பெருந்தொற்றுக் காலத்தின் முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டவை இவை.

”ஜெரேனியம்” முழுக்க முழுக்கக் கனவில் நிகழ்ந்த கதை. நான் செய்ததெல்லாம் அந்தக் கனவு மறப்பதற்குள் அதிகாலை எழுந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் அச்சுப் பிறழாமல் எழுதி முடித்தது மட்டுமே. கொடைக்கானல் என்பது வருடத்தின் மூன்று மாதங்கள் நிற்கக் கூட இடமில்லாமல், எங்கும் கூட்ட நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், ஜன நெருக்கடி, தண்ணீர் பற்றாக்குறை, குப்பைக் கூளங்கள் என்றும் நிறைந்திருக்கும் சுற்றுலா நகரம். மீதி ஒன்பது மாதங்கள் பனி போர்த்தித் தனிமையில் உறங்கும் ஒரு மலைக்காடு. ஆனால் அது மட்டும் கொடைக்கானல் அல்ல. பரந்து விரிந்த அம்மலையின் மடிப்புகளில் பொதிந்திருக்கும் பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை, வில்பட்டி, பள்ளங்கி போன்ற மலைக்கிராமங்களும், பலதரப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட அவற்றின் மனிதர்களுமே அசலான கொடைக்கானல். ஒரு வாகனமும், அம்மலையின் குறுக்கும் நெடுக்குமாய் நிறைய பயணங்களும் கொண்ட ஒரு இருபத்தி மூன்று வயதுக்காரனுக்கான முதல் பணி அனுபவமாய் புத்தம் புதிய சவால்களையும் வாழ்வையும் அள்ளிக் கொடுத்த ஊர்கள் அவை. என் புனைவுலகம் அங்கே தான் பிறந்ததாக நம்புகிறேன். மூன்று வருடங்கள் திளைக்கத் திளைக்க வாழ்ந்துவிட்டு, நகரத்துச் சந்தடியில் அந்நினைவில் மங்கிவிட்டன என்று நினைத்திருந்த போது, பசுமையாய் வந்த கனவு அது. மனச்சுமைகள் ஒவ்வொன்றாக கரைந்து காணாமல் போகும் இடமாக எப்போதும் இருக்கிறது எனது கொடைக்கானல்.

கனவுகளில் மூழ்குபவன், கனவுகளை செதுக்குபவன் என்ற வகைமைகளைத் தாண்டி, சிட்டுக்குருவி, வண்ணத்துப்பூச்சி என்று பலதரப்பட்ட வாழ்வை வாழ்ந்து பார்க்கும் கனவுக் காட்சிகளே  “கனவுகள் விற்பனைக்கு” என்று ஆனது.

ஜெரேனியம் கதையில் வருபவனும், ”முகமிலி” கதையில் வருபவனும் ஒரே சாயலைக் கொணட இருவர்கள். ஒருவனுக்கு தன் உடல், மனம் குறித்த அசூயை என்றால் இன்னொருவனுக்கு முகங்களைப் பிரித்து அறிவதில் உள்ள குறைபாடு. ஒருவன் தன் கடந்த காலத்தை மீள் உருவாக்கம் செய்வதிலேயே முனைப்பாய் இருக்கிறான். மீண்டும் மீண்டும் தான் இழந்த நாட்களுக்கு சென்று பார்த்துவிட்டு வர விரும்புபவனாக இருக்கிறான். ஆனால் இன்னொருவனோ தனது குறையைப் பெரிதுபடுத்தவோ அல்லது அதிலேயே தேங்கிவிடவோ விரும்பாமல், வெவ்வேறு நிலம், வெவ்வேறு புதிய மனிதர்கள் என்று அவன் கூட்டைக் கலைத்துக் கலைத்துக் கட்டுபவனாக இருக்கிறான்.

மதுரை அரசு மருத்துவமனையில் பரபரப்பான இரண்டு இரவுகளும் அவற்றின் நடுவே நீண்ட பகலுமாய் அரை மயக்க நிலையில் கழிக்க நேர்ந்ததன் விளைவு நோயர் ஊர்தி ஓட்டுநன் கதை. பரந்த வளாகமெங்கும் படரிந்திருக்கும் ஒவ்வாத நெடி, அதன் குப்பை கூளங்கள், பதற்றம், அலைக்கழிப்பு, அவமரியாதை, வலி, பயம் ஆகியவற்றைத் தாண்டி அங்கே அனுதினமும் நிகழ்வது ஜீவ மரணப் போராட்டம். மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும் தெய்வங்கள் என்றால் நோயாளிகளை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கும் நோயர் ஊர்தி ஓட்டுநர்கள் வாழ்வின் தூதுவர்கள்.  பிணியும், வலியும், உதிரமுமாய் விரையும் அவர்களின் ஒரு நாள் பணிப்பொழுது நிறைவுறும் போது வரும் விடுதலையுணர்வும் மறுநாள் பணிக்கு வரும் வரை செத்துக்கிடக்கலாம் என்ற நிம்மதியையும் யோசித்த போது தோன்றிய கதை அது.

அன்றாடங்களை ஒட்டுமொத்தமாகக் கலைத்துப் போட்டு மாற்றியமைக்க முடியாத நிரந்த வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது பெருந்தொற்று. அக்கொடுங்காலங்களை வெவ்வேறு பரிமாணங்களில் பலர் எதிர்கொண்டிருக்கிறார்கள். நினைவின் தடம் மறந்து போன தன் மலைக்குன்றுக்குத் திரும்புகிறவன் “வீடு திரும்புதல்” கதையில் வருகிறான் என்றால், தான் இனி வாழ்வில் ஒருபோதும் சந்திக்கவே விரும்பாத முன்னாள் மனைவியைத் தன் தாயின் பொருட்டு தவிர்க்கவியலாமல் சந்திக்கத் தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான் “கசப்பின் கடைசித் துளி” கதையில் வருபவன்.  ஊரடங்கு படர்ந்திருக்கும் ஒரு அந்திமப் பொழுதில் மறைவாய் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு தேநீர் கொதிகலனுக்கு அருகில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி தான் வாழ வந்த நிலத்திற்கும் திரும்புபவனும், மீண்டுமொருமுறை தன்னை விட்டுவிட்டுச் செல்ல இருப்பவளை வேண்டா வெறுப்பாக சந்திக்க இருப்பவனும் தேநீர்க் கோப்பையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பதிமூன்று மணி நேரம் தொடர் பயணம் செய்து அணுக்கள் ஒவ்வொன்றிலும் அலுப்பு ஏறிப் போயிருக்கும் நான் அவர்களைப் பின்னால் இருந்து கவனித்தேன். கதைகள் பிறந்தன.

தன் வீட்டையும் தன் பறவைகளின் கூட்டையும் தாண்டி பரந்த வானத்தைத் தரிசிக்கும் “பட்சி சாதகனும்”, ”ஆண்ட வம்சத்தின்” கடைசி கண்ணியாய் தன்னை நினைத்து நிதானமிழக்கும் பதின்ம வயதினனும் வெவ்வேறு வார்ப்புகளில் ஊற்றி வைக்கப்பட்ட ஒரே நீர்மமாக இருக்கலாம். ஒருவன் எல்லையில்லா ஆகாயத்தில் பறப்பவனாகவும் இன்னொருவன் வாழ்வைத் தொலைத்தவனாகவும் மாறிப் போகிறார்கள். இருவரில் ஒருவன் நான் மற்றொருவன் என்னையொத்த என் சகோதரன்.

கர்பத்தையும், பிரசவத்தையும், பச்சிளம் குழந்தையையும் சுற்றிய கதைகளை மீள்வாசிக்கையில் ஆத்மார்த்தமாகத் தோன்றுகின்றன. வரண்ட பூர்வீக கிராமத்து ஊரணி, ஒரு பெண்ணின் கர்ப்பக் குடம் உடைந்து, நீர் தழும்பி வெள்ளக்காடாக நிறைவதும், ஊருக்குக் ”குருவிகள் திரும்புவதும்” பாழ்பட்ட சொந்த ஊரை மீண்டும் செழிப்பாகப் பார்க்க ஏங்கும் ஆதங்கத்தின் விளைவு. குழந்தைப் பிறப்புக்கு உடன் இருக்க முடியாமல் ”இயந்திரத்துடன்” மல்லுக் கட்டியவனின் மனநிலையை கற்பனை செய்து எழுத வேண்டி இருக்கவில்லை. உயிருக்குப் போராடும் ஒரு புறாக்குஞ்சைக் காப்பாறுவதன் பொருட்டு மருத்துவமனையில் “அவசர சிகிச்சை”யில் இருக்கும் தன் மகன் உயிர் பிழைப்பான் என்று நம்புவது நான் மொழிபெயர்த்திருந்த வேறொரு கதையின் சாயல் என்று எழுதி முடித்த பின் தோன்றியது. ஆனால், அது ஒரு தனித்த நிகழ்வா என்ன, நோயில் வாடும் பிள்ளைக்காக பிரார்த்தனை செய்யும் உலகத்துப் பெற்றோருக்கெல்லாம் உரிய பொதுமறை தானே!

திரும்பிப் பார்க்கையில் கதைகளில் வரும் பறவைகளும், சூழலும் தாண்டி இங்கே உருக்கொண்டிருக்கும் பெண்கள் மதிப்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். அது அவர்கள் இயல்பு, அதில் வியந்தோத ஒன்றுமில்லை என்றாலும் வனராணியாய்த் தன்னை நினைக்கும் வளரிளம் பருவத்துச் சிறுமி, உலகத்திலுள்ள அத்தனை பெண்களுக்குமான பிரதிநிதி. “பெண்கள் இல்லாத ஊரின் கதை”யை சில ஆண்டுகள் முன் வாசித்தது. நினைவடுக்குகளின் நிரந்தரமாய் தங்கிய சிறந்த கதையது. அதன் மாற்று வடிவத்தை ஆண்களை வைத்து எழுதிப் பார்த்த கதை இது. மன நெருக்கடி நிரம்பிய தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழையும் முதல் தலைமுறை சிறு நகரத்துப் பெண்ணின் மயக்கமே “அட்மின்” சிறுகதை. புகழ் வெளிச்சத்துப் பிரபல நடிகையாய் தன்னைப் பாவிக்கும் சிறு தடுமாற்றத்திற்கு அவள் தன்னைப் பலிகொடுக்க வேண்டுமா என்ற நீண்ட தயக்கத்தின் ஊடே அக்கதை அம்முடிவைத் தக்க வைத்தது. இருந்தும் மனம் பதறியபடியே இருக்க, அக்காட்சியை இடைவேளையாக்கி, அடுத்த பகுதிக்கான கதை திரைக்கதையாக விரிந்து கொண்டிருக்கிறது. காலம் அனுமதித்தால் அவள் வேறொரு உருக்கொண்டு மீண்டும் வருவாள். ஆனால் “நஞ்சுக் கொடி”யில் வாழும் தனிக்கொடி சாஸ்தவமானவள். எத்தனை முறை அழித்து அழித்து எழுதினாலும் அவள் முடிவை எங்களால் மாற்றவே முடியவில்லை. ஏனெனில் அவள் இரத்தமும் சதையுமாய் எங்களுடன் வாழ்ந்து திரும்பி வர முடியாத இடத்திற்குச் சென்று சேர்ந்தவள். பர்வதம்மாள் இன்னும் கொஞ்சம் முன்னரே சன்னாசியிடம் முளைப்பாரியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு விரைந்து வந்திருந்தால்… நஞ்சுண்டார் மயிலையின் முதல் சீம்பாலை எடுத்துக் கொண்டு அப்போதே தனிக்கொடியைக் காண ஓடி வந்திருந்தால்… மிளகாய்ச் செடிக்கு அடிக்கும் ரோக்கரை தனிக்கொடி கையில் எடுக்காமல் இருந்திருப்பாள் என்ற ஆதங்கம் இன்னும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் காலமும், தனிக்கொடியும் அதை அனுமதிக்கவில்லை.

இன்னுமொரு சொல்… ”நஞ்சுக்கொடி” தொகுப்பின் கடைசிக் கதை, இதுவும் ஒரு புனைவு!

******

பாலகுமார் விஜயராமன் (1980)

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர்

சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார்.  மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதுவரை 5 அச்சு நூல்களையும், 5 மின்னூல்களையும் எழுதியுள்ளார். பறவைகள், விலங்குகள், சூழலியல் சார்ந்த இவரது “கடவுளின் பறவைகள்” மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான வாசகசாலை விருது 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆலன் கின்ஸ்பெர்க்கின் நெடுங்கவிதை “ஹௌல்” மற்றும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் “அஞ்சல் நிலையம்” நாவல் பரவலான கவனத்தையும், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது. காலச்சுவடு வெளியீடாக 2018ம் ஆண்டு வெளியாகிய இவரது நாவல் “சேவல்களம்” பண்டைய காலம் தொட்டு தமிழர் புறவாழ்வில் முக்கியப் பங்காற்றும் சேவல் சண்டை குறித்த நுட்பங்களைப் பேசுகிறது. கருவுறுதலின் போதான அக அலைச்சல், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற கருக்களைக் கொண்ட இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “நஞ்சுக் கொடி” இவ்வாண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *