இன்னமும் அது மேட்டுக்குடிகளுக்கான விளையாட்டாகத்தான் இருக்கிறது. அல்லது குறைந்தது நல்ல கிரிக்கெட் உட்கட்டமைப்பு உள்ள சிறுநகரத்திலிருந்தாவது வர வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. தேசிய அளவில் பரிமளிப்பவர்கள், முஸ்லீம்கள்  உட்பட அனைத்து இந்து சமூகப் பிரிவினர்களும் இருக்கிறார்கள். ரஞ்சி மட்டுமல்ல, ஐபிஎல் வழியாகவும் உள்ளே வரலாம் என்ற கதவு திறக்கப்பட, நடராஜனும் முஹம்மது சிராஜும் கூட உள்ளே நுழைய முடிந்தது. ஆனால் மிகவும் நலிவுற்றவர்கள், விளிம்பு நிலையில் இருக்கும் சமூகங்கள் மற்றும் பிற தேசிய இனங்களுக்கு இன்னும் கழிப்பிட வசதி, குடி நீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படைக்கட்டமைப்பு  இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.  அதற்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அதற்கு முஹம்மது சிராஜும், நடராஜனும்தான் உதாரணங்கள். நிஜாம் காலத்திலிருந்து தலைமுறைகளாக வறுமையில் சிக்கித் தவித்த சிராஜ் கிரிக்கெட் காரணமாக வறுமையிலிருந்து வெளியே வந்தார். இனி அவர் சார்ந்த சமூகத்தில் குறைந்தது இருபது குடும்பங்கள் அடுத்த தலைமுறையில் வறுமையிலிருந்து வெளியேறும். பல சிறார்களுக்கு இனி சிராஜ்தான் ஆதர்ச நாயகன். நடராஜனும் அவ்வாறே.      இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு போன்ற அம்சங்கள் தவிர, ஒரு முன்னுதாரண மாற்றமாக கிரிக்கெட் போன்ற பெரும் மேடைகளில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

சரி சித்திக்கள் தடகளத்தில்தான் தேறவில்லை ஆனால் மேற் குறிப்பிட்டதுபோல் கிரிக்கெட் கதவு இவர்களுக்கும் திறந்திருக்க வேண்டுமல்லவா? திறக்கவில்லை. வேகப் பந்துவீச்சிற்காவது பயிற்சி அளித்திருக்கலாம். பழங்குடிகளுக்கு முப்பது சதவிகிதம், கேட்பாரற்று நலிவடைந்துபோய் உருவத்தில் கறுப்பினமாகவும் இதயத்தில் இந்தியராகவும் இருக்கும் சித்திக்களுக்கு ஒரு இருபது சதவிகிதம் என்று கிரிக்கெட்டில் இடம் ஒதுக்கலாம். ஐய்யய்யோ கிரிக்கெட்டிலா இட ஒதுக்கீடு என்று குதத்தீ பற்றி எறியலாம் மேட்டுக்குடி கிரிக்கெட் முட்டாள் வெறியர்களுக்கு. அதில் உங்களுக்கு என்னடா பிரச்சனை? என்னைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கு தாண்டிய சக்திவாய்ந்த பொன் முட்டையிடும் வாத்து. புஞ்சை வயலில் கிணற்றுப்பாசனம் ஊடு பயிருக்கும் சேர்த்துத்தானே? ஒடுக்கப்பட்டவர்களுக்கும், கண்டு கொள்ளாமல் விடப்பட்டவர்களுக்கும் சேர்த்தே பலனளிக்கட்டுமே? ஏன் கிரிக்கெட்டில் ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டு சதம் அடித்த கையோடு  திடலில் அமர்ந்திருக்கும் சினிமா நடிகை கோடீஸ்வரி பெண்டாட்டிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பதைக் கண்டு நீங்களெல்லாம் சுய இன்பம் அடைவது கெட்டுவிடுமென்றா எரிகிறீர்கள்? எரியட்டும் உங்கள் குதவாய், அது எரிந்து புண்ணாகி சீழ் வடியட்டும் கிராதகர்களா. அவ்வாறு இட ஒத்துக்கீடு வழங்கப்பட்டு  ஒரு வேளை தொடர்ந்து தோற்று தோல்வியுற்றாலும், அதில் ரசிகக் குஞ்சாமணிகளுக்கு என்ன பெருங்கேடு விளைந்துவிடப்போகிறது? இவர்கள் சோற்றுக்கா குந்தகம் வந்துவிடப்போகிறது? நன்கு தின்று விட்டு புட்டம் பெருத்துப்போய், மீண்டும் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கத்தானே போகிறார்கள்?

வெற்றியை விடுங்கள், இதனால் பார்வையாளர்கள் குறைந்து சில்லறை தேற்றுவது கடினமாகலாம். அதனால் என்ன? இந்தியாவிலும் கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள், மிகவும் பின் தங்கிய பழங்குடிகள் வாழ்கிறார்கள் அதில் இவர்களுக்கும்  வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று உலக அரங்கில் பதிவாகுமா? ஆகாதா? எல்லா நாடுகளும் தங்களுக்கு சாதகமாக பரப்புரை செய்துகொள்கின்றன. கருணையிலும், சிறுபான்மையினரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அரவணைத்தருளும் ரட்சகர்கள் என்று காண்பித்துக்கொள்கின்றன. தென்னாப்பிரிக்காவும் கூட, உலகத்தின் நன்மதிப்பைப் பெறுவதற்காக  கிரிக்கெட்டில் இட ஒதுக்கீட்டை துணிந்து கொண்டுவந்திருக்கிறது. பரப்புரைதான் என்றாலும் அதிலும் ஒரு நன்மை விளைகிறது என்றால் அவ்வாறு துணிந்து செய்தால்தான் என்ன?  இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மிதமிஞ்சிய அதிகாரமும் பண பலமும் இருக்கிறது. அதை இத்தனை தீமைகளுக்கு மத்தியில் ஒரு நன்மைக்காகப் பயன்படுத்தினால்தான் என்ன? கிரிக்கெட் வாரியத்திற்குள் இருக்கும் உள்ளரசியல், பிராந்திய வாரியங்களின் ஆதிக்கம், பிராந்திய வாதம், பண வெறி ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், இதற்கெல்லாம் ஒரு பாக்டீரியா அளவு கூட சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதைவிட இது பற்றி யாராவது சிந்திக்கிறார்களா என்பதே பெரும் கேள்வி. ஆனால் எந்த ஒரு பெரும் கருத்தியலும், சிந்தனையும் உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் யாராவது மனதில் முதலில் சிறு எண்ணமாகத்தானே தோன்றும்?

எஸ். ப்ரசன்ன வெங்கடேசன்

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் பணியாற்றுகிறார். எழுத்தில் ஆர்வம் மிக்கவர். இவரது புனைவுகளில் சில,  ஒரு தொகுப்பாக நடுகல் சென்ற வருடம் வெளியிட்டிருக்கிறது.    

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *